வியாழன், 3 செப்டம்பர், 2020

திருமொழி சீதையாட்க்கு ஜெகதலம் புகழ எங்கும், ஒரு பிள்ளையுருவாய்த் தோன்றி யுகபர சோதனை பார்த்து திருமுடி சூடிதர்ம சீமையில் செங்கோல் ஏந்தி ஒருமொழி அதற்குள் ஆண்ட உவமையை உரைக்கலுற்றார்” – அகிலத்திரட்டு

 வைகுண்டராக அவதரித்த நாராயணர் திருச்செந்தூரில் கடலில் இருந்து கடற்கரைக்கு வந்து தருவைக்கரையில் பண்டாரமாக மனுச் சொருபம் எடுத்தார். நாராயண பண்டாரமாக மானிடர்களுக்கு காட்சி அளித்த மாயன் கந்தைக்காவி உடையும், கையதிலே மாத்திரைக் கோலும், கமுக்கூட்டிலே பிரம்பும், நெற்றியில் வெள்ளை நாமமும், உச்சியிலே கொண்டையிட்டு உத்திராட்ச மாலை சுத்தி, தலையில் தலைப்பாகையும் அணிந்து வைகுண்டர் என்ற பெயரோடு சுவாமி தோப்பை நோக்கி வந்தார். பின்பு ஆறு ஆண்டுகள் மக்களின் மேன்மைக்காகவும், கலியன்தனை அழிப்பதற்காகவும் சிவனை நோக்கி தவம் இருந்தார். அங்கே ஒரு பண்டாரம் போல் இருந்து கொண்டு பதினெட்டு சாதி மக்களையும் ஒருதலத்தில் வருத்தி, தர்மமாய்த் தாரணி யாபேர்க்கும் சஞ்சல நோய்பிணி தண்ணீரால் தீர்த்தார். சந்ததியில்லாத பேர்க்கு சந்ததி கொடுத்தார். தனமில்லாத பேர்க்குத் தனங்கொடுத்தார். தீண்டாமை என்னும் இனவெறியால் பாதிக்கப்பட்டோருக்கும், அவர் அவர் தம் குறை அறிந்து அவர்களுக்கு வேண்டியவற்றை அருள் பாலித்தார். ஆண்டவர் வைகுண்டரின் அருளினால் குருடர்கள் பார்வை பெற்றனர், ஊமைகள் பேசினர், செவிடுகள் கேட்கப் பெற்றனர், முடவர்கள் நடந்தனர், பிள்ளை வரம் வேண்டி வந்தவர்கள் பிள்ளைபேறு பெற்றனர். இப்படி எண்ணடங்கா அற்புதங்களை செய்த மண்ணளந்த மாயன் வைகுண்டருக்கு ஐந்து சீடர்கள் இருந்தனர். இவர்கள் முந்தைய துவாபரயுகத்தில் பஞ்சபாண்டவர்கள் என்றழைக்கப்பட்ட பஞ்சவர்கள். இக்கலியுகத்தில் ஐந்துபேரும் சீடர்களாய் பிறப்பெடுத்தனர். இவர்களில் ஐந்தாவது சீடரான அரிகோபாலனால் எழுதப்பட்டதே அகிலத்திரட்டு எனும் புனித ஆகமம் ஆகும். 

உலகளந்த ஆண்டவராகிய வைகுண்டரின் அருள் பிரதாபங்கள் அவனி எங்கும் பரவிற்று. சாதி, சமய பேதங்களை கடந்து சாரைசாரையாக மக்கள் சுவாமிதோப்பை நோக்கி வந்தனர். வந்த மக்களுக்கு “மானிடரே! தர்மம் வைகுண்டம், தான் பிறந்தேன் இப்போது” என்று சொல்லி தர்மம் நினைத்து உலகம் பதினாலும் அறிய தர்மம் போதித்தார்.  “இன்றுமுதல் எல்லோரும் ‘இகபரா தஞ்சமென்று’ ஒன்றுபோல் எல்லோரும் ஒருபுத்தியாய் இருங்கோ, காணிக்கை இடாதுங்கோ, ஆணுடன் பெண்ணும் கூடி ஆசாரம் செய்திடுங்கோ, மாணிக்க வைகுண்டம் வல்லாத்தான் கண்டிருங்கோ, வைகுண்டருக்கே பதறி வாழுவது அல்லாமல், பொய் கொண்ட மற்றோர்க்குப் புத்தி அயர்ந்து அஞ்சாதுங்கோ!”  என்ற உபதேசங்களை கூறி மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார். மக்களறிய தர்மமிதை கூறிய எம்பெருமாள், துரிதமுடனே தொல்புவியில் வாழுகின்ற பட்சிபறவைகளுக்கும், பலசீவ செந்துகட்கும் தர்மம் போதித்தார். ஒடுக்கப்பட்ட ஆடவர்கள் முழங்காலுக்கு கீழ் வேட்டி கட்டக் கூடாது, அங்க வஸ்திரம், தலைப்பாகை அணியக் கூடாது என்று அரசாங்க சட்டம் இருந்த அந்த கால கட்டத்தில் தலைப்பாகை அணிந்து தான் என்னை வழிபட வேண்டும் என்றும், பெண்கள் தோள் சீலை அச்சம் இன்றி அணிய வேண்டும் என்றும், மனோத்ததுவ ரீதயாக புத்தி போதித்து தம் மக்களை தலை நிமிர்ந்து நிற்க செய்தார். தீண்டாமை என்னும் தீயசக்தியை ஒழிக்க திருமண்ணை எடுத்து தம் பக்தர்களின் நெற்றியில் தொட்டு நாமம் சாற்றினார். உங்களுக்கு தெரிந்த மொழியில் என்னை போற்றி நீங்களே பணிவிடை செய்யுங்கள் என்று காலை, மாலை இருவேளையும் உகப்படிப்பையும், மதியம் உச்சிப்படிப்பையும் தம் மக்களுக்கு அறிமுகப்படுத்தி வழிபடச் செய்தார். எளியோர், வலியோர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் சமமாக அமர்த்தி அன்னம் கொடுத்து “சமபந்தி போஜனம்” நடத்தினார். சாதிக்கொரு கிணறு என்றிருந்த காலத்தில், எல்லோரும் ஒரே கிணற்று நீரை குளிக்கவும், குடிக்கவும் செய்தார். சமத்துவ கூட்டு வழிபாட்டு முறையை உருவாக்கி கொடுத்து “தர்மம் பெரிது தாங்கி இருங்கோ மக்காள், தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்” என்று தர்ம நெறிகளை போதித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக