வியாழன், 3 செப்டம்பர், 2020

அய்யாவின் முந்தைய அவதாரங்கள்:

 ஏகம் ஒரு பரமான இறைவன், தான் படைத்து இயக்கி வரும் இந்த பூவுலகில் எப்போதெல்லாம் தர்மம் குன்றி அதர்மம் மேலோங்குகிறதோ அப்போதெல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக அவதார புருஷனாக தோன்றுகிறான். ஆதியில் தேவர் எல்லாம் கூடி தேவாமிர்தம் அருந்தி  திருக்கயிலையில் இருக்கையிலே, எங்களுக்கு எதிரி உண்டோ? என சிவனிடம் கேட்க, ஈசன் திருவேள்வி தனை வளர்த்து ஈசனே அதில் இறங்கி கேள்விக்கு பதிலாக வேதகாண்டம் பாடி வையகத்தில் இறங்கையில், வேள்விதனில் குரோணி என்கிற கொடிய அசுரன் உடன் பிறந்தான், குரோணியானவன் பிறந்த சில நாட்களில் தேவர்களையும், கயிலையையும் அழிக்க முற்படும் போது அவனை அழிக்க நாராயணர் சிவனை நோக்கி தவம் இருக்கிறார், அசுரனை அழிக்க வரமருளிய சிவபெருமான் நாராயணரிடம் “குரோணியை ஆறு துண்டுகளாக வெட்டி அழிக்க வேண்டும், அவ்வாறு செய்யும் போது அவனின் ஒவ்வொரு துண்டமும் அசுரனாக பூமியில் பிறக்கும், அப்படி பிறக்கும் அசுரர்களை அழிக்க நீரே உத்தமராக அவதரிக்க வேண்டும்” எனக் கூறி வரமருள, நாராயணர் சம்மதித்து குரோணியை ஆறு துண்டுகளாக வெட்டி வதம் செய்கிறார். அந்த யுகமான நீடிய யுகம் அத்தோடு முடிகிறது. அதன்படி தர்மத்தை காக்க யுகாயுகங்கள் தோறும் அவதரித்த நாராயணர் சதுர மற்றும் நெடிய யுகங்களில் தோன்றி குரோணியின் துண்டத்தில் இருந்து தோன்றிய அசுரர்களான குண்டோமசாலி, தில்லை மல்லாலன், மல்லோசி வாகனென்ற அசுர்களை அழித்தார். பின் கிரேதாயுகத்தில் முருகப் பெருமானாகவும், நரசிம்மராகவும், திரேதாயுகத்தில் ஸ்ரீராமராகவும் அவதரித்து அந்த யுக அசுரர்களான சிங்கமுகா சூரன், சூரபத்மன், இரணியன், இராவணன் என்ற அசுரர்களையும் அழித்தார். துவாபரயுகத்தில் ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்து அந்த யுக அசுரர்களான துரியோதனனையும், தக்கனையும் 

வதைத்து பாண்டவர்களுக்கு குருநாடு பட்டமுஞ் சூட்டி அரசாள வைத்து தர்மத்தை நிலை நாட்டினார். குரோணியின் ஒவ்வொரு துண்டமானதும் அசுரர்களாக பிறந்து அழிக்கப்படும் போது நாராயணர் புத்திமதி அருள அதை அவன் கேட்க மறுக்கவே இறுதியாக தன்னால் பிறந்து தன்னால் அழிவாய் எனக் கூறியிருந்தார். பின்னர் குரோணியானவன் கலியனாக வருவானென அறிந்து கானக வழிநடந்து பஞ்சவர்களுடைய பாரப்பெலன்களையும் வாங்கி, தன்னை சுமந்திருந்த பாசமாயக் கூட்டைப் பர்வதாமலை யுச்சியிலே கிடத்திவிட்டு கயிலையங்கிரி செல்லும் வழியில் கங்கையுங் கண்டு கங்கையிலே குளித்த கன்னிமார் பெண்களுடைய கற்பையுஞ் சோதித்து, ஏழுலோகம் புகுந்து ஏழு வித்துமெடுத்து இருதய கமலத்திலே இருத்தி எரியுங் கட்டையெனக் கிடந்து ஏந்திழைமாரைச் சூழ வளையும் படியாகக் கொந்தலையும் எழுப்பி, ஏழுபெண்களுக்கும் ஏழு மதலையுங் கொடுத்துத் தவசுக்குக் கன்னிமாரையும் அனுப்பிப் பத்திரகாளியிடத்தில் பாலரையுங் கொடுத்து, ஸ்ரீரங்கம் போய் செகமறியும்படி பள்ளிகொண்டிருந்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக