சனி, 31 மார்ச், 2018

இந்து மதத்தில் எண்ணற்ற வழிபாட்டு முறைகள் உள்ளன.

இந்து மதத்தில் எண்ணற்ற வழிபாட்டு முறைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் ‘அய்யாவழி’. இதை அருளியவர் அய்யா வைகுண்டர். 19-ம் நூற்றாண்டில் அவதரித்தவராக ‘அய்யாவழி’ மக்களால் வணங்கப்படுகிறார். 

இவர் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பெரும் தெய்வங்களின் ஒரே உருவமாக கருதப்படுகிறார். குமரி மாவட்டம் சுவாமிதோப்பில் தவம் செய்து, மக்களைக் காத்தவர். மனித உருவில் பரம்பொருள் அவதரித்ததோ திருச்செந்தூர் திருக்கடலில்!

மற்ற அவதாரங்களில் ஆயுதங்கள் ஏந்தி அசுரர்களை அழித்து வதம் செய்த பரம்பொருள், இந்த அதிசய ஆண்டிக் கோல அவதாரத்தில் அன்பால் ஆயுதமின்றி அழித்ததாக ஐதிகம். 

மண்ணுலகில் கலி நீசர்களின் அட்டூழியம் கட்டவிழ்ந்து போகும்போது, இறைவனின் திருஅவதாரம் நிகழும். தசாவதாரத்தில் வரிசையாக ஆயுதம் ஏந்தி அசுரர்களை அழித்த பகவான், ஆயுதமே ஏந்தாமல் கலியுக மகா பாதகங்களை அடக்கியதே இந்த வைகுண்ட அவதாரத்தின் தனிச் சிறப்பு. 

கேரள மன்னனின் கொடுங்கோல் ஆட்சியின் கொடுமைகளில் இருந்து சாதாரண மக்களைக் காத்து, சமத்துவ சமுதாயம் அமைய வழி செய்தவர் வைகுண்டர். இவர், ‘அகிலத் திரட்டு’, ‘அருள் நூல்’ எனும் இரு அரிய பொக்கிஷங்களை அருளி இருக்கிறார். 

அவற்றில் இடம்பெற்றிருக்கிற கணிப்புகள் மெய்வாக்காக அப்படியே பலித்து வருகின்றன. ‘முள்ளு முனையதிலே குளம் வெட்டி வயலும் பாய்ச்சி முன்மடை பாயக் கண்டேன்’ என்கிற வரி, இன்றைய ஆழ்துளைக் கிணறை நினைவுபடுத்துகிறது. முப்போகம் விளைந்து வரும் நஞ்சை நிலங்களை ‘உவர்’ பொங்கி அழிக்கும் என தெளிவாகச் சொல்லி இருக்கிறார். 

இப்படி எத்தனையோ பலிக்கும் வாக்குகளை சொன்ன பகவான் வைகுண்டரின் திருவாக்குகளில் ஒன்று...‘கனத்த பூமி வெடிக்குதடா’ என்பதாகும். இது, நில அதிர்ச்சியை உணர்த்துகிறது. அதேபோல -‘காடு நாடாகுமென்று நாரணன் சொன்ன சொல் காலமும் சரியாச்சே!’... எனவும், ‘நாடெல்லாம் காடாகும்’ என்றும் சொல்லி இருக்கிறார். அவை நாளும் மெய்யாகி வருகின்றன.

‘அண்டபகிரண்டம் வெல்லவொரு ஆயுதம் வந்திருக்குதப்பா’ என்பது சீறிப் பாய்ந்து- கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணையை நம் கண் முன்னே படம் பிடித்துக் காட்டுகிறது. பெருமழை குறித்து வைகுண்டர் பாடிய தீர்க்கதரிசன வாசகங்களும் இப்போது 21-ம் நூற்றாண்டில் அப்படியே பலித்திருக்கின்றன.
‘காளி வெள்ளம் வருகிறது; கப்பல் செய்து வைத்திருங்கோ’ மற்றும்...

‘மாரி வெள்ளம் அழிக்குதடா; மாயாண்டி சொல்லுகிறேன்’ போன்ற வரிகள் அதற்கு துல்லியமான சான்றுகளாகின்றன.

‘மாரி’ என்கிற மழை வெள்ளத்தால் பேரழிவு நேர்ந்திருக்கிறது. காளி போல் வெள்ளம் ஆவேசமாக பெருக்கெடுத்து அழித்தது. சென்னை நகருக்கு கப்பலில் நிவாரணப் பொருட்களும் வந்தன.

வைகுண்டரின் பாடல் வரிகளில் இன்னும் எவ்வளவோ அற்புத ரகசியங்கள் புதைந்திருக்கின்றன. அவை பல எச்சரிக்கைகளை உலகுக்கு உணர்த்துகின்றன. இவரது அதிசய வாழ்வுக்கு பல வரலாற்று ஆவணங்கள் உள்ளன. 

‘அய்யா வழி’யை ‘அன்பு வழி’ என்றும் குறிப்பிடுகிறார்கள். ‘அய்யா’ என்றால் தந்தை, தலைவன், குரு என பொருள்படும். ‘வழி’ என்றால் பாதை. எந்தவித பாரபட்சமும் காட்டாமல், சக மனிதர்களிடம் அன்போடு வழி நடப்பதையே இந்த வழிபாடு வலியுறுத்துகிறது.

‘அய்யா வழி’ என்பது ‘அன்பு வழி’. இது அருவ-சைவ வழிபாட்டு முறையாகும். இதன் தலைமை வழிபாட்டுத் தலம், வைகுண்டர் அமர்ந்து அருள்பாலித்த சுவாமிதோப்பில் உள்ளது. அதன் துணைத் தலங்கள், தமிழ்நாட்டில் எண்ணற்ற இடங்களில் இருக்கின்றன. சென்னை, மும்பை மற்றும் வெளிநாடுகளிலும் ‘அய்யா வழி’ வழிபாடு பரவி வருகிறது.

அந்த காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் குமரி மாவட்டத்தின் ஊர்களும் இருந்தன. கேரள மன்னன் கொடுங்கோல் ஆட்சி செய்தான். நமது பெண்கள் தங்கள் தோளில் சேலை போடக்கூடாது, இடுப்பில் குடம் எடுக்கக் கூடாது, கழுத்தில் தங்கத்தாலி இருக்கக் கூடாது, ஆண்கள் மீசை வைத்தால் குற்றம், பனை ஏறினால் வரி செலுத்த வேண்டும், முட்டுக்கு கீழே வேட்டி - தலையில் தலைப்பாகை கட்டக்கூடாது, இருபாலரும் காலில் செருப்புப் போடக்கூடாது, உயர் சாதியினரின் தெருக்களில் நடக்கக்கூடாது, பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதித்து மக்களை கொடுமைப்படுத்தினான். 
நாளை அய்யா வைகுண்டர் 185-வது அவதார தினம்
இதை வைகுண்ட பரம்பொருள் எதிர்த்தார். சாமானிய மக்களின் உரிமைகளைக் காத்தார். நோய் நொடியோடு வந்தவர்களுக்கு திருநாமத்தாலும், தண்ணீராலும் பிணிகள் போக்கினார். அவரது பெருமை 

பரவியது. மக்கள் வந்து வணங்கி, பலன் பெற்றுச் சென்றனர். 

இதைப் பொறுக்காத மலையாள மன்னன், அவரை கட்டி இழுத்து வரும்படி தனது படை வீரர்களை அனுப்பினான். வழியெங்கும் கொடுமைப்படுத்தியபடியே அழைத்துப் போனார்கள். சுண்ணாம்புக் காளவாயில் போட்டார்கள். மிளகாய் வற்றல் புகையிலும், நெருப்பிலும் தள்ளினார்கள். இறைவன் மலர்ந்த முகத்தோடு வெளிப்பட்டார். கடைசியில் பசித்த புலி முன்னே அடைத்தார்கள். புலி... பாயவில்லை. பணிந்து நின்றது! 

அப்போதுதான் கேரள மன்னனுக்கு புத்தி வந்தது. தான் தண்டிக்க நினைத்தது மனிதனை அல்ல; மாலவனை என்பதை உணர்ந்தான். மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டு வணங்கினான். ஆண்டிக் கோலம் கொண்ட அய்யா வைகுண்டர், சாமானிய மக்களின் வாழ்வு செழிக்க வேண்டி... சுவாமிதோப்பில் தவம் மேற்கொண்டார். 

அந்த மண்ணில்தான் அவர் அருளிய ‘அன்பு வழி’யின் தலைமைப் பதி இருக்கிறது. அருகில் அவரால் உருவாக்கப்பட்ட முத்திரி பதக்கிணறு உள்ளது. இதில் நீர் இறைத்து நீராடி, வைகுண்டரை வழிபட்டால்... தீராத நோய்கள் தீரும். துன்பங்கள் அகலும். இல்லத்தில் இனிமை மலரும். தாமரை மலருடன் கூடிய திருநாமமே அய்யா வழியின் சின்னமாக இருக்கிறது. அருவ வழிபாடு இதன் இன்னொரு சிறப்பு.

மாசி 20-ந்தேதி (மார்ச் 4), வைகுண்டரின் 185-வது அவதார தினம். அன்று சுவாமிதோப்பில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். மார்ச் 3-ந்தேதி திருச்செந்தூர், திருவனந்தபுரத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, நாகர்கோவில் சென்று அடைவார்கள். அங்கு தங்கிவிட்டு, அதிகாலையில் தலைமைப்பதி நோக்கி புறப்படுவார்கள்.

கண்ணாடி அணிந்த கடவுள்

கண் நோயால் சிரமப்படுபவர்கள் திரு நெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள வாகைக்குளம் கிராமத்திலுள்ள அய்யா வைகுண்ட சுவாமிக்கு கண்ணாடி அணிவித்து வழிபடுகின்றனர்.
1809ல் கன்னியாகுமரி மாவட்டம் தாமரைக்குளம் கிராமத்தில் பொன்னு நாடார் வெயிலாள் தம்பதி மகனாக பிறந்தார் அய்யா வைகுண்டர்.  ஏழைக் குடும்பத்தில் பிறந்த அக்குழந்தையை முத்துக்குட்டி என அழைத்தனர்.  விஷ்ணு பக்தனாக விளங்கிய முத்துக்குட்டி 22 வயதில் நோய்வாய்ப்பட்டார்.  இரண்டு வருட காலமாக அவதிப்பட்டார்.   ஒரு நாள் முத்துக்குட்டியின் தாயார் வெயிலாள் கண்ட கனவில் நாராயணர் தோன்றி முத்துக்குட்டியை மாசி மாதம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடக்கும் விழாவிற்கு அழைத்து வரும்படியும்  அவ்வாறு வந்தால் கிடைத்தற்கரிய பேறு கிடைக்கும் என்றும் சொன்னார்.  வெயிலாளும் உறவினர்களுடன் முத்துக்குட்டியை ஒரு தொட்டிலில் வைத்து சுமந்து சென்றார்.  செந்தூர் கடலருகே சென்றதும் முத்துக்குட்டி தொட்டிலில் இருந்து இறங்கி கடலுக்குள் சென்றுவிட்டார்.  ஒரு நாள் காத்திருந்த பிறகு அனைவரும் போனவர் வரமாட்டார் அவர் இறந்து விட்டார் என ஊர் திரும்பினர்.  ஆனால் தாய் வெயிலாள் மட்டும் கடற்கரையில் அழுதபடியே அமர்ந்திருந்தார்.
அவர் கடலுக்குள் சென்ற மூன்றாம் நாளான மாசி 20ல் கடலிலிருந்து  வெளிப்பட்டார். வெயிலாள் ஓடிச்சென்று தனது மகனை கட்டி அணைக்க முயன்றார்.  ஆனால் அவர் அவளை தடுத்து  நான் உன் மகன் இல்லை  கலியை அழிக்க நாராயணனான நான் வைகுண்டராக உலகில் அவதரித்துள்ளேன்  என்றார்.  இதன்பின் சுவாமி தோப்பு என இடத்துக்கு வந்த வைகுண்டர் தவத்தில் ஆழ்ந்தார்.  அற்புதங்கள் செய்தார்.
வாகைக்குளத்திலுள்ள அய்யா கோவில் 300 ஆண்டுகளாக உள்ளது.  மற்ற கோவில்களைப் போல் அல்லாமல் இது வித்தியாசமானது.  இங்கே ஏற்கனவே பெருமாள் கோவில் இருந்தது.  அங்கே அய்யா வழிபாடு தொடர்ந்தது.
கருவறையில் அய்யாவுடன் ஆதி நாராயணப்பெருமாள் சிவன் சக்தி ஆகியோர் உள்ளனர்.  கலியுகத்தில் நடக்கும் அனியாயங்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள சிவசிவ ஹரஹர என்ற மந்திரத்தை உசுப்பாட்டு என்ற பெயரில் தினமும் ஜெபிக்கின்றனர். ஞாயிறுதோறும் உச்சிப்படிப்பு என்ற சிறப்பு பூஜை நடக்கும். அன்னதானம் செய்வது முக்கிய நேர்த்திக்கடன்.
இவ்வூரைச் சேர்ந்த பெண்ணுக்கு பார்வைக் குறைபாடு ஏற்பட்டது.  மருத்துவம் செய்தும் பலனில்லை.  அய்யாவிடம் கோரிக்கை வைத்து தனக்கு பார்வை கிடைக்கவேண்டினார்.  பார்வை திரும்பியது.  இதனால் மகிழ்ந்த அவர் அய்யாவுக்கு தங்கத்தில் செய்த கண்ணாடியை அணிவித்தார்.  இந்தக் கண்ணாடியுடன் அய்யா காட்சி தருகிறார்.
குட்டி மஹாமகக்குளம்
இங்கு 256 அடி நீள அகலம் கொண்ட்தும் கும்பகோணம் மஹாமக குளம் போன்றதுமான தசாவதார குளம் அமைக்கப்படுகிறது   11 வது அவதாரமாக அய்யாவைக் கருதுவதால் 11 தீர்த்தக் கட்டங்கள் அமைக்கின்றனர்.
எப்படி செல்வது
மதுரையில் இருந்து தென்காசி 150 கிமீ  இங்கிருந்து அம்பாசமுத்திரம் சாலையில் 33 கிமீ  சென்றால் வாகைக்குளம் விலக்கு வரும்   விலக்கில் இருந்து 4 கிமீ சென்றால் கோவிலை அடையலாம்

திருச்செந்தூர்

திருச்செந்தூர் பாற்கடலில் அவதரித்து தருவையூரில் மனித உருவில் வாழ்ந்த அய்யா வைகுண்டர், அங்கிருந்து சாமிதோப்பு வந்தடைந்தார். 10 மாதங்களாக அங்கே இருந்து, அதற்கு முன்பு நடந்த யுகாந்திர சம்பவங்களையும், பின்னால் நடக்கப் போகும் எதிர்கால விஷயங்களையும் கூறிக் கொண்டே இருந்தார்.
இவ்வண்ணமாக 10 மாதங்கள் கடந்ததும் அய்யா தவம் புரியும் தவ வாழ்க்கையை மேற்கொள்ளத் தொடங்கினார். அய்யா 6 ஆண்டுகள் தவ வாழ்க்கை வாழ்ந்தார். அவர் தவம் புரிந்த திருவிடமே சாமிதோப்பு ஆலய வடக்கு வாசல் ஆகும். அதனால் வடக்கு வாசல் அய்யாவின் தவ வாசல் என போற்றப்படுகிறது.
இதையறிந்து நாடு முழுவதும் இருந்து பல தரப்பட்ட மக்கள் சாமிதோப்பில் குவிந்தனர். அவர்களிடம் தீண்டாமை என்னும் தீய சக்தியை ஒழிக்கவும், மூட நம்பிக்கையை முற்றிலும் துறக்கவும் அய்யா உபதேசித்தார். நோய், நொடி, மன உளைச்சல், உறுப்பு ஊனங்கள் போன்றவற்றை தனது பார்வையாலும், திருமண், பதம் கொடுத்து பறந்தோடச் செய்தார்.
ஒடுக்கப்பட்ட ஆடவர்கள் முழங்காலுக்கு கீழ் வேட்டி கட்டக்கூடாது. அங்க வஸ்திரம் அணியக்கூடாது என்ற அரசாங்க சட்டம் இருந்த அந்த கால கட்டத்தில் தலைப்பாகை அணிந்து தான் இறைவழிபாடு செய்ய வேண்டும் என்றும் பெண்கள் தோள் சீலை அச்சமின்றி அணிய வேண்டும் என்றும் போதித்து தம் மக்களை தலை நிமிர்ந்து நிற்க செய்தார். தீண்டாமை என்னும் தீய சக்தியை வேரோடு பிடுங்கும் விதத்தில் திருமண்ணை எடுத்து தம் பக்தர்களின் நெற்றியில் தொட்டு நாமம் சாற்றினார். நீங்களே பணிவிடை செய்யுங்கள் என்று காலை, மாலை இருவேளையும் உகப்படிப்பையும், மதியம் உச்சிப்படிப்பையும் தம் மக்களுக்கு அறிமுகப்படுத்தி வழிபடச் செய்தார்.
எளியோர், வறியோர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் சமமாக அமர்த்தி அன்னம் கொடுத்து சமபந்தி போஜனம் நடத்தினார். சாதிக்கொரு கிணறு என்றிருந்த காலத்தில் எல்லோரும் ஒரே கிணற்று நீரை குளிக்கவும், குடிக்கவும் முத்திரி கிணறை அமைத்தார். கூட்டு வழிபாட்டு மூலமே கலி என்கிற அரக்கனை வேட்டையாட முடியும் என்று தர்மம் பெரிது தாங்கி இருங்கோ மக்காள், தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம் என்று தர்ம நெறிகளை போதித்தார்.
மானமாக வாழ்ந்தால் மாலும் கலி தன்னாலே என்று கூறி மக்களுக்கு தன்மான உணர்வுகளை ஊட்டினார். ஆடு, கிடாய், கோழி போன்றவற்றை பலி இட்டு இறைவனை வணங்கும் மூடநம்பிக்கைகளை முற்றிலும் நீங்கள் துறக்க வேண்டும் என்று இறைவழிபாட்டிற்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தினார்.
வைகுண்டசாமியின் உபதேசங்களாலும், அருள்பாலிப்புகளாலும் வழிபாட்டு, வழிகாட்டல் களாலும் பல சாதி மக்களும் பயன் அடைந்தனர்.
தீண்டாமை என்னும் தீய சக்தியின் கொடுமையினால் உலகில் வேண்டா வெறுப்பாக வாழ்ந்து கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லாம் வைகுண்டசாமியை தன்னை படைத்தவராகவே நினைத்து போற்றி புகழ்ந்து பக்தி செலுத்தினர். இந்நிலை கலி வயப்பட்டோரின் கண்களை உறுத்தியது. சாமிதோப்பில் சமதர்ம சாம்ராஜ்யம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறதே என்று மனம் தவித்த அக்கொடியவர்கள், திருவாங்கூர் மன்னனிடம் புகார் செய்தார்கள். கலி ஆதிக்கத்தால் கருத்திழந்த மன்னவனும் வைகுண்டசாமியை சிறைபிடித்து வர தம் படைகளை அனுப்பினார்.
படைகள் சாமித்தோப்பை அடைந்து வைகுண்டசாமியை கைது செய்தார்கள். கயிற்றினால் வரிந்து கட்டி சாலையில் இழுத்துக் கொண்டு திருவனந்தபுரம் சிங்காரத் தோப்புக்கு சென்றார்கள். விஷத்தை கலந்து விருந்தென கொடுத்தார்கள். சுண்ணாம்பு காளவாயில் வைத்து நீற்றினார்கள். டன் கணக்கில் விறகுகளை அடுக்கி கொளுத்தி நெருப்பாக்கி அந்த நெருப்பிலே நடந்து வர செய்தார்கள்.
ய்யா பயன்படுத்திய கட்டில்
வைகுண்டசாமியோ விஷத்திற்கே விஷமானார். நெருப்பின் கொடிய நாக்குகள் அந்த நெறியோனை தீண்டவில்லை. இது கண்டு மிரண்ட மன்னன் இறுதியாக காட்டுப்புலியை பிடித்து வந்து 3 நாள் பட்டினி போட்டு புலியை அடைத்து வைத்திருந்த கூண்டிற்குள் புலிக்கு இறையாக்க வைகுண்டசாமியை தள்ளினான். பசித்த புலியோ, அந்த பரம்பொருளின் பாதங்களை வணங்கி நின்றது.
இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் கண்கொட்டாது பார்த்து கொண்டிருந்த மன்னனும், மன்னனின் படைகளும் இவர் மனிதரே அல்ல, இவரே இந்த கலியுகத்தை முடிக்கும் பூரண இறை அவதாரம் என உணர்ந்தனர். சோதனைகளை எல்லாம் வென்று மீண்டும் சாமிதோப்புக்கு வந்த வைகுண்ட பரம்பொருள், சைவம், வைணவம் என பிரிந்து கிடந்த ஆன்மீக உலகத்தில் அய்யா சிவ சிவா அரகரா என்ற அகண்ட நாம மந்திரத்தை உச்சரித்து வழிபடும் முறையை உருவாக்கி கொடுத்தார். அன்புக் கொடி மக்களின் வழிபாட்டு முறை சைவ, சித்தாந்தங்களையும், அன்புக்கொடி மக்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளும் ஒற்றை திருநாமம் வைணவர்களையும் கவர்ந்து ஈர்த்தது.
பகவான் வைகுண்ட சாமிகள், அய்யா வழிபாடு என்ற புதிய வழிபாட்டு முறையை உருவாக்கினார். அகிலத்திரட்டு என்னும் நூலில் இறைவழிபாடு எப்படி அமைய வேண்டும்? என்பதை வைகுண்டர் குறிப்பிட்டார்.
எண்ணற்ற உபதேசங்களை தம் பக்தர்களுக்கு அறிவித்து விட்டு இந்த உலகத்திற்கு அவர் காட்டிய உபாயமாம் உடலை கொல்லம் ஆண்டு 1026 வைகாசி மாதம் 21-ந் தேதி திங்கட்கிழமை 3.6.1851-ல் உகுத்து வைத்தார். அந்த உபாய மாயக்கூடு பொருந்தியிருக்கும் திருவிடமே சாமிதோப்பு பதியாகும்.
சாமிதோப்பில் உள்ள இந்த பதி அய்யாவின் தலைமை பதியாகும். அய்யாவின் அவதாரத்தோடும், அற்புதங்களோடும் முட்டப்பதி, அம்பலப்பதி, தாமரைகுளம்பதி, பூப்பதி ஆகிய பதிகளும் தொடர்புடையவை. இவை ஐந்தும் பதிகள் எனவும், அந்த பதிகளின் ஞாபக சின்னமாக உருவாகும் வழிபாட்டு தலங்கள் நிழல்தாங்கல் , தாங்கல் எனவும் அழைக்கப்படுகின்றன.
இத்தலங்களில் தெய்வப் படங்களோ, உருவச் சிலைகளோ இருப்பதில்லை. இவ்வாலயங்களின் மூலஸ்தானத்தில் ஒரு சாய்வு நாற்காலியை வைத்து அதில் இறைவன் அரூபமாக அமர்ந்திருக்கிறார் என ஐதீகமாக கொண்டு பட்டு வஸ்திரங்களாலும், மலர் ஆரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அத்துடன் உன்னிலேயே (இறைவனை) என்னை கண்டு கொள், என உணர்த்தும் விதத்தில் அங்கே வணங்க வரும் பக்தர்களின் பிம்பம் தெரியும் படியான அமைப்பில் சாய்வு நாற்காலிக்கு பின்புறத்தில் ஒரு நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டு இருக்கும். இன்று அய்யாவின் வழிபாட்டு ஆலயங்கள் உலகம் முழுவதும் வேராயிரம் பெற்ற விழுதுகளாய் படர்ந்து பரவி உள்ளது.

தர்மத்தை நிலைநாட்ட அவதாரம் எடுத்த அய்யா வைகுண்டர்

அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட ஆண்டவன் அவதாரங்களை எடுப்பார். அதேபோல் இந்த கலியுகத்தில் பல்வேறு பிரச்சினைகளால் அதர்மம் தலைதூக்க, அதை அழித்து தர்மத்தை நிலைநாட்ட அய்யா வைகுண்டர் அவதாரம் எடுத்தார். சிவன்- பிரம்மா- விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் இணைந்த ஒரே மூர்த்தியாக அவர் உருவானார்.
ஒரு மனிதனை போல் மண்ணுலக மாந்தர்க்கு காட்சி தந்த அய்யா வைகுண்டர் செய்த அற்புதங்கள் எண்ணிலடங்காதவை. அவரது தோற்றம், அவர் உருவாக்கிய வழிபாடு முறைகள் பற்றி விரிவாக காண்போம்:-
கன்னியாகுமரிக்கு மிக அருகில் உள்ள சாஸ்தான் கோவில் விளை (இப்போது சாமிதோப்பு என அழைக்கப்படுகிறது) என்னும் ஊரில் 1809-ம் ஆண்டு பொன்னுமாடன்- வெயிலாள் தம்பதியினருக்கு மகனாக தோன்றினார் அய்யா வைகுண்டசுவாமிகள். பெற்றோர் அவருக்கு முடிசூடும் பெருமாள் என பெயரிட்டனர்.
அந்த கால திருவாங்கூர் மன்னராட்சி நிர்வாகம் கொடுத்த நெருக்கடி காரணமாக முடிசூடும் பெருமாள் என்ற பெயரை முத்துக்குட்டி என மாற்றி அழைக்கச் சொன்னார்கள். முத்துக்குட்டி 17 வயதில் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சுமார் 22 வயது இருக்கும் போது மிகவும் பயங்கரமான நோய் உருவானது. முத்துக்குட்டியின் தாய் மிகவும் கவலைப்பட்டார். அவரின் கனவில் நாராயணன் வந்தார்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் விழாவுக்கு கொண்டு வந்தால் மிகுந்த பேறு கொடுப்பதாகக் கூறினார். அதனால் வெயிலாள் சுற்றத்தார் சூழ முத்துக்குட்டியை ஒரு தொட்டிலில் வைத்து சுமந்து சென்றார். அங்கே கடலருகே சென்றதும் அவர் எழுந்து வேகமாக நடந்து கடலுக்குள் சென்றது போல் அனைவருக்கும் தெரிகிறது. ஒரு நாள் காத்திருந்த பிறகு அனைவரும், போனவர் வரமாட்டார்; அவர் இறந்து விட்டார் என்று ஊர் திரும்பினார்கள். ஆனால் தாய் வெயிலாள் மட்டும் அழுதழுது கடற்கரையில் அமர்ந்திருந்தார்.
மூன்றாம் நாள் கொல்லம் ஆண்டு 1008 மாசி 20–ந் தேதி சரியாக 4.3.1833 -ல் கடலிலிருந்து முத்துக்குட்டி மகர விஞ்சை பெற்று தெய்வீக விஷ்ணுவாய் திரும்பினார். தாய் பாசத்தோடு மகனே என அழைத்தார். ஆண்டு ஆயிரத்தெட்டுக்கு முன்னே அன்னை எனவே நீ இருந்தாய், இப்போ நான் விஷ்ணு மகனாய் வருகிறேன் என்றார் வைகுண்டர்.

அய்யா வைகுண்டரின் அருள் பிரதாபங்களை அனுபவித்து உணர்ந்த எல்லா மக்களும், வைகுண்டரை ‘அய்யா’ என்று வணங்கி மகிழ்ந்தனர்; மகிழ்கின்றனர்.

இவ்விரு நூல்கள் கூறும் உபதேசங்களை எல்லாம் உலகுக்குச் சொல்லும் விதமாக தற்போது, அய்யா வைகுண்டர் வழிபாட்டு ஆலயங்கள் ஆறாயிரத்திற்கும் மேல் உள்ளன. சென்னையிலும், சென்னை புறநகர்களிலும் ஏறத்தாழ 26 ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றில் கோபுரமும், மண்டபங்களும், கொடிமரமும், தேரும் அமையப்பெற்ற ஆலயம் சென்னை மணலிப்புதுநகர், வைகுண்டபுரத்தில் அமைந்துள்ள தர்மபதியாகும். அய்யா ஆலயங்களிலேயே, சாமிதோப்பு தர்மபதியைப் போல நித்தமும் வாகன உலா, இங்கு இருக்கிறது. அதேபோல் எங்கும் இல்லாத வகையில் நித்திய அன்னதானமும் இங்கே உண்டு.

அய்யா வழிபாட்டு ஆலயங்களில் முதல் ராஜகோபுரம் கண்ட மணலிப்புதுநகர் வைகுண்டபுரம் தர்மபதியில் கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் திருஏடு வாசிப்புத் திருவிழா தொடங்கியது. 10 நாள் நடைபெறும் இந்த விழாவில் வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டமும், இரவு பட்டாபிஷேக திரு ஏடு வாசிப்பும், பல்லக்கு வாகன பவனியும், திருக்கொடி அமர்தலும் விமரிசையாக நடைபெறும்.

ரூபா அரூவ வழிபாடு :

ஆலயங்களில் கர்ப்பக்கிரகம் என்று சொல்லப்படும் மூலஸ்தானத்தை, அய்யா வழியில் பள்ளியறை என்று சொல்வார்கள். அதனுள் சிலைகள் கிடையாது. காவி வஸ்திரத்தலான ரூபா அரூவ வடிவம் அமைத்து, ருத்ராட்சம், துளசி மாலைகள், மலர் மாலை சூட்டப்பட்டிருக்கும். அதை மூலவர் என்றும், பள்ளியறை எழுந்தருளல் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. அதன் பின் பாகத்தில் ஒரு நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டிருக்கும். அது ஏனெனில் கண்ணாடி சுத்தமாக இருந்தால், அதன் எதிரில் உள்ளதெல்லாம் அதில் தெரிவது போல, நம்முடைய மனதைச் சுத்தமாக வைத்திருந்தால், அதில் இறைவன் வாசம் செய்வதோடு, உலக இயல்புகளை எல்லாம் உணர்வதற்கான ஞானத்தையும் பெறலாம் என்ற தத்துவ அடிப்படையிலாகும்.

இறைவன் உருவமில்லாதவன் என்பதால், அரூவமான இறைவனை, அரூவமாகவே வழிபட வேண்டும் என்பதே அய்யா வழி கோட்பாடாகும். ஆனால் மக்கள் இவ்வழிபாட்டில் ஆரம்ப நிலையில் இருப்பதால், தற்போது ரூபா அரூவ வழிபாடு நடைபெற்று வருகிறது. வாகனங்களில் பவனி வரும் உற்சவரும், வஸ்திரங்களாலும், மலர் மாலைகளாலும் அலங்கரிப்பட்ட ரூபா அரூவ வடிவமாகவே அய்யா வைகுண்டர் எழுந்தருள்கிறார். 

உகப்படிப்பு :

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமையப்பெற்ற வாகைப் பதியில் துவையல் தவமிருந்த மக்களுக்கு, அய்யா ஞான போதகமாக அருளியதே ‘உகப்படிப்பு’. அது ஒரு வரி, இரு வரி, மூவரி பாடல்களாக மொத்தம் ஏழு பாடல்கள் கொண்டது. அதில் ஆறு பாடல்களை பதினொரு முறை வீதம் பாடியபின் ஏழாவது பாடலை ஒரு முறை மட்டும் வசன கவியாக சொல்லி நிறைவு செய்ய வேண்டும். 

பதினொரு முறை வீதம் பாடுவதற்கான காரணம் யாதெனில், உடல், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்திற்கும், பாலுறுப்பு, கை, கால், மலவாயில், சொல் ஆகிய கர்மேந்திரங்கள் ஐந்திற்கும் மனதிற்கும் சேர்த்து மொத்தம் ஒவ்வொரு பாடலையும், பதினொரு முறை வீதம் புறச் சிந்தனைகளுக்கு இடம் தராமல் பாடினால், பாடியவர்களின் முயற்சிக்கும், மகிழ்ச்சிக்கும், அவர்தம் ஞான தாகம் நிறைவேறுவதற்கும், முக்திக்கும், இந்த யுக முடிவுக்கும், தம் ஞானேந்திரியம், கர்மேந்திரியம், மனம் ஆகியவற்றின் நலத்திற்கும் வலுசேர்க்கும் என்பது அய்யாவின் அருளுரையாகும். இந்த உகப்படிப்பை எப்போதெல்லாம் இறைவழிபாடு செய்கிறோமோ, அப்போதெல்லாம் பாடலாம். கூட்டு வழிபாடு என்றால், ஒருவர் பாடியபின் மற்றவர்களெல்லாம் சேர்ந்து பாட வேண்டும். 

உச்சிப்படிப்பு :

வாகை பதியில் துவையல் தவமிருந்த மக்களுக்கு, அய்யா ஞானபோதகமாக அருளிய மற்றொன்று இந்த உச்சிப்படிப்பு. இது முப்பத்து ஐந்து ஒற்றை வரிகளையும், பதிமூன்று தவ வார்த்தல் வாக்கியங்களையும் கொண்ட பாடலாகும். இதை வரிசையாக தினமும் மதியம் 12 மணிக்கு ஒரு முறை நின்ற படியே பாடி வழிபடலாம். வாரத்தில் ஒரு நாள் மட்டும் பாடுவதானால், ஒரு முறை நின்று கொண்டும், ஆறுமுறை அமர்ந்து இருந்த நிலையிலும் பாட வேண்டும். இவ்வாறு உச்சிப்படிப்பை பாடி வழிபட்டு வந்தால், நம்மை அறியாமல் நாம் செய்த தவறுகளால் உண்டான தோஷங்கள் அன்றாடம் அகன்றுபோகும் என்பது அய்யாவின் அறிவுரையாகும். 

அய்யா வைகுண்டர் அருளிய வாழ்க்கைக்கான அருளுரை

உலகில் எப்போதெல்லாம் தர்மம் குன்றி அதர்மம் ஆட்சி புரிகிறதோ, அப்போதெல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட இறைவன் அவதரிக்கிறார். அப்படி அவதரித்தவரே அய்யா வைகுண்டர். அய்யா என்றதுமே மகானோ, மனிதச் சாமியாரோ என்று மக்கள் எண்ணுவது இயல்பு. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த அடியார்கள் இறைவனை வணங்கும் போது, அம்மையேஅப்பா என்றும், அம்மை நீ அப்பன் நீ என்றும், மெய்யா, விமலா, விடைப்பாகா வேதங்கள் அய்யா என ஓதும் ஆழ்ந்தகன்ற நுண்ணியனே என்றும் பாடிப் பரவசம் அடைந்துள்ளனர். அதைப் போலவே அய்யா வைகுண்டரின் அருள் பிரதாபங்களை அனுபவித்து உணர்ந்த எல்லா மக்களும், வைகுண்டரை ‘அய்யா’ என்று வணங்கி மகிழ்ந்தனர்; மகிழ்கின்றனர்.

பொய்யையும், புரட்டையும், போலித் தனத்தையும், நயவஞ்சமான வெளி வேசத்தையும் மூலதனமாகக் கொண்ட உருவமே இல்லாத ஒரு வித மாயைதான் கலி. அது உலக மக்களின் சிந்தையில் எல்லாம் ஊடுருவி உறைந்திருக்கும் ஒரு கபடமான மாயை. உண்மையத்தான் பேச வேண்டும் என்று உறுதியாக இருந்தாலும், பொய் பேசத் தூண்டும் அந்த மாய சக்தியை, இதற்கு முன் நிகழ்ந்து நிறைவேறிய யுகங்களில் எல்லாம் ஆதிக்கம் செலுத்திய அரக்கர்களை, அவர்களுக்கு நிகரான பலத்தில், இறைவனே அவதரித்து தம் ஆயுதங்களால் அழித்ததைப் போல் அழித்து ஒழிக்க முடியாது. காரணம். அந்த அரக்கர்களுக்கு உடல் இருந்தது. கலியாகிய மாய்மாலத்திற்கு உடல் இல்லை. அரக்கர்களை அன்று அழித்தது போல் அழிக்க முற்பட்டால், அனைத்து மக்களையும் அழிக்க நேரிடும். ஏனெனில் எல்லாருடைய மனதிலும் கலியாகிய மாய்மாலம் ஆட்சிபுரிகிறது.

ஆகவேதான் எல்லா மக்களின் மனங்களிலும், அன்பை விதைத்து பொறுமையை வளர்த்து, தர்மம் என்ற ஆயுதத்தால் மக்களின் மனதில் மண்டிக்கிடக்கும் மாயையை, மாய்ப்பதற்காக மும்மூர்த்திகளும் ஒரு மூர்த்தியாகி, திருச்செந்தூர் கடலுக்குள்ளிருந்து எழுந்தருளினார். அவரே அய்யா வைகுண்டர். குமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு திருத்தலத்தில் அமர்ந்திருந்து நாட்டு மக்களையெல்லாம், தன்னருளால், தம்மருகில் வரவழைத்து அந்த மக்களின் மனதைக் கெடுத்துக் கொண்டிருக்கும் வலிமையான நினைவு மாய்மாலத்தைக் கழுவிக் களைந்து மாயைகளில் இருந்து கரையேறுவதற்கான உபதேசங்களை அருளினார்.

உலகமும், உலக வாழ்க்கையும் நிலையில்லாத ஒரு மாயத்தோற்றம். அதை நிஜமானது, நிலையானது என்றெண்ணி நேசம் கொள்ளாதீர்கள். இறைவனும், உண்மையுமே என்றென்றும் நிலையானது. உங்களைப் படைத்தவன் இறைவன். எனவே படைத்தவன் நம்மைப் பாழாக்க மாட்டான் என்பதை உறுதியாக நம்புங்கள். உண்மை சில சமயம் ஊமையாகுமே தவிர, ஒரு போதும் உருக்குலையாது, தடம்புரளாது. ஆகவே எந்த நிலையிலும் எதற்காகவும் பொய் சொல்லாதீர்கள். கேலிக்காக பொய் சொன்னாலும் உங்கள் உள்ளம் அழுக்காகும். அதனால் வாழ்க்கை இழுக்காகும்.

இல்லறம் என்பது ஓர் உயர்ந்த தவம். அதை இல்லற இயல்புகளோடும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற உணர்வோடும் விட்டுக்கொடுத்து, நெறி பிசகாமல் நெருக்கமாக வாழுங்கள். வரையறுக்கப்பட்ட வாழ்வியல் தர்மமே நிரந்தரமானது. நெறிகெட்ட நீசர்களிடம் உங்கள் வீரத்தைக் காட்டாதீர்கள். விவேகத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். விவேகமே சகிப்புத்தன்மைக்கும், சான்றாண்மைக்கும் வித்திடுவதாகும். எவரோடும் பிணக்கம் வேண்டாம். எல்லாரிடமும் இணக்கமாக இருங்கள். செல்வந்தர்களாயினும் ஏழைபோல் வாழுங்கள். எதற்கும் பொறுமையைக் கையாளுங்கள். அதனால் மனம் உறுதியாவதோடு, மகத்தான பெருமையையும் பெறுவீர்கள்.

எளியோருக்காக இரங்குங்கள். வலியோருக்காக மகிழாதீர்கள். உங்களைவிட ஏழையாக இருப்போருக்கு உதவுவதே உயர்ந்த தர்மமாகும். எல்லாருடைய மனதிலும் படிந்திருக்கும் மாயைகளை பணத்தால் கரைத்து விட முடியாது. தர்மத்தால் மட்டுமே கரைக்க முடியும். ஒவ்வொருவரும் தர்ம நினைவுகளோடு வாழ்ந்தால் தர்மம் கொடுப்பதற்கு ஆளுண்டு, அதை வாங்குவதற்கு ஆளில்லை என்ற நிலை உருவாகும்.

சாதித் துவேசங்கள் எல்லாம் தன்னால் அழிந்து, மனிதருள் சாதிபேதமே இல்லை என்ற சமநிலை உருவாகும் காலம் அருகிலேயே உள்ளது. ஆகவே நான் பெரிது.. நீ சிறிது என்று வம்புரைத்து மாளாமல் வான் பெரிது என்று வாழ்ந்திருங்கள். திருப்பணிகளுக்காகவோ, தர்மங்களுக்காகவோ மக்கள் மனமுவந்து தரும் பணத்தை காலம் தாழ்த்தாமல் அது அதற்கே பயன்படுத்துங்கள்.

இந்த அறநெறிகளை மனதில் கொள்ளாமல், இது மனித போதனைதானே என்று மதத்துடன் இருக்காதீர்கள். நல்ல நூல்களைக் கற்றுத் தெரிந்து, அந்த நூல் வழி வாழுங்கள். அப்படிக் கல்லாதார் வாழ்க்கை இனிமேல் கசந்து போகும் இந்தச் சத்திய வாக்குகளை மதிக்காமல் மத்திபமான செயல்களில் இன்னும் ஈடுபட்டீர்களேயானால் உங்கள் மனசாட்சியாக உங்களுக்குள் இருந்து கொண்டிருக்கும் இறைவனின் கோபத்திற்கு ஆட்படுவீர்கள். இது உண்மைதான் என்று கடைப்பிடிப்போர் தர்மபூமியில் வாழ்வார்கள்.

இவையாவும் பரலோக வார்த்தையல்லால் பூலோக வார்த்தை இல்லை என்றெல்லாம் பகுத்தறிவைப் பெற்றுள்ள மனிதகுலம் மாய நினைவுகளில் இருந்து விடுபட்டு மேம்படுவதற்காக மனத்திறன் போதித்த அந்த மாயாதி சூட்சன் எழுதிய எழுத்துகளுக்குள், எழுதப்படாத எண்ணறிய கருத்துப் புதையல்களைத் தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கும் அகிலத்திரட்டு அம்மானை என்னும் ஆகமத்தையும், ஒட்டுமொத்த உலக நடப்புகளில் ஒன்றும் விடுபடாமல் உரைக்கும் அருள்நூல் என்ற அரிய பொக்கிஷத்தையும் அருளியுள்ளார்.அய்யா வைகுண்டர் அருளிய வாழ்க்கைக்கான அருளுரை