வெள்ளி, 21 நவம்பர், 2014

அய்யா வழியை மக்கள் ஏற்றுக் கொள்ளக் காரணம்

அய்யா வழியை மக்கள் ஏற்றுக் கொள்ளக் கரணமாக கீழ்க்கண்ட விஷயங்களைக் கூறலாம்.
1)      பதிகள், தாங்கல்களின் அறிவுரை
2)      அனைவரும் சமம்
3)      ஆண், பெண் இருபாலார் இணைந்த வழிபாடு
4)      சமூக உரிமை
5)      தருமம் செய்யம் உரிமை
6)      புதிய வழிபாட்டு முறை
7)      யாரும் தாங்கல்கள் தொடங்கி அய்யா வைகுண்டரை வழிபடும் உரிமை
8)      கணக்க்க் கூறும் உரிமை என்பனவற்றைக் கூறலாம்.
பெரும்பாலான மதங்கள் மனிதர்களை வெவ்வேறாகத் தரம் பிரித்து வைத்துள்ளன. உதாரணமாக ¯சாரி என்றும், போதகர் என்றும், கடவுளை வழிபாடு செய்ய உரிமை பெற்றவர்களாகச் சிலரை நியமித்துள்ளன. இவர்களே ஆண்டவனை வழிபாடு செய்ய முடியம். ஏனைய மக்கள் தூரமாக நின்று வணங்க மட்டுமே முடியும்.
     ஆனால் “ அய்யா வழியில்யார் வேண்டுமானாலும் தாங்கல்கள் தொடங்கலாம். அய்யா வைகுண்டரைப் ¯சை செய்யலாம். இதில் ஆண், பெண் வேறுபாடுகள் இல்லை. ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லை. உயர்த்தப்பட்டவன், தாழ்த்தப்பட்டவன் என்ற வேறுபாடில்லை. அய்யா வைகுண்டரின் “ அய்யா வழி இயக்கத்தை மக்கள் சாதி வேறுபாடின்றி, மத வேறுபாடின்றி ஏற்றுக் காள்ள இது முக்கியக் காரணமாகும்.
மேலும் தீராத நோயுடையவர்கள் பலர் தலைமைப் பதிக்குச் சென்று நோய் நீங்கி நலமுடன் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலும் இவர்களே அய்யா வைகுண்டரின் மகிமையை உணர்ந்து தாங்கல்கள் தொடங்கி அய்யா வைகுண்டரை வணங்குவதோடு அவரது புகழையும் பரப்பி வருகின்றனர். இதுவும் அய்யா வைகுண்டரைத் தங்கள் கடவளாக மக்கள் ஏற்றுக் கொள்ளக் காரணமாக அமைகின்றது.
     அய்யா வைகுண்டர் மக்களுக்கு வருகின்ற நோய்களைத் தீர்ப்பதாலும், அனைத்து மக்களையும் ஒருபோலே கருதி அருள்புரிவதாலும்    “ அய்யா வழி இயக்கத்தை மக்கள் எளிதில் தங்கள் மதமாகவும், தங்கள் கடவுளாகவும் ஏற்றுக் கொள்கின்றனர்.
மருத்துவம்
    மருத்துவ வசதி என்பது வளர்ச்சியடையாத அந்தக் காலத்தில் மக்கள் அறியாமையில் மூழ்கி இறை கோபமே நோய்களுக்குக் காரணம் என்றிருந்த மூட நம்பிக்க்கையை மாற்றி, மக்களின் தீராத பல நோய்களைத் தீர்த்து
வைத்து மருத்துவராகவும் அய்யா வைகுண்டர விளங்கினார் எனலாம்.
     அய்யா வைகுண்டர் தண்ணீர், மண் இரண்டையும் கொண்டு இயற்கை வைத்தியம் புரிந்தார். இதனை அகிலத்திரட்டு,
           “மருந்தாகத் தண்ணீர் மண்
           வைத்தியங்கள் செய்ததுவும் ”  ( அகிலம். தொகுதி 2 பக். 27 )
என்ற விவரிக்கின்றது.
     கொடிய நோயோடு வருகின்ற  வருகின்ற மக்களுக்கு அய்யா வைகுண்டர் முத்திரிப்பதத்திலிருந்து ஐந்து சிறங்கை அளவு தண்ணீர் கோரி முகத்தில் தெளித்தும், ஐந்து சிறங்கை அளவு தண்ணீர் குடிக்கவும் கொடுத்துப் பின்னர் அவர்களது நெற்றியில் திருநாமம் இட்டு மண்ணையும் மருந்தாக உண்ணக் கொடுத்தார்.
     இருமல், சளி, காச நோய், குன்ம வாயு, கால்மொட்டி, கை மொட்டி, குருடு, செவிடு, ஊமை முதலிய பல நொய்களை அய்யா வைகுண்டர் தீர்த்து வைத்தார். இன்றும் பல மக்கள் நோயுடன் வந்து முத்திரிப் பதத்தாலும், திரு மண்ணாலும் தங்கள் நோய்க் குணமாகிச் செல்கின்றனர். அய்யா வைகுண்டரின் அருளால் நோய் குணமாவதைக் கண்ட மக்களே அதிகமாகத் தாங்கல்களை ஏற்படுத்தியுள்ளதைப் பார்க்கும்போது முத்திரிப்பதமும், திருமண்ணும் இயற்கை மருத்துவமாகச் செயல்படுகின்றது என நம்பலாம். இன்றும் ஏராளமான மக்கள் தங்கள் நோயைத் தீர்த்துக் கொள்ள அய்யா பதியை நாடிச் செல்கின்றனர்.
தலம்
     அய்யா வைகுண்டர் உபதேசித்த 32 அறங்களைச் செயல்படுத்தும் இடமாகத் தலங்கள் திகழ்கின்றன எனலாம். இதில் முதல் தலமாக தலைமைப் பதியில் அமைந்துள்ள அன்புவனம் திகழ்கின்றது.
1.அன்புவனம்
    அனைத்துத் தலங்களுக்கும் தலைமைத் தலமாக அன்புவனமே
திகழ்கின்றது. இங்கு வழிபாடுகள், அய்யா வழிக் கொள்கை அறிÆட்டல்கள், தெளிவுபடுத்தல், தருமங்கள், தவப் பயிற்சிகள் போன்றவை நடைபெறுகின்றன. தினந்தோறும் மூன்று வேளை அன்னதானமும் நடைபெறுகின்றது. இதனை “அய்யா வைகுண்டர் நித்திய அன்னத் தரும சாலை என்று அழைக்கின்றனர்.
     அணையா அடுப்பு மூலம் இருபத்து நான்கு மணி நேரமும் தொடர் தருமங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழக முதல்வர் அவர்களால்“ கோதானம் ”  செய்யப்பட்ட பசுவுடன்  “கோசாலை ”  ஒன்றும் சிறப்பாகச்
செயல்பட்டு வருகின்றது. இயற்கை வேளாண்மை வளர்ச்சிப் பணிகள், சமூகத் தொண்டு போன்றவையும் இங்கு நடைபெறுகின்றன.
2.அய்யா வைகுண்டர் தவவனம்
    இது இரண்டாவது தலமாக அமைகின்றது. கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் அருகே தென்பால் கடற்கரையில் இத்தலம் அமைந்துள்ளது. “தெட்சணா ¯மி”, தவ ¯மி”  எனவும் இத்தலம் அழைக்கப்படுகின்றது.
     இங்குத் தினசரி பணிவிடைகள், தருமங்கள் நடைபெறுகின்றன. ஐப்பசி முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி பதினேழு நாட்கள் திரு ஏடு வாசிப்புத் திருவிழாவும், மாசி 20 ஆம் தேதி அய்யா அவதரித்த நன்னாளில் கலிவேட்டை என்னும் நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.
     அந்நாளில் ஊஞ்சல் சேவை, அன்னதானம் போன்றவையும் நடைபெறுகின்றது. அய்யா வைகுண்டர் சுகமில்லாமல் இருந்தபோது அவரை அவரது உறவினர்கள் ஊஞ்சலில் வைத்துத் தூக்கிக் கொண்டு சென்றதன் நினைவாக ஊஞ்சல் சேவை நடைபெறுகின்றது. ஊஞ்சல் சேவையில் பத்தாயிரத்துக்கும் அதிகமான பெண்கள் கலந்து கொள்கின்றனர்.
     சித்திரை மாதம் பௌர்ணமி நன்னாளிலும் மாலை 6.30 மணிக்க்குச் சிறப்பு பணிவிடைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அன்று தருமங்கள், வாகனப் பவனி, ஊஞ்சல் சேவை, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப் பெறுகின்றன.
     இவ்விழாவில் அய்யா வைகுண்டருக்கு முந்திரி அமுது வழங்கும் அருளினைப் பெற்ற பிள்ளையார்விளை திருநிழல்தாங்கலிலிருந்து அகிலத்திரட்டு ஆகமம் ஊர்வலமாக்க் கொண்டு வரப்படுகின்றது.
     ஒவ்வொரு தமிழ் மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வாகனப்பவனியுடன் மாதத் திருவிழா நடைபெறுகின்றது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உகப்படிப்பும், உச்சிப்படிப்பும், தருமங்களும் நடைபெறுகின்றன.
3.அய்யா வைகுண்டர் அருள்வனம்
     திசையன்விளை அருகே உறுமன்குளம்கரையில் அமைந்துள்ளது அய்யா வைகுண்டர் அருள்வனம். இது மூன்றாவது தலமாகும்.
     அய்யா வைகுண்டர் நோய்வாய்ப் பட்டுத் திருச்செந்தூர் செல்லும் வழியில் நாராயணரின் ஏவுதலின்படி இரு முனிவர்கள் அய்யா வைகுண்டரை இருபுறமும் தாங்கி, திருச்செந்தூர் நொக்கிக் கொண்டு சென்ற இடம் இவ் உறுமன்களம்கரை என்று கருதப்படுவதால் இங்கு இவ் அருள்வனம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இங்கு தினசரி பணிவிடைகளும், தருமங்களும் நடைபெறுகின்றன. மாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை முதல் 17 நாட்கள் திரு ஏடு வாசிப்புத் திருவிழா நடைபெறுகின்றது.
     அது போன்று ஆனி மாதம் பௌர்ணமி தினத்தன்று அகிலத்திரட்டுப் பெருவிழா நடைபெறுகின்றது. அன்றைய தினம் எருமைகுளம் நிழல்தாங்கலிலிருந்து அலங்கரிக்கப்பட்ட இரதத்தில் திரு ஏடு எழுந்தருளல் பவனியும் நடைபெறுகின்றது.இந்த இரதத்தின் பின்னால் பல வாகனங்கள் வர மிகப் பெரும் வாகனப் பவனி நடைபெறுகின்றது. இப்பவனி திசையன்விளை நகரைச் சுற்றி உறுமன்குளமகரையை வந்தடைகின்றது. அன்று பணிவிடைகள், அன்னதானம், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப் பெறுகின்றன.
     தினமும் தவணைப்பால் வழங்குவது இத்தலத்தின் சிறப்பாகும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, தருமம் போன்றவையும் நடைபெறுகின்றன. இங்கு கோசாலை, மூலிகை பண்ணை, கட்டணமில்லா தையல் பயிற்சி நிறுவனம், இயற்கை வேளாண் பண்ணை போன்றவையும் செயல்படுகின்றன.
     முதியோர் இல்லம், கல்வி நிலையங்கள்  போன்றவை அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் இத்தலத்திலுள்ளவர்கள் கூறுகின்றனர்.
4.அய்யா வைகுண்டர் அருள் ஞானவனம்
இத்தலம் திண்டுக்கல் மாவட்டம் பழனிவட்டம் மிடாப்பாடியில் அமைந்துள்ளது. தின வழிபாடுகளும், வாரந்தோறும்   ஞாயிற்றுக்கிழமை
 சிறப்பு வழிபாடும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை மாத வழிபாடு சிறப்பாக நடைபெறுகின்றது. கோசாலை, முதியோர் இல்லம் போன்றவை அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
5.அய்யா வைகுண்டர் மதுரவனம்
    மதுரை அருகே வழப்பட்டியில் இத்தலம் அமைந்துள்ளது. தினப் பணிவிடைகள், வாரப் பணிவிடைகள், மாத் பணிவிடைகள் போன்றவை சிறப்பாக நடைபெறுகின்றன. சமூகப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
6.அய்யா வைகுண்டர் அமிர்தவனம்
    ஆறாவது தலமாக இத்தலம் அமைகின்றது. இத்தலம் பாளையங்கோட்டை சங்குருண்டானில் அமைந்துள்ளது. இங்கும் தினப் பணிவிடை, வாரப் பணிவிடை, மாதப் பணிவிடை, சமூகப் பணிகள் போன்றவையும் சிறப்பாக நடத்தப்பெறுகின்றன.
7.அய்யா வைகுண்டர் சிங்கார வனம்
    ஏழாவது தலமான அய்யா வைகுண்டர் சிங்கார வனம் அய்யா வைகுண்டர் சிறை வைக்கப்பட்ட சிங்காரவனத்தில் அமைந்துள்ளது. இத்தலம் திருவனந்தபுரத்தில் சிங்காரவனம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
     அய்யா வைகுண்டர் சுசீந்திரத்தில் சிறை வைக்கப்பட்டதன் நினைவாக தருமசாலை ஒன்று சுசீந்திரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குத் தினந்தோறும் பணிவிடைகள், வாரப பணிவிடைகள், மாத வழிபாடு, ஆண்டுத் திருவிழா போன்றவைகளும், தருமங்களும், சமூகத் தொண்டும் நடைபெற்று வருகின்றன.
   

அன்பு வனம்

அன்புவனத்தை நிர்வகித்து வருபவர் தலைமைப் பதியின் தர்மகர்த்தாக்களில் ஒருவரான  பாலபிரஜாபதி அடிகளார் அவர்கள். முத்திரிக் கிணற்றின் அருகே அன்புவனம் அமைந்துள்ளது. அருள்±லில் அய்யா வைகுண்டர் “ முத்திரிக் கிணற்றினருகே தர்மம் செய்ய வேண்டுமென்று கூறியுள்ளதால் அன்புவனத்தைத் தோற்றுவித்ததாகக் கூறுகின்றனர். அய்யா வைகுண்டர் தனது அன்பர்களுக்கு 32 தர்மங்களைப் போதித்தார். அதன் முதல் தொடக்கமாக அன்புவனம் அமைகிறது என்றும் கூறுகின்றனர்19
       இவ் அன்புவனத்தில் தங்கி ±ற்றுக்கும் மேற்பட்ட அனாதை குழந்தைகள் அருகிலுள்ள பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்று வருகின்றனர். இவ் அன்புவனத்தில் கோசாலை ஒன்றும் அமைக்கப்பட்டுச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. இக்குழந்தைகளை அடிகளாரின் மனைவி இரமணிபாய் அவர்கள் சிறப்பாகப் பராமரித்து வருகின்றார்கள். இம்மாணவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுக்க இரண்டு ஆசிரியர்களம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
     இருபது வயதானவர்களும் இவ் அன்புவனத்தில் பராமரிக்கபட்டு வருகின்றனர். அன்புவனத்தில் இருக்கும் அனைவருக்கும் மூன்று வேளை உணவு வழங்கப்படுகின்றது. தங்கள் சொந்த வீடுகளில் வசிப்பது போன்றே அவர்கள் மிகுந்த சந்தோசத்துடன் வசித்து வருகின்றனர்.
     அன்புவனத்தில் தொடர் வழிபாட்டுக் கூடம் ஒன்றும் செயல்பட்டு வருகின்றது. இங்கு அணையா விளக்கு ஒன்றும் ஏற்றப்பட்டுள்ளது. இவ் அணையா விளக்கை வயதானவர்கள் அணையாமல் பராமரித்து வருகின்றனர். இவர்கள் “ அய்யா சிவ சிவா அரகரா அரகரா என்று கூறியபடி தங்கள் தொடர் வழிபாட்டை மேற்கொண்டு வருகின்றனர்.
     அன்புவனம் “அன்புச் சங்குஎன்னும் மாத இதழையும் நடத்தி அய்யா வைகுண்டரின் ஆன்மீக முற்போக்குக் கொள்கைகளைப் பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
நித்தியப்பால்
            அய்யா வழி மரபில் நித்தியப்பால் என்பது மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றது. ஐந்து உழக்கு கைக்குத்தல் அரிசி, ஒரு உழக்கு சிறுபயறு, ஐந்து மிளகு வத்தல், ஒரு தேங்காய் போன்றவைகளைக் கொண்டு நித்தியப்பால் தயார் செய்யப்படுகின்றது.
     அய்யா வைகுண்டர் தனது காலத்தில் அன்பர்கள் அனைவருக்கும் நித்தியப்பால் கொடுத்த பின்னரே தானும் குடித்தார் எனப் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். அய்யா வைகுண்டர் தொடங்கி வைத்த அவ் வழக்கத்தையே பதிகளிலும் தாங்கல்களிலும் பின்பற்றுகின்றனர்.
     தலைமைப்பதியில் தினமும் காலை வேளையில் பால்மணி ஒலித்தப் பின்னர் ( அதாவது நித்தியப்பால் அளிக்கும் முன்னர் எழுப்பும் மணியோசை ) பக்தர்களுக்கு நித்தியப்பால் வழங்கப்படுகின்றது. அம்பலப்பதியிலும் தினந்தோறும் நித்தியப்பால் வழங்கப்படுகின்றது.
     முட்டப்பதி, ¯ப்பதி, தென்தாமரைகுளம் பதி ஆகிய பதிகளில் வாரம் ஒருமுறையோ, மாதம் ஒருமுறையோ அன்னப்பால் என நித்தியப்பாலை வழங்குகின்றனர். இவ் அன்னப்பாலை சீவாயு மேடையில் வைத்தும் லழங்குகின்றனர்.
     சிறிது நீர் கலந்து தயார் செய்யப்படும் அன்னப்பாலினை தவணைப்பால் என்றும் கூறுகின்றனர். நித்தியப்பால், தவணைப்பால், அன்னப்பால் என மூன்றினையும் அய்யா பக்தர்கள் “ பால் என்றே அழைக்கின்றனர். பசும்பாலை ஒடுக்கப்பட்ட மக்கள் பெற முடியாதவாறு ஒடுக்கப்பட்ட காலத்தில் அய்யா வைகுண்டர் செய்த மாற்று ஏற்பாடாக இதனைக் கருதலாம்.
மதமாற்றத்திற்குத் தடை
    அய்யா வைகுண்டரின் காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாற்றம் செய்யப்பட்டனர். பிற பகுதிகளைக் காட்டிலும் திருவிதாங்கூர் பகுதியில்தான் கிறிஸ்தவ மதம் வேகத்துடன் பரவியது20.
     வைகுண்ட சுவாமி ஐம்பதிகளையும், பல திருநிழல்தாங்கல்களையும் ஏற்படுத்தி சாதி, இன வேறுபாடின்றி எல்லா மக்களுக்கும் புதிய வழிபாட்டு முறையை காட்டியதால் கிறிஸ்தவ மத மாற்றத்திற்கு அது பெரும் தடையாக அமைந்தது. எனவே அய்யா வைகுண்டரின் அய்யா வழி இயக்கத்தை எதிர்த்தும், இழிவுபடுத்தியும் பேசினர்.
     அய்யா வைகுண்டர் எந்த சமயத்தையும் குறை கூறவோ, புறக்கணிக்கவோ இல்லை. மத மாற்றம் மக்களின் ஒற்றுமையை அழித்து உறவகளைப் பிரித்தன. சமுதாயக் கட்டுக்கோப்பானது பிந சமயப் போதகர்களால் அழிக்கப்பட்டதை அகிலத்திரட்டில்
     “ ஒருவேதந் தொப்பி உலகமெலாம் போடென்பான்
       மற்றொரு வேதம்சிலுவை வையமெலாம் போடென்பான்
       அத்தறுதி வேதமவன் சவுக்கம் போடென்பான்
       குற்ற முரைப்பான் கொடுவேதக் காரனவன்
    ( அகிலம். தொகுதி. 2 பக். 74 )
என்று கூறுகின்றார். இசுலாமும் கிறிஸ்தவமும் திருவிதாங்கூரில்           ( இன்றைய கன்னியாகுமரி மாவட்டம்) தங்கள் சமயத்தைப் பரப்பியதை மேலே கண்ட அகிலத்திரட்டு வரிகள் வெளிப்படுத்துகின்றன. மதமாற்றத்தின் காரணமாக சகோதரத்துவமும் சகிப்புத்தன்மையும் சிறிதுசிறிதாக மறையத் தொடங்கியதன் விளைவாக அய்யா வைகுண்டர் மத மாற்றத்தை எதிர்த்திருக்கலாம்.
முத்துக்குட்டி சுவாமியின் “அய்யா நெறிகிறிஸ்தவத்திற்குப் பெரியதொரு சவாலாகும். விசேஷமாக நெல்லை குமரிவாழ் கிறிஸ்தவர்களுக்கு ஒரு அறை கூவலும், அபாய எச்சரிக்கையாகும் என்று வே. ஜீவராஜ் கூறுவதைக் கவனத்தில் கொள்கிறபோது அய்யா வழி இயக்கம் மத மாற்றத்திற்குப் பெரும்தடையாக விளங்கியது தெளிவாகிறது.21.
     கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை மனதில் கொள்கிறபோது அய்யா வைகுண்டர் தோன்றியிருக்கவில்லை எனில் இம்மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருப்பர் என நாம் நம்பலாம். மக்கள் பிற மதங்களுக்கு மதம் மாறுவதைத் தடை செய்ததோடு இந்து மத அடக்கு முறைகளிலிருந்தும், அடிமைத் தனத்திலிருந்தும் விடுபட அய்யா வைகுண்டர் புதியதொரு இயக்கத்தை “ அய்யா வழிஎன்னும் பெயரில் ஸ்தாபித்தார் என எண்ணலாம். ஆக அய்யா வழி இயக்கம் மத மாற்றத்திற்கு தடையாக விளங்கியதன் பின்னணியை நாம்
உணர்ந்து கொள்ளலாம்.
     இதனை இலண்டன் திருச்சபை நாகர்கோவில் மறை மாவட்டத்தின் கி.பி. 1874 ஆம் ஆண்டைய அறிக்கை தெளிவுபடுத்துகின்றது. அவ்வறிக்கை
     “ கி.பி. 1821 ஆம் ஆண்டில் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவம் தழுவுவோரின் எண்ணிக்கை தாமரைகுளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்து இருநூற்றினை எட்டுமளவில் உயர்ந்து கொண்டே இருந்தது மொத்தக் கிராமங்களும் சிலுவையின்கீழ் வருவதாகவே தென்பட்டது. ஆனால் முத்துக்குட்டி வழியினரின் எழுச்சியினால் நம் பணிகளுக்கு ஓர் வலுவான தடை ஏற்பட்டுள்ளது என்று விவரிக்கின்றது22.
     இதே போன்று கி.பி. 1862 ஆம் ஆண்டைய ஜேம்ஸ் டவுண் மறை மாவட்ட அறிக்கையும்,
     “நாம் கண் தூங்கக்கூட நேரமில்லை. காரணம், யாதெனில் நமது பகைவன் கிறிஸ்தவ மக்களைப் போன்று சுறுசுறுப்புடன் இருப்பதுதான். மனிதாபிமான நோக்குடன் பகைவனின் செய்கை எவ்வளவு பெரிய ஏமாற்றுவேலை என்பதை எடுத்துக் கூறினாலும் அதனை ஒப்புக் கொள்வாரில்லை. கிறிஸ்தவத்தை விடச் சுலபமாக வளர்ச்சி நடை போடுவதுடன் கிறிஸ்தவம் பரவுவதற்கு இவர் ஒரு பெரிய தடையாக இருக்கிறார்என்று கூறுகின்றது.
தலைப்பாகை
     சாதீய உணர்வுகள் தலைவிரித்தாடிய இந்திய சமூகத்தில் ஆடை அணிவது, பெயர் வைப்பது, பேசுவது என அனைத்தும் நிபந்தனைக்கும், அடக்குமுறைக்கு உட்பட்டவையாகவே இருந்தன. ஒடுக்கப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலோ, முட்டிக்குக் கீழோ ஆடை அணிய அனுமதி இன்றி வாழ்ந்தனர். இத்தகைய ஒரு சமூகச் சூழலிலேயே அய்யா வைகுண்டரின் அவதாரமும் அவரது சீர்திருத்த இயக்கமும் மக்களை நல்வழிப்படுத்த முயல்கின்றது.
     ஆதிக்கச்சாதிகளிடம் ஒடுக்கப்பட்ட மக்கள் கொண்டிருந்த அச்சத்தை நீக்கி அவர்களைச் சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டுமென அய்யா வைகுண்டர் விரும்பினார். ஆகவே ஆதிக்கச்சாதிகள் போட்டிருந்த ஒவ்வொரு தடைகளாகத் தவிர்க்கத் தொடங்கினார்.
     T.K. வேலுப்பிள்ளை அவர்கள் “ பண்டு தொட்டே நாடார் சமூகத்தவர்களிடம் ஒரு பழக்கம் இருந்து வந்தது. ஒரு நாடார் சமூக இளைஞன் தனது பதினாறாவது அகவையில் தலையில் தலைப்பாகை அணிந்து பாதுகாப்பிற்காகப் பிச்சுவாக் கத்தியையும் கொண்டு விளங்குவான். இப்பழக்கத்தினை “உறுமல் கட்டுஎன்று அழைப்பர்என்று கூறுகின்றார்23.
     “மேலும் இவ்வினத்தவர்கள் இவ் உறமால் கட்டும் சடங்கினை விமரிசையாக நடத்தினர். ஆதிக்கச்சாதியாரின் அடக்குமுறையில் இப்பழக்கம் ஒடுக்கப்பட்டது. சுமைகளைத் தூக்கிச் செல்வதற்குக்கூட தலைப்பாகையை அணிய இம்மக்கள் அனுமதிக்கப்படவில்லை. பனை ஓலையையும் வைக்கோலையும் தலைப்பாகைக்குப் பதிலாக சும்மாடாய்ப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர் என்றும் கூறுகின்றார்24.
     இத்தகைய சூழலிலேயே அய்யா வைகுண்டர் மக்களின் தன்மான உணர்வை எழுப்பும் வண்ணம் மக்களிடம் தனது கருத்துகளைப் பரப்பத் தொடங்கினார்.
           “ கூலிக்காரர் மக்களில்லை
             கோடி வரிசை பெற்ற மக்கள்” ( அருள். பக். 71 )
என்று அம்மக்களின் பழம் பெருமையை எடுத்துரைக்கின்றார். அத்தோடு அச்சத்தோடு வாழ்ந்த மக்களுக்கு அச்சத்தைத் தவிர்த்து வீரத்தை ஊட்டினார். “ நெய்நிதிய சான்றோர்கள்என்றும், “ தெய்வச் சான்றோர்கள் என்றும்      “ திசை வென்றச் சான்றோர்கள் என்றும் நாடாரின மக்களத பழம் பெருமைகள் ஒவ்வொன்றாக எடுத்துரைக்கலானார்.
           “ குகையாளப் பிறந்தவனே
                என்குழந்தாய் எழுந்திருடா
             அதிகமுள்ள நீசனும்தான்
                மற்பிடித்து அடிக்கிறானே
             படையெடுக்க வாமகனே
                பாருலகம் சுட்டழிக்க
            வரிசைபெற்ற நீமகனே
                மானமறுக்கம் பொறுக்கலையோ ”             ( அருள். பக். 72 )
என வீரப் பள்ளியெழுச்சியும் பாடினார்.
     ஆதிக்கச்சாதிகளைக் கண்டு பயப்பட வேண்டாம் என்பதனை,
           “ ஒன்றுக்கு மஞ்சாதே உற்றமக்கள் சான்றோரே
             பதறாதே யென்றனுட பாலகரே என்றுசொல்லி
                                           ( அகிலம். தொகுதி. பக். 262 )
என்று போர்ப்பரணி பாடி மக்களிடையே வீர உணர்வை வளர்த்தெடுத்தார். அத்தோடு தங்கள் பாரம்பர்ய அடையாளமான தலைப்பாகையைத் தானும் கட்டிக் கொண்டதோடு தன்னைக் காணவரும் அன்பர்களையும் தலைப்பாகைக் கட்டி வரும்படிக் கூறினார்.
     ஆடை உடுத்தவே உரிமையற்றிருந்த ஒரு சமூகத்தில் மன்னர்கள் மணிமுடி தரிப்பது போன்று நாடார் இன மக்களையும் தலைப்பாகைக் கட்டச் செய்த மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தினார். நாடார்களாகிய  தாங்களும் மன்னர்கள்தான் என்று ஆதிக்கச் சாதிகளுக்குக் காட்டும்படி அய்யா வைகுண்டரது தலைப்பாகை புரட்சி அமைந்தது எனலாம். இது ஆதிக்கச்சாதிகளுக்கு அச்சத்தையும், ஆத்திரத்தையும் மூட்டியது என்றாலும் அய்யா வைகுண்டரின் இதுபோன்ற புரட்சிகரமான போராட்டங்கள் நாடார் இன மக்கள் மத்தியில் தன்மான உணர்வை ஏற்படுத்தியது எனலாம்.  இன்றும் தலைப்பாகை புரட்சியின் அடையாளமாகவே அய்யா வழி மக்கள் தலைப்பாகையை அணிகின்றனர்.

துவையல் பந்தி

அய்யா வைகுண்டர் மனிதர்களின் மனதைச் சுத்தம் செய்யவும், உடலைச் சுத்தம் செய்யவும், மனதின் சகலவிதமான பாவங்களைப் போக்கவும், மனிதர்கள் தங்களுக்குள்ளே காணப்படும் பகைகளைக் களைந்து சகோதரத்துவத்தையும், நட்பையும் ஏற்படுத்திட, ஏற்படுத்திய வழிபாட்டு முறையே துவையல் பந்தி வழிபாடு எனப்படுகின்றது.
அய்யா வைகுண்டர் தவத்தின் ஐந்தாவது வருட கடைசியில் கன்னியாகுமரிக்கு வடக்கே இரண்டு மைல் தொலைவில் அமைந்துள்ள வாகை பதியில் தனத தவம் நிறைவடையும் வண்ணம் தனது சீடர்களிடம் துவையல் பந்தி வழிபாட்டை நடத்துமாறு கூறினார்.
     எனவே அய்யா வைகுண்டர் கூறியபடி துவையல் பந்தி வழிபாட்டை நடத்திட சுமார் எழு±று குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாகை பதி சென்று துவையல் பந்தி வழிபாட்டை மேற்கொண்டனர். இத்துவையல் பந்தி வழிபாடு ஆறு மாதங்கள் நடைபெற்றது. துவையல் பந்தியில் கலந்து கொண்டவர்கள் அய்யா வைகுண்டர் கூறியபடி கடலில் காலை, மாலை நீராடுவதையும், காலை, நண்பகல், மாலை வேளை தங்கள் ஆடைகளை சுத்தம் செய்து உடுத்துவதையும் முறையாகத் தவறாமல் செய்து வந்தனர். அத்தோடு நண்பகல் ஒரு வேளை உணவை மட்டுமே உட்கொண்டும் வந்தனர்.
அரிசியும், சிறபயறும் கலந்து, கடல் வெள்ளத்தில் வேக வைத்த கஞ்சியே அவர்களது ஒரு நேர உணவாக இருந்தது. வாகை பதியில் குழுமியிருந்த மக்கள் அனைவரும் கடலில் நீராடி வழிபாடு முடித்த பின்னரே உணவு உண்ணுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
     இவ்வழிபாட்டால் அய்யா பக்தர்களுக்கு வியாதியும், சிலர் மரணமடையவும் நேரிட்டது. இதனால் பக்தர்கள் அய்யா வைகுண்டரிடம் முறையிட்டனர். உடனே அய்யா வைகுண்டர் அவர்களது கனவில் தோன்றி முட்டப்பதிக்குச் செல்லும்படிக் கூறினார்.
     அய்யா வைகுண்டர் கூறியபடி அன்பர்களும் முட்டப்பதி சென்று அதே  வழிபாடுகளை மேற்கொண்டனர். முட்டப்பதியில் உணவு சமைக்கவும் குளிக்கவும் உமைடயைச் சுத்தம் செய்யவும் நல்ல தண்ணீரைப் பயன்படுத்தும்படி அய்யா வைகுண்டர் கூறினார். அதன்படி அன்பர்களும் செய்து வந்தனர். அன்பர்களது இவ்வழிபாடு நிறைவேறக் கூடாது என எதிரிகள் பல தடைகளையும் ஏற்படுத்தினர். அத்தடைகளை எல்லாம் அய்யா வைகுண்டர் தவிடு பொடியாக்கி துவையல் பந்தி வழிபாடு நிறைவேற வழிவகை செய்தார். அன்பர்களும் அய்யா வைகுண்டரின் அருளால் துவையல் பந்தி வழிபாட்டை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
     கலியனிடமிருந்து மக்கள் தங்கள் மனதினைக் காத்துக் கொள்ளும்படியே அய்யா வைகுண்டர் தம் மக்களிடம் இவ்வழிபாட்டை மேற்கொள்ளச் சொன்னார் எனலாம். இத்தவத்தின் பின்னரே அய்யா வைகுண்டர் நெற்றியில் நாம்ம் அணியும் வழக்கத்தை மேற்கொண்டார்17 என இசக்கிமுத்து கூறுகின்றார்.
 முத்திரிக் கிணறு
     தலைமைப் பதியின் வட மேற்குப் பகுதியில் முத்திரிக்கிணறு அமைந்துள்ளது. தலைமைப் பதியின் புகழ் பெற்ற தீர்த்தத் தலமாக இது விளங்குகின்றது. அய்யா வைகுண்டரின் காலத்தில் பொது இடத்தில் தண்ணீர் அருந்தவோ, குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை இல்லை. அதை மீறி தண்ணீர் எடுப்பவர்கள் கடுமையாகதட் தண்டிக்கப்பட்டனர்.
     அக்கொடுமைகளுக்கு எதிராகவே அய்யா வைகுண்டர் இக்கிணற்றினை உருவாக்கினார். சாதி, மத, இன பேதமின்றி அனைத்து மக்களும் முத்திரிக் கிணற்றினைப் பயன்படுத்த அய்யா வைகுண்டர் அனுமதித்தார். இது மக்களிடையே நாம் அனைவரும் ஒன்று என்னும் உணர்வை ஏற்படுத்தியது.
     இதனைப் பொறுக்க முடியாத ஆதிக்கச்சாதிகள் கிணற்றிவ் விஷத்தைக் கலந்தனர். அய்யா வைகுண்டர் அவ்விஷத்தினை முறியடித்து மக்கள் பருகும்படியும் பயன்படுத்தும்படியும் செய்தார். விஷம் கலந்திருப்பது தெரிந்ததும் அய்யா வைகுண்டர் என்னை நம்புபவர்கள் குளித்துத் தண்ணீர் அருந்தும்படிக் கூறினார். அவரை நம்பிய மக்கள் குளித்துத் தண்ணீர் அருந்தினர். விஷம் அவர்களை ஒன்றும் செய்யவில்லை. ஆனால் அய்யா வைகுண்டரை நம்பாதவர்கள் மயக்கம் அடைந்தனர்.
     மயக்கமடைந்தவர்களைக் காப்பாற்றும்படி அன்பர்கள் வேண்ட அய்யா வைகுண்டர் முத்திரிக் கிணற்றின் தண்ணீரை எடுத்து மயக்கம் அடைந்தவர்களின் முகத்தில் தெளிக்க அவர்கள் #ங்கி எழுகின்றவர்கள் போல் எழுந்தனர்13.
     முத்திரிக் கிணற்றின் தண்ணரைக் குடிப்பதன் மூலமும், அத்தண்ணீரில் குளிப்பதன் மூலமும் தோல் நோய் உள்ளிட்ட பல நோய்கள் குணமடைவதாய் பக்தர்கள் நம்புகின்றனர். இக்கிணற்றில் குளிப்பதைப் “பதம் விடுதல் என்று கூறுகின்றனர். ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை முத்திரிக் கிணற்றில் குளிப்பதைப் புண்ணியமாக்க் கருதுகின்றனர்.
உண்டியல் முறை
    அனைத்து மதங்களிலும் காணிக்கை, உண்டியில் போன்ற முறைகள் காணப்படுகின்றன. ஆனால் அய்யா வழிபாட்டில் உண்டியல், காணிக்கைகள் போன்ற நடைமுறைகள் கண்டிப்பாகக் கூடாது. அகிலத்திரட்டில் அய்யா வைகுண்டர் காணிக்கை போடும் வழக்கத்தை வன்மையாகக் கண்டிக்கிறார். அய்யா பதிகளில் மட்டுமல்லாது, பிற ஆலயங்களிலும் காணிக்கை இடக்கூடாது என்கின்றார்.
     மேலும் கேளிக்கை நிகழ்வுகள், பலி இடுதல் போன்றவை கூடாது என்றும் அய்யா வைகுண்டர் தனது பக்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்படியே அனைத்துப் பதிகளும், தாங்கல்களும் செயல்படுகின்றன.
காவி வண்ணம்
     காவி வண்ணம் தியானத்தின், அமைதியின், சமத்துவத்தின் அடையாளம். மனித உடலில் ஓடும் இரத்தத்தின் நிறம் சிவப்பு. ஆகவே மனிதர்களில் வேறுபாடில்லை என்பதனை அடையாளப்படுத்தவே அய்யா வைகுண்டர் காவி வண்ணத்தைத் தமது இயக்கத்தின் குறியீடாகக் கொண்டார் என்று பக்தர்கள் கூறுகின்றனர்14
       பள்ளியறையில் நாமவேல் குறியிட்ட காவி வண்ணத் துணி அலங்காரமாகத் தொங்கவிடப்பட்டுள்ளது. பதிகளிலுள்ள குடைகள், தாங்கல்களிலுள்ள குடைகள் மற்றும் கொடி மரத்தின் கொடியும் காவி வண்ணம் கொண்டவையாகவே உள்ளன. பணிவிடைக்காரர்களும் காவி வண்ண உடையையே அணிந்துள்ளனர். தலைப்பாகையும் காவி வண்ணமே.
     பள்ளியறை மேடையில் நாம வேல் ( வேல் போன்று ) ஒன்று காவித்துணியாலோ அல்லது பட்டுத் துணியாலோ அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வேல் அறிவின் குறியீடு என்கிறார் தரவாளர் கேபாலகிருஷ்ணன் என்பவர்15
ஐந்து என்னும் எண்
    அய்யா வழி பக்தர்களுக்கும் ஐந்து என்னும் எண்ணுக்கும்  நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. உதாரணமாக அய்யா வைகுண்டரின் சீடர்கள் ஐந்து பேர், சீவாயுமார்கள் ஐந்து பேர்.  அது போன்று குளிக்கும்போது பனை ஓலையாலான பட்டையால் ஐந்து முறை தண்ணீரை ஊற்றிக் குளித்தல். தற்போது இதற்கு அலுமினிய வாளியைப் பயன்படுத்துகின்றனர்.
     முத்திரிப்பதத்தை ஐந்து முறை சிறங்கை அளவு கோரிக் குடித்தல். அய்யா சிவசிவா அரகரா என உச்சரித்தபடி ஐந்து முறை பதியை வலம் வருதல். கொடி மரத்தை ஐந்து முறை வலம் வருதல் போன்றவற்றைக் கூறலாம்.
     இதற்கான காரணம் பெரும்பாலான பக்தர்களுக்குத் தெரியவில்லை. முன்னோர்கள் கூறியபடி அவ்வாறு செய்து வருகிறொம் என்றெ கூறுகின்றனர். இது அய்யா வைகுண்டரின் ஐந்து வார்த்தை மந்திரமாக இருக்கலாம். காரணம் அய்யா சிவசிவா அரகரா என்னும் ஐந்து வார்த்தைகளைப் பக்தர்கள் கூறுவதைக் கூறலாம்.
ஒளி வழிபாடும் கண்ணாடி வழிபாடும்
    தமிழர்களின் வழிபாட்டில் முச்சுடர் வழிபாடு முக்கித்துவம் வாய்ந்தது. பகவத்கீதையில் கிருஷ்ணர் “ மதியில் ரவியில் ஒளியும் யான்16 என்றும், “தீயின் ஒளியும் ஆகின்றேன் என்றும் கூறுகின்றார்17
     ¯தத்தாழ்வார் நாரயணரை “ ஒளியுருவம் நின்னுருவம் என்கிறார்11 . அகிலத்திரட்டு திருமாலை “ சோதியே வேதச்சுடரே ( அகிலம். தொகு. 1 பக் 112) என்றும், வைகுண்டரை “ சிவ சோதி உமக்கபயம் ” ( அகிலம். தொகு. 2 பக். 98 ) என்றம் கூறுகின்றது.
     திருமாலும் வைகுண்டரும் ஒளி உடம்பாகக் காட்சியளித்த செய்திகளும் ( அகிலம். தொகு. 2 பக். 32, அருள். பக். 66 ) இடம் பெற்றுள்ளன. ஒளி வழிபாட்டை மக்களுக்கு உணர்த்தவே திருமாலும், வைகுண்டரும் ஒளி உடம்பாகக் காட்சியளித்தார் எனலாம். வைகண்டசுவாமியின் பதிகளின் பள்ளியறையில் ஒரு நிலைக் கண்ணாடி வைக்கப்பட்டு அதன் இரு பக்கங்களிலும் திருவிளக்கும் வைத்துத் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.
     தெளிந்த மன உணர்வுடன் வழிபாடு அமைய வேண்டும் என்பதன் குறியீடாக கண்ணாடி வழிபாடு அமைகிறது எனலாம்.  ஒவ்வொரு மனிதர்களும் தம்மில் குடி கொண்டுள்ள நன்மைகளையும், உண்மைகளையும், கருணை மனதையும் கண்டு கொள்ளவே  அய்யா வைகுண்டர் கண்ணாடி வழிபாட்டினையும், ஒளி வழிபாட்டினையும் ஏற்படுத்தினார் எனலாம். கண்ணாடி வழிபாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை அய்யா வைகுண்டரையே சாரும்.
     “அகம் பிரம்மாஸ்மி ”  ( நானே பிரம்மம்) எனும் கோட்பாட்டை நிரூபிக்கும் வண்ணம் அய்யா வைகுண்டரின் கண்ணாடி வழிபாடும், ஒளி வழிபாடும் அமைந்துள்ளது.  மேலும் கடவுளையும், மனிதனையும் பிரித்து வைத்திருந்த ஆன்மீக, மதச் சுவர்களை உடைத்தெறிந்து நானே கடவுளின் அம்சம். எனதுள்ளில் கடவுள் ஒளியாக ஒளிர்கிறார். அவரைத் தன்னுள் கண்டு கொள்வதே மனித வாழ்வின் பேரின்பம் என்பதே இவ்வழிபாட்டின் தத்துவமாகும்.
     மனிதர்களில் ஆண், பெண் வேறுபாடு இருப்பினும், ஆத்மாவில் எவ்வித வேறுபாடும் இல்லை. கடவுளின் முன் ஆத்மா சமமானதே. ஆத்மாவிற்கு இன்பம், துன்பம் எதுவுமில்லை என்பதை அடையாளப்படுத்தி, மனிதர்களில் வேற்றுமை நிலவுவதை உடைத்தெறியும் நோக்கத்தோடு இவ்வழிபாடு அய்யா வழி மக்களால் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகின்றது.
     ஒவ்வொரு மனிதர்களும் சென்று கண்ணாடியில் பார்க்கும்போது அவரவர் முகம் மட்டுமே காட்டும் கண்ணாடி போன்று, கடவுளும், அவரவர் மனதில் அவரவர் போன்றே  காட்சியளிப்பார் என்பதை நிறுவும் வண்ணம் அமைக்கப்பட்டது கண்ணாடி வழிபாடு.
     மத வழிபாட்டில் புதியதொரு வழிபாட்டு முறையை ஏற்படுத்தி, மக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க அய்யா வைகுண்டர் வழி செய்ததையே இவ்வழிபாடு வெளிப்படுத்துகிறது. கண்ணாடியின் முன் திருவிளக்கு ஏற்றி, அது ஒளிர்ந்து இருளை அகற்றி வெளிச்சம் தருவது போன்று, மனிதர்களும் தங்களுக்குள்ளிருக்கும் தீமையை அகற்றி, நன்மை என்னும் அக ஒளியை ஏற்றி ஆத்ம ஞானத்தை அடைய இவ்வழிபாடு உதவுகின்றது எனலாம்.
     தன்னுடைய உருவத்தை வரைந்து வழிபட முனைந்த பக்தர்களை அய்யா வைகுண்டர் நான் உங்களுக்குள்ளேயே குடி கொள்ளுகிறேன். உங்களது உருவத்திலேயே என்னைப் பாருங்கள். உங்களை என்னைப் போல் உயர்த்த வேண்டும். சுத்தமான மனதுள்ளவர்களாக  இருந்தால் மட்டுமெ இது சாத்தியப்படும்என்று அறிவுறுத்தினார்18.
     அய்யா வைகுண்டரின் கொள்கைகளைப் போன்று அவரது வழிபாட்டு முறைகளும் முற்போக்குத் தன்மை கொண்டு விளங்குவதையே கண்ணாடி வழிபாடும், ஒளி வழிபாடும் அமைகின்றன எனலாம்.

தாங்கல்கள் சாதியின் அடிப்படையில் நாடார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாடார் இனத்தவர்களே அதிகமான தாங்கல்களை நிறுவியுள்ளனர். ±ற்றுக்கு தொண்ணூறு சதவிகித தாங்கல்கள் இம்மக்களாலேயே நிறுவப்பட்டுள்ளன ( 2823   ( 90 %).
நாயர்
    இவ்வின மக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம், விளவங்கோடு தாலுகாக்களில் அதிகமான தாங்கல்களை நிறுவி அய்யா வைகுண்டரை வழிபடுகின்றனர். ஏனைய தாலுகாக்களில் அதிகளவு தாங்கல்கள் காணப்படவில்லை. நாடார் இன மக்களுக்கு அடுத்தபடியாக இவ்வின மக்களே அதிகமான தாங்கல்களை நிறுவியுள்ளனர். மொத்தம் 68 ( 2.04% ) தாங்கல்கள் காணப்படுகின்றன.
ஆசாரி
     நாயர் இனத்தவர்களக்கு அடுத்தபடியாக ஆசாரி இனத்தவர்கள் அதிகமான தாங்கல்களை நிறுவியுள்ளனர். மொத்தம் 63 ( 1.89 %) தாங்கல்கள்
காணப்படுகின்றன.
கோனார், நாவிதர், பறையர்கள்
     இவ்வின மக்களின் தாங்கல்கள் 41 ( 1.23 % ) காணப்படுகின்றன. நாவிதர்கள் 37 (1.11 %) தாங்கல்களும், பணிக்கர் இனத்தவர்கள் 19 (.57 %  ) தாங்கல்களும், பறையர் இன மக்கள் 16 (.48 %  ) தாங்கல்களும், வெள்ளாளர்கள் 8 (.24 %  ) தாங்கல்களும், செட்டியார்கள் 6 (.18 %  ) தாங்கல்களும், தேவர் 5 ( .15 %  ) தாங்கல்களும், குரூப்  ( கிருஷ்ணன் வகை ), இன மக்கள் 3 ( .3 % ) தாங்கல்களும், அளவர் இனத்தவர்கள் 3 (.3%) தாங்கல்களும் நிறுவி அய்யா வைகுண்டரை வழிபட்டு வருகின்றனர்.
தாங்கல்களும் பிற தெய்வ வழிபாடுகளும்
    தாங்கல்களில் இந்து மத தெய்வங்களையும் வழிபடும் மரபு காணப்படுகின்றது. நாடார் இனத்தைத் தவிர்த்த பெரும்பாலான மக்கள் அய்யா வைகுண்டரின் வழிபாட்டோடு பிற தெய்வ வழிபாட்டையும் மேற்கொள்கின்றனர். அய்யா வைகுண்டரின் அவதாரத்திற்கு முன்னரே தாங்கள் குடும்பத்தினர் பிற தெய்வ வழிபாட்டை மேற்கொண்டு வருவதால் அவ்வழிபாட்டைத் தாங்களும் மேற்கொள்வதாகக் கூறுகின்றனர். அய்யா வைகுண்டர் உலகிலுள்ள அனைத்துக் கடவுளின் அம்சம் என்று  அகிலத்திரட்டில் கூறியிருப்பதாலும் பிற தெய்வ வழிபாட்டை தாங்கல்களில் மேற்கொள்வதாகக் கூறுகின்றனர். இவர்களது பிற தெய்வ வழிபாட்டில் பிற மத  தெய்வங்களின் வழிபாடு காணப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்து மதத் தெய்வங்களின் வழிபாடு மட்டுமே காணப்படுகின்றது. என்றாலும் பிற மத துவேசம் இம்மக்களிடம் காணப்படவில்லை. எல்லா மதக் கடவுளரும் அய்யா வைகுண்டரின்  அம்சமே. இதில் பிற மதக் கடவுளர்கள் மீதும் அக்கடவுளர்களைப் பின்பற்றும் மக்கள் மீதும் எதற்குத் துவேசம் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.
     இத்தகைய ஒரு மத நல்லிணக்கக் கோட்பாட்டை நாம் பிற மத வழிபாடுகளில் காண்பது என்பது அரிது. இது அய்யா வழி வழிபாட்டில் மட்டுமே சாத்தியப்பட்டுள்ளது எனலாம். இது அய்யா வைகுண்டரின் கொள்கைகள் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அம்மக்களை நல்வழிப்படுத்தியுள்ளதைத் தெளிவுபடுத்துகின்றது. அனைத்து மத தெய்வங்களும் என் அம்சமே என அய்யா வைகுண்டர் கூறியதையே இம்மக்கள் அடியொற்றி மத நல்லிணக்கத்தோடு வாழ்கிறார்கள் எனலாம்.
நாடார் இன மக்கள் அய்யா வைகுண்டரின் வழிபாட்டோடு பிற தெய்வ வழிபாட்டை மேற்கொள்வதில்லை. ஆனால் பிற தெய்வக் கோயில்களுக்குச் செல்வது, ஊர் மக்களோடு சேர்ந்து வரி செலுத்திப் பிற தெய்வ வழிபாட்டில் கலந்து கொள்வது போன்ற செயல்களை மேற்கொள்வதைக் காணமுடிகின்றது.

தாங்கல் – விளக்கம்

ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைக்கவும், அவர்களிடையே ஒற்றுமை உணர்ச்சியை ஏற்படுத்திடவும், தன்னுடைய சமய போதனைகளைப் பரப்பிடவும் அய்யா வைகுண்டரால் தோற்றுவிக்கப்பட்ட நிறுவனங்கள் பதி என்றும், அதன் வளர்ச்சியாகத் தோன்றியவை நிழல் தாங்கல்கள் அல்லது இணைத் தாங்கல்கள் என்றும்  அழைக்கப்படுகின்றன. இதனை அகிலம் “ நான்வந் தென்பேரால் நாட்டுமிணைத் தாங்கல்களைத்
     தான் வந்து பார்க்க சந்தோசமாயிருக்கும் ” ( அகிலம். தொகு.2 பக்.456 ) என்று கூறுகின்றது.
                அய்யா வழி அன்பர்கள் அய்யா வைகுண்டரின் அருளைப் பெற்றுப் புதியதொரு வாழ்வைப் பெற்றிட வேண்டும் என்பதனையே “ தாங்கல் என்னும் சொல் குறிக்கிறது எனத் திருநாவுக்கரசு கூறுகின்றார்13 .
 இதனை அடியொற்றியே அய்யா வைகுண்டர்
1)      செட்டிக்குடியிருப்பு
2)      அகஸ்தீஸ்வரம்
3)      பாலÆர் ( பாÙர் )
4)      சுண்டவிளை
5)      வடலிவிளை
6)      கடம்பன்குளம்
7)   உன்பரக்கொடி போன்ற ஊர்களில் தாங்கல்களைத் தொடங்கினார் எனலாம். இவ்Æர்களில் அய்யா வைகுண்டர் தாங்கல்கள் தொடங்கியது பற்றி அருள்±லும் குறிப்பிடுகின்றது ( அருள். 116 ).
மேலும் திருநெல்வேலி, பாம்பன்குளம், பாஞ்சாலங்குறிச்சி போன்ற பல இடங்களிலும் அய்யா வைகுண்டர் திருநிழல்தாங்கல்களை நிறுவியதை அன்பர்கள் மூலம் அறியமுடிகின்றது
அய்யா வைகுண்டர் தொடங்கி வைத்த தாங்கல்களைத் தொடர்ந்துஆயிரக்கணக்கான திருநிழல்தாங்கல்களை அய்யா வைகுண்டரின் அன்பர்கள் தொடங்கினர். இவை அய்யா வைகுண்டர் கூறியபடி மக்களின் வழிபாட்டுத் தலங்களாகவும், தருமச்சாலைகளாகவும், கணக்குச் சொல்லும் இடங்களாகவும் ( வருங்கால நிகழ்வுகளைக் கூறுமிடம்), கல்வி போதிக்கும் இடங்களாகவும் செயல்பட்டன. இன்றும் அவ்வாறே செயல்பட்டும் வருகின்றன.
தாங்கல்களின் செயல்பாடுகள்
    தாங்கல்கள் அனைத்தும் தலைமைப் பதியான சுவாமித்தோப்புப் பதியைப் பின்பற்றியே செயல்படுகின்றன. தாங்கல்களில் பணிவிடைகளை மேற்கொள்பவர்கள் வாரம் ஒருமுறையோ, மாதம் ஒருமுறையோ தலைமைப் பதிக்குச் சென்று வருகின்றனர். அவதார தின விழா மற்றும் ஏனைய மூன்று திருவிழாக்களின்போதும் தவறாமல் தலைமைப் பதிக்குச் சென்ற அய்யா வைகுண்டரை வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
     தாங்கல்கள் அய்யா வைகுண்டரின் கொள்கைகளைப் பரப்பும் இடங்களாகவும், தர்மச் சாலைகளாகவும், மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இடங்களாகவும், சாதி, இனம் கடந்து மனித நேயத்தை வளர்க்கும் இடங்களாகவும் செயல்படுகின்றன. பல தாங்கல்கள் கணக்குச் சொல்லும் இடங்களாகவும் திகழ்கின்றன. சில தாங்கல்களில் கணக்குக் கூறுவதில்லை.
     தாங்கல்களில் நடைபெறும் வழிபாடுகளை நான்காக வகை செய்யலாம். அவை,
1)      தினப் பணிவிடை
2)      வாரப் பணிவிடை
3)      மாதப் பணிவிடை
4)      ஆண்டுப் பணிவிடை ( திருவிழா ) என்பனவாகும்.
1)    தினப் பணிவிடை
    பதிகளைப் போன்றே அனைத்துத் தாங்கல்களிலும் தின வழிபாடு நடைபெறுகின்றது. சில தாங்கல்களில் அவற்றின் வசதிக்கேற்ப தின வழிபாடு காலை, நண்பகல், மாலை என மூன்று வேளையும், சில தாங்கல்களில் காலை, மாலை என இரண்டு வேளையும் நடைபெறுகின்றன. பல தாங்கல்களில் காலை அல்லது மாலை என அவர்களின் வசதியைப் பொறுத்து ஒரு வேளை மட்டுமே தின வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது. .வ்வாறு ஒரு வேளை மட்டுமே தின வழிபாடு நடைபெறும் தாங்கல்களில் தனியாகப் பணிவிடைக்காரர்கள் இருப்பதில்லை. அங்கு தாங்கல்கள் நிறுவிய அன்பர்களே பணிவிடைக்காரர்களாகச் செயல்படுகின்றனர். இவர்களில் பலர் கூலி வேலை பார்ப்பவர்களாக இருப்பதால் அவர்களால் மூன்று வேளை பணிவிடை சாத்தியமில்லாமல் போகின்றது.
     பெரிய தாங்கல்கள் அனைத்திலும் மூன்று வேளை பணிவிடை நடைபெறுகின்றது. தங்கள் பொருளாதார வசதிகளுக்கேற்ப தாங்கல்களில் வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். வசதியான தாங்கல்களில் நித்தியப்பால், தவணைப்பால் போன்றவை வழங்கப்படுகின்றன.
     பொருளாதார வசதி குறைவான தாங்கல்களில் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் தாங்கலைச் சுத்தம் செய்து கண்ணாடி முன்பு திருவிளக்கை ஏற்றி வைத்து வழிபடுகின்றனர். அனைத்துத் தாங்கல்களிலும் காலை, மாலை வேளைகளில் தாங்கல்களைச் சுத்தம் செய்து கண்ணாடி முன்பு திருவிளக்கு ஏற்றி வழிபடும் வழிபாடு தவறாமல் நடைபெறுகின்றது.
     தனியாகத் தாங்கல்கள் வைக்காமல் வீடுகளில் வைக்கப்படும் தாங்கல்கள் வீட்டின் ஒரு தனி அறையில் கண்ணாடியும், திருவிளக்கும் வைத்து அய்யா வைகுண்டரை வழிபடுகின்றனர். இது தனியான தாங்கல்வழிபாடுகளை விட அதிகமாக இருக்கிறதைப் பாரக்க முடிகின்றது. இங்கும் தினம் அதிகாலை , நண்பகல், மாலை என மூன்று வேளையும் வழிபாடாக இல்லாமல் திருவிளக்கு ஏற்றி வீட்டிலுள்ளவர்கள் அய்யா வைகுண்டரை வழிபடுகின்றனர்.
     எந்த வேலையைத் தெரடங்குவதற்கு முன்னரும் அய்யா வைகுண்டரை வழிபட்டு விட்டே இவர்கள் தங்கள் வேலையைத் தொடங்குகின்றனர். தனியாக அறை இல்லாதவர்கள் வசதியான ஒரு இடத்தில் குறிப்பாகத் தென் மேற்கு மூலையில் அய்யா வைகுண்டரை வழிபடுகின்றனர். இதற்கான காரணத்தை அவர்களால் கூற இயலவில்லை.
2)    வாரப் பணிவிடை
வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமையை அனைத்துத் தாங்கல்களிலும் சிறப்பு நாளாகக் கருதி கொண்டாடுகின்றனர். பல தாங்கல்களில் காலை, நண்பகல், மாலை என மூன்று வேளையும் சிறப்பாகப் பணிவிடை மேற்கொள்ளப்படுகின்றது.
   பெரிய தாங்கல்களில் அய்யா வைகுண்டரின் கொள்கைகள் குறித்துச் சொற்பொழிவுகளும் நடைபெறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை மட்டுமல்லாது கணக்குக் கூறும் நாட்களான செவ்வாய், வெள்ளி போன்ற தினங்களிலும் சிறப்புப் பணிவிடைகள் நடைபெறுகின்றன. கணக்குக் கூறும் தாங்கல்களில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களும் சிறப்பாகப் பணிவிடைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பல தாங்கல்களில் அதிகாலை ஐந்து மணிக்கே திருநடை திறக்கப்பட்டு பணிவிடைகள் நடைபெறுகின்றன. பிரசாதமாக நித்தியப்பால் வழங்கப்படுகின்றது.
மாதப் பணிவிடை
    ஒவ்வொரு தாங்கல்களும் தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை சிறப்பு நாளாகக் கருதுகின்றனர். ஆகவே அன்றைய தினம் சிறப்புப் பணிவிடைகளை மேற்கொள்கின்றனர். சில தாங்கல்களில் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையும், நான்காவது ஞாயிற்றுக்கிழமையையும் சிறப்பான நாளாக்க் கருதிப் பணிவிடைகளை மேற்கொள்கின்றனர். இதற்கான  காரணத்தை அவர்களிடம் கேட்டபோது அவர்களுக்குப் பதில் தெரியவில்லை. எங்கள் முன்னோர்கள் அவ்வாறு மூன்றாவது அல்லது நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் பணிவிடை மேற்கொண்டனர். அதைப் பின்பற்றியே நாங்களும் மேற்கொள்கிறோம் என்று கூறுகின்றனர்.
     அன்று பெரும்பாலான தாங்கல்களில் அன்னதானம் வழங்கப்படுகின்றது. அன்னதானம் வழங்க இயலாத தாங்கல்கள் நித்தியப்பால் தருமம் வழங்குகின்றன.
ஆண்டுத் திருவிழா
     தாங்கல்கள் அனைத்தும் அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை ஆண்டு விழாவாகக் கொண்டாடுகின்றன. பெரும்பாலும் தாங்கல்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஆண்டுத் திருவிழாவைக் கொண்டாடுகின்றன.
     திருவிழாவின்போது அன்னதானம், ஊர்வலம் போன்றவை நடைபெறுகின்றன. தாங்கல்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒரு நாள் திருவிழாவையோ, இரு நாள் திருவிழாவையோ, ஐந்து நாள் திருவிழாவையோ, பத்து நாள் திருவிழாவையோ கொண்டாடுகின்றன.
     சில தாங்கல்களில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆண்டுத் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். இன்னும் சில தாங்கல்களில் ஆண்டுக்கு ஒரு முறை ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டுமே ஆண்டுத் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர்.
     பதிகளைப் போன்றே தாங்கல்களிலும் பிச்சை எடுத்து செய்யம் அன்னதானம் நடைபெறுகின்றது. சில தாங்கல்கள் அவதார தினத்துடன் ஏடு வாசிப்பையும் ஆண்டுத் திருவிழாவாக நடத்தி வருகின்றன.
     ஆண்டுத் திருவிழாக்கள் பதிகளில் நடைபெறுவது போன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடைபெறுகின்றன. கொடி மரமில்லாத தாங்கல்களில் கொடி ஏற்றம் இல்லாமலேயே திருவிழாக்கள் நடைபெறுகின்றன. பல தாங்கல்களில் பத்தாம் திருவிழா அன்றும், சில தாங்கல்களில் பத்துத் தினங்களும் அன்னதானம் நடைபெறுகின்றன.
தாங்கல்களின் வளர்ச்சி
    தாங்கல்களின் வளர்ச்சி என்பது என்பது தென்னிந்தியா முழுவதும் அதிகமாகக் காணப்படுகின்றன. கடந்த 2013 ஆம் ஆண்டு மட்டும் 1500 தாங்கல்களுக்குப் பிடிமண் பாலபிரஜாபதி அவர்களால் வழங்கப்பட்டுள்ளதாக தருமு இரஜினி அவர்கள் குறிப்பிடுகின்றார்14.
     அய்யா வைகுண்டர் தன்னுடைய காலத்திலேயே அதிகமான திருநிழல்தாங்கல்களை ஏற்படுத்தி எண்ணினார். இயன்றவரை ஏற்படுத்தவும் செய்தார். தனது சீடர்களைப் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி பல்வேறு தாங்கல்கள் ஏற்பட்டிடவும் வழிவகை செய்தார்.
     அய்யா வைகுண்டரே பல ஊர்களுக்கும் சென்று திருநிழல்தாங்கல்களை ஏற்படுத்தினார். அய்யா வைகுண்டரால் ஏற்படுத்தப்பட்ட தாங்கல்கள் இணைத்தாங்கல்கள் என்று அழைக்கப்படுகின்றன.
     ஆரம்ப காலங்களில் தாங்கல்கள் சிறு குடிசைகளில் அமைக்கப்பட்டிருந்தன. இன்று குடிசைகளில் அமைந்த தாங்கல்களைக் காணமுடிவதில்லை. அனைத்துத் தாங்கல்களும் காங்கிரீட் கட்டிடங்களாகவே காட்சியளிக்கின்றன.
     c. தேசிய விநாயகம்பிள்ளை அவர்கள் “ தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மட்டுமன்றி உயர் வகுப்பாரும் ஏற்றத்த்தாழ்வு என்பது இல்லாது இத்தாங்கல்களுக்கு வந்து வழிபடுவதாகக் கூறுகின்றார்15.
     தென் தமிழகத்தில் எட்டாயிரத்துக்கும் அதிகமான தாங்கல்கள் காணப்படுவதாக த. கிருஸஷ்ணநாதன் கூறுகின்றார்16.
     இன்று தமிழ்நாட்டில் மட்டுமன்றி கேரளம், கர்னாடகா, மஹபராஸ்ட்டிரம், ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் அதிகமான தாங்கல்கள் காணப்படுகின்றன. தற்போது தமிழர்கள் ( பெரும்பாலும் நாடார் இன மக்கள் ) எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தாங்கல்களை ஏற்படுத்தித் தாங்கள் வாழும் இடங்களிலும் அய்யா வைகுண்டரின் கொள்கைகளைப் பரப்புவதோடு அய்யா வைகுண்டரையும் வழிபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தாங்கல்களின் வளர்ச்சி
    கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 3123 தாங்கல்கள் காணப்படுகின்றன. வருங்காலங்களில் இத்தாங்கல்களின் எண்ணிக்கை கூடக்கூடும்.
 அய்யா வைகுண்டர் தோன்றிய நாடார் இன மக்கள் மட்டுமன்றி வெள்ளாளர், நாயர், செட்டியார், வண்ணார், நாவிதர், பறையர், பள்ளர், அளவர், தச்சர் ( ஆசாரி ), பணிக்கர், குரூப் ( கிருஷ்ணவகை) தேவர், காணிக்கார்ர்கள் போன்றோரும் தாங்கல்களை நிறுவி அய்யா வைகுண்டரை வழிபடுகின்றனர்.
     சில தாங்கல்களில் அய்யா வைகுண்டர் போதித்த கண்ணாடி, திருவிளக்கு வழிபாட்டோடு பிற தெய்வ வழிபாட்டையும் மேற்கொள்கின்றனர். இது போன்ற பிற தெய்வ வழிபாட்டையும், அய்யா வைகுண்டர் வழிபாட்டையும் மேற்கொள்பவர்கள் நாடார் இனத்தைச் சாராத பிற இனத்தவர்களே.
     அய்யா வைகுண்டரின் வழிபாட்டோடு கிருஷ்ணன் வழிபாடு (நாயர்கள்), முருக வழிபாடு, காளி வழிபாடு, அம்மன் வழிபாடு ( பள்ளர், பறையர், தேவர், அளவர், வண்ணார், குரூப், ஆசாரி, செட்டியார்)  போன்ற வழிபாட்டையும் மேற்கொள்கின்றனர். சில நாடார் இன மக்கள் அய்யா வழிபாட்டோடு காளி வழிபாட்டையும் மேற்கொள்கின்றனர். ஊர்ப்பொது வழிபாடு என்று வருகின்றபோது பிறத்  தய்வக் கோயில்களுக்கு வரி செலுத்தி அத்தெய்வ வழிபாட்டிலும் கலந்து கொள்கின்றனர். அய்யப்ப சுவாமி கோயிலுக்கு மாலை இட்டும் செல்கின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம் எல்லா தெய்வங்களும் அய்யா வைகுண்டரின் அவதாரங்களே என்பதாகும்.
     இன்று தமிழகம் முழுவதும் 12000 த்துக்கும் திகமான தாங்கல்கள் காணப்படவதாக அறியமுடிகின்றது. அய்யா வைகுண்டரின் சீர்திருத்தச் சிந்தனைகளாலும், முற்போக்கு வழிபாட்டு முறைகளாலும், சாதி சமய வேறுபாடுகளற்ற வழிபாட்டு முறைகளாலும் தாங்கல்களின் வளர்ச்சி அபரிமிதமாகக் காணப்படுகின்றன.
     சென்னை, கோயம்புத்#ர், மும்பை போன்ற பெரு நகரங்களில் அய்யா வைகுண்டருக்கு மிகப்பெரிய தாங்கல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது போன்று தாங்கல்கள் மிகப் பெரிய அளவில் அய்யா வைகுண்டரின் முற்போக்குச் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்கின்றன எனலாம்.
                கரம்பவிளை ( குரூப் ), சுந்தரபுரம் ( பறையர் ). நரிக்குளம் ( பணிக்கர் ), கொட்டாரம் ( பறையர் ), வாரிRர் ( ஆசாரி), மணலோடை ( ஆசாரி ), மூக்கரைக்கல் ( வெள்ளாளர் ). இடையன்விளை ( நாயர் ), அகஸ்தீஸ்வரம் ( ஆசாரி), லீபுரம் ( வண்ணார்), பேச்சிப்பாறை ( காணிக்காரர்), பஞ்சலிங்கபுரம் வண்ணார்), சுண்டன்பரப்பு (கோனார்), குண்டல் ( பறையர்), முகிலன்குடியிருப்பு ( ஆசாரி), சந்தையடி ( பள்ளர்), பெரியவிளை ( பறையர்), கல்விளை ( சக்கிலியர்), பாலப்பள்ளம் ( குரூப்), புத்தளம் ( செட்டியார்), இலாயம் ( பறையர் ), ஆரல்வாய்மொழி ( பறையர்), வீயன்னூர் ( நாயர்), கூட்டுங்கால்விளைவீடு (வாவறை -  நாயர்), துண்டத்துவிளை (ஆறுதேசம் - காணிக்காரர்), தச்சமலை ( காணிக்காரர்), தாமரைகுளம்பதி ( ஆசாரி), கரிக்கத்திவிளை ( கூரியகோடு - நாயர்), போன்ற ஊர்களில் நாடார் அல்லாத மக்கள் தாங்கல்களை நிறுவி அய்யா வைகுண்டரை வழிபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தாங்கல்களின் எண்ணிக்கை
    தமிழகத்தில் அதிகமான தாங்கல்கள் அமைந்துள்ள மாவட்டங்களில் அய்யா வைகுண்டர் பிறந்த கன்னியாகுமரி மாவட்டமும் ஒன்று. இம்மாவட்டத்தின் பெரும்பாலான ஊர்களில் மூன்றுக்கும் மேற்பட்ட தாங்கல்கள் காணப்படுகின்றன.  அதிகபட்சமாக ஏழு தாங்கல்கள் வரை காணப்படுகின்றன.