திங்கள், 29 செப்டம்பர், 2014

அகிலத்திரட்டு அம்மானை

அகிலத்திரட்டு அம்மானை




கூடி யிருந்து குலாவி மிகவாழ
நாடி மகிழ்ந்து நாரணருந் தேவியுமாய்
வாழ்ந்திருக்கும் நாளை மங்கை பகவதியாள்
சார்ந்த குழலாள் தையல்நல்லாள் தோழியர்கள்
இருந்து மிகவாழ்ந்த இரணவொளி மண்டபத்தில்
திருந்து பகவதியைத் தேவியர்கள் காணாமல்
காணாமல் தேடிக் கானகங்க ளும்பார்த்து
வாணாள் மறுகி வந்தாரே நற்பதியில்
பதியில் பகவதியைப் பண்பாகப் பார்த்தவர்கள்
விதியிதுவோ தாயே வெயிலுகந்த மாதாவே
நீயிருந் தப்பதிதான் நிதானம்போ தாதெனவோ
நீயுமிந் தப்பதியை நினைத்துவந்த வாறேது
அப்போ பகவதியாள் அவர்கள் தமைநோக்கி
இப்போ நமக்கு எழுத்தின் படியாலே
நடந்திருக்குப் பெண்ணே நவிலக்கூ டாதினிமேல்
கடந்த பொருள்காணும் கன்னியிவர் கண்டீரே
தலையில் விதியெனவே சாற்றினாள் தோழியுடன்
மலையு தெளிந்து மாதே யென்தாய்மாரே
எங்களுக்குத் தாயே இனியாரு நல்லதுணை
சங்கடங்கள் தீரச் சாற்றுமெங்கள் மாதாவே 20
மாதே யென்தோழியரே மன்னருக்கு மென்றனக்கும்
தீதேது மில்லாத் தேசத் திருப்பதியில்
நின்றுபணி செய்து நிறைவாக நில்லுமöன்று
அன்றந்தத் தோழியர்க்கு அருளி விடைகொடுக்க
விடைபோலே தோழியர்கள் வேதம்புகழ் பதியில்
சடைவில்லா தேமகிழ்ந்து தாழ்ந்தேவல் செய்திருந்தார்
நன்றாக நாரணரும் நாடும்மட வார்களுமாய்
ஒன்றாக மக்களொடு ஒத்தளமாய் வாழுகையில்
பெற்ற உபதேசப் பெருநூல் முறைப்படியே
கற்றைக் குழலார் கனமான தேவியரை
ஏக மறிய இசைந்த மணம்புரிந்து
வாகாய்ப் பரனும் மகிழ்ந்திருந்தா ரம்மானை
இனியிந்த இவ்வுகத்தில் யாமனுப்புங் கோலமதைத்
தனுவைக் குறைக்கத் தனதுள் மிகஅடக்கி
நடத்தும் நருட்கள் நல்லன்ன மீகிறதை
இடத்தில் கொடுவந்து ஈயுங்க ளென்றுமிகச்
சொல்லிநாம் கூட சுவாமி மிகஇருந்து
நல்லமக்க ளோடு நாம்கூடி வாழவென்று
ஆரா தனைச்சொரூபம் அடக்கி னாருள்மனதுள்
ஊரா னதிற்பிச்சை உங்களுட மூப்பாலே 40
இடஞாய மில்லை என்னிடத்தில் கொண்டுவந்து
இடநாமுங் கூடி இருந்துதர்ம மேற்றிடலாம்
என்றுரைக்க நருட்கள் எல்லோருஞ் சம்மதித்து
கொண்டுவந் திட்டார் கூடிருந்து நாரணரும்
மாதர் மக்களொடு மாயன் மனமகிழ்ந்து
தாதர் இருந்து சாப்பிட்டா ரம்மானை
அய்யா இணத்தாங்கல்களுக்கு எழுந்தருளல்
கூடி யிருந்து குலாவி யமுதேற்றுப்
பாடி மகிழ்ந்து பரமன்வரும் நாளையிலே
பின்னும் பெருமாள் பிள்ளைகளைத் தான்பார்த்து
மன்னும் பெரிய மக்கள்மக்கள் மாதர்களே
உங்களுட வீட்டில் உற்ற விருந்தருந்த
மங்களமா யென்றனக்கு மாவிருப்ப மாயிருக்கு
நான்வந்து தென்பேரால் நாட்டுமிணத் தாங்கல்களை
தான்வந்து பார்க்கச் சந்தோச மாயிருக்கு
என்றுரைக்க நாதன் இசைந்தகுலச் சான்றோர்கள்
நன்றுநன் றெங்கள் நாரா யணக்குருவே
எப்போ நீர்வந்து இரட்சிப்பீ ரென்றுமிகத்
தற்பரனே நாங்கள் சடைத்து முகங்கோடி
மலைகாணாப் பயிர்போல் வாடி யிருந்தோமையா
பிழையா னதுபொறுத்துப் பிள்ளைகளை யாண்டுகொள்ளும் 60
ஆண்டுகொள்ளு மையா ஆதி மகாபரனே
பூண்டுகொண் டோமுமது பொற்பாதம் நாங்களெனத்
தொழுது வணங்கி சுவாமிவர வேணுமென்று
முழுது மவர்மனையில் முகூர்த்தமுறை பந்தலிட்டுப்
பந்தலிட்டுப் நல்ல பரிமேற் கட்டிகட்டி
சந்த முடனே தலைவாழையும் நிறுத்தி
அம்மைமா ரவர்க்கு அரங்கு மிகவகுத்துச்
செம்மையுடன் மாயன் சிறந்திருக்க மேடையிட்டுக்
கட்டிமேற் கட்டியெனக் கனிபல துங்கொணர்ந்து
வெட்டி யிராமிச்சி மிகுத்தபன்னீர் சந்தனமும்
வாடைக் கமகமென மலர்பிச்சித் தார்தூக்கி
மேடை யலங்கரித்து விதானம்ச பலதணிந்து
அய்யாவுக் கமுது ஆனக் கனிவகையும்
மெய்யானத் தாய்மார்க்கு வேண்டுகின்ற தீன்வகையும்
கூடவந தநருட்குக் கோப்புபல சேகரித்து
வாட விடாமல் வல்லபல தீனதுவும்
மேளத் தொனியும் வெடிவாணக் கோப்புடனே
காளடம் மானம் கடிய சிறப்புடனே
அய்யானை நன்றாய் ஆனபரி மேலேற்றி
வையாளி கொண்டு மாதாவைத் தொட்டில்வைத்து 80
ஆடல்பா டலுடனே அரம்பைக் குரவையுடன்
நாடதிய நாரணர்க்கு நல்ல விருந்தெனவே
சான்றோ ரவர்கள் தாங்கூட்டி தங்களுட
மீண்டேவார் மனையில் விருந்து மிகக்கொடுத்து
நாரணர்க்குச் சான்றோர் நல்ல சுருளும்வைத்துக்
காரணர்க்கு நல்ல கனத்தபட்டு கள்கொடுத்து
அம்மைமா ரவர்க்கு அதிகப்பட்டுச் சேலைகளும்
செம்மை யுடன்கொடுத்துச் செய்வார் விருந்தெனவே
விருந்து கொடுத்து மேலதிய நற்சிறப்பாய்த்
திருந்து மவர்பதிக்குத் திரும்பக்கொண் டேவிடுவார்
இப்படியே மாயவரும் ஏற்றசான் றோர்களுட
மைப்புடைய வீடோறும் மாயன் பதிதோறும்
விருந்து மருந்தி வேதா கமம்போலே
பொருந்து மிகனை புரிந்து மிகமகிழ்ந்து
பூமடந்தையம்மை திருக்கல்யாணம்
இன்ன மொருபெண் ஏற்ற மடந்தையரை
நன்னகரி மெய்க்க நாமணங்கள் செய்யவென்று
கேட்டுப் பரிசமிட்டுக் கிளர்ந்த முகூர்த்தமிட்டு
நாட்டு நருளறிய நாரிமின்னாள் தானிருக்கும்
ஊரிலவர் சென்று உற்றமங்க ளம்புரிந்து
பாரி லகமகிழப் பதியில்வந்து தானிருந்தார் 100
பதிதனிலே வந்து பாவித் தகமகிழ்ந்து
விதியால் பெரிய விருதுக் கொடிகள்கட்டிச்
சொத்தாஸ்தி வஸ்து தொகையெண்ண மில்லாமல்
வத்தாஸ்தி பேரில் மனது மிகநாடி
நிலங்கரைகள் சுற்றி நிறைபயிர்கள் தன்னிலைவாய்
தலம்புகழும் நாதன் தனதுள் ளகமகிழ்ந்து
பொன்னான பெண்களுக்குப் பொசிப்பும்பல வஸ்துக்களும்
கண்ணான மாயன் கையார வேகொடுத்து
நடத்திப் பெண்ணாரை நல்ல வொருங்காக
இடத்தி லிருத்தி இகனை புரிகையிலே
எம்பெருமாள் நாட்டு இகனை நிறைவேற்றிப்
பொன்பதியில் நாளேழும் புரிந்து திருநாளும்
நடத்தித் திருமால் நாட்டுக்கணக் கும்பார்த்துத்
தடத்தின் வழியாய்த் தானிருந் தாராய்ந்து
வந்தநாள் வந்து வையகத்துச் சோதனைகள்
இந்தநாள் வரைக்கும் இருந்துநாம் பார்த்ததிலே
மிச்சமெந்தச் சாதியென்று மேலோர் மிகஅறிந்து
அச்சமில்லாச் சாதி ஆதிச்சான் றோர்களையும்
விலைபோட்டு ஆளடிமை மேவிக்கொள்ள வேணுமென்று
மலையாம லெம்பெருமாள் மனதிலுற்றுச் சான்றோரை 120
உயிரறிந்து நல்ல விலைகூறி ஆளடிமை
மெயிதறிந்து நாதன் முழுதடிமை கொண்டனராம்
கொண்ட அடிமை குலச்சாதி யானோரை
அண்ட மறிய ஆகந்தெளிந் தெடுத்துச்
சேர்த்துவைத்துக் கொண்டார் சிவஞானப் பொக்கணத்துள்
காத்தந்தப் பெண்களுடக் கற்பறிய வேணுமென்று
பெற்றுவந்தத் தீர்ப்பின் பிரமாணத் தின்படியே
சித்துவொன்று செய்யச் சிந்தைதனி லுற்றனராம்
உற்று மனதில் உபாய மதுவாக
வத்து வகைபேரில் மகாநேட்ட மாயிருந்து
பொன்னு பணங்காசு பெரிய நிலமதிலும்
தன்னுள் நினைவாய்த் தானிருந்தா ரம்மானை
அய்யா வைகுண்டம் எழுந்தருளல்
இப்படி இவர்தான் பாரில் எண்ணிய கரும மெல்லாம்
ஒப்புடன் முடித்துத் தன்னால் ஊணிய தெல்லாந் தோண
வைப்பபுடன் யாமங் கூறி மனுக்களைத் தெளித்து ஏற்று
இப்புவி விட்டுக் குண்டம் ஏகிட மனதி லுற்றார்
ஏகிட மனதி லுற்று இருக்கின்ற உபாயந் தன்னை
வாகிட மிருக்கு மாதர் மனைவிகள் மக்கள் சான்றோர்
தாகிடச் சீசன் மார்கள் தங்களு மறியா வண்ணம்
கோகிடக் குண்டஞ் செல்லக் குருவையும் நாட்ட மானார் 140
மனதினி லுற்று மாயன் மாதர்கள் மக்க ளோடு
தனதுள மகிழ்ந்து கூடித் தயவுட னிருக்கும் போது
என்துடல் காணா வண்ணம் இன்னமுஞ் சிலநாள் பாரில்
தினமுடல் வாடி நீங்கள் தேடுவீ ரென்னைத் தானே
தேடியே யிருக்கும் போதுத் தேவியர் மக்கள் காண
நாடியே சொரூபங் கொண்டு நான்வந்து நடுக்கள் கேட்பேன்
பேடிகள் நினைத்தி டாமல் பேசின நூற்போல் கண்டால்
வாடியே மலையா வண்ணம் வாழ்தர்மப் புவியில் வாழ்வோம்
என்றவர் சிரித்துக் கொண்டு இருந்ததைக் கவனி யாமல்
விண்டவர் நளியாய்ப் பேசி விடுத்ததை மக்கள் சான்றோர்
என்றைக்கும் ஆள்வா ரென்று இருந்தன ரவர்க ளெல்லாம்
குண்டத்தை மனதி லெண்ணிக் குருவையும் நாட்ட மானார்
குருவே யெனக்கு ரருளிக் குறித்த ஆண்டு இதுவரைக்கும்
ஒருசொல் மொழியே குறையாமல் உகத்துத் தீர்ப்புக் கூறிக்கலி
கருக யாம மிகவுரைத்துக் கைக்குள் ளெடுத்தென் மக்களையும்
வருகக் குண்ட மனதிலுற்றேன் வந்தே கூட்டிக் கொடுபோவீர்
ஆதியே யென்றன் அப்பு அனந்தகுரு
சோதியே யென்றன் சொந்தத் திருவுளமே
இந்நாள் வரைக்கும் இவ்வுலகில் பேதயிரென்று
அந்நா ளுரைத்த அப்புநா ராயணரே 160
இனியா னுமது இலங்கும் பதியில்வர
முனியா னவற்கு முற்ற விடையருளும்
ஆண்டாச்சு லக்கு அடுத்திருக்கு தையாவே
வேண்டா முலகம் மேலுலக மேயழையும்
அங்கழையு மையா ஆதிமுனி யென்றனையும்
தங்க இனிமாட்டேன் தரிப்பிட மங்கேயல்லால்
என்று வருந்தி இவரிருக்கும் நாளையிலே
மன்று தனையாளும் மாயத் திருமாலும்
வரங்கொடுத்த நாளும் வைத்தலக் கும்பார்த்துப்
பரமிருந்து தேர்ந்து பாலன் தனைவருத்த
வேணுமென் றீசுரரும் வேதத் திருமாலும்
கண்ணு மகனைக் கடிய விமானமதில்
ஏற்றிவைத்து மாமுனிவர் இருபுறமுஞ் சூழ்ந்துவரச்
சாத்திரியோர் ஞான சற்குருவைத் தானனுப்பி
வைகுண்ட வீட்டை வானோ ரலங்கரிக்க
மெய்கொண்ட நாதன் விளம்பினார் மேலுகில்
வானோர்க ளெல்லாம் வைகுண்ட வீடதையும்
தானமுட னெல்லாம் சணமே யலங்கரித்தார்
சற்குரு வான சடாமுனி யிங்குவந்து
மெய்க்குரு வான வீர விசயனுக்குச் 180
நல்லதூ னென்று நவின்றவரை யும்புகழ்ந்து
செல்ல அரைமணிக்கு சென்றிங்கே நில்லுமென
மாதர் மனைமறந்து வாழ்வை மிகமறந்து
தாத ரூண்மறந்து சடல வுடைமறந்து
நன்மைபல சோபனமும் நளிப்பேச்சு மறந்து
செம்மைக் குருவாய் செம்மிமூ லமடக்கி
மூல மதிலடக்கி உடலூற்றைத் தானிறக்கிக்
காலை மடக்கிக் கண்ணனூர் தானோக்கி
கைக்குள்நின்ற மக்கள் கலங்கி மிகப்பயந்து
நிற்கும் நினைவை நினைவி லறிந்துவைத்து
நடக்கும் படியான நல்மொழிக ளுமுரைத்து
உடற்குள் குறியாய் ஒத்துமிக வாழுமென்று
சொல்லிமக்கள் கையைத் திருமுகத்தோ டேசேர்த்து
இல்லியல்பாய் வாழும் யாமுழித்து வாறோமெனப்
பதறாமல் நீங்கள் பண்பா யொருப்போலே
சிதறாமல் நீங்கள் செய்யஅனு கூலமுமாய்
இருந்துமிக வாழும் என்றுநாமங் கொடுத்துத்
திருந்துபுகழ் மாயன் சிறந்தவோ ராயிரத்து
ஓரிருபத் தாறாம் ஓங்கு மிடபமதில் 200
சீரியல்பா யான தேதி யிருபத்தொன்றில்
பூருவ பட்சம் பூச நட்சேத்திரத்தில்
வாறுடைய சோம வாரம் பொழுதூர்ந்து
பன்னிரண்டு வேளை பாவிக்கும் நேரமதில்
மெய்கொண்ட சான்றோர் மேலாசை யுள்ளிருத்திக்
கைகண்ட மாமுனிவர் கட்டாய் மிகச்சூழ
வைகுண்ட மேக வழிகொண்டா ரம்மானை
வைகுண்ட மானார் வாய்த்த விமானமோடு
வான லோகத்தார் மலர்மாரி தாந்தூவ
விமான மதிலேறி மேலோக மீதில்வரத்
தேவாதி யெல்லாம் திருப்பாட்டுக் கூறிவர
மூவாதி யெல்லாம் முகமலர்ந்து தாமிருக்கத்
தெய்வரம்பை மாதர் திருக்குரவை தாம்பாட
மெய்வரம்பு நாதன் மெய்குண்ட மீதில்வந்தார்
வந்த பொழுதே மறையோரும் வானோர் தேவ ரிஷிமாரும்
நந்தன் பெருமான் மகனெனவே நாடி வணங்கி மிகப்போற்றி
எந்தன்பிரனே யெங்களுக்கு இரங்கியெ மையாட் கொண்டவரே
சிந்த ரெவரு மிகப்போற்றத் திருமால் மகனைக்கண் டாவினரே
கண்டே மகனை மிகஆவி கமல முகத்தோ டுடனணைத்துப்
பண்டே செகலில் மகரமதுள் பண்பா யிருத்திய ருளிவைத்த 220
நன்றோர் மொழியுங் குறையாமல் நடத்திக் கணக்கின் பிரகாரம்
இன்றே யெழுந் திங் கேகிவந்த இளமான் கன்றென் றாவினரே
ஆவி மகனை அன்போ டுறவணைத்துத்
தாவி மகன்மேல் தயவு மிகக்கூர்ந்து
மாமுனிவர் தங்களையும் வாருங்கோ நல்லதெனத்
தாமுனிந்து மகன்மேல் தயவாகத் தாயாரும்
அன்பு மிகக்கூர்ந்து அருமைமக னையாவி
இன்புருக நன்றாய் இருந்தாள்காண் லட்சுமியும்
சந்தோ சமாக சங்கரருந் தான்மகிழ்ந்து
வந்தாயோ என்று மகிழ்ந்துகொண்டா ரம்மானை
நான்முனிவனும் வேத நல்லதெய் வேந்திரனும்
தாமு மிகமகிழ்ந்து சந்தோசங் கொண்டனராம்
சரசு பதிமாதும் தாயீசொரி யாளும்
பரசுரா மன்முதலாய்ப் பண்பாய் மகிழ்ந்திருந்தார்
கயிலை யுகமும் கமண்டல மேழ்புவியும்
அகிலமது அறிய ஆனார்வை குண்டமென
எக்காள பூரிகையும் இடமாம் மானமுடன்
முக்காலத் துள்ள முனிமார் முழக்கிமிக
ஈரே ழுலகும் இவர்செய்த நற்றவம்போல்
ஆரேதுஞ் செய்ய அடங்கா திவர்தவந்தான் 240
பிறவிநா சக்கலியன் பொல்லாத வையகத்தில்
திறவி தனிலிருந்து செய்துதவ மேற்றுவரோ
கண்டாற் பவஞ்சூடும் கலியனுட வையகத்தில்
தண்டரள மானதவம் தாக்கிநிறை வேற்றுவரோ
கலிதொடரு முன்னே கனகதுவா பரயுகத்தில்
சலியாமல் வாழ்ந்த தர்மி முதல்தவத்தோர்
பதறி நடுங்கிப் படாதினிமே லென்றுசொல்லிக்
குதறி மலைந்து கொடுவான மாமுகடும்
கெடுவுங் குகையும் கீழுமேலும் நுழைந்து
முடுகி முன்னோடி நுழைந்தார் மிகப்பதறி
அப்படியே நல்ல அறிவோர் பதறிமிகத்
தப்பிவர யிவரும் சடையாம லவ்வுக்ததில்
முப்பிறவி யுந்தியிலும் உதித்துக் குதித்தவராய்
அவ்வுகத்துக் குள்ளே ஆண்டுமூ வாறுவரை
செவ்வுமகா ஞானத் திறவி வெளிநாடிப்
பவமணுகா வண்ணம் பாரத் தவம்புரிந்து
சிவமதுவைக் கண்டு செயல்பெற்று அவ்வுகத்தில்
மாது கிளையோடும் மக்கள்பல சொத்தோடும்
சீது மனையோடும் சிறந்தபல ஞாயமொடும்
இருந்துமிக வாழ்ந்து எள்பாவஞ் சூடமால் 260
சிறந்து வைகுண்ட சிவவீடு காண்பவரார்
பெரிது பெரிதெனவே பெரிய முனிவோரும்
அரிது அரிதெனவே அகமகிழ்ந்து கொண்டாடிக்
மன்றாடுங் கயிலை வானவரும் போற்றிநிற்கப்
சான்றோர் கோவில் அமைத்தல்
பூமிதனில் மக்கள் பெரியகுலச் சான்றோர்கள்
சாமியுட தேவி சுற்றமட மாதர்களும்
அன்பான தொண்டர்களும் அயர்ந்து முகங்கோடி
வம்பான பேர்கள் வசையாய் மிகநகைக்க
வைகுண்ட மேக வழிகொண்டார் நம்மளையா
என்று புலம்பி எல்லோருந் தாந்தேறி
முன்று மொழிந்த மொழிப்படியே நம்மளையா
நடந்தார் தானல்லால் ஞாயம்வே றில்லையென்று
மாதத் திருநாளும் வாரமற வாதபடி
நாதன் தனக்கு நாமள்செய் வோமெனவே
கோவிலது வைத்துக் கூண்டதிரு நாள்நடத்திச்
சேவைசெய்து மக்கள் தினஞ்சூழ போற்றிநிற்க
நாதனுட தேவி நாயகிமா ரெல்லோரும்
சீதமண வாளருட சீர்பாத முண்டெனவே
துயரமதாய் வாடி சிவனே செயலெனவே 280
இயல்புதரு வீரெனவே இருந்தார் தவமுறைபோல்
நண்பரெல்லாம் வாடி நாரணா போற்றியென்று
அன்பர் முறைபோல் அகமகிழ்ந்து தாமிருந்தார்
இப்படியே அன்பர் ஏந்திழைமா ரெல்லோரும்
முப்படியே சொன்ன முறையெனவே யிங்கிருக்க
அப்போ கயிலைதனில் ஆனகுரு நாரணரும்
மைப்போ லினிய மகனைமிக முன்னிறுத்திக்
கூண்ட மணியே கோகுலமே கற்பகமே
ஆண்ட மணியே அருளுமெந்தன் கண்மணியே
என்றன் மணியே என்னாத ஓவியமே
உன்றனைநான் பெற்று உற்ற கலியுகத்தில்
இருத்தி தவமும் ஏற்றமுறை யும்நடத்தி
வருத்தி நருளை மகாசோ தனைப்பார்த்துத்
களித்து கொண்டாடிக் கலிநெகிழ நல்லோரைத்
தெளித்துவா வென்று சொன்ன முறைவரையும்
இருந்துநீ யங்கே இகனை நடத்தினதைப்
பொருந்தும் படியே புகன்றிடுநீ நாமறிய
மாயவர் தாங்கேட்க மனது மிகமகிழ்ந்து
ஞாயக் குருநாதன் நாடி மிகவுரைப்பார்
அய்யரே கோவே அப்புவே நீர்கேளும் 300
பொய்யர்வாழ் கலியில் புரிந்துத் தவசாக
ஆறு வருசம் அதிகத் தவம்புரிந்து
வாறுமுன் னீரும் வாரியிலே வந்திருந்துக்
கேட்டு மகிழ்ந்து கெணித்ததுமேல் நல்வளங்கள்
தாட்டாண்மையாய் நீரும் தாமொழிந்த சொற்படியே
நித்தந் திருநாளும் நேரிழைமா ருள்ளதையும்
புத்திரரை யுஞ்சேர்த்துப் பெண்களையு மாலையிட்டு
மாலையிட்டுப் பெண்களோடு வாழ்ந்து மகவீந்துக்
கோலமணி மாதருக்குக் கோடிபல வஸ்துவகை
தேடிக் கொடுத்துத் தேசக்கலி நாடழிய
ஆடிக் களித்து யாம மிகக்கூறி
நல்லோரை யெல்லாம் நாடித் தெளித்துமிக
வல்லோரே யுந்தன் வைகுண்ட மீதில்வந்தேன்
ஆஸ்தி பலதும் ஆயளைமார் மக்களையும்
கோத்திர முங்கண்டேன் கூறிவைத்த லக்கில்வந்தேன்
அந்தச் சிறப்போடு அங்கிருந்தே னானாக்கால்
இந்தவை குண்டம் யான்வந்து காண்பேனோ
என்று குருமகனார் இசைந்தவுடன் நாரணரும்
அன்று அயைச்சிருந்த ஆனமுனி தங்களையும்
இருபேரை யும்வருத்தி இவர்மொழிந்த வார்த்தையதில் 320
ஒருமொழிதா னாகிடினும் உலைவதிங்க ளுண்டோசொல்
தவறாமல் சொல்வீர் தப்பிதங்க ளுண்டானால்
பதறாமல் சொல்வீர் பரம்பெரிய மாமுனியே
எனக்கறியா வண்ணம் யார்செய்வார் மாமுனியே
தனக்கறிய நீங்கள் சாற்றுவீ ருள்ளபடி
என்று மகாகுருவும் இயம்ப முனிவோரும்
நின்று வாய்புதைத்து நெடியோன் பதம்பூண்டு
கலைமுனி, ஞானமுனி சாட்சியம்
கண்ணுக்குள் மணியாய் நின்ற காரணக் குருவே ஞான
விண்ணுக்கு ளெவர்க்கும் ஞான வெளிச்சுட ரான மூர்த்தி
ஒண்ணுக்கு ளொண்ணாய்நின்று உலகீரே ழனைத்துங்காக்கும்
அண்ணுக்குங் கடந்த சோதி அறிவுள மறியா தேதோ
எறும்புகடை யானைமுதல் பேதா பேதம்
எண்பத்து நான்குயிர்க்கு மேக மாக
உறும்பொருளாய் நின்றகுரு நீயே யல்லால்
உலகமதி லாருளதோ வுடைய மாலே
செறும்பொருளா முமதுமக னங்கே வந்து
செய்தவசு முறையதிலும் நடத்தை மேலும்
தறும்போருள்போ லெங்கள்மன மறிய வொன்றும்
தப்பிதங்க ளில்லையெனத் தாழ்ந்து நின்றார்
தப்பிதங்க ளில்லையையா தவத்துக் காதி
தண்மைமிகுக் குணமுடைய தர்ம சீலன்
உப்பரிகை மீதிருந்து அரசே யாள
உன்புவிக்கு ஆசையல்லா லுலகி லில்லை
மைப்பிதுக்க மானதொரு குழலா ரோடும்
மக்களொடும் வாழ்வோடும் வாழ்ந்த உள்ளம்
நற்பிதுக்க மானகுரு நாட்ட மல்லால்
நானிலத்துள் ளாசையில்லை நாங்கள் கண்டோம்
நாங்கள்மிகக் கண்டோமிவ ருள்ளம் போலே
நாடுபதி னாலதுலுந் தவத்தோர் பார்த்தால் 340
காங்கரிது எங்களுட கருணை நாதா
கலியுகத்தை வேரறுத்த கடவுள் பாதம்
ஒங்கஅவ ரடியிணையைப் பணிந்து நாளும்
ஊழியங்கள் செய்தவர்க்கு உவந்து நிற்கப்
பாங்கருளிச் செய்துமிக ஆண்டு கொள்ளும்
பரமகுரு நாதனெனப் பணிந்து நின்றார்.
நின்றவரை முகம்நோக்கி மாயன் தானும்
நிலவரங்க ளுள்ளதெல்லாம் நினக்குள் ளாச்சு
இன்றிவரை நீங்கள்கொண்டு நமது குண்டத்(து)
ஏகபதி வாசல்தெரு எல்லாங் காட்டிக்
கொண்டுஅந்தத் தையிலமதில் மூழ்க்கிப் பின்னும்
கூட்டிக்கொண்டு வாவெனவே கூற வானோர்
டுண்டுபல மேளமொடு தாளத் தோடு
உற்றரத மீதில்வைத்து உம்பர் சென்றார்
சென்றவர்கள் நாரணரின் குண்ட மானச்
சிறப்பையெல்லாங் காட்டிமிகத் தெளிந்த சந்த
தன்றமலர் வாழ்தங்கப் பதத்தில் மூழ்க்கித்
தண்டிகையின் மீதிருத்தித் தயவாய் வானோர்
கொண்டவர்கள் மாயனுட பதத்தில் விட்டுக்
குலாவியந்த வானோர்கள் கும்பிட டேற்ற
மன்றலணி மாயவரு மீசர் தானும்
வைகுண்டமா முனியெனவே வழங்கி னாரே
வழங்கியந்த மாயவரும் வானோர் தம்மை
வரவழைத்து நீங்கள்மகா மேர்வு சென்று
இளங்குருமா னானகுரு வைந்த ராசர்
இன்றுபுவி யீரேழு மடக்கி யாளப்
பழங்குருநூல் முறைபோலே பாரில் தோன்றிப்
பதியாள வந்தாரெனப் பதிப்பீ ரென்று
வழங்கமிக மறையோர்கள் மேர்விற் சென்று
மாயனுரை தவறாமல் வகுத்தார் தாமே
வகுத்திடவே முன்னுரைத்த முறையோ லுள்ள
மகாபெரிய கிரீடமு மவர்க்குச் சூட்டிப்
பகுத்துடைய செங்கோலும் பரம னார்தன்
பரம்பெரிய முத்திரியும் பலன்கள் யாவும்
தொகுத்திடப்பொன் னீராளத் துகிலு மீந்து
துதிசிங்கா சனமீதில் தூக்கி வைத்து
மகுத்துவமாய் வாழுமென வானோர் போற்ற
மறையவரு மீசுரரும் வரமே யீந்தார்
அய்யா சான்றோர்க்கு இரங்கல்
ஈந்திடச் சிங்கா சனத்தில் இருந்தவ ரேதோ சொல்வார் 360
கூர்ந்திட எனக்கு இங்கே குணமெல்லாம் நலம தாகச்
சார்ந்திட மருளிச் செய்தீர் தற்பரா வொப்பில் லானே
ஓர்ந்திட எனக்கு அங்கே உகந்தவ ருண்டே முன்னம்
ஆடையும் பொன்னுங் காசும் அன்னமும் பாலு முந்தன்
நீடிய உதவி யாலே நினக்கவ ரிதுநாள் மட்டும்
வாடியே முகங் கோடாமல் மனத்தய வதனா லீந்து
தேடியே மக்கள் தம்டமச் சிந்தையில் நினைக்கு தென்றார்
ஐயரே இதுநாள் மட்டும் அவரெனக் களித்த செல்வம்
வையகமே தரியா தென்றன் வாயினா லுரைக்கப் போமோ
மெய்யெல்லா மவர்கள் பேரில் மேனியு முருகு தையா
செய்யனே யவர்க ளென்றன் திருப்பதம் வணங்கச் செய்வாய்
திருப்பதம் வணங்கச் செய்வாய் என்றெனத் தெளிந்த ஞானி
கருவதி லுதித்த சான்றோர் சாதியில் கௌவை யாகிக்
குருபதம் வணக்கஞ் செய்து கூறிய மொழியைக் கேட்டு
மருவணி துளசி பூணும் மாயனு மகிழ்ந்து சொல்வார்
கைகண்ட மணியே யென்றன் காரணக் குலமே கன்றே
வைகுண்ட மணியே யுன்றன் மனதலைந் திருக்க வேண்டாம்
மெய்கொண்ட மணிக ளான மேன்மக்கள் சான்றோ ரெல்லாம்
பொய்கொண்டக் கலியை விட்டுன் பொற்பதம் பெறுவர் கண்டாய்
கலியை யெரிக்கத் தவசிருந்த கருத்தை யறிந்து உன்னிடத்தில் 380
வலிய வந்துன் பதம்வணங்கி மனதுக் கேற்க நின்றவரும்
பொலிய உனக்கு அமுதுடன் புடவை பலது மீந்தவரும்
ஒலியத் தான தர்மமதும் உகந்தே யளித்தோர் மிகவாழ்வார்
இரக்கும் படிபோல் வடிவெடுத்து இருந்து கலியை முடிக்கஅங்கே
உரைக்கு மொழியைக் கேட்டுனக்கு உதவி புரிந்த உத்தமரும்
கரைக்கும் படியே யமுதளித்துக் கைக்குள் ளேவல் புரிந்தவரும்
மறைக்குங் குருவே யென்னாணை வந்தே சேர்வா ருன்பாதம்
உடுக்கத் துணிக ளில்லாமல் உலக மதிலே யெளியவனாய்
முடுக்க மதுவே யில்லாமல் முடியும் விரித்துப் பேயனைப்போல்
கடுக்கக் கலியை யெரிப்பதற்குக் கவிழ்ந்து சிறைநீ யங்கிருக்க
அடுக்க உதவி செய்தவர்கள் அவரே யுனக்கு மகவாமே
ஆமே யவர்க ளல்லாமல் அதிக மகனே நீயிருந்த
ஓமே யறியா வண்ணமுந்தான் உலகி லுன்னைப் பழித்தவர்கள்
சாமே தீயில் தாங்கிடந்து சடமே நரகுக் குள்ளாகி
வேமே யுன்றன் மேலாணை விறுமா பதத்தி னாணையிதே
ஆணை மகனே அசையாதே கண்மணியே
சாணா ரினக்குலங்கள் தப்பாம லுன்னுடையத்
தர்மபதி ராச்சியத்தில் தாம்வாழ்வார் சத்தியமாய்
வர்ம முனைப்பேசி வம்புசெய்த நீசர்குலம்
அமுந்த நரகமதுள் ஆகுவார் சத்தியமாய்க் 400
குளிர்ந்த மனதுடைய கோவேயென் கண்மணியே
மலங்காமல் வாழ்ந்திருநீ வையகத்தி லெப்போதும்
பொய் வேசம்
பெலங்க ளதுபார்க்கப் பொய்வேச மொன்றனுப்பி
மகனே நீசொன்ன மாநூல் முறைப்படியே
உகமீதே யார்தான் உகந்திருக்கிறா ரெனவே
பார்த்துவர வோர்சொரூபம் படைத்து அனுப்புகிறேன்
ஏற்றந்தச் சாதிக்கு இன்னமீ ராறுகலை
அடுக்கும் வரைநீ அவர்பேரில் நாட்டமதாய்
முடுக்க முடனிந்த உற்றசிங் காசனத்தில்
தவம்போ லிருந்து தானாளு குண்டமதில்
ஆளுநீ யரசு ஆண்மை குறையாமல்
நாளு வரைமகிழ்ந்து நலமாக வாழ்ந்திருநீ
அனுப்புகின்ற பொய்ச்சொரூபம் ஆங்கார மற்றவுடன்
மனுப்புகழ நாமள் வையகத்தின் மீதிறங்கி
நிச்சித்து வைத்த நினைவா னதின்படியே
வச்சிருந்த நற்பதியில் வாழலாங் கண்மணியே
என்றரைத்து மாகலியில் ஏற்றபொய் வேசமதாய்
குன்று தனிலிருந்து கோலமொன்று தானனுப்ப
வந்தங்கு குதித்ததுகாண் வையகத்தி லம்மானை
நந்த னானென்பான் நாரணர்க்கோன் ராமனென்பான் 420
முந்தச் சுவாமிகட்டு முன்னுதித்து வந்தேனென்பான்
செந்தழல்போல் நின்றிடுவான் சிட்டுப்போ லேபறப்பான்
கண்டகண்ட அற்புதங்கள் கண்ணாரக் காட்டிடுவான்
பண்டையுள்ள வைப்பைப் பாரறியக் காட்டிடுவான்
தீர்க்கமுட னற்புதங்கள் திடீரெனவே காட்டிடுவான்
மார்க்கம் பலதணிவான் வைகுண்ட மென்றிடுவான்
கடலில் நடப்பேனென்பான் கனலி லிருப்பேனென்பான்
மடவாரை யெல்லாம் மாலை யிடுவேனென்பான்
இப்படியே கோடி எண்ணிறந்த அற்புதங்கள்
செப்பிடுவான் பூமியிலே தேச நருள்மலங்க
சூட்ச மநோகம் சொல்லொணா வித்தையதாம்
தூட்ச மறியாமல் தொல்புவியெல் லாமயங்கும்
இந்தப் படியாய் இருக்கின்ற நாளையிலே
முந்த வைகுண்ட முடிசூடி வாழ்ந்திருப்பாய்
நல்லவை முழித்தல்
சிவனு முமையாளும் செய்யத் திருமாலும்
தவமுனி வர்களும் சரசுபதி மாதுமையம்
நான்முகனும் வேத நல்ல மறையோரும்
தான்முனிந் தாகமத்தின் தன்மை யதின்படியே
தொடுத்த கலியன்று தோன்றி குதித்தவரைக்
கொடுத்தகணக் கின்படியே கொல்லக் கலிதனையும் 440
வானமது குழவி மண்பூமி யம்மியெனத்
தானமது நிரப்பாய்த் தன்னா லிருந்திடவும்
உண்டான தெல்லாம் உடன்கரிந்து நிறீடவும்
அண்ட ருலகம்வரை அசைந்து முழித்தடவும்
மாயவரு மீசர் வைகுண்ட மாமணியும்
தாய்தமர்க ளானச் சத்தி திருவுடனே
வைகுண்ட ரான மகனை நடுநிறுத்தி
மெய்குண்டத் தேவர் மிகுகூல மாகிவர
முத்திச் செங்கோலும் முழிப்புச்சங் கும்பிரம்பும்
பத்தியுள்ள நாரணர்தான் பாலனுட கைக்கொடுத்து
ஆகாய மாக அவர்கள்மிக வந்துநிற்க
வாகாக நாரணரும் மகனை முகம்நோக்கி
நல்ல மகனே நாடுந் தவத்தோனே
செல்ல மகனே திருபெற்ற கண்மணியே
உநத்னக்கு ஏற்ற உற்ற மனிதர்களும்
சந்தமுள்ளத் தேவியரும் தனதுகந்த புற்பூடும்
ஆகின்ற பட்சிகளும் ஆன மிருகமதும்
பாகுசெறி விருட்சம் பண்பான நற்பதியும்
யாதாக முன்னே யாமமிட்ட நூற்படியே
நீதான் வருகவென நினைத்துவிடும் என்மகனே 460
நினைத்தார் வைகுண்டர் நினைவின் படிபோலே
மனத்தயவு கூர்ந்து மலமலென நல்மனுவோர்
முழித்தார் வைகுண்டர் மொய்குழலார் மக்களுமே
களித்தே யிருந்த கருத்தின் படியாலே
பட்சி மிருகம் பலமிருகச் செந்துக்களும்
அச்சுதர்க கேற்ற ஆதி விருட்சங்களும்
புதுப்பூமி புதுநிலவு புதுவானம் புதுவாயு
குருபூமி யானக் கூண்டதாயகப் பொற்பதியும்
பொன்பதியும் நற்றெருவம் பெரியதெப்ப வாவிகளும்
அன்பதிய நல்மனுவும் அனுகூல மாயுதித்தார்
எம்பெருமாள் முன்னே யாம முரைத்தபடி
வம்பரெல்லா மாண்டார் மனதுகந்தோர் தாமுழித்தார்
தன்ம யுகத்துக்குத் தானேற்ற வஸ்துக்களும்
நன்மையுடன் தன்னால் நாடி மிகக்குதித்தார்
நல்ல யுகத்தர்ம நாடு மிகக்குதித்தால்
வல்லவை குண்டமதாய் வந்தவுடன் வாருமெனச்
சொல்லி யயைச்சிருத்த சுத்த மிருகமதும்
நல்ல மனுவோரும் நற்பறவை யானதுவும்
விருட்ச மதுவும் மேலுகந்த வஸ்துக்களும்
வாருமெனச்ö சான்ன வகையெல்லா மேமுழித்தார் 480
ஆருமிக வொவ்வாத அரியோ னகமகிழ்ந்து
சீருகந்த நாதன் திருமால்சந் தோசமதால்
ஆகாத்த தெல்லாம் ஆழிதனை வருத்தி
வாகா யரித்து வன்னரகில் தள்ளிமிகச்
சுத்த யுகத்தைச் சுத்தி வருத்துமென்று
கற்றைக் கங்கையாட்குக் கரியோன் விடைகொடுத்தார்
விடைவேண்டி வாரி விமலன் மொழிந்தபடிக்
கடல்வாரி செய்து கமலயுகஞ்சுத்திபண்ணிக்
கர்த்தனரி நாரணரைக் கடலுமிகத் தெண்டனிட்டு
முத்தனரி நாதன் முன்னுரைத்த நீசனெனக்
நடுத்தீர்ப்பு
குறோணி அவனுயிரைக் கொண்டுவந்து முன்னிறுத்திச்
சுறோணிதப் பாவி சொல்லடா உத்தரங்கள்
ஏழு பிறவி இதுவரையுஞ் செய்துவுன்னை
வாழுநீ யென்று வரமருளிப் பார்த்தேனே
இக்கலியில் நானும் இரப்பனைப்போல் வந்திருந்து
மிக்க உலகறிய வெறிப்பேயை யுமெரித்துத்
தண்ணீரால் மானிடர்க்கு சகலநோய் தான்தீர்த்துப்
புண்ணியமாய்த் தருமம் புரிந்து மிகவருளிக்
காணிக்கை கைக்கூலி காவடி யும்நிறுத்தி
ஆணிக்க மாக அம்புவியில் யாவரையும் 500
ஒருதலத்தில் விட்டு உற்றபுத்தி சொன்னேனே
இருபுத்தி யால்நீயும் என்னைப் பிடித்தடித்தாய்
கடடியென்னைப் பேயனெனக் கடுவிலங்கில் வைத்தாயே
அட்டிசெய்ய வில்லையல்லோ ஆண்டியாய் நானிருந்து
பண்டார மாகப் பார்மீதி லன்பரிடம்
நன்றாகப் பிச்சை நான்வேண்டி யேகுடித்துத்
தர்மமா யல்லோ சனங்களுக்கு ஞாயமுண்டோ
வர்மமா யென்னை வந்தடிக்க ஞாயமுண்டோ
அல்லாமல் முன்னே அரனிடத்தி லாணையிட்டு
எல்லா மினிமேல் இராச்சியத்தில் யாதொருவர்
பண்டார மென்று பாரறிய வந்தவரை
அண்டே னவரை அட்டிமிகச் செய்யேனென்று
ஆண்டிகளை நானும் அட்டிமிகச் செய்ததுண்டால்
கூண்டிறந்து போவோம் கொடிப்பிதி ரானதெல்லாம்
சேனைத் தளமிழந்து செல்வமது தானிழந்து
ஏனைக் குழலோடே என்கிளைக ளெல்லோரும்
தன்னா லிறந்து சளநரகம் போய்விடுவோம்
முன்னாள் நீசொல்லி மொழிந்தாணை யின்படியே
பண்டாரந் தன்னைப் பதைக்க விடாதபடி
அண்டாமல் நீயும் அடித்ததினால் ஞாயமென்ன 520
சொல்லடா நீதான் சொன்னமுறைப் படியே
கல்லடா நீதான் கவிழ்ந்துநிற்கும் ஞாயமென்ன
பாவிநீ யேழ்பிறவி பார்மீதில் தோன்றியதில்
ஆவி யறிய அனுப்போலும் நன்மையது
செய்ததுண்டோ சொல்லு செவியுனக்குக் கேட்கலையோ
மைதரிய யிப்பிறவி மிகுஇரப்பன் போல்நானும்
எளிய குலத்தில் எகாபரனே தஞ்சமெனச்
சுழிமுனையை முத்தி சோமனருள் உள்ளிருத்தி
உடுக்கத் துணிகளற்று உண்ணவூண் தானுமற்று
படுக்க இடமுமற்றுப் பரமார்த்த மாயிருந்து
சாதிபதி னெட்டதுக்கும் யாம முறைப்படியே
நீதியுடன் தண்ணீரால் நொம்பலங்கள் நீக்கிவைத்தேன்
நீயறிந்துங் கண்டும் நீணிலத்தோர் தாமறிய
வாயிலிடும் வெற்றிலைக்கு மனுவோர் தடவுகின்ற
சுண்ணாம் பானாலும் தொட்டுநீ தந்தாயோ
எண்ணாமல் நீயும் என்னை மிகப்பழித்துப்
பாவிநீ என்னைப் பரிசுகெடத் தானடித்து
மேவிநா னிட்டுருந்த வெற்றிசுரக் கூடதையும்
உடைத்துத் தகர்த்தாயே உற்றகந்தைக் காவியையும்
மடத்தனமாய் நீயும் வலித்துக் கிழித்தாயே 540
தோளிலிடும் பொக்கணத்தைத் தூக்கியென்னைக் கீழ்ப்போட்டுத்
தூளிபட வுதைத்துத் துண்டுதுண்டாய்க் கீறினையே
ஐயோ நீசெய்த அநியாயஞ் சொல்லவென்றால்
வைய மீரேழும் வழிந்து நிரம்பிடுமே
பத்தினியாள் பெற்ற பாலதியச் சான்றோர்கள்
மெத்த அவர்நன்றாய் விளங்கிருக்கணுஞ் சிவனே
ஆடை யில்லாமல் அலமாந் திருக்கையிலே
நாடதிக மான நல்லபட்டு நீராளம்
தங்கச் சரிகைத் தலைப்பாக் குல்லாவுடனே
மங்களமா யென்னை வந்தெடுத்துத் தானுடுத்திப்
பாலும் பழமும் பருந்தேனும் சர்க்கரையும்
மேலும் நவநிதியம் வேண்டும் பலகாரம்
அன்னங்காய் சொர்ணம் அன்பாகக் கொண்டுவந்துப்
பொன்னப்ப நாரணரே பெற்றவரே
வாயி லெடுத்திட்டு வளமாக என்றனக்குச்
சாயத் தலையணையும் சரிகைத்தொட்டில் மெத்தைகளும்
பாதங்கீழ்க் கொள்ளாமல் பாலதியச் சான்றோர்கள்
ஈத லிரக்கமுடன் எடுத்தென்னைத் தோளில்வைத்துப்
போற்றி மகிழ்ந்து பூமெத்தை மேலிருத்தி
ஏற்றிப் பலகாலும் என்சொல் மிகக்கேட்டுத் 560
தாங்கி யிருந்த சான்றோர்க ளின்பெருமை
நாங்க ளுரைக்க நாடுமிகத் தாங்காதே
என்னென்ன பவிசு எமக்கவர்கள் தாமீந்து
பொன்னம் பலமீதில் புகழ்ந்துமிக வாழ்வாரே
பாவிநீ யென்னைப் பரிசுகெடத் தானடித்து
ஏவிநீ விட்ட ஏவலா ளிப்போதெங்கே
ஆணுவங்க ளெங்கேஉன் ஆனைப் படைகளெங்கே
பூணுகின்ற தங்கப் பொன்னா பரணமெங்கே
விஸ்தார மெங்கேநீ வீற்றிருக்கு மேடையெங்கே
சுற்றார் கிளைகளெங்கே தோகைமயி லார்களெங்கே
குதிரைத் தளங்களெங்கே கோட்டையெங்கே வாசலெங்கே
சதுரா யணிவகுத்தத் தாண்டும் படைகளெங்கே
தேரெங்கே யுன்றன் சிங்கா சனங்களெங்கே
ஊரெங்கே யுன்றன் ஒழுங்குதளச் சேனையெங்கே
மாடமெங்கே கூடமெங்கே மணிமேடை யாரமெங்கே
தோடமெங்கே யுன்றன் தோழரெங்கே சூரமெங்கே
ஆயுதங்க ளெங்கேவுன் அம்புதடிக் காரரெங்கே
வாயுரங்க ளெங்கேவுன் வாயில்காப் போர்களெங்கே
துட்டமெங்கே யட்டியெங்கே துரைத்தனங்க ளானதெங்கே
பட்டமகங் காரமெங்கே பருங்கிள்ளாக் கானதெங்கே 580
மாடெங்கே நீதான் வளர்த்த மிகமெங்கே
வேடிக்கை யெங்கேநீ விதித்த கணக்குமெங்கே
ஓடி யுலாவும் உற்றசா ரட்டுமெங்கே
வண்டியெங்கே யுன்றன் வாழ்வெங்கே மாட்சியெங்கே
சண்டிப் பயலேவுன் தாடாண்மை யெங்கேசொல்
இத்தனையுந் தோற்று இப்போ நரகமதில்
சத்திறந்து போகவுன் தலையில் விதியாச்சே
உன்விதியாங் நீயும் உயிரழிந்தா யல்லாது
என்னதி காரத்தால் ஆக்கினைகள் செய்கிறேனோ
உன்னால் நீமாள ஊழிவிதி யானதல்லால்
தன்னாலே தான்கெட்டுத் தான்போவா ரென்றபடி
உன்னாலே நீயும் உயிரழிந்தாய் மாபாவி
ஒருபிறவி தன்னிலுன்னை உயிரழிக்கக் கூடாதே
கருவருளும் நாதன் கற்பினைக்கே ராதெனவே
பிறவியே ழுன்னைப் பெரும்புவியி லேபடைத்துத்
திறவிப் பொருளோன் சிந்தை மிகஅறிய
உகத்துக் குகங்கள் உத்தமனாய் நான்பிறந்து
மகத்துவமா யுன்றன் மனதைமிகப் பார்த்தேன் 600
எட்போலே தர்மம் ஈத லிரக்கமுடன்
நட்பேதுங் கண்டிலனே நன்றகெட்ட மாபாவி
ஏழு பிறவியிலும் என்பேரு சொல்வோரைக்
கோளுசெய் தவரைக் கோட்டிக்கொண் டேயடித்துச்
சிறைக்கா வல்தன்னில் திட்ட விலங்கில்வைத்து
அறையான துகொடுத்து அட்டிமிகச் செய்ததல்லால்
இரக்க முடன்தயவு இல்லையே உன்னிடத்தில்
அரக்கர் குடும்பம் ஆனதிலா லுன்னுடைய
மனதிரக்க மாகாது மாபாவி நீகேளு
முன்னாள் குறோணி உதித்துவந்த மூன்றுகமும்
தன்னாலே நீபிறந்து தாண்டி யதுகளித்துப்
பின்னாள் பிறந்தாய்ப் பெருங்கிறே தாயுகத்தில்
அந்நாளில் நீங்கள் அண்ணனென்றும் தம்பியெனும்
பிறந்தீர் படைகள் பெருத்தசனக் கூட்டமுடன்
சிறந்த மதிலும்பெரிய செல்வமா யாண்டிருந்தீர்
ஆண்டிருக் கும்போது ஆங்காரந் தான்மீறித்
தாண்டி பதமறந்து தானவரை யும்பிடித்துத்
தெய்வமட வார்களையும் சிறையில் மிகப்போட்டு
மெய்வரம்பு விட்டு மேலோகத் தாரையெல்லாம்
ஊழியங்கள் கொள்ள உனக்கு மனதாகி 620
நாளி லவரை நட்டிமிக அட்டிசெய்து
வம்புசெய்து நீயும் வானலோ கம்வரையும்
அம்புவி யெங்கும் உன்னநியாய மேமீறி
ஈரே ழுலகும் இராமா ராமாவெனவே
பாரேழு தேசம் பண்பாய் முறையமிட
முறையமிட்ட சத்தம் உடைய பரனறிந்து
இறையவரும் நம்மிடத்தில் இந்தஅநி யாயமதை
மாற்றிவைக்க வென்று மலரோ னெனையனுப்பப்
பார்த்துன்னை நானும் பழையவர முந்தேர்ந்து
ஆயுதத்தா லம்பால் அஞ்சு முகத்தாலும்
மாயும் படியே வகையில்லை யென்றுசொல்லி
ஆறு முகமாய் ஆனபுகழ் சத்திதனை
வீறுடனே நல்ல வேலாயுத மெனவே
எடுத்தே சொரூபம் யானுனக்கு நல்லபுத்தி
விடுத்தே யுரைக்க மிகுதூத னையனுப்பிச்
சொல்லியுங் கேளாமல் சூரப் படைகூட்டிக்
கொல்லுவே னென்று கூண்டப் படையோடு
சண்டைக்கு நீயும் சமைந்துவந்தா யென்னோடு
கண்டே யுனைநான் கருணைபோல் புத்திசொன்னேன்
தேவர்களை விட்டு தெய்வமட வாரைவிட்டு 640
மூவர்களை நெஞ்சில்வைத்து உகமாளு என்றேனே
அப்போது நீயும் ஆக்கிரமந் தன்னாலே
இப்போது பேயாண்டி யார்கேட்பா ருன்பேச்சை
பிச்சைக்காரா வுன்சொல் பேருலக மாளுகின்ற
செஞ்செல்வள ராசனுக்குச் செல்லாது போடாயென்றாய்
என்னோ டேபோர்க்கு எதிராக வந்தாயென்றால்
உன்னோ டேயுள்ள உற்ற திறத்தாலே
சண்டைக்கு வாடா தாட்டாண்மைப் பார்ப்போமென்றாய்
விண்டதெல்லாம் பார்த்து வேலா யுதமெடுத்து
அப்போது வேலால் அறுத்தேனா னுன்சிரசை
முப்போது உள்ள முழுக்கிளைக ளத்தனையும்
சேரக் குலமறுத்து சேனையெல் லாமழித்துக்
கோட்டை யழித்துன் குவாலத்தைத் தானழித்துக்
கேட்டேனா னுன்னோடு கெறுவிதமே னென்றுரைத்தேன்
சத்தி வேலாலே சத்தியென்னைச் சங்கரித்தாள்
புத்திகெட்ட ஆண்டி போதுமோ என்னையெல்
என்றாயே பாவி ஏற்றயுக மன்றழித்து
அன்றே யுனையும் அதிலோர் பிறவிசெய்தேன்
அந்நா ளுன்பேர்தான் அதிக இரணியனாய்
துன்ஞாய மாய்நீ தோன்றி முடுக்கமதாய் 660
அரிநமோ வென்ற அட்சரத்தையு மாற்றி
மதியாம லுன்பேரை வளங்கினா யவ்வுகத்தில்
ஆதி சிவமறிந்து அசுரா வுனையறுக்க
மாதிரிபோ லென்னை வகுத்தாரே யுன்மகவாய்
மகவா யுனக்கு மாய வுருவெடுத்து
உகமே ழறிய உதித்து வளருகையில்
பள்ளியிலே சென்று படிக்கின்ற நாளையிலே
தெள்ளிமையச யுன்பேரைச் செய்பென்றான் வாத்தியானும்
உடனே நான்மாறி ஒருஅசுரன் பேரதையும்
தடமே லுரைத்தால் தருணமது காத்திடுமோ
படைத்த குருவின் பருநாமஞ் சொன்னதுண்டால்
சடத்தை மிகக்காக்கத் தருண முதவிசெய்வார்
ஆனதாற் பெரிய அரிநமோ அல்லாது
மானமில்லாப் பாவி மாபாவிச் சூரனுட
ஏற்ற பேரான இரணிய நமாவெனவே
சாற்றக் கூடாது தானிதுவே சொன்னவுடன்
வாத்தி யுன்னோடு வந்துவளங் கூறிடவே
பார்த்தென்னை நீயும் பற்கடித்துச் சொல்லெனவே
இறுக்கி நெருக்க இசையாமல் நான்மாறி
உறுக்கிப் பெரியோன் உற்ற அரி யோன்பேரைச் 680
சொல்லவே நீயும் சொன்னஅரி யெங்கேஎன்றாய்
வல்லப் பொருளான மாய அரியோனும்
எங்கெங் குமாகி எவ்வுயிர்க்கும் தானாகி
அங்கெங் குமாகி அளவுக் களவாகி
நிரந்தரமா யெங்கும் நிறைந்த சொரூபமதாய்ப்
பரப்பிரம்மமாய் நிற்பார் பாரஅரி யென்றேனே
கோணி நீவாடி குருவென்ற உன்னரிதான்
தூணிலு முண்டோசொல் என்றே எனைப்பார்த்துக்
கேட்கநா னுண்டெனவே கிறுங்காமல் சொல்லிடவே
வாடகணையால் நீயும் வாயில்நடை தன்னில்நிற்கும்
தூண்பேரில் வெட்டச் சிங்கமாய் நான்குதித்து
வீண்கொண்டப் பாவுயுனை வெய்யோ னடைவதிலே
இடைநடையில் வைத்து என்ற னொருநகத்தால்
குடல்நெளியக் கீறிக் கொன்றேனா னுன்னையுமே
உயிர்நெகிழு முன்னே உன்னுடைய கண்முன்னின்று
செய்த யுத்தத் திறன்சொன்ன அப்போது
உன்னாலே யென்னை உயிரழிக்க ஏலாது
முன்னா லுன்னகத்தில் உற்றமலைப் பத்ததனைச்
சேர்த்துப் பதித்துச் செய்ய நகமாக்கிக் 700
கீற்றுநீ செய்தாய் கெறுவிதமா யல்லாது
ஏலாது உன்னாலென்று இயம்பவுட னான்மாறி
மேலாகப் பின்னும் விளம்பினதை நீகேளு
பத்து மலையைப் பருந்தலையா யுனக்கு
எத்திசைகள் மெய்க்க ஏற்றதிகக் கைத்திறமும்
கைத்திறமும் வில்திறமும் கணையாளி வாள்திறமும்
புத்திரருங் கூடப் பிறப்போர்கள் தந்திறமும்
மெத்தப் பவிசும் வேண்டும் படையோடே
கொற்றவனா யுன்னைக் குவலயத்தி லேயருளி
உன்னிடுக்கத் தாலே ஒருராம பாணமதால்
கொன்னுன்னை யன்றின்று கூறுமொழி கேட்பேனான்
என்றே யுனக்கு இருந்தவுயி ருமழித்து
அன்றே கிறதா யுகமு மழித்துமிகப்
பின்னுந் திரேதா பெரும்புவி யில்நீயும்
மன்ன னிராவணனாய் பாவிநீ ராவணனாய்
மற்றும் நிகரொவ்வா வாய்த்ததம்பி தங்களொடும்
சேனைப் படையுடனே செல்வரோடு நீபிறந்து
வானலோ கம்வரைக்கும் மாபாவி யாண்டனையே
ஆண்டிருந்து மல்லாமல் ஆதிசீதா லட்சுமியை
மாண்டிறந்து போங்காலம் மாபாவி நீயவளைக் 720
கொண்டுபோ யன்னுடையக் கோட்டையதுள் வைத்தனையே
மன்றுதனில் நானும் மாதைவிடு வென்றுசொல்லி
வேண்டுகின்ற புத்தி விதவிதமாய்ச் சொன்னேனே
கூண்டுன்றன் தம்பி கும்பன் விபீஷணனும்
நாரா யணனுடைய நல்லசீதா லட்சமியை
ஆராலே கூடும் அருஞ்சிறையில் வைத்திருக்கப்
பாவிநீ வம்பால் பழிக்கிரையாய்ப் போகாதே
கூவுமொழி சீதைதனை கோட்டைவிட் டனுப்பிவிடு
மாதை விடாதே வம்புசெய்தா யானாக்கால்
பாதகா வுன்னுடைய பவிசெல்லாம் போகுமெனச் 
சொன்னதம்பி மாரைச் சொல்லால் மிகத்துரத்திச்
சின்னஞ் சிறுவன் தசரதனார் பாலனுடப்
பெண்ணவளாஞ் சீதையெனும் போகச்சொல் லென்றனையே
மண்ணாள வேணுமென்றால் வணங்கிப் பணியென்றும்
அல்லாதே போனால் அலக்கழி வாகுமென
எல்லாம் பெரிதாய் என்னோ டுரைத்தாயே
பார்த்தால் சிறுவன் பைங்கிளியாள் தன்புருஷன்
காற்றா னதிற்பறக்கும் கடிய துரும்பெனக்கு
அவனுடைய பெண்ணாம் ஆதிசீதா லட்சுமியாம்
இவளுடையப் பேரால் இராச்சியங்கே டாயிடுமாம் 740
ஆமோடா நீங்கள் அரக்கர் குலமோடா
போமோடா என்றன் பூமுகத்தில் நில்லாதே
என்றே யெனையும் இழப்ப மிகப்பேசி
அன்றே யவர்பேச்சை அல்லவென்று தட்டிவிட்டாய்
அப்போ தவர்கள் அன்பாக என்னுடைய
செப்போடு வொத்தத் திறமெல்லாஞ் சொல்லிடவே
சின்னக் குழந்தையென்றுஞ் சீதையொரு பெண்ணெனவும்
மன்னவனே யுன்மனதில் வைத்துமிகக் கொள்ளாதே
நாட்டுக் குடைய நாரணரே ராமனென்றும்
கூட்டுக் கிளியானக் கோதைசீதா லட்சுமியாள்
முட்டாளா வுன்றன் முழுநீசப் புத்தியினால்
அட்டாள பூமி அடக்கியர சாளுகின்ற
பகுத்தைக் குலையாத பழிக்கிரையாய்ப் போகாதே
தொகுத்த வுரைபோலே சீதைதனை விட்டுவிடு
என்றுரைத்தார் பின்னும் இருவ ருன்தம்பியர்கள்
அன்று வுனக்கு அதிகக்கோப முண்டாகி
என்னுடைய கண்முன் இப்போது நீங்கள்நின்றால்
உன்னிருபேர் தங்கள் உற்றச் சிரசதையும்
அறுத்து வதைப்பேன் வனமதிலே போயிடுங்கோ 760
மறுத்து உரையாமல் வனமதிலே போயிடுங்கோ
என்றாயே நீயும் இருவரையு மப்போது
அன்றே யவர்கள் அயர்ந்து மிகவிருக்க
அப்போது என்னுடைய ஆதிசீதா லட்சுமியை
நற்போ டுயர்ந்த நாயகியை நான்தேடி
அனுமன் தனையும் அங்கே அனுப்பிவைத்துத்
தனுவான வாளி தார்குழற்குத் தானீந்து
உன்கோட்டை வாசலிலே உடனேநான் வந்துநின்று
என்கூட்டி லான ஏற்றசீதா லட்சுமியை
விடுநீ யென்றேனே வீணாய் கேளாமல்
படுவ தறியாமல் படையெடுத்தா யென்னோடு
அப்போதுன் தம்பி ஆன விபீஷ்ணனும்
நற்போடு என்னை வந்துமிக நவ்வியவன்
பொல்லாத பாவியுடன் பிறந்ததோ சங்கழித்து
எல்லாம் பொறுத்து எனையாண்டு கொள்ளுமென்றான்
நல்லதுதா னென்று நானவனை யுமேற்றுப்
பொல்லாத பாவியென் பெண்ணைவிடு என்றேனே
பாவிநீ கேளாமல் படையெடுத்து வந்தனையே
தாவிநீ விட்டச் சரங்களெல் லாந்தடுத்து
என்கை யினாலே எடுத்து வொருபாணம்
சங்கையுட னெய்து தலையறுத்தே னுன்றனையும் 780
உன்னா லுன்படைகள் உயிரழிந்து மாண்டபின்பு
முன்னா ளுரைத்த மொழிகேட்டே னுன்னோடு
அப்போது பாவி அதற்கேது நீயுரைத்தாய்
இப்போது என்னுடைய ஏற்றதம்பி தானொருவன்
உன்னோடு சேர்ந்து உயிர்ப்பெலங்கள் தானுரைத்துச்
சொன்னதா லென்னுடைய சிரசறுத்தா யல்லாது
ஏலுமோ ராமா இழப்பம்பே சாதேயென்றாய்
மாலும்நா னப்போ மகாகோப மாய்வெகுண்டு
சுட்டிப் பயலே சுணைவந்து தில்லையென்று
மட்டிப் பயலே மாறிப்பின் னேதுரைத்தேன்
உன்றனுட தம்பி ஒருவன்மிக வந்தெனக்கு
சிந்தையுற்ற உன்பெலங்கள் தெரியப் படுத்தியல்லோ
கொன்றாய்நீ யென்று கூறினா யின்னமுனை
இன்னம் பிறவி ஏற்றதுரி யோதனனாய்
துவாபர யுகத்தில் தோன்ற உனையருளிப்
பவரா யுனக்குப் பக்கத் துணையாக
ஒருநூறு பேராய் உலகில்மிக நீதோன்றி
இருபேர்க்கும் நான்பொதுவாய் இருந்து வுனைவதைத்து
இன்றுரைத்தப் பேச்சு யானன்று கேட்பேனென
அன்று உனதுடைய அன்னசுற்றம் வேரறுத்து 800
உன்னுயி ரைமழித்து உற்றயுக முமழித்து
என்னுடைய லட்சுமியை யான்மீட்டு என்னுள்வைத்து
உற்ற திரேதா யுகமழித் துன்றனையும்
சுத்ததுவா பரயுகத்தை தொல்புவியில் தோணவைத்தேன்
பிறந்தாய்ப் புவியில் பிறப்பொரு நூறுங்கூட
அறந்தான் பெரிய ஐவர்களு மங்குதித்தார்
அப்படியே நீபிறந்து ஆளுகின்ற நாளையிலே
முப்படியே நானும் உகத்தில்கோ பாலனெனப்
பாலனென வுதித்து பாண்டவர்க ளோடிருந்து
தூலமொன்று வீமனுக்குச் சொல்லியுனைச் சங்கரித்தேன்
சங்கரித்து உன்னைச் சகுனி யிழுக்கையிலே
பங்கமாய் முன்னுரைத்த பாங்கு மிகக்கேட்டேன்
அப்போது நீயும் அகமகிழ்ந்து கொள்ளாமல்
இப்போது வீமன் எனைக்கொன்றா னல்லாது
ஏலுமோ போடா இடையா எனவுரைத்தாய்
மேலும்வந் தயுகத்தில் மேட்டிமையா யுன்னையிப்போ
தன்னால் பிறக்கவைத்து தன்னா ழிவையென்று
சொன்னே னானுன்னைச் சொன்ன மொழிப்படியே
உன்னால் குதித்து உற்ற கலியனென
இந்நாள் வரைக்கும் இருந்தாயே பார்மீதில் 820
பார்மீதில் நானும் பரதேசிப் போலிருந்து
போரேது மில்லாமல் பொறுதி யுடனிருக்கக்
கர்ம வயசுனக்குக் காலஞ் சரியாகி
வர்மம்வந்து மூடி மாண்டாயே தன்னாலே
கலி முடிவு
முன்னுனக்குத் தந்த முடியு மென்சக்கரமும்
மன்னுகந்த நல்ல வரங்கள்மிகத் தத்துவமும்
எல்லாம் நீயிப்போ என்முன் னெடுத்துவைத்துப்
பொல்லாத வனேநகரம் புக்கிடுநீ யென்றனராம்
மாறி யுரைக்க வாய்மொழிக ளில்லாமல்
ஊறிக் கலியன் உடக்கடித்து வைத்தனனே
எல்லா வரமும்வைத்து என்றன் முடியும்வைத்து
பொல்லாப்பு மானதொருப் பொய்கள வுமுருட்டும்
தந்திர மாஞாலத் தத்துவங்க ளானதுவும்
அந்திர மதான அன்னீத வஞ்சனையும்
மாய்கை பலதும் வளக்கோர வாரமதும்
சாய்கை பலதும் சர்வபொல்லாப் பானதெல்லாம்
என்னோடு கூட யானு மதுகூட
வன்னகரம் புக்கிடுவோம் என்றுவரம் வைத்தனனே
வைக்க அவனுடைய மாய்மால மாய்கையதும்
பொய்க்கலிய னுயிரைப் பொதிந்துத் திரையாக 840
ஆயிரத்திரு நூறு அணியாய்ப் பவஞ்சூடித்
தீயிரத்த மான தீரா தருநரகில்
சுற்றி யெடுத்துத் தூக்கிக்கொண் டேயவளை
இத்தனைநா ளும்நம்மை இரட்சித்த இராசனென்று
மாய்க்கையெல் லாங்கூடி வளைந்தவ னைத்தூக்கிப்
பேயலகை வாழும் புழுக்குழிக் குள்ளாக
முக்கி நிமிர்ந்து மிதக்காமல் மாய்கையெல்லாம்
தாக்கி யிருக்கத் தடதடெனச் சேடனது
நிரந்ததை மூடி நிரத்தியதே யம்மானை
பரந்தந்த சேடன் பாரைநிரப் பாக்கியபின்
தர்ம யுகம்
உற்ற வைகுண்டர் உறுசங் கூதினரே
வெற்றியாய்ச் சங்கு விரைவாக ஊதிடவே
எத்திசை யிரேழும் இந்தசங் கோசைமிக
கற்பு நெறியானக் கடிய பலவகையும்
நல்லோர்க ளான நாடு மனுவோரும்
நல்பூமி நல்விருட்சம் நல்மிருக மூர்வனமும்
கீழ்மேல் நடுவுங் கிரணமண்ட பமூன்றில்
நாள்மேல் பெரிய நல்லவகை யானதெல்லாம்
தன்ம முதல்நீதம் தவசு நிலைமைமுதல்
நன்மை பலதும் நாடிமிக வந்ததுவாம் 860
எல்லாம் வைகுண்டர் இட்டசத்த மீதில்வந்து
நல்லாகக் கண்டு நாரணரைத் தான்போற்றி
வைகுண்ட சுவாமி வரவேணு மென்றுசொல்லி
மெய்கொண்ட ஞான மிக்கத தவம்புரிந்தால்
வந்துசந்த மொன்றில் வரவழைப்போ மென்றுசொன்னச்
செந்துயிர்க் காக்கும் சிவகுண்டம் வந்தீரோ
தன்ம வைகுண்ட சுவாமிவந்தா ரென்றுசொல்லி
நன்மை பலசெந்தும் நன்னதிகப் பட்சிகளும்
பசுமைக் குணமான பலமிருக வூர்வனமும்
கசுவிரக்க மானக் கற்றாவின் தன்னினமும்
நால்வேத நீதம் நாடுகின்ற சாஸ்திரமும்
சில்வாடை பிச்சி செந்தா மரைமலரும்
தங்கநவ ரத்தினமும் சமுத்திரத்து நல்வகையும்
கங்கைக் கண்ணாளும் கமலப்பூ வாணிமுதல்
தர்ம மதும்போற்றி சுவாமி யெனத்தொழுமாம்
முழித்த மனுக்களுக்கும் மொய்குழலார் தங்களுக்கும்
களித்தே விழிஞானக் கண்ணுமிகஅருளி
நல்ல மனுக்களுக்கு நாலுவர முங்கொடுத்துச்
செல்ல மனுக்கள் தேகமது பொன்னிறமாய்
கல்வித் தமிழ்ஞானக் கலைக்கியா னமுதல் 880
நல்விச் சிறப்பாய் நாடியவர்க் கீந்து
தெய்வ மடவார் வரவழைத் தேழ்பேர்க்கும்
பெற்ற மதலையெல்லாம் பிரமாண மாய்த்தெரிந்து
தத்தியா யேழ்பேர்க்கும் தரந்தரமாய்த் தானீந்து
வைகை தவிலிறந்த மக்கள்வரை நாரணரும்
தையலவ ரேழ்பேர்க்கும் தான்தெரிந் தீந்தனரே
ஏழுபேர்க் குமதலை இனமினமாய்த் தான்கொடுத்து
வாழுங்கோ புவியில் வயதுபதி னாறெனவே
எல்லோரும் நன்றாய் இருந்து வொருஇனமாய்
நல்லோராய்ச் சாகாமல் நீடூழி காலமெல்லாம்
ஆணுபெண் ணுடனே அதிகப்பல பாக்கியமும்
காணக்காண நீங்கள் கௌவையற்று வாழுமென்றார்
பட்சி பறவை பலசீவ செந்துகட்கும்
அச்சமில்லாப் புவியில் அல்லல்வினை யில்லாமல்
பெற்றுப் பெருகிப் பிதிரெல்லா மோரினம்போல்
ஒத்து மிகக்கூடி ஒருதலத்து நீர்குடித்து
வாழ்ந்திருங்கோ தர்ம வையகத்தி லென்றனராம்
சார்ந்திருங்கோ வென்று தாமன் விடைகொடுத்தார்
நல்லபூச வாச நளிர்விருட்ச மானதுக்கும் 900
அல்ல லகற்றி அமர்ந்துமிக வாழுமென்று
தில்லையா டும்பெருமாள் சொன்னா ரதுகளுக்கு
புற்பூடுங் கூடிப் பொருந்திமிக வாழுமென்று
நற்பூ டதற்கு நவின்று விடைகொடுத்தார்
அசையாமல் வானம் அதுநேர் நிலவுடனே
பிசகான தில்லாமல் பொழுதுமிகச் சாயாமல்
நேராக வாழுமென்று நெடியோன் விடைகொடுத்தார்
வருணனுக்கும் நல்ல வாக்கு மிகக்கொடுத்துத்
தருண மதுபார்த்து சாற்றியிரு என்றுரைத்தார்
வாயு வதற்கு மரைபோல் வழங்கெனவே
வீசு புகழ்நாதன் விடைகொடுத்தா ரம்மானை
நீதமது மூன்றும் நிலையாக நில்லுமென்று
சீதக் குருநாதன் சொன்னா ரதுகளுக்கு
மானுவ தர்ம வரம்பு தவறாமல்
நானுப தேசம் நவின்றதுபோல் நில்லுமென்றார்
பூமகள் வாணி பொருந்திக் கலைபுரிந்து
சீர்முக தர்மச் சீமையி லும்வாழ்ந்து
மகிழ்ந்திரு மென்று மாய னருள்புரிந்தார்
குவிந்து மலர்மகளும் கொண்டாடிக் கொண்டிருந்தாள்
கங்கை முதலாய்க் கனகரத்தி னாதிகளும் 920
சங்கையுட னீங்கள் தன்னால் துலங்கிமிக
வாழுவீ ரென்று வரமு மிகக்கொடுத்து
என்னென்ன பாக்கியங்கள் எல்லா மிகத்தழைத்துப்
பொன்னம் பலம்போல் பொருந்திமிக வாழுமென்று
நல்ல வகையெவர்க்கும் நாடி மிகக்கொடுத்தார்
வல்ல புவிக்கு வாழ்வுவர முங்கொடுத்து
நல்ல வைகுண்டர் நாரா யணர்மகற்கு
வல்ல மகற்கு வாய்த்தமுடி யுஞ்சூடிச்
செல்ல கலியாணம் செய்யவே ணுமெனவே
வைகுண்ட ரான வாய்த்தகுரு நாதனுக்கு
மெய்குண்ட ரான விமலக்குரு நாதனுக்கு
நாதக் குருவான நாரா யணமணிக்கு
சீதமங்கை மார்கள் தேவிதெய்ட கன்னியரை
கன்னியரை நன்றாய்க் கலியாண மும்புரிந்து
மன்ன ரவரவர்க்கும் மாலை யுடன்புரிந்து
பொன்னம் பலர்க்கும் பெரிய பொருளதுக்கும்
தன்னம் பெரிய சதாபிரம னானவர்க்கும்
நாதன்மார்க் கெல்லாம் நல்ல மணம்புரிந்து
மாதவர்க ளான வாய்த்ததே வாதிகட்கும்
ஆதவ நாதன் அரிகேச வன்தனக்கும் 940
இப்படியே மங்களங்கள் எல்லோருங் கொண்டாடிச்
செப்பமுள்ள நாயகிமார் சேர்ந்தங் கொருப்போலே
சரசு பதிமாது தண்டரள சுந்தரியும்
விரச குழலுமையும் வீரமகா லட்சுமியும்
வாய்த்த பகவதியும் வாழுகின்ற பார்வதியும்
ஏற்றபுகழ் தெய்வ இளங்குழலா ரேழ்பேரும்
வள்ளி தெய்வாணை வாயீசொரி யுடனே
தெள்ளிமையா யுள்ளத் தேவி பராபரையும்
இந்தமா தர்கள் வந்தபோ திலே யாகியத் தெய்வமா தர்கள்
முந்தநாங் களு மீன்றபா லரை முற்றுமா தவம்போல வளர்த் திடும்
சிந்தர்மா மணி தெய்வநா யகி தேவி காளி வராகி சுந்தரி
இந்த மங்கள மானதிற் கண்டிலேம் öங்கள் நாயகா என்றவர் போற்றினார்
போற்றுமா தரைப் பார்த்துநா தனும் போத மாமென வரமிது கூறுவார்
சாற்றுமா தரே தைய லேழ்வரே சந்த மாகிய அந்தரி யானவள்
பார்த்துன் மைந்தரைக் காத்திடா மலே பாலரண் டுயி ரிப்படி யானதால்
ஏற்றுக் கௌவையாய் வீற்றிருக் கிறாள் எண்ணந் தீர்த்தவள் தன்னை யழைக்கிறேன்
பெண்ணேகே ளுன்றன் பிள்ளைரண்டு தன்னுயிரைக்
கள்ளக் கவுசலமாய்க் கரிகாலச் சோழனவன்
கொன்னதினாற் காளி கூண்ட மனமிடைந்து
என்னிடத்தில் வந்து இவ்வளமை யுமுரைத்துப் 960
பாலர் முழித்துப் பரம்பெரிய வைகுண்டரும்
சீலமுள்ள தர்மச் சீமையர சாளுகையில்
வருவே னதுமட்டும் வடவா முகமதிலே
குருவே துணையெனவே குவிந்திருப்பே னென்றிருந்தாள்
இப்போ தவட்கு இங்குவர ஞாயமுண்டு
நற்போடு வொத்த நல்லபர காளியைத்தான்
அழைக்கிறே னென்று ஆதி நினைக்கலுற்றார்
பிழைக்கிறே னென்று பெரியகுல மாகாளி
உடன்வந்து நாரணரை உவந்து பதங்குவித்துத்
திடன்வந்து நின்று சிவனை யடிதொழுது
பாலரெல்லா முன்றன் பாதமது சேர்ந்தாரென்று
மாலவரே யென்றன் மனது மகிழ்ந்துதையா
நாரணரு மெச்சி நன்றா யகமகிழ்ந்து
காரணம தாகக் களிகூர்ந் தினிதாக
வைகுண்ட நாதனுக்கும் வாழ்மடந்தை மாதருக்கும்
கைகண்ட நல்ல கலியாண முமுகித்து
மணிவை குண்டருக்கு மாமகுட முஞ்சூட்டி
அணியா பரணம் அநேக மெடுத்தணிந்து
தங்கக் குல்லாவம் தளிருநிறச் சட்டையிட்டுப்
பெண்கள் குரவையிடப் பொன்மா லையுஞ்சூடிப்  980
பன்னீர் பரிமளமும் பவளநிறப் பொட்டுமிட்டு
நன்னீர்க ளாடி நாரணக் கண்மணிக்கு
ஆலத்தி வன்னி ஆகாயத்தீ வெட்டமுடன்
கோல மடவார்கள் குக்குளித்து நீராடிப்
பட்டுப் பணிகள் பரிமளங்க ளும்புரிந்து
கட்டு முறையாய்க் கன்னியர்கள் தாமொயிலாய்
தேவர்களு மூவர்களும் திசைவென்ற மன்னர்களும்
மூவர்களும் நல்ல முழித்தபல செந்துகளும்
நான்முகனும் வேத நல்ல மறையோரும்
வானுகமு மண்ணகமும் மன்னகமு மொன்றெனவே
எல்லோரும் நன்றாய் ஏக மகிழ்ச்சையுடன்
நல்லோர்க ளெல்லாம் நாரணனார் பொற்பதிக்குள்
தெருப்பவிசு வந்து சிங்கார பொற்பதிக்குள்
மருப்புகழுஞ் சிங்கா சனத்தில் மகிழ்ந்திருக்க
போவோ மெனவே பெரியவை குண்டரையும்
கோவேங் கிரிபோல் அருவைரத மீதேற்றி
தேவாதி யெல்லாம் சிவசிவா போற்றியெனச்
சீவசெந் தெல்லாம் திருப்பாட்டுக் கூறிவரத்
தெய்வ மடவார்கள் திருக்குரவை பாடிவர
மெய்வதிந்த சான்றோர் மொகுமொகென வேகூடிக் 1000
கட்டியங்கள் கூறிக் கனகப்பொடி யுந்தூவிக்
கெட்டிகெட்டி யென்றுக் கீர்த்தனங்கள் பாடிவர
வாரி சங்கூத வாயு மலர்தூவ
நாரி வருணன் நல்லந்தி மலர்தூவ
இந்தக் கொலுவாய் எழுந்துரத மீதேறி
சிந்தர் மகிழச் சிவமுந் திருமாலும்
கூட ரதமீதில் கூண்டங் கினிதிருந்து
லாடர் மகிழ நல்ல தெருப்பவிசு
நேராக வந்து நெடியோன் பதிதவிலே
சீராய்ப் பதிமுடுகச் செகலதுவே தானீங்கி
அமைத்து அலைகொண்டிருந்த அழகுபதி கோபுரமும்
சமைத்து இருந்த தங்கமணி மண்டபமும்
மண்டபமும் மேடைகளும் மணிவீதி பொற்றெருவும்
குண்டரைக் கண்டந்தக் கொடிமரங்க ளுந்தோன்ற
வாரியது நீங்கி வைத்தலக்கில் போயிடவே
சாதிவை குண்டர் சாபம் நிறைவேற்றிச்
சாபம் நிறைவேற்றித் தானாய் நினைத்ததெல்லாம்
யாம முறையாய் அங்கே குதித்திடுமாம்
என்னென்ன யாமம் ஏலமே யிட்டதெல்லாம்
பொன்னம் பதிதான் புரந்தாள வந்ததினால் 1020
நிறைவேறி நானும் நிச்சித்த மெய்வரம்போல்
குறைபடிகள் வராமல் குணமாக வாழுமென்றார்
பட்டாபிஷேகம்
இப்படியே யாமம் எல்லாம் நிறைவேற்றி
முப்பத்தி ரண்டறத்தால் முகித்தசிங் காசனத்தில்
செப்பொத்த மாணாக்கர் சேவிக்க இருபுறமும்
ஒப்பற்ற பொற்பதிக்குள் உயர்ந்தசிங் காசனத்தில்
மறுமஞ்ஞ ரெதிரி வையகத்தி லில்லாமல்
விறுமஞ்ஞ ரான வெற்றிவை குண்டருமே
சிங்கா சனமிருந்து தெய்வச்செங் கோல்நடத்தி
பொங்கா ரமான புவிதர்ம ராச்சியத்தில்
ஆளுவா ரென்ற ஆகம நூற்படியே
ஏழுபெண் மக்கள் இனமொன்றாய்த் தான்கூடி
வாழவே ணுமெனவே வாய்த்தசிங் காசனத்தில்
ஆளவை குண்டர் அவரிருந்தார் பொன்மாதே
அய்யா அருள்வாக்கு
ஆதியாம் வைந்த ராசர் அருள்செங்கோ லேந்தித் தர்ம
சோதியி னொளிபோல் ரத்தினந் துலங்கிய முடியுஞ் சூடி
நீதிபோல் தர்ம ஞாய நெறிபுரிந் தரசே யாள
சாதியா முயர்ந்த சான்றோர் தம்மையே வருத்திச் சொல்வார்
மக்களே நீங்க ளெல்லாம் வாழ்பொன்னம் பதியிற் சென்று
முக்கிய மான தர்ம யுகநில மதிலே தன்னால் 1040
கக்கிய பொன்கள் சொர்ணம் கைமனங் குளிர அன்னம்
பொக்கிஷம் நிறைய வைத்துப் புகழவுண் டினிதாய் வாழ்வீர்
வாழுவீர் தாழ்வில் லாமல் மக்களுங் கிளைகள் கொஞ்சி
நாளுமே மகிழ்ச்சை கூர்ந்து நலமுடன் வாழும் போது
நீளுமே யெனது செங்கோல் நீதியும் நெறிபோல் வந்து
ஆளுமே யுங்கள் தம்மை அன்புட னலையா வண்ணம்
உன்னிலும் பெரியோ னாக ஒருவனுள் ளுயர்த்தி கண்டால்
தன்னிலும் பெரியோ னாகத் தழைத்தினி திருந்து வாழ்வீர்
என்னிலும் பெரியோ னீங்கள் யானுங்கள் தனிலு மேலோன்
பொன்னில் வூற்று வீசும் பொன்பதி யுகத்து வாழ்வே
ஆணுடன் பெண்ணும் பெற்று அதிகமாய்ச் செல்வ மாகித்
தாணுட நினைவு முற்றுத் தர்மமும் நெறியுங் கற்று
வேணுநீள் கால மெல்லாம் ருடனே வாழ்ந்து
பூணுதல் கமல நாதன் பொற்பதம் பெற்று வாழ்வீர்
மனுக்க ளவர்க்கு வாய்த்தசட்ட மீதருள
தனுக்கள் பெரிய சந்தமிரு கங்களுக்கு 1060
ஒன்றாகக் கூடி ஒக்க வொருஇனம்போல்
நன்றாக வோர்தலத்தில் நன்னீர் குடித்துமிக
வாழ்ந்திருங்கோ வென்று வைந்தர்மிகச் சட்டமிட்டார்
மெச்சிக் குழைந்து மேவி யொருஇனம்போல்
பட்சி பறவைகட்கும் பாங்காகச் சட்டமிட்டு
ஊர் வனங்களுக்கும் ஒருப்போலே சட்டமிட்டு
பாருகத்தில் நீங்கள் பசுமையாய் வாழுமென்றார்
தேவ தெய்வார்க்கும் தேவ ஸ்திரிமார்க்கும்
மூவர் முனிவருக்கும் முக்கோடித் தேவருக்கும்
எல்லோர்க்கும் நன்றாய் இயல்பாகச் சட்டமிட்டு
வல்லோர்க ளான வைகுண்ட மாமணியும்
செங்கோ லுமேந்தி சிங்காசன மிருந்து
மங்காத தேவரம்பை மாத ரிருபுறமும்
சிங்கார மாகத் தேன்போல் மரைவீச
சான்றோர்க ளேவல் தமதுள் பணிமாறக்
கட்டியங்கள் கூறி கவரி மிகவீசக்
கெட்டியாய்ச் சான்றோர் கிருபை யுடன்மகிழ்ந்து
பாவித்து நித்தம் பரமவை குண்டரையும்
சேவித்துப் போற்றி தினமேவல் செய்திடவே 1080
கன்னியர்க ளோடும் காதலாய்த் தானீன்ற
மன்னதிச் சான்றோர் மக்கள் மனைவியோடும்
ஆதி வைகுண்ட ஆனந்த நாரணரும்
நிதியாய்த் தர்மம் நேரோர் மணிதூக்கிச்
சிங்கா சனத்தில் சிவசூர்ய குடைக்குள்
கங்கா தரனார் கற்பினையை யுள்ளிருத்தி
ஆண்ட பரனும் ஆதி முறைப்படியே
சான்றோர்கள் போற்ற தர்மபதி யாண்டிருந்தார்
ஆண்டிருந் தரசு செய்ய அணிவரை போலே நீதம்
பூண்டிருந் தினிது வாழ பூதல மனுவோர் வாழ
கூண்டிருந் தருளாய்ச் செல்வம் குணமுடன் மகிழ்ச்சை கூர்ந்து
வேண்டிருஞ் செல்வ மோங்க வேற்றுமை யில்லா வாழ்ந்தார்
தருமமாய்ப் புவியி லுள்ள சனங்களும் பலது செந்தும்
பொறுமையாய் வாழும் போது புரந்தர வானோர் விண்ணோர்
நன்மையா யவருங் கூட நாடொன்றாய் மேவி வாழ
வன்மமே யில்லா வண்ணம் வைந்தரும் புவியை யாண்டார்
ஆண்டனர் புவிதிரி மூன்றினு மோரினம்
கூண்டநற் குலமெனக் குலாவி வைந்தரும்
தாண்டிய வோர்குடைத் தாங்கு குவலயம்
மூன்றினு மோர்மொழி முகுந்தன் வாழ்ந்தனர் 1100
பருதியு மதியெனப் பவந்து சேவனர்
கருதியு முகமனும் கமழ்ந்து கைமலர்
அருதியு மலர்மகள் அணிந்து பூவினர்
கருதியு முறைவழி தூக்கி வாழ்ந்தனர்
பொன்முக வருளது பொதுமி யாவியே
அன்முக மதிலு மமர்ந்து புகுந்திரு
இன்முக மதிலு மிருந்து லாவியே
பொன்முக வைந்தர் புயத்தில் வாழ்ந்தனர்
முதமுக வானவர் மூன்றென வொன்றினர்
சதயித காலெனச் சமைந்து வாழ்ந்தனர்
உதவென மனமு முவந்து லாவியே
நிதம்நினை வளர்வறா நிரந்து வாழ்ந்தனர்
சீரணி யுமையாள் பங்கர் சிவமகிழ்ந் தினிது வாழ
நாரணர் திருவும் வாழ நான்முக வேதன் வாழ
வாரண வான லோக மாதவ ரெல்லாம் வாழ
காரணக் கன்னி யானக் கமலப்பூ மாதும் வாழ
பூமாது வானபக வதியும் வாழ
பொன்மாது சரசுபதி புரிந்து வாழ
நாமாது வானபூ மடந்தை வாழ
நாகரிகத் தேவியர்கள் நலமாய் வாழ
போர்மாது வானமா காளி வாழ
பொன்னுலகத் தர்மபதி பொருந்தி வாழ
சீர்மாது கொண்டபுகழ்ச் சான்றோர் வாழ
சிவவைந்த ராசருமே சிறந்து வாழ  1120
மாதுதிரு லட்சுமியாள் மகிழ்ந்து போற்றி
மாயனுட முகம்நோக்கி மாது தானும்
தீதகலும் நாயகமே சிறந்த மாலே
தேசமதி லுமக்கெதிரித் தோன்றிற் றென்று
நீதமுடன் தோன்றியங்கே யுகங்கள் தோறும்
நிந்தனைகள் படுவதெனக் கறியச் சொல்வீர்
ஈதுரைக்க மாயவட்கு மாயன் தானும்
இத்தனையு மெடுத்துரைக்க இசைவாள் பின்னும்
பின்னுமந்த நாதனுட அடியைப் போற்றிப்
பொன்மானே யெனதுடைய தேனே கண்ணே
இன்னுவரைக் குறோணியுயிர் தன்னை நீரும்
எழுபிறவி செய்தவனை யிசைந்து பார்த்தும்
நன்னியெள்ளுப் போலினிவு காணா வண்ணம்
ஞாயநடுக் கேட்டவனைத் தன்னால் கொன்னீர்
பின்னுமுமக் கெதிரியின்ன முண்டோ சொல்லும்
பெரியகுரு வெனப்பணிந்து போற்றி னாளே
போற்றுமட மயிலான சீதைப் பெண்ணின்
பொன்முகம்பார்த் தருள்புரிந்து புகல்வா ராயன்
சாற்றுமெனக் கெதிரிவந்த வாறே தென்று
தானுரைத்தாய் நீயறியத் தண்மை யாகக்
கீர்த்தியுட னானுரைத்தேன் காண்ட மாகக்
கிளிமொழியே யினியெனக்குக் கீழு மேலும்
வேற்றுமொரு எதிரியுண்டோ வென்று கேட்ட
மெல்லியிள மயிலனைய மாதே கேண்மோ
மாதேநீ கேளுயீ ரேளு பூமி
மண்ணிலுவ ராழிவளர் வரைசூ ழீதுள்
சீதேநீ வரையெனதுள் ளறியா மாயச்
செகவீர சாலமத னேக முண்டு
பூதேயென வெகுண்டுவர முகங்கள் தோறும்
பிறக்கவே நான்கேட்கப் புரிந்தா ரீசர்
வாதேயென் பகைஞ்ஞர்வழிக் குலங்கள் மாய்த்து
மறுமஞ்ஞ ரெதிரியில்லா வண்ணம் வாழ்வோம்
இனிமேலு மெனக்கெதிரி யில்லை மானே
எமதுமக்க ளொடுங்கூடி யிருந்து வாழ்வோம்
மனுவோரு முனிவோரும் வான லோக
மாலோரு மென்வாக்கு வழியே வாழ்வார்
இனிமேலும் பயமேதோ எமக்கு மாதே
இலங்குபதி மீதினுனை யிடமே வைத்து
பனிமாறு காலம்வரை யரசே யாள்வோம்
பதறமனம் வேண்டாமெனப் பகர்ந்தார் மாயன் 1140
மாயனுரை மனமதிலே மாது கேட்டு
மகிழ்ந்துமுக மலர்ந்துவாய் புதைத்துச் சொல்வாள்
தீயனெனனு மாகொடிய அரக்கர் சேர்க்கைத்
திரையறுக்க நீர்துணிந்து சென்ற நாளே
நாயநெறி காணாத அடிமை போல
நடுங்கிமன திடைந்துவெகு நாளே தேடி
ஆயருமை நாயடியா ளின்று கண்டேன்
அகமகிழ்ந்தே னெனதுதுய ரிழந்திட் டேனே
இகழ்ந்திட்டே னென்றமட மயிலே மானே
என்றாதி யிருகையால் மாதை யாவிப்
புகழந்திட்ட மானமணிமேடை புக்கிப்
பூவையரை யிடமிருத்திப் புகழ்ந்து வாழ
மகிழ்ந்திட்ட மானமுறை நீதி வாழ
மறைவாழ இறையவரு மகிழ்ந்து வாழ
உகந்திட்ட மானமுறை நூல்போல் வாழ
உம்பர்சிவ மாதுலக மனுவோர் வாழ
மாதவட்குத் தானுரைத்தக் காண்டந் தன்னை
வையகத்து மனுவோர்க ளறிய மாயன்
தாதணியுந் தாமரையூர்ப் பதியில் மேவித்
தழைத்திருக்கும் சான்றோரில் தர்ம வாளன்
நாதனருள் மறவாத இராம கிருஷ்ண
நாடனக மகிழ்ந்துபெற நலமாய் வந்த
சீதனரி கோபாலன் மனதுள் ளோதிச்
செப்பெனவே நாதனுரை தொகுத்த வாறே
வாறான கதைவகுத்த நாதன் வாழ
வகுத்தெழுதிப் படித்தகுல மனுவோர் வாழ
வீறான தெய்வசத்தி மடவார் வாழ
வீரமுக லட்சமியும் விரைந்து வாழ
நாராய ணரருளால் படித்தோர் கேட்டோர்
நல்லவுரை மிகத்தெளிந்து நவின்றோர் கற்றோர்
ஆறாறும் பெற்றவர்க ளகமே கூர்ந்து
அன்றூழி காலமிருந் தாள்வார் திண்ணம்
திண்ணமிந்த அகிலத்திரட் டம்மானை தன்னைத்
திடமுடனே மனவிருப்ப மாகக் கேட்டோர்
எண்ணமுந்த வினைதீர்ந்து ஞான மான
இறையவரின் பாதாரத் தியல்பும் பெற்று
வண்ணமிந்தத் தர்மபதி வாழ்வும் பெற்று
மக்களுடன் கிளைபெருகி மகிழ்ச்சை யாக
நிண்ணமிந்தப் பார்மீதில் சாகா வண்ணம்
நீடூழி காலமிருந் தாள்வார் திண்ணம் 1160
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக