புதன், 15 ஏப்ரல், 2015

சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:



ஏகன்போக னப்பாநான் இருப்பதை அறிவாரில்லை
கருவூர்தனிலிருந்து கனவருத்தப் பட்டுவந்தேன்
பாலன் சிறுகுழந்தை வந்தபாதையறிவீர்மக்காள்
உங்களுக்கு வேலைசெய்ய நான் உலகில்வந்தேன் கண்ணுமக்காள்
விளக்கம்:
=========
அத்தனையும் அனுபவிப்பவன் நான் என்பதை அறிவார் இலர். மகிழ்வான கருவூர் (சகசுராரம்) விட்டு இவ்வுலகுக்கு மிகவும் வருந்தி வந்தேன். பாலனாகிய இந்தச் சிறுகுழந்தை(வைகுண்டர்) வந்த பாதையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளே உங்களுக்கு எல்லாக் கடமைகளையும் செய்வதற்காக நான் இவ்வுலகில் அவதாரம் எடுத்தேன்.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
===========================
இருமனதா லெண்ணாதே பின்எனக்குஉத்தரம் சொல்வாயே
மருந்துவாழ் மாமுனிவன் மாயசாலக் காரனும்நான்
நாடெல்லாம் பாடியாச்சே நாதனென்ன செய்வேனப்பா
வேலை செய்தால் வினையில்லையே அந்த விசமதுதான் அனுகாதப்பா
விளக்கம்:
========
நான் சொல்லுவதை நீ சந்தேகத்தோடு சிந்திக்காதே, அப்படிச் சிந்தித்தால் பிற்காலத்தில் எனக்கு நீ தகுந்த காரணம் கூற வேண்டிவரும். மருந்துவாழ் மலையில் வாழும் மாமுனிவனும் நானே. மாய சாலங்களைப் புரிந்து வரும் முனிவனும் நானே. இந்த நாடெல்லாம் நான் உபதேசங்கள் செய்து விட்டேன். அதற்குமேல் வைகுண்ட நாதனாகிய நான் என்ன செய்வேனப்பா? ஒழுங்காக நான் சொன்னபடி நீ செய்தால் எந்தவிதக் கர்மவினைகளும், காம இச்சையும் உன்னைத் தீண்டாது.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
===========================
மந்திரத்தால் தந்திரத்தால் மாரணத்தால் தீர்ந்திடுமோ
எல்லோர்க்கும் கோடிப்பாம்பு இருக்குதப்பா சத்துருவாய்
நல்லோரைத் தீண்டாது நாதனிங்கேசொல்லுகிறேன்
முச்சந்திக்குள்ளிருந்துபாம்பு உச்சம்பெற்று வருகதப்பா
விளக்கம்:
=========
காம இச்சையை மந்திரத்தாலோ, தந்திரத்தாலோ, இறப்பின் முடிவினாலோ, அழிக்க முடியாது. எல்லாரிடமும் காம இச்சையாகிய பாம்பு பாசம் என்னும் வேறு உருவாகப் பிணைந்து ஆரவாரித்துக் கொண்டிருக்கிறது. அது நல்ல குணமுள்ளவரைத் தீண்டாது. வைகுண்ட நாதனாகிய நான் இதைச் சொல்லுகிறேன். முச்சந்தியாகிய மூலாதாரத்தில் இருந்து கொண்டு காம இச்சையாகிய பாம்பு தன் சக்தியைப் பெருக்கிக் கொண்டு வருகிறதப்பா.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
==========================
ஆவென்று அழுதாலும் அருந்தவப்பட்டாலும்
கூவென்று அழுதாலும் கொத்திவிடும் அப்பாம்பு
ஆணும்பெண்ணும் கூட்டியாட்டி ஆக்கிவைக்க நான்வருவேன்
நாலுவகைக்கணக்கிலும் நான்தீர்ப்புச்செய்ததுண்டு
விளக்கம்:
=========
அய்யோ என்று அழுதாலும், பல நோன்புகள் செய்தாலும், கூப்பாடிட்டுக் கண்ணீர் வடித்தாலும், அது உன்னைக் கொத்தி விஷமாக்கி விடும். ஆண்களையும், பெண்களையும் இணைத்து ஆட்டி அவர்கள் இணைப்பு மூலம் உயர்நிலை ஆக்கி வைக்கவும் நான் வருவேன். சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் ஆகிய நாலு வகைக் கணக்கிலும் அவரவர் நிலைக்கு ஏற்பத் தீர்ப்பு செய்வதுண்டு.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
===========================
செம்பவளத்தேரறி நான்தேசமெல்லாம் பார்க்கவாறேன்
வம்புவசை அதிகமப்பா வகையறியாமல் மயங்குகிறார்
ஆங்காரம் அடிபிடிகள் அதிகமப்பா தேசமெங்கும்
கொலைகளவு அதிகமப்பா குடிகேடு ஆச்சுதப்பா
விளக்கம்:
=========
செம்பவளத் தேரின் மேலேறித் தேசமெல்லாம் பார்க்க வருவேன். வம்புகளும் வசையான பேச்சுகளும் அதிகமாகி இறைவனை அடைகின்ற வழிகளை அறியாமல் இவ்வுலக மக்கள் மயங்கி வாழுகின்றார்கள். இத்தேசத்தில் ஆணவமும், பிறரை அடித்துப் பிடித்துத் துன்புறுத்துகின்ற நிலைகளும் அதிகமாகி விட்டன. கொலை களவு போன்ற தீயசெயல்கள் அதிகமாகி இவ்வுலக மக்களெல்லாரும் கேடு அடைந்து வருகிறார்கள்.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
===========================
பெண்ணாலேஆண் அழிவு பெருகுமடாபூமியெங்கும்
ஆணும்பெண்ணும் அழிவாகும் அம்பலத்தரசர் முடிவாகுதடா
வறுமையதுதான் பெருத்து நீங்கள்வழிதப்பிப்போவீர்களே
பொய்புரட்டு அதிகமப்பா பொருத்தல்லை மிகலிநமக்கு
விளக்கம்:
=========
பெண்களினால் ஆண்களின் அழிவும், ஆண்களினால் பெண்களின் அழிவும், இப்பூமி எங்கும் பெருகி வரும். அம்பலத்தை ஆண்டு கொண்டிருக்கின்ற வைகுண்ட இராசர் இவற்றை எல்லாம் முடித்து வைப்பார். இவ்வுலகில் வறுமை நிலை அதிகமாகி அதன் காரணத்தினால் நல்ல வழிகளிலிருந்து தப்பித் தவறு செய்வீர்கள். கவனமாய் இருங்கள். பொய்யும் புரட்டும் அதிகமாக தாண்டவமாடுகின்ற இக்கலி நமக்கு எள்ளளவும் பொருத்தம் இல்லாதது.
 அய்யா உண்டு.

அகிலம்:

அம்மை மார்களுக்கு மதலை ஈதல்:
================================
இப்படியே ஒத்து இவரிருக்கும் நாளையிலே
நற்புடைய தெய்வ நாயகிமார் கேட்டபடி
மதலை கொடுக்க மனதிலுற் றெம்பெருமாள்
விளக்கம்:
=========
இப்படியாக இல்லற வாழ்க்கையை உலகோடு இயைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் சமயம், தமது மனைவிகளாகிய தெய்வக்கன்னியர் கேட்டபடி அவர்களுக்குக் குழந்தைகள் கொடுக்க வைகுண்டர் மனதில் நினைத்தார்.
அகிலம்:
=======
குதலை யினத்தைக் கூறி மிகவுரைத்தார்
ஏழினமு மாதருக்கு இனமிட்டே தான்கொடுத்து
நாளுவந் தபோதே நாரணருங் கொண்டாடி
வாய்த்த திருநாள் மகிழ்ச்சையுட னடக்க
ஏற்றகுலச் சான்றோர் எல்லோரும் வந்துநிற்க
பிள்ளை தனையெடுத்துப் பெண்ணார்க ளேழ்பேர்க்கும்
வள்ளலந்த மாலும் மனதுற்றி ருக்கையிலே
கண்ணான தெய்வக் காரிகைமா ரெல்லோரும்
விண்ணாண மாக வீரநா ராயணரை
விளக்கம்:
=========
தாம் நினைத்தபடியே, பூலோகக் குழந்தைகளில் யார் யாருடைய குழந்தைகளென்று கூறி ஏழுகன்னிகளுக்கும் தனித்தனியாக குழந்தைகளைக் கொடுத்துவிடச் சமயம் வந்து விட்டது என்று நினைத்தபடி ஞாயிற்றுக் கிழமைத் திருநாள் சமயம் நாராயணர் மகிழ்ச்சி பொங்க ஆடியவண்ணம் இருந்தார். இப்படியாக திருவிழா நடந்து கொண்டிருந்தது. அங்கே உயர்வான சான்றோர் குல மக்கள் எல்லாரும் கூடி நின்றார்கள். இப்படிப் பிள்ளைகளைக் கன்னியர் ஏழுபேருக்கும் இன்று கொடுக்க வேண்டுமென்று நினைக்கின்ற வேளையில், கண்ணைப் போன்ற தெய்வக் கன்னியர் எல்லாரும் வெட்கத்தோடு வீர நாராயணரைப் பார்த்து பேசலாயினர்.
அகிலம்:
========
கண்ணரே கரிய மாலே காரணக் குருவே அய்யா
இண்ணெங்கள் மதலை யேழும் எடுத்துநீ ரினம தாக
விண்ணெங்கு மகிழத் தந்து வெற்றியா யாண்டு கொள்ளும்
மண்ணெங்கு மளந்த மாலே மகாபரக் குருவே யென்றார்
விளக்கம்:
=========
கண்ணரே, கருமை நிறமான திருமாலே, எல்லாவற்றிற்கும் காரணமான குருவே, அய்யாவே, உலகை அளந்தவரே, இன்று எங்கள் குழந்தைகளை எடுத்து எங்களிடம் தனித்தனியாகப் பிரித்து வானோர்கள் புகழும்படியாக மகிழ்ச்சியுடன் எங்கள் கைகளில் தந்து, கலியழித்து வெற்றி கொண்டு எங்கள் ஆட்சி செய்வீராக.
அகிலம்:
========
நாதக் குருவே நாடுமெங்கள் மன்னவரே
மாதவரே யின்று வந்தநாள் நன்றெனவே
இப்போ மதலை எடுத்து மிகத்தாரும்
செப்போடு வொத்த திருமாலே யென்றுரைத்தார்
விளக்கம்:
=========
எங்கள் பராணநாதனாக நிற்கும் குருவே, செப்புச் சிலையை ஒத்த எங்களை விரும்புகின்ற எங்கள் கணவரே, மாதவரே, இன்று உதித்துள்ள நாள் மிகவும் நல்ல நாள் ஆகும். எனவே, இப்பொழுதே எங்கள் குழந்தைகளை எடுத்து தருவீராக என்று கன்னியார் கேட்டனர்.

சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:

தானமானமில்லையப்பா சாதிவரம்பழியுதடா
சங்கக்கூட்டம் இல்லையாடா சரசக்கூட்டம் இக்கலியில்
கொம்பன்புழு வென்றறியாமல் குதிபோடுகிறார் கலியில்
மக்களுக்கு உத்தரவு மால்சொல்ல நீதிஉண்டோ
விளக்கம்:
=========
இங்கு வாழுகின்ற மக்கள் பிறருக்குத் தானம் செய்வதும் மான உணர்ச்சி இல்லாமல் இருப்பார்கள். இவர்கள் ஒவ்வொரு சாதிக்கும் கொடுக்கப்பட்ட வரம்புகளை மீறுவர். இக்கலியுகத்தில் சத்சஙகக் கூட்டத்தை (நல்லவர்கள் கூடும் சத்சங்கக் கூட்டத்தைச் சங்க கூட்டம்) இல்லாமல் ஆக்கி, அவற்றைச் சரச சல்லாப உல்லாசக் கூட்டம்(இயற்கை உறவுக்கு மாறாக உறவு கொள்ளும் தீயோர்கள் கூடும் கூட்டம்) ஆக்குவர். இப்படிச் செய்வதால் தவறான உறவால் கொம்பன் புழுக்களை உருவாக்குகின்றார்கள் (HIV வைரஸ்) என்பதும், அப்புழுக்கள் தங்களை உருவாக்குகின்ற அவர்களையே அழிக்கும் (எயிட்ஸ்) என்பதும் தெரியாமல் அவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள். அவர்களைத் திருத்துவதற்கு உரிய உத்தரவு பிறப்பிக்க அவர்களிடம் எந்தவித நீதியும் இல்லையே.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
============================
அறிவுசொல்லி தெளிவுதர நான்அம்பலத்தில் கணக்கர்வைத்தேன்
நான்வைத்த கணக்கரெல்லாம் நன்றுநடுக் கேட்கவில்லை
ஆடிநன்றாய் பாடிநன்றாய் கொடுக்கவில்லை என்மகனே
ஆதிபரன் சோதிநாதன் அதிகாரம் செய்யவாறேன்
விளக்கம்:
=========
உங்களுக்கு ஆன்மீக அறிவைச் சொல்லித் தரவும் ஆன்மீகத் தெளிவை உருவாக்கித் தரவும் நான் அம்பலத்தில் கணக்கர் ஒருவரை நியமித்தேன். ஆனால் நான் வைத்த கணக்கர் எல்லாரும் அவர்களிடத்தில் தவறுகளை சுட்டிக் காட்டி நீதி கேட்காமல் இருந்து விட்டனர். நன்றாக ஆடிப்பாடிப் பொழுதைக் கழித்துவிட்டு நீதிக்கணக்கை ஒப்படைக்கவில்லை. எனவே, ஆதிபரனும் சோதிமயனுமாகிய நான் இப்பொழுது அந்த அதிகாரச் சட்டத்தைச் செய்ய வருவேன்.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
===========================
புத்தியினால் கெட்டவரே பிழைக்கமதி தேடுங்கப்பா
அதிகாரசச்சட்டமது அவனியெங்கும் ஆகுதப்பா
பத்திரத்தைப்பாடிவந்தாலும் பாதையிலே போகவிடான்
கொடியென்ற நாகமது கொத்தும்வேளை அறிவீர்களோ
விளக்கம்:
=========
உங்கள் புத்தியினாலேயே நீங்கள் கெட்டு விட்டீர்கள். இனி மேலாவது பிழைத்து வாழுகின்ற அறிவைத் தேடுங்கள். எனது அதிகாரச் சட்டங்கள் இவ்வுலகம் எங்கும் பரந்து காணும் நல்ல காரியங்களை நான் உபதேசித்து வந்தாலும் என்னை நல்ல வழியில் போகவிடாமல் தடுக்கிறார்கள். உங்களிடம் உள்ள காம இச்சையாகிய நச்சுப்பாம்பு எப்பொழுது உங்களைக் கொத்தும் என்று நீங்கள் அறிய முடியாது.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
===========================
அடங்காத பாம்பதுதான் அதன்நஞ்சை அறிவீர்களோ
எண்ணடங்கா பாம்பதற்கு இருக்கிறார் இரையாக
இருபத்தைந்து பாம்பாக உங்களிடம் பார்க்கவருகிறாரே
சான்றோரிடமிருந்து பலசாத்திரங்கள் சொல்லித்தாறேன்
விளக்கம்:
=========
யாருக்கும் அடங்காதது காம இச்சையாகிய பாம்பு. அதன் விஷத்தன்மையை நீங்கள் அறிய முடியாது. யாருடைய எண்ணத்தாலும் அடக்க முடியாத விஷப் பாம்பாகிய காம இச்சைக்கு இரையாவதற்கு மக்கள் ஆளாகி உள்ளனர். உங்களுக்கு உருவாகும் காம இச்சையைப் போன்று இருபத்து ஐந்து மடங்கு காம இச்சை உள்ளவராகத் தோற்றமளித்து உங்களிடம் நீதி கேட்க அய்யாவாகிய நான் வருகிறேன். அப்படி வரும்போது சான்றோர்களுக்குப் பல சாத்திரங்களைத் தெளிவான முறையில் சொல்லி வருவேன்.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
===========================
என்னாலேஆகுமட்டுமிதுவரைக்கும் புத்திசொன்னேன்
நானாண்டி ஆண்டிநடுக்காட்டு குருவாண்டி
கேளாண்டிகுலத்தாண்டி இந்தகுவலயத்தை அளந்தாண்டி
சித்தாண்டிசிவனாண்டி இந்ததேசமெங்கும் நானாண்டி
விளக்கம்:
=========
என்னால் முடிந்த வரையில் தெளிவான முறையில் உங்களுக்கு உபதேசித்து விட்டேன். உங்களை ஆட்சி புரியும் ஆண்டியும், சுழி முனைக்குக் குருவாகிய ஆண்டியும், கோள்களுக்கு எல்லாம் சக்தி கொடுக்கும் ஆண்டியும், குலங்களுக்குத் தலைவனான ஆண்டியும், மூவுலகத்தையும் ஈரடியால் அளந்த ஆண்டியும், எட்டுச் சித்துகளுக்கும் காரணமான ஆண்டியும் நானே. எல்லாம் வல்ல சிவனாகிய ஆண்டியும் நானே. இத்தேசம் எங்கும் பரந்திருக்கின்ற ஆண்டியும் நானே.

அகிலம்:

நல்லதுதான் பெண்ணே நாட்டு நருளறிய
முல்லை வனத்தில் முன்னேநீர் பெற்றுவைத்த
மதலைக ளேழும் வளர்த்து இத்தனைநாளும்
குதலைப் பிராயமதாய்க் கொண்டுதிரிந் தேவளர்த்தேன்
விளக்கம்:
========
இதைக் கேட்ட சுவாமி, நல்லதுதான், என்று கூறி நாட்டில் உள்ள மக்கள் எல்லாரும் அறியும்படியாகக் கன்னியரை நோக்கி, பெண்களே, நீங்கள் முன்பு முல்லைவனத்தில் பெற்று வைத்த குழந்தைகள் ஏழுபேரையும் நான் இவ்வளவு காலமும் பிரியத்துடன் வளர்த்துப் பாதுகாத்து வந்தேன்.
அகிலம்:
=======
பாலமு தூட்டாமல் பருவனத்தில் நீங்கள்விட்டுக்
கோல வனத்தூடே குதித்தோடி மீண்டுவந்தீர்
என்னென்ன பாடு யானிந்தப் பிள்ளையினால்
பொன்னனயக் கன்னியரே புகலவுந்தான் கூடிடுமோ
தெய்வேந் திரன்பசுவைத் திரையாகக் கொண்டுவந்து
விளக்கம்:
=========
நீங்கள் பெற்ற குழந்தைகளுக்குத் தாய்ப்பால்கூட கொடுக்காமல் அந்தப் பெரிய வனத்தில் விட்டுவிட்டு ஓடி விட்டீர். இப்போது மீண்டும் என்னிடம் வந்துள்ளீர். நான் இந்தக் குழந்தைகளை வளர்ப்பதற்குப்பட்ட துன்பங்கள் எவ்வளவு. பொன்னைப் போன்று அருமை பொருந்திய கன்னிகளே, நான்பட்ட துன்பங்களை உங்களிடம் சொல்லித் தீருமோ. தெய்வேந்திரனுடைய பசுக் கூட்டங்களை அப்படியே அழைத்து வந்தேன்.
அகிலம்:
=======
மொய்வனத்தில் பாலுகொண்டு மிகக்கறந்து மக்களுக்கு
ஊட்டி வளர்த்தேன் உம்பர்கோ னுமறிந்து
மாட்டிடவே யென்னை மாபடைக ளோடுவந்தான்
விளக்கம்:
=========
வண்டுகள் மொய்கின்ற வனத்தில் இருந்த இக்குழந்தைகளுக்கு அப்பசுக்களின் பாலைக் கறந்து ஊட்டி வளர்த்தேன். அதை அறிந்த இந்திரன் என்னை வசமாக ஒழித்துக் கட்ட பெரும்படையோடு வந்தான்.
அகிலம்:
========
தப்பி யவன்றனக்குத் தான்வளர்த்தேன் பிள்ளைகளை
ஒப்பரியப் பாலமிர்தம் ஒருநா ளொழியாமல்
மைப்பெரிய தாலம் வகுத்து மிகவளர்த்தேன்
விளக்கம்:
=========
அவன் பிடியில் அகப்படாது தப்பிப் பிழைத்து, இந்த குழந்தைகளைத் துன்பத்துடன் வளர்த்து வந்தேன். ஒப்பற்ற பால் அமிர்தத்தை ஒரு நாள் கூட விடாமல் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காகப் பனைமரங்களை வளர்த்தேன்.
அகிலம்:
========
மக்களுக்காய்ப் பாடுபட்டு வைகைமண் ணுஞ்சுமந்து
சொக்கரெனுஞ் சமைந்தேன் சொந்தமக்கள் வாழவென்று
பின்னுமிப் பிள்ளைகள்தான் பெரும்புவியை யாளவைக்கத்
துன்னுகெட்ட கலியில் தோன்றிக் குதித்துவந்தேன்
வந்தான்சா ணான்குலத்தில் மாயனென்று மாநீசன்
விளக்கம்:
=========
குழந்தைகளுக்காகப் பெருந்துன்பங்கள் அனுபவித்தேன். சொக்கராக உருவெடுத்து அன்றைக்கு வைகை ஆற்றுக்குச் சென்று இந்தப் பிள்ளைகள் வாழ்வதற்காகப் பிட்டுக்கு மண் சுமந்தேன். மேலும், இவர்களை இந்தப் பெரிய பூமியில் ஆள வைக்க வேண்டும் என்று நிறைவு கெட்ட இந்தக் கலியுகத்தில், சாணார்க் குலத்தில் வைகுண்டர் என்னும் பெயரோடு தோன்றி வந்தேன்.
அகிலம்:
========
பின்தாக்கிக் கையைப் பிடித்து மிகஇறுக்கிச்
சாட்டைகொண் டேயடித்துத் தடியிரும்பி லிட்டுவைத்துக்
கோட்டி மிகச்செய்து கூறி மிகஅடித்து
அரங்கு மணிமேடை யானதிலே யென்னைவைத்துப்
பரங்குவிய நித்தம் பாதம் பணிவேனென்றான்
சாணா ரிடத்தில் தான்போகா தபடிக்குக்
கோணாம லெங்களுடன் கூடியிரு என்றுடித்தான்
விளக்கம்:
=========
சாணார் குலத்தில் மாயன் வாந்தாரோ என்று கூறிய சலிநீசன் என் கைகளைப் பிடித்துப் பின்புறமாக வைத்துக் கயிற்றினால் கட்டி இறுக்கி சாட்டைகளைக் கொண்டு அடித்து பெரிய விலங்கிலிட்டு, தனியான பேச்சுப் பேசி அவன் அரண்மனையில் என்னைச் சிறைவைத்து என்னை நோக்கி நாங்கள் உடல் ஒடுங்கிப் பணிவுடன் உன் பாதங்களை நித்தம்நித்தம் போற்றி பணிகின்றோம். நீ சாணார்க் குலத்துக்கு போக வேண்டாம் எங்களோடு இரு என்று கூறிவிட்டு என் சம்மதத்துக்காக என்னை அடித்தான்.
அகிலம்:
=======
பெற்றபிள்ளை யெல்லாம் பெருகலைந்து போவாரென
இற்ற விலங்கில் இருந்தேன் மிகக்கவிழ்ந்து
விளக்கம்:
=========
நான் பெற்ற பிள்ளைகள் எல்லாரும் பெருகித் தந்தை இலர் என்று அலைந்து போவார்களே என நினைத்து நான் நினைத்தால் முறித்து எறியக் கூடிய விலங்கில் சான்றோர்களுக்காக தலை கவிழ்ந்தபடி அமர்ந்து இருந்தேன்.
அகிலம்:
========
சாலமுட னீசன் தான்படுத்தும் பாட்டையெல்லாம்
பாலருக்காய் வேண்டிப் பாரறியப் பட்டேனான்
பெற்றது போதுமென்று பெண்ணேநீ ரேழ்பேரும்
மெத்த தெளிந்து மேவிவந்தீ ரிப்போது
என்றுரைக்க மாலும் ஏந்திழைமா ரேழ்பேரும்
மன்று ள்ளோர்களறிய மாத ருரைக்கலுற்றார்
விளக்கம்:
=========
நீசன் மந்திரச் சால வித்தைகளுடன் எனக்கு செய்த துன்பங்களைச் சான்றோர்க்காகவும், இவ்வுலகம் உண்மையை அறிவதற்காகவும் நான் ஏற்றுக் கொண்டேன். ஆனால் பெண்களே, நீங்களோ பெற்றது மட்டும் போதும் என்று சென்று விட்டு இப்பொழுது மெதுவாக இங்கு வந்து நிற்கின்றீர்களே? என்றார்.

சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:



மாலாண்மாறாண்டி நான்மாலும்சிறு ஆண்டியடா
கந்தைத்துணிதோளிலிட்டு கந்தப்பனும் நான்வருவேன்
இன்னும்சிலகாண்டம் எடுத்தெழுதி சொல்கிறேன்
ஆயிரத்தெட்டாம்மாசியிலே கலியுகத்தில்வந்தேனடா
விளக்கம்:
========
திருமாலாகிய ஆண்டியும் நானே, என்றும் மாறாத தன்மையுள்ள ஆண்டியும் நானே, கந்தைத் துணியைத் தோளில் இட்ட கந்தப்பனும், திருமாலும் ஆகிய நான் ஒரு சிறு ஆண்டியைப் போல் உங்களிடம் வருவேன். மேலும் சில காண்டங்கள் உள்ளன. அவற்றையும் எடுத்து எழுதி உங்கள் முன்னால் சொல்லுகிறேன், கேளுங்கள். ஆயிரத்து எட்டாம் ஆண்டு மாசி மாதத்தில் இக்கலியுகத்திலே நான் அவதாரம் எடுத்தேன்.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
========================
சாதியானலிங்கமொன்று சமுத்திரத்துள்ளிருக்குதடா
ஆதியானலிங்கமதை நீங்கள்தினம் போற்றிடுங்கோ
அதில், முத்தியுண்டு சக்தியுண்டு முனிபரனும்பாடுகிறேன்
கோலநெடுமாலயனும் கோலம்கட்டி ஆடுகிறேன்
விளக்கம்:
========
உயர்வகையான இலிங்கம் ஒன்று சமுத்திரத்தின் (சகசுராரத்தின்) உள்ளே காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. ஆதிபரனாகிய அந்த இலிங்கத்தை நீங்கள் தினந்தினம் போற்றி ஒரு முகமாக மனதில் தியானித்து வாருங்கள். அப்படி செய்தால் உங்களுக்கு முக்தி நிலை வாய்க்கப்பெறும். அதனால் பெரும் சக்தி உங்களுக்குள் உருவாககும். முனிவனாகிய நான் இதை உபதேசிக்கிறேன். பல உருவங்களை எடுத்த நெடிய திருமாலும், பிரம்மாவும் ஆகிய நான் இப்போது புதிய வேசம் எடுத்து ஆடுகிறேன்.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
========================
நித்தம்செத்த பாவியப்பா நாதனெடுத்து தாறேனப்பா
செத்துச்செத்துப் பிறப்பே னடா என் சித்துவித்தை அறிய மாட்டான்
அல்லும்பகலும் குறிகள்சொல்லி அவதிமெத்த ஆச்சுதடா
ஆடுதடா ஒருபம்பரம் தான் அதையமர்த்த வல்லாருண்டோ
விளக்கம்:
========
நித்தம் செத்துக் கொண்டிருப்பதும், பிறந்து கொண்டிருப்பதும் நானே, இவ்வாறு நித்தம் கொண்டிருக்கும் சாதுவான நான் தீயவர்களுக்கு மிகுந்த கொடுமைக்காரன் ஆவேன். நித்தம் செத்துக் கொண்டே இருப்பதைப் போல பிறந்து கொண்டும் இருக்கின்றேன். என் சித்துகளையும், விளையாட்டுகளையும் அறியமாட்டீர்கள். இரவு பகலும் பல இரகசிய வழிகளை உங்களுக்குச் சொல்லி விட்டு இப்போது முடிக்கின்ற நேரமாகும். குண்டலினி சக்தியாகிய பம்பரம் உன்னுள்ளே ஆடிக் கொண்டே இருக்கின்றது. அதைத் தவறான வழியில் செல்லாமல் ஒருநிலைப் படுத்தி அதன் ஆட்டத்தைச் சீர்படுத்திக் கட்டுக்குள் ஆக்கிப் பலன் பெறும் வல்லமை உள்ளவர்கள் இங்கு ஒருவரும் இலர்.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
========================
காணுங்குறிசொல்லுதற்கு கழுகுமலையாண்டிவந்தேனடா
இனிதேனமலர் மீதிருந்து பலசிறப்புச் செய்யவாறேனடா
உங்கள் குலதெய்வமென் றுஎனக்குக்கடன் செலுத்தயாருமில்லை
காரணத் தெய்வம் என்ற எனக்குக் கடன் செலுத்த யாருமில்லை
விளக்கம்:
========
இவ்வாறு நான் கண்ட பல இரகசிய வழிகளை உங்களிடம் சொல்ல சகசுராரத்தில் ஆட்சி புரிந்த ஆண்டியாக இருந்த நான், இங்கே வந்தேன். இனிமேல் சகசுராரத்தில் அமுதம் உருவாகின்ற மலர் மீதிருந்து பல சிறப்புக்களைத் தகுதி பெற்றவருக்குச் செய்வேன். உங்களது குலத் தெய்வமானதும் வைகுண்டருமாகிய என்னை உபசரித்து பணிவிடைகள் செய்வதற்கு யாரும் இலர். எல்லா தெய்வங்களுக்கும் மூலமாகிய காரணத் தெய்வம் நான் தான் என்பதைப் புரிந்து கொண்டு எனக்கு வேண்டிய கடமைகளைச் செலுத்த இங்கு யாரும் இலர்.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
========================
ஏவல்செய்யும் பிசாசாலே என்மக்காள்ஈடழிந்துபோனீர்களே
மகாலிங்கம் சொக்கலிங்கம் மாயமுத்து சோதிலிங்கம்
ஒருமுத்துலோகமுத்து இந்த உலகமெங்கும் பெருத்தமுத்து
ஏகமுத்து நாகமுத்து எங்கும்முழு முத்தானேன்
விளக்கம்:
========
என் குழந்தைகளே, நீங்கள் எனக்கு வேலை செய்கின்ற பிசாசுகளை நம்பி அவற்றால் சக்திகளெல்லாம் அழிந்து நிற்கின்றீர்களே, மகாலிங்கம், சொக்கலிங்கம், மாயமுத்து சோதிலிங்கம், லோகமுத்து, இவ்வுலகமெல்லாம் பெருத்த முத்து, ஏகமுத்து, நாகமுத்து எல்லாம் ஒரே முத்து தான். அந்த ஒரே முழுமுத்துவும் நானே.
 அய்யா உண்டு.

அகிலம்

உடுகலைகள் கொய்து உற்றமுடி தான்விரித்துக்
கடுகெனவே வூசிதனில் கைவிரலைத் தானூன்றி
ஆசை யுறவற்று அக்கபக்கத் தாசையற்று
மாசைக் கருவறுத்து மயக்கவெறி தானறுத்து
பாச மறுத்துப் பக்கத் துணைமறந்து
வாச மணமும் வாக்குப்பேச் சுமறந்து
காடு நினைவறுத்துக் கனாப்பயங்கள் தானறுத்து
வீடு நினைவறுத்து வெளிவீடு தான்திறந்து
மலசலங்க ளற்று வாயுவுடப் போக்குமற்றுக்
விளக்கம்
உடுத்திருந்த துணியின் மேல் அக்கறையின்றி எங்கள் தலைமுடி கலைந்த வண்ணம் கடுகளவு முனையுள்ள ஊசியில் கால் பெருவிரலை ஊன்றிய வண்ணம், ஆசை சுற்றத்தார்கள் உறவு போன்றவற்றை நீக்கி, மாய எண்ணங்களை அறுத்தெறிந்து மயங்குகின்ற வெறிகள், பாசம், பாதுகாக்கும் துணைகள் மறந்து வாசம் பொருந்திய பொருள்கள், வாயால் பேசுகின்ற பேச்சு, அந்தக் காட்டின் நினைவு, கனவு பயங்கள், வீட்டு நினைவு போன்றவற்றை தோன்றாதவாறு அறுத்தெரிந்து சகஸ்கார தள வெளி வீட்டைத் திறந்து மனம் நீர் கழிப்பது மறந்து சுவாசத்தின் போக்கினை நிறுத்தி வாழ்ந்தேம்.
சென்று விட்டு இப்பொழுது மெதுவாக இங்கு வந்து நிற்கின்றீர்களே? என்றார்.

அகிலம்

பூரணத்தின் ஞானப் பெரிய திருமாலே
ஆரு மொருதர் ஆராட்டங் காணாத
மேரு நிறைவனத்தில் மெல்லிய ரேழ்பேரும்
ஒருவர்முக மொருவருக்கு ஒருரூபங் காணாமல்
கரிய அவரவர்கள் காடு வடவுகளில்
விளக்கம்
பூரணப்பொருளின் ஞானமாக நிற்கின்ற பெரிய திருமாலே, எந்தச் சலனமும் இல்லாத மலைகள் அடர்ந்த கொடிய வனத்தில் மென்மையான கன்னியர் ஏழு பேரும் ஒருவருடைய உருவம் ஒருவருக்குத் தெரியாவண்ணமும் வேறு ஒருவர் முகம் காணாத வண்ணமும் அவரவர் இடத்தில் இருந்து தவம் செய்தோம்.

அகிலம்

பிள்ளைகள்தான் நன்றாய்ப் பெருகி மிகவாழ
வள்ளலெங்கள் மாலே மாறாத் தவசிருந்த
காரணத்தைச் சொன்னால் கணக்கி லடங்கிடுமோ
விளக்கம்
உடனே ஏழு கன்னிகளும் அங்கு நின்றவர்கள் எல்லாரும் அறியும்படி, நாங்கள் பெற்ற பிள்ளைகள் நன்றாகத் தழைத்துப் பெருகி வளர வள்ளல் ஆகிய எங்கள் திருமாலு நாங்கள் நிலையான தவம் இருந்தோம். அப்போது பட்ட துன்பங்களை நாங்கள் சொன்னால் அது ஓர் அளவு கிடையாது.

அகிலம்:

தானநிறை புற்றருகில் தன்னால் மிகவாழும்
பிள்ளையால் நாங்கள் பெருகத் தவசிருந்த
உள்ளமைக ளெல்லாம் உரைக்க எளிதாமோ
நாணமற்று ஊணுமற்று நாலுமூணு ஆண்டுவரை
தாணருட தஞ்சமெனத் தவசு மிகப்புரிந்து
பிள்ளைக ளாசையினால் பேருல கில்வந்தோம்
வள்ளலெங்கள் மக்கள்தம்மை மாயவ ரேதாரும்
தந்து புவியாளத் தலைவரே யும்முடைய
விந்துவழி மக்களையும் விரைவாய் மிகத்தாரும்
விளக்கம்:
இப்படி நாங்கள் பெற்ற குழந்தைகளுக்காக் கடுமையான தவமி்ருந்த உண்மைகளை எல்லாம் எடுத்து சொல்லுவது என்றால் அது எளிதான காரியம் ஆகுமா? நாங்கள் நாணமற்று உண்ண உணவுமற்றுப் பன்னிரண்டு ஆண்டுகள் வரை சிவவே தஞ்சம் என்று கடினமாகத் தவம் புரிந்து வந்தோம். பிள்ளைகளை உம்மிடமிருந்து பெறுவதற்குரிய ஆசையினால் இப்பூவுலகுக்கு வந்தோம். வள்ளலாகிய நீர் இப்பொழுது எங்கள் குழந்தைகளையும், அவர்களின் சந்ததியாரையும் விரைவாகத் தந்து இந்த இராசியத்தையும் ஆள வைப்பீராக.

அய்யா வைகுண்டர்

அகிலம்
குலதலமு மற்றுக் கூறுகின்ற பேச்சுமற்றுப்
பேச்சற்று மூச்சற்றுப் பெருவனத்தி லும்மருளால்
ஏச்சதூச்ச மற்று ஈராறு காலம்வரை
நிற்க வுடம்பை நெடும்புற்று தான்மூடிப்
பக்க மால்முளைத்து புறாவினங்கள் தான்கூடி
முட்டையிட்டுக் குஞ்சு மூன்றுநே ரம்பொரித்து
வட்டணியாய்க் காடு வளைந்தெங் களைச்சூழ்ந்து
கடுவாய் புலிகரடி கனத்தகுட்டி களீன்று
கடுகிமிகப் புற்றுக் கரையில் மிகவாழும்
ஆனையது குட்டி அதுபயின் றெங்களுடத்
விளக்கம்:
இவ்வாறு இருந்து பேச்சு மூச்சின்றித் தவத்தின் உச்ச நிலையை அனுபவித்தோம். உமது அருளால் தீமையான பேச்சுகள் இல்லாமல் பன்னிரண்டு வருடங்கள் வரை தவத்தில் நின்றோம். இப்படித் தவத்தில் நின்ற காரணத்தால் எங்களைச் சுற்றிப் பெரிய புற்றுகள் தோன்றி மூடின. எங்கள் பக்கத்தில் ஆல் முளைத்து அதில் புறா இனங்கள் கூடி வாழ்ந்து முட்டை இட்டு மூன்ற முறைகள் குஞ்சுகள் பொரித்துவிட்டன. எங்களைச் சுற்றி வட்டமிட்டு அணி அணியாகக் காட்டில் உள்ள செடிகள் எல்லாம் வளைந்து சூழ்ந்து விட்டன. அக்காட்டில் உள்ள கடுவாய் கரடி ஆகியவை அப்புற்றிறன் அருகில் இருமுறை சக்தி வாய்ந்த குட்டிகள் ஈன்று அவை விரைவாக வளர்ந்தன. அவற்றோடு யானையின் குட்டிகள் பழகி அந்தப் புற்றின் அருகில் வாழ்ந்து வந்தன.