வியாழன், 1 செப்டம்பர், 2016

வைகுண்டனைக் கைது செய்யுங்கள்

நாஞ்சில் நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் இருந்த 18 ஜாதியினரும் எழுச்சி பெற்று விட்டார்கள் என்ற செய்தியை அடுத்து, அதுபற்றி விசாரிப்பதற்காக அங்கே பயணம் மேற்கொண்டார், திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் சுவாதி திருநாள். அவர் நாஞ்சில் நாட்டில் தங்கும் இடமாக தீர்மானித்தது சுசீந்திரம்.

மும்மூர்த்திகளும் ஒரு மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் இங்குள்ள தாணுமாலய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலுக்கும் சரி... மற்ற விஷயங்களுக்காகவும் சரி... திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் இங்கு வரும் போது தங்குவதற்கு என்றே சிறப்பு அரண்மனைகளும், அவர்கள் விசாரணை நடத்துவதற்காக தனி மன்றங்களும் இருந்தன.

ஓரிரு நாட்கள் பயணத்திற்கு பிறகு திருவனந்தபுரத்தில் இருந்து சுசீந்திரம் வந்து சேர்ந்தார் மன்னர் சுவாதி திருநாள். வந்ததும் முதல் வேளையாக அவர் விசாரித்தது, 18 ஜாதியினரின் எழுச்சிப் பற்றிதான்.ஏற்கனவே அவர் அனுப்பி இருந்த அமைச்சர் ஒருவர், நாஞ்சில் நாட்டின் அன்றைய நிலவரங்கள் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்துக்கொண்டு மன்னர் முன்பு ஆஜரானார்.

“தங்களை வணங்குகிறேன் மன்னா!”

“வாருங்கள் அமைச்சரே... மனம் சூடாகி வந்திருக்கும் எனக்கு களிப்பான செய்தி ஏதேனும் கொண்டு வந்து இருக்கிறீர்களா?”

“நிச்சயம், நான் சொல்லி செய்தி தங்களுக்குக் களிப்பைத் தரவேண்டும் என்றுதான் நான் எண்ணுகிறேன்...”

“சரி... வந்த விஷயத்தை சொல்லும்...”

“மன்னா... இந்த நாஞ்சில் நாட்டில் புதிதாய் ஒரு மாற்றம் தெரிகிறது. தனித்தனியாக பிரிந்து கிடந்த தாழ்த்தப்பட்ட ஜாதியினர் இன்று ஒன்றாக கைகோர்த்துத் திரிகிறார்கள். அவர்களது இந்த தைரியத்திற்கு காரணம், வைகுண்டன் என்ற பெயரில் புதிதாய் முளைத்திருக்கும் ஒருவன்தான். அவனை அவர்கள் விஷ்ணுவின் அவதாரமாகவே நம்புகிறார்கள். அவன் சொல்வதை வேதவாக்காக ஏற்று நடக்கிறார்கள். அவன் நில் என்றால் இவர்கள் நிற்கிறார்கள்; நட என்றால் நடக்கிறார்கள். மொத்தத்தில், இந்த 18 ஜாதியினருக்கும் அவன் வைப்பதுதான் சட்டமாக இருக்கிறது...” என்ற அமைச்சர், மேற்கொண்டு சொல்லத் தயங்கியபடியே நின்றார்.



“நீர் கொண்டு வந்தது களிப்பான செய்தியாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், உம் செய்தி என்னை இன்னும் கோபக்காரனாக்கிவிட்டது. வேறு, இது போன்ற செய்தி இருந்தாலும் இப்போதே சொல்லிவிடும்...” என்ற மன்னின் கண்களில் கோபக் கனல் தெறித்தது.

“கோபம் வேண்டாம் மன்னா... நான் சொல்வதைப் பொறுமையோடு கேட்க வேண்டுகிறேன்...”

“சரி... சொல்லித் தொலையும்...”

“அந்த வைகுண்டன் உருவாக்கியுள்ள கோவில்களுக்கு அந்த 18 ஜாதியினரும் சுதந்திரமாகச் செல்கிறார்கள். தலையில் தலைப்பாகை அணிந்து கொள்கிறார்கள். வேஷ்டியும் பூமியை உரசுகிறது. மேலும் அவன் கலி என்னும் நீசனை அழிக்க வந்தவனாம். நம்மையும் அவன் கலிநீசன் என்றே அழைக்கிறான்...” என்று, அந்த அமைச்சன் சொன்ன போதே, ஆவேசமாக கத்தினான் மன்னன்.

“நிறுத்து உனது பேச்சை. எனது ஆளுகையின் கீழ் உள்ள பகுதியில் எனக்கு எதிராகவே சதி நடக்கிறதா? அப்படியென்றால், நாடாளும் எனக்கு என்ன மதிப்பு?” என்று கர்ஜித்தவனை நோக்கி, அழகான பணிப்பெண் ஒருத்தி ஓடி வந்தாள். அவளது கையில் ஒரு குவளை. அதற்குள் சுத்தமான குடிநீர்.

வேகமாக அந்த குவளையைப் பற்றியவன், வேகமாகவே அதற்குள் இருந்த தண்ணீரை தன் வாய் வழியாக வயிற்றுக்குள் திணித்தான். அவனது தொண்டைக்குள் செல்ல மறுத்து சிந்திய தண்ணீர்த் துளிகள் வெந்நீராக மாறிப்போய் இருந்தன.

தொடர்ந்து, அரியணையில் அமர்ந்த மன்னனுக்கு பேச வார்த்தைகள் வரவில்லை. அமைதியாய் தலையில் கை வைத்தபடி தீவிர சிந்தனையில் மூழ்கினான். சில நிமிடங்கள் நிசப்தமாய்... அதே நேரம் பரபரப்பாக கழிந்தன.

அப்போது மெல்ல எழுந்தார், அவையில் இருந்த பூண்டர் (அய்யா வைகுண்டருக்கு தென்னந்தோப்பை கொடுத்து உதவியவர்தான்).

“நானும், நாஞ்சில் நாட்டு விவகாரம் தொடர்பாக தங்களிடம் பேச விரும்புகிறேன். மன்னரை சிறப்பு செய்வதற்கு பதிலாக சிறுமைப்படுத்திப் பேசுவதாக யாரும் எண்ண வேண்டாம்...” என்றார் அவர்.

“எல்லாச் செய்தியும்தான் வந்தாயிற்றே. நீ வேறு என்ன சொல்லப் போகிறாய்?” - இது மன்னன்.

“மீண்டும் மீண்டும் கோபம் வேண்டாம் மன்னா. நாஞ்சில் நாட்டின் உண்மை நிலையை மக்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் பற்றிப் பேச ஆசைப்படுகிறேன்”.

“சரி... சொல்ல வேண்டியதை உடனே சொல்லிவிட்டுச் செல்...”

“மன்னா... அந்த வைகுண்டர் வேறு யாரும் அல்ல; அந்த மகாவிஷ்ணுவின் மகா அவதாரம்தான். தாழ்த்தப்பட்ட குலத்தில் இறைவன் பிறப்பாரா? என்று தாங்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம்”.



“அப்படியென்றால், அவன் திருமால் அவதாரம் என்கிறாயா?”

“ஆமாம்!”

“என்ன... எரிகிற தீயில் எண்ணெய்விட்டுப் போக வந்திருக்கிறாயா? மகாவிஷ்ணு அவதாரம் பற்றி பேச ஆயர் குலத்தில் பிறந்த உனக்கு எவ்வளவு தைரியம் வேண்டும்? அந்த வைகுண்டனிடன் பணம் வாங்கிக் கொண்டு, அவனுக்கு ஆதரவாக என்னிடம் விவாதம் செய்கிறாயா?”

“தவறாக எண்ண வேண்டாம் அரசே! அவர் விஷ்ணுவின் அவதாரம் என்று நான் சொல்லவில்லை. நாஞ்சில் நாட்டு மக்கள்தான் சொல்கிறார்கள். அதைத்தான் தங்களிடம் சொன்னேன். உங்களது அடக்குமுறைகள் தொடர்ந்தால் நிச்சயம் வெற்றி பெறப் போவது நீங்கள் அல்ல; அந்த வைகுண்டர்தான். இதையும் நான் சொல்லவில்லை. மக்கள்தான் சொல்கிறார்கள்...” என்று பூவண்டர் சொன்ன போதே மன்னன் சுவாதித் திருநாள் குறுக்கிட்டான்.

“இவன் என் கோபத்தை அதிகரித்துக் கொண்டே போகிறான். இந்த ஏமாற்றுக்காரனை இப்போதே சிறையில் அடையுங்கள்... அதேபோல், தன்னை மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறும் அந்த வைகுண்டனையும் இப்போதே கைது செய்து என் முன்பு கொண்டு வாருங்கள்... என்று கொக்கரித்துவிட்டு, சிம்மாசனத்தில் இருந்து வேகமாக எழுந்து சென்றான், மன்னர் சுவாதி திருநாள்.

மன்னனின் இந்த அறிவிப்பு ஆதிக்க ஜாதியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியது. அதேநேரம், சாமித்தோப்பில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

“சாணான் குலத்தில் மாயன்
சார்வாரோ என்று எண்ண வேண்டாம்
பாணனாய்த் தோன்றி நிற்பார்
பறையனாய்த் தோன்றி நிற்பார்
தூண் எனத் தோன்றி நிற்பார்
தூண் எனத் தோன்றி நிற்பார்
தொலனாய்த் தோன்றி நிற்பார்
ஆண் எனத் தோன்றி நிற்பார்
அவர் உரு கேட்டிலீரோ...” - அகிலத்திரட்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக