புதன், 25 ஏப்ரல், 2018

ஐயா வைகுண்ட சாமிகள்

திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சிக்கு உட்பட்ட கன்னியாகுமரி அருகே சுவாமிதோப்பு எனும் பூவண்டன் தோப்பு ஊரில் 2.3.1809 அன்று பிறந்தவர் ஐயா வைகுண்ட சுவாமிகள். முடிசூடும் பெருமாள் என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தாலும் உயர் சாதியினரால் பெருமாள் எனும் பெயருக்கு எதிர்ப்பு புஇருந்ததால் முத்துக்குட்டி என்ற பெயரில் வளர்ந்தார். 24 வயதிலேயே சருமநோயால் மிகமிகப் பாதிக்கப்பட்ட அவரைத் திருச்செந்தூருக்கு 24 வயதில் தொட்டில் கட்டி அமர்த்திக் கால்நடையாகச் சுமந்து சென்றபோது, அவரே எழுந்து கடலுக்குள் ஓடி மறைந்தார். காணாமல் திகைத்துப் பெற்றோரும் உற்றாரும் ஊர் திரும்பிவிட்டனர்.ஆயினும் மூன்று நாள் கழித்து, கடலில் இருந்து வெளிப்பட்டு, இறைஞானம் பெற்றவராக ஒளிப்பிழம்பாகத் தரிசனம் தந்தார்.






அவர் சென்ற இடமெல்லாம் அதிசயங்கள் நிகழ்ந்தன. நோயுற்றவர்களுக்கு மண், நீர் கொடுத்துக் குணப்படுத்தி அருளாசி வழங்கினார்.கல்வி, பொருளாதாரத்தில் தடைகள் விதித்து, அடிமையாக்கப்பட்டுப் பலவித கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த எளிய மக்களுக்காகப் போராடினார்.கோவில் கருவறையில் இருள் நீக்கி, ஒளிபெறச் செய்து, ஒளிவெளி வழிபாட்டினைக் கிராமங்களில் நிகழ்த்தி, இறைவழிபாட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.மிகப்பழங்காலத்தில் இருந்த ஒளிவெளிமய வழிபாடே, சைவநெறியாகத் திரிபு பெற்று லிங்க வழிபாடாகவும் உருவம் பெற்றிருக்கின்றது.அடிமைப்படுத்தப்பட்ட மக்களை வீறு கொண்டு எழச்செய்து சமூக அநீதிகளுக்காகப் போராடிய ஐயா வைகுண்ட சுவாமிகளைத் துன்புறுத்திடவும் கொண்றிடவும் திருவாங்கூர் மன்னர் மூலம் அரசுப் படைகளைக் கொண்டு பல சதிச் செயல்கள் செய்யப்பட்டன.பலவகையிலும் அவற்றிலிருந்து மீண்டுவிட்டபோதும், 1851ஆம் ஆண்டு வைகாசி 21 ஆம் நாள் வைகுண்டபதம் அடைந்தார்.