
திங்கள், 31 ஆகஸ்ட், 2015
புதன், 26 ஆகஸ்ட், 2015
அய்யா வழிப் பாடல்கள்
பாயிரம்
அய்யா வழியில் அயராது செல்பவர்
உய்வர் உலகில் உயர்ந்து
1.பாகைத் தலைக்கணிந்து
பாகைத் தலைக்கணிந்து-உமைப்
பார்க்க வருகின்றோம்-எம்
தாகம் தீருமையா-அருள்
தாகம் தீருமையா
சோகம் இனி இல்லை-எம்
சுவர்க்கப் பதித் தோப்பு
யாகம் தேவை இல்லை-நம்
யாவர்க்கும் அவர் காப்பு.
காகம் போல் கூடிக்
களித்துப் பகிர்ந்துண்போம்
ஏகம் இறை என்போம்
யாவரும் உறவென்போம்
ஆண்டான் அடிமையில்லை
அர்ச்சகன் பக்தனில்லை
தீண்டாப் பிணியுமில்லை
வேண்டார் எவருமில்லை
மீண்டும் மீண்டும்
தோன்றி இறந்து
யாண்டும் இடருற்று
இழிபடும் நிலையில்லை.
2.முத்திரைக் கிணற்றுத்
தீர்த்தம்
முத்திரைக் கிணற்றுத் தீர்த்தம்-நம்
முந்தை வினையைத் தீர்க்கும்
சித்திரை நிலவின் ஒளிபோல்-நம்
சிந்தையில் ஞானம் சேர்க்கும்.
இத்தரை இன்பம் யாவும்-அதன்
தித்திப்பின் முன்னர் தோற்கும்
சித்திரப் பூவின்
சிரிப்பைப் போலே-உன்
நித்திரை கூட
நளினமாகும்.
எவர்க்கும் சொந்தம்
எடுக்கத் தடையில்லை
தவத்தின் வலிமை
தந்த தீர்த்தம்-
நம்
சொந்த தீர்த்தம்-நம்
சொந்த தீர்த்தம்
3.அரியர அல்லா
அரியர அல்லாவே ஐயா
எங்கள் ஐயா
அறனெறி சொல்யாவும்
ஐயா எங்கள் ஐயா
பிறனெரி வென்றவர் ஐயா எங்கள் ஐயா
மனு நீதி ஒழித்து
சன் மார்க்கம் தழைக்க
மண்மீது பிறந்த
மாலே ஐயா
மாலே ஐயா எங்கள்
அய்யா
அய்யாவை சிந்திக்கத்
தேன் மணக்கும்
அய்யா என்றாலே வாய்
மணக்கும்
பொய்யான எல்லாமும்
போய்த் தொலையும்
மெய்ஞானம் கூடிமுக்தி
நிலை கிடைக்கும்
இனத்திற்கு ஒருநீதி இல்லை
வனத்திற்கும் நீ போக வேண்டா-உன்
மனத்தினில் அய்யாவை ஏற்றால்
இனியனல் இல்லறம்
நல்லறமாகும்.
அய்யா என்றால் அன்பு
அவராலே வாய்க்கும்
நல் பண்பு
அய்யா என்றால் தெய்வம்-அவர்
அடிபோற்றி நாமெல்லாம்
உய்வோம்.
4.ஐயாவின் வழி
ஐயாவின் வழி நடந்தால்-துயர்
எய்யாத நிலைமை உண்டு.
பொய்யான வார்த்தை இல்லை-நான்
மெய்யாகக் கண்ட உண்மை.
வெய்யிலுக்கு நிழலாகும்-நீல
மயிலுக்கு முகிலாகும்
வையகத்தில் யாவரையும்
வாழ்வாங்கு வாழ வைக்கும்.
பேதம் செய்யும் நீதி இல்லை-ஒரு
ஏதம் கொண்ட சேதி இல்லை
வாதம் செய்யத் தேவை இல்லை-அவர்
வழங்கியவை யாவும் உண்மை
தாழ்வுற்ற எளியோர்க்கும் -நல்
வாழ்வு தந்த வள்ளலவர்
பாழ்பட்டத் தேசத்திற்கு-நல்
பாதை தந்து உயர்த்தியவர்.
அல்லாவின் மார்க்கம் கண்டுத்-திரு
அரங்கனின் சேர்க்கை
கொண்டு
எல்லார்க்கும் எல்லாமும்
அருள்கின்ற ஆற்றலுண்டு.
5.ஐயா உமைப்பாடி
ஐயா உமைப்பாடி சிறப்பிப்பேன்-
புவியில்
உமக்காகப் பிறப்பெடுத்தேன்
அலைகடல் குமரியின்
சிலம்பது குலுங்கிட
கலைமகள் கைவிரல்
களினடம் புரிந்திட
ஐயா உமைப்பாடி சிறப்பிப்பேன்-
புவியில்
உமக்காகப் பிறப்பெடுத்தேன்
எமக்கெனப் பிறந்து
ஏழைக்கு இறங்கி
தமக்கென வாழாத்
தனிப்பெரும் தோன்றலே
ஐயா உமைப்பாடி சிறப்பிப்பேன்-
புவியில்
உமக்காகப் பிறப்பெடுத்தேன்
அருட்பெரும் சோதியும்
அரகர வாதியும்
வரும்பொருள் உரைத்து
வரமருள் தெய்வமும் நீயே
ஐயா உமைப்பாடி சிறப்பிப்பேன்-
புவியில்
உமக்காகப் பிறப்பெடுத்தேன்
தீண்டாத் தீயைத்
தணித்தோய் நீயே
தோன்றா தடிமைநோய்
தொலைத்தோய் நீயே
ஐயா உமைப்பாடி சிறப்பிப்பேன்-
புவியில்
உமக்காகப் பிறப்பெடுத்தேன்
தந்தையும் நீயே-அன்புத்
தாயும் நீயே-என்
சிந்தையுள்ளே-உமை
சிவமாய்க் கண்டேன்
ஐயா உமைப்பாடி சிறப்பிப்பேன்-
புவியில்
உமக்காகப் பிறப்பெடுத்தேன்
6.ஐயாமுகம்
சூரியக் காந்திப் பூவே- எங்கள்
ஐயாமுகம் நீயோ.
ஆரியர் கொட்டம் அடக்கி
ஆகம சட்டம் முடக்கி-நற்
காரியம் செய்தார் ஐயா-நர
நாரணரான ஐயா
பாரியைப் போலே வள்ளல்
பூமியைப் போலே உள்ளம்
ஆரிய நீதிக்கு நெருப்பு
அன்பு தானவர் விருப்பு
பேரிடர் தவிர்க்கும்
பெருமாள்
பெருமை மிகுபுவி
குருவாய்
ஊரிடை உயர்ந்தத்
தோப்பில்
உள்ளம் கொண்டு அமர்ந்தார்.
கார்முகில் போலேக்
கடப்பாடு-அவர்
கடந்தார் பற்பல
இடர்ப்பாடு
வார்சடையோனின் தொடர்போடு-அவர்
வாழ்ந்தார் எனக்கதில்
உடன்பாடு
7.இல்லாமை சொல்லி
இல்லாமை சொல்லிக்
கேட்டால்
எள்ளாமல் எவர் கொடுப்பார்?
எல்லோர்க்கும் கொடுப்பவரு
எங்கள் ஐயா ஒருத்தருதான்
தள்ளி நில்லு என்று சொல்லித்
தாழ்ந்தோரைக் குனியக் குட்டும்
உள்ளம் கொண்ட உலுத்தர்களை
உலகத்தில் ஒழிக்க
வந்தார்
எங்கள் ஐயா சமத்துவரு
ஏழைக்கு உகந்தவரு
ஏரிகுளம் தண்ணியெல்லாம்
விலங்கினம் வாய்வைக்க
சேரிசனம் கைவைத்தால்
சீருகெடும் என்றோரிடை
முத்திரை கிணறு வெட்டி
இத்தரைக்குப் பொதுவில்
வைத்தார்.
வரிகொடா இயக்கத்தினை
வகுத்தளித்த முன்னவரு
நெறிகெட்ட மாந்தருக்கு
நெறிதந்தத் தென்னவரு.
வரியில்லா ஆட்சியினை
வழங்குவார் எங்கள் ஐயா
8.சாமித் தோப்பு வாருங்கள்
பூமி மக்கள் யாவரும்
சாமித் தோப்பு வாருங்கள்
ஐயா என்று அழையுங்கள்
ஆனந்தம் பெருகும் பாருங்கள்
ஐயா எவர்க்கும் சொந்தம் - அவரை
நினைத்தால் இன்பம்
பொங்கும்
ஐயா அன்பின் வலிமை
புரிந்தார் பெறுவர் பெருமை.
ஐயா இடத்தில் இல்லை
அடிமைத் தளையின்
தொல்லை
அவர்தான் அன்பின்
எல்லை-நீ
அறிந்தால் இன்பம்
கொள்ளை.
சொல்லா வேட்கை அறிவார்
அல்லா போல அருள்வார்
நில்லா உலகில் வாழ்வை
வெல்லும் மார்க்கம் புகல்வார்
9.சாமித்
தோப்பு வாருங்கள்
சாமித்தோப்பு வாருங்கள்
சங்கடத்தைக் கூறுங்கள்
தன்னாலேத் தீருவதைப் பாருங்கள்-ஐயா
தென்னாட்டு சிவனென்றேப் போற்றுங்கள்
அம்மையும் அப்பனும்
ஐயா
அன்பான அண்ணனும்
ஐயா
உம்மையும் காப்பார்
ஐயா
உலகலந்தப் பெருமாள்
ஐயா
என்னையுமோர் பொருளாக்கி
என்னுள்ளத் திருள்போக்கி
உம்முன்னர் நிறுத்தியவர்
உமைபாகர் எங்கள்
ஐயா.
கண்ணைத் திறந்து வைப்பார்
கல்விப் பயிற்று விப்பார்
உன்னை உயர வைப்பார்
உலகோரில் சிறக்க
வைப்பார்.
விண்ணவரின் வாழ்வளிப்பார்
வெண்திங்களணிந்த ஐயா
மண்ணவரைத் தாழ வையார்
மாலவன் மாயன் ஐயா.
10.சாமித்
தோப்பு நமதென்போம்
சாமித் தோப்பு நமதென்போம்-இப்
பூமி மக்கள் உறவென்போம்
போரும் பகையும் எதற்கென்போம்
புரிந்து வாழ வகைசெய்வோம்
ஆறும் காரும் அனைவர்க்கும்
அவற்றை சிறையிடும்
முறைவிடுவோம்
ஊரும் உறவும் ஒன்றாவோம்
உண்மை இறையைக் கொண்டாடுவோம்.
தீரும் மக்கள் குறையாவும்
திசையெலாம் ஐயா நெறிபடர்ந்தால்.
வாரும் சேர்ந்து என்னோடு
வழியை ஐயா நமக்களிப்பார்
பாரும் பொறுத்துப் பின்னாளில்
புவியெலாம் ஐயா வழிமேவும்.
தாங்கிப் பிடித்துத் தாழ்ந்தோரை
தரணி எங்கும் உயர்த்திடுவோம்.
ஓங்கும் அறனெறி
உலகத்திலே
ஒடுங்கும் பிறனெறிக்
கலகங்களே.
11.தோப்புப்
பதித் தலைவா
தோப்புப் பதித் தலைவா-நான்
தோல்வியுறா நிலை தா.
காக்கும் என் காவலன் நீ
காண்பரியப் பேரொளி நீ
ஆக்கம் அனைவர்க்கும்
அருள்கூர்ந்து அருளிடுவாய்.
தாக்கும் நோயெல்லாம்
தாமாகத் தீரச் செய்வாய்
போக்கும் வரவுமில்லாப்
புண்ணிய மூர்த்தி நீ.
தேக்கிய அறிவெல்லாம்
திறம்பட வெளிக்கொணர்வாய்
தேக்கின் உறுதிமிகுத்
தேகம் எனக்கருள்வாய்.
12.அய்யாவழி உண்டு
அய்யாவழி உண்டு-அது
அனைவருக்கும் தொண்டு-அந்தப்
பொயாமொழிக் கொண்டு-நீ
புவியில் வாழ்தல் நன்று.
கைமேலேப் பலன்தருவார்-தன்னைக்
கைதொழும் நல் அடியவர்க்கு
வெய்யிற்கேற்ற நிழல் அமைப்பார்
வெவ்வினைக்கு அழல் வைப்பார்
பொய்கை தவழ் இளம் தென்றல்
புகுந்து மனை உனை தீண்ட
வைகைக் கரைப் பூஞ்சோலை
வளமை மிகு வாழ்வளிப்பார்
இமயம் நிகர் புகழெய்திட-நல்
சமயம் தனை உமக்களிப்பார்
அமையும் பல பேறெல்லாம்
அவரால் வரும் ஊரெல்லாம்.
13.வானம் பூமி யாவும்
நம் வானம் பூமி யாவும் வைகுந்தா
நாம் காணும் காட்சி யாவும் வைகுந்தா
அலை நடமாடும் அதிசயக்
குமரி
நிலை பெயராது நிலைப்பதுன் அருளால்
நீ அமிழ்தின் இனியன் தமிழ்தரும் முனிவன்
அரகர சிவசிவ அய்யா
வைகுந்தா.
(நம்)
எனை அறியாமல் வெகு
நாள் கழித்தேன்
உனைக் கண்ட தாலே
எனை நான் உணர்ந்தேன்
அணை நீர் பொலே இனி
நான் உலகில்
அயர்வின்றி வலம்வர
அனுதினம் அருள்புரி
அய்யா வைகுந்தா.
அரகர சிவசிவ அய்யா
வைகுந்தா.
14.அய்யாவழி பாட்டைச் சொல்லு
அய்யாவழி பாட்டைச்
சொல்லு
ஆனந்தம் ஆட்டம் போடும்
பொய்யானப் பாதை விட்டு வாவாவா-நீ
புவியோர்க்கு அகிலம் சொல்லித் தாதாதா.
கையிரண்டும் தொழுவதற்குக்
காதிரண்டும் கேட்பதற்கு
கண்ணிரண்டும் பார்ப்பதற்கு
எண்ணுதற்கு ஐயாவழி
எண்ணமதை விடுவதுவோ
எல்லோர்க்கும் இயலாது
கண்ணனவன் அய்யாவினை
எண்ணிமனம் ஒன்றல்
நன்று
வண்ணம்பல வாழ்வில் வரும்
வசந்தம் கூடிவரும்
திண்ணமாய்த் தேவை எல்லாம்-உன்
திசைதேடி ஓடிவரும்.
15.அய்யா வழி ஆரத்தி
ஓம் ஜய ஜக தீஸஹரே-அய்யா
ஓம் ஜய ஜக தீஸஹரே
ஒருவர்:
பக்த ஜனங்கள் படுதுய ருற்றால்
பறந்தோடி வருபவரே
பலர்:
பறந்த்தோடி வருபவரே
ஒருவர்:
அவர்
பக்கத்தில் இருந்துப்
பரிவுடன் அருள்பவரே
பலர்:
பரிவுடன் அருள்பவரே-அய்யா
பரிவுடன் அருள்பவரே
ஒருவர்:
பக்தியில் தோயும் அடியார்க் கெல்லாம்
சக்தியை நீ அருள்வாய்-மன
சாந்தியை நீ அருள்வாய்.
பலர்:
சக்தியை நீ அருள்வாய்-மன
சாந்தியை நீ அருள்வாய்.
ஒருவர்:
அவரகம் புகுந்து வளம்பல அருளி
அவர் வேண்டும் வரம் அருள்வாய்.
பலர்:
அவர் வேண்டும் வரம் அருள்வாய்.
ஓம் ஜய ஜக தீஸஹரே
-அய்யா
ஓம் ஜய ஜக தீஸஹரே
ஒருவர்:
அம்மையும் நீயே அப்பனும் நீயே
உமையன்றி சரணமில்லை
பலர்:
அய்யா உமையன்றி சரணமில்லை
ஒருவர்:
எம் குறை தீர்க்கும்- எம்
இறையே நீதானய்யா!
எம்முள் உறையும் மகாவிஷ்ணு
ஸ்ரீ மாமறை நாயகரே!
பலர்:
மகாவிஷ்ணு
ஸ்ரீ மாமறை நாயகரே!
ஓம் ஜய ஜக தீஸஹரே-அய்யா
ஓம் ஜய ஜக தீஸஹரே
ஒருவர்:
எம் உள் உறையும் தெய்வமும் நீ அய்யா
பார பிரம்ம பரமேஸ்வரும் நீ அய்யா
பலர்:
பார பிரம்ம பரமேஸ்வரும் நீ அய்யா
ஒருவர்:
யாவர்க்கும் தெய்வம் நீ-உயிர்
யாவிலும் இருப்பவன் நீ
மகா விஷ்ணு ஸ்ரீ வைகுந்த மாமுனியே
பலர்:
மகா விஷ்ணு ஸ்ரீ வைகுந்த மாமுனியே
ஓம் ஜய ஜக தீஸஹ ரே-அய்யா
ஓம் ஜய ஜக தீஸஹரே
ஒருவர்:
ஆருயிர் காப்பவன்
அன்புப் பெருங்கடல்-எம்
அய்யன் நீ அன்றோ-எம்
அய்யன் நீ அன்றோ
பலர்:
எம்
அய்யன் நீ அன்றோ
ஒருவர்:
முக்திநெறி அறியா
மூர்க்கர் எமக்குப்
பக்திநெறி புகுவிப்பாய்-எம்
பழவினை போக்கி வைப்பாய்.
பலர்:
எம்
பழவினை போக்கி வைப்பாய்.
ஓம் ஜய ஜக தீஸஹரே-அய்யா
ஓம் ஜய ஜக தீஸஹரே
ஒருவர்:
ஊனக்கண் காணா உமைபாகரே-எமக்கு
ஞானக்கண் அருளிச் செய்வாய்
ஆனவுயிர் அனைத்திலும் அமர்ந்தவரே-எமை
அன்புடன் வாழ வைப்பாய்
பலர்:
எமை
அன்புடன் வாழ வைப்பாய்
ஓம் ஜய ஜக தீஸஹரே-அய்யா
ஓம் ஜய ஜக தீஸஹரே
ஒருவர்:
பற்றுணை இல்லாப் பாமரர்க்கும்
நற்றுணை ஆனவளே
அஞ்சி வருவோர்க்கு
அஞ்சேல் என்னும்
அய்யா வைகுந்தா
பலர்:
அஞ்சேல் என்னும்
அய்யா வைகுந்தா
ஓம் ஜய ஜக தீஸஹரே-அய்யா
ஓம் ஜய ஜக தீஸஹரே
ஒருவர்:
பாசமாம் பற்றற
நீசமாம் சிந்தையற
நேசமுடன் எமக்கருள்வாய்- உன்
வாசல் வந்த அடியவர்க்கே
பலர்:
ஓம் ஜய ஜக தீஸஹரே-அய்யா
ஓம் ஜய ஜக தீஸஹரே
.
ஒருவர்:
அன்புறு சிந்தயர் ஆகிநின் அடியவர்
இன்புறும் உந்தன் இணையடி ஏத்த வந்தோம்
பலர்:
அய்யா உந்தன் இணையடி ஏத்த வந்தோம்
ஒருவர்:
துன்புறல் இன்றித் தொண்டுசெய் அடியவர்
துணையென நீவருவாய்
பலர்:
அய்யா துணையென நீவருவாய்
ஓம் ஜய ஜக தீஸஹ ரே-அய்யா
ஓம் ஜய ஜக தீஸஹரே
ஓம் ஜய ஜக தீஸஹ ரே-அய்யா
ஓம் ஜய ஜக தீஸஹரே
ஓம் ஜய ஜக தீஸஹ ரே-அய்யா
ஓம் ஜய ஜக தீஸஹரே
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)