செவ்வாய், 18 நவம்பர், 2014

அய்யா வைகுண்டசாமி சுற்றிச் சேவித்தல்

ஒரு முறை அல்லது மூன்று முறை வலம் வந்து வணங்கும் முறை இந்துக்கள் மரபில் உள்ளது. ஆனால் அய்யா வழியில் இந்த மரபு மாறுபடுகிறது. தலைமைப்பதி வருகைதரும் அன்பர்கள் முத்திரிக்கிணறு, வடக்கு வாசல், கொடி மரம், பள்ளியறை ஆகியவற்றை ஐந்துமுறைக் கட்டாய மாகச் சுற்றிவந்து வணங்கவேண்டும். இப்பழக்கத்தினைச் சுற்றி சேவித்தல் என்று குறிப்பிடுகின்றனர்.

சுற்றிச் சேவிக்கும் போது அய்யா சிவசிவ சிவசிவ அரகரா அரகரா என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும். உடலில் உள்ள புலன்கள் ஐந்தும் ஒருமுனைப் பட்டு வானம் (வானுயர்ந்த கொடி மர வணக்கம்), தீ (பள்ளியறை தீபதரிசனம்), மண் (திருநாமம்- திருமண் பூசுதல்), தண்ணீர் (முத்திரிக்கிணறு வலம் வருதல்), காற்று (சுவாசித்துக் கொண்டே சுற்றுவது) ஆகிய ஐம்பூதங் களை ஒரே சமயத்தில் வணங்குவதாக சுற்றிச் சேவித்த லுக்கு விளக்கம் அளித்துள்ளனர்.

தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்........

வேதங்களும், புராணங்களும் பல்வேறு தர்மங்களை கூறுகின்றன. ஆனால் பகவான் வைகுண்ட சுவாமிகளின் பார்வையில் `தர்மம்' சற்று வித்தியசமானது ஆகும். `நாட்டில் சமுதாயத்தால் பின்தங்கிய நிலைகளுக்கு தள்ளப் பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உதவி செய்து அவர்களின் நிலையை உயர்த்தப் பாடுபட வேண்டும். இதுவே `தர்மம்' ஆகும்'' என்றார் வைகுண்டர்.

"தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்'' என்பது அகிலத்திரட்டு வரிகள் ஆகும். பலரின் கருத்துக்கள் `உபதேசம்' செய்யும் பாணியில் அமையும். `உபதேசம் பிறருக்குத்தானே' என எண்ணி தங்கள் வாழ்க்கையன் நெறிகளை மறந்து விடுகிறார்கள். ஆனால் பகவான் வைகுண்ட சுவாமிகள் `தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்' என்பதை வலியுறுத்தி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலை உயர பல்வேறு பணிகளில் ஈடுபட்டார்.

அய்யா வழி

1. போலி சாமியார்களை பற்றியும், அவர்களை நம்பினால் கடைசியில் என்ன ஆகும் என்பது பற்றியும் அழகாக குறிப்பிடுகிறது அகிலத்திரட்டு.

2. அய்யா வழி திருமணங்களில் வேத விற்பன்னர்களுக்கு இடமில்லை. சமூக பெரியவர் ஒருவரே குருவாக இருந்து திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

3. அய்யா தருமபதிகளில் விளக்கு மற்றும் நிலைக்கண்ணாடி வைத்து வணங்கும் அய்யா வழி மக்கள், வீடுகளில் விளக்கேற்றி, அதன் ஒளியை இறைவனாக வணங்குகிறார்கள்.

4. அய்யா வழி கோவில்களுக்குள் நுழையும் ஆண்கள் சட்டை அணிந்திருக்கக் கூடாது. ஆனால், திருமணத்தன்று திருமணம் முடிந்த கையோடு கோவிலுக்கு வரும் மணமகன் மட்டும் சட்டை அணிந்து கொள்ளலாம்.

5. பருவ வயதை அடையும் பெண்களை, ருதுவான 41 நாட்களுக்கு பிறகு அய்யா கோவிலுக்கு அழைத்து வருகிறார்கள். அங்கு, குருவானவர் 5 முறை அந்தப் பெண்ணின் முகத்தில் பதம் (தீர்த்தம்) தெளித்து ஆசி வழங்குகிறார்.

6. கணவன் இறந்த பிறகு தாலியைக் கழற்றும் வழக்கம் அய்யா வழி மார்க்கத்தில் இல்லை. கணவனை இழந்த பெண் மறுமணம் செய்து கொள்வதை அய்யா வழி வரவேற்கிறது.

7. அய்யா கோவிலில் சுருள் கொடுத்தல் என்பது சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. வேண்டுதல் நிறைவேறிய ஒருவர், வாழைத்தார், எலுமிச்சை, பன்னீர், வெற்றிலை, பாக்கு, முழுத்தேங்காய், பிச்சிப்பூ, விளக்கேற்றத் தேவைப்படும் எண்ணெய் வாங்கத் தேவைப்படும் பணம் ஆகியவற்றை வழங்குவதற்கு பெயர்தான் சுருள் கொடுத்தல் என்று பெயர்.

8. அய்யாவின் பிறந்தநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்றைய தினம் ஒவ்வொரு அய்யா வழி தருமபதிகளிலும் சிறப்பு வழிபாடுகள், அன்னதானங்கள் நடைபெறுகின்றன.

9. அய்யாவின் தருமபதிகளில் தலைமைபதி அய்யா அவதரித்த சாமித்தோப்புதான். அய்யாவின் காலடிபட்டு புனிதம் பெற்ற தாமரைக்குளம் பதி, முட்டப்பதி, அம்பலப்பதி, பூப்பதி, துவாரகாபதி போன்ற பதிகளும் சிறப்பு பெற்றவை.

10. அய்யாவின் அவதார நாள் ஒவ்வொரு பதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வைகுண்டர் முத்துக்குட்டியாக, முடிசூடும் பெருமாளாக பிறந்த ஏப்ரல் 19-ந்தேதி இந்த விழா நடைபெறுவதில்லை. மாறாக, திருச்செந்தூர் கடலில் மூழ்கி வைகுண்டராக அவதரித்த மாசி மாதம் 20-ந்தேதிதான் (கி.பி.1832 மார்ச் மாதம் 3-ந்தேதி வெள்ளிக்கிழமை) அவரது அவதார நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினம் சாமித்தோப்பு தலைமை பதியில் நடைபெறும் விழா மிகவும் பிரபலம். லட்சக்கணக்கான அய்யா வழி பக்தர்கள் அதில் கலந்து கொள்வார்கள்.

11. இதேபோல், வைகாசித் திருவிழாவும் புகழ்பெற்றது. 11 நாட்கள் நடைபெறும் அந்த விழாவின் 8-ம்நாள் வைகுண்டர் கலியை வெல்லும் கலி வேட்டை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

12. எந்தவொரு செயலைச் செய்தாலும், `அய்யா உண்டு' என்று சொல்லும் வழக்கம் இந்த மார்க்க மக்களிடம் உள்ளது. அய்யாவின் மீது அவர்கள் கொண்டுள்ள பற்றுதலையே இது காட்டுகிறது.

13. சிறுபயிறு, வற்றல், பச்சரிசி கொண்டு செய்யப்படும் `நித்தப்பால்', பச்சரிசி கொண்டு செய்யப்படும் `தவனக்கஞ்சி', அரிசி, மிளகாய், வாழைக்காய், கத்தரி, பூசணிக்காய், இளவங்காய் கொண்டு செய்யப்படும் கூட்டாஞ்சோறான `உம்மான்சாதம்' ஆகியவையே அய்யா வழி பதிகளில் வழங்கப்படும் பிரசாதங்கள்.

14. தருமம் பற்றி இந்த மார்க்கத்தில் அதிகமாக வலியுறுத் தப்படுவதால், இந்தக் கோவில்களுக்கு வரும் பக்தர்கள் எல்லோருமே தங்களால் முடிந்த அன்னதானம் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

15. அய்யாவின் பெரும்பான்மையான போதனைகள், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்த 18 ஜாதியினர் ஏற்றம் பெற வேண்டும் என்பதையே வலியுறுத்தியது.

16. உருவ வழிபாடு இல்லாத, கற்பூர தீப ஆராதனை இல்லாத, பூஜை வழிபாடுகள் இல்லாத வித்தியாசமான ஆன்மீகப் பாதையை காட்டினார்.

17. அவரது புரட்சி போதனைகளால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன.

18. கூரை வீடுகளில்தான் வசிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டவர்களுக்காக சமதர்ம குடியிருப்புகளை உருவாக்கினார் அய்யா.

19. அய்யா தன் போதனைகளை பரப்ப அன்புக்கொடி என்ற இயக்கம் ஆரம்பித்தார்.

20. அய்யாவின் சீடர்களான மயிலாடி சிவனாண்டி, கைலாசபுரம் பண்டாரம், பிள்ளையார் குடியிருப்பு அர்ஜுனன், குளச்சல் சுப்பையா, தாமரைக்குளம் அரிகோபாலன் ஆகியோர், அந்த இயக்கத்தில் முக்கியப் பங்காற்றினார்கள்.

21. மக்கள் அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில், அவர்களது வீடுகளில் இருந்து பொருட்களை வாங்கி ஒன்றாக்கி, முத்திரி கிணற்று நீரால் அதை சமைத்து, எல்லோரையும் ஒன்றாக அமர வைத்து சாப்பிட வைத்தார்.

22. சாமித்தோப்பில் மட்டுமின்றி, பல்வேறு ஊர்களுக்கும் தனது சீடர்களை அனுப்பி, அனைத்து சாதி மக்களையும் ஒரே இடத்தில் திரள செய்து சமபந்தி விருந்துகளை செய்ய வைத்தார்.

23. கடவுளை எப்படி வழிபட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக பல இடங்களில் நிழல்தாங்கல்கள் எனப்படும் அய்யா வழி கோவில்களை ஏற்படுத்தினார்.

24. நிழல்தாங்கல்கள் இரவில் கல்வி கற்பிக்கும் பள்ளிக் கூடங்களாகவும் இயங்கின.

25. தருமம் செய்வதும், அன்னதானம் வழங்குவதும் அவசியம் என்று அய்யாவால் அடிக்கடி வலியுறுத்தப்பட்டது. தரும சிந்தனை ஏற்பட்டால்தான் மனம் பக்குவப்படும் என்பது அய்யாவின் நம்பிக்கை.

துவையல் தவம்

மனதில் இருக்கும் அறியாமை அழுக்குகளை அகற்றி, தெய்வீக அனுபவம் பெற வைக்கும் "துவையல் தவம்'' என்கிற தவத்தை மேற்கொள்ளுமாறு எல்லோரையும் அய்யா வைகுண்டர் கேட்டுக் கொண்டார். அது என்ன துவையல் தவம்ப இந்த தவம் செய்பவர்களுக்கு மனத் தூய்மையுடன் உடல் தூய்மையும் அவசியம்.

அதனால், அந்த தவம் மேற்கொண்டவர்கள் தினமும் மூன்று வேளை கடலில் குளித்து புனிதம் பெற்றார்கள். உடல் தூய்மை பெற்றால் மாத்திரம் போதாது. உணவு கட்டுப்பாடும் அவசியம். பச்சரிசி, சிறுமணியை வேக வைத்து, அதையே உணவாக சாப்பிட வேண்டும். மேலும், அலைபாயும் மனதை நம் வசப்படுத்த தெய்வீக அனுபவத்தை பெற... சில போதனை வகுப்புகளும் அதில் இடம்பெற்றன.

காலையில் உகப்படிப்பு, மதியம் உச்சிப்படிப்பு, இரவில் உகப்படிப்பு மற்றும் உச்சிப்படிப்பு... என்கிற, பிரார்த்தனை பாடல்களை குருவாக இருந்து ஒருவர் சொல்ல.... மற்றவர்கள் பின்சொல்லும் பிரார்த்தனை வகுப்புகள்தான் அவை. இவ்வாறாக உடல்தூய்மையுடன், மனதூய்மையும் பெற்றவர்களை, நல்வழிப்படுத்த பல்வேறு அறிவுரைகளையும் அவர்களுக்கு வழங்கினார்.

வாழ்க்கை என்பது என்ன இல்லறம் எப்படி போற்றப்பட வேண்டும் என்பதில் தொடங்கி... ஆன்மீகம் என்பது என்ன என்பது வரை போதித்தார் அய்யா... இதோடு துவையல் தவம் நின்றுவிடவில்லை. அதில் ஈடுபட்டோரை கடற்கரையோரத்தில் தங்கச் செய்தார். கடும் வெயில், காற்று, மழை... என எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளும் மனப் பக்குவத்தை அந்த தவத்தின் மூலம் அவர்களை பெறச் செய்தார். இப்படி பல்வேறுபட்ட பக்குவப்படுத்துதல்களால் துவையல் தவம் கொண்ட அனைவரும் புது மனிதராக தங்களை உணர்ந்தனர்.     

தாமரை ஜோதி

அய்யா வழியின் சமயச் சின்னமாவது சுடரை தாங்கும் தாமரையாகும். இதில் தாமரை 1008 இதழ்களை உடைய சஹஸ்ரார தள (லாடம்) பகுதியையும், சுடர் ஆன்மாவையும் குறிக்கும். அய்யா வழியின் சின்னத்தில் பயன்படுத்தப்படும் தாமரை சஹஸ்ராரச் சக்கரமாதலால் இதன் தாமரைக்கு தண்டு வரையப்படாது.

ஏழு (மேல்) + ஏழு (கீழ்) என பதினான்னு இதழமைப்பு பொதுவாக  வழக்கத்திலிருக்கிறது. மேலும் தாங்கல்களில் இச்சின்னத்தையே தலை கீழான தாமரை இதழ்களுடன் (சஹஸ்ராரத்தில் உள்ளது போல்) பயன்படுத்தும் ஒரு புதிய  கட்டடிடக்கலையமைப்பு அன்மை காலத்தில் வழக்கத்துக்கு வந்திருக்கிறது.

வீட்டில் அகிலத்திரட்டு அம்மானை இருந்தால் செல்வம் பெருகும்

அகிலத்திரட்டு அம்மானை எனும் புனித நூலை நீங்கள் தொட்ட உடனேயே உங்கள் உடம்பில் இருக்கின்ற தீயசக்திகள் எல்லாம் உங்களை விட்டுப் பறந்தோடிவிடும். மேலும் நினைத்தாலே உங்கள் உள்ளத்தில் இருக்கும் அழுக்குகள் எல்லாம் மறைந்துவிடும். அகிலத்திரட்டு அம்மாளை எனும் நூலைப்படிக்க ஆரம்பிக்கின்றபொழுது, எந்தவிதத்தடை வந்தாலும் பயப்படாதீர்கள், தயங்காதீர்கள் துணிந்து தொடர்ந்து படியுங்கள்.

எந்த வித உணவை நீங்கள் உண்டு விட்டாலும் எந்தவிதப் பாவமும் உங்களை நெருங்க முடியாது. எனவே தினமும் அகிலத்திரட்டு படிப்பதை கைவிடாதீர்கள். நீங்கள் இந்த நூலைப் படிக்கும் போதே நீங்கள் நினைத் தவை எல்லாம் நிறைவேறும், திருமணம் நடைபெறாது தவிப்பவர்களுக்குத் திருமணம் நடைபெறும்.

 குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தைச் செல்வம் கிடைக்கும். நோய்கள் எல்லாம் பறந்தோடிவிடும். எதிரிகள் அஞ்சி ஒதுங்கி ஓடுவார்கள். அகிலத்திரட்டு அம்மானை நூல் வீட்டில் இருந்தால், முன் வினைத்தோசம், தீயவினைகள், பேய் நடமாட்டம், ஆகியவை  வீட்டை நெருங்காது. திருமணம், புதுமனைப் புகுவிழா போன்ற நல்ல நிகழ்ச்சி களுக்கும் ஏழைகளுக்கும் அன்பளிப்பாக இந்த நூலை  வாங்கிக் கொடுக்கலாம். இதனால் உங்களுக்கு புண்ணியம் தேடி வரும்.

அய்யா வைகுண்டரின் பொன்மொழிகள்

  • பொய் சொல்பவனுக்கு அந்த இறைவன் பொய்யாகவே தோன்றுகிறான். மெய் சொல்பவனுக்கு மெய்யாகவே - அவனுடனே இருக்கிறார்.
  • நீ முதலில் உன்னை அறிந்து கொள். அதன் பிறகுதான் தலைவனாகிய இறைவனை அறிந்து கொள்ள முடியும்.
  • நீ நல்ல கல்வி கற்றிருந்தால், அதை கற்றுக் கொள்ளாதவர்கலுக்கு இன்றே கற்றுக் கொடு.
  • இறைவன் மேல் உள்ள பக்தியை மறக்காமல் வைத்திருங்கள். அதே நேரம், பயம் கொள்ளாமலும் இருங்கள். அப்போது நானே உங்களுக்குத் தேவையான அறைவைத் தர தேடி ஓடி வருவேன்.
  • உன்னிடம் பக்ட்டு மொழி வேண்டாம். அந்தப் பேச்சால் ஏற்படுவது, வெறும் பாவம் மட்டுமே!
  • தவங்களில் சிறந்த தவம், மனம் ஒன்றிய இருவர் நடத்தும் இல்லறம்தான். அதைவிட, வேறு எந்தத் தவமும் இல்லை.
  • இறைவனுக்குப் பயந்து மக்களுக்கு உதவிகள் செய்து அறவழியில் வாழ்பவனே உயர்ந்த குடியைச் சேர்ந்தவன். அவனே நல்வாழ்வும் வாழ்வான்.
  • மற்றவர்கள் செய்த நல்ல உதவிகளை மறக்காமல் மனதில் இருத்தி வைத்திருப்பவர்கள், எவ்வளவு காலம் வாழ்கிறார்களோ அவ்வளவு காலமும் எந்தத் தீங்கும் வராமல் வாழ்ந்திருப்பார்கள்.
  • உன்னை விட எளியோனைக் காணும் போது அவனை எள்ளி நகையாதே. அவன் மீது இரக்கம் கொள். முடிந்தால், அவனுக்கு உதவு. இந்த உலகத்தில் நிலைத்து இருக்கப் போவது பணம் அல்ல.நீ செய்த தருமம்தான்.
  • ஒருவரைக் குருவாக ஏற்றுக் கொண்டவர்கள், அந்த குரு கூறிய வார்த்தைகளை மனதில் நிலை நிறுத்திக் கொண்டால், அந்த வார்த்தைகளிலேயே குருவைக் காணலாம்.
  • பில்லி, சூனியம், தீவினை, பேய் என்றெல்லாம் நீங்கள் நம்ப வேண்டாம். அவை இல்லவே இல்லை. அவை உலகத்தை ஆள்வதும் இல்லை. இதை நீங்கள் நம்புங்கள். இறைவன் ஒருவனைப் பற்றிய நினைவோடு வாழுங்கள்.
  • கலி என்பது மாயை. மனிதன் பணிவோடு இருந்தால், அந்தப் பணிவுக்குள் கலி அகப்பட்டு அடங்கிப் போகும். தருமம்தான் கலியை கரைக்கு நீர். நீ தர்மம் செய்தும் கலியைக் கரைத்து விடலாம்.
  • உன்னை விடவும் உயர்ந்த மனம் கொண்ட ஒருவனை நீ காண நேரிட்டால், அவனைப் பார்த்து பொறாமை கொள்ளாதே.மாறாக, அவனைப் போற்று. இந்த பண்பு உனக்கு வந்தால் அவனைக் காட்டிலும் பெரியோனாகத் தழைப்பாய். இனிய வாழ்வும் பெறுவாய்.
  • தன் மீது அன்பு கொண்ட பக்தர்களின் பக்தியை சோதிக்க முயற்சிக்கிறான் இறைவன். பின் ஏற்றுக் கொள்கிறான். ஆனால், தன்னை நம்பாதவர்களுக்கு முதலில் நன்மை செய்வது போல் செய்கிறான். பின், அவர்களை முற்றிலும் அழித்து விடுகிறான்.
  • இந்த உலகத்தை, உலகில் உள்ள செல்வங்களை உருவாக்கி வைப்பதும் அவற்றை அழிப்பதும் இறைவனே.
- அய்யா வைகுண்டர்

அகிலத்திரட்டு

அகிலத்திரட்டு அம்மானை ஆகமம்’’ என்பது எழுதிய எழுத்துக்கு உள்ளே எழுதப்படாத எண்ணரிய கருத்து புதையல்களை தன்னகத்தே கொண்டுள்ளதாகும். பிரபஞ்சம் தொடங்கியது முதல் உள்ள 7 யுகச் செய்தியும், இனி வரவிருக்கும் தர்மயுகமும் சேர்த்து 8 யுக செய்திகளையும் திட்டவட்டமாக சொல்லும் அந்த புத்தகத்தை கொல்லம் ஆண்டு 1016–ல் கார்த்திகை மாதம் 27–ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அய்யா வைகுண்டரின் சீசர்களில் ஒருவரான அரிகோபாலன் என்கிற சகாதேவ சீசர் அய்யாவின் அருளால் எழுத தொடங்கினார். இந்த அகிலத்திரட்டில் வரும் காப்பு வாசகத்தின் முதல் பதமான ‘ஏரணியும் மாயோன்’ என்பதை மட்டும் தன் திருவாயினால் அய்யா வைகுண்டர் எடுத்துக் கூறியுள்ளார். அதன் பிறகு வரும் காண்டங்கள் அனைத்தும் அரிகோபால சீசரின் மனதில் இருந்து அய்யா வைகுண்ட பரம்பொருள் அருளியது ஆகு

அய்யா வைகுண்டர் அவதாரம்

மக்களை காப்பாற்ற, கொல்லம் ஆண்டு 1008 மாசி மாதம் 20–ம் நாள் திருச்செந்தூர் திருப்பாற்கடலில் இருந்து சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் ஒரு மூர்த்தியாக வைகுண்ட பரம்பொருளாக அவதரித்து விஞ்சை என்ற ஆழ்ந்த சுய ஞானத்தோடு, 8 ஆயிரம் கோடி சூரிய பிரகாச ஒளியுடன் அய்யா வைகுண்டர் வெளிவந்தார். திருச்செந்தூரை அடுத்த தருவைக்கரை என்ற இடத்தை அடைந்த போது தெய்வமும் அவராய், திரு உள்ளமும் அவராய், மனிதன் கண் காண மனுச்சொரூபம் எடுத்தார். இவ்வாறு கலி அழிக்க அய்யா வைகுண்டர் அவதரித்த அந்த நாள்,  அய்யா வைகுண்டர் அவதார தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மனித ரூபம் எடுத்த வைகுண்டர் திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு தெட்சணம் என்று அழைக்கப்படும் சுவாமிதோப்பில் வந்திருந்து கலி என்ற மாயையை அறுக்க 6 வருடம் அருந்தவம் புரிந்தார். கலியை அழிக்க மக்களுக்கு அன்பு, பொறுமை, தர்மம் இவற்றை ஆயுதமாக கொடுத்தார். சாதி, மத பேதம், தீண்டாமை, மூடநம்பிக்கை இவற்றை ஒழிப்பதற்கான வழிமுறைகளை அருளினார். இந்த கலியை அழிக்க வேண்டுமென்றால் எவ்வாறு வாழவேண்டும் என்பதை கற்று உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காக அகிலத்திரட்டு அம்மானை என்ற ஆகமத்தை அருளினார். கலியை அழிக்க அன்பு ஒன்றே முதன்மை வழி என்று அவர் மக்களுக்கு எடுத்துரைத்தார்.

கலியின் பிறப்பு

துவாபர யுகம் முடியும் தருவாயில் பூமி வெடிப்பது போல் ஒரு சத்தம். அந்த வெடித்த பூமியில் தலைகீழாக பிறந்தான் கலிநீசன். இந்த கலியன் பிறந்து சிவப்பெருமானிடம் பல வரங்கள் பெற்றான். இறைவனின் மூலசக்திகளை வரமாக வாங்கினான். மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தை பணமாக மாற்றி பெற்றுக்கொண்டான். இவ்வாறு மேலோகமும், பூலோகமும் நடுங்க பல வரங்களை வேண்டி பெற்றான். வரங்களை பெற்ற கலியன் சான்றோர்களை கொடுமை செய்தான். ஒவ்வொருவரின் மனதில் புகுந்து ஆட்டி படைத்தான்.
கலி என்பது உருவம் அல்ல. அது மனிதனின் மனதில் இருக்கும் தீய எண்ணங்களின் வெளிப்பாடு ஆகும். இந்த கலியுகத்தில் மக்களை கொடுமைப்படுத்தி கொண்டிருக்கும் கலியை அழிக்க மும்மூர்த்திகளும் திருவுள்ளம் கொண்டனர்.

மகாவிஷ்ணுவின் கோபம்

அதைத்தொடர்ந்து வந்த திரேதாயுகத்தில் 10 பெரிய மலைகளை 10 தலைகளாக்கி ராவணனை பிறவி செய்தார். அவனுக்கு தம்பி விபீஷணன் மூலம் புத்தி சொல்லப்பட்டது. அதுவும் காதில் ஏறாததால், ராம பாணத்தால் அவனை திருமால் கொன்றார். அடுத்த யுகம் துவாபர யுகம். இந்த யுகத்தில் துரியோதனாக பிறவி செய்தார். அவனும் அநீதியின் மறு உருவமாய் திகழ்ந்தான். அப்போது பீஷ்மர் புத்தி கூறியும் அவன் கேட்கவில்லை. போர்க்களத்தில் பீமன், தனது கதாயுதத்தால் அவனை அடித்து கொன்றார். அவன் உயிர் போகும் தருவாயில் திருமாலைப் பார்த்து, ‘உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. பீமனின் கதாயுதம் தான் என்னை துவம்சம் செய்தது’ என்று ஆணவமாக கூறினான்.
அப்போது மகாவிஷ்ணு கோபமுற்று அவனை பார்த்து, ‘கடந்த 6 யுகங்களிலும் நீ அரக்கனாக பிறந்து நீதிக்கு புறம்பாய் நின்றாய். ஆகவே உன் அழிவை நீயே தேடிக்கொண்டாய். அடுத்து வரும் கலியுகத்தில் கலிநீசனாக உன்னை பிறப்பித்து, உன் ஆயுள் கணக்கு முடியும் வரை அடுத்தடுத்து பிறவி செய்வேன். சிரசு ஒன்றாகவும், அறிவு புத்தியோடும், ஆணவங்கள் தன்னோடும், நல்ல கலையுணர்வோடும், என்னை நினைக்க நல்ல மனமும் தந்து உன்னை பிறவி செய்வேன். அப்போது என்னை அறியாமல், உணராமல், தர்ம நெறி தவறினாய் என்றால் தன்னாலே நரகத்தில் சேர்ந்து விடுவாய்’ என்று கூற துரியோதனன் உடலில் இருந்து உயிர் பிரிந்தது.

அசுரனின் ஆணவம்

அடுத்த யுகமாகிய கிரேதாயுகத்தில் சூரபத்மன், சிங்காமுகாசுரன் என்ற அசுரர்களை சகோதரர்களாக பிறவி செய்தார்கள். இந்த அசுரர்களும் சிவப்பெருமானிடம் பல வரங்களை பெற்று இந்த உலகம் முழுவதையும் அடக்கி ஆட்சி செய்தனர். வானுலக தேவர்களையும், தேவேந்திரனையும் அடிமையாக்கி சிறைப்படுத்தினார்கள். இந்த அசுரர்களுக்கு வீரபாகு தேவர் மூலம் புத்தி கூறப்பட்டது. அதையும் கேட்காத காரணத்தால், திருமால் ஆறுமுக கடவுளாக தோன்றி சக்தி என்ற வேலாயுதத்தால் அசுரர்களை சாய்த்தார். அசுரர்கள் உயிர்விடும் வேளையில், உனக்கு உரைத்த நல்மொழிகளை கேட்டு அதன்படி நடந்து இருந்தால் இப்போது நான் உன்னை கொன்று இருக்கமாட்டேன் என்று திருமால் சொன்னார்.
அப்போது அந்த அசுரர்கள் ‘நீயா என்னை வீழ்த்தினாய்?, இல்லை சக்தி என்ற வேல் தான் என்னை வதம் செய்தது’ என்று கூறி உயிர் விட்டனர். அதே யுகத்தில் மற்றொரு துண்டம் இரணியனாக படைக்கப்பட்டது. அவனுக்கு தன் மகன் பிரகலாதன் மூலம் புத்தி சொல்லப்பட்டது. அதுவும் கேட்காத காரணத்தால் திருமால், நரசிம்மராக வந்து அவனை வதைத்தார். அவன் உயிர் விடும் நேரத்தில் 10 பெரிய மலைகளை உன்னுடைய நகங்களாக்கி என்னை கொன்றாயே தவிர நீ என்னை வதம் செய்யவில்லை என்று கூறி மாண்டான்.

6 துண்டுகளாக வெட்டினார்

அப்போது பூதகுரு முனிவர், அந்த அசுரனுக்கு புத்திமதி கூறினார். அவரது வார்த்தைகளை கேட்காமல் தொடர்ந்து அழிவு செயலில் இறங்கினான். இதனால் கோபம் அடைந்த மகாவிஷ்ணு, குரோனியை 6 துண்டுகளாக வெட்டி உலகில் தள்ளினார். அத்துடன் முதல் யுகமாகிய நீடிய யுகம் நிறைவு பெற்றது. இரண்டாவது யுகமாகிய சதிர யுகத்தில் குரோனியின் முதல் துண்டத்தை குண்டோம சாலியனாக பிறவி செய்யப்பட்டது. இந்த அசுரன் பிறந்த நேரத்தில் உலகெங்கும் அமைதி குலைந்தது. உலகுக்கு பெருங்கேடு வரப்போகிறது என்று உணர்ந்து, கோவி ரிஷி மூலம் அவனுக்கு அறிவுரை கூறப்பட்டது. அதை கேட்காத காரணத்தால் திருமால் அவனை அழித்து அந்த யுகத்தை நிறைவு செய்தார்.
மூன்றாவது யுகமாகிய நெடிய யுகத்தில் குரோனியின் 2–வது துண்டத்தை தில்லை மல்லாலன், மல்லோசி வாகனன் ஆகிய இரு அசுரர்களாக பிறக்கும்படி செய்தார்கள். இருவரும் வையகத்தை ஆள வழிகொண்டார்கள். மண்ணுலகம் மட்டுமல்லாமல் விண்ணுலகமும் இருள்படியும் அளவுக்கு ஆட்சி அமைந்தது. இவர்களுக்கு ரோம ரிஷி சில அறிவுரைகளை வழங்கினார். அதை சிறிதும் பொருட்படுத்தாததால் திருமால் மந்திரபுரி கணையால் அந்த 2 அசுரர்களையும் அழித்து நெடிய யுகத்தை நிறைவு செய்தார்.

அய்யா வைகுண்டர் அவதார தினம்

கப்பரம்பொருளான இறைவன் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளாக சமைந்து இந்த பிரபஞ்சத்தை படைத்தார். இதையடுத்து சிவப்பெருமான் திருவேள்வி ஒன்றை வளர்த்தார். வேள்வி நன்றாய் வளர்ந்து வரும் வேளையில் குரோனி என்ற அசுரன் கொடிய தோற்றத்துடன் பிறந்தான். இவன் பிறந்த உடனே பல காலம் தூங்கி விட்டான். தூக்கம் கலைந்து எழுந்ததும் பசியால் ஆர்ப்பரித்தான். கடல் நீரை பருகினான். இந்த உலகத்தையே விழுங்க முற்பட்டான்.

அய்யா வைகுண்டர் வகுத்த 32 நெறிமுறைகள்

1. வழிபோக்கர்களுக்கு சத்திரங்கள் கட்டி வைப்பது.

2. கல்வி கற்கும் ஏழை பிள்ளைகளுக்கு உணவு வசதி அளிப்பது.

3. அறுவகை சமயத்தார்க்கும் உணவு கொடுப்பது.

4. பசுவுக்கு புல்லும், வைக்கோலும் கொடுப்பது.

5. சிறைச்சாலையில் துன்புறுவோர்க்கு அன்னமிடுதல்.

6. வீடு தேடிவரும் ஏழைகளுக்கு பிச்சை இடுதல்.

7. திண்பண்டம் நல்கல்.

8. அறநெறி மேற்கொண்டு வாழும் துறவிகளுக்கு பசியமர்த்துவது.

9. அனாதை குழந்தைகளை எடுத்து வளர்ப்பது.

10. அனாதைப்பிணங்களை எடுத்து அடக்கம் பண்ணுவது.

11. தாய்மை பேறுபெற்ற பெண்களுக்கு உதவி செய்வது.

12. வாசனைப் பொருட்களை கொடுப்பது.

13. நோயாளிகளுக்கு மருந்துகள் கொடுத்து உதவுவது.

14. துணிவெளுக்கும் தொழிலாளர்களுக்கு உதவி செய்வது.

15. நாவிதர்களுக்கு உதவி செய்வது.

16. ஏழை பெண்களுக்கு பொன் தானம் செய்வது.

17. ஏழைகளின் கண் நோய்க்கு மருந்து கொடுத்து உதவுவது.

18. தலைக்கு எண்ணெய் கொடுப்பது.

19. திருமணம் ஆகாத ஏழைகளுக்கு திருமணம் செய்து வைப்பது.

20. பிறர் துன்பம் தீர்ப்பது.

21. தண்ணீர் பந்தல் வைத்து உதவுவது.

22. மடம் கட்டி சமய அறிவை வளர்ப்பது.

23. சாலைகள் அமைத்து கொடுப்பது.

24. சோலைகளை உண்டாக்கி வைப்பது.

25. பசுமாடுகள் உடம்பைத் தேய்த்துக்கொள்ள தூண்களை நிறுவுவது.

26. மிருகங்களுக்கு உணவளிப்பது.

27. சுமைதாங்கி நிறுவுதல்.

28. விலைகொடுத்து உயிரை காப்பாற்றுதல்.

29. கன்னிகாதானம் செய்து
கொடுத்தல்.

30. குழந்தைகளுக்கு பால் வழங்குதல்.

31. பார்வையற்றோருக்கு வழிதுணை புரிதல்.

32. ஆடை தானம் செய்தல்.

இவைகளே அய்யா வைகுண்டர் வகுத்த 32 விதமான தான அறங்கள் ஆகும். இவற்றை நம் அன்றாட வாழ்வில் கடைபிடித்தால் மகிழ்ச்சி உண்டாகும். அய்யா உண்டு!