சனி, 28 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்:

நந்தி அதிசய பிறப்பின் பின்விளைவு பற்றிக் கூறுதல்*****
சாற்றும் மொழி கேட்டு நந்திதாம் உரைப்பார் அம்மானை 
அங்கு அல்ல தானம் அழிந்தது காணும் ஈசுரரே 
இங்கே நான் கண்டேன் எழுந்தருளி வந்ததனால்
தலந்தான் இளகிதான் வந்தாலேதான்
குலந்தான் அழியும் குசல் பிறக்கும் ராச்சியத்தில்
வரம்பழியும் மாரி மனுநீதி குன்றுமையா
பரம்பெரிய வேதம் பழுதுவரும் கண்டீரே
என்று அந்த மாமுனிவர் ஈசுரரையும் கூட்டிக்
குன்று பொன்னான கிரி மேவித் தவமிருந்தார்



உரை
---------
ஈசரின் மொழிகளைக் கேட்டு நந்திசுரர், "ஈசுரரே, மரபுநிலை அழிந்து மரபுக்கு எதிரான நிகழ்ச்சிகள் நடப்பது அங்கே மட்டுமல்ல என்பதை அறிவீராக. என்றைக்கும் இருந்த இடத்தில் இருந்தே ஆட்டுவிக்கும் நீவிர் எழுந்து வந்த நிகழ்ச்சி மூலம் மரபு நிலை அழியும் அபாயத்தை இங்கேயே கண்டு கொண்டேன். தாங்கள் தங்கள் இடத்தை விட்டு எழுந்து வந்த நிலை மாற்றத்தால் உலகில் குல ஒழுக்கம் அழியும்; சூது வாது உருவாகும்; கட்டுப்பாடான வாழ்வு அழிந்து மாதம் மும்மாரி பெய்த மழையும் மனு நீதிமுறையும் குறைந்து விடும்; பிரம்மத்தைப் பற்றி எடுத்துக் கூறும் உயர்வான வேதங்களைப் புரிய முடியாமல் பழுதுபடக் கூறி ஒதுக்குவர்", என்று நந்தீசுரர் ஈசுரரிடம் தெளிவுபடுத்திக் கூறவும், பொன்னாலாகிய கயிலை மலைக்கு இருவரும் சென்றனர்.
---------------------
அய்யா உண்டு 


---------------------



நந்தி அதிசய பிறப்பின் பின்விளைவு பற்றிக் கூறுதல்*****
எதிராக நின்று நந்தி ஏதுரைப்பார் அம்மானை
மூவரும் தேவர்களும் மூர்த்திகளும் காணாத 
தேவரீர் எழுந்தருளித் திசைநோக்கி வந்ததென்ன
அப்போது நந்தியுடன் ஆதி மிகஉரைப்பார்
இப்போது ஓர் அற்புதமாய் இருக்குது என்றார் எல்லோரும்
வானம் நோக்கிக் காலும் மலர் நோக்கிச் சிரசும்
தானம் அது மாறித் தலைகீழாய் நிற்பதுவும்
பார்த்து வரலாம் எனவே பைய நடை கொண்டேன் என்றார்

---------


உரை
---------
அச்சமயம், நந்தீசுரர் ஈசுரரின் எதிராக வந்து நின்று "மூதறிஞர்களும், தேவர்களும் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூர்த்திகளும் காணாத ஈசுரரே, நீர் இந்தத் திசை நோக்கி வந்ததன் காரணம் என்ன?" என்று வினவினார்.
நந்தியிடம் ஈசுரர், "நந்தீசுரரே, இப்பொழுது வானத்தை நோக்கிக் கால்களும், பூமியை நோக்கித் தலையும் கொண்டு ஒருவன் முன்யுக மரபுகளுக்கு நேர்மாறாகத் தலைகீழாகப் பிறந்திருக்கும் ஓர் அதிசயம் நடந்துள்ளது என்று எல்லாரும் பார்க்கப் போயுள்ளார்கள். எனவே, நானும் அவ்வதிசயத்தைப் பார்த்துவரலாம் என்று மெதுவாக நடந்து வருகின்றேன்" என்றார்.
---------------------
அய்யா உண்டு 







அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

சித்திர புத்திரரை அழைத்துக் கேட்டல்*****
பட்சிக்குக் காயம் பகைத்துக் கிட்ட முட்டுகையில்
குச்சியைக் கீழ்ப் போட்டுக் குதித்தோடும் அக்குருவி 
இக்குருவிக் கூடு இவன் மணியம் ஈசுரரே
அக்குருவி ஏகும் அவ்வளவும் இந்நீசன்
பண்ணுகிற நீசம் பரமனுக்கும் ஏறாது
கண்ணிமைக்கும் முன்னே கனஉருட்டுச் செய்திடுவான்
இப்படியே உள்ள இயல்பும் இவன் நினைவும்
அப்படியே நீசம் அடைந்த மன வீடும்
உள்ளவனாய் வந்து உருவெடுத்தான் ஆகையினால்
எள்ளளவும் நன்றி இருக்காது ஈசுரரே
என்று கணக்கர் எடுத்துரைக்க ஈசுரரும்
---------


உரை
---------
இவ்வுயிருடன் இந்த உடம்பு பகைத்துக் கொண்டு நோய் முற்றும்போது உடம்பாகிய இக்குச்சியைக் கீழே எறிந்து விட்டுப் பட்சியாகிய உயிர் குதித்தோடி விடும். இத்தகைய குருவியாகிய உயிர் வாழும் கூடாகிய உடம்பே இந்த அதிசயப் பிறவியாகிய இவன் உடம்பின் அழகு ஆகும். அந்தக் குருவியாகிய உயிர் இவன் உடம்பை விட்டுப் போகும் நேரத்திற்குள் இவன் செய்கின்ற நீசத்தனம் சிவனுக்குக்கூட பொறுக்க முடியாது. ஒரு நொடிக்குள்ளாகப் பல உருட்டுப் பிரட்டுகளைச் செய்திடுவான். இத்தகைய இயல்புடைய எண்ணம் உள்ளவனாக நீசன் இப்பூவுலகில் பிறவி எடுத்துள்ளான். எனவே இவன் சிறிதுகூட நன்றி உள்ளவனாக இருக்கமாட்டான்" என்று கூறிக் கணக்கை முடித்தான் கணக்கரான சித்திரபுத்திரன்.
---------------------
அய்யா உண்டு
---------------------


*சித்திர புத்திரரை அழைத்துக் கேட்டல்*****
ஆர்க்க எலும்பு அடைக்கும் நரம்புடனே
மூர்க்கத் தசையும் உதிரப் புனல் உடம்பும் 
மண் தண்ணீரோடே வகைக்கு ஆகா பாண்டம் இது
விண்பரந்த வீடு வெளி வீடு ஓட்டலுமாய்
ஓட்டை மடத்துக்கு ஒன்பது பொந்துடனே
வீட்டைப் பிரித்தால் விறகுக்கும் ஆகாது
விசை இட்டு ஆட்டும் வித்தாரப் பாவையிலும்
பசை இல்லாப் பாவை இது பட்சி ஒன்று ஆடிவரும்
---------


உரை
---------
இரத்தம், எலும்பு, நரம்பு, மூர்க்கத்தனமான தசை, நீர் இவை கலந்த அவன் உடம்பு மண்ணும் தண்ணீரும் சேர்த்துச் செய்யப்பட்ட மண்பாண்டம் போல், கடைசியில் ஒரு வகைக்கும் ஆகாதாகி விடும். இளமை தன்மை நிறைந்து பரந்த வீடாகிய இவ்வுடலின் வெளிப்பகுதியில் பல சிறு வெளி வீடுகள் ஓட்டைகளாகக் காணப்படுகின்றன. ஓட்டை மடமாகிய இவ்வுடலுக்கு ஒன்பது துவாரங்கள் உள்ளன. வீடாகிய இவன் உடம்பிலிருந்து உயிர் பிரிந்தால் இவன் உடம்பு விறகுக்குக்கூட ஆகாது, சித்திரப்பாவைக் கூத்தில் மகிழ்ச்சி ஊட்டுவதற்கு மிகவும் வேகமாக ஆட்டுவிக்கப்படுகின்ற பெரிய சித்திரபாவைகளில் கேவலமான சக்தியற்ற சித்திரப்பாவையே இந்த உடம்பு. இவ்வுடம்பில் பட்சியாகிய உயிர் ஆடிக் கொண்டிருக்கிறது.
---------------------
அய்யா உண்டு
---------------------

சித்திர புத்திரரை அழைத்துக் கேட்டல்*****
அப்பனும் அம்மை அடங்கி மிகப்பெறாமல்
கொப்புளித்துத் தானாய்க் குருத்து வந்த நீசனுக்குத் 
தத்துவம் தொண்ணூற்று ஆறும் தடிக்குணந்தான்
புத்தி புலன் ஐந்தும் பொய் பூண்ட பூதமுமாய்
சத்துருக்கண் கண் கால் தலையும் வெறும் நீசம்
உற்று உணர்ந்து பாராத உடல் கள்வன்காயம்
மாயக் காயம் அதுக்கு வருசம் ஒருநூறு இருப்பு
தோய நாதத் துளிர் தொகை பத்து நூறு ஆயிரந்தான்
வாழ்வு வந்து சேர்க்கை வருசம் பதினாலு
தாழ்வு தசை நரம்பு சனித்த முப்பத்தோர் ஆண்டில்
---------


உரை
---------
"ஈசுரரே, இவன் அப்பன் அம்மையின்றித் தானாய்த் தோன்றி வந்த நீசன் ஆவான். இவனுக்குத் தத்துவம் தொண்ணூற்று ஆறும் தடிக் குணத்தால் ஆனவை, இவன் புத்தியும், ஐந்து புலன்களும் பொய்யானவை. இப்பகைவனது பூதம் போன்ற கண்கள், கால்கள், தலை ஆகியவை தீமையானவை. எதையும் ஆழமாகச் சிந்தித்துப்பாராத உடல் அக்கள்வனது உடலாகும். அவனது மாய உடம்புக்கும், உயிர் மூச்சுக்கும் ஆயுள் நூறு வருடங்களாகும். அவன் சந்ததியை உருவாக்கும் நீர் போன்ற நாதவிந்து துளிகளின் எண்ணிக்கை பல கோடியாம். பதினாலு வயதில் சிற்றின்ப வாழ்வுக்குத் தகுதி உடையவன் ஆவான். பிறந்து முப்பத்து ஒன்றாம் வயதில் தசைகளும் நரம்புகளும் தளர்ச்சி அடைந்துவிடும்.
---------------------
அய்யா உண்டு 


சித்திர புத்திரரை அழைத்துக் கேட்டல்*****
இப்படியே சித்திரரும் எடுத்துரைக்க ஈசுரரும்
அப்படியே வந்த இவனுக்கு ஆயுசும் இவன் பலமும் 
கரணம்முதல் நடப்பும் கட்டாக நீ தேர்ந்து
மரணம்முதல் நடப்பும் வகுத்துரை நீ நம் கணக்காய்
அப்போது சித்திரரும் ஆதி அருள் நெஞ்சில் வைத்து
பொற்பாதம் உண்டெனவே புகல்வார் இயல் கணக்கர்
---------

உரை
---------
இப்படிச் சித்திரபுத்திரன் எடுத்துரைக்க, ஈசுரர் அவனை நோக்கி, "சித்திரபுத்திரா, அதிசயமாக வந்த இவன் ஆயுள் பற்றியும், இவன் பலம் பற்றியும், இவன் பிறப்புமுதல் எல்லாக் குணநலன்களையும் தெரிந்தெடுத்து, மரணம்வரை சேர்த்து நமது கணக்காக கூறுவாயாக" என்றார். உடனே, சித்திர புத்திரர் சிவன் அருளை உள்ளத்தில் நிலை நிறுத்தி, எல்லாவற்றுக்கும் காரணம் அவர் பொற்பாதமே என்னும் நம்பிக்கையில் இயல்பாகக் கணக்கர் கூறலானார்.
---------------------
அய்யா உண்டு
---------------------


சித்திர புத்திரரை அழைத்துக் கேட்டல்*****
முற்பலியோடு ஆறும் உயிரழித்த மாயனுக்கு
இப்போது வந்து தோன்றிய இவன்தான் கொடியனையா 
மாயன் நாலு முழமாய் மனுச்சிங்க முகமாய்
உபாயமாய் நம்மை வதைத்தானே என்று சொல்லி
அன்று ஆயன் எடுத்த அளவாய் உருவெடுத்துச்
சென்று அவனுடைய திறத்தை நாம் பார்ப்போம் என்று
வேகத்தால் துண்டம் வெடித்ததுகாண் இப்புதுமை
ஏகந்தான் ஆளும் ஈசுரரே என்றுரைத்தார்

உரை
---------
இதுவரை பிறந்து, மாயனால் முன்னால் அழிக்கப்பட்ட ஆறு பேரைவிட இவன்தான் மகாக் கொடியவன் ஆவான். 'மாயன் நான்கு முழமுள்ள கிருஷ்ணனாகவும், இராமனாகவும், சிங்க முகத்தனாகவும் அவதாரம் எடுத்துதான் தன்னை அழித்தான்' என்றும், 'முந்திய யுகத்தில் மாயன் எடுத்த உருவ அளவோடு தானும் பிறவி எடுத்து அவன் திறனைப் பார்க்க வேண்டும் ' என்றும் எண்ணிய வேகத்தால் ஆறாவது துண்டம் தானே வெடித்து இந்த அதிசய பிறவி பிறந்தது என்பதை அறிவீராக. எல்லா யுகத்தையும் ஆளும் ஈசுரரே" என்றான்.
---------------------
அய்யா உண்டு


சித்திர புத்திரரை அழைத்துக் கேட்டல்*****
அப்போது ஈசுரரை அன்போடுற வணங்கிச்
செப்போடு ஒத்த சித்தரும் செப்பலுற்றார் அம்மானை 
சாத்திரத்தில் உற்ற தன்மை மிகக்கேளும் என்று
சீத்துவமாகச் சித்திரரும் செப்பலுற்றார்
முன் பிறந்த குறோணி உடல் ஆறு துண்டதிலே
தன் பிறவியோடு ஆறாய்த் தான் பிறந்தான் சூத்திரமாய்
மண்தான் உடம்பு வந்து உதித்தேன் தனக்கு
விண்தான் உடம்பு விலாசக் குருவோடு
சலந்தான் உடம்புக்கு உறுதி தைரியங்கள்
வலந்தான் இளகி வன்னியோடும் கூடிக்
கலந்து திரண்ட கட்டை முண்டம் ஆனதற்குப்
பெலம் தூக்கும் வாயு பிராணன் காணும் ஈசுரரே
---------


உரை
---------
அச்சமயம், கருஞ்சிவப்பு நிறமான சித்திரபுத்திரர் ஈசுரரை அன்போடு விழுந்து வணங்கி, "ஈசுரரே, சாத்திரத்திலுள்ள அத்தன்மை பற்றிச் சரியாகக் கூறுகிறேன், கேட்பீராக. முன்பு பிறந்த குறோணியுடலின் ஆறு துண்டங்களில் ஆறாவது துண்டம் மூலம் சில சூத்திர இலட்சணத்துடன் பிறந்த சூரனைப் பற்றி இனி விளக்குகிறேன். உலகில் பிறந்த இந்த நீசனுக்கு மண்ணும், விண்ணும், நீரும், வினோதமான நிறமும், உறுதியும், தைரியமும், வலிமையும் ஒன்றாக இளகிச் சேர்ந்து அக்கினியோடு கலந்து திரண்ட உடம்பாக அமைந்துள்ளது. பலமாக எதையும் தூக்கிச் செல்லும் சக்தி படைத்த வாயுவே அவனுக்கு உயிர் என்பதை அறிவீராக.
---------------------
அய்யா உண்டு 






அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

*நீசனை ஈசர் வரவழைத்தல்*****
குத்திப் புறத்தே கோரி வையும் என்றுரைத்து
எத்திசையும் நந்தீசுரனார் கைக்கொடுத்து 
வேண்டி அந்த நந்தி விரைவாய் அவர் நடந்து
ஊன்றி நின்ற நீசனையும் ஒற்றைக் கவையால் கோரி
வெளியிலே வைக்க வெப்பெடுத்த பாதாளம்
பளீர் எனவே வந்து பொருந்தியதே அம்மானை
பூமிதனில் வெடித்த பொல்லாத நீசனையும்
சாமி முன்பானதிலே சுரண்டி அதனால் இழுத்துக்
கொண்டு வந்து விட்டார் குருநாதர் முன்பதிலே
---------


உரை
---------
பிறகு தம் பக்கத்தில் நின்ற எல்லாத் திசைகளிலும் வெற்றி பெற்ற நந்தியை அழைத்து "நந்தீசுர்ரே, இந்தக் கவையின் மூலம் பூமியில் குத்தி அந்த நீசனைப் பூமியிலிருந்து வெளியே வாரி எடுத்து வையும்" என்று கூறித் தம் கையில் இருந்த கவையை அவர் கையில் கொடுத்தார். அக்கவையை நந்தி பெற்றுக் கொண்டு நீசனை நோக்கி நடந்தார். பூமியில் புதைந்து கிடந்த நீசனை நந்தி கவையினால் ஓரேடியாக வாரி வெளியில் எடுத்தார். வெளியில் எடுத்ததும் அங்கே உருவான பாதாளவெளி பளீரெனப் பொருந்திக் கொண்டது; பூமியிலிருந்து வெடித்து வந்த நீசனை, நந்தீசுரர் தான் கொண்டு வந்திருந்த சுரண்டியினால் இழுத்துக் கொண்டு வந்து ஈசர் முன்னிலையில் நிறுத்தினார்.
---------------------
அய்யா உண்டு
---------------------


நீசனை ஈசர் வரவழைத்தல்*****
அரனார் இடத்தில் அவர்கள் சிலர்தாம் ஓடிச்
சிரமானது வெளியில் செல்ல வர மாட்டாமல் 
பூமி கலங்கிப் பொறுக்க மிகக்கூடாமல்
சாமி அந்த நீசன்தான் வரவே மாச்சலுண்டு
என்று அந்தத் தூதர் இப்படியே சொல்லிடவே
அன்று சிவனார் அதற்கு ஏது செய்வோம் என்று
தம்மாலே ஆகும் தந்து தெளிந்து எடுத்துக்
கம்மாளன் வேலையினால் கவை ஒன்று உண்டாக்கி
---------


உரை
---------
நீசனை அழைக்க வந்தவர்கள் உள்ளம் பதறிச் சிவனிடத்தில் ஓடிச் சென்று, "ஈசரே, நீசனின் தலையானது வெளியே வரமுடியவில்லை. அவனுடைய அசைவைப் பொறுக்க முடியாமல் பூமி கலக்கம் அடைந்துள்ளது. சுவாமி, அந்த நீசன் இங்கே வருவது முடியாத ஒன்றாகும்" என்று அழைக்கச் சென்ற தூதுவர்கள் சொன்னார்கள். இதைக் கேட்ட ஈசர் "இனி என்ன செய்வோம்?" என்று சிந்தித்தார். முடிவில் தம்மாலான ஒரு தந்திர முறையைக் கையாளுவதற்கு முடிவு செய்து, தாம் ஆராய்ந்தெடுத்த அந்த முடிவுப்படி கம்மாளன் ஒருவன் மூலம் கவைக்கம்பு ஒன்றை உருவாக்கினார்.
---------------------
அய்யா உண்டு 


*நீசனை ஈசர் வரவழைத்தல்*****
நீசன்தனை அழைக்க நெளிந்து உருண்டு அவனும்
பிரண்டு உருள பிண்டம் பிசை பிசைந்துதான் மலங்க 
மருண்ட விழியால் மாகம் அது கலங்கி
மண்ணை விட்டு உயரே மண்டை வர மாட்டாமல்
விண்ணெல்லாம் மெத்த வெம்மருண்டது அம்மானை
கயிலை கிடுகிடு என்கும் கண்ட பேர்தாம் பதற
அகிலம் கிடுகிடு என்கும் அழைக்க வந்தோர்தாம் பதற
---------



உரை
---------
இவ்வாறு அழைத்ததும் அவன் நெளிந்து, பிரண்டு, உருண்டான்; அதனால், அவன் தசைப்பிண்டம் பிசையப்பட்டு அசைந்தது; மருண்ட விழியோடிருந்த அவன் பார்வையால் ஆகாயமானது கலங்கி இருக்க, அவன் பூமியிலிருந்து வெளி வரமுயன்றான். அவன் தலை வெளியே வரமுடியாமல் தவிக்க வானலோகம் எல்லாம் மருட்சி அடைந்தன. கயிலையும் வைகுண்டமும் "கிடுகிடு" என அசையவும் அதைக் கண்டவர்கள் எல்லாரும் பதறி ஓடினர்.
---------------------
அய்யா உண்டு 


நீசனை ஈசர் வரவழைத்தல்*****
அன்று அவன்தனக்கு ஆள் அனுப்பித் தான் வருத்த
ஆரை விடுவொம் என்று ஆராய்ந்து ஈசுரரும் 
சூரமுள்ள காலன் தூதன் எமன்தனையும்
துட்டமுள்ள பூதக் கிங்கிலியர் துர்க்கையையும்
மொட்டைக் குறளிகளையும் முக்கோடிக் கூளிகளையும்
விட்டு அழைத்து வாரும் என்று விடைகொடுத்தார் அம்மானை
துட்டக் குணத்தோர் துடியாய் மிகநடந்து
கொட்டான் கீழாகக் குருத்து நின்ற பாதகனை
ஈசர் அழைத்தார் எழுந்திருந்து வா எனவே
---------



உரை
---------
உடனே, அதிசயமாகப் பிறந்த அவனை அழைத்து வர ஆள் அனுப்புவதற்கு நினைத்து யாரை அனுப்புவோம்? என்று ஈசுரர் ஆராய்ந்தார். கடைசியில் வீரத்தன்மையுள்ள எமன், காலன், தூதன் ஆகிய மூவரையும், துஷ்டத்தன்மையுள்ள பூதங்களாகிய கிங்கிலியர்களையும், துர்க்கையையும், மொட்டை குறளிகளையும், மூன்று கோடி கூளிகளையும் அழைத்து, "அந்த நீசனை அழைத்து வாருங்கள்" என்று கூறி விடை கொடுத்தார்.
துர்க்குணத்தையுடைய இவர்கள் எல்லாரும் மிகவும் தைரியமாக நடந்து தலைகீழாக உருவாகி நின்ற அந்தப் பாதக நீசனின் அருகில் சென்று "நீசனே, உன்னை ஈசர் அழைத்தார்; எழுந்து வா" என்று அழைத்தார்கள்.
---------------------
அய்யா உண்டு 



அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்:

கலியனின் இகழ்ச்சி மொழி*****
பொல்லாத நீசா பொருள் அறிய மாட்டாமல்
எல்லோரைப் போலே ஏசாதே ஈசுரரை 
லோகம் படைத்தவர்காண் உறுபொருளாய் நிற்பவர்காண்
ஏகம் நிறைந்தவர்காண் இறவாது இருப்பவர்காண்
பட்சி பறவை பலசீவ செந்துகட்கும்
நிச்சயமாய்ப் பொசிப்பு நிதமும் அளிப்பவர்காண்
மாயவனும் நான்முகனும் மறையும் மிகக்காணாத
தேயசு ஆனவர் காண் திருட்டிக்க வல்லவர்காண்
இத்தனையும் நீசனுக்கு இயம்பு அமரர்களும்
புத்திக்கு நட்புப் போகாமல் பின்சொல்வான்
---------



உரை
---------
"அடே, பொல்லாத நீசனே, நீ உண்மைப் பொருள் அறியாமல் எல்லாரையும் போன்று நினைத்து ஈசரைப் பார்த்துக் கீழான மொழி பேசாதே; நீசனே அங்கே அமர்திருக்கும் ஈசர் இவ்வுலகத்தை எல்லாம் படைத்தவர்; என்றும் இறப்பில்லாதவர்; இதை அறிவாயாக அவர் பட்சி, பறவை இன்னும் சகல சீவராசிகளுக்கும் நாள்தோறும் உண்ணும் உணவைக் கொடுப்பவர்; திருமாலும், பிரம்மனும், நான்கு வேதங்களும் காண முடியாதவரும், இவ்வுலக மக்கள் யாராலும் காண முடியாதவரும் ஆகிய அவர் ஒளிமயமானவர். அவர் எல்லாவற்றையும் படைக்கும் வல்லவர் ஆவார். நீசனே, நீ அறிந்து கொள்வாயாக" என்றனர். இத்தனை விளக்கங்களையும் வானோர்கள் நீசனுக்குச் சொன்ன பிறகும், அவனுடைய தாழ்வான புத்திக்கு நல்லவர்களின் நட்பான வார்த்தைகள் புரியாமல் நீசன் தொடர்ந்து கூறலானான்.
---------------------
அய்யா உண்டு
---------------------




கலியனின் இகழ்ச்சி மொழி*****
கண்டு அந்த ஈசர் கனமாய் விசேசமுற்று
உன்றனுக்கு வேணும் என்று உகந்தது எல்லாம் இப்போது 
என்றனிடம் கேள் என்று ஈசுரனார் தாம் உரைக்க
உடனே அவனும் உள்ளம் மிகக்க்களித்து
விடமேதான் பூண்டு விரிகந்தைதான் உடுத்து
மேலிலே குப்பை மிகப்பூசி யானையுட
தோலில் இருப்பவனோ சொன்னது எல்லாம் தாறதுதான்
என்று களிப்பாய் ஈசுரரை அந்நீசன்
அன்று மொழிய அமரர் அதை அறிந்து
---------


உரை
---------
அந்த நீசனைக் கண்ட ஈசர் அதிக ஆச்சரியமுற்று "நீசனே, உனக்கு வேண்டுமென்று விருப்பப்பட்ட எல்லாவற்றையும் இப்பொழுது என்னிடம் கேள்" என்று அமைதியுடன் உரைத்தார், உடனே, நீசன் மிகுந்த இகழ்ச்சியுடன், "விஷத்தையுடைய பாம்பை அணிந்து, அதிகமான கந்தைத் துணியை உடுத்து, உடம்பு முழுவதும் குப்பைப்பூசி, யானையின் தோலின் மேல் இருக்கக்கூடிய நீயா நான் கேட்பவை எல்லாம் தரக்கூடியவன்?" என்று ஏளனமாக ஈசுரரைப் பார்த்து நகைத்தான், இதைக் கேட்ட வானோர்கள் எல்லாரும் பதறி நீசனை நோக்கி ...
---------------------
அய்யா உண்டு 



அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

கலிச்சியைப் படைத்தல்*****
அப்போது மாநீசன் அரனார்தமை நோக்கி 
ஒப்பம் ஆகாது என்பலத்தில் ஒன்றில் அரைப்பெலமாய் 
அழகில் அதிகமுமாய் ஆங்காரம் பாதியுமாய்க்
குழகிய வாய் அழகாய் குரும்புத் தனத்து அழகாய்
மேனி அழகாய் விழி அழகாய் வீச்சு அழகாய்
யோனி அழகாய் ஒடுங்கும் இடை அழகாய்
கரம் அழகாய் கால் அழகாய் கண் அழகாய் பல் அழகாய்
சரக்கூடு முன் அழகாய் தலைகண்டம் பின்அழகாய்
தொடை அழகாய் விரல் அழகாய் சொல் அழகாய்
நடை அழகாய் வீச்சு அழகாய் நல்ல குழல் அழகாய்
இடை அழகாய் மேனி இறுக்கத்துடன் அழகாய்




உரை
---------
உடனே, மாநீசன் ஈசரை நோக்கி ""ஈசரே, என்னுடைய பலத்துக்குச் சமபலம் இல்லாதவளாகவும், என் பலத்தில் பாதி அளவு பலம் கொண்டவளாகவும், அழகில் என்னைவிட அதிகமானவளாகவும், ஆங்காரத்தில் பாதியாகவும், அழகு பொருந்திய வாயுள்ளவளாகவும், குரும்பலைப் போன்ற அழகுள்ள மார்புடையவளாகவும், உடம்பெல்லாம் அழகாகவும், விழி அழகாகவும், பார்வை அழகாகவும், அழகு பொருந்திய அல்குல் உடையவளாகவும், ஒடுங்கிய அழகான இடையுள்ளவளாகவும், அழகான கால்கள், கைகள், கண்கள் பொருந்தியவளாகவும், பூமாலைக் கூடுபோன்ற பற்களைக் கொண்டவளாகவும், முன்பகுதி, பின்பகுதி, தலை, கண்டம் ஆகியவை அழகுள்ளவளாகவும், அழகான தொடைகளும், விரல்களும், சொல்லும், நடையும், கூந்தலும், பார்வையும், இடையும், உடம்பும் அமைந்தவளாகவும், இறுக்கமான உடம்புடையவளாகவும்,
---------------------
அய்யா உண்டு 



கலிச்சியைப் படைத்தல்*****
ஆனால்தான் தேவர்களே அப்படி நீர் ஒப்பினீரே
தானாய் இருந்து சர்வமதும் உண்டாக்கி வைத்தவர் 
ஆனால் எனதுடைய அளவில் அழகாக
மானாள் ஒருகுழலை வகுக்கச் சொல் பார்ப்போம்காண்
என்று அந்த நீசன் இகழ்ச்சியாய்ச் சொல்லிடவே
அன்று அந்த ஈசர் அவர் அறிந்து ஏதுரைப்பார்
நல்லது நீ கேட்டதுதான் நாம் படைத்துத் தாறோம் என்று
வல்ல பரமேசுரனார் வகை ஏது எனப்பார்த்து
உன்றனுக்கு நேரே ஒத்த பலம்போலே
அந்தமுடன் பிறந்தால் ஆகுமோ என்றுரைத்தார்

---------


உரை
---------
"வானோரே, தேவர்களே, இப்படி நீங்கள் கூறுகிறீரே. ஈசர் தாம் தாமாக உருவாகி, இந்தச் சர்வ உலகத்தையும் உருவாக்கி வைத்த வல்லமை பெற்றவரானால் எனக்கு மிகவும் பொருத்தமான அளவுள்ளவர்களும், அழகு பொருந்தியவளும், மான் விழி கொண்டவளும் ஆகிய ஒரு பெண்ணை உருவாக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்" என்று அந்த நீசன் மிகுந்த இழிவுடன் சொன்னான். இதைக் கேட்ட ஈசர், "நீசனே, நல்லது சொன்னாய். நீ கேட்ட அத்தகைய பெண்ணை நாம் படைத்துத் தருகிறோம்" என வல்லமை பொருந்திய பரமேசுவரனார் கூறினார். பிறகு நீசனுக்கு ஒரு பெண்ணை உருவாக்கும் வழி என்ன? என்று சிந்தித்து, "நீசனே, உனக்குரிய பலத்தை ஒத்த பெண்ணைப் பிறவி செய்தால் அப்பெண்ணை நீ ஏற்றுக் கொள்ளுவாயா?" என்று கேட்டார்.
---------------------
அய்யா உண்டு
---------------------






அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

*கலிச்சியைப் படைத்தல்*****
பெண்ணோடு உறவாடிப் பேதலித்து அந்நீசன் 
மண்ணோடு மண்ணும் மருவுவதுபோல் மருவி 
ஆசை அவள்பேரில் அங்கம் எல்லாம்தான் உருகி
நீசன் அவள் பேரில் நினைவாக நின்றதல்லால்
படைத்து அருளி வைத்த பரமனையும் எண்ணாமல்
தடதட எனப் பெண்ணைத் தான்எடுத்து முத்திடுவான்



உரை
---------
மேலும், மாநீசன் கலிச்சியிடம் மண்ணோடு மண் கலந்ததைப் போன்று, கலந்து அப்பெண்ணோடு உறவு கொண்டான். அதனால் தனது சக்தியெல்லாம் உருகிப் பாய, புத்தி பேதலித்து, அவள்மேல் ஒரே நினைவு கொண்டு நின்றானே அல்லாமல், அப்பெண்ணைப் படைத்த பரமனாகிய ஈசரை எண்ணிப் பார்க்கவில்லை.
ஈசர் நினைவின்றி அப்பெண்ணையே மீண்டும் மீண்டும் எடுத்திடுவான்; முத்தம் கொடுத்திடுவான்.
---------------------
அய்யா உண்டு 




கலிச்சியைப் படைத்தல்*****
கண்டானே மாநீசன் கண்கொள்ளாக் காட்சியென
அண்ட அவளைச் சென்று ஆவி முகத்தோடு அணைத்து 
நன்றாகத் தர்மம் நாள்தோறும் செய்து குண்டம்
கண்டாரைப் போலக் கட்டினான் மங்கையரை
மங்கையரை நீசன் வாயார முத்தமிட்டுக்
கொங்கைதமைக் கண்டு கொண்டாடி ஆசையுற்று
எடுப்பான் அவனை இடுப்பிலே வைத்திடுவான்
படுப்பமோ என்று பாய் விரிக்க நின்றிடுவான்

---------


உரை
---------
இதைக் கண்ட மாநீசன் "ஆகா, இது கண் கொள்ளாக் காட்சி" என்று மகிழ்ச்சியுற்று, அவளை அடைவதற்காக அணுகிச் சென்று முகத்தோடு முகமாக அணைத்துக் கொண்டான். நல்ல முறையில் என்றென்றும் தருமம் செய்து கடைசியில் வைகுண்டபதவி அடையும் போதுள்ள பேரின்பம்போன்று அந்தப் பெண்ணைக் கட்டி அணைத்து, அவளை வாய் சோர்வு அடையும்வரை முத்தமிட்டான். அவளது அழகான கொங்கைகளைக் கண்டு ஆசை கொண்டு ஆடிடுவான்; அவளை எடுத்திடுவான்; அவளை இடுப்பிலே தூக்கி வைத்திடுவான்; "படுத்துத் தூங்குவோமா" என்று பாய் விரிக்கச் சென்றிடுவான்
---------------------
அய்யா உண்டு
---------------------



கலிச்சியைப் படைத்தல்*****
நீசன் நினைத்த நினைவுபோல் அம்மடவை
பாசக்கலை தூவப் பகட்டி விழித்தாள் மருட்டி 
மும்மடங்காய் மோகம் முருகுக் குழல் சரிய
கம்மடங்காத் தோசம் கரைபுரளத் தான்பிறந்தாள்
---------


உரை
---------
நீசன் எப்படி நினைத்தானோ அப்படிப்பட்ட குணங்களோடு, பாசத்தை ஊட்டுகின்ற கலைகளைத் தெரிந்தவளாக, தன் கண்களை உருட்டிப் பகட்டோடு மினுக்குபவளாக, ஆசையைத் தூவி நீசனுக்கு மூன்று மடங்கு ஆசை பெருகும்படி செய்பவளாக, அழகான கூந்தல் ஒரு பக்கம் சரிய, ஆகாயத்திலும் அடக்க முடியாத காம ஆசை கரைபுரண்டோட, பெண்ணொருத்தி பிறந்தாள்.
---------------------
அய்யா உண்டு
---------------------



கலிச்சியைப் படைத்தல்*****
அன்று அந்த நீசனுட அரையில் ஓர்ஆக்கை இட்டு
இருக்கக் கீழ்க் கட்டி எழுந்திரு நீ என்றிடவே 
பொதுக்கெனவே இடது புறத்தில் ஒருஎலும்பைத்
தெறிக்க அதையும் சிவனார் மிகப்பார்த்து
வெறி கொண்ட நீசன் விலாவில் எடுத்ததனால்
நீசன் பலத்தில் நேர்பாதி ஆகும் என்று
வாச மடவாய் வரவே மதன்தனை நினைத்தார்
மதனை அரன் நினைக்க மாநீசன் தன்னெலும்பு
வதன மட மாதாய் வந்ததுவே அம்மானை
---------


உரை
---------
ஈசர் உடனே செயற்பட்டு நீசனுடைய அரையில் ஒரு கொடியினால் கட்டி அவன் இருப்பதற்கு கீழ்க்கட்டு ஒன்று கட்டி, திடீரென்று அவனை எழும்பச் சொன்னார், அவ்வாறு அவன் எழும்பவும், அவனது இடதுபுற விலா எலும்பு ஒன்றைத் தெறித்து வரச் செய்தார்.
அதைப் பார்த்து, "பெண் வெறி கொண்ட இந்த நீசனுடைய இடது விலாவிலிருந்து ஒரு எலும்பை எடுத்ததால் இஃது அவனுடைய பலத்தில் நேர்பாதியை ஒக்கும்" என்று எண்ணினார்.
அந்த எலும்பை வாசனை பொருந்திய பெண்ணாக உருவாக்க எண்ணி மன்மதனைத் தியானித்தார்.மன்மதனை ஈசர் தியானிக்கவே, மாநீசனுடைய இடது விலாஎலும்பு அழகு பொருந்திய பெண்ணாக உருவெடுத்து வந்தது.
---------------------



கலிச்சியைப் படைத்தல்*****
கேட்ட மாநீசனுக்குக் கீர்த்தி என்ன மாமயிலே
தேட்டமுடன் இப்போது செப்பு என உரைத்தார் 
அப்போது சத்தி ஆதி அடிவணங்கி
ஒப்பு ஒன்று இல்லாத உடைய பெருமானே
பாதியாய் நீசனையும் பகிர்ந்து அவன் உடலில்
வீதியாம் இடது விலாவில் ஒருஎலும்பைத்
தட்டிக் கழற்றிச் சச்சுருவம் தானாக்கித்
திட்டித்து நீசனுக்குச் சிணம் கொடுவும் ஈசுரரே
என்று உமையாள் இப்படியே சொன்னவுடன்
---------


உரை
---------
"மாமயிலே, இத்தனை புகழுடன் கூடிய பெண்ணை நீசனுக்கு எப்படிக் கொடுப்பது? அதற்குரிய தகுதியான வழியை நீ கூறுவாயாக" என்று ஆலோசனை கேட்டார்.
இம்மொழியைக் கேட்ட சக்திதேவி, ஈசரின் பாதங்களை வணங்கி, "யாருக்கும் ஒப்பில்லாத பெருமாளே, ஈசுரரே, இந்த நீசனை இருபாதியாகக் கணக்கெடுத்துப் பகிர்ந்து அவன் உடலில் இருக்கின்ற விசாலமான இடது பக்க விலாவில் ஒரு எலும்பைத் தட்டிக் கழற்றி, ஒரு பெண் உருவத்தை உருவாக்கி, இந்த நீசனுக்கு உடனடியாகக் கொடுத்து விடுவீராக" என்று உமையாள் சொன்னாள்.
---------------------
அய்யா உண்டு
---------------------


கலிச்சியைப் படைத்தல்*****
உடை அழகாய் தேகம் ஓங்காரத் தொங்கலுமாய்
அழகுக்கு ஏற்ற அத்தர் மணத்தோடும் 
கழப கத்தூரி கமகம என்னும் வாசனை போல்
மூவர் தேவர்களையும் மோகமாய் மயக்கச்
சீவனது கொடுத்துத் திருட்டித்துத் தாரும் என்றான்
அப்போது ஈசுரரும் அகம் மகிழ்ந்து கொண்டாடி
இப்போது கேட்டதற்கு என்ன செய்வோம் என்று சொல்லி
அருகில் சிவனார் அகமதிலே வீற்றிருக்கும்
திருவுக்கு நன்றாய்ச் செப்பலுற்றார் அம்மானை
---------



உரை
---------
... (கலிச்சியை) உடம்பில் அழகு பொருந்திய உடைகளும், ஓங்காரம் போன்ற அழகு வடிவக் கூந்தலும் உடையவளாகவும், அவள் அழகுக்கு ஏற்ற அத்தர், களபம், கத்தூரி போன்ற 'கம்' என்னும் சிறந்த மனமுள்ளவளாகவும், மூவர்முதல் தேவர்களையும் மயக்கும் சக்தி உள்ளவளாகவும் படைத்து உயிரூட்டித் தாரும்" என்றான்.
அதைக் கேட்ட ஈசர் மனம் மகிழ்ச்சியுற்று "இந்த நீசன் கேட்டதற்கு என்ன வழி செய்வோம்?" என்று சிந்தித்து விடை காண முடியவில்லை.
எனவே, தமதருகில் இருந்த சக்தி உமையாளிடம் ...
---------------------
அய்யா உண்டு 

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்:

கலியனுக்கு வரமருளல்*****
அல்லாமல் பின்னும் அந்நீசன் கேட்ட வரம்
பொல்லாத விதத்தை புகலக் கேள் ஒண்ணுதலே 
கூடுவிட்டுக் கூடு குதிக்கக் கருவானதுவும்
நாடு பாழாக்கி நகரில் கொள்ளை ஆக்கிடவும்
துயில்வோர் போல் உலகம் துஞ்சவைத்துக் கொள்ளைகொண்டு
அயர்தி மோகினிக் கருவும் அரனே நீர் தாரும் என்றான்
---------

உரை
---------
மேலும், அந்த நீசன் கேட்ட வரங்களையும் பொல்லாத வித்தைகளையும். நான் கூறப் போகிறேன். இலட்சுமிதேவியே நீ கேள்.
நீசன் மீண்டும் வரங்கள் கேட்கலுற்றான்; "ஈசரே, நான் கூடுவிட்டுக் கூடு பாயக் கருவாக இருக்கும் இரகசியத்தை அறியவும், நாட்டைப் பாழாக்கி நகரில் கொள்ளை நோய் உருவாக்கவும், உலக மக்களைத் தூங்கும் நிலைக்கு உள்ளாக்கிக் கொள்ளையடிக்க அயர்தி மோகினி இரகசியமும், எனக்கு அறியும்படி கற்றுத் தாரும்" என்றான் நீசன்.
---------------------
அய்யா உண்டு 


கலியனுக்கு வரமருளல்*****
சிவமூலம் சத்தித் திருமூலம் ஆனதுவும்
தவமூலம் வேதாவின் தன்னுடைய மூலமதும் 
மாலுடைய மூலம் வாய்த்த இலட்சுமி மூலம்
மேலுடைய தெய்வவித மூலமும் தாரும்
காலனின் மூலம் காமாட்சி தன்மூலம்
வாலைச் சரசோதி மாகாளி தன்மூலம்
கணபதியின் மூலம் கிங்கிலியர் மூலமதும்
துணைபதியன் ஆன சுப்பிரமணியர் மூலமதும்
ஆயிரத்தெட்டு அண்ட பிண்ட மூலம் எல்லாம்
வாயிதக் கண்ணே வரமாய் அருளும் என்றான்
---------


உரை
---------
சிவ மூலமந்திரம், சக்தி மூலமந்திரம், தவ மூலமந்திரம், பிரம்ம மூலமந்திரம், நாராயண மூலமந்திரம், இலட்சுமி மூலமந்திரம், தேவ மூலமந்திரம், காலனின் மூலமந்திரம், காமாட்சி மூலமந்திரம், கன்னி சரசுவதி மூலமந்திரம், மாகாளி மூலமந்திரம், கணபதி மூலமந்திரம், அவருக்குத் துணையாகப் பிறந்த சுப்பிரமணியர் மூலமந்திரம், கிங்கிலியர், ஆயிரத்தெட்டு அண்டம் நிறைந்த மூலமந்திரம் எல்லாம் எனக்குக் கட்டுப்பட வேண்டும். எனக்கு வேண்டிய இன்பங்களை அவற்றின் மூலம் நான் உடனடியாகப் பெற வரங்களை அருள வேண்டும்" என்று பல வரங்களைக் கேட்டான்.
---------------------
அய்யா உண்டு 




கலியனுக்கு வரமருளல்*****
அப்படியே ஈசர் அவனை முகம்நோக்கி
இப்படியே உன்றனுக்கு ஏதுவரம் வேணும் என்றார் 
என்ற பொழுது இயல்பு கெட்ட மாநீசன்
தெண்டன் இட்டு ஈசர் திருவடியைத் தான்பூண்டு
கேட்பான் வரங்கள் கீழும் மேலும் நடுங்க
வீழ்ப்பாரம் கெட்ட விசை கெட்ட மாநீசன்
மாயவனார் தம்முடைய வாய்த்த முடியானதையும்
தூயவனார் சக்கரமும் சூதமுடன் தாரும் என்றான்
அரனுடைய வெண்ணீறும் அந்தணரின் தம்பிறப்பும்
வரமுடைய சத்தி வலக்கூறும் தாரும் என்றான்
---------


உரை
---------
ஈசர் அவன் முகத்தை நோக்கி, "உனக்கு என்ன வரங்கள் வேண்டும், கேள், தருகிறேன்" என்றார்.
அப்போது நல்ல இயல்பு இல்லாத நீசன் ஈசரை நன்றாக வணங்கி, அவருடைய பாதங்களைக் கட்டிப்பிடித்து, தனது சக்தி எல்லாம் அழிந்து போகப் போகிற கேடு கெட்ட நீசன் பதினான்கு லோகங்களும் நடுங்கும்படியான வரங்களைக் கேட்கலானான்.
1. "ஈசரே, எனக்குத் திருமாலுடைய சிறப்பான முடியும், சக்கரமும், இரதமும் தர வேண்டும்.
2. சிவனுடைய வெண்ணீறும் அந்தணர் பிறப்பும் அதிக வரம் பெற்ற சக்திக்குரிய வலக்கூறும் தர வேண்டும். ... ...
---------------------
அய்யா உண்டு
---------------------


கலியனுக்கு வரமருளல்*****
அப்போது தேவர் அமரர்களும் பார்த்து அவனை
இப்போது உன் விழிக்கு ஏற்கும் படியாகப் 
பெண் படைத்துத் தந்த பெரியோனைத் தான் வணங்கி
மண் பரந்த மன்னா வரம் கேளு என்றனராம்
என்றபொழுதே இயல்பு கெட்ட மாநீசன்
அன்று அந்த ஈசர் அடிவணங்கி ஏதுசொல்வான்
என்றனக்கு ஏற்ற இளமயிலை உண்டாக்கித்
தந்து அருளிய கோவே சர்வதயாபரனே
இனி எனக்கு ஏற்ற இயல் வரங்கள் ஆனதெல்லாம்
கனி இதழும் வாயானே கையில் தரவேணும் என்றான்
---------


உரை
---------
காம ஆசையில் கலியன் நிற்பதைக் கண்ட தேவர்களும், வானோர்களும் அவனைப் பார்த்து, "கலியனே, இப்பூவுலகில் ஆட்சி புரியப் போகும் மன்னனே. இப்போது உன் கண்களுக்குப் பிடித்தமான பெண்ணைப் படைத்துத் தந்த பெரியோராகிய ஈசரைச் சென்று வணங்கி, நீ அவரிடம் வேண்டிய வரங்களைக் கேள்" என்று கூறினர்.
உடனே, நல்ல இயல்பு இல்லாத மாநீசன் ஈசர் பாதத்தை வணங்கி, "என் மனதுக்கு விருப்பமான இளமை பொருந்திய பெண்ணை உருவாக்கித் தந்தருளிய ஈசரே, சர்வ உலகத்தையும் ஆளுபவனே, கனி இதழுடைய வாயோனே, இனி எனக்கு விருப்பமான வரங்களை உடனடியாகப் பலனளிக்கும்வண்ணம் தந்து அருள வேண்டும்" என்று கேட்டான்.
---------------------
அய்யா உண்டு 




அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

கலியனுக்கு வரமருளல்*****
அப்போது சத்தி ஆதி அடிவணங்கி
எப்போதும் மறவா நல்ல கன்னி ஏதுரைப்பாள் 
சாத்திரமும் வித்தைகளும் தந்திரமும் கேட்டதனால்
சூத்திரச் சித்தாதி ஒன்று திருட்டிக்க வேணும் என்றாள்
---------



உரை
---------
அப்போது, ஈசரை எப்போதும் மறவாத நல்ல சக்தி உமை அவர் பாதங்களை வணங்கி, "ஈசரே, நீசன் சாத்திரங்களும், வித்தைகளும், தந்திரங்களும் கற்பிக்கக் கேட்டதால் அவனுக்குக் கற்பிப்பதற்கு சாத்திரங்களை அறிந்த சித்தாதி ஒருவனை உடனே உருவாக்கும்" என்று ஒரு வழியைச் சொன்னாள்.
---------------------
அய்யா உண்டு



கலியனுக்கு வரமருளல்*****
அப்படியே உள்ளவரம் அந்நீசனுக்கு அருள
எப்படித்தான் என்று எண்ணினார் ஈசுரரும் 
எண்ணியே ஈசர் ஏந்திழையாள் சத்தியுடன்
புண்ணிய நாதன் புகலுற்றார் அம்மானை
முப்பத்திரண்டு அறமும் முகித்து இருந்த ஒண்ணுதலே
செப்புத் தனத்து அழகும் செவ்வே கருங்குயிலே
வின்னோத நீசன் விபரீதமாய்க் கேட்டதற்கு
இன்னவிதம் என்று இயம்பு நீ பெண்மயிலே


உரை
---------
அந்த நீசன் கேட்டபடியே ஈசர் எல்லா வரமும் கொடுத்து அருள விரும்பினார். ஆனால், அவை எப்படிச் சாத்தியமாகும் என்று எண்ணி ஈசர் சக்தி உமையை நோக்கி, "முப்பத்திரண்டு அறங்களும் செய்து முடித்திருக்கும் பெண் மயிலே, அழகான மார்பழகு கொண்டவளே, கருங்குயில் போன்று இனிய குரல் கொண்டவளே, இந்த வினோதமான நீசன் விபரீதமான வரங்களைக் கேட்டதற்கு எப்படி நான் அத்தனையும் கொடுத்து அருளுவது? அதற்கு ஒரு வழியைக் கூறு பெண் மயிலே" என்று கேட்டார்.
---------------------
அய்யா உண்டு
---------------------


கலியனுக்கு வரமருளல்*****
விந்து சனங்கள் மிகுவாகத்தான் உதித்துக்
கிளையோடே வாழ்வு கெருவிதமாய் ஆண்டு 
வளையான மாதை மறவாமல் எப்போதும்
புத்தி கருத்தும் பெண்பேரில் என்றனக்கு
சற்றும் நெகிழாமல் தாரும் வரம் என்றுரைத்தான்
---------




உரை
---------
"மேலும் என் விந்து மூலம் குழந்தைகள் அதிகமாக உருவாகி அவர்களோடு பெருமையாய் வாழ்ந்து வரவும், சங்கு போன்ற இந்தப் பெண்ணை என்னுடைய புத்தி, எண்ணம் எல்லாம் சிறிதளவுகூட மறவாது இருக்கவும் வரம் தர வேண்டும்" என்று நீசன் கேட்டான்.
---------------------
அய்யா உண்டு



லியனுக்கு வரமருளல்*****
மருட்டும் விதமும் மாஞாலக் குண்டனியும்
உருட்டும் கொடிய உரம் பேசிய மதமும் 
வாள் வெடிகள் ஆயுதங்கள் வாய்த்தது தடுக்கத் தந்திரமும்
வேழ் வருத்தி வேலை கொள்ள விசை அடக்குந் தந்திரமும்
துட்ட மிருகம் தூறுவிசம் கொண்டது எல்லாம்
கட்டுக்குள் கட்டிக் கீழ்ப்படியத் தந்திரமும்
கட்டுச் சுருக்கும் கடிய பல வித்தைகளும்
தட்டு முட்டுள்ள நவநிதிய வத்துக்களும்
தந்து இந்தப் பெண்ணுடனே சார்ந்து விளையாடி இருந்து



உரை
---------
பிறரைப் பயமுறுத்தும் வகைகளும், இவ்வுலகத்திலேயே கோளுரைக்கும் வித்தையும், உருட்டிப் பேசும் கொடுமையான சக்தியுள்ள ஆணவமும், வாள்கள், வெடிகள், ஆயுதங்கள் போன்றவற்றின் வாய்ப்பகுதி தாக்காமல் தடுக்கும் தந்திரமும், யானைகளை வருத்தி வேலை வாங்க அவற்றின் சக்தியைக் கட்டுப் படுத்தி அடக்கும் தந்திரமும், தீய மிருகங்கள், விசத்தைக் கக்கும் தீய சீவன்கள் எல்லாவற்றையும் காட்டுக்கு உள்ளேயே கீழ்ப்படியச் செய்யும் தந்திரமும், பெரிய அரண்கட்டுக்களைச் சுருங்கச் செய்யும் கடினமான பல விதைகளும், ஆங்காங்கே தேவைப்படும் நவரத்தின பொருட்களும் தந்து, இந்தப் பெண்ணுடன் சேர்ந்து விளையாடி மகிழ்ச்சியாய் வாழவும் வரம் வேண்டும்.
---------------------
அய்யா உண்டு 


கலியனுக்கு வரமருளல்*****
காளிதனை வருத்திக் கைக்குள் விடும் குளிகை
கூளிக் கணத்தைக் கொண்டு வரும் நற்குளிகை 
தேவரையும் வானவரைச் சென்று அழைக்கும் குளிகை
மூவரையும் அழைத்து மோடி செய்யும் குளிகை
பழி செய்தால் வெல்ல பாரத் தொழில்கள்முதல்
சுழி வரைகள்தாம் அறிய சூதானமாய்த் தாரும்


உரை
---------
... ... வேதாளங்களையும், காளியையும் வருத்திக் கைக்குள் வைத்துக் கொண்டு ஏவல் செய்கின்ற குளிகை, கூளிப்பேய் கணங்களை வருத்தி அழைக்கும் நல்ல குளிகை, தேவரையும் வானவரையும் வரவழைத்து வரும் குளிகை, மூவரையும் அழைத்து வேடிக்கை காட்டும் குளிகை ஆகியவற்றைச் செய்யக் கற்றுத் தாரும், யாராவது எனக்குப் பழி செய்தால் அவர்களை வெல்ல அதிக பலமுள்ள வித்தைகள்முதல் தலைவிதி வரி எழுத்துக்களை அறியும் தந்திர வித்தைகளையும் கற்றுத் தருவீராக.
---------------------
அய்யா உண்டு


கலியனுக்கு வரமருளல்*****
வந்தபிணி தீர்க்க வைத்திய வாகடமும்
தந்து தந்தாகப் பல சாத்திரமும் தாரும் என்றான் 
மூவருட வடிவும் உதித்து வந்த முற்பிறப்பும்
தேவருட பிறப்பும் தெளிந்து எழுதித் தாரும் என்றான்
பறக்கும் குளிகை பரனை அழைக்கும் குளிகை
மறைக்கும் குளிகை மாலை வருத்தும் குளிகை
சாலக் குளிகை சத்தி வருத்தும் குளிகை
வாலைக் குளிகை மறையை வருத்தும் குளிகை


உரை
---------
வந்த நோயைத் தீர்க்க வைத்திய சாத்திரமும், தந்திரத்திற்குத் தந்திரமான சாத்திர வகைகளும் எனக்குக் கற்றுத் தாரும். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரின் வடிவம், என்னுடைய முன் பிறப்பும், தேவர்களின் பிறப்பும் பற்றிய இரகசியங்களைத் தெளிவாக எழுதித் தாரும். பறக்கும் குளிகை சிவனை அழைக்கும் குளிகை, எல்லாவற்றையும் கண்காணாமல் மறைக்க வைக்கும் குளிகை, திருமாலை வருத்தும் குளிகை, மாயாஜாலம் செய்யும் குளிகை, சக்தியை வரவழைக்கும் குளிகை, வாலைகுளிகை, வேதங்களை வரவழைக்கும் குளிகை;
---------------------
அய்யா உண்டு 


கலியனுக்கு வரமருளல்*****
சலம்மேல் கனல்மேல் தானிருக்கும் மோடிகளும்
கலைமேல் குடை பிடிக்கக் கருவதுவும் தாரும் 
மிருகம் அதை வருத்தி வேலையது கொண்டிடவும்
இறுக்கம் உள்ள வாதை எனக்கு விட்டுத் தாரும் அய்யா
அட்டகர்மம் எட்டும் அடக்கி வரம் தாரும் அய்யா
மொட்டைக் குறளிகளையும் முன் ஏவலாய்த் தாரும்
மந்திரசாலமும் மாய்மாலத் தந்திரமும்
இந்திரசாலம் எனக்கு அருளும் என்றுரைத்தான்
நோவுக் கிரகம் நுழையாமல் என்றனுக்குத்
தாவும் கவனக்குளிகை தாரும் என்றான் மாநீசன்
---------


உரை
---------
அய்யாவே, நீரின் மேலும், அக்கினியின் மேலும் அமர்ந்து இருக்கும் வித்தைகளும், சந்திரன்மேல் குடை பிடிக்கும் இரகசியத்தையும், மிருகங்களை வரவழைத்து வேலை வாங்கவும், வீரமுள்ள வாதைகளை எனக்கு விட்டுத் தர வேண்டும். அட்டமா சித்திகளையும் சேர்த்து வரம் தர வேண்டும், மொட்டைக் குறளிப்பேய்கள் எனக்கு ஏவல் செய்யவும், மந்திரசாலம், தந்திரம், இந்திரசாலம் போன்றவற்றையும் எனக்கு கற்றுத் தருவீராக. "எனக்குத் தொல்லை தரும் கிரகங்கள் என் எல்லைக்குள் நுழையாமல் இருக்கக் கவனக்குளிகை(மாத்திரை)யும் தர வேண்டும்.
---------------------
அய்யா உண்டு 




கலியனுக்கு வரமருளல்*****
கொட்டிக் கலைக்கக் கூறுகெட்ட சல்லியமும்
ஒட்டியமும் தாரும் உள்ள கருவும் தாரும் 
பூசை விதிமுறையும் புவனச் சக்கரமுடனே
தீட்சை விதிமுறையும் சிவவிதியும் தாரும் அய்யா


உரை
---------
ஒற்றுமையாய் வாழும் மக்களைத் தூண்டிவிட்டு ஒற்றுமையைக் கலைத்திடச் செய்யும் கூறு கெட்ட மாய வித்தைகளும், மாந்திரீக வித்தைகளும், அதன் இரகசியங்களும் எனக்குக் கற்றுத்தாரும். பூசையும் அதன் விதி முறைகளையும், புவனச் சக்கரமும், தீட்சை விதி முறைகளும், சிவ விதி முறைகளும் கற்றுத் தர வேண்டும்.
---------------------
அய்யா உண்டு 



கலியனுக்கு வரமருளல்*****
ஆவடக்கு மோகினியும் அழைக்க வெகு மோகினியும்
நாவடக்கு மோகினியும் நருள் அழைக்கும் மோகினியும் 
ஆண்பெண் பிரிக்க அதிக வெகுமாரணமும்
கோள் பிரித்துக் கட்டிக் குடி அலைக்கும் மாரணமும்
கொல்ல உச்சாடனமும் குடிகெடுக்க மாரணமும்
தொல்லை வருத்திச் சோலி செய்யும் உச்சாடனமும்
லோகமது வாழாமல் உள் அமுங்கித் தாழ்ந்திடவே
ஏகத் தம்பனமும் இதன் கருவும் தாரும்
---------




உரை
---------
மீண்டும், "ஈசரே, ஆசையை அடக்கும் மோகினி இரகசியமும்; ஆசையை வருவிக்கும் மோகினி இரகசியமும்; பிறரின் நாவன்மையை இல்லாமல் அழிக்கும் மோகினி இரகசியமும்; வேண்டும் மனிதர்களை வரவழைக்கும் மோகினி இரகசியமும்; ஆண்களையும் பெண்களையும் பிரித்து வைக்கவும், எல்லாருக்கும் மரணம் உருவாக்கவும், என்றும் கோள் மூட்டிவிட்டு மக்களின் குடிவாழ்வை அலைக்கச் செய்யவும் கூடிய மரண வித்தைகளையும்; தேவதைகளுக்குத் தொல்லை கொடுத்து, ஏவல் செய்ய உச்சரிக்கும் மூல மந்திரமும்; இவ்வுலகு வாழாமல் அழிந்து தாழ்வுற்றிடச் செய்யும் சக்தியும், எல்லாவற்றையும் அடக்கும் சக்தியும் அதன் இரகசியங்களையும் கற்றுத் தர வேண்டும்.
---------------------
அய்யா உண்டு 





அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

அகத்தீசரைப் படைத்து நீசனுக்குக் கற்பித்தல்*****
இந்நீசன் லோகமதில் இருந்து ஆளும் நாளையிலே
அன்னீதம் அல்லாமல் அறம் அறிய மாட்டானே 
செய்வது எல்லாம் பாவச் சிந்தனையே அல்லாது
மெய்வரம்பு சற்றும் மிகஅறிய மாட்டானே
அல்லாமல் பின்னும் அச்சுதனார் சக்கரமும்
பொல்லாதான் கொண்டு போறான் மால் கிரீடமும்
இவ்வரிசை இரண்டும் இவனிடத்திலே இருந்தால்
எவ்வொருத்தரால் வதைக்க ஏலாது நீசனையும்
என்று அகத்தீசர் இப்படியே தாம்கூற
---------



உரை
---------
காளை வாகனத்தில் ஏறுகின்ற ஈசரே, இந்த நீசன் பூலோகத்தில் ஆண்டு வரும் சமயத்தில் தீமையான நீதியைத்தவிர எந்தவித தரும நீதிகளையும் பரிபாலிக்க மாட்டானே? அவன் சிந்தையில் பாவ எண்ணத்தைத் தவிர உண்மை நிலையைப் பற்றிச் சிறிதுகூட எண்ண மாட்டானே? மேலும், திருமாலின் வலிமையான சக்கர ஆயுதத்தையும், கிரீடத்தையும் அந்தப் பொல்லாதவன் தன்னோடு எடுத்துச் செல்லப் போகின்றான். இவை இரண்டும் அவனிடத்தில் இருந்தால் எவராலும் அவனை அழிக்க முடியாது" என்று அகத்தீச மாமுனி ஈசரிடம் கூறி விடை பெற்றார்.
---------------------
அய்யா உண்டு 



அகத்தீசரைப் படைத்து நீசனுக்குக் கற்பித்தல்*****
கடுத்தமுள்ள நீசன் கையதிலே தான்வேண்டி
நிற்கவே பின்னும் நிகழ்த்துவார் மாமுனியும் 
அக்கறுகு சூடும் ஆதிமுதல் அந்தம்வரை
வசமாக்கும் வித்தை எல்லாம் நீசனுக்கே கொடுத்தோம்
நிசமான வித்தை மரணம் வரா வித்தைகளும்
கொல்லவே மெத்த கோபத்தால் நீசனையும்
வெல்ல வகை இல்லையல்லோ விடைஏறும் ஈசுரரே


உரை
---------
பிறகு நீசனிடம் அகத்தீசர், "நீசனே, உனக்குக் கற்பித்துத் தரவேண்டியதும் நீ ஈசரிடம் கேட்ட எல்லாவற்றையும் கற்றுத்தந்து விட்டேன்" என்று கூறினார்.
மிகவும் கொடுமை பொருந்திய நீசன் அவற்றைப் பயன்படுத்துகின்ற வகையில் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டான்.
பின்பு, ஈசரிடம் விடை பெற வந்த அகத்தீசர் ஈசரை நோக்கி, "உத்திராட்ச மாலையும், அறுகன் புல்லும் சூடுகின்ற ஈசரே, தங்கள் உத்தரவுப்படி ஆதிமுதல் அந்தம்வரை உள்ள எல்லா உலகத்தையும் தமது வசமாக்கும் வித்தைகளையும், மரணம் வராமல் ஆக்குகின்ற வித்தைகளையும், அவனது பொய்யான செய்கைகளை உண்மையாக்கும் வித்தைகளையும் நீசனுக்குக் கற்றுக் கொடுத்து விட்டேன். எனவே, ஈசரே அதிகமான கோபத்தால் கூட இந்த நீசனைக் கொன்று வெற்றி கொள்வதற்கு ஒரு வழியும் இல்லையே?
---------------------
அய்யா உண்டு 



அகத்தீசரைப் படைத்து நீசனுக்குக் கற்பித்தல்*****
நல்லது என்று ஈசர் நன்முனியைத் தான் நோக்கி
வல்ல கவியோடு வந்து உதித்த சாத்திரியே 
என்னஎன்ன சாத்திரங்கள் ஏதுஏதுக்கு ஆனாலும்
இன்னா நிற்கும் நீசனுக்கு ஈந்து கொடுவும் என்றார்
அப்போது அகத்தீசர் ஆதி மறைமுதலாய்
மைபோடும் வித்தை மாஞால அச்சரமும்
கொடுத்தோம் எனவே கூறினார் மாமுனியும்
---------


உரை
---------
ஈசர் மாமுனியை நோக்கி, "சக்தி வாய்ந்த கவியோடு இந்த உலகினில் தோன்றிய சாத்திரம் கற்றவனே, என்ன என்ன சாத்திரங்கள் எதற்கு எதற்கு ஆனாலும் அவற்றை இதோ நிற்கின்ற நீசனுக்குக் கற்றுக் கொடுப்பீராக" என்று கூறினார். உடனே, அகத்தீசர் நீசனைத் தனியாக அழைத்துச் சென்று, ஆதி வேதங்கள்முதல் மையைப்போட்டு மயக்குகின்ற வித்தைகள்வரையும், இவ்வுலகத்தில் பெரிய அற்புதங்களைச் செய்யும் மந்திர அச்சரங்களையும் கற்ப்பித்துக் கொடுத்தார்.
---------------------
அய்யா உண்டு 


அகத்தீசரைப் படைத்து நீசனுக்குக் கற்பித்தல்*****
உடனேதான் ஈசர் உள்ளம் களிகூர்ந்து
திடமாய்தான் ஈசர் சிந்தைதனில் உத்தரித்து 
அகத்தீசன் என்று ஆதி மனதுள்ளிருந்து
செகத்தோர்கள் காணச் சித்தாதி தானாகி
சாத்திரமும் வித்தை சமூலக் கருவுடனே
சூத்திரச் சித்தாதி தோன்றினார்காண் அம்மானை
எல்லோரும் கண்டு இவர் ஆகும் என்று சொல்லி
அல்லோரும் மெச்சி அகம் மகிழ்ந்து கொண்டாடி
---------


உரை
---------
உடனே, ஈசர் மனம் மகிழ்ச்சியுற்று மனத்தைத் திடமாக ஒருங்குபடுத்தி மனத்திலேயே ஒருவனை உருவாக்கினார். அவன் அகத்தீசன் என்னும் பெயருடன் இவ்வுலக மக்கள் காணும்படியாக ஈசர் மனதினுள்ளிருந்து, சித்து முதலியவற்றை தானே அறிந்தவனாய், சகல சாத்திரங்களையும், வித்தைகளையும், சமூலக் கருவையும், தெரிந்தவனாய், சூத்திரச் சித்தனாக வெளியே தோன்றினான். அங்கிருந்த எல்லாரும் அதைக் கண்டு "கழியனுக்குக் கற்பிக்க இந்த முனிவன்போதும்" என்று கூறி மகிழ்ச்சி கொண்டு ஆடினர்.
---------------------
அய்யா உண்டு 





அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

திருமால் கலியனிடம் சத்தியம் பெறுதல்*****
தாண்மை மொழி பேசாதே தலைவிரித்த பேயா நீ 
மூவர் முதலாய் முப்பத்து முக்கோடித் 
தேவரையும் வேலை கொள்ள சிவமூலம் பெற்றிருக்க
ஒன்றும் இல்லாப் பேயனொடு யுத்தமிட்டால் என்றனையும்
நன்று இனிய பெண்கள் நகைப்பார் நீ அப்புறம் போ
என்று அந்த நீசன் இயம்பத் திருமாலும்



உரை
---------
... எனவே என்னைத் தாழ்த்திப் பேசாதே, தலைவிரித்துப் போட்டிருக்கும் பேயனே, மூவர்முதல் முப்பத்து முக்கோடி தேவர்களை எல்லாரையும் வேலை வாங்கச் சக்தியுள்ள சிவ மூலஇரகசியம் எனக்குத் தெரியும். என் நிலை இவ்வாறிருக்க, ஒரு சக்தியும் இல்லாத இந்தப் பேயனோடு போர் புரிந்தால் சாதாரண பெண்கள்கூட என்னைப் பார்த்துச் சிரிப்பார்களே? பைத்தியக்காரனே நீ நகர்ந்து போடா" என்று அந்த நீசன் சீறி விழுந்து பேசினான்.
---------------------
அய்யா உண்டு
---------------------



திருமால் கலியனிடம் சத்தியம் பெறுதல்*****
குன்று கரத்தெடுத்த கோபாலரோடு உரைப்பான்
ஆள்படைகள் இல்லை ஆயுதங்கள் தாமும் இல்லை 
வேழ்ப்படைகள் இல்லை வெட்ட வாளும் இல்லை
தடிஇல்லை சக்கரமும்தான் இல்லை உன்கையிலே
முடிவிரித்துக் கந்தை உடுத்தவனோடு யுத்தம் இட்டால்
ஆண்மை இல்லை என்றனக்கு ஆயிழைமார் ஏசுவரே





உரை
---------
திருமால் உத்தமிட அழைப்பதை கேட்ட மாநீசன் குன்றெடுத்த திருமாலிடம் "ஏய் பண்டாரம், ஆள் படைகளோ, ஆயுதங்களோ, யானைப் படைகளோ, என்னை வெட்டித் தள்ள வாளா, தண்டாயுதமோ, சக்கராயுதமோ உன் கைவசம் இல்லையே?
அப்படி இருக்க, முடியை விரித்துக் கந்தைத் துணி உடுத்திய இந்தப் பிச்சைக்காரனோடு போர் புரிந்தால் எனக்கு வீரம் இல்லை என்று என் மனைவியும் ஏனைய பெண்டிரும் பேசுவார்களே? ...
---------------------
அய்யா உண்டு 




திருமால் கலியனிடம் சத்தியம் பெறுதல்*****
அன்று பரதேசி அவனோடு அங்கு ஏதுரைப்பார்
பிச்சைக்காரன் தனக்குப் பெலம் இல்லை என்றோ நீ 
அச்சம் அது இல்லாமல் அடமாய் இது உரைத்தாய்
பண்டாரந்தன் பெலமும் பழி நீசா உன்பெலமும்
சண்டை இட்டுப் பார்த்தால்தான் தெரியும் மாநீசா
என்று பண்டாரம் ஈதுரைக்க அந்நீசன்

---------


உரை
---------
நீசனின் கீழான பேச்சைக் கேட்ட பரதேசியாகிய திருமால், "டேய், இந்தப் பிச்சைக்காரனுக்குப் பலம் இல்லை என்னும் காரணத்தால் தானே நீ சிறிதும் பயமின்றித் திமிராகப் பேசுகின்றாய். இந்தப் பிச்சைக்காரப் பண்டாரத்தின் பலமும், பழித்தன்மையுடைய நீசா, உன் பலமும் நமக்குள் சண்டையிட்டுப் பார்த்தால்தானே புரியும். எனவே சண்டைக்கு வா" என்று திருமால் யுத்தமிட அழைத்தார்.
---------------------
அய்யா உண்டு
---------------------


திருமால் கலியனிடம் சத்தியம் பெறுதல்*****
அப்போது நீசன் ஆண்டிதனைப் பார்த்து
இப்போது போடா இரப்பனோடு ஏது சண்டை 
மாயன் வரவேணும் வலுபார்த்து விட்டிடுவேன்
பேயனுடன் எனக்குப் பேச்சு என்ன நீ போடா
என்று அந்த நீசன் இவ்வளமை கூறிடவே
---------



உரை
---------
அப்போது, நீசன் ஆண்டியைப் பார்த்து, "போடா, இந்த இரப்பனோடு சண்டை ஏன்? இப்போது மாயன் இங்கு வர வேண்டும். அப்படி அவன் இங்கு வந்தால் அவனது பலத்தை முறியடித்து விடுவேன். அத்தகைய எனக்கு இந்தப் பேய் தோற்றத்தையுடைய உன்னிடம் என்ன பேச்சு வேண்டியிருக்கிறது? நீ போடா" என்று நீசன் தன் கீழான மன நிலைமையைக் கூறினான்.
---------------------
அய்யா உண்டு
---------------------


திருமால் கலியனிடம் சத்தியம் பெறுதல்*****
ஈசரிடத்தில் இறைஞ்சி வரம் பெற்றதிலே
தேச இரப்பனுக்குச் சிறிது ஈ என்றுரைத்தார் 
தாராதே போனால் சாபம் இடுவேன் உனக்கு
பாராய் நீ என்று பகட்டினார் எம்பெருமாள்
---------


உரை
---------
"நீசனே, நீ ஈசரிடத்தில் பெற்ற வரங்கள் ஏராளம் உண்டல்லவா? அவற்றில் சிறிதளவு எனக்குக் கொடு. அப்படி நீ எனக்குத் தராவிட்டால் நான் உன்னைச் சாபமிடுவேன். இதை நீ அறிந்து கொள்வாயாக" என்று ஆண்டியாக வந்த திருமால் உருட்டல் பேசி நடித்தார்.
---------------------
அய்யா உண்டு 


திருமால் கலியனிடம் சத்தியம் பெறுதல்*****
அன்று ஸ்ரீரங்கர் ஆண்டிஉரு தாமாகித்
தலைவிரித்துக் கந்தை சற்றே கலைபூண்டு 
சிலை இல்லா வெறும் கையால் சென்றாரே நீசனிடம்
நீசனிடத்தில் நெடுமால்தாம் முன்ஏகி
வாசமுடன் வார்த்தை வழுத்தினார் அம்மானை


உரை
---------
அச்சமயம், ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருந்த திருமால், ஓர் ஆண்டியைப் போலவும், தலைமுடியை விரித்துப் போட்டுக் கந்தைத் துணி உடுத்த கோலத்தோடும், ஆயுதம் இல்லாத வெறுங்கையோடும், ஈசரிடம் விடை பெறுவதற்காக வந்து கொண்டிருந்த நீசன் முன்னால் சென்றார்.
அவனிடம் திருமால், இனிமையான சில வார்த்தைகளைக் கூறலானார். ...
---------------------
அய்யா உண்டு
----------------

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்:

திருமால் கலியனிடம் சத்தியம் பெறுதல்*****
புத்தி இல்லா நீசன் புகலுவான் பின்னாலே
பண்டாரம் என்றும் பரதேசி ஆனவரை 
தண்டரள கந்தை தலைவிரித்த ஆண்டிகளை
ஆட்டியது செய்யேன் அவரோடே சண்டையிடேன்
ஒட்டியே வம்பு ஒருநாளும் செய்வதில்லை
என்றான்காண் நீசன் எம்பெருமாள்தாம் உரைப்பார்
நன்றாக இப்படியே நட்டி செய்ய மாட்டேன் என்று
ஆணையிட்டுத் தா என்று அருளினார் எம்பெருமாள்
வீண்பட நீசன் விளம்புவான் அப்போது
ஆரார் பேரில் ஆணையிட வேணும் என்று
பேராகச் சொல்லு பிச்சை இரப்போனே என்றான்
---------


உரை
---------
உடனே, புத்தியில்லாத நீசன் "பண்டாரங்களையும், பரதேசிகளையும், இனிமையான உத்திராட்ச முத்துக்களை அணிந்து கந்தை உடுத்தித் தலைவிரி கோலமாக இருக்கும் ஆண்டிகளை எச்சமயத்திலும் எந்தத் துன்பமும் செய்ய மாட்டேன். அவர்களோடு போர் புரியவும் மாட்டேன். அவர்களிடம் வலியச் சென்று எந்த வம்புகளும் எந்தக் காலத்திலும் செய்யமாட்டேன்" என்றான்.
இதைக் கேட்ட மாயன் "இந்த வகையிலே எந்தவித நஷ்டமும் அழிமதியும் அவர்களுக்குச் செய்யமாட்டேன், என்று கூறி ஆணை இட்டுத் தா" என்று கூறினார். நீசன் தான் வீணாக அழிந்து போகும் வகையில், "சரி, நான் யார் யார் பெயரில் ஆணையிட வேண்டும் என்று பெயரைச் சொல், பிச்சைக்காரப் பேயனே", என்று கேட்டான்.
---------------------
அய்யா உண்டு
---------------------



திருமால் கலியனிடம் சத்தியம் பெறுதல்*****
நன்றுநன்று நீசா நான் உரைக்க நீ கேளு
பண்டாரத்தோடே படை எடுத்தால் ஆண்மை இல்லை 
என்றேதான் இப்போது இயம்பினையே மாநீசா
பண்டாரம் என்றும் பயித்தியக்காரன் என்றும்
ஒண்டியாய் வந்தவனோடு யுத்தமிட மாட்டேன் என்றும்
பிச்சைக்காரன் என்றும் பெரிய இரப்பன் என்றும்
கச்சை இல்லான் என்றும் கணை கம்பு இல்லாதான் என்றும்
இப்படியே பண்டாரம் என்று இருக்கும் பேர்களுக்கு
எப்படியும் வம்பு செய்வதில்லை என்று உண்மையுடன்
சத்தியமாகத்தான் உரை நீ பார்ப்போம் என்றார்
---------


உரை
---------
நீசனின் பேச்சைக் கேட்ட திருமால், "நல்லது, மிகவும் நல்லது. இனி நான் உரைப்பதைக் கவனமாக கேள். 'பண்டாரத்தோடு போர்புரிந்தால் அது வீரமில்லை' என்று இப்போது கூறினாயே? மாநீசனே. 'இனி பண்டாரமாகவும் பயித்தியக்காரன் போலவும் ஆயுதமின்றித் தனியாக வந்தவரிடம் போர் புரிய மாட்டேன்' என்றும், 'பிச்சைக்காரனாகவும், பெரிய இரப்பனாகவும், போர் கச்சை இல்லாதவனாகவும், அம்பு, கம்பு போன்ற ஆயுதங்கள் இல்லாதவனாகவும் இருக்கும் பண்டாரங்களிடம் போர் புரியமாட்டேன்' என்றும், உண்மையுடனும், சத்தியமாகவும் கூறி உறுதி செய் பார்ப்போம்" என்றார்.
---------------------
அய்யா உண்டு 

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

அப்போது நீசன் ஆண்டி உரைத்தபடி 
எப்போதும் மறவேன் இதைமறந்து வம்புசெய்தால் 
சொன்னபடி எல்லாம் தோற்று இறந்து என்உயிரும் 
வன்னரகில் போவேன் என்று ஆணை இட்டான் மாநீசன்



உரை
---------
இதைக் கேட்ட நீசன், ஆண்டி கூறியபடி கூறி "இவற்றை எப்பொழுதும் மறக்க மாட்டேன். அதற்குமாறாக ஞாபகமின்றிப் பண்டாரம் முதலியோரைத் துன்புறுத்தினால், நீ சொன்னபடி எல்லாவற்றையும் இழந்து என் உயிரும் வன்மையான நரகம் செல்லட்டும்" என்று கூறி வரங்கள் பேரிலும், தன் மனைவி பேரிலும் திருமாலுக்கு ஆணையிட்டுக் கொடுத்தான்.
---------------------
அய்யா உண்டு 



அப்போது பண்டாரம் அகம் மகிழ்ந்து கொண்டாடி
இப்போது நீதான் ஈசர்தமை வணங்கி
வேண்டியே போற வெகுவரங்கள் பேரதிலும் 
பெண்டு அவள் பேரதிலும் பெலமாக இப்போது
ஆண்டி பரதேசி ஆகி வந்த பேர்களையும்
வீணடி இடறு செய்யேன் எனவே நீ ஆணையிட்டு
ஆணைக்கு இடறு செய்து ஆண்டிகளைச் சில்லம் இட்டால்
வீணேபோம் என்வரங்கள் வீட்டுப் பெண்ணார்முதல்
பெண் தோற்று நானும் பெற்றவரங்கள் தோற்று
மண் தோற்று வாழ்வும் மக்கள்கிளை தோற்று
சேனைத்தளம் தோற்று சீமைஅரசும் தோற்று
ஆனை பரி தோற்று அரசுமேடை தோற்று
என்உயிரும் தோற்று என்கிளையோடே நானும்
வன்னரகில் போவோம் என்றே வாக்கு உரைத்திடு நீ




உரை
---------
அப்பொழுது மாயன் மனம் மகிழ்வுடனும், புன்சிரிப்புடனும், "நீசனே, ஆண்டிகளாகவும், பரதேசிகளாகவும் வந்தவர்களை வீணாகத் துன்புறுத்தமாட்டேன் என்றும்; அதற்குமாறாக அவர்களை நான் துன்புறுத்தினால் என்னுடைய வரங்களெல்லாம் வீணாகப் போகட்டும் என்றும்; என் மனைவி பெண் ஏவலாளர்கள்முதல் நாட்டுப் பெண்கள்வரை என்னிடமிருந்து பிரிந்து போகட்டும் என்றும்; என் சொத்துக்கள், மக்கள், சந்ததிகள், சேனைகள், இத்தேச அரசாட்சி, யானைகள், குதிரைகள் என் இனிய உயிர் ஆகியவை என்னைவிட்டு அழிந்து போகட்டும் என்றும்; நானும் என் சந்ததியரும் கொடுமையான நரகில் சென்றடைவோம் என்றும்; நீ இப்போது ஈசரை வணங்கிப் பெற்றுக் கொண்டு போகிற அதிகமான வரங்கள் பேரிலும், உன் மனைவி பேரிலும் ஆணையிட்டுக் கூறிடு" என்று கூறினார்.
---------------------
அய்யா உண்டு
---------------------

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்:

திருமால் சக்கராயுதத்தைப் பணமாக்கிக் கொடுத்தல்*****
நல்லதுதான் என்று நாட்ட முற்றுச் சன்னாசி 
வல்ல பெலமுள்ள மாநீசா நீ கேளு 
மந்திரங்களாலே மகாகோடி ஆயுதங்கள்
தந்திரங்களாலே தான்வருத்தல் ஆகிடுமே
அப்படியே ஒத்த அச்சரங்கள்தாம் இருக்க
இப்படியே ஆயுதத்தை எடுத்துச் சுமப்பதென்ன
நீ கேட்ட சக்கரத்தை நிமலன் அவர் தராமல்
தொனி கெட்ட வெற்று இரும்பைச் சும என்று தந்தார்காண்
இரும்பைச் சுமந்தால் இல்லைகாண் ஒன்றும் பயன்
தரும் பொருள்போல் உள்ள சம்பாத்தியம் தாறேன்
மண்டலங்கள் தேசவாழ்வு உண்டாவதற்கும்
கண்டார்கள் மெய்க்கக் கனக திரவியம் போல்
தருகிறேன் உன்றனுக்குத்தான் வேண்டு நீ எனவே
பருமுறுக்காய் ஆண்டி பகர்ந்தாரே நீசனுக்கு




உரை
---------
இதைக் கேட்ட திருமால் மிகவும் நிறைவு அடைந்து, "மிகுந்த சக்திகளைப் பெற்ற நீசனே, நான் இன்னும் ஒன்று கூறுகிறேன். கவனமாகக் கேள். நீ பெற்ற மந்திர தந்திரங்களாலே பலகோடி ஆயுதங்கள் வருத்திக் கொள்ளலாமே. அதற்குரிய மந்திர அச்சரங்கள் நீ தெரிந்து கொண்டிருக்க, இப்படிப்பட்ட தேவையற்ற ஆயுதங்களை சுமந்து கொண்டிருப்பதன் காரணம் என்ன?
நீ கேட்ட சக்கராயுதத்தை ஈசர் தராமல் கணீர் என்னும் தொனி இல்லாது துரு ஏறிய வெறும் இரும்பைச் சுமந்து செல்லென்று தந்து விட்டாரே? இந்த இரும்பைச் சுமந்தால் ஏதாவது பயன் உண்டோ? இல்லை அல்லவா? எனவே, இரும்பு சக்கராயுதத்தை, இந்த உலக மக்கள் வியக்கும்வண்ணம் தேசமெல்லாம் வாழ்வு உண்டாவதற்குரிய பெருமதிப்புள்ள திரவியத்தைப் போன்று சேமித்து வைக்கும் பொருளான பணமாக மாற்றித் தருகிறேன்" என்று கூறினார்.
---------------------
அய்யா உண்டு
---------------------

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

அப்போது நீசன் அகம் மகிழ்ந்து கொண்டாடி 
இப்படியே தாரும் என்று ஈந்தானே சக்கரத்தை 
சக்கரத்தை வேண்டி சங்கு சரத்தாமன் 
மிக்க பணமாக்கி மிகுத்த சக்கராயுதத்தைச்
சபிக்கவே மாயன் சக்கராயுதம் கேட்கும்
நீசனிடத்தில் என்னைப் பணம் ஆக்கி
ஈயுறீரே சுவாமி இப்போது சாபம் இட்டு
இப்போது இடும் சாபம்எப்போது தீரும் என்று
அப்போது சக்கரமும் ஆண்டி அடி போற்றிடவே
கலி மாறும் போது கடரும் என்றார் உன்சாபம்



உரை
---------
திருமாலின் வார்த்தைகளைக் கேட்ட நீசன் மிகவும் மகிழ்ச்சி கொண்டு "நீர் சொன்னபடியே ஆக்கித் தாரும்" என்று கூறித் திருமாலிடம் சக்கராயுதத்தைக் கொடுத்தான். சக்கராயுதத்தைப் பெற்றுக் கொண்ட திருமால் அதைப் பணமாகச் சபித்தார். சாபத்தை ஏற்றுக் கொண்ட சக்கராயுதம் திருமாலை நோக்கி, "சுவாமி என்னைச் சாபமிட்டு நீசனிடத்தில் பணமாக்கிக் கொடுக்கின்றீரே. இப்போது இடுகின்ற சாபம் எப்போது தீரும்" என்று கூறி அவரின் பாதங்களை வணங்கித் துதித்தது. திருமால், "கலி மாறும்போது உன் சாபமானது மாறும்" என்று பதிலுரைத்தார்.
---------------------
அய்யா உண்டு 

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

திருமால் சக்கராயுதத்தைப் பணமாக்கிக் கொடுத்தல்*****
வலியான சக்கரமும் வாய்த்த பணம் ஆகியதே 
பணமாகிக் கீழே குதித்திடவே 
இணமான நீசன் எட்டியே தான் பிடித்துக்
கண்ணில் மிகஒற்றிக் காரிகையாளோடு உரைப்பான்
பெண்அணங்கே நமக்குப் பெலங்கள் வந்து வாய்த்ததடி



உரை
---------
... ... வலியுடைய சக்கரமும் பணமாக மாறிக் குதித்து விழுந்தது. இதைப் பார்த்த தீய குணத்தையுடைய நீசன் அப்பணத்தை எட்டிப் பிடித்துத் தனது கண்களில் ஒற்றி விட்டு, தனது மனைவியின் கையில் கொடுத்து, "பெண்ணே, நமக்கு எல்லாப் பலங்களும் தாமே வந்து வாய்ந்தன பார்த்தாயா?" என்று மகிழ்வுடன் கூறி, ஈசரிடம் விடை பெறச் செல்லலானான்.
---------------------
அய்யா உண்டு