புதன், 26 ஆகஸ்ட், 2015

அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு

மாற்றியமைப்பு

இவ்வாறு வாழ்ந்து வரும் அவர் தனது இருபத்து இரண்டாவது வயதில் நோய்வாய்ப்பட்டு இரு வருட காலமாக அவதியுற்று வருகிறார். ஒரு நாள் முத்துக்குட்டியின் தாயாரான வெயிலாள் ஒரு கனவு காண்கிறார். அக்கனவில் நாராயணர் தோன்றி அவளது மகனை மாசி மாதம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் விழாவுக்கு கொண்டு வந்தால் மிகுந்த பேறு கொடுப்பதாகக் கூறுகிறார். அதனால் வெயிலாள் சுற்றத்தார் சூழ முத்துக்குட்டியை ஒரு தொட்டிலில் வைத்து சுமந்து செல்கிறார்கள். அங்கே கடலருகே சென்றதும் அவர் எழுந்து வேகமாக நடந்து கடலுக்குள் சென்றது போல் அனைவருக்கும் தெரிகிறது. ஒரு நாள் காத்திருந்த பிறகு அனைவரும், போனவர் வரமாட்டார்; அவர் இறந்து விட்டார் என்று ஊர் திரும்பினார்கள். ஆனால் தாய் வெயிலாள் மட்டும் அழுதழுது கடற்கரையில் அமர்ந்திருந்தார்.

மூன்றாம் நாள் கொல்லம் ஆண்டு 1008 மாசி 20-ல், வைகுண்டர் கடலிலிருந்து வெளிப்படுகிறார். அவர் கொண்டுள்ள சொரூபம்(உடல்) காரணமாக முத்துக்குட்டி கடலிலிருந்து வருவதாக வெயிலாளுக்குத் தெரிகிறது. அவள் ஓடிச்சென்று தனது மகனை கட்டி அணைக்கச் செல்கிறாள். ஆனால் அவர் அவளை தடுக்கிறார். மேலும் தாம் அவளது மகன் இல்லை என்றும் கலியை அழிக்க நாராயணரே வைகுண்டராக உலகில் அவதரித்திருப்பதாகவும் கூறுகிறார். ஆனால் தாய்ப் பாசம் காரணமாக அவரை வெயிலாள் தனது மகன் முத்துகுட்டி என்றே பார்க்கிறாள். அவளுக்கு தனது நிலையை வைகுண்டர் கீழ்க் கண்டவாறு கூறுகிறார்,

ஆண்டாயிரத்து எட்டு முன்னே அன்னை எனவே நீயிருந்தாய் கூண்டாம் எட்டம் மாசியிலே குணமாய் நாராயணர் மகவாய் சான்றோர் கதிகள் பெற்றிடவே தர்மகுண்டம் பிறந்து வொரு குன்றாக் குடைக்குள் அரசாளக் கொண்டே போறேன் கண்டிரு நீ"

ஆனால் அதை ஏற்றுக் கோள்ளும் நிலையில் வெயிலாள் இல்லை. அதனால் தான் பிறந்த கடற் பதியின் மண்டபங்களையும் அதன் மெடைகளையும் அவரின் பிறப்பு மற்றும் வருகைக்கு சான்றாகக் கட்டுகிறார். ஆனால் தாய்ப் பாசம் தடுக்க, அவளால் வைகுண்டரின் நிலையை அறிந்து கொள்ள முடியவில்லை. மேலும் வைகுண்டர், தான் காட்டிய பதிச் சிறப்பை யாருக்கும் கூறக்கூடாது என்று கூறுகிறார்.

இவ்வாறு கூறிய வைகுண்டர், தான் பெற்ற விஞ்சையை செயல்படுத்தும் பொருட்டு தெட்சணம் நோக்கி நடந்தார். வைகுண்டர் கடலிலிருந்து அவதரித்த இடம் அய்யாவழி சமயத்தின் புனிதத் தலங்களுள் ஒன்றாகும். அவதாரப் பதி என்று அழைக்கப்படும் இது, செந்தூர் பதி என அகிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பு:- வெயிலாள் இவ்விடத்திலேயே விழுந்து இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிகழ்வுக்குப் பிறகு அகிலத்திரட்டில் வேறெங்கும் வெயிலாள் பற்றிய எந்த செய்திகளும் இல்லாதது இக்கூற்றினை மெய்ப்பிக்கும் வண்ணம் உள்ளது. ஆனால், "வெயிலாளின் உயிர் இவ்விடத்திலேயே எடுக்கப்படுகிறதெனில், வைகுண்டர் அவளிடத்தில் 'தான் காட்டிய பதிச் சிறப்பை யாருக்கும் உரையாதே' எனக் கூறியது ஏன்?" என்பது எதிர் தரப்பு வாதம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக