சனி, 31 மார்ச், 2018

திருச்செந்தூர்

திருச்செந்தூர் பாற்கடலில் அவதரித்து தருவையூரில் மனித உருவில் வாழ்ந்த அய்யா வைகுண்டர், அங்கிருந்து சாமிதோப்பு வந்தடைந்தார். 10 மாதங்களாக அங்கே இருந்து, அதற்கு முன்பு நடந்த யுகாந்திர சம்பவங்களையும், பின்னால் நடக்கப் போகும் எதிர்கால விஷயங்களையும் கூறிக் கொண்டே இருந்தார்.
இவ்வண்ணமாக 10 மாதங்கள் கடந்ததும் அய்யா தவம் புரியும் தவ வாழ்க்கையை மேற்கொள்ளத் தொடங்கினார். அய்யா 6 ஆண்டுகள் தவ வாழ்க்கை வாழ்ந்தார். அவர் தவம் புரிந்த திருவிடமே சாமிதோப்பு ஆலய வடக்கு வாசல் ஆகும். அதனால் வடக்கு வாசல் அய்யாவின் தவ வாசல் என போற்றப்படுகிறது.
இதையறிந்து நாடு முழுவதும் இருந்து பல தரப்பட்ட மக்கள் சாமிதோப்பில் குவிந்தனர். அவர்களிடம் தீண்டாமை என்னும் தீய சக்தியை ஒழிக்கவும், மூட நம்பிக்கையை முற்றிலும் துறக்கவும் அய்யா உபதேசித்தார். நோய், நொடி, மன உளைச்சல், உறுப்பு ஊனங்கள் போன்றவற்றை தனது பார்வையாலும், திருமண், பதம் கொடுத்து பறந்தோடச் செய்தார்.
ஒடுக்கப்பட்ட ஆடவர்கள் முழங்காலுக்கு கீழ் வேட்டி கட்டக்கூடாது. அங்க வஸ்திரம் அணியக்கூடாது என்ற அரசாங்க சட்டம் இருந்த அந்த கால கட்டத்தில் தலைப்பாகை அணிந்து தான் இறைவழிபாடு செய்ய வேண்டும் என்றும் பெண்கள் தோள் சீலை அச்சமின்றி அணிய வேண்டும் என்றும் போதித்து தம் மக்களை தலை நிமிர்ந்து நிற்க செய்தார். தீண்டாமை என்னும் தீய சக்தியை வேரோடு பிடுங்கும் விதத்தில் திருமண்ணை எடுத்து தம் பக்தர்களின் நெற்றியில் தொட்டு நாமம் சாற்றினார். நீங்களே பணிவிடை செய்யுங்கள் என்று காலை, மாலை இருவேளையும் உகப்படிப்பையும், மதியம் உச்சிப்படிப்பையும் தம் மக்களுக்கு அறிமுகப்படுத்தி வழிபடச் செய்தார்.
எளியோர், வறியோர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் சமமாக அமர்த்தி அன்னம் கொடுத்து சமபந்தி போஜனம் நடத்தினார். சாதிக்கொரு கிணறு என்றிருந்த காலத்தில் எல்லோரும் ஒரே கிணற்று நீரை குளிக்கவும், குடிக்கவும் முத்திரி கிணறை அமைத்தார். கூட்டு வழிபாட்டு மூலமே கலி என்கிற அரக்கனை வேட்டையாட முடியும் என்று தர்மம் பெரிது தாங்கி இருங்கோ மக்காள், தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம் என்று தர்ம நெறிகளை போதித்தார்.
மானமாக வாழ்ந்தால் மாலும் கலி தன்னாலே என்று கூறி மக்களுக்கு தன்மான உணர்வுகளை ஊட்டினார். ஆடு, கிடாய், கோழி போன்றவற்றை பலி இட்டு இறைவனை வணங்கும் மூடநம்பிக்கைகளை முற்றிலும் நீங்கள் துறக்க வேண்டும் என்று இறைவழிபாட்டிற்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தினார்.
வைகுண்டசாமியின் உபதேசங்களாலும், அருள்பாலிப்புகளாலும் வழிபாட்டு, வழிகாட்டல் களாலும் பல சாதி மக்களும் பயன் அடைந்தனர்.
தீண்டாமை என்னும் தீய சக்தியின் கொடுமையினால் உலகில் வேண்டா வெறுப்பாக வாழ்ந்து கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லாம் வைகுண்டசாமியை தன்னை படைத்தவராகவே நினைத்து போற்றி புகழ்ந்து பக்தி செலுத்தினர். இந்நிலை கலி வயப்பட்டோரின் கண்களை உறுத்தியது. சாமிதோப்பில் சமதர்ம சாம்ராஜ்யம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறதே என்று மனம் தவித்த அக்கொடியவர்கள், திருவாங்கூர் மன்னனிடம் புகார் செய்தார்கள். கலி ஆதிக்கத்தால் கருத்திழந்த மன்னவனும் வைகுண்டசாமியை சிறைபிடித்து வர தம் படைகளை அனுப்பினார்.
படைகள் சாமித்தோப்பை அடைந்து வைகுண்டசாமியை கைது செய்தார்கள். கயிற்றினால் வரிந்து கட்டி சாலையில் இழுத்துக் கொண்டு திருவனந்தபுரம் சிங்காரத் தோப்புக்கு சென்றார்கள். விஷத்தை கலந்து விருந்தென கொடுத்தார்கள். சுண்ணாம்பு காளவாயில் வைத்து நீற்றினார்கள். டன் கணக்கில் விறகுகளை அடுக்கி கொளுத்தி நெருப்பாக்கி அந்த நெருப்பிலே நடந்து வர செய்தார்கள்.
ய்யா பயன்படுத்திய கட்டில்
வைகுண்டசாமியோ விஷத்திற்கே விஷமானார். நெருப்பின் கொடிய நாக்குகள் அந்த நெறியோனை தீண்டவில்லை. இது கண்டு மிரண்ட மன்னன் இறுதியாக காட்டுப்புலியை பிடித்து வந்து 3 நாள் பட்டினி போட்டு புலியை அடைத்து வைத்திருந்த கூண்டிற்குள் புலிக்கு இறையாக்க வைகுண்டசாமியை தள்ளினான். பசித்த புலியோ, அந்த பரம்பொருளின் பாதங்களை வணங்கி நின்றது.
இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் கண்கொட்டாது பார்த்து கொண்டிருந்த மன்னனும், மன்னனின் படைகளும் இவர் மனிதரே அல்ல, இவரே இந்த கலியுகத்தை முடிக்கும் பூரண இறை அவதாரம் என உணர்ந்தனர். சோதனைகளை எல்லாம் வென்று மீண்டும் சாமிதோப்புக்கு வந்த வைகுண்ட பரம்பொருள், சைவம், வைணவம் என பிரிந்து கிடந்த ஆன்மீக உலகத்தில் அய்யா சிவ சிவா அரகரா என்ற அகண்ட நாம மந்திரத்தை உச்சரித்து வழிபடும் முறையை உருவாக்கி கொடுத்தார். அன்புக் கொடி மக்களின் வழிபாட்டு முறை சைவ, சித்தாந்தங்களையும், அன்புக்கொடி மக்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளும் ஒற்றை திருநாமம் வைணவர்களையும் கவர்ந்து ஈர்த்தது.
பகவான் வைகுண்ட சாமிகள், அய்யா வழிபாடு என்ற புதிய வழிபாட்டு முறையை உருவாக்கினார். அகிலத்திரட்டு என்னும் நூலில் இறைவழிபாடு எப்படி அமைய வேண்டும்? என்பதை வைகுண்டர் குறிப்பிட்டார்.
எண்ணற்ற உபதேசங்களை தம் பக்தர்களுக்கு அறிவித்து விட்டு இந்த உலகத்திற்கு அவர் காட்டிய உபாயமாம் உடலை கொல்லம் ஆண்டு 1026 வைகாசி மாதம் 21-ந் தேதி திங்கட்கிழமை 3.6.1851-ல் உகுத்து வைத்தார். அந்த உபாய மாயக்கூடு பொருந்தியிருக்கும் திருவிடமே சாமிதோப்பு பதியாகும்.
சாமிதோப்பில் உள்ள இந்த பதி அய்யாவின் தலைமை பதியாகும். அய்யாவின் அவதாரத்தோடும், அற்புதங்களோடும் முட்டப்பதி, அம்பலப்பதி, தாமரைகுளம்பதி, பூப்பதி ஆகிய பதிகளும் தொடர்புடையவை. இவை ஐந்தும் பதிகள் எனவும், அந்த பதிகளின் ஞாபக சின்னமாக உருவாகும் வழிபாட்டு தலங்கள் நிழல்தாங்கல் , தாங்கல் எனவும் அழைக்கப்படுகின்றன.
இத்தலங்களில் தெய்வப் படங்களோ, உருவச் சிலைகளோ இருப்பதில்லை. இவ்வாலயங்களின் மூலஸ்தானத்தில் ஒரு சாய்வு நாற்காலியை வைத்து அதில் இறைவன் அரூபமாக அமர்ந்திருக்கிறார் என ஐதீகமாக கொண்டு பட்டு வஸ்திரங்களாலும், மலர் ஆரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அத்துடன் உன்னிலேயே (இறைவனை) என்னை கண்டு கொள், என உணர்த்தும் விதத்தில் அங்கே வணங்க வரும் பக்தர்களின் பிம்பம் தெரியும் படியான அமைப்பில் சாய்வு நாற்காலிக்கு பின்புறத்தில் ஒரு நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டு இருக்கும். இன்று அய்யாவின் வழிபாட்டு ஆலயங்கள் உலகம் முழுவதும் வேராயிரம் பெற்ற விழுதுகளாய் படர்ந்து பரவி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக