வியாழன், 3 செப்டம்பர், 2020

அய்யா கலியுகத்தில் அவதரித்தல்:

 இந்நேரம் தேவர்களின் வாக்கினால் ஈசுரர் தாமே குரோணியின் கடைசி துண்டமான ஆறாவது துண்டமதை கலியானாக பிறவிச் செய்ய கலியுகம் பிறக்கிறது. முந்தைய யுகத்தில் துரியோதனாக பிறந்த குரோணியானவன் இவ்யுகத்தில் கலியனாக பிறக்கிறான். நீசக் கலியனானவன் பரம்பொருள் சிவபெருமானிடம் இப்பூலோகத்தை அரசாளும் வரங்களையும், நீதி மாயன் சக்கரமும், பல்வித சாத்திர வித்தைகளும், மரணம் வரா வித்தைகளும் பெற்று வரும் போது, ஸ்ரீரங்கரான நாராயணர் ஆண்டிவுரு எடுத்து, தலை விரித்துக் கந்தைகலை பூண்டு எவ்வித ஆயிதமும் இல்லாமல் நீசனிடம் சென்று – “நீ ஈசரிடம் பெற்ற வரங்களிலே, இந்த தேச இரப்பனுக்கு சிறுக ஈயு. தராதே போனால் சண்டைக்கு வா?” என்றார். உடனே புத்தியில்லா நீசன், “இப்போது நான் உன்னோடு சண்டையிட்டால் பெண்டாட்டிச் சிரிப்பாள்!” ஆகவே “பண்டாரமென்றும் பரதேசியானவரைத் தண்டரளக் கந்தைத் தலை விரித்த ஆண்டிகளை அட்டியது செய்யேன், அவரோடு சண்டையிடேன் அவர்களிடம் மோதி வம்பு ஒருநாளும் செய்வதில்லை” என்றான். உடனே நாராயணர் நன்று, இப்படியே அட்டி செய்ய மாட்டேனென்று “ஆணையிட்டு தா” என்றார். அதற்க்கு கலிநீசனும் அப்படியே “ஆண்டிகளை இடறு செய்யேன்! மீறி இடறு செய்து ஆண்டிகளை சில்லமிட்டால், வீணே போகும் என் வரங்கள்” என்று ஆணையிட்டான். இக்காரணங்களால் தான் கலிநீசனுக்கு காெடுத்த  வரங்களைப் பறிக்க நாராயணர் கலியுகத்தில் “நாராயண பண்டாரமாக” அவதரித்ததாக அகிலத்திரட்டு கூறுகிறது.

கலிநீசனானவன் இப்புவியில் வந்தவுடன் நல்லவை யாவும் மறைந்தன. இக்கலிநீசனானவன் கர்மக் கலிதோசத்தால் அன்புடன் ஒற்றுமையாக வாழ்ந்திருந்த நற்பல குலமக்களை பல சாதிகளாக பிரித்து, சாதிவாரியான கிளர்ச்சியை உண்டுபண்ணி தூறுபட வேலை வாங்கி, கடும்சுமையான வரிகளை வாங்கி மக்களை அரசாண்டான். அதாவது தாலி முதல் பீலி வரை வரி வைத்து கொடுமை செய்தான். இக்கொடுமைகளிலிருந்து நல் மக்களை இரட்சித்துக் காக்க, மக்களின் அபயத்திரங்கிய நாராயணர், இந்நீசக்கலியனுக்கு கொடுத்த வரங்களைப் பறித்து கலிநீசன்தனை அழிக்க, தர்மம் தனை வளர்க்க, மேலுக ஏழுலோகத்தார்களையும் சான்றோர்களாக இக்கலியுகத்தில் பிறவிச் செய்து, பின்னர் தானும் வியாச முனிவர் வகுத்த ஆதி ஆகமத்தின் படியே  கொல்லம் ஆண்டு 1008 மாசி மாதம் 20-ஆம் தியதி (1st March C.1833) வெள்ளிக்கிழமை இவ்வுலக மக்களின் மேன்மைக்காக பத்தாவது அவதாரமாக திருச்செந்தூர் கடலில் மகரமதில் அரூபமாய் வால ராமசந்திர சூரிய நாராயணர் தானே வைகுண்டராய் அன்னை மகாலெட்சுமிக்கு மகனாக தோன்றி நாராயண பண்டாரமாக அவதரித்தார். 

“பாண்டவர் தமக்காய்த் தோன்றி பகைதனை முடித்து மாயோன் வீன்றிய கலியன் வந்த விசனத்தால் கயிலையேகி சான்றவர் தமக்கா யிந்தத் தரணியில் வந்த ஞாயம் ஆண்டவர் அருளிச் செய்ய அம்மானை எழுதலுற்றேன்”

“ஆண்டாயிரத்து எட்டு மாசி மாதத்திலே, கடலின் கரையாண்டி ஸ்ரீமந்நாராயணராகிய நானே பண்டாரமாகத் தோன்றி தெட்சணாப்புரியில் கூடி தர்மமுற்று வைகுண்டராக பள்ளி கொண்டோம்”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக