திங்கள், 30 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்:

அவையடக்கம்**********
அய்யா உரைக்க அன்போர்கள் தங்கள் முன்னே
மெய்யாய் எழுதி விரிப்பேன் நான் என்பதெல்லாம் 
ஆணை நடைகண்டு அன்றில் நடையது ஒக்கும்
சேனை சரிவது என்ன சிற்றெறும்பு பத்தி என்ன
குயில்கூவக் கண்டு கூகைக் குரல் ஆமோ
மயில் ஆடக் கண்டு வான்கோழி ஆடினது ஏன்
மடந்தை தேனீக்கள் வைத்த ரசம் அறிந்து
கடந்தை தாடேற்றும் கதைபோலே யான் அடியேன்
நாலுமூணு யுகமும் நடுத்தீர்க்க வந்த பிரான்
மேலோன் திருக்கதையை எழுதுவேன் என்பது ஒக்கும்
---------
உரை
---------
அய்யா திருவாய் மலர்ந்தருள அவ்வுண்மைகளை நான் எழுதி அய்யாவின் பக்தர்களாகிய உங்கள் முன்னே விரித்துரைப்பேன் என்பது, யானையின் நடையைக் கண்ட அன்றில் பறவை யானையைப் போன்று நடக்க முயல்வதைப் போன்றது ஆகும். சேனையின் பெரிய கூட்டத்தைச் சிற்றெறும்புக் கூட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா? குயிலின் இனிமையான குரலைக் கேட்ட கூகை அதைப் போன்று குரல் கொடுக்க முடியுமா? மயில் ஆடுவதைக் கண்டு வான்கோழி அதைப்போல ஆட முயன்றது ஏன்?
இராணித்தேனீயின் ஆட்சியின் கீழ் உள்ள தேனீக்கள் சேர்த்த தேன் ரசத்தின் சுவையை அறிந்து, கடந்தைகள் தாமும் அச்சுவையுள்ள தேனைத் தயாரிக்க எண்ணித் தாடேற்றிக் கூடு கட்டிய சிரிப்பிற்குரிய கதையைப் போல, அய்யாவின் அடியேனாகிய நான், ""ஏழு யுகங்களும் நீதி நியாயங்களைக் கேட்டு நீதி பரிபாலனம் செய்ய வந்த வைகுண்ட பிரானாகிய அந்த உயர்வுடையோன் திருக்கதையை எழுதுவேன்"" என்று கூறுவது ஒக்கும்.
---------------------


தானும் தவம் அதுவாய்ச் சாயுச்சியமே புரிந்து
நல்லோரை எழுப்பி நாலு வரமும் கொடுத்து
பொல்லாரை நரகில் போட்டுக் கதைவடைத்து 
வானம் இடியால் மலைகள் இளகிடவும்
கானமது நாடாய்க் கண்டதுவும் சூரியனும்
தெக்கு வடக்காய்த் திசைமாறி நின்றதுவும்
ஒக்கவே நாதன் உரைக்கிறார் அன்போரே.
---------
உரை
---------
..... புலன் இறந்து (அகக்) கடலில் மறைந்து வாழ்ந்ததையும், சாயுச்சிய நிலையில் தவம் புரிந்து வெற்றி கண்டதையும்;
நல்லவர்களை ஆத்ம விழிப்புக் கொண்டு எழச் செய்து அவர்களுக்குப் பல வரங்களைக் கொடுத்து, தீயவர்களை நரகில் தள்ளிக் கதைவடைத்ததையும்; வானத்தில் உருவாகின்ற இடிகளால் மலைகள் இளகிடும் என்றும், காடு நாடாகி விடும் என்றும், இவற்றைக் காணுகின்ற நிலையில் சூரியன் தெற்கு வடக்காகத் திசைமாறி தன்னுடைய இயக்கத்தைப் பெற்று நிற்கும் என்றும், இவற்றை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து அய்யா வைகுண்டநாதன் உரைக்கின்றார். அன்பர்களே, நீவிர் கருத்துடன் கேட்பீராக.
--நூல் சுருக்கம் பகுதி இத்துடன் நிறைவு பெறுகிறது. இனி தொடர்வது அவையடக்கம்
---------------------


மேல் எதிரி இல்லாமல் வினை அறுத்து ஆண்டதுவும்
இந்நாள் விவரம் எல்லாம் எடுத்து வியாகரரும்
முன்னாள் மொழிந்த முறைநூல் படியாலே 
நாரணரும் வந்து நடத்தும் வளமைதனைக்
காரணமாய் எழுதிக் கதையாய்ப் படித்தோர்க்கு
ஒய்யாரமாக உள்வினைநோய் தீரும் என்று
அய்யாவும் இக்கதையை அருளுகிறார் அன்போரே
பேயை எரித்துப் புதுமை மிகச்செய்ததுவும்
ஆயர் குலத்தை ஆளாக்கிக் கொண்டதுவும்
சான்றோர் குலத்தைத் தற்காத்துக் கொண்டதுவும்...
---------
உரை
---------
தமக்கு வேறு எதிரிகள் இல்லாது தீய நினைவு உடையவர்களை அழித்து அருள் புரிந்ததையும்; மேலும் இன்றைய நிகழ்ச்சிகளையும் வியாகர முனி முன்னரே தமது நூலில் உரைத்துள்ளார்.
அதற்கு ஏற்ப, நாராயணராகிய வைகுண்டரும் இப்பூவுலகில் வந்து நடத்துகின்ற நடப்புகளை மிகுந்த விருப்பமுடன் எழுதி, இந்நூலைக் கதை போன்று படிப்பவர்களுக்கு தீர்க்க முடியாத உள்வினை நோயாகிய "பிறவி நோய்" நிச்சயமாகத் தீர்ந்து விடும் என்று திருமால் இச்சிறந்த கதையைத் திருவாய் மலர்ந்து அருளுகின்றார். அன்பர்களே.
மேலும், பேய்களை எரித்துப் புதுமையான செயல்கள் செய்தவையும்; ஆயர் குலத்தில் அவதாரம் எடுத்து அக்குலத்தை ஆட்கொண்டதையும்;
சான்றோர் குலத்தைக் காத்துக் கொண்ட நிகழ்ச்சியையும்; ......
---------------------


கண்டு மாபாவி கலைத்து அடித்ததுவும்
சாணார் இனத்தில் சுவாமிவந்தார் என்றவரை
வீணாட்டமாக வீறு செய்த ஞாயமதும் 
மனிதனோ சுவாமி வம்பு என்றுதான் அடித்துத்
தனு அறியாய் பாவி தடிஇரும்பில் இட்டதவும்
அன்பு பார்த்து எடுத்து ஆளடிமை கொண்டதுவும்
வம்பை அழித்து யுகம் வைகுண்டம்தான் ஆகி
எல்லா இடும்பும் இரையும் மிகத்தவிர்த்து
சொல் ஒன்றால் நாதன் தொல்புவியை ஆண்டதுவும்
நாலுமூணு கணக்கும் நடுத்தீர்த்த ஞாயமதும்...
---------
உரை
---------
.....இவற்றைக் கண்டா கலியன் அவர்கள் ஒற்றுமையாய்ச் சேராவண்ணம் விரட்டி அடித்ததையும்;
"சாணார் இனத்தில் சுவாமி வந்து உதித்தார்" என்று கூறியவரை எந்தவிதக் குற்றமுமின்றித் துன்புறுத்திய அநீதியையும்; "இந்த மனிதனா சுவாமி? இது வம்பாகும்" என்று அடித்து, வைகுண்டரின் பொன் உடலின் உண்மையை அறியாத நீசன், பலம் பொருந்திய இரும்புச் சங்கிலியால் அவரைக் கட்டியதையும்; அன்புள்ளம் கொண்டோரை அருள் பாலித்துத் தேர்ந்தெடுத்துத் தம்முடைய தொண்டரடிமையாகக் கொண்டதையும்; வம்பான முன் யுகங்களை அழித்து, கலியுகத்தில் வைகுண்டராக அவதரித்ததையும்; சான்றோரின் எல்லாத் துன்பங்களையும், வீணாகச் சான்றோர் கொடுக்கின்ற வரிகளையும், தவிர்க்கச் செய்தவையும்; தமது ஒரே சொல்லின் கீழ் வைகுண்டநாதன் இந்தப் பழமை பொருந்திய பூவுலகினை அரசாண்ட நிகழ்ச்சியையும்; ஏழு யுக மக்களுடைய நீதிக் கணக்கினை நியாயம் தீர்த்த முறையையும்; ........
---------------------
அய்யா உண்டு 
---------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக