வியாழன், 3 செப்டம்பர், 2020

அகிலத்திரட்டில் அருளிய திருவாசகம்

 சான்றோர்களே! இவ்வுலகைப் படைத்துக் காக்கும் ஆண்டவராகிய நாராயணர், தனது கலியுக வருகையான பத்தாவது அவதாரத்தை ஈரேழு பதினாலு உலகமும் அறிய அருளிய திருவாசகம் இதோ..

இவ்வாசகமானது, உலகத் தோற்றமும்..! இதுவரை நடந்த நிகழ்வுகளும், & இனி நடக்கப் போகும் நிகழ்வுகளையும் விளக்கும் வாசகம்!

“ஏகமொரு பரமானதும்! இம்மென்றொரு வாயுவில் சத்து வளைந்ததும்!

சத்தில் சிவம் தோன்றியும்! சிவத்தில் சக்தி தோன்றியும்!

சக்தியில் நாதம் தோன்றியும்! நாதத்தில் விஷ்ணு தேன்றியும்!

ருத்திரர் மயேசுரர் உலகம் தோன்றியும்! உலகில் அண்டபிண்டம் தோன்றியும்! பிண்டத்தில் குறோணி அசுரன் தோன்றியும்! குறோணி வானலோகம் விழுங்கவும் கோபத்தால் விஷ்ணு சென்று குறோணியைத் துண்டாறாய் வெட்டி உலகில் தள்ளவும், 

துண்டமென்றில் குண்டோமசாலி பிறக்கவும், சுகசோபன மண்டபமலைய விளித்ததும் திருமருகரது கேட்கவும், 

தேவாதிகளை நாங்கிலாக்கி வரையானதைத் தூண்டிலாக்கிக் கடலை ஓடையாக்கிக் காயாம்பு வண்ணர் ஓடமேறியே கறைக்கண்டர் ஓணிதள்ளவே கன்னியிலே தூண்டலுமிட்டு அக்குண்டோமசாலியையும் வதைத்து, மறுயுகம் தோன்றியே தில்லைமல்லாலன் மல்லோசி வாகனென்ற இருபேருடைய அநியாயம் பொறுக்காமலே அவனிருவரையும் சங்காரம் செய்து அடுத்த யுகம் தோன்றியே, 

சூரன் சிங்கமுகா சூரன் செய்த அநியாயம் பொறுக்காமலே ஆதித்திருநெடுமால் ஆறுமுகக் கடவுளென நாமமுங் கூறியே அவனையும் சங்காரஞ் செய்து அவ்வுகத்திலே பிறந்த அசுரன் இரணியனையும் வதைத்து அந்த யுகமும் அழித்து அடுத்த யுகம் தோன்றியே, 

அரக்கன் இராவணசங்காரமுஞ் செய்து சீதாப்பிராட்டியினுடைய சிறையையு மீட்டித் தென்னிலங்காபுரி அரக்கரையும் கொன்று அக்கிளையொழிய அக்குலமும் அறுத்து அடுத்தயுகம் தோன்றியே; 

பஞ்சவர்க்கு பகாரியாகியே பகைத்தத் துரியோதனனையும் வதைத்துப் பஞ்சவர்க்குக் குருநாடு பட்டமுஞ் சூட்டியே அரசாள வைத்து கலிவருவானெனக் காற்று வீசினதைக் காதிலே கேட்டுக் கானக வழிநடந்து பஞ்சவர்களுடைய பாரப்பெலன்களையும் வாங்கிப் பச்சைமாலை சுமந்திருந்த பயமாயக் கூட்டைப் பர்வதாமலை யுச்சியிலே கிடத்தி, கங்கையுங் கண்டு கங்கையிலே குளித்த கன்னிமார் பெண்களுடைய கற்பையுஞ் சோதித்துக் கயிலையங்கிரி சென்று ஏழுலோகம் புகுந்து ஏழு வித்துமெடுத்து இருதய கமலத்திலே இருத்தி எரியுங் கட்டையெனக் கிடந்து ஏந்திழைமாரைச் சூழ வளையும் படியாகக் கொந்தலையும் எழுப்பி!

ஏழுபெண்களுக்கும் ஏழு மதலையுங் கொடுத்துத் தவசுக்குக் கன்னிமாரையும் அனுப்பிப் பத்திர காளியிடத்தில் பாலரையுங் கொடுத்து, ஸ்ரீரங்கம் போய் செகமறியும்படி பள்ளிகொண்டிருந்ததும்; 

தேவாதிகளுடைய வாக்கினாலே ஈசுரர் தாமே கலியனையும் பிறவிசெய்து இருநூற்று முப்பது நூறாயிரம் வருஷமாகக் கட்டங்கொடுமை செய்து அவனியரசாண்டு கன்னிமக்களாகிய சான்றோர் படுகிற மறுக்கம் பொறுக்காமலே, வியாகரிடை முனிவர் வகுத்த ஆகமத்தின் படியே மகாபர நாராயணர் தாமே வைகுண்டமாய்ப் பிறந்து ஒரு குடைக்குள் 1008 ஆம் ஆண்டு மாசியிலே அஞ்சி மூவஞ்சி தேதியிலே அவனி மனுவிலே ஆதிச்சாதியிலே மனுநிறமாக வந்திருந்து சாதி பதினெண்ணையும் ஒருதலத்தில் வருத்தியே தர்மமாய்த் தாரணி யாபேர்க்கும் சஞ்சல நோய்பிணி தண்ணீரால் தீர்க்கவும்!

சந்ததியில்லாத பேர்க்குச் சந்ததி கொடுக்கவும்! தனமில்லாத பேர்க்குத் தனங்கொடுக்கவும்! 

சாதை வாதை பேய்களைச் சரிவிலே எரித்துக் கரியச் செய்யவும்!

தரணியேழு கணக்கையும் கேட்டு மிக சத்தியாய் அன்பு மனிதருக்காகவே தரணியில் நாலுதரம் சளங்கள் படவும்!

சாஸ்திரவேத நூலுக்குச் சரியொத்தி பேர்களுக்கு உபகாரங்கள் செய்யவும்! சண்டையாய்க் கலியனைத் தன்னாலே போக்கவும்!

தர்மமாகத் தரணியோர் குடைக்குள்ளாளவும்! தங்கநவரத்தினத் திருமுடி சூடியே! 

சகலமாபதி மேடைகள் பாவிக்கவும் தவசு கிருபை பெறவும்!

தங்கமணி சக்கராயுதக் கொடி ஒற்றைக்கொடி கட்டவும்!

சகலரும் புகழவரும் தர்மராசாவாகவும்! சங்கவிருதுக் கொடி ஒத்தக் கொடி கட்டவும்! அஷ்டதிக்குப் பதினாலு லோகமுமறிய அசையா மணியொன்று கட்டியே அரசு பாவிக்கவும்!

ஆதி சர்வேஸ்வரனாகிய அவனியைம்பத்தாறு சீமையும் அடக்கி அரசாளவும்!

ஆதிசர்வ காலமும் அழியாத் திருவுளமாயிருந்து அரசாள்வாரெனவும் ஆதிராமச் சந்திர சூரிய நாராயணர்க்கு ஆதியாகமத்தின் படியாகவே ஆதிவைகுண்டம் பிறந்தாரெனவே! அண்டர்களும், முனிவர்களும், தேவர்களும், அதிக சகல மாமுனிவர்களும், எல்லோருங் கூடியிருந்தாராய்ந்து தொண்டர்தமக் கென்றுவளர் கொன்றையணி கயிலையில் மண்டலம் புகழச் சிவனாருடைய கிருபையினாலே என்றவர் கயிலையங்கிரியில் எழுதினார்..! – அகிலத்திரட்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக