ஞாயிறு, 23 நவம்பர், 2014

அய்யா துணை.

அகிலம்:

பாக்கியங் கொடுப்போம் நாமும் பலனுடன் வாழு வோர்க்கு
நோக்கிய கருணை யுண்டாம் நோயில்லா திருந்து வாழ்வார்
தாக்கிய வாச கத்தின் தன்மையை நம்பு வோர்க்கு
வாக்கிய வைகுண்ட வீடு வந்தவர் வாழ்வார் தாமே

விளக்கம்:

வைகுண்டராகிய எம்மை எப்போதும் ஒரே திடமான நினைவு கொண்டு வாழுவோருக்கு நாம் எல்லா விதப் பாக்கியங்களும் கொடுப்போம். அவர்கள் எமது கருணை நோக்கைப் பெற்று எவ்விதத் துன்பமுமின்றி மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருவர். இங்கே எம்மால் தாக்கல் செய்யப்பட்டுள்ள திருவாசகத்தின் தன்மையைப் புரிந்து எவ்விதச் சந்தேகமுமின்றித் தெளிவுடன் நம்புவோருக்கு எல்லா வசதிகளும் செய்யப்பட்ட வைகுண்டவீடு காத்திருக்கின்றது. அவ்வைகுண்ட வீட்டில் அத்தகையோர் தாம் வந்து வாழ்வர்.

அகிலம்:

தினமொரு நேர மெந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம்
கனிமொழி சோதி வாக்கும் கையெழுத் தாதி நோக்கும்
துணிவுடன் கேட்டோ ருற்றோர் தொலைத்தனர் பிறவி தானே

விளக்கம்:

தினமும் ஒவ்வொரு நேரம் எமது திருவாசகத்ததை மனம் ஒருங்கு கூடிக் கேட்டால், சூரியன்க் கண்ட பனித்துளி மறைவது போல, இதுவதை செய்த பாவம் அவ்வளவும் மறைந்துவிடும். இதை உண்மையாகக் கூறுகிறோம். இனிமை பொருந்திய சரசுவதியின் திருவாசகத்தையும், ஆதி நாராயணரின் கையெழுத்தின் நோக்கத்தையும் மனத்துணிவுடனும் தெளிவுடனும் கேட்டோரும், படித்தோரும் பிறவி நோயைத் தொலைத்து வாழ்வர்.

அகிலம்:

வாசித்தோர் கேட்டோ ருற்றோர் மனதினி லுணர்ந்து கற்றோர்
ஆசித்தன் பதமே கண்டு அவ்வழி முறையே நின்றோர்
கோசித்தன் பதமே கண்டு கோமலைப் புவியின் வாழ்வும்
தேசத்தின் செல்வத் தோடும் சிறப்புட னிருந்து வாழ்வார்

விளக்கம்:

இத்திருவாசகத்தை வாசித்தவர்களும், மன ஒருமைப்பாட்டோடு கேட்டவர்களும், அதை உள்ளத்தில் உணர்ந்து கற்றவர்களும், சிவஞான சித்தனாகிய நாராயணரின் திருவாசகப் பதத்தினை உணர்ந்து அவ்வாழி முறைகளில் நின்றவர்களும், சித்தர்களுக்கு எல்லாம் தலைவனாகிய ஈசுரரின் பதத்தை உணர்ந்து, தேவலோக வாழ்வையும், இப்பூவுலகின் எல்லாவிதச் செல்வங்களையும் பெற்றுச் சிறப்புடன் இருந்து வாழ்வர்.

அகிலம்:

திருமொழி வாசகந் தன்னைத் தேசத்தில் வருமுன் னாக
வருவது திடனா மென்று வழுத்தினோம் தொளாயிருத்து 98ல்
ஒருதிருக் கூட்ட மாக ஓராயிரத் தெட்டா மாண்டில்
வருகென வந்து நாங்கள் அம்மானையில் வருத்தி னோமே

விளக்கம்:

இத்திருவாசகத்தின் திருமொழிகளைப் பூலோகம் வரும் முன்னரே நாங்கள் பூவுலகு வருவது நிச்சயம் என்று உறுதியாகச் சொல்லி தொள்ளாயிரத்து தொண்ணூற்று எட்டாம் ஆண்டில் எழுதினோம். ஆயரத்து எட்டாம் ஆண்டில் ஒரு திருக்கூட்டத்தோடு நாங்கள் பூவுலகு வருவோம் என்று சொன்னபடி பூவுலகு வந்து நாங்கள் அகிலத்திரட்டு அம்மானையில் எல்லா யுகங்களின் உண்மைகளையும் வெளிப்படுத்தி எழுதுவோம்.

அகிலம்:

வருத்தினோ மம்மானை தன்னில் மானமாய்ப் புதிய தாக்கிக்
கருத்தினுள் ளகமே கொண்டு கவனித்தோ ரவர்க்கே தக்கும்
உருத்தில்லாக் கேட்போ ரெல்லாம் ஓருரை வெளியே காணார்
சிரித்துரைக் கேட்போ ரெல்லாம் சிவபொருள் வெளியே காண்பார்

விளக்கம்:

அகிலத்திரட்டு அம்மானை என்னும் இந்த நூழர நல்ல மானமுள்ள நீதியோடு, இதற்கு முன் தோன்றிய நூல்களைக் காட்டிலும் முற்றிலும் புதிய வகையாக இயற்றியுள்ளோம். மிகவும் ஆழமாக ஒருங்குகூடிய சிந்தனையோடு தெளிவாக இந்த நூலின் உண்மைகளைக் கவனித்தவரகளுக்கே உண்மை நிலை புரியும். எந்த விதத்தடைகளும் இல்லாமல் இந்த நூலின் கருத்துக்களைத் தெளிவாகக் கேட்பரானால் சிவப்பொருளையும், அதன் விளக்கங்களையும் தம் உள்ளத்தின்கண் காண்பார்.ஆனால் இதன் கருத்துக்களைக் கவனம் இல்லாமலும் வெளி உலகக் களிப்புடனும் யாராவது கேட்டால் அத்தகையோர் எல்லாவற்றிற்கும் முக்கியமான மெய்ப்பொருளாகிய சிவப்பொருளைத் தம் உள்ளத்தின்கண் காணாது வெளி உலகத்தில் கதை ரூபத்தில் இருப்பதாக எண்ணி ஏமாறுவர்.

அய்யா துணை.

அகிலம்:

உலகில் மனுக்கள் தமிழாலே உவமை யுரைத்து விட்டாப்போல்
கலக முடனே யென்மொழியைக் கண்டு பழித்து நகைத்தோரை
அலகைத் துளைத்து நரகதிலே ஆணி யறைந்து அவனிதனில்
குலையக் குலைத்துத் தீநரகில் கொண்டே போடச் சொல்வேனே

விளக்கம்:

இவ்வுலகில் மானிடர்கள் தம்மைக் காத்த தமிழ் மொழி மூலமே அத்தமிழை உவமை கூறித் தாக்குவது போல, கலகம் உருவாக்கும் கெட்ட எண்ணத்தோடு இத்திருவாசக மொழியைக் கற்றுத் தேர்ந்துவிட்டு, தான் மேன்மை அடையக் காரணமாக இருந்த எம்மையும், எம் திருவாசகத்தையும் பழித்துக் கூறி, ஏளனமாக நகைத்தவர்களை, பேயை அனுப்பி, அதன் வலிமையான ஆயுதம் கொண்டு குத்தித் துளைத்து, பூவுலகில் மிகுந்த துன்பம் வரும்படி துன்புறுத்தி, நரகத்தில் கொண்டு சென்று ஆணியால் அறைந்து. தீமையைக் கொடுத்துக் கொண்டிருக்கும் நரகக் குழியின் உள்ளே கொண்டு போடச் சொல்லுவேன்.

அகிலம்:

எந்தன் மொழியு மென்னெழுத்தும் ஏடாய்ச் சேர்த்து இவ்வுலகில்
சிந்தை மகிழ்ந்த அன்பருக்குத் தெரியத் திறமா யெழுதி வைத்தேன்
எந்தன் பெருமான் திருமொழியை எடுத்தே வாசித் துரைத்தோரும்
சந்த முடனே வாழ்ந்துமிகத் தர்ம பதியுங் காண்பாரே

விளக்கம்:

இவ்வுலகில் உள்ளம் மகிழ்ந்த நிலையில் இருக்கும் அன்பர்களுக்குத் தெரியும்படியாக, நான் உரைத்த இத்திருவாசகத்தின் திருஎழுத்துக்கள் நாராயணர் மூலம் திறமையாக எழுதப்பட்டு, ஏடாய்ச் சேர்த்து வைத்துள்ளேன். இதை எடுத்து வாசிக்கின்ற அன்பர்களும், விளக்க உரை கூறுகின்ற அன்பர்களும், இவ்வுலகில் நிலையான புகழோடு வாழ்ந்து, தம்முள் நிலைத்திருக்கும் தருமபதியைக் காண்பர்.

அகிலம்:

காண்பார் தர்மக் கண்காட்சை கண்டே மரண மில்லாமல்
காண்பா ரென்றுங் களிகூர்ந்து கண்ணோன் பதத்தைக் கண்ணாடி
காண்பார் நீதக் கண்ணாலே கருணா கரராய்க் கவ்வையற்றுக்
காண்பா ரென்றுங் கயிலாசம் கண்டே நன்றாய் வாழ்வாரே

விளக்கம்:

இவ்வாறு தருமபதியாகிய உயர்ந்த கண் காட்சியைக் காண்பவர் மரணம் இல்லாத பெருவாழ்வை நிலையாக அடைவர். அவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுற்று முக்கண்ணனாகிய சிவனின் உயர்வான நிலையைத் தம் புருவ மத்தில் நிலை நிறுத்தி அதன் மூலமாகத் தம் உள்ளத்தில் எவ்விதக் கலக்கமும் இல்லாமல். கருணை வடிவாகி என்றும் கயிலாசத்தைக் கண்டு, நல்ல முறையில் மரணம் இல்லாத பெருவாழ்வு வாழ்ந்து வருவர்.

அகிலம்:

இந்த மொழியைத் தூஷணித்த இடும்பர் படும்பா டதுகேளு
கந்த உலகுக் கலிபிடித்துக் கண்ணு முருகிக் காலுழன்று
குந்தக் குடலும் புறம்பூற கொப்புள் சிலந்தி யுண்டாகி
எந்த இடமும் அலைந்தழிவார் என்னாணை இது தப்பாதே

விளக்கம்:

இத்திருவாசகத்தைத் தவறாகப் புறக்கணித்த இடும்பர்கள் படும் பாட்டினைக் கூறப் போகின்றேன். கேட்பீராக. இதைப் புறக்கணித்தவர்கள் கெட்ட வாசனையுள்ள உலகில் வாழும் கலி பிடித்து, அதனால் அவர்கள் கண்கள் ஒளி இழந்து, குழி விழுந்து, உருகிக் கால்கள் உழன்று, தள்ளாடி, கொப்பூள் சிலந்தி நோய் என்னும் பெருநோய் உண்டாகி, அதனால் விஷமாகிய குடல் வெளியே பீறிக் கொண்டு வர, எல்லா இடங்களிலும் அலைந்து திருந்து அழிவர். இது நிச்சயம். என்மேல் ஆணை. இது தப்பவே தப்பாது.

அகிலம்:

தப்பா தெனவே சாபமிட்டேன் சத்திபேரி லுண்மை யதாய்
எப்பா ரெல்லா மறிந்திடவே இந்த மொழியை எழுதிவைத்தேன்
ஒப்பா ரொருவ ரெழுதார்கள் உலகில் மனுக்கள் தன்னாலே
அப்பா நாத னெழுதிவைத்த அகிலத் திரட்டம் மானையிதே

விளக்கம்:

என் ஆணை மொழிக்ள தப்பாது எனச் சாபம் இட்டோம். சக்தி பேரில் சத்தியமாக எல்லா உலகங்களும் அறிந்திடவே இத்திருவாசகத்தை எழுதி வைத்தோம். இவ்வுலகில் வாழும் மனிதர்களில் ஒப்புவமை இல்லாதவர்களால்கூட இத்திருவாசகத்தை எழுத முடியாது. தந்தை வைகுண்ட நாதர் எழுதி வைத்த அகிலத்திரட்டு அம்மானை நூலில் உள்ள இத்திருவாசகம் இத்தகைய சிறப்புடையது ஆகும்.

அகிலம்:

என்றே யிந்தத் திருவாசகம் இயம்பச் சரசு பதிமாது
கன்றே மேய்த்தோ னெழுதிமிகக் கலியுக மதிலே விட்டிடவே
நன்றோர் மறையோ னிடமேகி நாட்டி லறியச் செய்யெனவே
அன்றே அவனி தானறிய அனுப்பி மகிழ்ந்து இருந்தனரே

விளக்கம்:

இத்திருவாசகத்தைத் சரசுவதிதேவி திருவாய் மலர்ந்து அருள, கன்று மேய்த்தோனாகிய நாராயணர் எழுதினார். இத்திருவாசகத்தைக் கலியுகத்தில் மக்களிடம் பரப்பிட நினைத்து, ஒரு நல்ல மறையோனிடம் சென்று, இத்திருவாசகத்தைப் பூலோக மக்கள் அறியும்படி செய் என்று கூறி அவனை பூவுலகுக்கு அனுப்பிவிட்டு எல்லாரும் மிகவும் மகிழ்ச்சிகரமாக வைகுண்டத்தில் அமர்ந்திருந்தனர்.

அகிலம்:

திருமால் பூலோகப் பிறவியெடுக்க ஈசருடன் ஆலோசித்தல்
நாடறிய எம்பெருமாள் நல்லதிரு வாசமிட்டு
லாட மதிலிருந்து வாவுவா ரீசரொடு

விளக்கம்:

திருமால் பூலோகம் அனுப்பிய திருவாசகத்தை நாட்டு மக்கள் நன்றாக அறியும்படியாகச் செய்துவிட்டுத் திருமால் தமது ஆக்ஞா பகுதியில் நிலை நின்று ஈசரோடு பேசலானார்.

அகிலம்:

வாரமில்லை நமக்கு வஞ்சகங்க ளில்லாமல்
சார முடனே தரணிதனி லோதிவைத்தோம்
அகப்பே ரெனவே அவனிசொல்வ தில்லையினி
உகப்பாரந் தீர்க்க உரைப்பீர்கா ணீசுரரே
லட்சுமியை முன்னம் இருத்தினோஞ்செந் தூர்க்கடலில்
பச்சணியுங் காளிதனைப் பாரச் சிறையில்வைத்தோம்
என்மகவாய்ப் பெறவே இராச்சியத்தி லோர்சடலம்
தன்மகவா யங்கே தான்பிறந்து நல்லவயசு
இருபத்து நாலு என்றாச்சே மாநிலத்தில்

விளக்கம்:

ஈசரே, எந்த விதமான பேதமும் இல்லாமலும், வஞ்சகத் தன்மை இல்லாமலும், சகலவிதச் சக்தியுடன் பூவுலகம் அறியும்படியாகத் திருவாசகத்தை மொழிந்து எழுதி அனுப்பி வைத்தோம். நம்மேல் எந்தவித ஆணவ அவப்பேரும் உலகில் யாராலும் இனிமேல் கூற முடியாது. எனவே, இனி இந்த யுகத்தின் பாரத்தினைத் தீர்பதற்கு அனுமதி தர வேண்டும். நாம் ஏற்கெனவே இலட்சுமியைத் திருச்செந்தூர் கடலில் போய் வளர்நது வர அனுப்பி வைத்தோம். கிடைத்தவற்றை உண்ணும் காளியைக் கடுமையான சிறையில் அடைத்தோம். என்னுடைய குழந்தையாய் மாற்றுப் பிறப்புப் பிறக்க வேண்டி, பூவுலகில் பொன்கூட்டுச் சடலத்தோடு பிறந்து அக்குழந்தைக்கு இருபத்து நான்கு வயது ஆகிவிட்டது.

அகிலம்:

கருவுற்ற முத்தோசம் கழிவதும் நாளின்றாச்சே
விட்டதிரு வாசகந்தான் மேதினியோர் கொள்ளாமல்
கட்டங் கொடிதாய்க் காணுதே தொல்புவியில்
புத்திவரு மென்றிருந்தோம் பிழையாத நீசனுக்கு
சற்று மனதில் தங்குமோ நல்வசனம்
பார்த்திருந்தால் போராது பார்மீதில் மக்களுந்தான்
காத்திருந்து வாடுகிறார் கௌவையுற்று நல்மனுக்கள்
மனுவிடுக்கந் தீர்த்து வாய்த்தசொல் லொன்றதுக்குள்
தோணியேவை குண்டர் சுத்தயுக மாளுதற்கு

விளக்கம்:

மேலும், அக்குழந்தை கருவுற்று முன்வினைத் தோசங்கள் கழிந்து ஒழிகின்ற தினம் இன்றைய தினம் ஆகும். நாம் அனுப்பிய திருவாசகத்தைப் பூலோக மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் அவர்களின் துன்பங்கள் மிகவும் கொடியதாகப் பூவுலகில் காட்சி அளிக்கின்றன. அவர்களுக்கு நல்ல புத்தி உருவாகும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எவ்வகையிலும் தப்பிப் பிழைக்க முடியாத நீசனின் மனம் நமது திருவாசகத்தைச் சிறிதளவாவது ஏற்றுக் கொள்ளுமா? ஏற்காது. எனவே இவற்றை எல்லாம் நாம் பார்த்துக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. பூவுலகில் நம் மக்கள் எல்லாரும் நமது வருகைக்குக் காத்திருந்து வாடுகின்றனர். அந்த நல்லவர்களின் துன்பத்தைத் தீர்த்து நன்மை வாய்ந்த ஒரு சொல்லுக்குள் பக்தர்களைக் கரையேற்ற தோணி ஏறும் வைகுண்டர் தருமயுகத்தை ஆள வேண்டும்.

அகிலம்:

நாளுண்டோ போவதற்கு நல்வேதச் சொல்லுமுண்டோ
கோளுண்டோ வெற்றியுண்டோ கூறும்நீர் வேதவுரை
அப்போது ஈசர் அகமகிழ்ந்து கொண்டாடி
முப்போது வுள்ள முறைகேட்க வேணுமென்றால்
ஆதி வியாகரரை அழைப்பித்துக் கேளுமென்றார்

விளக்கம்:

அதற்குக் குறிப்பிட்ட நாள் ஏதாவது உண்டா? வேதங்களில் அதற்குரிய குறிப்புகள் ஏதாவது இருக்கிறதா? அதற்குரிய கிரக நிலைகள் என்ன? வெற்றி வாய்ப்புள்ளதா?

இக்கேள்விகளுக்குப் பதிலாக உமது வேத உரையை எடுத்துக் கூறுவீராக என்றார். இவற்றைக் கேட்ட ஈசர் உள்ளம் மகிழ்ச்சியுற்று திருமாலே நீ கூறியபடியுள்ள விளக்கங்களை முறைப்படி கேட்க வேண்டும் என்றால் ஆதி வியாகரரை அழைத்து அவரிடம் கேட்பாயாக என்றார்.

அய்யா உண்டு

சிவமே சிவமே சிவமே சிவமணியே
தவமே தவமே தவமே தவப்பொருளே
சீரான கன்னி செய்குமரி நன்னாட்டில்
பாரான தெச்சணமே பரமனுறு தலத்தில்
போர்மேனி மாயன் பிறந்து தவம்புரிந்து
ஓர்மேனிச் சாதி ஒக்க வரவழைத்து
நன்னியாய் நானூறு நாலுபத் தெட்டதினோய்
தண்ணீரால் தீர்த்த தர்மமது ஆனதையும்
செய்திருந்த நன்மை தீங்குகலி கண்டிருந்து
வயது முகிந்தகலி மாளவந்த வாறுகளும்
முன்னாள் குறோணி முச்சூர னுடல்துணித்துப்
பின்னா ளிரணியனைப் பிளந்துயிரு கூறாக்கி
ஈரஞ்சு சென்னி இராட்சதரையுஞ் செயித்து
வீரஞ்செய் மூர்க்கர் விடை தவிர்த் தேதுவரா
தேசாதி தேசர் சென்னி கவிழ்ந் தேபணியும்
தீசாதி யான துரியோதனன் முதலாய்
அவ்யுகத் திலுள்ள அவ்வோரையும் வதைத்து
எவ்வுகமுங் காணா ஏகக் குண்டமேகி
பொல்லாத நீசன் பொருளறியா மாபாவி
கல்லாத கட்டன் கபடக்கலி யுகத்தில்
வம்பா லநியாயம் மாதேவர் கொண்டேகி
அம்பாரி மக்களுக்கு ஆக இரக்கமதாய்
அறுகரத் தோன் வாழும் ஆழிக்கரை யாண்டி
நறுகரத் தோனான நாராயண மூர்த்தி
உருவெடுத்து நாமம் உலகமேழுந் தழைக்கத்
திருவெடுத்த கோலஞ் சிவனா ரருள்புரிய
ஈச னருள்புரிய இறையோ னருள்புரிய
மாய னருள்புரிய மாதும் அருள்புரிய
பூமாது நாமாது புவிமாது போர்மாது
நாமாது லட்சுமியும் நன்றா யருள்புரிய
சரசுபதி மாதே தண்டரள மாமணியே
அரசுக் கினிதிருத்தும் ஆத்தாளே அம்பிகையே

அகிலம்:

திருமால் வியாகரரை அழைத்துக் கேட்டல்:
---------------------------------------------------------------

சோதி யுரைக்க திருமா லகமகிழ்ந்து
அழைத்தார் வியாகரரை அதுகேட்டு மாமுனியும்
பிழைத்தார்கள் போலே பொடுபொடென ஓடிவந்து
தெண்டனிட்டு மூவரையும் சுவாமிவிண் ணப்பமென்றார்

விளக்கம்:

இவ்வாறு ஈசர் கூறவும் திருமால் மகிழ்ந்து வியாகரரை ஆள் அனுப்பி அழைத்தார். அதைக் கேள்வியுள்ற வியாகர மாமுனியும் பிறவிப் பெருங்கடலிலிருந்து பிழைத்தவர் போல மிகவிரைவாக ஓடி வந்து மூவரையும் வணங்கி, “சுவாமி, தாங்கள் என்னை அழைக்கக் காரணம் என்ன? என விண்ணப்பித்தார்.

அகிலம்:

கண்டிருந்(த) அய்யா கரியமுனி யைப்பார்த்து
முன்பிறந்த துமகிலம் முடிந்ததுவுஞ் கொல்லிமிகப்
பின்பிறக்கப் போவதுவும் பிசகாமல் சொல்லுமென்றார்
அப்போ வியாசர் ஆதி யருளாலே
செப்புகிறோ மென்று தெண்டனிட்டுச் சொல்லலுற்றார்

விளக்கம்:

திருமால் வியாகரரிடம் “வியாகரரே உலகம் தோன்றியதுமுதல் இதுவரை இவ்வுலக யுகங்களின் முடிவுகளும் சொல்லி இனிப் பிறக்கப் போகின்றவற்றையும் தெளிவாக தவறின்றிச் சொல்லுவீராக” என்றார்.
அப்போது வியாகரர் “ஆதியின் அருளால் நான் எல்லாவற்றையும் சொல்கிறேன்” என்று வணங்கி விட்டுச் சொல்லலுற்றார்.

அகிலம்:

வேதவியாசர் முன்னாகமம் கூறல்
குறோணி முதலாய்க் கூறுகெட்ட நீசன்வரை
தரணியுக மாறுஞ் சாற்றியே-சத்தியுடன்
தன்மபுவி தோன்றுவதுஞ் சாணாரை வைந்தர்வந்து
நன்மையுட னாடுவதும் நாட்டினார்

விளக்கம்:

இப்பூவுலகில் குறோணி முதல் எந்தவித நல்ல குணமும் இல்லாத கெட்ட கலிநீசன்வரை ஏழு யுகங்களின் தோற்றத்தையும் கூறி, ஆறு யுகங்களின் அழிவு பற்றித் தெளிவாக எடுத்துக் கூறி, சாணார் இனத்தினரை வைகுண்டர் நல்ல உயர்வான நிலை கொடுக்க நாடிச் செல்லுவது பற்றியும் எடுத்துரைத்தார்.

அகிலம்:

குறோணியொடு நீசன் கோள்பிறவி ஏழ்பிறந்து
தரணியுக மாறோடு தன்னால ழிந்ததுவும்
சொல்லி விரித்துச் சுத்த வியாகரரும்
நல்லியல்பு கொண்ட நாரணரோ டேதுரைப்பார்

விளக்கம்:

குறோணி முதல் நீசன் வரை கீழ்த்தன்மையான ஏழு பிறவிகள் பிறந்து இப்பூவுலகில் ஆறு யுகங்களிலும் தன் செயலினாலே அழிந்து மாண்ட நிலைகளையும் தெளிவுடன் நல்ல இயல்பு கொண்ட நாராயணரை நோக்கித் தூய்மையான மனதுடைய வியாசுரர் மீண்டும் தொடர்ந்து கூறலானார்.

அகிலம்:

கொற்றவரும் மாண்டு குறும்பு மிகப்பெருத்து
உற்ற நசுறாணி உடன்வந் துடனோடி
மற்றொரு பத்தாண்டில் ஆனவை குண்டராசர்
உற்றொருவர் வந்து உலகாள வேணுமென்றும்
முன்னே பரந்தான் மொழிந் ததின்படியே

விளக்கம்:

தெச்சணத்தை ஆளும் நல்ல அரசர்கள் இறப்பு எய்தி, தீமையான மக்களின் குறும்பு அதிகமாகப் பெருத்திருக்கும் தெச்சணம் நோக்கிப் பயன் பெற வரும் நசுறாணி அததேசம் வந்தவுடனே தோல்வியுற்று ஓடிடுவான். அதிலிருந்து பத்து ஆண்டுகள் கழித்து வைகுண்டர் என்னும் ஒருவர் வந்து உலகத்தை அரசாட்சி செய்வார். என்று ஏற்கெனவே பரம்பொருள் கூறியுள்ளார்.

அகிலம்:

தர்ம புவியாள சுவாமிநீ ராகவென்றும்
துர்மக் கடன்கழித்தோர் சுகமாக வாழ்வரென்றும்
ஆகமத்தைப் பார்த்து ஆதிவி யாசுரரும்
நாகத்தணை கிடந்தோன் நாட்டம தாயுரைத்தார்

விளக்கம்:

அதன்படி தருமபூமியில் வைகுண்டர் மூலம் அரசாட்சி புரியும் ஒரே கடவுள் நீவிரே ஆவீர். சுவாமி அப்போது அத்தருமயுகத்தில் தமது தீய முன் வினைகளை கழித்து அழித்தவர்கள் அங்கே சுகமாக வாழ்ந்து வருவர். என்று முந்தைய ஆகமங்களை ஆய்ந்து ஆதி வியாகரர் பாம்பு மெத்தையில் படுத்துப் பள்ளி கொள்ளும் நாராயணரை நோக்கி எடுத்துக் கூறினார்.

அய்யா உண்டு-

ஈரே ழுலகும் இரட்சிதத்த உத்தமியே
பாரேழு மளந்த பரமே சொரித்தாயே
பத்துச் சிரசுடைய பாவிதனைச் செயிக்க
மற்று நிகரொவ்வா வாய்த்த தசரதற்குச்
சேயா யுதிக்கச் செடமெடுத் ததுபோலே
மாயாதி சூட்சன் மனுவாய்க் கலியுகத்தில்
பிறந்து அறன்மேல் பெரிய தவம்புரிந்து
சிறந்த குழலாள் சீதை சிறையதுபோல்
இருந்த சொரூபமதும் இமசூட்ச வற்புதமும்
மருந்தாகத் தண்ணீர்மண் வைத்தியங்கள் செய்ததுவும்
தர்ம வைத்தியமாய்த் தாரணி யிலுள்ளோர்க்குக்.
கர்மமது தீரக் கணக்கெடுத்துப் பார்த்ததுவும்
ஏகாபுரிக் கணக்கும் ஏழுயுகக் கணக்கும்
மாகாளி மக்கள் வைகுண்டர் பாதமதைக்
கண்டு தொழுததுவும் கைகட்டிச்சே விப்பதுவும்
தொண்டராகச் சான்றோர் சூழ்ந்துநின்ற வாறதூவும்
பண்டார வேசம் பத்தினியாள் பெற்ற மக்கள்
கொண்டாடி நன்றாய்க் குளித்துத் துவைத்ததுவும்
கண்டுமா பாவி கலைத்து அடித்ததுவும்
சாணாரினத்தில் சுவாமி வந்தா ரென்றவரை
வீணாட்ட மாக வீறுசெய்த ஞாயமதும்
மனிதனோ சுவாமி வம்பென்று தானடித்துத்
தனுவறியாப் பாவி தடியிரும்பி லிட்டதுவும்
அன்புபார்த் தெடுத்து ஆளடிமை கொண்டதுவும்
வம்பை யழித்துயுகம் வைகுண்டந் தானாக்கி
எல்லா இடும்பும் இறையுமிகத் தவிர்த்துச்
சொல்லொன்றால் நாதன் தொல்புவியை யாண்டதுவும்
நாலுமூணு கணக்கு நடுத்தீர்த்த ஞாயமதும்
மேலெதிரி யில்லாமல் வினையில்லா தாண்டதுவும்
இன்னாள் விவரமெல்லாம் யெடுத்து வியாகரரும்
முன்னாள் மொழிந்த முறைநூற் படியாலே
நாரணரும் வந்து நடத்தும் வளமைதன்னைக்
காரணமா யெழுதிக் கதையாய்ப் படித்தோர்க்கு
ஒய்யாரமாக உள்வினை நோய் தீருமென்று
அய்யாவு மிக்கதையை அருளுகிறா ரன்போரே
-------அய்யா உண்டு--------------

அய்யா துணை

அகிலம்:

கடலிலோர் பிள்ளை கரியமா லீன்றெடுத்து
நடமாடுந் தெச்சணத்தில் நகர்சோதனைக் கனுப்பி
கலியை யறுத்துக் கனாப்பயங்கள் தானறுத்துச்
சலிவில்லாத் தர்மபதி சத்திமக்க ளையாள
வாறாரைய்யா நாதன் வைகுண்ட மும்மூர்த்தி
பேறானோர் காண்பார் பெரியதர் மப்புவியை
என்றுசில வாத்தியங்கள் இசைந்திசைந் தூதிவர
கன்றுதிரை மேய்த்தோரும் கயிலையங் கிரிகடந்தார்

விளக்கம்:

திருமால், திருச்செந்தூர்க் கடலில் ஒரு பிள்ளையை தமது குழந்தையாக பெற்றெடுத்து அக்குழந்தையைக் கன்னியர் நடனமாடும் தெச்சணாபூமியில் பாவ புண்ணிய கணக்கெடுக்க நகர்சோதனைக்கு அனுப்பி கலியை அழித்து, உலக மயக்கத்தால் ஏற்படும் அச்சம் முதலியவற்றையும் அழித்து, நிரந்தரத் தன்மையுள்ள தருமபதியில் கன்னி மக்களாகிய சான்றோர் ஆட்சி புரிவதற்காக மும்மூர்த்திகளும் ஒரு மூர்த்தி ஆகிய அவ்வைகுண்ட நாதன் வரப் போகிறார். பேறு பெற்றவர்கள் அவரைக் கண்டு உயர்வான தருமபூமியை அறிவர் என்று சில வாத்தியங்கள் இசைந்து இசைந்து ஊதி வர, பசுக் கூட்டங்களை மேய்த்த திருமால் கயிலை மலையைக் கடக்கலானார்.

அகிலம்:

கடந்து திருச்செந்தூர் கடல்காண வேணுமென்று
நடந்தாதி நாதன் நல்லீசர் சத்தியோடு
கூடிக் குணமாய்க் கொலுவார பாரமுடன்
தேடித் திருவைச் சிணமாய் வழிநடந்தார்
நடக்க மறையோர் நாற்றிசையும் போற்றிநிற்க
கடற்கரையை நோக்கிக் கண்ணோன் வழிநடந்தார்

விளக்கம்:

இவ்வாறு திருமால் கயிலை மலையைக் கடந்து, திருச்செந்தூர்க் கடலில் இலட்சுமிதேவியைத் தேடிக் காண வேண்டி, நல்ல ஈசர், சக்திதேவி ஆகியவர்களோடு கூடி, அமைதியாகக் கொலு ஆரவாரத்தோடு விரைவாக நடந்தார்.

இப்படி திருமால் நடந்து வருகின்றபோது அந்தணர்கள் எல்லாரும், நான்கு திசைகளிலிருந்தும் அவரை வாழ்த்திப் போற்றி நின்றனர். திருமால் திருச்செந்தூர்க் கடற்கரை நோக்கி வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தார்.

அகிலம்:

கந்தன் எதிர் கொண்டு அழைத்தல்.
வழிநடந்து மாயவரும் வல்லபர மேசுரரும்
களிகூர்ந்து மாதுமையும் கந்தன்செந் தூர்கடலின்
அருகேயொரு காதம் அவர்வரக்கண் டாறுமுகன்
கருவி குழறி கடற்கரையோன் தான்கலங்கி

விளக்கம்:

இவ்வாறு திருச்செந்தூர் நோக்கி வழி நடந்து வந்த மாயவரையும், ஈசுரரையும், மகிழ்வோடு வரும் சக்திதேவியையும், திருச்செந்தூர்க் கடல் ஓரத்திலிருந்து ஒரு காதம் வழிக்கு முன்னால் அவர்கள் வரும்போதே கந்தன் கண்டு கொண்டான். தன்னுடைய அரங்கங்கள் பதறக் கலங்கினான்.

அகிலம்:

ஆறு முகனும் அங்குள்ள தேவர்களும்
வீறுமயில் வாகனனும் வெற்றிரத மேறாமல்
என்னவித மாமோ என்று மனம்பதறி
மன்ன னறுமுகனும் மனமயங்கித் தான்பதறி

விளக்கம்:

ஆறுமுகன் தனது விரைவான மயில் வாகனத்தில் ஏறாமலும், தேவர்கள் தமது வெற்றியையுடைய இரதத்தில் ஏறாமலும் மனம் கலங்கினர். இவர்களைக் கண்ட செந்தூர் இறைவன் ஆறுமுகன் பதறி என்ன நடக்க போகிறதோ என மனம் குலைந்து மயக்கமுற்று அவர்களை நோக்கி வந்தான்.

அகிலம்:

வந்துமா மன்தனையும் மாதா பிதாவையும்
சந்துஷ்டி யாகித் தாழ்ந்துநமஸ் காரமிட்டு

விளக்கம்:

தம் மாமனாகிய திருமாலையும், தனது மாதா பிதாவையும், எல்லாரும் மகிழும்படியாகத் தாழ்மையுடன் வணங்கினான்.

அய்யா துணை

அகிலம்:

இம்மூ வரையும் யானெப்போ காண்பேனென்று
எம்முதலே நாயடியேன் எத்தனைநாள் காத்திருந்தேன்
காத்திருந்த நாளும் கரையெண்ணக் கூடாது
பார்த்திருந்த கண்ணின் பாவந் தொலைந்ததின்று
என்று வேல்முருகன் ஈசுரரை யுந்தழுவி
கன்றுதிரை மேய்த்த கண்ணரை யுந்தழுவி
மாதாவை யுந்தழுவி மனமகிழ்ந்து கொண்டாடிச்

விளக்கம்:

இங்கே காணுகின்ற மும்மூர்த்திகளையும் யான் எப்பொழுது காண்பேன் என்று எத்தனை காலம் அடியேணாகிய நான் காத்திருந்தேன். அவ்வாறு நான் காத்திருந்த நாள்களை எண்ணி முடிக்க முடியாது. உங்கள் வருகையைப் பாத்திருந்த கண்களின் பாவம் இன்று தொலைந்தது எனப் பலவாறாகக் கூறிக் கொண்டு முருகன் தமது பக்கத்தில் வந்தடைந்த ஈசரையும் கன்று கூட்டங்களை மேய்த்த திருமாலையும், தாய் சக்திதேவியையும் கட்டித் தழுவி மனம் மகிழ்ந்தான்.

அகிலம்:

சீரான தேவரையும் சிறப்பித்துக் கொண்டாடிச்
வாருங்கோ அய்யாஎன் மண்டபச்சிங் காசனத்தில்
பாருங்கோ அய்யாஎன் பதியி னலங்காரம்
நீங்க ளிருக்க நிறைந்ததங்க மேடையுண்டு
தாங்கள் கிரிபோலே தங்கமலை யிங்குமுண்டு

விளக்கம்:

பிறகு ஒழுங்கு ஒழுங்காக வந்து கொண்டிருந்த தேவர்களையும் சிறப்பித்து வரவேற்று அய்யா, பெரியோர்களே, எனது கோவிலின் அலங்காரங்களை நீங்கள் எல்லாரும் அமர்ந்து இளைப்பாற நிறைய தங்க மேடைகள் இங்கு உள்ளன. தங்களுடைய தங்கமலை போன்ற மலைகளும் இங்கு உள்ளன.

அகிலம்:

பாடப் படிக்கப் பாவாண ரிங்குமுண்டு
ஆடக் கைகாட்ட அரம்பையர்க் ளிங்குமுண்டு
பாலேக்க நல்ல பாலு பழங்களுண்டு
மாலேக்க நல்ல மாதுகன்னி மார்களுண்டு
கண்டு களித்திருக்கக் கனக நிதிகளுண்டு

விளக்கம்:

பாட்டினைப் பாடுவதற்கும், படிப்பதற்கும் சிறந்த பாவாணர்களும் நன்றாக ஆடிடவும் சிறந்த முத்திரைகளைக் கை மூலம் காட்டிடவும், நல்ல பெண்டிர்களும் இங்கு உள்ளனர். நீங்கள் அருந்துவதற்கு ஏற்றவரைப் பாலும், பழங்களும் உள்ளன. திருமால் ஏற்றுக் கொள்ளத் தக்கதும் கண்டு களிக்கத் தக்கதுமாகிய நல்ல கன்னிப் பெண்டிர்களும் இங்கு உள்ளனர். தேவைக்குத் தகுந்த செலவு செய்த நிறைந்த பொருள்களும் உள்ளன.

அகிலம்:

உண்டு சுகித்திருக்க உற்றவகை தானுமுண்டு
பல்லாக்கு முண்டு பதிபோகி மாருமுண்டு

விளக்கம்:

சுவைக்க தக்க நல்ல உணவு வகைகளும் இங்கு உள்ளன. இங்குப் பல்லாக்குகளும் கோவிலில் போகிமாரும் உள்ளனர்.

அகிலம்:

குல்லாக்க ளுண்டு குளிக்கத்தாம்பி ராழியுண்டு
சதுரங்க மேடையுண்டு சண்முக விலாசமுண்டு
பதிரங்க மானப் பாலாழி யுண்டுமையா
மாதமொன்று தன்னில் வருங்கோடி பொன்னதிகம்
போத வருங்காண் பொற்சவடி யாபரணம்
வருசமொன் றானதிலே மாலைவட மாயிரந்தான்
கருவலங்க ளின்னதென்று காணாத் தொகையதுதான்
காவடி கோடி காணிக்கை முக்கோடி
பார்க்கோடி கூடி பலசாதி யெண்கோடி
இப்படியே யென்றனக்கு இருக்குதுகாண் பாக்கியங்கள்
எப்படியும் நீங்கள் இங்கிருக்க வேணுமென்றான்

விளக்கம்:

குல்லாக்களும் உள்ளன. குளிப்பதற்குத் தாம்பிரபரணி ஆறும் உண்டு. சதுரங்கம் விளையாட மேடைகளும், சண்முக விலாசமும் உள்ளன. திருமால் பள்ள கொள்ள பால்கடலும் ஒரு மாதத்திற்கு ஒரு கோடி எடைக்கும் அதிகமாக வருவாயும் இங்கு உண்டு. அதிகமாகப் புடவைகளும், பொனசவடீ ஆபரணங்களும் இங்கே வரும். ஒவ்வொரு வருடமும் வடம் போன்ற மாலைகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டதாக வரும். இங்கே அமைக்கப்பட்டுள்ள கருவூலங்கள் எவ்வளவு என்று கணக்கிட்டுப் பார்ப்போமானால், காவடி ஒரு கோடியும் வாங்கப்படுகின்ற காணிக்கை மூன்று கோடியுமாக, இவ்வுலக மக்கள் பல சாதியினரும் கோடிகோடியாகக் கூடி இங்கே கொண்டு குவிக்கின்றனர்.

இப்படியாக எனக்கு பலவகைப் பாக்கியங்கள் அமைந்து இருக்கின்றன. எந்த வகையில் ஆயினும் சரி, நீங்கள் எல்லாரும் இங்கே தங்கி இருக்க வேண்டும் என்று அழைத்தான்.

அய்யா துணை

கந்தன் அழைப்பை மறுத்துத் திருமால் செந்தூர்க் கடற்கரை ஏகல்:

அகிலம்:

கேட்டுநா ராயணரும் கீழ்ச்சுண் டசையாமல்
நாட்டமுட னுள்ளத்(து) அடக்கிமறுத் தேதுரைப்பார்

விளக்கம்:

திருமால் தமது கீழ் உதடு சிறிது கூட அசையாமல் சிரிப்பினை மிகவும் கடினத்துடன் உள்ளடக்கி, முருகனை நோக்கி மறுத்து உரைக்கலானார்.

அகிலம்:

நல்லதுவே மருகன் நலமா யிருப்பதுதான்
பொல்லாது செய்யாமல் புரிந்தாள் வதேபோதும்

விளக்கம்:

முருமா, மருமகனே, நீ நலமாய் இருப்பது மிகவும் நன்று, பொல்லாத செயல்கள் செய்யாமல் நீ இங்கு ஆட்சி புரிவதே போதுமானது ஆகும் என்று அய்யா திருமால் கூறினார்.

அகிலம்:

என்றுரைத்து அய்யா ஈசரோ டேதுரைப்பார்
பண்டுவிட்ட வாசகச்சொல் பற்றிச்சோ பூமியிலே
வல்லாண்மைக் காரருக்கு மதமிப்ப டியிருக்கும்
இல்லாதெளி மைகட்கு இருக்குமது மேல்தயவு
என்று இருபேரும் இயம்பி மனதடக்கி
நன்றெனவே கந்தனொடு நல்வார்த்தை யும்பேசி
அந்த முடனே எல்லோருந் தானடந்து
செந்தூ ரலைக்கரையில் சேர்ந்தனர்கா ணம்மானை

விளக்கம்:

பிறகு ஈசரை நோக்கி ஈசரே முன்னர் நாம் அனுப்பிய திருவாசகத்சொல் பூமிக்கு முழுமையாக வந்தடைந்துவிட்டதா? மிகுந்த ஆணவம் உள்ளவர்களுக்கு செல்வ செழிப்பினால் உண்டாகும் மதமும் இப்படிதான் இருக்கும். ஆனால் பொருளில்லா ஏழைகளுக்கு ஆறுமுகன் சொல்லும் ஆணவச் சொல்லின் மேல் பற்று இருக்கும் என்று கூறி, இருவரும் தமக்குள் உரையாடிக் கொண்டனர். பிறகு, கந்தனை நோக்கி அவனுக்கு உகந்த வார்த்தைகளை எடுத்துக் கூறிவிட்டு, எல்லாரும் நடந்து திருச்செந்தூர்க் கடற்கரைக்கு வந்தடைந்தனர்.

அகிலம்:

கடற்கரை தனிலே வந்து கரியமா லீச ரோடும்
மடக்கொடி உமையா ளோடும் மறைமுனி தேவ ரோடும்
குடக்கலை பொருந்தும் வேதக் கூர்முனி ரிஷிக ளோடும்
கடற்கரை தனிலே வந்து கண்டனர் கடலைத் தானே

விளக்கம்:

திருமால் ஈசரோடும் மடக்கொடி உமையாளோடும் வேதம் ஓதும் முனிவர்களோடும், வேதர்களோடும், மாயோனின் ஆடல் கலையைச் செய்து வேதங்களைத் தெளிவாக அறிந்த முனிவர்களோடும், இன்னும் பல ரிஷிகளோடும் திருச்செந்தூர் கடற்கரையை வந்தடையவும் எல்லாரும் அக்கடலை கண்டு மகிழ்ச்சி எய்தினர்.

அகிலம்:

வந்தவ ரெல்லாப் பேரும் வட்டமிட் டதிலே நிற்கச்
சந்தன வாரி யோரம் தன்னிலே நின்று ரண்டு
சுந்தர முனிவர் வந்து சுவாமிதன் பதமே பூண்டு
எந்தனின் பிரானே யென்று இருவரும் வணங்கிச் சொல்வார்

விளக்கம்:

கடலோரம் வந்த எல்லாரும் அங்கு கூடி ஒன்றாக நின்றனர். அப்போது சந்தன மணத்தையுடைய திருச்செந்தூர்க் கடலின் கரையில் நின்று கொண்டிருந்த இரண்டு அழகான முனிவர்கள் திருமாலின் முன்னால் வந்தனர். அவர்கள் திருமாலின் பாதங்களைக் கட்டிப் பிடித்து வணங்கி எங்களுடைய இறைவனே அருள் புரிவீராக என்று கூறித் துதித்து சொல்லலானார்கள்.

அகிலம்:

கலைமுனி ஞானமுனி வரம் வேண்டல்
----------------------------------------------------------

ஆதியே யெங்கள் அய்யாநா ராயணரே
சோதியே யெங்கள்தவம் சுறுக்கிட் டுருவளர்ந்து
கண்டுகொண் டோமையா கமலப் பொருளேநீர்
பண்டு மொழிந்தபடிப் பார்த்துவரந் தாருமையா
என்று முனியிருபேர் இறைஞ்சித் தொழுதிடவே
மன்று தனையளந்தோர் மறுத்துரைப்பா ரன்போரே

விளக்கம்:

“ஆதியே, எங்கள் அய்யா நாராயணரே, சேதியே, எங்களுடைய தவமானது சீக்கிரம் உயர்வு அடைந்து உம் அருளைக் கண்டு கொண்டோம். இதயத் தாமரையில் அமர்ந்திருக்கும் மூலப்பொருளே, நீர் ஏற்கெனவே கூறியபடி எங்களைக் கருணையுடன் பார்த்து வரம் தர வேண்டும் அய்யா” எனக் கூறி இரு முனிவர்களும் தொழுது நின்றனர். அப்பொழுது இவ்வுலகை அளந்த திருமால் பதிலுரைப்பதை அன்பர்களே நீங்கள் கேட்பீராக.

அய்யா துணை

அகிலம்:

குருவான ஈசரொடு கூறுவார் பின்னாலே
நம்முடைய ஈசுரரே நாம்வந்த காரியங்கள்
எம்முதலே யின்னதென்று இயம்புவீ ரீசுரரே
கட்டான ஈசுரரும் காரியத்தைப் பாருமென்று
மட்டான வாரிக் கரையிலே வந்திருந்து
எல்லோருஞ் செந்தூர் இடமெல்லாங் கண்பார்த்து
வல்லோர்க ளெல்லாம் வந்திருந்தார் செந்தூரில்

விளக்கம்:

பிறகு திருமால் குருவாகிய ஈசரிடம் பதில் கூறலானர். என்னுடைய ஈசரே, என் முதற்பொருளே, நாம் இங்கே வந்த முக்கியமான காரியங்கள் என்ன என்று எடுத்துரைக்க வேண்டும் என்று வினாவினார்.

இதைக்கேட்ட ஈசரும் “நாரணரே, உனது கலியழிக்கும் காரியத்தைச் செயல்படுத்து” என்று அனுமதி அளித்தார்.
உடனே கட்டுக்கடங்கி இருந்த அக்கடற்கரையில் வந்திருந்த எல்லாரும் திருச்செந்தூரின் இடங்களைக் கண்டு மகிழ்ந்தனர். ஆங்காங்கே உள்ள திறமை மிக்கோர் எல்லாரும் அங்கு வந்து குழுமினர்.

அகிலம்:

சம்பூர்ணத் தேவனுக்கு நற்பேறு அருளல்:
-------------------------------------------------------------

அங்கு சிலநாள் அமர்ந்திருக்கும் வேளைதனில்
சங்குவண்ணர் நேமித்த சடல மதின்பெருமை
உரைக்கிறார் அன்பர் உள்ள மகிழ்வதற்கு
தரையீரேழு மளந்த சுவாமி யுரைக்கலுற்றார்

விளக்கம்:

இவ்வாறாக அங்கே சில காலம் அமர்ந்து இருக்கின்ற சமயத்தில் திருமால் தமக்கு மகனாக நியமிக்கப்பட்ட பொன்கூட்டுச் சடலத்தின் பெருமையைப் பற்றி அன்பர்களாகிய நீங்கள் மகிழ்வுறும்படி இனிக் கூறப் போகின்றோம் என பதினான்கு உலகங்களையும் அளந்த திருமால் உரைக்கலுற்றார்.

அகிலம்:

சீரான நல்ல தெட்சணா புமியிலே
பாரான நல்ல பதிதா மரையூரில்
தவசிக் குகந்த தாமரையூர் நற்பதியில்
சிவசிவா வளரும் தெட்சணா புரிநாடு
பாண்டவரில் விசையன் பாசுபதம் வேண்டுதற்கு
ஆண்டபர மேசுரரை அகம்வைத்துப் போர்விசையன்
நின்று தவமுடித்து நெடியரனை மாதுவையும்
கண்டு பதம்வாங்கிக் கைகண்ட திவ்வூரு
அதியரசன் முன்னாள் அதிகத் தவமிருந்து
பதியரசி யானப் பார்வதியை ஈன்றதுதான்
இவ்வூரு தெச்சணந்தான் ஏற்றதா மரையூரு
செவ்வூரு நல்ல சிறந்தமண வைப்பதிதான்
வானலோ கம்வாழும் வாய்த்ததெய் வேந்திரனும்
தானவரைக் காணத் தவசிருந்த திவ்வூரு

விளக்கம்:

அழகு பொருந்திய நல்ல தெச்ணாபூமியில் உயர்வு பொருந்திய நன்மையான தாமரை ஊர் என்னுமிடம் உள்ளது. அப்பூமி தவசு புரிய ஏற்ற இடமாகும். இங்குச் சிவசிவா என்னும் மந்திரச்சொல் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கும். ஐவர் பஞ்சபாண்டவரில் வில்வீரத்தில் சிறந்தவனான அருச்சுனன், சிவனிடம் சிறந்த பாசுபத ஆயுதம் பெறுவதற்குச் சிவனை மனதில் நினைத்துத் தவம் புரிந்து தவத்தில் வெற்றி கண்டு சிவனையும் சக்தியையும் கண்டு அவர்களிடமிருந்து பாசுபதத்தைப் பெற்றுக் கொண்டது பெருமை வாய்ந்த இவ்வூரில் தான். இவ்வூரில்தான் முன்பு அதியரசன் கடினமான தவம் புரிந்து ஈசனுடைய மனைவியான பார்வதியை மகளாய்ப் பெற்றெடுத்தான். இந்தத் தெச்சணாபூமிதான் தாமரையூர் என்றும், செவ்வூர் என்றும் மணவைப்பதி என்றும் கூறப்படுகிறது. வானலோகத்தில் வாழுகின்ற சிறந்த தெய்வேந்திரனும் சிவனைக் கண்டு தன் துன்பம் தீரத் தவம் இருந்ததும் இப்பூமி தான்.

அகிலம்:

பஞ்சவர்க்கு முன்னம் பசுவா னுதவிசெய்ய
அஞ்சல்செய்து நாதன் அமர்ந்திருந்த திவ்வூரு
சாம்பு சிவசான்றோர் தழைத்திருந்த திவ்வூரு
தாம்பிரவர்ணி யாவி தழைத்திருந்த திவ்வூரு
பரராச முனிவன் பாரத் தவசுபண்ணி
விரமான வியாகரரை மிகஈன்ற திவ்வூரு
தவம்புரிய வென்று தானினைத்த பேர்களெல்லாம்
பவமற்ற தாமரையூர் பதியாகு மென்றுரைப்பார்
தவசுக் குகந்த சந்தமுற்ற பேரூரு
பவிசுக் குகந்த பாலதியத் தாமரையூர்
அவ்வூரு தன்னில் ஆதி யருளாலே
செவ்வுமகா விஷ்ணுவும் செய்தசட மேபிறந்து

விளக்கம்:

முன்னர்ப் பஞ்சபாண்டவர்களுக்குக் கண்ணன் உதவி செnய்வதற்குச் செய்தியனுப்பி விட்டு அமர்ந்திருந்ததும் இந்தப் பூமியே. சாம்பசிவனை வழிபடும் சான்றோர் குலம் தழைத்து வளர்ச்சியுற்றதும் இப்பூமியிலே ஆகும். தாம்பிரபரணி கிளை ஆறுக்ள அதிகமாகத் தழைத்து இருந்தது இப்பூமியில்தான். பராசர முனி மிகப்பெரிய தவம் புரிய வேண்டுமென்று நினைத்தவர்கள் தாமரை ஊருக்கு வந்து பாவம் நீங்கப் பெற்று வாழ்வதாக உயர்ந்தோர் உரைப்பர். இவ்வாறு தவசு புரிவதற்குச் சிறப்பான அழகு வாய்ந்த ஊர் இதுவாகும். சகலவிதச் செழிப்புகள் உள்ளதும், ஞானப்பால் அருந்திய மக்கள் வாழுகின்றதும் இவ்வூராகும். இத்தகைய சிறப்பான இந்த ஊரில் ஆதி சிவனின் அருளால் செம்மை பொருந்திய மகாவிஷ்ணு அவதாரம் எடுக்க உருவாக்கிய பொன் கூட்டுச் சடலம் பிறந்து

அகிலம்:

பிறந்து வளர்ந்து பெருமைப் புகழ்காட்டி
மறந்திடா முன்னமைந்த மாதை யுறவாடிப்
பூலோக மனுக்கள் பிள்ளைபோ லேவளர்ந்து
மாலேற்கப் பூசை மனையில் மறவாமல்
விட்டிணுவைப் போற்றி விளங்கவொரு பீடமிட்டுக்
கட்டுத்தீர்க் காகக் கண்வளர்ந் தார்கலியில்

விளக்கம்:

அச்சடலம் பிறந்து பெருமைக்குரிய புகழுடன் வாழ்ந்து, தமக்காக முன் அமைத்த பெண்ணை மறந்திடாதவாறு ஏற்று அவளோடு உறவாடி பூலோகத்தில் வாழும் ஏனைய மக்களைப் போல் வளர்ந்து, திருமால் ஏற்றுக் கொள்ளத் தக்க வகைியல் அவரது இல்லத்தில் திருமாலை மறவாவண்ணம் பூறை செய்து துதித்துத் தமது ஆத்மா வளங்கும்படியாக ஒரு பீடமிட்டு மிகவும் கட்டுப்பாடாக ஒரே மனதுடன் கலியன் தேசத்தில் வளர்ந்து வந்தது.

அய்யா துணை:

அகிலம்:

ஒருவர்க்கோர் பொல்லாங்கு உலகில்மிகச் செய்யாமல்
குருவைக் குருகண்டு கொக்கரித் தேவளர்ந்தார்
எதிர்த் தோரையடக்கி எல்லோர்க்கும் நல்லவராய்
உருத்துக் கரியவராய் உலகில் மிகவளர்ந்தார்
எச்சா தியார்க்கும் இவர்நல்ல வரெனவே
அச்சாதி யெல்லாம் அகமகிழத் தான்வளர்ந்தார்

விளக்கம்:

யாருக்கும் துன்பம் செய்யாமல் குருவுக்கும் குருவாக அறிவு பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார். தம்மை எதிர்த்தவரைத் தமது திறமையால் அடக்கி எல்லாருக்கும் நல்லவராய்த் தமது நியாயப் போக்கைத் தடை செய்வதற்குப் பிறரால் முடியாதவராய், எல்லாச் சாதியினருக்கும் நல்லவராகவே அவர் வாழ்ந்ததால் எல்லாச் சாதியினரும் அவரிடம் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தனர்.

அகிலம்:

முன்னுதித் துடன்பிறந்தோர் ஒருவர்மூப் பாடாமல்
பின்னுதித்தும் பெரியோராய்ப் பெருமையுட னேவளர்ந்தார்
தாய்தகப் பன்மாமன் சந்தமிந்தத் தம்பியென்றும்
ஞாயவா னென்றும் நாடி மிகவளர்த்தார்
ஊருக்குந் தலைவன் உடையவழிக்குந் தலைவன்
ஆருக்குந் தலைவனென்று அன்னை பிதாவளர்த்தார்

விளக்கம்:

முன்பு பிறந்த பெரியவர்களின் உயர்வு இவரது உயர்வுக்கு ஒப்பாகாது. அவர் எல்லாரிலும் இளையவராய்ப் பிறந்தும், புத்தியும் உயர்வும், உள்ளவராய் வளர்ந்து வந்தார். தாய், தகப்பன், மாமன் எல்லாரும் இவன் அமைதியும் உயர்வும் பொருந்தியவன் என்றும், இவன் சிறந்த நியாயவான், என்றும் கூறும்படியாக வளர்ந்து வந்தார். அவர் ஊருக்குத் தலைவனாகவும், தாம் பிறந்த குடும்பத்துக்குத் தலைவனாகவும், எல்லாருக்கும் தலைவனாகவும் உயர்வடைந்த அவரை அவரின் தாயும், தந்தையும் வளர்த்து வந்தனர்.

அகிலம்:

ஞாய மிருப்பதனால் நாடாள்வா னென்றுசொல்லித்
தாய்தமர்க ளெல்லாம் தாங்கி மிகவளர்த்தார்
சொல்லுக்கும் வல்லவனாய் சூராதி சூரனிவன்
மல்லுக்கும் வல்லவனாய் உபாயத் திலும்பெரியோன்
மங்கையர்க்கு மேற்றவனாய் மாமோகக் காமீகன்
எங்கும்பேர் கேட்கவைப்பான் இவன்கீர்த்தி நல்வளமை

விளக்கம்:

இவனிடம், நீதியும் நியாயமும் இருப்பதால் இவன் நாடாள்வான் என்று கூறி, இவன் தாயும் சுற்றத்தாரும் வளர்த்தனர். பேசும் திறனும், சிறந்த வீரனாகவும், மல்யுத்தத்தில் வல்லவனாகவும், சிறந்த தந்திரம் உள்ளவனாகவும், பெண்டிர்களுக்கு ஏற்றபடி நடப்பவனாகவும், மிகுந்த காம இச்சை உடையவனாகவும் இருந்து, எல்லாரும் தமது பெயரைக் கேட்க வைத்திடுவான்.

அகிலம்:

பல்லார்க்கும் ஏறிடுவான் பார்முழுதும் ஆண்டிடுவான்
எல்லார்க்கும் நல்லவனாய் இவன்சமைவா னென்றுசொல்லி
எவ்வோருங் கொண்டாட இன்பமுட னேவளர்ந்தார்
அவ்வோருங் கொண்டாட அவர்வளரும் நாளையிலே
பத்து வயது பண்போ டிருபதிலே

விளக்கம்.:

இவன் புகழோடும், உயர்ந்த மன நிலையோடும், பல்லக்கு ஏறி இந்த உலகம் முழுவதிலும் ஆட்சி புரிந்திடுவான். எல்லாருக்கும் நல்லவனாக இவன் அமைவான் என்று சொல்லி எல்லாரும் கூடி இன்பத்துடன் வளர்ந்து வந்தனர்.

அகிலம்:

மற்று நிகரொவ்வா மன்னவர்போ லேவளர்ந்தார்
எல்லாத் தொழிலும் இதமிதமாய்க் கற்றுமிகப்
பொல்லா தாரோடு பெரும்பகைபோ லெசீறி
நல்லாரை யுள்ளில் நாளு மறவாமல்
கல்லாரை யெல்லாம் கண்டுகழித் தேயிருந்தார்
ஈவதற்குத் தர்மனென எளியோரைக் கண்பார்த்து
ஆய்வதற்கு நல்லான் என்றே மிகவளர்ந்தார்

விளக்கம்:

இவ்வாறு எல்லாரும் மகிழ்வோடு அவரை வளர்த்து வருகின்ற தருணத்தில் பத்து வயதில் இருபது வயது மதிக்கத்தக்க பண்போடு தமக்கு நிகர் தாமே என்று சொல்லும் வகையில் தலைவனைப் போன்று வளர்ந்து வந்தார். எல்லாத் தொழிலையும் எளிதாகக் கற்று முடித்தார். கல்வி திமிர் பிடித்த பொல்லாதவரோடு பெரும் பகை கொண்டவரைப் போன்று கோபம் கொள்வார். கல்லாதவர்களையும் தமது மனத்தின்கண் நிறுத்தி அவர்களை என்றும் மறவாவண்ணம் நினைத்து, அவர்களை மகிழ்ச்சி கொண்டு நேசித்தார். செல்வமின்றி வாடும் எளியோரைக் கண்டு தருமம் கொடுப்பதில் தருமர் எனப் பெயர் பெற்றார். தத்துவ ஆராய்ச்சி செய்வதற்கும் சிறந்தவர் என்னும் பெயரோடும் வளர்ந்து வந்தார்.

அய்யா துணை

அகிலம்:

கருவுற்ற தோசம் கழிந்து சிவஞானத்
திருவுள மாகி சிவமய மாய்ப் பெறவே
மனதில் மிகவுற்று மாயவரை நெஞ்சில்வைத்துத்
தினமும் வருந்தித் தீனமென வேயிருந்தார்
அப்படி யோர்வருசம் அங்கமதி லூறலெல்லாம்
முப்படி ஞாயமதால் உலகில் கழியவிட்டு
எகாபரா தஞ்சமென்று இருக்குமந்த நாளையிலே
மகாபர னார்செயலால் மாதாவின் கண்ணதிலே
சொற்பனம்போல் சுவாமிவந்து சொன்னாரே வுத்தரவு

விளக்கம்:

இவ்வாறு தமது முன் பிறவியினால் கருவில் அமைந்த தோசங்கள் எல்லாம் அனுபவித்துக் கழித்துவிட்டு சிறந்த சிவஞானத்தின் உயர்ந்த நிலையடைந்து, சிவமயமாய் நிலை பெற மனதில் நினைத்து மாயவரை நெஞ்சில் நிறுத்தித் தினமும் வருந்தினார். ஆனால் உலக மக்கள் பார்வைக்கு நோய் பிடித்தவராகக் காட்சி அளித்தார். இப்படியாக ஒரு வருடம் தமது முன்பிறவி பாவத்தினால் உடலில் வந்த தீயவினைகள் எல்லாம் உலகில் கழித்துவிட்டு பரம்பொருளே தஞ்சம் என்று இருந்தார். அச்சமயம் ஒருநாள் இரவு இறைவன் அருளால் சுவாமியின் தாய் வெயிலாளின் கனவில் தோன்றிய திருமால் அவளுக்கு ஓர் அன்புக் கட்டளை இட்டுச் சென்றார்.

அகிலம்:

உற்பனம்போல் கொண்டு உற்றஅவர் மாதாவும்
மகனே யின்றிரவில் மனஞ்சலித்து நான்வாடி
அகம்வைத்த எண்ணம் அறிந்துசிவ நாரணரும்
வந்துசொன்ன வுத்தரவை மகனேநீ கேளுவென்று
விந்து வழிக்கிளையோர் மிகுவாகக் கேட்டிருக்கச்
சொல்லுகிறா ளந்தச் சொற்பனத்தை யன்போரே
நல்லுறவாய்க் கேளுமென்று நவிலுவா ளன்போரே

விளக்கம்:

இதை உண்மையாக நம்பி அவரின் தாய் தன் மகனை நோக்கி மகனே, இன்றிரவு நான் உன் நோயின் துன்பத்தைப் பற்றிய எண்ணத்தோடு மனம் வாடி இருந்ததை அறிந்து, சிவனின் மைத்துனராகிய திருமால் சொல்லிச் சென்ற கட்டளையை நீ கேட்பாயாக என்றாள்.

அப்போது தங்கள் உறவினர்களும் கேட்டுக் கொண்டிருக்க, சொல்லுகின்றாள். அன்புடையோரே, கேட்பீர்களாக.

அகிலம்:

ஆயிரத் தெட்டு ஆண்டிதுவா மிவ்வருசம்
மாசியென்ற மாதமிது வாய்த்ததேதி பத்தொன்பது
இம்மாத மித்தேதி ஏற்றதிருச் செந்தூரில்
நம்மாணை கொடியேறி நல்லதிரு நாள்நடக்கு
அங்குன் மகனை அழைத்துவ ருவாயானால்
எங்குள்ளோ ருமறிய இப்பிணி யுந்தீர்த்து
நல்லபே றுங்கொடுப்போம் நம்மாணை தப்பாதெனச்
சொல்லவே கண்டேன் சுவாமிகரு மேனிநிறம்

விளக்கம்:

ஆயிரத்து எட்டாம் ஆண்டு ஆகிய இந்த ஆண்டில் மாசி மாதம் பத்தொன்பதாம் தேதி உயர்வு பொருந்திய திருச்செந்தூரில் கொடி ஏற்றப்பட்டு நல்ல முறையில் திருவிழா நடக்கிறது. அங்கே, உன் மகனை அழைத்து வந்தால் இவ்வுலக மக்கள் அறியும்படியாக உன் மகனுடைய நோயை தீர்த்து மிகவும் நன்மையான நல்ல உயர்வு கொடுப்போம், இது சத்தியம். நம்பேரில் ஆணை. இது தவறாமல் நடக்கும் என்று திருமால் என்னிடம் அருளினார். அவர் கருமேனி நிறமுடையவர்.

அகிலம்:

நான்கண்ட சொற்பனந்தான் நழுவிமிகப் போகாது
தேன்கண்டாற் போலே சிரித்து மனமகிழ்ந்து
இந்தக் கனாவதற்கு இங்கிருந் தங்கேபோய்
வந்தல்லா தேபிணியும் மாறவகை யில்லையல்லோ

விளக்கம்:

நான் கண்ட இந்தச் சொற்பணம் எந்த வகையிலும் தவறாத ஒன்று என்று கூறித் தேன்மழை பொழிந்ததைக் கண்டவர் போன்று சிரித்து மனம் மகிழ்ந்து என்னுடைய இந்தக் கனவின்படி நாம் இங்கிருந்து திருச்செந்தூர் போய் வராமல் இந்த நோயானது எந்த வகையிலும் மாறக்கூடிய வழி இல்லை அல்லவா? என்று தாய் உரைத்தார்.

அகிலம்:

என்றுரைக்க எல்லோரும் இன்பமுட னேமகிழ்ந்து
நன்றுநன்று போவதற்கு நடைக்கோப்பு கூட்டுமென்றார்
வேண்டும் பலகாரம் விதவிதமாய்ச் சேகரித்து
ஆண்ட கருப்புக்கட்டி ஆனதெல்லாஞ் சேகரித்துத்
தானதர்மஞ் செய்ய தனங்கள் மிகவெடுத்துத்
தீன மானவரைத் திடமாகக் கூட்டிவந்து
ஆளுமிகச் சேகரித்து அகலநல்ல தொட்டில்வைத்து
நாளு கடத்தாமல் நடக்கவழி கொண்டனராம்

விளக்கம்:

எல்லாரும் இன்பமுடன் மகிழ்ந்து நன்று நன்று திருச்செந்தூருக்கு நடந்து போவதற்குரிய எல்லாப் பொருள்களையும் சேகரித்திடுவோம் என்றனர். உடனே அங்குப் புறப்படுவதற்குத் தேவையான பலகாரங்களை விதம் விதமாகச் கட்டியும், இன்னும் வேண்டுவனவும் சேகரித்தனர். வழியில் செல்லும்போது தான தருமங்கள் செய்ய வேண்டிய பொருள்களும் எடுத்துக் கொண்டனர். நோயுற்ற கவனமாக அழைத்து செல்லத் தேவையான ஆட்களையும் கூட்டி அவரை வீதியான தொட்டில் ஒன்றில் கிடத்தி, நேரம் கடத்தாமல் திருச்செந்தூர் நோக்கி நடக்கலாயினர்.

அய்யா துணை

அகிலம்:

மாதாவும் மகனும் வாய்த்த நருளுடனே
நிதாவின் பாதாரம் நெஞ்சில் மிகநிறுத்தி
இருந்த பதியும்விட்டு ஏற்றவொரு காதம்விட்டு
வருந்த நருளோடே வழிகொண்டா ரன்போரே
கூடங் குளமும்விட்டுக் குளிர்ந்தசுக்குப் பாரும்விட்டுத்
தோடவழி யாறுங்கண்டு சூறாவழிக் காடும்விட்டு
நடந்து வொருவனத்தில் நல்லதண்ணீ ராவிகண்டு
கொடர்ந்த பலகாரம் கொண்டுதண்ணீர் தான்குடித்து

விளக்கம்:

இவ்வாறு தாயும் மகனும் தம்மோடு வந்த மக்களுடன் திருமாலின் பாதங்களை மனதில் நிலைநிறுத்தித் தமது ஊரைவிட்டு அகன்று, ஒரு காதம் தூரம் வந்து கொண்டிருந்தனர். கூடங்குளத்தைத் தாண்டி, குளிர்ச்சி பொருந்திய சுக்குப்பாரு இடத்தையும் தாண்டி தோட்ட வழி ஆறும், சூறாவழி காடும் கடந்து, ஒரு வனத்தில் வந்தடைந்தனர். அங்கிருந்த நல்ல தண்ணீர் நிரம்பிய குளத்தைக் கண்டு அதன் பக்கத்தில் அமர்ந்து தாம் பொண்டு வந்த பலகாரம் முதலியவற்றை உண்டு தண்ணீர் குடித்துச் சடைவாறினர்.

அகிலம்:

தகையாறிக் கொண்டு தானிருக்கும் வேளையிலே
வகையான நல்ல வாய்த்தமகா விட்டிணுவும்
பிறவிக்கு ஏற்ற பிள்ளை வருகுதென்று
திறவி முதலோன் தெளிந்துமிகக் கொண்டாடி
எதிரே ஆள்விட்டு இங்கழைக்க வேணுமென்று

விளக்கம்:

இவ்வாறு அவ்வனத்தில் சடைவாறிக் கொண்டிருக்கின்ற வேளையில் திருச்செந்தூரில் மகாவிஷ்ணு நமது குழந்தையாகப் பிறவி எடுக்கத் தகுதியான விள்ளை ஒன்று இதோ வந்து கொண்டிருக்கின்றது, என்று நிறவி முதலோனாகிய திருமால் மனம் தெளிந்து மகிழ்ச்சியுற்று, அந்தப் பிள்ளையின் எதிரே ஆள் அனுப்பி எதிர்கொண்டு அழைக்க வேண்டும் என்று நினைத்தார்.

அகிலம்:

அருகே தானின்ற ஆதி முனியான
நல்ல முனிவரையும் நாரா யணரழைத்து
வல்லவர்தாம் நீங்கள் வாரு மென அழைத்து
வாருங்கோ பிள்ளாய் வாய்த்த முனிமாரே
நேருங்க ளோடு நிகழ்த்துகிறே னோர்வசனம்
நானே மித்த நல்லவுயி ரானதிங்கே
தானே வருகுதுகாண் எந்தன் தவத்தாலே
எதிரேபோய் நீங்கள் இங்கழைத்து வாருமென்று

விளக்கம்:

உடனே தமது அருகில் நின்ற இரண்டு முனிவர்களை அழைத்து, நீங்கள் வல்லவர்களே எனக்கூறித் தமது அருகில் அழைத்து பிள்ளைகளே உயர்வு வாய்ந்த முனிமாரே உங்களுக்கு நேராக ஓர் அன்பு மொழி கூறுகின்றேன். கேட்பீர்களாக. நான் ஏற்கெனவே என் குழந்தையாக நியமித்த சிறப்பான உயிரானது இங்கே தானாக வந்து கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி என்னுடைய தவத்தின் பயனால் நிகழ்கின்றது. முனிவர்களே, நீங்கள் போய் அவனை எதிர்கொண்டு அழைத்து வாருங்கள் என்று கூறி முனிமாரை அனுப்பினார்.

அகிலம்:

பதியேறும் பெருமாள் பகர்ந்து முனியயச்சார்
அயச்ச முனிமார் அவ்வாயு போல்விரைவாய்ப்
பயபட்ச முடனே பகர்ந்த இருமுனியும்
எந்த வழியாய் இவர்கள்வரு வாரெனவே
அந்தந்த வழிக்கு ஆலோட்டம் பார்த்துவந்தார்
வந்து ஒருவழியில் வரவேகண் டம்முனிவர்
சந்துஷ்டி யாகித் தாழ்ந்துநமஸ் காரமிட்டு
கண்டு குவித்துக் கனக முனிமார்கள்

விளக்கம்:

இவ்வாறு அனுப்பப்பட்ட முனிவர்கள் காற்றைப் போன்று விரைவாகப் பயபக்தியுடன் கிளம்பிச் சென்று அவர்கள் எந்தெந்த வழிகளில் வர முடியுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் ஆலோட்டம் இட்டு ஆராய்ந்தனர்.

கடைசியாக ஒரு வழியாக அவர்கள் வருவதைக் கண்டு முனிவர்கள் மிகவும் பணிவாக வணங்கி கைகுவித்து அவர்கள் அருகில் சென்றனர்.

அகிலம்:

வண்டுசுற்று மார்பனுட வாய்த்தகரம் ரண்டதையும்
முனியிருபேர் தோளில் உயர்த்தி மிகவேந்தி
துணிவுடனே மாமுனிவர் தோளின்மே லேயிருத்திப்
பதியி லிருந்தாற்போல் பார்மன்னனை யிருத்திக்
குதிரைநடை கொண்டாற்போல் கொண்டோடி மாமுனிவர்
கூட நடப்போர் குதித்துக்குதித் தோடிவர
வாடி யிடைந்து மனுநருட்க ளோடிவர

விளக்கம்:

அம்முனிவர் இருவரும் வண்டு சுற்றி வருகின்ற மணம் பொருந்திய மார்பையுடையவரின் கரங்கள் இரண்டையும் ஆளுக்கொரு பக்கமாகத் தோளில் வைத்து உயர்வாக ஏந்திப் பிடித்து, மிகுந்த துணிவுடன் அவரைத் தோளின் மேல் இருத்திக் குதிரை நடைபோல் துள்ளிக் குதித்து ஓடியும் நடந்தும் வந்தனர். அவர்களைப் பின்தொடர்ந்து வரமுடியாமல் அவரோடு வந்த மனிதர்கள் வாட்டமுற்று ஓடி வந்தனர்.

அய்யா துணை

அகிலம்:

நல்ல பிறவியைத்தான் நன்முனிவர் கொண்டோடி
வல்லசெந் தூர்ப்பதியில் வந்தனர்கா ணன்போரே
வந்த முனிமார்கள் வாழ்த்தியந்த நல்லுயிரைச்
சந்தனா வீதியிலே சடலந்தனை நிறுத்தி
மாமுனிவர் தாமும் மாயோனை வந்துகண்டு
சாமிநீர் கொண்டுவரத் தானுரைத்த நற்சடலம்
அடியா ரெதிரேபோய் அழைத்துவந்தோ மையாவே

விளக்கம்:

நல்ல பிறவியாகிய அவரை முனிவர்கள் தூக்கிக் கொண்டு மகிழ்ச்சியோடு மேன்மையான திருச்செந்தூர்ப் பகுதிக்கு வந்தடைந்தனர். இவ்வாறு வந்த முனிவர்கள் அந்த நல்லுயிரை சந்தன மணம் வீசுகின்ற அந்த வீதியிலே நிலை நிறுத்தினர். பிறகு, அந்த மாமுனிவர்கள் திருமாலைச் சென்று கண்டு சுவாமி நீர் அழைத்துக் கொண்டு வரச் சொன்ன உயர்வான உடலை உயது அடியாராகிய நாங்கள் அவர் எதிரே சென்று எதிர்கொண்டு அழைத்து வந்தோம் அய்யா என்று பணிந்தனர்.

அகிலம்:

முனிவர்கள் சடலத்தின் வரலாறு கூறுதல்:
-----------------------------------------

திடீரெனவே நாதன் சொன்னமுனி யோடுரைப்பார்
கொண்டுவந்தோ மென்றீரே கூர்மையுள்ள நற்சடலம்
பண்டுமுறை யெல்லாம் பகருவீர் மாமுனியே

விளக்கம்:

இதைக் கேட்ட திருமால் உடனே அந்த முனிவர்களை நோக்கி, முனிவர்களே, சடலத்தைக் கொண்டு வந்தோம் என்று சொன்னீர்களே, அந்த உயர்வு பொருந்திய நல்ல சடலத்தின் முன் வரலாறுகளை எல்லாம் விளக்கமாக கூறுவீர்களாக என்றுரைத்தார்.

அகிலம்:

அப்போது மாமுனிவர் ஆதி யருளாலே
செப்புகிறோ மென்று செப்பலுற்றா ரன்போரே

விளக்கம்:

அப்பொழுது முனிவர்கள் ஆதியின் அருளால் நாங்கள் கூறுகின்றோம் என்று கூறி விளக்கலுற்றனர் அன்பர்களே கேளுங்கள்.

அகிலம்:

நல்ல சடலமிது நாடுமுற் காலமதில்
வெல்லமர்கோன் வாழும் வெற்றிதெய்வ கோலகவுயிர்
பெருசம் பூரணன்தான் பெரிய திறவான்காண்
ஆரொவ்வா ரேயிவர்க்கு ஆதி கிருபையுள்ளோன்
அப்படியே தெய்ட லோகமதி லேயிருக்க
இப்படியே யிவர்க்கு எமலோக மானதிலே
இருக்கின்ற பெண்ணதிலே இசைந்தபர தேவதையென்(று)
ஒருகுழலி தன்மேல் உள்ளாசை யாயிவரும்
அவளு மிவர்பேரில் ஆசையாய்த் தானிருந்து
இவளு மிவரும் இருந்துமிக வாழ்கையிலே
தேவருக்குந் தெய்வ லோகமே ழுள்ளவர்க்கும்
யாவருக்கு மோர்பிறவி யாகுகின்ற நாளதுவாம்
இவரையும் வருத்தி என்னவுன் செய்தியென்றார்

விளக்கம்:

உயர்வான இந்தப் பொன் கூட்டுச் சடலத்தில் இருப்பது ஒரு காலத்தில் தெய்வேந்திரன் வாழுகின்ற வெற்றியையுடைய தெய்வலோகத்தில் வாழ்ந்த சம்பூரணதேவன் என்னும் பெயருடைய ஓர் உயிர் ஆகும். இவன் பெரிய சக்தி உடையவன் ஆவான். இவனுக்கு நிகராக யாரும் இலர். ஆதி இறைவனின் அருள்படைத்தவன் இவன். இப்படித் தெய்வலோகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமயத்தில் இவனுக்கு நிகராக யாரும் இலர். ஆதி இறைவனின் அருள்படைத்தவன். இப்படித் தெய்வலோகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமயத்தில் இவனுக்கு எமலோகத்தில் வாழ்ந்து வந்த பெண்களிலே பரதேவதை என்னும் பெயருடைய பெண்ணின் மேல் காதல் உண்டானது. அவளும் இவன்மேல் ஆகை கொண்டாள். இவ்வாறு இவனும் அவளும் வாழ்ந்து வருகின்ற சமயத்தில் தேவர்கள் வாழும் தெய்வலோம் முதலிய ஏழு லோகத்தில் உள்ளவர்கள் எல்லாரும் பூவுலகில் பிறவி எடுக்கின்ற சமயம் உருவானது. அப்பொழுது எல்லாரும் பூவுலகில் பிறவி எடுக்கச் சம்மதித்தனர். அச்சமயம் சம்பூரணதேவனிடம் திருமாலாகிய நீவிர் நீ பிறப்பதற்கு ஏதாவது தடை உண்டோ என வினவினீர்.

அகிலம்:

அவளுடைய ஆசையினால் அல்லவென்று தான்மறுத்து
இவளையு மென்னோடு இயல்பாய்ப் பிறவிசெய்தால்
குவளையணி மாயவரே குணமெனக் காகுமென்றார்

விளக்கம்:

சம்பூரணதேவன் பரதேவதையின் காதலினால் எனக்குப் பூலோகத்தில் பிறக்க விருப்பமில்லை என்று கூறி மறத்து பரதேவதையையும் என்னோடு எனக்குரிய இயல்புடையவளாகப் பிறவி செய்தால் குவளை மலரை அணிகின்ற மாயவரே எனக்குப் பூவுலகில் பிறக்க மறுப்பில்லை
என்றான்.

அய்யா துணை

அகிலம்:

அப்போது நாதன் அந்தத்தே வன்றனக்குச்
செப்பமுள்ள புத்தி செப்பிமிகப் பார்த்தனரே
அப்போதிவர் கேளாமல் அதுதானது தானென்றார்

விளக்கம்:

அதைக் கேட்ட நீர் சம்பூரண தேவனுக்கு நேர் வழியுள்ள நல்ல புத்திமதிகளைக் கூறி பார்த்தீர். ஆனால் சம்பூரணதேவனோ நீர் கூறியதைக் கேளாது எனக்கு அவள் தான் வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறினான்.

அகிலம்:

மாயனுக்குக் கோபம் மனதில் மிகவாகி
ஆயனப்போ திவர்க்கு அதிகப் பலனுரைத்தார்
நல்லதுநீ கேட்ட ஞாயமீட் டேற்றமதாய்
வல்லவனை நினைந்து மாதுவும் நீதானும்
எங்க ளிருபேர்க்கும் இன்னம் பிறவியிலே
மங்கையும் புருசனென மறவாம லாவதற்கு
வரந்தாரு மென்று மனதில் நினைவேற்றிப்
பரந்தாண்டி கண்டு பலன்பெறுங்கோ வென்றுசொல்லி
தவசிருக்க விட்டீர்காண் சங்கரரே நீர்கேளும்

விளக்கம்:

உடனே, உமக்கு அதிக கோபம் மனதில் உண்டாகி அவனை நோக்கி, தேவனே, நீ கேட்ட நியாயம் நல்லதுதானா? நீ கேட்டபடி ஈடேற வேண்டும் என்றால் பரதேவதையும் நீயும் வல்லவனாகிய இறைவனை நினைத்து எங்கள் இருவருக்கும் இனி வரப் போகின்ற பிறவியில் கணவனும் மனைவியுமாக உருவாவதற்கு வரம் தர வேண்டும் என்று மனதில் ஒரே நினைவை ஏற்றிப் பரநிலை தாண்டி உயர்நிலை கண்டு நீங்கள் நினைத்த பலனைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களை தவசு நிற்பதற்காக அனுப்பினீர்.

அகிலம்:

சிவசிவா வென்றுதவம் செய்தவர்கள் நிற்கையிலே
தவம்பார்க்க ஈசுரரும் சன்னாசி நீதனுமாய்
அவட மெழுந்தருளி அங்கேகும் வேளையிலே
தெய்வேந் திரனும் திருமுடி யுஞ்சூடி
மையேந்திர னுடைய மலர்பாதங் காணவென்று
அவனுமிக வந்தான் அரனெதிரே அய்யாவே

விளக்கம்:

அவ்வாறு அவர்கள் சிவ சிவ என்று தவம் செய்து கொண்டு நிற்கின்ற வேளையில் அவர்களுடைய தவத்தின் நிலையைப் பார்ப்பதற்காக ஈசரும் நீவிரும் அங்கு எழுந்தருள வேண்டிப் போகும் சமயம், தெய்வேந்திரன், உம்முடைய திருமுடியைப் போன்ற ஒரு திருமுடியைச் சூடிக் கொண்டு ஈசரின் மலர்ப் பாதத்தைக் காண ஆசை கொண்டு அவனும் அங்கு ஈசர் எதிரே வந்தான்.

அகிலம்:

தவத்துக் கிடறு தான்வருவ தோராமல்
தேவன் மதிமயங்கித் திருமுடிமே லிச்சைகொண்டு
பாவையுட னுரைத்துப் பற்கடித்தான் தேவனுமே
அதையறிந் திசுரருள் அன்றும்மு டனுரைத்தார்
இதையறிந் துநீரும் ஏற்றதேவ னோடுரைத்தீர்
வாய்த்த தவங்குளறி வாய்க்காமல் நின்றதினால்
ஏற்றகீ ழுலகில் என்மகவு சான்றோரில்
நல்லதர் மகுலத்தில் நன்றாக நீபிறந்து
தொல்லையெல் லாந்தீர்த்துச் சூலினழுக் கறுத்து
வளரும் பருவமதில் வந்துன்னை நானெடுத்து
இளவரசா யுன்னை ஈன்றெடுத் தேவளர்த்து
ஆளு மரசு அழகாக வுன்றனக்கு
நாளு மிகத்தருவேன் நம்மானை தப்பாதென
உறுதிசொல்லித் தேவனையும் உற்ற சான்றோர் குலத்தில்
பொறுதியுள்ள தர்மப் பிதிரில் பிறவிசெய்தீர்

விளக்கம்:

கடினப்பட்டுச் செய்த தமது தவத்துக்கு இடையூறு வருகிறது என்பது தோன்றாமல் சம்பூரணதேவன் தன் அறிவின் உண்மை நிலை புரியாது மயங்கித் தெய்வேந்திரனின் பொய்த் திருமுடிமேல் ஆசை கொண்டான். இது சம்பந்தமாகப் பரதேவதையிடம் யாரும் புரியாவண்ணம் மனத்தோடு மனதாகப் பேசிக் கொண்டான். அதை அறிந்து கொண்ட ஈசர், அன்று உம்மிடம் அதைத் தெரிவித்தார். அதை அறிந்து கொண்ட ஈசர், அன்று உம்மிடம் அதைத் தெரிவித்தார். mஅதை அறிந்து நீர் தேவனை நோக்கி, கைமேல் பலனாக வாய்த்த தவம் சிதறிப் பலன் பெறாமல் நின்ற காரணத்தால் பூவுலகில் என் குழந்தைகளாகிய சான்றோர் இனத்தில் உயர்வான தரும குலத்தில் நல்ல முறையில் நீ பிறப்பாய். அங்கு இப்பிறவித் தொல்லை எல்லாம் தீர்த்து சூலில் உருவாகின்ற விளைகளை அறுத்து, பூவுலகில் வளருகின்ற சமயத்தில் அங்கு நான் வந்து இளவரசனாகிய உன்னை எடுத்து, என் குழந்தையாகப் பெற்றெடுத்து, வளர்த்து ஆளுகின்ற அரசுப் பொறுப்பைச் சிறப்பாக உனக்குத் தருவேன். இது சத்தியம். என் மேல் ஆணை. இது தப்பாது. என்று வாக்குறுதி சொல்லி தேவனைச் சான்றோர் குலத்தில் பொறுமையுள்ள தரும வழியில் பிறவி செய்தீர்.

அகிலம்:

மாதைப் பிறவிசெய்தீர் மக்கள்சான் றோர்குலத்தில்
சூதஎமக் குலத்தில் தோகையரைத் தோன்றவைத்தீர்
அப்படியே முன்னம் அய்யாவே யிவ்வகைக்கு
இப்படியே பிறந்து இச்சடல மென்றுரைத்தார்

விளக்கம்:

அதைப் போலப் பரதேவதையை அதே சான்றோர் குலத்தில் தந்திர குணம் வாய்ந்த எமவழியில் தோன்றச் செய்தீர். அய்யாவே, இப்படியாக இப்பூவுலகக் காரியங்களுக்காகப் பிறந்து வளர்ந்தது இச்சடலம் என்று முனிவர்கள் உரைத்து முடித்தனர்.

அய்யா துணை

அகிலம்:

என்றிந்த விவரமெல்லாம் இயல்முனி வோர்கள் சொல்ல
நன்றிந்த விவர மென்றே நாரணர் தயவு கூர்ந்து
சென்றிந்தச் சடலந் தன்னைச் செந்திலம் பதியி லெங்கும்
கொண்டெந்தத் தெருவுங் காட்டிக் குளிர்ப்பாட்டி வாருமென்றார்

விளக்கம்:

இப்படியாக அப்பொன்கூட்டுச் சடலத்தின் முந்தைய எல்லா விவரங்களையும் திருமாலிடம் முனிவர்கள் கூறினர். உடனே திருமால் இந்த விவரங்களை நீங்கள் கூறியது மிகவும் நல்ல காரியம் என்று கூறி அவர்கள் மேல் கருணை கொண்டு இனி நீங்கள் சென்று அந்த கடலத்தை திருச்செந்தூர்ப்பதி முழுவதும் கூட்டிச் சென்று அங்குள்ள தெருக்களை எல்லாம் சுற்றிக் காட்டி அவ்வுடலை நன்றாகக் குளிப்பாட்டி இங்கே கொண்டு வாருங்கள் என்றார்.

அகிலம்:

மேலுள்ள சடலந் தன்னை மிகுமுனி மாரே நீங்கள்
நாலுள்ள தெருக்கள் தோறும் நடத்தியே தரையி லூட்டிப்
பாலுள்ள பதத்தில் கொண்டு பழவிளை தீரக் காட்டி
மாலுள்ளம் புகுத நாட்டி வாருங்கோ சிணமே யென்றார்

விளக்கம்:

உயர்வான முனிவர்களே நீங்கள் கூறிய அந்தச் சடலத்தைத் திருச்செந்தூரின் நான்கு வழிகள் கொண்ட தெருக்கள் ஒவ்வொன்றிலும் நடைப் பயணமாகக் கூட்டிச் சென்று பூமியில் அங்கப்பிரதட்சணம் செய்வித்து, ஞானப்பால் ஊறும் பதத்தில் பழைய வினைகள் எல்லாம் தீரும்வரை நீராட்டி, திருமால் அவன் உள்ளத்தில் புகும்படி அவனது மனத்தைப் பரிசுத்தமாக நிலை நிறுத்தி சீக்கிரமாக இங்கே வாருங்கள் என கூறி அனுப்பினார்.

அகிலம்:

அப்படி முனிமா ரேகி அங்கங்கே கொண்டு காட்டி
முப்படித் தோசம்போக முனைபத மதிலேமூழ்கி
இப்படி யிவரைக் கொண்டு இவர்வரு முன்னேயாகச்
செப்படி வித்தை நாதன் செகலினுள் ளகமே சென்றார்

விளக்கம்:

இப்படி முனிவர்கள் எல்லாரும் அச்சடலத்தைக் கொண்டு சென்று அவர் கூறிய பகுதிகள் எல்லாம் காட்டி விட்டு முன்வினைத் தோசங்கள் எல்லாம் போகும்படி சுழிமுளை நிலையாகிய பதத்தில் மூழ்கச் செய்து அவ்வுடலை இவர்கள் கொண்டுவரும் முன்பாக எல்லா மாய வித்தைகளும் செய்யும் திருமால் கடலில் உள்ளாகச் சென்றார்.

அகிலம்:

வைகுண்டர் உதயம்:
-------------------------------

வானவர் தேவர்போற்ற மறைமுனி வோர்கள் பாடத்
தானவர் ரிஷிகளோடு தமிழ்மறை வாணர் போற்ற
ஞானமாம் வீணை தம்பூர் நாற்றிசை யதிர வோசை
ஓநமோ வென்று தேவர் ஓலமிட் டாடி னாரே

விளக்கம்:

வானவர்களும், தேவர்களும் மறைமுனிகளும் தானவர்களும், ரிஷிகளும், தமிழ்வாணர்களும் போற்றிப் பாடி நிற்க, ஞானமாகிய வீணை, தம்புரு, ஆகியவை நான்கு திசைகளிலும் இசை பொழிந்து அதிர தேவர்கள் ஓம் நமோ என்று சத்தமிட்டு ஆடினர்.

அகிலம்:

மத்தளத் தொனிகள் வீணை மடமடென் றேற்ற வானோர்
தித்திதெய் தித்தி யென்ன தேவியர் பாடி யாடத்
தத்தியாய்ச் சங்க மெல்லாம் சதுர்மறை கூறி நிற்க
முத்திசேர் மாயன் தானும் மூழ்கினர் கடலி னுள்ளே

விளக்கம்:

மிகவிரைவாக மத்தளம் ஒலிக்கவும், வீணை இசைக்கவும், வானோர்களும் தேவியர்களும், ஆடிப்பாடிடவும், கூட்டம் கூட்டமாகத் தேவர்கள் கூட்டமெல்லாம் நான்கு வேதங்களையும் பாடி நிற்கவும், பக்தர்களை முக்தி நிலையில் சேர்க்கின்ற மாயன் தாமும் கடலினுள்ளே மூழ்கினார்.

அகிலம்:

கடலினுள் ளகமே போந்து கனபதி மேடை கண்டு
மடவிபொன் மகரந் தன்னை வாகுடன் பூசித் தேய்த்து
நிடபதி மாயன் தானும் நிறைந்தபொன் னிறம்போல் வன்னி
வடவனல் போலே வீசி வந்தனர் மகர முன்னே

விளக்கம்:

கடலிலுள்ளே புகுந்து உயர்வு பொருந்திய தாம் தங்கப் போகின்ற மேடையைக் கண்டு, பெண்ணாகிய பொன் மகரத்தை அழகாகப் பூசித் தேய்த்து வைகுண்டத்திற்குத் தலைவரான திருமால், நிறைந்த பொன்நிறத்தைப் போன்ற அக்கினியாக உருவெடுத்து வடவாக்கினி போன்று கடுமையான உஷ்ணத்தையுடைய அனலை வீசிக் கொண்டே மகரத்தின் முன்னால் வந்து சேர்ந்தார்.

அய்யா துணை

அகிலம்:

வந்தனர் மகர முன்னே மாதுபொன் மகரங் கண்டு
செந்தழ லெரியோ வென்று செல்லிடப் பதறி நொந்து
எந்தனின் மான வானோ எரிவட வாச மேர்வோ
கந்தனின் மாய மாமோ என்றவள் கலங்கி னாளே

விளக்கம்:

இப்படி அக்கினியுரு ஆகிய திருமால் மகரத்தின் முன்னால் வரவும், இதை மகரம் கண்டு ஐயோ, இது சிவந்த அக்கினப் பந்தமோ? என்று சொல்லிப் பதறி வருந்தி என் மானத்தைக் காக்கின்ற நாராயணரோ? எரிந்து கொண்டிருக்கின்ற மலைபோன்ற வடவாக்கினையோ? இல்லை என்றால் இது கந்தனின் மாயமோ? என்று மனம் கலங்கினாள்.

அகிலம்:

கலங்கியே மகரந் தானும் கருத்தறிந் தேதோ சொல்லும்
இலங்கியே வருவோ மென்ற என்மன்னர் தானோ யாரோ
சலங்கியே யதிரப் பூமி சதிரெனக் கதிரு பாய
துலங்கிய சுடரைப் பார்த்துச் சொல்லுவாள் மகரந் தானே

விளக்கம்:

இப்படியே மனங்கலங்கி மகர இலட்சுமி, மனதின் எண்ணம் எல்லாம் சிதைந்து ஏதேதோ சொல்லலானாள். உன்னை இனணய வருவோம் என்று ஏற்கெனவே சொன்ன என்னுடைய கணவர் தாமோ? வேறு யாரோ? என்று மீண்டும் உள்ளம் கலங்கினாள். அப்பொழுது பூமி அதிரத் திடீர்திடீர் என அக்கினிக் கதிர்கள் பாய அங்கே தோன்றிய அக்கினியைப் பார்த்து மகர இலட்சுமி பேசலுற்றாள்.

அகிலம்:

சுடரே சுடரே துலங்கு மதிசுடரே
கடலே கடலே கடலுட் கனலாரே
அக்கினிக் கேயபயம் அனலே வுனக்கபயம்
முக்கியமாய்க் காந்தல் முனையே யுனக்கபயம்
தீயே யுனக்கபயம் திரிபுர மேயபயம்
நீசுட்டத் தலங்கள் நினக்குரைக்கக் கூடாது

விளக்கம்:

அக்கினியே, எல்லா இடமும், வெளிப்பட்டுக் கொண்டு அதிகமாகப் பிரகாசிக்கும் சுடரே, அக்கினிக் கடலே, கடலுள் தோன்றும் கனலே, உன்னிடம் அபயம் கேட்கிறேன். அனலே காந்தல் முனையே, தீயே உன்னிடம் அபயம் கேட்கிறேன். திரிபுரத்தை எரித்தவனே, அபயம். மாசற்ற ஈசனாகிய சங்கரனின் உள்ளிருந்து நீ சுட்டு எரித்த இடங்களை உன்னிடமே கூறக் கூடாது.

அகிலம்:

மாசற்ற ஈசன் வல்லவனோ டுள்ளிருந்து
காண்டா வனமெரித்தாய் கடியவில்லி கையிருந்து
ஆண்டஇலங் கையெரித்தாய்அனுமன்கையி லேயிருந்து
முப்புரத்தைச் சுட்டழித்தாய் முதன்மைகையி லேயிருந்து
ஒப்புரவாய் நீயெரித்த உவமைசொல்லக் கூடாது

விளக்கம்:

பலம் பொருந்திய அர்ச்சுனனின் கையில் இருந்து காண்டாவனத்தை எரித்தாய். முப்பொருளுக்கும் முதற்பொருளான ஈசன் கையில் இருந்து முப்புரத்தையும் சுட்டு அழித்தாய். நீ எரித்து அழித்த செயலுக்கு உவமை மூலம் ஒப்புமை சொல்ல முடியாது.

அகிலம்:

அனலே வுனக்கபயம் ஆதி யுனக்கபயம்
கனலே யமருமையா காந்தல்தனை மாற்றுமையா
மன்னரரி நாரணர்க்காய் மாறுவீ ரக்கினியே

விளக்கம்:

எனவே, அனலே, ஆதியே உன்னிடம் அபயம் கேட்கிறேன். கனலே நீ இங்கே அமருவாயக, என்னுடைய காந்தல் உணர்வை மாற்றுவாயாக. என்னுடைய கணவர் திருமாலுக்காக உன்குனத்தை மாற்றிக் கொள்வாயாக்.

அகிலம்:

இந்நியல்பை யெல்லாம் என்மன்ன ரிங்குவந்தால்
சொல்லி யுனக்குச் சொக்கம்வேண் டித்தருவேன்
வில்லிக்கு வல்லவனே விலகி யமருமையா

விளக்கம்:

உன்னுடைய இந்த இயல்பை எல்லாம் என் கணவர் இங்கு வந்தால் அவரிடம் சொல்லி உனக்குச் சொர்க்கநிலை வாங்கித் தருவேன். அர்ச்சுனனுக்கும் வல்லவனே, நீ விலகி அமருவாயாக.

அகிலம்:

என்னையென் மன்னவர்தான் இந்தக் கடலதிலே
பொன்னனைய நன்மகரம் ஆகவே போகவிட்டார்
வருவோ மென்றநாளும் வந்ததுகா ணக்கினியே

விளக்கம்:

என்னுடைய கணவர் இந்தக் கடலினுள்ளே பொன்னைப் போன்ற நல்ல மகரமாக வளருவதற்காக என்னை அனுப்பி வைத்தார். அவர் வருவேன் என்று கூறிய நாளும் இதோ வந்துவிட்டது.

அகிலம்:

தருவே னுனக்குவரம் தாட்டீகன் வந்ததுண்டால்
அமர்ந்துநீ போனால் அதிகப்பல னுண்டாகும்
சுமந்த பறுவதத்தின் சுகம்பெற்று நீவாழ்வாய்
என்றுமக ரமாது எரியைமிகக் கண்டுளறி
நின்று மயங்குவதை நெடியதிரு மாலறிந்து

விளக்கம்:

எனவே அக்கினியே, உனக்கு என் கணவர் வந்தவுடன் வேண்டிய வரங்களைத் தருவேன். நீ இங்கே அமர்ந்துவிட்டுப் போய்விட்டால் உனக்கு அதிகமான நல்ல பலன்கள் உண்டாகும். சிறப்புப் பொருந்திய உயர்வான நிலையில் நீ சுகம் பெற்று வாழ்ந்திடுவாய் என்று மகரப்பெண் அக்கினியைக் கண்டு மனம் உளறி மயக்கமடைந்து நின்றாள்.

அகிலம்:

அனலைமிக வுள்ளடக்கி ஆதி யுருக்காட்டி
மனைவியேநீ வாவெனவே மாய னருகழைத்தார்

விளக்கம்:

இதைக் கண்டு நெடிய திருமால், அனல் முழுவதையும் உள்ளடக்கித் தம்முடைய உண்மை உருவை அவளிடம் காட்டி, அவளை நோக்கி, என் அருமை மனைவியே, நீ என் அருகில் வருவாயாக என்று அழைத்தார்.

அய்யா துணை

அகிலம்:

உடனே பொன்மாது உள்ளம் மிகநாணி
தடதடென வந்து சுவாமியடி யில்வீழ்ந்து
எந்தன் பெருமானோ இப்படித்தா னின்றதுவோ
சிந்தை மயக்குதற்கோ தீப்போலே வந்ததுதான்
என்றுமிகப் பொன்மகர இளமாது ஸ்தோத்தரித்து

விளக்கம்:

உடனே பொன்மகரப் பெண்ணாகிய இலட்சுமிதேவி மனதில் வெட்கம் அடைந்து விரைவாக வந்து திருமாலின் கால்களில் விழுந்து வணங்கி, இது என்னுடைய பெருமானோ? இப்படித்தான் அக்கினியாக நிற்கிறதோ, தீயைப் போன்று வந்தது என்னுடைய உள்ளத்தை மயக்குவதற்கோ? என்று மகரமாகிய இளமை பொருந்திய இலட்சுமி கூறி வணங்கினாள்.

அகிலம்:

மன்று தனையளந்தோர் வாநீ யென அழைத்து
அருகில் மிகநிறுத்தி அங்குள்ள தேர்பதியும்
கருதி யிருபேரும் கண்கொண் டுறப்பார்த்து
வச்சிர மேடை மரகதப் பொன்மேடை
எச்சரிக்கை மேடைஎல்லா மிகபார்த்து

வி்ளக்கம்:

இதைக் கேட்ட உலகளந்த திருமால் இலட்சுமியே, நீ என் அருகில் வருவாயாக என்று கூறி அருகில் அழைத்து நிறுத்தினார். பிறகு அங்கே அமைந்திருந்த தேரைப் போன்று உயர்ந்த பதியின் மேடை உருவை ஒரே எண்ணத்தோடு இருவரும் தமது கண்களினால் பார்த்தனர். அப்பதி மேடை வச்சிர மேடை என்றும் மரகதபொன் மேடை என்றும் எச்சரிக்கை மேடை என்றும் கூறப்படுகிறது. அந்த மேடையை அவர்கள் தெளிவாக பார்த்தனர்.

அகிலம்:

மாதே வுனக்கு வளர்பிறவி பத்தெனவும்
சீதே வுனக்குச் சிறந்தபேறு பத்ததிலே
பலம்பேறு பேறாய் பார்மகிழ வோர்பாலன்
சிலம்பே றுடையவனாய் சிவனுக் குகந்தவனாய்
எகாபர முமகிழ யானும் நீயுமாக
மகாகுரு வதாக மகிழ்ந்து மகிமையுடன்
தன்மச் சிறப்பதிகத் தலைவன் தனைப்பெறவே
உண்மையாய் நானுனக்கு உபதேச மாயுரைத்தேன்

விளக்கம்:

பிறகு திருமால் இலட்சுமிதேவியை நோக்கி அன்புப் பெண்ணே, உனக்கு உருவாகியுள்ள பிறவிகள் பத்து ஆகும். சீதையாகிய உனக்குச் சிறந்த பெயர்கள் பத்திலே மிகவும் பலம் பொருந்திய பெயர் உண்டாக வேண்டும். அதற்காக உலகு மகிழும்படி நானும் நீயுமாக இணைந்து தருமபதியை ஆளும் சிறப்புகளைப் பெற்ற தலைவனாகிய வைகுண்டர் என்னும் குழந்தையைப் பெற வேண்டும். அக்குழந்தை சிறந்த புகழுடையதாகவும், ஏகாபரனாகிய சிவனுக்கு ஏற்றவனாகவும், மகாகுருவாகவும், மகிழ்ச்சி பொங்கச் சகல சக்தியுடனும் பிறக்கும். அதற்காகவே இதைப் பற்றி உண்மையாக நான் உனக்கு உபதேசமாக உரைத்தேன் என்றார்.

அகிலம்:

என்றுரைக்க நாரணரும் இளமகர மேதுசொல்லும்
பண்டு அமைத்திருந்தால் பக்கஞ்சொல் வதோ அடியாள்
சித்தத்துக் கேற்ற செயலெனவே பொன்மகரக்
கற்றைக் குழலி கருதி மிகவுரைத்தாள்

விளக்கம்:

உடனே, இளமையான மகரமாகிய இலட்சுமிதேவி, ஏற்கெனவே இத்தகைய விதி அமைக்கபட்டிருந்தால் அடியாளாகிய நான் அதற்கு மாறாக ஏதாவது சொல்ல முடியுமோ? தங்கள் மனத்துக்கு ஏற்ற செயலே எனது செயலாக அமையும் என அதிக கூந்தலையுடைய மகர இலட்சுமி உரைத்தாள்.

அகிலம்:

உடனே பொன்மகரம் உள்ளம் மயக்கமிட்டுத்
திடமயக்கிச் சிங்கா-சனத்தில் மிகவிருத்தி
மயங்கியே பொன்மகர மாது மிகவிருக்கத்
தியங்குதே லோகமுதல் திரைவாயு சேடன்முதல்
ஈசர்முத லாதிமுதல் ஏற்றதெய் வார்கள்முதல்
சீதை முதல்மயங்க சீமையீரே ழுமயங்க
மாமோகச் சக்கரத்தை மாயவனார் தான்வீசிச்
சீமை யெழுகடலும் சிணமே மயக்கினரே
மயக்கியந்த மால்மகரம் மாமோக மாயிருக்க
தியக்கியந்த நாரணரும் சென்றார் மதுரமதுள்

விளக்கம்:

இதைக் கேட்ட திருமால் தம்மிடமிருந்த மிகுந்த காம மோகத்தைக் கொடுக்கும் சக்கரத்தை வீசினார். உடனே மகர இலட்சுமியின் மனம் மயங்கி அருகில் இருந்த சிங்காசனத்தில் அமர்ந்தாள். அச்சமயம் இவ்வுலகம் முழுவதும் மயக்கம் கொண்டது. கடல் திரை, காற்று, ஆதிசேஷன் பாம்பு போன்றவையும் ஈசர் முதலியவர்களும், உயர்வான தேவர்களும், கன்னிகளும் மயக்கமுற்றனர். இலட்சுமி முதல் பதினான்கு உலகங்களும் மயக்கமுற்றன. இவ்வாறு திருமால் உலகங்களையும் கடல்களையும் மயக்கினார். மயக்கப்பட்ட திருமாலின் மனைவி மகர இலட்சுமியும் மிகுந்த காம இச்சை உருவாகி அங்கே இருக்க, திருமால் இன்னும் அதிக காமமயக்கத்தை தமக்கும் உண்டாக்கி மகரத்துள் சென்றார்.

அய்யா துணை

அகிலம்:

மகரமுள் சென்று மகனை மிகநினைக்க
உகரமுனி கூட்டிவந்த உற்ற சடலமது
சிணமே கடலுள் சென்றதுகா ணன்போரே
குணமே குணமெனவே கூண்டரியோன் தான்பார்த்து
மகனை மிகவெடுத்து மகரமதி னுள்ளேகொண்டு

விளக்கம்:

மகரஇலட்சுமியின் முன்னால் சென்று திருமால் தம்மகனை தியானித்தார். உடனே உகர முனிவர்களாகிய ஞானமுனியும், காலமுனியும் அச்சடலத்ததை கடலுக்குள் அழைத்து வந்தனர். ஐம்புலனும் அடக்கப்பட்டு சடத்தன்மையோடு இருந்தவர் திடீரென்று கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். அச்சமயம் மகனை திருமால் பார்த்து தகுதி வாய்ந்த நல்ல குண நிலையில் இப்போது இருக்கின்றான் என்று எண்ணிக் கொண்டே திருமால் அவனை நோக்கி சென்று மகனை அன்போடு எடுத்துத் தாம் இணைந்து கொண்டிருக்கும் மகர இலட்சுமியினுள் அழைத்துச் சென்றார்.

அகிலம்:

அகரத் தெருவறையில் அலங்காரத் தட்டில்வைத்துக்
காலொன்றாய் நிற்கும் கனத்தபொன் மேடையதுள்
நாலொன்றாய்க் கூடும் நல்லசிங் காசனத்தில்
தங்கவை டூரியத்தால் தானிறைந்த மண்டபத்துள்
எங்கும் பிரகாசம் இலங்குகின்ற மண்டபத்துள்
முத்துக்கள் சங்கு முழங்குகின்ற மண்டபத்துள்
பத்தும் பெரியோர்கள் பாவித்த மண்டபத்துள்
தங்கநீ ராவித் தான்வளரு மண்டபத்துள்
சங்கு முழங்கிநிற்கும் சதுரமணி மண்டபத்துள்
மூவாதி கர்த்தன் உகந்திருக்கு மண்டபத்தில்
தேவாதி தேவர் சிறந்திருக்கு மண்டபத்தில்
ஆயிரத் தெட்டு அண்டம்நிறை மண்டபத்தில்
தாற்பிரிய மான தாமிரவர்ணி மண்டபத்தில்
எண்ணக் கூடாத இயல்புநிறை மண்டபத்தில்
மண்ணளந்தோர் மகரமதுள் மகனை மிக இருத்திக்

விளக்கம்:

மகர இலட்சுமியின் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டவரை அகரத் தெருவை உடையதுவும், தங்கம் வைடூரியம், முதலியவற்றால் அமைக்கப்பட்டதுவும், எங்கும் பிரகாசித்துக் கொண்டிருப்பதுவும், எப்பொழுதும் முத்துக்கள், சங்குகள் ஒலி செய்து கொண்டிருப்பதுவும், அகரம் உகரம் ஆகிய பத்தும் அறிந்த பெரியோர்கள் வாழுவதுவும் தங்கத்தால் ஆகிய நீர் நிரம்பியிருக்கின்ற கடல் அமைந்ததுவும், சங்கு முழங்கிக் கொண்டிருப்பதுவும், சதுர மணி பொருந்தியதுவும், மூவருக்கும் முதல்வோன் மகிழ்ந்து அமர்ந்து இருப்பதுவும், தேவாதி தேவர்கள் எல்லாரும் வாழ்ந்து வருவதும், ஆயிரத்து எட்டு ஆண்டங்களும் நிறைந்து இருப்பதுவும், மிகவும் சிறந்த உண்மையான தாம்பிரபரணி ஆறு ஓடுவதுவும், சிந்திக்க முடியாத அமைப்புகள் அமைந்ததுவும், ஆகிய மண்டபத்தினுள் ஓரு காலோடு நிற்கும் அழகு பொருந்திய பொன் மேடையில் நான்கு வழிகள் ஒன்றாகக் கூடி நிற்கின்ற நல்ல சிங்காசனத்தில், அலங்காரத் தட்டின் மேல் திருமால் தன் மகனை அமரச் செய்தார்.

அகிலம்:

கண்ணான மகற்கு கனத்ததங்கச் சட்டையிட்டு
எண்ணவொண்ணா ஆபரணம் எல்லா மெடுத்தணிந்து
தங்கக் குல்லாவும் தலைமேலே தூக்கிவைத்துப்
பங்கமில்லாத் தைலப் பதத்தில் மிகமூழ்கி
வைகுண்ட வெள்ளை மான்பட்டொன் றேயெடுத்துக்
கைகொண்டு பாலனுக்குக் கண்ணர் மிகச்சூடி

விளக்கம்:

இவ்வாறு இவ்வுலகை அளந்த திருமால் மகர இலட்சுமியினுள் தம் மகனை அழகுபட இருத்தி தமது கண்கள் போன்ற அந்த மகனுக்கு அழகு பொருந்திய தங்கத்தால் ஆகிய உடுப்பு அணிவித்து, எண்ணுவதற்கு அரிய சிறந்த ஆபரணங்கள் எல்லாம் அணிவித்து, தங்கத் தொப்பியை தலையின் மேல் தூக்கி வைத்து எந்த விதத் தீமையும் இல்லாத தைலப் பதத்தில் அவரை மூழ்கச் செய்தார். பிறகு வைகுண்ட வெள்ளை மான் பட்டு ஒன்றை எடுத்து தமது கையினாலேயே தம் பாலனுக்கு திருமால் அன்பாக சூட்டி வைகுண்டர் ஆக்கினார்.

அய்யா துணை

அகிலம்:

மேலுக ளொக்க மினுமினுக்கப் பச்சையிட்டுக்
காலுக ளுக்குத்தங்கக் கழராப் பணிகளிட்டு
மகனை யெடுத்து மடிமீதி லேயிருத்தி

விளக்கம்:

பிறகு அவர் உடலில் முத்துக்களை அணியச் செய்து கால்களுக்குக் கழன்று போகாதவண்ணம் தங்கத்தாலாகிய ஆபரணங்கள் அணிவித்து மாற்றுப் பிறப்பில் பிறந்த வைகுண்டர் என்னும் ஆன்மீகக் குழந்தையை எடுத்து தமது மடிமீது அமர்த்தி

அகிலம்:

உகமாள வந்தவனோ உடையவனோ என்றுசொல்லிக்
கண்ணைத் தடவி கரிய முகந்தடவி
எண்ணும் வளர்வாயென்று இசைந்தமுகத் தோடணைத்துப்

விளக்கம்:

மகனே, இந்த யுகத்தை ஆள வந்தவன் நீ. நீ இவ்வுலகம் எல்லாவற்றுக்கும் உரிமையுடையவன் என்று சொன்னார். பிறகு தமது அன்பான ஆன்மீகக் குழந்தையின் கண்களையும் கரிய முகத்தையும் இதமாகத் தடவிக் கொடுத்து சிறப்பாக நீ வளர்ந்து வருவாயாக என்று மலர்ந்த முகத்தோடு கூறி, தமது முகத்தோடு அவர் முகத்தையும் சேர்த்து அணைத்து

அகிலம்:

பாலனைப் போல்காட்டிப் பதினா றுடன்காட்டி
நாலுரண்டு காட்டி நல்ல மகவதுக்கு
நடக்கக் கருமம் நவின்றிடவே நாரணரும்
அடக்க முடனே அருளுவா ரன்போரே
நல்ல வுபதேசம் நன்மகவுக் கேயருளி
வல்லத் திருநாதன் வகுக்கிறா ரன்போரே

விளக்கம்:

முப்பூ நிலையடைந்த அவரை ஆன்மீகக் குழந்தையாக முதலில் தோன்றச் செய்து பிறகு பதினாறு வயதுடைய வளர்ந்த குழந்தையாக மாற்றி அமைத்து அகரம் பற்றி அக்குழந்தைக்கு புரிய வைத்தார். பிறகு வைகுண்டர் செய்ய வேண்டிய செயல் முறைகளை எல்லாம் ஒழுங்காக அடக்கம் நிறைந்ததாக விளக்க சிறந்த பல உபதேசங்களை அந்த நல்ல குழந்தைக்கு ஒவ்வொன்றாகத் திருமால் உபதேசித்து அருளுகின்றார் அன்போரே.

அகிலம்:

விஞ்சையருளல்:
--------------------------

தேடிய மறைநூல் வேதன் தேவியர்க் கமல நாதன்
நாடிய இறையோன் ஞானி நாச்சிமார் தேவ ரோடும்
கூடிய ரிஷியோர் வானோர் குவலய மறியா விஞ்சை
தேடிய மகனார்க் கென்று செப்பினா ரொப்பில் லானே

விளக்கம்:

வேதங்களில் தேடப்பட்டுக் கொண்டிருக்கின்றவரும், தேவியர்க்கு அன்புக்குரியவரும் ஆகிய ஒப்பில்லாத திருமால், எல்லாரும் விரும்புகின்ற ஈசரும், ஞானிகளும், கற்புள்ள கன்னிகளும், தேவர்களும், ரிஷிகளும் வானலோகத்தோரும் உலக மாந்தர்களும்கூட அறிய முடியாத உபதேசத்தைத் தாமே தேடித் தம்முடைய மகனாக அடைந்த வைகுண்டருக்கு அருளினார்.

அகிலம்:

மகனே வுனது மனமறிய மறையோ ரறியா விஞ்சைசெய்து
அகமே யருளித் தருவதெல்லாம் அனுப்போ லசலில் விலகாதே
உகமே முடிந்த தின்பிறகு உதிக்குந் தர்மயுகத் தில்வந்தால்
செகமே யறியச் சொல்லிமிகச் சிறந்தே வாழ்ந்து வாழ்வோமே

விளக்கம்:

மகனே, வேதங்கள் அறிந்தவர்கள் கூட அறிய முடியாதவை இந்த உபதேசங்கள். இவற்றை உன் மனம் அறியும் வகையில் நான் அருளுகின்றேன். இந்த உபதேசங்களிலிருந்து ஒரு அணு அளவுகூட மாறி நடந்துவிடாதே. இக்கலியுகம் முடிந்த பிறகு உண்டாகப் போகின்ற தருமயுகத்தில், நீ ஆட்சி புரிய வேண்டி வரும்போது இவ்வுலகம் அறியும்படியாக மக்களுக்கு இவற்றை எடுத்துக் கூறிச் சிறந்த முறையில் நீ ஆட்சி புரிந்து வருவாயாக.

அய்யா துணை

அகிலம்:

ஆண்டா யிரத்து எட்டதிலே அதனே மாத மாசியிலே நான்றாங் கடலின் கரையாண்டி நாரா யணனே பண்டாரம்கூண்டாந் தெச்ச ணாபுரியில் கொண்டோம் பள்ளி தர்மமுற்றுஒன்றாம் விஞ்சை யிதுமகனே உரைப்பேன் ரண்டாம் விஞ்சையதே

விளக்கம்:

ஆயிரத்து எட்டாம் ஆண்டில் மாசி மாதம் முதல் நானே தான் கடலின் கரை ஆண்டியாகவும், நாராயணராகவும், பண்டாரமாகவும், நாம் கூடி இருக்கின்ற இந்த தெச்சணாபுரியல் தரும நிலையில் பள்ளி கொண்டேன் என்று திடமாகச் கூறுவாயாக. இதுவே நான் உனக்குக் கூறுகின்ற முதலாம் விஞ்சை. இனி நான் கூறப்போகின்ற இரண்டாம் விஞ்சையை நீ கேட்பாயாக.

அகிலம்:

வேண்டாம் வேண்டாங் காணிக்கையும் மிகவே வேண்டாங் கைக்கூலிஆண்டார் நாரா யணன்தனக்கு அனுப்போல் வேண்டாங் காவடியும்வேண்டா மெனவே நிறுத்தல்செய்து வாய்த்த சிறையாய்க் கவிழ்ந்திருநீஇரண்டாம் விஞ்சை யிதுமகனே நவில்வேன் மூன்றாம் விஞ்சையதே

விளக்கம்:

காணிக்கை, கைக்கூலி ஆகியவற்றை எக்காரணத்தை முன்னிட்டும் வாங்க வேண்டாம். இவ்வுலகை ஆண்டு கொண்டிருக்கும் நாராயணராகிய எமக்கு அணு அளவுகூட காவடி எடுத்தல் முதலிய விழாக்களும் வேண்டாம் என்று கூறி இவற்றை எல்லாம் தடை செய்து நீ சிறையில் இருப்பது போன்று மனக் கட்டுப்பாட்டோடு வாழ்ந்து வருவாயாக. இதுவே நான் கூறும் இரண்டாம் விஞ்சை. இனி மூன்றாம் உபதேசத்தைக் கூறப் போகின்றேன். கேட்பாயாக.

அகிலம்:

கொற்றவர் தானு மாண்டு குறும்புகள் மிகவே தோன்றிஉற்றதோர் துலுக்கன் வந்து உடனவன் விழுந்து வோடிமற்றதோ ராண்டு தன்னில் வருவோ மென்றா கமம்போல்முத்தலத் தோருங் காண உரைத்தனர் மூன்றாம் விஞ்சை

விளக்கம்:
நீதியுள்ள அரசர்கள் இறப்பு எய்தித் தவறான வழி முறைகளும், ஆட்சிகளும் உலகில் தோன்றும். அப்பொழுது துலுக்கன் ஒருவன் நாட்டைப் பிடிக்கத் தெட்சணாபூமிக்கு வந்து தோல்வியுற்று ஓடிடுவான். அதன் பிறகு சிறந்த ஓர் ஆண்டில் இப்பூவுலகில் வைகுண்டர் தோன்றுவார் என்னும் ஆகமச் சொல்லை போன்று மூவுலகத்தோரும் அறியும்படியாக இந்த மூன்றாம் விஞ்சையைத் திருமால் அருளினார்.

அகிலம்:

நல்ல மகனே நாலாம் விஞ்சைகேளுவல்ல நடுஞான வாய்த்த வைகுண்டமது
பிறந்துகொண் டிருக்கெனவும் புதிய நக்ஷத்திரத்தில்அறந்தழைக்க நன்றாய் அதுகுதிக்கு மென்றுசொல்லுமாழுவது மாண்டு மனதுகந்த தேமுழிக்கும்முழுவதை நீக்கி முழிப்பதுவே கண்டுகொள்ளும்

விளக்கம்:

அருமையான மகனே நான்காம் விஞ்சையை இனிக் கூறப்போகின்றேன். உயர்வான ஞானம் வாய்க்கப் பெற்ற தருமபூமி பிறந்து கொணடிருக்கின்றது என்றும் புதிய நட்சத்திரத்தில் உலகில் அறம் தழைப்பதற்கு வேண்டித் தருமபூமி வெளிப்படையாகக் குதித்து வெளிப்படும் என்றும் சொல்லு. அப்போது அழிந்து போகக் கூடியவை எல்லாம் அழிந்து விடும். உனது மனதுக்கு இயைந்தவர்களே ஆன்மீக விழிப்புற்று எழுவர். அவ்வாறு அழிகின்றவை அழிக்கப்பட்டு ஆன்மீக விழிப்புற்று எழுபவர் தருமபூமியை அறிந்து கொள்ளுவர்.

அகிலம்:

ஒருநெல் லெடுத்து உடைக்கநாடு கேட்டுக்கொள்ளும்இருநெல் லெடுத்து உடைக்கநாடு தாங்காதுமலைக ளுதிர்ந்துவிடும் வான மழிந்துவிடும்தலைநாட் சேத்திரமும் தானுதிரும் ஆலங்காய்போல்என்றுநா லாம்விஞ்சை இதுதானே என்மகனேசத்தமொன் றானதிலே தானிதெல்லா மாகுமென்றுசித்த முடனே செப்பியிரு என்மகனே

விளக்கம்:

ஒரு நெல்லெடுத்து உடைக்கும் நேரத்துக்குள் தருமபூமி காணத் தகுதியுள்ள ஆன்ம விழிப்புற்றவர்களின் உண்மை நிலையை நான் சோதித்து அறிந்து கொள்ளுவதை நாடு தெரிந்து கொள்ளும். தருமயுகம் தோன்றும் சமயம், இரண்டாவது நெல் எடுத்து உடைக்கும் நேரத்துக்குள், ஆலமரத்தில் இருக்கின்ற காய்கள் எல்லாம் உதிர்ந்து விடுவதைப் போன்று ஆத்மீக விழிப்புற்றவனது நினைவிலுள்ள உலக விவகாரங்களாகிய மலைகள், வானம், தலைக்கு மேலே காட்சி அளிக்கின்ற நட்சத்திரங்கள் ஆகிய மாயை இவை எல்லாம் அவன் நினைவிலிருந்து அகன்று நிற்கும். இதுவே நான்காம் விஞ்சை
ஆகும்.

இந்த உபதேசங்கள் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கும் விளக்கு போன்ற ஒன்றைக் கூறப் போகிறேன். மகனே கவனமாகக் கேள். அ, உ, ம், கூடிய ஓம் என்னும் ஓசையின் மூலமாக இந்த உபதேசங்கள் எல்லாம் கைக்கூடும். இதை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டு உபதேசித்து வா.

அகிலம்:

தேவர்களுக்குரிய உபதேசங்கள்:
=========================

ஆயிரத் தெட்டு அதில்வாழுந் தேவருக்குவாயிதமாய் விஞ்சை வகுப்பேன்கே ளென்மகனே

நாட்டுக் குடைய நாரா யணர்தானும்ஆட்டுக் கொடைபூசை அனுப்போலும் வேண்டாமென்றுசொல்லியே தர்மமுற்றுச் சிறையாகத் தானிருக்கத்தொல்லுலகி லாரேக்கார் பார்ப்போமென்று சொல்லிடுநீ

விளக்கம்:

ஆயிரத்து எட்டாம் ஆண்டாகிய உன் கால்தில் உலகில் பிறக்கப் பேறு பெற்ற தேவர்களுக்கு நற்பேறு அடையும் வழியாக நான் கூறுகின்ற உபதேசங்களை நீ கேட்பாயாக.

இவ்வுலகத்துக்குரிய நாராயணராகிய நீ ஆடு வெட்டி நடத்துகின்ற பூஜைகளை அணு அளவுகூட செய்ய வேண்டாம் என்று சொல்லிவிடு. இப்பூவுலகு தருமபூமி நிலையடைய நான் (திருமால்) சிறைவாசம் போன்று இருக்கின்ற காரணத்தால் பழமை பொருந்திய பூமியில் அப்பூசையை ஏற்றுக்கொள்ளும் தெய்வம் யாராவது உள்ளனரா? என்று சவால்விட்டுக் கூறு.

அய்யா துணை

பேய்களுக்குரிய உபதேசங்கள்:
============================

அகிலம்:

தூறான பேய்களுக்குச் சொல்லு முறைகேளு
வாறான நாரணர்தான் வாய்த்ததர்ம மேநினைத்துக்
கவிழ்ந்து சிறையிருக்குங் காரணத்தா லோகமெல்லாம்

விளக்கம்:

கீழ்தன்மையான பேய்களுக்கு நீ கூற வேண்டிய உபதேச மொழிகளைக் கூறுகின்றேன். கேட்பாயாக. எல்லாவழிகளுக்கும் காரணமாக இருக்கும் நாராயணர் தாம் வரப் போகின்ற தருமபூமியை நினைத்து மனமடக்கிச் சிறைவாகம் போன்று தவம் இருக்கின்ற காரணத்தால்

அகிலம்:

உவந்து திரியும் உயிரிப்பிராணி யாதொன்றையும்
இரத்த வெறிதீபம் தூபமிலைப் பட்டைமுதல்
சற்றும் வெலிபாவம் தான்காண ஒட்டாதெனத்
தர்மம் நினைத்துத் தவசிருக்கேன் நாரணனும்
உற்பனமா யறிந்தோர் ஒதுங்கியிருங் கோவெனவே
வீணப் பசாசறிய விளம்பியிரு என்மகனே

விளக்கம்:

இவ்வுலகில் ஊர்ந்து திரிகின்ற எந்தவித உயிர்ப்பிராணியையும் கொன்று பலியிடவோ, வேறு வகையான இரத்தவெறி பூஜை செய்யவோ, தீபதூபம் காட்டவோ, இலை, பட்டை போன்றவை கொண்டு பூஜை செய்யவோ கூடாது. அவற்றை நாம் காண்பதுகூட தகாது. நான் தருமபூமியை நினைத்துத் தவசு இருப்பதால் இதன் உண்மையை அறிந்தவர்கள் இத்தகைய பூஜை, பலி ஆகியவற்றிலிருந்து விலகி இருப்பீர்களாக என்று வீணான பிசாசுகள் அறியும்படி சொல்லி விடு.

வைகுண்டருக்குரிய உபதேசம்:
============================

அகிலம்:

நாண மறியாமல் நன்றிகெட்ட நீசர்குலம்
மட்டை யெடுத்தடிப்பார் மண்கட்டி கல்லெறிவார்
சட்ட மசையாதே தன்னளவு வந்தாலும்
நாட்டைக் கெடுத்த நவின்றகலிச் சக்கரத்தில்

விளக்கம்:

தமக்குச் செய்த நன்றியைப் பற்றிச் சிறிதுகூட எண்ணாத நீசக்குலம், வெட்கமின்றி மட்டை எடுத்து உன்னை அடித்திடுவர். அவர்கள் மண்கட்டி கொண்டும், கல் கொண்டும் உன்னை எறிந்து துன்புறுத்துவர். உன் உடம்பு அழியக்கூடிய நிலை வந்தாலும் உனக்கு நான் கூறிய உபதேசகச் சட்ட விதி முறைகளை விட்டு மாறாதே. இந்த நாட்டைக் கெடுத்தாகக் கூறப்படும் கலி வாழும் பூமியில் சிறிது அளவுகூட தவறு செய்துவிடாதே.

அகிலம்:

ஓட்டைக் கலத்ததிலும் உக்கு மிரும்பதிலும்
முழியாதே யென்மகனே மும்முதற்கும் நாயகமே
அழிவாகிப் போகும் அன்புகெட்ட நீசருடன்
பொய்யரோ டன்பு பொருந்தி யிருக்காதே
மெய்யரோ டன்பு மேவியிரு என்மகனே

விளக்கம்:

ஓட்டை மரக் கலத்தைப் போன்ற மனிதர்களின் முகத்திலும் துருப்பிடித்த இரும்பைப் போன்ற மனிதர்களின் முகத்திலும் உமது தவக் காலம் முடியும்வரை நீ ஏறிட்டுப் பாராதே. என் மகனே, மும்முதல் பொருளுக்கும் தலைவனே, அழிந்து போகின்றவனும், அன்பு கெட்டவனுமாகிய நீசருடன், பொய் பேசுபவரோடும் அன்பு கொண்டு வெளிப்படுத்தி இணைந்து வாழ்ந்து வா.

அகிலம்:

வர்மமதை வதைக்க வந்தேனெனச் சொல்லிமிகத்
தர்ம மதைவளர்க்கத் தரணியில் வந்தேனென்று
இம்முதலே யாறு இருப்பே தவசுபண்ணி
மும்முதலோ னாகி முறைநடத்து என்மகனே
மூக்குச் சுழியும் முச்சுளியும் முத்திமுத்தி
நோக்குச் சுழியாய் நேர்நில்லு என்மகனே

விளக்கம்:

வறுமையை ஒழிக்க இவ்வுலகில் நான் அவதாரம் எடுத்தேன் என்றும், தர்மம் பெரிது என்றும் உபதேசித்து வா என் மகனே. இப்பொழுது முதலே ஆறு வருடத் தவசை ஆரம்பித்து முப்பொருளுக்கும் முதற் பொருளாகி நீ செயல் படுத்துவாயாக. மூக்கில் வருவாகும் சுழிகளையும் தெளிவாகக் கண்டறிந்து எல்லாம் அறியக் காரணமாக இருக்கும் சுழிமுனை மயமாய் நிலை நிற்பாயாக.

அகிலம்:

பரமான பட்டணத்தில் பார்வைகொண் டேநாட்டிச்
சிரமானது விரித்துச் சிறையே யிருமகனே

விளக்கம்:

உன் இரு கண்களின் பார்வைகளும் பரம்பொருள் இருக்கின்ற சகஸ்ரார பட்டணத்தை நோக்கியவண்ணம் இருக்கட்டும். உன் தலை முடியை விரித்துப் போட்டுச் சிறையில் இருப்பவரைப் போன்று நீ வாழ்ந்து வா.

அகிலம்:

ஏற்பதுபால் பச்சரிசி இருப்பது பார்மேலாகும்
காப்பதுமா தர்மம் கண்ணே திருமகனே

விளக்கம்:

நீ உண்ணக் கூடியவை பாலும் பச்சரிசியுமாக இருக்கட்டும். உன் நினைவு இருக்க வேண்டிய இடம் உன்னுள்ளே காணக்கூடிய பரம்பொருளின் இருப்பிடம் ஆகும். என் கண்ணே திருமகனே, நீ மாபெரும் தருமத்தைக் காக்க வேண்டும்.

அகிலம்:

சந்தன வாடை சாந்துசவ் வாதுபுஸ்பம்
எந்தன் திருமகனே எள்ளளவும் பாராதே

விளக்கம்:

எனவே, அதை அடைவதுவரை சந்தனம், சாந்து வகைகள், சவ்வாது, பூக்கள் ஆகியவற்றின் இனிய மணத்தினை நீ சிறிதளவுகூட நுகர்ந்து பார்க்காதே.

அகிலம்:

வாடைபூ தீபம் மகிழாக் கலியுகத்தில்
நாடை யழித்து நல்லயுக மேபிறந்தால்
சொல்ல வொண்ணாத சுகந்தருவே னென்மகனே

விளக்கம்:

இவ்வாறு பூ தீபம் போன்றவற்றின் வாசனையை நுகர்ந்து மகிழக்கூடாது. இந்தக் கலியுகம் அழிக்கப்பட்டுத் தருமயுகம் பிறக்குமானால் அது முதலாக உனக்குக் கூற முடியாத இனிய சுகத்தினைத் தருவேன் என உபதேசித்தார்.

அகிலம்:

கண்டாயோ மகனே கரிய பவிசுஎல்லாம்
கொண்டாயோ விஞ்சை கூடுபிர காசமதாய்

விளக்கம்:

பிறகு “ மகனே அடைவதற்குரிய செல்வங்களை இந்த உபதேசங்கள் மூலம் நீ தெளிவாக அறிந்தாயா? என்று கேட்டார்.

அய்யா துணை

அகிலம்:

வைகுண்டர் வரங்களை கேட்டல்.:
===========================

அப்போது தான்பிறந்த அந்தவைகுண் டருரைப்பார்இப்போ தென்பிதாவே என்னையீன்றே யெடுத்துப்பருவமதாய் வளர்த்துப் பகர்ந்தீரே ஞாயமெல்லாம்உருவுபிர காசமதாய் உபதேசஞ் செய்தீரேதங்க முடிவேந்தே தகப்பனே நீர்கேளும்பொங்கு கடல்துயின்ற புண்ணியரே நீர்கேளும்

விளக்கம்:

உடனே சிறு குழந்தையான வைகுண்டர் திருமாலை நோக்கி, என் தந்தையே என்னை பெற்றெடுத்து அறிவு நிலையை வளர்த்து இந்த உபதேசங்களை எல்லாம் மிகவும் தெளிவாக அருளினீரே. இருப்பினும் தங்க முடித்தலைவனே, என் தந்தையே, பொங்கும் கடலில் பள்ளி கொள்ளும் புண்ணியரே, நான் கூறியவற்றைக் கேட்பீராக.

அகிலம்:

என்னுடைய முத்துயரம் எல்லா மிகக்கழித்துநன்னமுத மாக நன்மகவாய்ச் செய்தீரே
இன்னுங் கலியுகத்தில் இருக்கப் போச்சொல்லீரே

விளக்கம்:

என் சம்பூரணதேவன் நிலையிலுள்ள முந்தைய வினைகளை எல்லாம் அழியச் செய்து நல்ல அமிர்தம் போன்று என்னை உமது குழந்தையாக வைகுண்டராக மாற்றம் செய்தீர். இவ்வளவு செய்து என்னை உருவாக்கிய பிறகு கலியுகத்தில் வாழ்வதற்குப் போகச் சொல்லுகின்றீரே!

அகிலம்:

உன்னை யறியாமல் ஊன்கலியி லுள்ளோர்கள்என்னை மிகப்பழித்து ஏசுவானே நீசனெல்லாம்அல்லாமல் முன்பெற்ற அவர்களுட பேரைச்சொல்லிப் பொல்லாத நீசனெல்லாம் பேசி யடிப்பானே

விளக்கம்:

உமது உண்மை நிலை அறியாமல் கீழ்தரமான கலி பிடித்த உலகில் உள்ள நீசர்கள் என்னை அதிகமாகப் பழி கூறி ஏசுவார்களே, மேலும் என்னை முதலில் பெற்றெடுத்த என் தாய் தந்தையருடைய பெயரைச் சொல்லி அந்தப் பொல்லாத நீசர்கள் அடிப்பார்களே?

அகிலம்:

சூத்திர விஞ்சை தொழிலை யறியாமல் யூத்திர நீசனெல்லாம் ஒழுங்குதப்பி மாழ்வானே

விளக்கம்:

உமது சூட்சுமத்தை அறிய முடியாத நீசர்கள் ஒழுங்கு தப்பி அழிவார்களே?

அகிலம்:

நம்முடைய சாதி நம்மைமிகக் காணவந்தால்செம்மைகெட்ட நீசன் சிதற அடிப்பானே

விளக்கம்:

நம் சான்றோர் சாதி என்னை அன்புடன் காண வந்தால் மேன்மை இல்லாத நீசர்கள் அவர்களைச் சிதறி ஓடும்படி அடித்திடுவார்களே?

அகிலம்:

ஆனதால் நம்சாதி அகலநின்று வாடிடுமேஏனமென்ன சொல்லுகிறீர் என்னுடைய நாயகமே

விளக்கம்:
அதனால் நம் சான்றோர் சாதி நம்மை விட்டு அகன்று நின்று மனம் வாடிடுமே? இவற்றை எல்லாம் நீக்குவதற்கு நீவிர் என்ன வழி கூறப் போகிறீர்?

அகிலம்:

முன்னென்னைப் பெற்ற மொய்குழலார் வம்மிசங்கள்என்னேது வாலே இயல்புபெற வேணுமல்லோ

விளக்கம்:

மேலும் என்னை ஏற்கெனவே பெற்றெடுத்த தாயினுடைய சான்றோர் சாதி வம்ச வழியினரும் என் பிறப்பின் மூலமாக நல்ல வாழ்வு பெற வேண்டும் அல்லவா?

அகிலம்:

அல்லாமல் முன்னம் அணங்கொரு பெண்ணிணங்க நல்லோர் மனசு நல்லணங்குக் கேகொடுத்துமேலும் பதவி மிகக்கொடுக்க வேணுமல்லோ

விளக்கம்:

மேலும் எனக்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட பரதேவதை என்னும் பெண்ணுக்கு அவள் உள்ளம் மகிழும்படி சிறப்பான மனதைக் கொடுத்து அவளுக்குச் சிறந்த தெய்வப்பதவி கொடுக்க வேண்டும் அல்லவா?

அகிலம்:

இப்படியே நல்ல இயல்பு பெறஅருளி எப்படியு மென்னைவந்து ஏற்கவரும் நாளும்எல்லாம் விவரமதாய் இயம்பி யனுப்புமென்றார்பொல்லாத பேர்மாளப் போவதுவுஞ் சொல்லுமென்றார்

விளக்கம்:

இப்படி எல்லாருக்கும் அருள் கொடுத்து எவ்வகையிலும் என்னை வைகுண்டத்துக்கு அழைக்க வரும் நாளையும் ஏனைய விபரங்களையும் நீசர்கள் அழிவது பற்றியும் விபரமாய்ச் சொல்லும் என்றார்.

வரங்கள் நிறைவேறத் திருமால் வழிமுறை கூறல்:
===================================

அகிலம்:

அந்த வுடனே ஆதிநா ராயணரும்சிந்தை மகிழ்ந்து திருமகனை யாவிமிகக் கட்டி யெடுத்துக் கமலமுகத் தோடணைத்துத்திட்டித்த நாதன் சொல்வார் மகனு டனே

விளக்கம்:

உடனே திருமால் மனம் மகிழ்ந்து பெருமை பொருந்திய அந்த மகனை அணைத்து நெருக்கமாகக் கட்டிப் பிடித்து அவருடைய தாமரை போன்ற முகத்தைத் தமது முகத்தோடு அணைத்து வைகுணடரை மாற்றுப் பிறப்பு மூலம் தமது மகனாக உருவாக்கிய திருமால் மகனை நோக்கி சொல்லலானார்.

அகிலம்:

எந்தனின் தவத்தா லேக இகபர முனக்குள் ளாகித்தந்திடு மகனே நானும் தனதுள்ள மமர்ந்தே னானும்உந்தனைக் கண்டால் மூவர் ஒஞ்சியே மகிழ்வர் கண்டாய்சிந்தர்க ளெவரும் போற்றச் செயல்பெற்ற மகனும் நீயே

விளக்கம்:

எனது தவத்தின் மூலமாக எங்கும் பரந்திருக்கும் பரம்பொருள் உனக்குள் ஆகி, பரம்பொருளாகிய நானும் உன்னுள் அமர்ந்து தருமயுகத்தைப் படைத்திடும் மகனே, உன்னைக் கண்டால் மூவர்களும் வெட்கத்துடன் மகிழ்வார்கள். இதை அறிந்து கொள்வாயாக. எல்லாச் சித்தர்களும் போற்றும்படியாகச் சகல சக்தியும் பெற்ற மகன் நீயே ஆவாய்.

அகிலம்:

மகனேநீ கேட்டதற்கு வகைசொல்ல வேணுமென்றால்தவமூ ணுண்டேநீ தரணிதனில் போயிருந்தால்அல்லாமல் பின்னும் அதின்மேல் நடப்புவளம்எல்லா முனக்கு இயம்பித்தரு வேன்மகனே

விளக்கம்:

மகனே, நீ கேட்ட வரங்களை அடைய வழி முறைகளை சொல்ல வேண்டும் என்றால் சொல்லுகிறேன். கேட்பாயாக. நீ பூவுலகில் சென்று நினைத்தபடி வாழ நீ செய்து முடிக்க வேண்டிய தவங்கள் மூன்று உள்ளன. மேலும் அத்தவத்தைச் செய்து முடித்த பிறகு செய்ய வேண்டியவற்றையும் கூறுகிறேன் கேள்.

அகிலம்:

முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே

விளக்கம்:

முதல் முறையாக நீ செய்ய வேண்டிய தவசு கலியுகத்தை அழிப்பதற்கு செய்யும் யுகத்தவசு ஆகும்.

அகிலம்:

தத்தமுள்ள ரண்டாம் தவசுசா திக்காமே
விளக்கம்
அதைத் தொடர்ந்து செய்ய வேண்டிய இரண்டாம் தவசு சான்றோர் சாதி மக்களைக் காத்துக் கொள்ளச் செய்யும் தவசாகும்.


அகிலம்:

மூன்றாந் தவசு முன்னுரைத்த பெண்ணாள்க்கும்நன்றான முற்பிதிரின் நல்ல வழிகளுக்கும்

விளக்கம்:

கடைசியாகச் செய்ய வேண்டிய மூன்றாம் தவசு நீ முன்னுரைத்த அணங்கு ஆகிய பரதேவதை என்னும் பெண் உயர்வு பெறவும் நல்ல முறையில் வாழ்ந்துவரும் உன் முன் பிறந்த மூதாதையர்களின் நல்ல வம்ச வழி மக்களுக்கு நன்மை கிடைக்கவும் செய்யும் தவசாகும்.

அகிலம்:

இப்படியே மூவிரண்டு ஆறு வருசமதாய்எப்படியும் நீதவசு இருக்கவரு மென்மகனேஓராறு ஆண்டு உற்றதவ மேயிருந்துபாராறுங் காண பார்கண்டு கண்டிருநீ

விளக்கம்:

ஆறு வருடங்களாக நீ எந்த வகையிலாவது தவமிருக்க வேண்டியது வரும். ஆறு வருடங்கள் இவ்வுலக மக்கள் காணும்படியாக உனக்குரிய தவத்தில் தருமபூமியை எதிர்பார்த்தவண்ணம் அமர்ந்திரு.

அய்யா துணை

வத்துவகை சொத்து மனைவீடு வாசல்முதல்
சற்றுமன தெண்ணாமல் தானிருந் தென்மகனே

விளக்கம்:

நிலபுலன் முதலிய சொத்து வகைகளையும், மனைவி, வீடு, வாசற்படி போன்றவற்றையும் சிறிய அளவு கூட மனதில் எண்ணாது நீ தவமிருக்க வேண்டும்.

அகிலம்:

நன்மையோடு தண்மை ஒன்றுமிகப் பாராமல்

விளக்கம்:

நன்மை தீமை என்றும், இனிமையான பேச்சு, தீமையான பேச்சு என்றும், உண்மை என்றும் பொய் என்றும், வித்தியாசம் சிறிதும் பார்க்காமல்

அகிலம்:

கந்தைத் துணியுடுத்து கைநிமிர்ந்து காட்டாமல்

விளக்கம்:

கந்தை ஆடை தரித்து உன் அடக்க நிலையை வெளியே யாருக்கும் காட்டாமல் ,

அகிலம்:

எந்தப் பேரோடும் இனிப்புமொழி பேசாமல்

விளக்கம்:

எவரோடும் இனிய வார்த்தை பேச வேண்டும் என்று எண்ணம் இல்லாமல்,

அகிலம்:

பாலல்லால் வேறு பண்டமிக ஏராமல்

விளக்கம்:

பாலைத் தவிர வேறு வகைப் பண்டங்கள் உண்ணாமல்,

அகிலம்:

காலல்லால் சுத்தம் கழுவ நினையாமல்

விளக்கம்:

காலைக் கடனும், மாலைக் கடனும் மாலைக் கடனும் செய்யும் போது உடம்பைச் சுத்தமாக்குவது அல்லாமல், உடம்பு முழுவைதையும் சுத்தப்படுத்திச் சுகமாக இருக்க வேண்டும் என்று நினைக்காமல் நீ தவம் இருப்பாயாக.

அகிலம்:

மூக்கு நடுவே மும்முதலு முத்திமுத்தி
நாக்குச் சுழிதாங்கி நாரணன் நானெனவே
எகாபரத்தைக் கண்டு இரண்டாண்டு ஓரிருப்பாய்

விளக்கம்:

மூக்கின் நடுவே வலகலை, இடகலை, சுழிமுனை ஆகிய மூன்று முகங்களையும் கண்டறிந்து, நாக்குச் குழியாகிய சுழிமுனையில் நிலையாக நின்று, நானே நாராயணன் என்னும் திடமான எண்ணம் கொண்டு எங்கும் பரந்த பரம்பொருளைக் கண்டு இரண்டு ஆண்டுகள் முதல் தவசான யுகத்தவசை தொடர்ச்சியாக முடித்து விடு.

அகிலம்:

மகாபரனை நெஞ்சில் மறவாம லெப்போதும்
கண்டிரு என்மகனே கருத்தொன்று தானாட்டி
கொண்டை யமுதுண்டு குவிந்திரு என்மகனே

விளக்கம்:

உயர்வு பொருந்திய பரம்பொருளை உன் மனதில் ஒரே நினைவாய் மறவாமல் எப்பொழுதும் கண்டு ஒரே நினைவில் நிலை நின்று அங்கே உருவாகின்ற ஞானப்பாலை உண்டு நிலைத்து இருப்பாயாக.

அகிலம்:

இப்படியே ஆறாண்டு இருநீ யுகத்தவசாய்
அப்படியே நீயிருந்து ஆறாண் டேகழித்தால்
நினைத்ததெல்லா முனக்கு நிசமாய் முடியுமப்பா

விளக்கம்:

யுகத்தவசைப் போன்று ஆறு ஆண்டுகள் மூன்று தவசுகளையும் முடித்தால் நீ நினைத்தவை எல்லாம் நிச்சயமாய் உண்ணால் முடித்துவிட முடியும்.

அகிலம்:

உனைத்தள்ளி வேறே ஒருமூப் புகத்திலில்லை
என்ன நினைத்தாலும் எத்தனைதான் செய்தாலும்
வன்னத் திருமகனே வகையதுதா னென்மகனே

விளக்கம்:

பிறகு உன்னைத்தவிர வேறு ஒருவரும் உயர்ந்தவராக இந்த கலியுகத்தில் இருக்க முடியாது. நீ எதை நினைத்தாலும், எதைச் செய்தாலும், வன்மையுள்ள செல்வ மகனே, அவை எல்லாம் அடையும் வழி முறைகள் இவையேயாம்.

அகிலம்:

நீசெய்த தெல்லாம் நிரப்புத்தா னென்மகனே
நானீயே யல்லால் நடப்பதுவும் வேறில்லையே
தானீத னான சர்வபரா என்மகனே

விளக்கம்:

அதன் பிறகு நீ செய்வது எல்லாம் நியாயமாகவே அமையும். நாராயணனாகிய நான் நீ ஆகாமல் வேறு எதையும் வெற்றிகரமாக நடத்தி முடிக்க முடியாது. என்மகனே, தவத்தின் மூலமாக நீ நாராயணன் ஆகிவிட்டால் எங்கும் நிறைந்த சர்வபரன் என்பவன் நீயேதான் ஆவாய்.

அய்யா துணை

தாக்கிரவா னாகிடினும் சற்றும் பகையாதே

விளக்கம்:

வறுமையாக உள்ளவனிடம் கூட சிறிதும் பகைமை கொள்ளாதே

அகிலம்:

எல்லா முன்னருகே இருந்துகேட்டுக் கொள்வேனான்

விளக்கம்:

நான் உனனருகே இருந்து உனக்குத் தீமை செய்பவர்களிடம் நியாயம் கேட்டுக் கொள்வேன்.

அகிலம்:

பொல்லாதா ராகிடினும் போரப் பகையதே

விளக்கம்:

பொல்லாதவர்கள் எனினும் அவர்கள் உன்னைவிட்டு அகன்றிடும் அளவு பகைமை கொள்ளாதே.

அகிலம்:

வாரஞ் சொல்லாதே வளக்கோரம் பேசாதே

விளக்கம்:

ஒருவர்க்கும் எதிராகப் பேசாதே, வழக்குகளுக்கு ஒரு பக்கம் சார்ந்து நியாயம் சொல்லாதே.

அகிலம்:

சார மறிந்து தானுரைநீ சொல்லுரைகள்

விளக்கம்:

நீ சொல்லுகின்ற சொற்களின் தன்மைகளை அறிந்து பேசுவாயாக.

அகிலம்:

ஆய்ந்து தெளிந்து அருளுநீ யென்மகனே

விளக்கம்
எல்லாவற்றறையும் ஆராய்ந்து தெளிவு அடைந்த பிறகே உன் முடிவை வெளிப்படுத்து.

அகிலம்:

ஏய்ந்துநீ தர்மம் இடறு நினையாதே

விளக்கம்:

தருமத்தினை வளர்க்க வேண்டுமே அல்லாது ததைத் தடுக்க எவ்வகையிலும் நினைத்துவிடாதே.

அகிலம்:

ஈனமில்லாத் தேடு எமக்காகுஞ் சாதியின்மேல்
மானமாய் வருந்தி மகிழ்ந்திரு என்மகனே

விளக்கம்:

எனக்குரிய சாதி எத்துன்பமுற்றாலும் குறை காணாது மானம் உள்ளவனாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வா என்மகனே.

அகிலம்:

அன்பான அவ்வினர்க்காய் அறிவில் வருந்தியிரு
தன்பாலே வந்தவுடன் சரியாச்சு தென்மகனே
மகனே நானுனது மனதுட் குடியிருந்து
சிவமே பொருந்தி செப்புவது முத்தரவே
துல்லிபமுங் காட்டேன் சூட்சமது வுங்காட்டேன்

விளக்கம்:

உன்மேல் அன்புடைய அந்தஇனம் ஞானம் பெறுவதற்காக மனம் வருந்தி இரு. சான்றோர்கள் தம்முள் ஞானம் உருவாகியதும் முடிந்தது. மகனே, சிவப்பொருளே, நான் உன் மனத்தில் குடியிருந்து எல்லாக் கட்டளைகளையும் கூறிடுவேன். எனது துல்லியத் தன்மையையும், சூட்சுமத்தையும் வெளியே காட்ட மாட்டேன்.

அகிலம்:

நில்லு நினைவில்நீ சரித்துக்கொடு என்மகனே

விளக்கம்:

நீ என் ஒரே நினைவில் நின்று செயல் படு.

அகிலம்:

பேயன் பயித்தியக் காரனெனப் பேசியுன்னை
நீசக் குலங்கள் நின்னையடிக் கவருவார்
சரித்துக் கொடுமகனே சற்றுங் கலங்காதே

விளக்கம்:

மகனே, நீசர்கள் உன்னை நோக்கி “இவன் பேயன், பைத்தியக்காரன்” என்று கூறி, உன்னை அவர்கள் அடிக்க வருவர். நீ சிறிது கூட மனம் அசையாது அதற்குத் தகுந்தவாறு சார்ந்து வளைந்து கொள்.

அகிலம்:

ஒருவரோ டும்பிணங்கி உரையாதே என்மகனே
எல்லாம் நான்கேட்டு ஆட்கொள்வே னென்மகனே

விளக்கம்:

எவரோடும் எதிரான வார்த்தைகளைப் பேசாதே. அவர்கள் தவற்றை எல்லாம் நான் கேட்டுத் தண்டனை கொடுத்து உன்னை ஆட்கொள்வேன்.

அய்யா துணை

அகிலம்:

வல்லாண்மை பேசாதே மாதிரி போடாதே

விளக்கம்:

நான் பெரியவன் என்னும் ஆணவ வார்த்தைகளைப் பேசாதே, எதிரி செய்ததைப் போன்று பழிக்குப் பழியாக எதையும் செய்ய நினைக்காதே.

அகிலம்:

ஏழையா யிருநீ என்னுடைய கண்மணியே

விளக்கம்:

எல்லாரிடமும் ஏழையைப் போன்று வாழ்ந்து வா.

அகிலம்:

ஆழ மனதுடைய அதிகமக னேவுனது
விதங்க ளறியாமல் வீணாவார் வம்பரெல்லாம்

விளக்கம்:

மிகவும் ஆழமான உயர்ந்த மனதுடைய அருமை பொருந்திய மகனே, என் கண் மணியே, உன் உயர் நிலை அறியாமல் எதிர்க்கும் வம்பர்கள் எல்லாரும் வீணாக அழிந்து விடுவர்.

அகிலம்:

மதங்க ளடக்க வாக்கெனக்கே ளென்மகனே

விளக்கம்:

எல்லா மதங்களையும் எனக்குள் அடக்கலாக்கிக் காட்டு என் மகனே.

அகிலம்:

தந்தே னுனக்கு தரளமணி முத்திரியும்
கந்தைத் துணியதிலே காட்டாதே வைத்துக்கொள்ளு

விளக்கம்:

அன்பு மகனே, தரளமணி, முத்திரி ஆகியவற்றை என் பரிசாக உனக்குத் தந்து விட்டேன் அவற்றை உனது கந்தைத் துணியினுள் யாருக்கும் காட்டாமல் மறைத்து வைத்துக் கொள்ளுவாயாக.

அகிலம்:

மகனே வுனது மனறியக் காட்டினதை
அகமேநீ வைத்து அகமகிழு என்மகனே

விளக்கம்:

மகனே, உனது மனம் மட்டும் தெளிவாக அறியும்படி நான் காட்டிய இரகசியத்தை உன் அகத்திலேயே நினைத்து அகம் மகிழ்ந்திரு.

அகிலம்:

பொறுதிதா னென்மகனே பெரியவ ராகுவது
உறுதிமிக வுண்டாகும் உகநாதா என்மகனே
தருமச் சிறப்புத் தான்கண்டா யோமகனே

விளக்கம்:

பொறுமை என்னும் உயர்ந்த குணந்தான் மிகப் பெரிய தர்மம் ஆகும், கலியுக நாதனே, என் மகனே, நீ பொறுமையைக் கடைபிடித்தால் உன் மனதுக்கு உறுதி அதிகமாகும்.

அகிலம்:

பொறுமை பெரிது புவியாள்வா யென்மகனே

விளக்கம்:

பொறுமை மிகவும் பெரியது என்பதை அறிந்து இப்புவியை ஆட்சி புரிவாயாக.

அகிலம்:

கண்டாயோ என்மகனே கரியமண் டபச்சிறப்புப்
பண்டையுள்ள தேரும் பதியுமிகக் கண்டாயோ

விளக்கம்:

என் மகனே, நான் உணர்த்திய சிறப்புகளை நீ அறிந்தாயா? காண்பதற்கு அரிய திருமாலின் மண்டபச் சிறப்புகளையும், மிகப் பழமையான தேரையும் பதியையும் நீ அறிந்தாயா?

அகிலம்:

தேட்ட முடனுனக்குச் செப்பும்விஞ்சை யானதிலே
நாட்ட மறவாதே நாரணா என்மகனே

விளக்கம்:

நாரணா, என் மகனே, நான் தேடித் தந்துள்ள இவ்விஞ்சைகள் மீது உன் நாட்டம் முழுவதும் இருக்க வேண்டும், மறவாதே, என்று திருமால் உததேசித்தார்.