வெள்ளி, 18 செப்டம்பர், 2015

அய்யா வழி என்னும் அன்பு வழி

தென் தமிழ்நாட்டின் அன்றைய நிலை
இந்தியத் திருநாட்டிற்கு இயற்கையளித்த நற்கொடையான மேற்குத் தொடர்ச்சி மலையால் சூழப்பட்டப் பகுதிதான் இன்றைய கேரளமும், நமது தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான குமரி மாவட்டமும்.  "கடவுள்களின் நாடு" என்று அழைக்கப்படும் பரசுராமரால் தோற்றுவிக்கப் பட்ட இக்கேரளம்தான் சுவாமி விவேகானந்தரால் "பைத்தியக்காரர்களின் கூடாரம்" என்றும் அழைக்கப் பட்டது. பகுத்தறிவுப் பகலவன் என்று புகழப்படும் பெரியார் அவர்களும் இக்கேரளத்தின் வைக்கம் எனும் இடத்தில் நிகழ்த்திய கோயில் நுழைவுப் போராட்டத்தின் மூலம் வைக்கம் வீரர் என்னும் பெயரைப் பெற்றார்.
நன்செய்நாடான நம் நாஞ்சில் நாட்டிலும் கேரளத்தின் தாக்கம் இருந்தது. சூத்திரர்களுக்கும் கீழ்ப்பட்டோர் எனக்கருதப்பட்ட அவருணர்கள் சொல்லொண்ணாத் துயரத்துக்கு ஆளாகியிருந்த நேரத்தில்தான் புத்தொளி ஒன்று பிறந்து சமத்துவத்துக்கு வழிகாட்டியது. திரளான மக்கள் கிறித்தவ சமயத்துக்கு மாறுவது மட்டுமே நம்மை சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்று எண்ணி கிறித்தவர்களாக மாறிக்கொண்டிருந்தனர். அச்சமயத்தில் மதமாற்றத்தை அந்த ஒளி தடுத்து நிறுத்தியது.. நமது தேசப்பிதாவான மகாத்மாகாந்திக்கு முன்னரே அகிம்சை வழியில் ஆன்மீகப்போராட்டத்தையும் அவ்வொளி நிகழ்த்திக் காட்டியது. அந்த ஒளியின் வரலாற்றையும், நம் நன்செய் நாட்டின் அன்றைய நிலை, அவர் ஏற்படுத்திய சமுதாய மறுமலர்ச்சி போன்றவற்றை நாம் இவ்விழையில் தொடர்ந்து காண்போம்...
அச்சமயத்தில் நன்செய் நாடானது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அறிவியல் வளர்ச்சியில் அயல்நாடுகள் முன்னேறிக் கொண்டிருந்த அவ்வேளையில் நம் நாடு மிகவும் கேவலமான நிலையில் பின்னோக்கிச் சென்று கொண்டிருந்தது. பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நால்வகை வருண சாதிகளும், அவர்களுக்கும் கீழோராகக் கருதப்பட்ட அவருணர்கள் என்றழைக்கப் பட்ட சாதியினருமாக சமுதாய அமைப்பு முறை இருந்தது.. ஆதிக்க சாதியினர் பிற சாதியினரை அடக்கித் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு அவர்களை சிறுமைப்படுத்தி மிகவும் கேவலமான நிலைக்கு உள்ளாக்கிக் கொண்டிருந்தனர். தங்கள் இன்னல்களுக்கு ஓர் விடிவெள்ளி என்று தோன்றும் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில்தான் அய்யா வைகுண்டர் உதித்தார். தனது ஆன்மீக சமுதாய சீர்திருத்தப் போராட்டத்தால் கீழ்த்தட்டு மக்களை ஒன்றிணைத்துப் போராடினார். அவரைப் பற்றித்தான் நாம் இங்கே காணவிருக்கின்றோம். அதற்கு முன்னால் கீழ்ச்சாதியினர் அனுபவித்த இன்னல்களை சிறிது பார்த்து விடலாம்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகள் இருந்தன. நம்பூதீரிகள்தான் சமுதாயத்தின் மிக உயர்ந்த சாதியினராகக் கருதப்பட்டனர். அவர்களுக்குத் துணையாக நாயர்களும், வேளாளர்களும் மற்ற சாதியினரும் இருந்தனர். அவர்களால் ஒடுக்கப்பட்ட சாதியினராக 18 சாதிகள் அறிவிக்கப் பட்டிருந்தன. அந்த சாதிகளை அய்யா அவர்களே தனது பாடலால் பட்டியலிடுகின்றார்.
"சாணார் இடையர் சாதி வணிகருடன்
நாணாத காவேரி நல்ல துலுக்கப்பட்டர் முதல்
சூத்திரர் பிரமார் தோல் வாணியர் பறையர்
கம்மாளர் ஈழர் கருமறவர் பரவர்
வெம்மா நசுராணி, வேகாவண்டர் இடையர்
சக்கிலியரோடு சாதி பதினெட்டும்...” 
என சொல்லுகின்றது அய்யாவின் அகிலத்திரட்டு அம்மானை. 
இவர்கள் எல்லோரும் உயர்சாதியினர் வசிக்கும் பகுதிக்குச் செல்லும் போது எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று விதிமுறைகள் விதிக்கப் பட்டன. அத்தனையும் கொடூரமானவை. அவற்றுள் சில.
1. உயர் சாதியினர் வசிக்கும் தெருக்களில் இவர்கள் நடமாடக் கூடாது
2. இவர்கள் காலணி அணியக் கூடாது
3. குடை பிடித்துக் கொள்ளக் கூடாது.
4. வேட்டித் துண்டைக் கை இடுக்குகளில் வைத்துக் கொண்டுதான் நடமாட வேண்டும்.
5. உயர்சாதியினரை (சிறு குழந்தைகள் என்றாலும்) சாமி என்றோ, அய்யா என்றோதான் அழைக்க வேண்டும்.
6. இவர்களை உயர் சாதியினர் அடிமைகளாக ஆக்கிக் கொள்ளலாம். ஆனால் கூலி கிடையாது
7. இவர்கள் உயர் சாதியினரிடம் இத்தனை அடி தொலைவில் நின்றுதான் பேசவேண்டும். (சரியான தூரத்தினை விரைவில் சொல்கின்றேன்).
8. புலையர்கள் உயர்சாதியினரைப் பார்ப்பதே குற்றம். பிராமணர்களின் கண்ணில் இவர்கள் பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை. இதனால் அவர்கள் வெளியில் செல்லும் போது சத்தமிட்டுக் கொண்டே செல்லவேண்டும். பிராமணர் வருவதாக பதில் சத்தமிட்டால், மறைந்து கொள்ள வேண்டும்.
9. ஆதிக்க சாதியினரின் கோயில்களுக்குள் இவர்கள் செல்ல அனுமதி இல்லை. (கர்ம வீரர் காமராசர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர்தான் இம்முறை ஒழிக்கப் பட்டது)
10. ஊரின் குளம், கிணறு மற்றும் பொதுச்சாலைகளை இவர்கள் பயன்படுத்தக் கூடாது
11. ஆண்கள் குடுமி வைத்துக் கொள்ளக் கூடாது. பெண்கள் இடுப்புக்கு மேல் ஆடை அணியக் கூடாது
12. தங்கள் குழந்தைகளுக்கு ஆதிக்க சாதியினர் வைத்துள்ள பெயர்களை வைத்துக் கொள்ள உரிமை இல்லை.
13. பசுமாடு வளர்க்கக் கூடாது
14. பெண்கள் நீர்க்குடத்தை இடுப்பில் சுமக்கக் கூடாது. தலையில்தான் சுமக்க வேண்டும்.
15. பெண்கள் முலை வரி செலுத்த வேண்டும். செலுத்தாதோரின் முலைகள் அறுத்தெரியப் பட்டன.

இன்னும் இது போன்று பல அடக்குமுறைகள் கீழ் சாதியினர் மேல் திணிக்கப் பட்டன. மீறுபவர்கள் கடுமையான தண்டனைக்குள்ளாகினர்.  இச்சாதியினருள் சாணார் என்றழைக்கப் பட்ட நாடார் சாதியினர் பனையேறும் தொழில் புரிந்து வந்தனர். இவர்கள் தாங்கள் பயன்படுத்தும் ஏணி, தளைநார் போன்றவற்றிற்கு வரி செலுத்த வேண்டும். வீட்டின் கூரையை மாற்றினால் கூட அதற்கும் வரி செலுத்த வேண்டும். இவர்களுக்கு ஆதிக்க சாதியினரின் தெய்வங்களைத் தங்கள் இல்லத்தில் வைத்தும் வணங்குவதற்கு அனுமதி மறுக்கப் பட்டது.
ஐவகைத் தொழில் புரிந்து வந்த பஞ்ச கம்மாளர்கள் தாங்கள்தான் உண்மையான பிராமணர்கள் என்று போராடி நீதிமன்ற வழக்கிலும் வென்றுள்ளனர். இவர்கள் தங்கள் இல்லத்துத் திருமணங்களை உயர்சாதியினரைப் போல் நடத்திக் கொள்ளும் உரிமையையும் போராடிப் பெற்றனர். இந்திய சுதந்திரத்திற்குப் பின்னரும் இவர்களுக்கு ஓர் இன்னல் காத்திருந்தது. அன்றைய முதலமைச்சராக இருந்த ராஜாஜி இவர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் "ஆச்சாரி" என்று அடைமொழியை வைத்துக் கொள்வது தவறு என்று அறிவித்தார். இவர்கள் "ஆசாரி" என்றே அழைக்கப் படவேண்டும். ஆச்சாரி என்று அழைக்கப் படக்கூடாது என்றார். இந்த உரிமையையும் அவர்கள் போராடிப் பெற்றனர். 
இப்படி சாதிக்கொடுமை தலை விரித்தாடிய காலத்தில், அடிமைச் சாதியினராகக் கருதப்பட்ட சாணார் (நாடார்) குலத்தில் பொன்னுமாடன் என்பவருக்கும் வெயிலால்  அம்மாளுக்கும் மகனாக கி.பி. 1809ம் ஆண்டில் அய்யா என்று அழைக்கப்படும் வைகுண்டர் பிறந்தார். பொன்னுமாடன் நாடார் ஓர் பெருமாள் பக்தர். ஆதிக்க சக்தியினருக்குத் தெரியாமல் தன் இல்லத்தில் பெருமாளை வணங்கி வந்தார். எனவே பெருமாளின் அருளால் பிறந்த இக்குழந்தைக்கு "முடிசூடும் பெருமாள்" என்று பெயரிட்டார். இது ஆதிக்க சாதியினரால் எதிர்க்கப் பட்டது.  தண்டனைக்குப் பயந்து மகனுக்கு "முத்துக் குட்டி" என்று பெயர்மாற்றம் செய்தார். 
முத்துக் குட்டியும் இளம்பிராயம் முதலே பெருமாளை வணங்கும் பக்தனாக இருந்தார். சமுதாயத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த சாதிக்கொடுமைகள் அவரை மனம் வருந்தச் செய்தது. சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வர அவர் என்ன செய்தார்.? சமுதாயம் மாறியதா? அய்யாவின் வரலாறு என்ன? தொடர்ந்து வரும் நாட்களில் காணலாம். மீண்டும் சந்திப்போம்.

அய்யா வழி என்னும் அன்பு வழி

அய்யா அவர்களின் திருஅவதாரமும் இளமைப் பருவமும்
பதினெட்டாம் நூற்றாண்டில் அய்யா அவர்கள் திருஅவதாரம் செய்த வேளையில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் சாதிக்கொடுமைதான் முக்கியப் பிரச்சனையாக இருந்தது. தாழ்த்தப்பட்டவர்கள் ஆதிக்க சாதியினரின் அடிமைகளாகக் கருதப்பட்டனர். இந்த அடிமைகளை விலைக்கு விற்பனை செய்யவும் முடியும், வாங்கவும் முடியும். அவர்களின் சொந்த நிலங்களிலேயே அவர்கள் அடிமைகளாக்கப் பட்ட கொடுமை வேறெங்கும் நிகழ்ந்திருக்குமா? அவர்களுக்கு மிகக் குறைவான பணம் கூலியாக வழங்கப்பட்டது. ஆனால் அதுவும் வரி என்ற பெயரில் அவர்களிடமிருந்து பிடுங்கப் பட்டது. ஆண்களின் அடையாளமான மீசைக்கும், தாடிக்கும், பெண்களின் அடையாளமான முலைகளுக்கும், தாலிக்கும் வரிகள் விதிக்கப்பட்டன. வரிகளை செலுத்த இயலாதோர் முதுகில் பெரிய கல்லை ஏற்றி வெயிலில் நிறுத்தி விடுவார்கள். இக்கொடுமைகளால் இறந்தோர் பலர்.. 
இந்த வரி வசூல் செய்யும் நிகழ்வை அய்யாவின் அகிலத்திரட்டு அம்மானை இவ்வாறு பாடுகின்றது.
“தாலிக்கு ஆயம் சருகு முதல் ஆயம்
காலிக்கு ஆயம் கம்பு தடிக்கு ஆயம்
தாலமது ஏறும் சான்றோருக்கு ஆயம்
தூலமுடன் அரிவாள் தூருவட்டிக்கு ஆயம்
தாலமதுக்கு ஆயம் தரணிதனிலே வளர்ந்த
ஆலமரம் வரைக்கும் அதிக இறை வைத்தனனே
வட்டிக்கும் ஆயம் வலங்கை சான்றோர்
கருப்புக்கட்டிக்கும் ஆயம் கடுநீசன் வைத்தனனே...”
சாணார்கள் என்றழைக்கப்பட்ட நாடார் குலத்தோரை அய்யா அவர்கள் சான்றோர்கள் என்றழைத்தார். இவர்களின் முக்கிய தொழில் பனைமரம் ஏறுதல். மேலும் பனைத் தொழில் ஆண்டு முழுதும் இருக்காது. பனைத்தொழில் இல்லாத சமயத்தில் விறகு வெட்டுதல் போன்ற மற்ற தொழில்களையும் இவர்கள் செய்து வந்தனர். திருவிதாங்கூரில் தொழில் இல்லாத சமயத்தில் இவர்கள் பாண்டிக்குச் சென்று விடுவார்கள். பாண்டி என்பது சாத்தான் குளம், திருச்செந்தூர் போன்ற பகுதிகளைக் குறிக்கும் சொல். மீண்டும் மலையாளம், பாண்டி என்று இவர்கள் நாடோடிகளாய்த் திரிந்தனர். இப்படிக் கொடுமைக்கு ஆளாகியிருந்த சான்றோர் குலத்தில்தான் அய்யா அவர்கள் பிறப்பெடுத்தார்கள். 
திருச்செந்தூர் முருகன் கோவிலில் முன்னர் சான்றோர் குலத்தைச் சார்ந்தோர் நுழைவதற்கே அனுமதி இல்லை. பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக் காலத்தில்தான் இம்மரபு உடைக்கப் பட்டது. ஆனால் இன்றோ ...? சான்றோர் குலத்தைச் சார்ந்த திரு. சிவந்தி ஆதித்தன் அவர்கள்தான் முருகனது தேரை முன்னின்று இழுத்துத் திருவிழாவைத் தொடங்கி வைக்கின்றார். ஆனால் மக்களின் நிலையோ வேறு விதமாகி விட்டது. பணம் செலுத்துவோர் முருகனை அருகிருந்து காணலாம். மற்றையோர் தொலைவிலிருந்து காணவேண்டும். இது போன்ற கொடுமைகள் தமிழக இந்து ஆலயங்களில் மட்டுமே நடைபெறுகின்றன. இவையெல்லாம் ஒழியும் நாள் எந்நாளோ? (புதிய தகவல். திருச்செந்தூர் ஆலயத்தில் பணம் கொடுத்து நுழைவோருக்குப் புதியதோர் வழியை ஏற்படுத்த ஆலயக் கட்டடத்தில் மாற்றம் செய்யப் போகின்றார்களாம். இன்னொரு இழையில் இதைப் பற்றி எழுதுவோம்).
சாதிக்கொடுமைக்கு மாற்றாக மக்கள் மதம் மாறத்தொடங்கினர். ஆங்கிலேய கிறித்தவப் பாதிரிமார்கள் இவற்றைத் தங்களுக்கு உபாயமாகக் கொண்டனர். எண்ணற்றோர் மதம் மாறினர். இந்து ஆலயங்களுக்கு உங்களுக்கு நுழைவுரிமை இல்லையா? கிறித்தவர்களாக மாறுங்கள். ஆலயம் உள்ளே வந்து வழிபடுங்கள். உங்களுக்கு மேலாடை அணியும் உரிமை இல்லையா? கிறித்தவர்களாக மாறுங்கள். கோட் அணியலாம். செருப்பு அணியும் உரிமை உங்களுக்கு இல்லையா? கிறித்தவர்களாக மாறுங்கள். சூ அணியலாம்.  இதைப் போன்ற செய்திகள் முன்மொழியப் பட்டதால் பலரும் கிறித்தவத்தைத் தழுவினர். ஆயினும் அவர்களும் ஆதிக்க சாதியினரால் தாக்கப் பட்டனர். இச்சமயத்தில்தான் சென்னை நீதிமன்றம் ஓர் உத்தரவு பிறப்பித்தது. கிறித்தவர்களாக மதம் மாறிய தாழ்த்தப் பட்டோர் மேலாடை மற்றும் காலணி அணியும் உரிமைகளை உடையவர்களாக ஆகின்றனர். ஆனால் தாழ்த்தப் பட்ட இந்துக்களுக்கு இந்த உரிமை இல்லை. என்று..... எனவே திரளானோர் கிறித்தவ சமயத்தை நாடினர்.. 
இந்த சமயத்தில்தான் சமுதாயத்தைக் காப்பதற்காக அய்யா அவர்கள் பிறந்தார்கள். சாஸ்தான் கோவில் விளை என்னும் ஊரில், கி.பி. 1809ம் ஆண்டு பொன்னு மாடன் நாடாருக்கும், வெயிலாள் அம்மாளுக்கும் பிறந்த அய்யா அவர்களுக்கு "முடி சூடும் பெருமாள்" என்ற அழகிய பெயரை இட்டார்கள்.. தற்சமயம் இந்த ஊர் சாமித்தோப்பு என்று அழைக்கப் படுகின்றது. அங்கிருந்த வழக்கப் படி தாழ்த்தப் பட்டோர் தங்கள் குழந்தைகளை குரங்கு என்றும், மாடு என்றும்தான் அழைக்க வேண்டும். இந்நிலையில் மகாவிஷ்ணுவின் பெயர் தாங்கிய நமது முடிசூடும் பெருமாளின் பெயரைப் பதிவு செய்ய பொன்னுமாடன் சென்றார். அங்கிருந்தோரோ அவரை மிரட்டினர். அவர்களின் மிரட்டலுக்குப் பயந்து தன் மகனுக்கு "முத்துக்குட்டி" என்று பெயர் மாற்றம் செய்தார் பொன்னுமாடன்.  பொன்னுமாடன் சிறந்த பெருமாள் பக்தர். முத்துக்குட்டியும் சிறந்த பெருமாள் பக்தராகவே விளங்கினார். 
கல்விகற்பதற்கு அனுமதியில்லை. எனவே அய்யா அவர்கள் கல்விக்கூடம் செல்லவில்லை. ஆதிக்க சாதியினரின் ஆலயங்களுக்குள் இவர் நுழைவதற்குத் தடை விதிக்கப் பட்டிருந்ததால் தனது இல்லத்திலேயே சிறு மேடை ஒன்று அமைத்து இறைவனை வணங்கலானார்.  சிறுவயது முதலே இவர் கண்டு வந்த சாதிக்கொடுமை அவரை சிந்திக்க வைத்தது... தந்தையார் செய்த குலத்தொழிலான பனைத் தொழிலையே அய்யா அவர்களும் செய்யத் துவங்கினார். தான் கண்ட கொடுமைகளை அய்யா அவர்கள்
“பனை கேட்டு அடிப்பான் பதநீர் கேட்டே அடிப்பான்
கனத்த கற்கண்டு கருப்புக்கட்டி கேட்டடிப்பான்
நாரு வட்டி ஓலை நாடோறும் கேட்டடிப்பான்
வாதுக்கு நொங்கு வாய் கொண்டு கேட்டடிப்பான்
நெடுமட்டை கேட்பான் நெட்டோலைதான் கேட்பான்
குளம் வெட்டச் சொல்லி கூலி கொடுக்காமல்
களம் பெரிய சான்றோரை கைக்குட்டை போட்டடிப்பான்...”
என்று பாடுகின்றார். சமூக சிந்தனையாளராக வளர்ந்த அய்யா அவர்களின் இளமைக் காலத்தை அகிலத்திரட்டு அம்மானை கீழ்க்கண்டவாறு பாடுகின்றது..
“ஊருக்குத் தலைவன் உடைய வழிக்குந் தலைவன்
ஆருக்குந் தலைவன் என்று அன்னை பிதா வளர்த்தார்
ஞாயமிருப்பதனால் நாடாள்வானென்று சொல்லி
தாய் மக்களெல்லாம் தாங்கி மிக வளர்த்தார்
சொல்லுக்கும் வல்லவனாய் சூராதி சூரனிவன்
மல்லுக்கும் வல்லவனாய் உபாயத்திலும் பெரியோன்
மங்கையர்க்கு மேற்றவனாய் மாமோகக் காமீகன்
எங்கும் பேர் கேட்க வைப்பான் இவன் கீர்த்தி நலவளமை
பல்லாக்கு ஏறிடுவான் பார் முழுதும் ஆண்டிடுவான்
எல்லார்க்கும் நல்லவனாய் இவன் சமைவான் என்று சொல்லி
ஈவதற்கு தர்மன் என எளியோரை கண்பார்த்து
ஆய்வதற்கு நல்லான் என்றே மிக வளர்ந்தார்...”
உடல் உறுதிமிக்கவராய்த் திகழ்ந்தார். தங்கள் விளைநிலங்களை ஆதிக்க சாதியினர் பிடுங்கிக் கொள்ள வெகுண்டு எழுந்தார். இளைஞர்களைத் திரட்டி வீரமூட்டும் பேச்சுக்களை பேசினார். "மாடுகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது" என்று அவர் பேசிய பேச்சு மக்களை உசுப்பி விட்டது.  விதவைப் பெண்களைக் கண்டு வாடினார். அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அய்யா அவர்களை மிகவும் பாதித்தது. 
இவற்றைக் கண்டு வாடியதால்தான் ஓர் விதவைப் பெண்ணையே மணம் முடிக்க எண்ணினார். அதன்படியே தனது 17வது வயதில் திருமால் எனும் பெயர் கொண்ட ஓர் விதவைப் பெண்ணை மணம் முடித்தார். அவருக்கு ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் இருந்தன. இச்செயலானது அக்காலத்தில் சமுதாயத்திற்கு ஏற்றதாக இல்லை. எனவே தனது சமுதாயத்தினரால் அய்யா அவர்கள் புறக்கணிக்கப் பட்டார்கள். அய்யா அவர்களைப் பெற்றெடுத்து வளர்த்த பெற்றோர்களும் புறக்கணித்தனர். இதனால் வறுமையில் வாடினார் அய்யா. பனைதொழிலில் வரும் வருமானமும் வரி என்ற பெயரில் பிடுங்கப் பட்டதால், குடும்பம் பட்டினியால் தவித்தது. அய்யாவின் வாட்டத்தைக் கண்ட பெற்றோர் மீண்டும் அவரோடு வந்து இணைந்தனர். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கியது.. 
இந்நிலையில்தான் அய்யா அவர்களை கொடிய நோய் தாக்கியது. அய்யா அவர்கள் படுத்த படுக்கையானார். யாராலும் அவரைக் குணப்படுத்த இயலவில்லை. அய்யா அவர்கள் படுத்த படுக்கையாகி இரு வருடங்கள் ஓடிவிட்டன. இந்த வேளையில்தான் வெயிலால் அம்மாள் ஓர் கனவு கண்டார். அவரது கனவில் நாராயணன் தோன்றி முத்துக்குட்டியைத் திருச்செந்தூர் அழைத்துச் செல்ல பணிக்கின்றார். இக்கனவை அய்யாவே பாடுகின்றார்.
“வந்து சொன்ன உத்தரவை மகனே நீ கேளு என்று
விந்து வழிக் கிளையோர் மிகுவாகக் கேட்டிருக்க
சொல்லுகிறாள் அந்த சொற்பனத்தை அன்போரே
நல்லுறவாய்க் கேளுமென்று நவிலுகிறாள் அன்போரே
ஆயிரத்து எட்டு ஆண்டு இதுவாம் இவ்வருடம்
மாசியென்னும் மாதமிது வாய்த்த தேதி பத்தொன்பது
இம்மாதம் இத்தேதி ஏற்ற திருச்செந்தூரில்
நம்மாணைக் கொடியேற்றி
நல்ல திருநாள் நடக்கும்
அங்கு உன் மகனை அழைத்து வருவாயானால்
எங்குளோரும் அறிய இப்பிணியும் தீர்த்து
நல்ல பேறும் கொடுப்போம்
நம் ஆணை தப்பாது...” 
இதன்படி தமிழ் ஆண்டு ஆயிரத்து எட்டு மாசி மாதம் பத்தொன்பதாம் தேதியில் செந்தூரில் நடைபெறும் மாசித்திருவிழாவிற்காக அய்யாவை அழைத்து வரச்சொல்லி ஆணை. மகனுக்கு சுகம் கிடைத்து விடும் என்று மகிழ்ந்த பெற்றோரும் அய்யா அவர்களைத் தூளியில் கட்டித் திருச்செந்தூர் புறப்பட்டனர். 
அய்யா அவர்கள் குணமடைந்தார்களா? வெயிலாள் அம்மாள் கண்ட கனவு பலித்ததா?
தொடர்ந்து வரும் மடல்களில் காண்போம்...

கடலுற்சென்று மீண்ட அய்யா வைகுண்டரானார்

ய்யா அவர்களுக்கு வந்த நோய் அவரை மிகவும் பாதித்த படியால் இரண்டு ஆண்டுகள் அய்யா படுக்கையில் இருந்தார். இச்சமயத்தில்தான் அய்யாவின் அன்னையின் கனவில் நாராயணர் தோன்றி அய்யாவை செந்தூருக்கு அழைத்து வரச்செய்தார். தமிழ் 1008ம் ஆண்டு மாசி மாதத்திருவிழாவிற்கு திருச்செந்தூருக்கு அய்யா அவர்கள் எடுத்துச் செல்லப்பட்டார். தூளியிலே அவரைக் கட்டி சுமந்து கால்நடையாகவே திருச்செந்தூர் சென்றனர். 
திருச்செந்தூரை அடைந்தவுடன் அவரைக் கடலில் நீராட்ட விரும்பினார் அன்னை வெயிலாள் அம்மாள். ஆனால் அய்யாவால் எழுந்து நடக்க இயலாது அல்லவா? எனவே ஓர் பாத்திரத்தில் கடல் நீரைக் கொண்டு வந்து அய்யாவின் மேல் தெளித்த போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. யாரும் எதிர்பாராத வேளையில் அய்யா எழுந்து கடலை நோக்கி ஓடினார். சமுத்திரராஜன் அய்யாவை உள்ளே இழுத்துக் கொண்டான். 
அன்னைக்கு மகன் எழுந்து நடந்த மகிழ்ச்சி... ஆனால் உள்ளே சென்ற அய்யா திரும்பி வரவில்லை. அனைவரும் அவரை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தனர். ஆனால் அய்யா திரும்பவில்லை. அன்னை வெயிலாள் அம்மாள் அழுது புலம்புகின்றார். அய்யாவின் மனையார் திருமாலம்மாளும் புலம்புகின்றார். ஆனால் அய்யா வரவில்லை. ஏற்கெனவே தீராத நோயில் விழுந்த என் மகனை இந்தக் கடல் கொண்டு சென்றுவிட்டதே... அவன் இறந்திருப்பான் என்றே தந்தை பொன்னுமாடன் முடிவு செய்தார்.
அய்யாவின் உடலைத் தேடும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். எங்கெங்கு தேடினும் அய்யாவின் உடலும் கிடைக்கவில்லை. இதனால் உடன் வந்த உறவினர்கள் ஊருக்குத் திரும்பலாம் என அறிவுறுத்தினர். ஆனால் அய்யாவின் அன்னையோ தான் திரும்பப் போவதில்லை என்று திடமாக மறுத்து விட்டார். மகனை இழந்த துக்கத்தில் தாயின் மனநிலை பேதலித்து விட்டதாக எண்ணி உறவினர்கள் திரும்பிச் சென்றனர். 
அன்னையோ தன் மகனுக்காகக் காத்திருந்தார். மூன்றாவது நாள் அந்த அதிசயம் நிகழ்ந்தது. மாசி மாதம் 20ம் நாள் அய்யா அவர்கள் கடலிலிருந்து வெளிப்பட்டார்கள். புத்தம் புது உடலோடு....
இந்நிகழ்வை அகிலத்திரட்டு அம்மானை இவ்வாறு தெரிவிக்கின்றது...
“கடலை மிகத்தாண்டிக் கரையதிலே செல்லும் முன்னே
தேவாதி தேவரெல்லாம் திருமுறையம் இட்டனரே
ஆவலாதியாக அபயமிட்டர் தேவரெல்லாம்
வைகுண்டருக்கே அபயம் முறையம் இட்டார் மாதேவர்
கைகண்ட ராசருக்குக் காதிலுற அபயமிட்டார்
தேவாதி தேவரெல்லாம் பூச்சொறிய
கடலன்னை கைதாங்கி கரையில் விட்டது முத்துக்குட்டியை...
இல்லையில்லை... வைகுண்டரை!” 
முத்துக்குட்டியாக கடலுற்சென்ற அய்யா, வைகுண்டராகத் திரும்பினார். 
இனி உன் மகன் திரும்பப் போவதில்லை என உறவினர்களின் மொழி தனது செவியில் விழுந்து கொண்டிருந்த வேளையில் நோய் நீங்கி புது மனிதனாகத் தன் மகனைக் கண்ட வெயிலாளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ஓடோடிச்சென்றாள். தன் மகனை ஆவியோடு அணைத்துக் கொள்வதற்கு ஓடிச்சென்ற அன்னையைத் தடுத்து நிறுத்தினார் அய்யா.
"நான் உன் மகனில்லை... கலியை அழித்துத் தருமயுகத்தை நிலைநாட்ட வந்த நாராயணன் - வைகுண்டர்" என்று தன் அன்னைக்கு உரைத்தார். 
"இதென்ன சோதனை... நான் காண்பது என் மகன் முத்துக்குட்டியல்லவா? மகனே இந்த இடத்திலல்லவா நான் உன்னைத் தொலைத்தேன்.? இங்கே பார். உன்னை நாங்கள் கட்டிக் கொண்டு வந்த தூளி... " என்றெல்லாம் மன்றாடினாள். ஆனால் அய்யாவோ...
"ஆண்டாயிரத்து எட்டு முன்னே அன்னை எனவே நீயிருந்தாய்
கூண்டாம் எட்டம் மாசியிலே குணமாய் நாராயணர் மகவாய்
சான்றோர் கதிகள் பெற்றிடவே தர்மகுண்டம் பிறந்து வொரு
குன்றாக் குடைக்குள் அரசாளக் கொண்டே போறேன் கண்டிரு நீ" 


என்றுரைத்தார். ஆயினும் அன்னையால் நம்ப இயலவில்லை.. எனவே அவருக்குத் தனது முற்பிறப்பின் கதையை உரைக்கத் துவங்கினார் அய்யா...
அய்யா அவர்கள் அன்னைக்குக் கூறிய கதை என்ன? அய்யாவின் திருஅவதார நோக்கம் என்ன? தொடர்ந்து வரும் மடல்களில் காண்போம்..

அய்யாவின் முற்பிறப்பும் அவதார நோக்கமும்

கடலுள் மறைந்த அய்யா மூன்றாவது நாள் திரும்பி வந்தார். புத்தம் புது
உடலோடு.. தன்னை அணைக்க வந்த அன்னையைத் தடுத்து "நான் உன் மகன் அல்லேன்.
கலியுகத்தை அழித்துத் தருமயுகத்தை நிலைநாட்ட வந்த நாராயணன்" என்றுரைத்த
போது அதனை அன்னையார் நம்பவில்லை... எனவே தனது முற்பிறவியைப் பற்றிய
உண்மையை அய்யா அவர்கள் தன் தாயாருக்கு இயம்ப வேண்டியதாயிற்று.
அமரர்களின் கர்வத்தை அடக்கும் பொருட்டு சிவபெருமான் குரோணி என்னும்
அசுரனைப் படைத்தார். இவ்வசுரன் அனைத்துலகத்தையும் தனது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றான். வைகுண்டத்தை வெற்றி கொள்ள
குரோணி சென்றபோது கோபங்கொண்ட திருமால் குரோணியைக் கொன்றார். அவனது உடலை
ஆறு துண்டுகளாக வெட்டினார். ஒவ்வொரு யுகத்திலும் தர்மத்தின் சிறப்பை
உணர்த்துவதற்காக குரோணியின் உடல் ஒவ்வொரு அசுரனாகப் பிறந்தது.
சதிர்யுகம், நெடியுகம், கிருதயுகம், திரேதாயுகம், துவாபாரயுகம் என்னும்
ஐந்து யுகங்களிலும் அசுரனாகப் பிறந்தான். திருமால் பல்வேறு அவதாரங்களை
எடுத்து குரோணியை அழித்துத் தர்மத்தை நிலைநாட்டினார்.
ஆறாவது யுகமான கலியுகத்தில், குரோணி மாயையாக உடலற்றுப் பிறந்தான்.
அதன்படி மக்களின் மனதில் கெட்ட எண்ணங்களை ஏற்படுத்தி அதன் மூலம்
அதர்மத்தை வளர்த்த கலிநீசன்தான் குரோணியின் ஆறாவது துண்டு.
கலிநீசனின் செய்கைகளைக் கண்காணிக்க சம்பூரண தேவன் என்பவனைத் திருமால்
பூலோகத்துக்குச் செல்லக் கட்டளையிட்டார். சம்பூரண தேவனுக்கு எமலோகத்தைச்
சேர்ந்த பரதேவதையின் மேல் காதல் இருந்தது. அவளுக்கு ஏற்கெனவே மணமாகி
இருகுழந்தைகள் இருந்தன. ஆனாலும் அவளும் சம்பூரண தேவன் மீது காதல்
வயப்பட்டாள்.
எனவே சம்பூரணதேவன் திருமாலிடம் தன் காதலியும் தன்னோடு பூலோகம் வரவேண்டும்
என்று வரம் வேண்டினான். அமரனாகப் பிறந்த சம்பூரணதேவனுக்கு அவள்
பொருத்தமற்றவள் என்றும், மாற்றான் மனைவி என்றும் திருமால்
அறிவுறுத்தினார். ஆனால் சம்பூரண தேவன் திருமாலிடம் மிக உருக்கமாக
வேண்டிக் கொண்டான். எனவே அவனைத் தவம் செய்ய பணித்தார். "உன் தவத்தின்
வலிமை கண்டு உனக்கு வரம் தருவேன்" என்றுரைத்தார்.
எனவே சம்பூரண தேவனும், பரதேவதையும் தவம் புரிந்தார்கள். அவர்களது தவம்
பூரணம் அடையும் வேளையில் சிவபெருமானும், திருமாலும் அவர்களுக்கு வரம்
வழங்க வந்தனர். அவர்களை வரவேற்க அமரர் குல அதிபதியான இந்திரனும் வந்தான்.
இந்திரனைக் கண்டதும் இந்திரபதவியின் மேல் மோகம் கொண்டான் சம்பூரண தேவன்.
தன் காதலியுடன் பூலோகம் செல்லவேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பித்த தவம்
தேவேந்திர பதவி வேண்டும் என்ற பேராசையில் முடிந்தது.
இதனைக் கேட்ட திருமால் கோபம் கொண்டார். அவர்கள் இருவரையும் பூமியில்
பிறக்க ஆணையிட்டார்.
பரதேவதை ஏற்கெனவே தனது கணவன் மற்றும், குழந்தைகளுக்குத் துரோகம்
இழைத்ததால், கலியுகத்தில் அந்தக் கணவனோடு சேரவேண்டும் என்றும்,
குறிப்பிட்ட காலத்தில் தன் கணவனை இழப்பாள் என்றும் சாபமிட்டார். ஆயினும்
சம்பூரணதேவன் உனக்காகப் பிறப்பான். உன்னை மணப்பான். என்றும் கூறினார்.
சம்பூரண தேவனுக்கும் அவன் பேராசைப் பட்டதால் அதற்குத் தண்டனை நிச்சயம்
உண்டு என்றும் பூலோகத்தில் பிறந்து 22 வயது வரை சாதாரண மானுட வாழ்க்கை
வாழ வேண்டும் என்ரும், கணவனை இழந்த பரதேவதையை மணக்க வேண்டும் என்றும்
கூறினார். அச்சமயத்தில் தீராத நோய்க்கு ஆளாகி மரணத்தில் விளிம்பில்
நிற்கும்போது தானே சம்பூரண தேவனின் உடலில் இறங்கி அவனை மீட்டுக்
கொள்வதாகவும், அவ்வுடல் மூலம் தர்மத்தை நிலைநாட்டப் போவதாகவும் கூறினார்.
அய்யா அவர்கள் தானே அந்த சம்பூரண தேவன் என்றும், கடலில் தன்னை திருமாலின்
தூதர்கள் வைகுண்டம் அழைத்துப் போனார்கள் என்றும் அங்கே திருமால் தனக்கு
கலியை அழிக்கும் வழியைப் போதித்தார் என்றும் உரைத்தார். அங்கிருந்து
திருமால் தன்னை அவரது மகன் என்று உரைத்தமை பற்றிக் கூறிய அய்யா அவர்கள்
அவர் எப்போதும் தம்மோடு இருப்பதாகவும் கூறித் தன்னை வைகுண்டர் என்று
பூலோகத்திற்குத் திருப்பி அனுப்பியதாகவும் அய்யா தெரிவித்தார்.
தன் அன்னையாருக்குக் கடலில் வைகுண்டத்தின் காட்சியைக் காணச்செய்து இதை
யாருக்கும் உரைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதே சமயத்தில் அய்யா இன்னொரு உண்மையையும் எடுத்துரைத்தார். பொன்னுமாடன்
நாடாருக்கும், வெயிலாள் அம்மாளுக்கும் பிறந்த குழந்தை பிறந்த சிறு
நேரத்திலே இறந்து விட்டதாகவும் அச்சமயத்தில்தான் சம்பூரணதேவன் அவ்வுடலுள்
செலுத்தப் பட்டதாகவும் கூறினார். இதனைத் தாயாரும் ஒப்புக் கொண்டார்.
பிறந்த குழந்தை சிறிது நேரம் சலனமில்லாமல் கிடந்ததையும், பின்னர்
அழுததையும் அன்னை நினைவு கூர்ந்தார்.
அய்யா வைகுண்டர் திருமாலிடம் கலிநீசன் வாங்கி வந்த வரத்தைப் பற்றி
உரைத்தார். அதன்படி கலியை அழிக்கவும் ஆட்டுவிக்கவும் பண்டார வடிவங்கொண்டு
திருமாலே வைகுண்டராக அவதரித்தார். பண்டார உருக்கொண்டு அன்னைக்கு
உபதேசித்துப் பின்னர் தென் திசை நோக்கி நடக்கலானார்.
தென் திசை நோக்கி நடந்த அய்யா என்ன செய்தார்? என்னவெல்லாம் போதித்தார்?
அடுத்த மடலில் காணலாம்.

அய்யாவின் தவமும் போதனைகளும்

முத்துக்குட்டி கடலுற்சென்று வைகுண்டம் கண்டு மீண்டு வைகுண்டப் பண்டாரமாய் தென்னகம் நோக்கி நடக்கலானார். தன் தாய்க்கு மட்டுமே வைகுண்டத்தின் காட்சியைக் காண்பித்து அதை யாருக்கும் உரைக்க வேண்டாம் என்று கூறிவிட்டு தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
தனது பிறப்பிடத்திற்கு அவர் சென்ற போது அவரை எதிர்த்தவர்கள் பலர். ஆயினும் பூவண்டர் எனும் இடையர் தனது தென்னந்தோப்பை அய்யாவுக்குக் கொடுத்தார். அய்யாவும் அத்தென்னந்தோப்பை மகிழ்வுடன் ஏற்றார். அனைத்தையும் துறந்து வைகுண்டப் பண்டாரம் அத்தோப்பில் தனது தவவாழ்க்கையை ஆரம்பித்தார். அதிகாரத்தந்தை அவதார மகனுக்கு இட்ட கட்டளையே இந்த தவ வாழ்க்கை என்று கூறி ஆறு ஆண்டுகள் தவம் செய்தார்.
முதல் இரு ஆண்டுகள் கலியுகம் அழிந்து தரும யுகம் தோன்றுவதற்காகவும், இரண்டாம் இரு ஆண்டுகள் சாதிக்கொடுமைகள் நீங்கவும், மூன்றாம் இரு ஆண்டுகள் பெண்ண்டிமை தீர்வதற்கும், நல்ல வழிமுறைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவும் என்றுரைத்தார். இதனை அவரே
"முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே 
தத்தமுள்ள இரண்டாம் தவசு சாதிக்காமே 
மூன்றாம் தவசு முன்னுரைத்த பெண்ணாட்கும் 
நன்றான முற்பிதிரு நல்ல வழிகளுக்கும்" 
என்று பாடுகின்றார்.
அய்யாவின் முதல் இருஆண்டுகள் தவ வாழ்க்கை ஆறு அடி ஆழமுள்ள பள்ளத்தில் நிகழ்ந்தது. இரண்டாம் இரு ஆண்டுகள் தவவாழ்க்கையை வீராசனம் இட்டுத் தரைமேல் நிகழ்த்தினார். மூன்றாம் இருஆண்டுகள் தவமோ கடுமையான மௌனதவம். இதனை ஓர் பீடத்தை அமைத்து அதன் மேல் அமர்ந்து நிகழ்த்தினார். 
அய்யா தனது தவ வாழ்க்கையின்போது பச்சரிப் பாலை மட்டுமே அருந்தினார். 
வைகுண்டர் உரைத்த ஆறு ஆண்டுகள் தவவாழ்க்கை முடிவுற்றது.. அய்யா தவமிருந்த காலத்தில் அவரைத்தேடி பதினெட்டு சாதி மக்களும் வந்து கொண்டிருந்தனர். இதனைக் கண்ட அய்யா இவர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணங்கொண்டார்.
அந்த சமயத்தில் பொதுக்கிணற்றில் வருணாசிரமத்தைச் சாராத இந்த பதினெட்டு சாதியினருக்கும் தண்ணீரெடுக்க அனுமதியில்லை.. எனவே தனது பூவண்டன் தோப்பில் ஓர் கிணற்றை ஏற்படுத்தினார். அது முந்திரி கிணறு என்றழைக்கப் பட்டது. அந்த கிணற்றை பொதுமக்கள் தங்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தார்.
தன்மானம் மட்டுமே கலியை அழிக்கவல்ல ஆயுதம் என்று அய்யா போதித்தார். "தன்மானத்தைத் தாங்கியிரு என் மகனே" என்று பாடினார்.
ஆதிக்க சாதிகளின் ஆலயத்துக்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கப் பட்டிருந்த காலம் அது. தாழ்த்தப் பட்டோர் சிறு தெய்வ வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். இதை அய்யா எதிர்த்தார். திருமால் ஒருவனே தெய்வம், அவனை விடுத்து வேறு பேய் பிசாசுகளை வணங்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். ஆதிக்க சாதிகளின் ஆலயத்துக்குள் நுழைவோர் மேலாடை கழற்றி, இடுப்பில் துண்டு கட்டி வழிபாடு நிக்ழ்த்தினர். ஆனால் அய்யா தனது பதிக்கு வரும் அன்பர்களை மேலாடை அணிந்து வரச்செய்தார். தலைக்குத் பாகைக் கட்டி தன்மானத்தோடு வா என்றுரைத்தார்.
ஆதிக்க சாதிகளின் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்களைப் போன்று தாழ்த்தப்பட்டோரும் திருவிழாக்களைக் கொண்டாடி வந்தனர். வழிபாட்டின் பேரில் பணத்தை விரயம் செய்யாதீங்கோ என்றுரைத்த அய்யா கடவுளின் பெயரால் பணத்தைக் கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது என்றுரைத்தார். 
உருவவழிபாட்டை அய்யா மிகக்கடுமையாக எதிர்த்தார். இறைவன் அன்பு வடிவானவன் என்றும் அவன் அனைவருள்ளும் இருக்கின்றான் என்றும் உரைத்த அய்யா தனது பதியின் பள்ளியறையில் ஓர் கண்ணாடியை மட்டும் நிறுவினார். உன்னிலே இறைவனைக் காண் என்பது அதன் மறை பொருள்.
நியாயம் தவறாமல் நேர்மையோடு யாருக்கும் அஞ்சாத வாழ்க்கை வாழ்வதே இறைவனுக்குப் பிரியமானது என்றுரைத்த அய்யா அதன்படி வாழும்படி தன் மக்களுக்குப் போதித்தார்.
அய்யா தனது வழியை அன்பு வழி என்று அழைத்தார். தன் மக்களை அன்புக்கொடி மக்கள் என்றழைத்தார். இது போன்று புதுமையான கருத்துக்களை அய்யா மொழிந்ததால் நாள்தோறும் அவரைக்காண வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. அதே சமயத்தில் வைதீக மதத்தின் ஆடம்பர வழிபாட்டு முறைகளுக்கு அய்யாவின் உரைகள் ஓர் சம்மட்டியாக விழுந்தது. 
தன்னைத் திருமாலின் அவதார மகன் என்றுரைத்தது ஆதிக்க சாதியினருக்குப் பிடிக்கவில்லை. மகாவிட்ணுவின் அவதாரம் என்று கூறி மக்களைத் திசைதிருப்புகின்றார் என்ற குற்றச்சாட்டு அய்யாவின் மேல் சுமத்தப் பட்டது. 
மேலும் கிறித்தவர்களாக மதம் மாறத்துவங்கிய காலக்கட்டத்தில் மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்தியதும் அய்யாவின் செயல்தான். ஆனாலும் தனது போதனைகளில் ஏசுவைப் பற்றியும் மொழிந்தார். இசுலாத்தைப் பற்றியும் மொழிந்தார். இதனால் கிறித்தவப் பாதிரிமார்கள் ஆத்திரம் அடைந்தனர். அய்யாவைப் பற்றிய அவதூறுகளைப் பரப்பத் துவங்கினார்.. ஆனாலும் அய்யா எதைப் பற்றியும் கவலை கொள்ளவில்லை. தனது பணியை செவ்வனே செய்தார்.
தாழ்த்தப்பட்ட பதினெட்டு சாதியினருக்குள்ளும் ஏற்றதாழ்வுகள் இருந்தன. இதனை முதலில் களைய வேண்டும் என்று எண்ணிய அய்யா சமபந்தி போஜனத்தை ஆரம்பித்து வைத்தார். முதலில் மறுத்த பலரும், அய்யாவின் அருளுரைகள் கேட்டுத் திருந்தி ஒற்றுமையாக உணவருந்தினர். 
அச்சமயத்தில் ஏற்கெனவே உரைத்தது போல் தாழ்த்தப்பட்ட சாதியின் பெண்கள் மேலாடை அணிய அனுமதியில்லை.. இதனை எதிர்க்க அய்யா நிகழ்த்திய தோள்சீலைப் போராட்டத்தைப் பற்றி அடுத்த மடலில் காண்போம்.