Weblog என்பதன் சுருக்கமே Blog ஆகும். தமிழில் வலைப்பூ, வலைப்பதிவு என்று அழைக்கப்படும். ப்ளாக் என்பது ஒருவகையான இணையத்தளம், அல்லது இணையத்தளத்தில் ஒரு பகுதியாகும். செய்திகளை பகிரும் முறையில் இவை இரண்டும் வேறுபடுகின்றன.
- இணையத்தளங்களில் செய்திகள் எப்பொழுதாவது தான் புதுப்பிக்கப்படும். ஆனால் ப்ளாக்கில் செய்திகள் அடிக்கடி புதுப்பிக்கப்படும். (உங்கள் ப்ளாக் புதுப்பிக்கப்படாமல் இருந்தால் அது இணையத்தளம் ஆகிவிடாது!!! )
- ப்ளாக்கின் சிறப்பம்சங்களில் ஒன்று வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிடும் வசதி. (பெரும்பாலான) இணையத்தளங்களில் அந்த வசதி இல்லை. நம் கருத்துக்களை சொல்ல வேண்டுமானால் மின்னஞ்சல், தொலைபேசி ஆகியவற்றைத் தான் பயன்படுத்த வேண்டும்.
- இணையத்தளம் தொடங்குவதற்கு PHP, MySQL, Python போன்ற கணினி மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் ப்ளாக் தொடங்குவதற்கு கணினி அடிப்படைகள் தெரிந்தாலே போதும்.
- ஏன் ப்ளாக் தொடங்க வேண்டும்?
உண்மையை சொன்னால் இதற்கு சரியான வரைமுறைகள் எதுவும் இல்லை. எதற்கு வேண்டுமானாலும் ப்ளாக் தொடங்கலாம். உங்கள் கருத்துக்களையோ, அனுபவங்களையோ, உங்களுக்கு தெரிந்த ஒன்றைப் பற்றியோ, நீங்கள் ரசித்தவைகளைப் பற்றியோ மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வதற்காக ப்ளாக் தொடங்கலாம். இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்காகவும் கூட ப்ளாக் தொடங்கலாம். அது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது.
குறிப்பு: பணம் சம்பாதிப்பதற்காக ப்ளாக் தொடங்க நினைத்தால் உங்கள் ப்ளாக்கை ஆங்கிலத்தில் தொடங்குங்கள். ஆங்கிலத் தளங்களைப் பிரபலப்படுத்துவது பற்றியும் இத்தொடரில் எனக்குத் தெரிந்ததைப் பகிர்கிறேன்.
எப்படி தொடங்குவது?
இலவசமாக ப்ளாக் தொடங்குவதற்கு பல இணையத்தளங்கள் உள்ளன. அவற்றில் முன்னணியில் இருக்கும் இரண்டு, ப்ளாக்கர் மற்றும் வேர்ட்பிரஸ்ஆகியவை. நாம் இத்தொடரில் பார்க்கவிருப்பது ப்ளாக்கர் தளம் பற்றி தான். ஏனெனில் இலவச வேர்ட்பிரஸ் தளத்தைக் கொண்டு நாம் சம்பாதிக்க முடியாது. மேலும் அதில் உருவாக்கப்படும் தளத்தின் வடிவமைப்பில் நமக்கு விரும்பிய மாற்றங்களை செய்ய முடியாது. ஆனால் அதற்கென்று சில சிறப்பம்சங்கள் உள்ளது. அது நமக்கு தேவையில்லை.ப்ளாக்கர்:
ப்ளாக்கர் (Blogger) தளம் கூகிள் நிறுவனத்தின் தளமாகும். உங்களுக்கு ஜிமெயில், யூட்யூப் போன்ற கூகிள் கணக்கு இருந்தால் அதன் மூலம் ப்ளாக்கர் தளத்தைப் பயன்படுத்தலாம். அல்லது புதிதாக கூகிள் கணக்கு ஒன்றை தொடங்கிப் பயன்படுத்தலாம். நீங்கள் தொடங்கும் ப்ளாக்கின் முகவரியில் நீங்கள் கொடுத்தப் பெயருடன் .blogspot என்றும் சேர்ந்து இருக்கும். இதற்கு Subdomainஎன்று பெயர். உதாரணத்திற்கு நீங்கள் blogname என்று கொடுத்திருந்தால் உங்கள் முகவரி blogname.blogspot.com என்று இருக்கும். பெரிதாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் பணம் கட்டி உங்களுக்கு பிடித்த பெயரை முகவரியாக வைக்கலாம். அதை பற்றி பிறகு பார்ப்போம்.தயாராகிவிட்டீர்களா?
ப்ளாக் தொடங்க தயாராகிவிட்டீர்களா?ஆம் என்றால் உங்கள் ப்ளாக்கிற்கு பெயர் வைக்க பல்வேறு தலைப்புகளை முடிவு செய்து வையுங்கள். ஏனெனில் நீங்கள் நினைக்கும் பெயரை ஏற்கனவே யாராவது வைத்திருக்கக்கூடும். நீங்கள் எதைப்பற்றி எழுதப் போகிறீர்களோ அது தொடர்பான வார்த்தைகளாக அந்த பெயர் இருக்கட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக