வியாழன், 1 செப்டம்பர், 2016

அய்யாவும் ஆன்மிகமும்

இறைவன் ஒருவனே. அவன் ஒளி வடிவானவன். அவனை பலவித உருவங்களில் வழிபடுவதைவிட ஒளி ரூபமாக வழிபடுவதே சிறந்தது".

- இப்படிச் சொன்னவர், வள்ளலார் இராமலிங்க அடிகளார்.

ஒளி வழிபாட்டை உருவாக்கிய வள்ளலார், கி.பி. 1871-ம் ஆண்டுதான் வடலூரில் தனது சத்திய தருமச்சாலைக்கு அருகே ஒரு ஒளித் திருக்கோவிலை ஏற்படுத்தினார். இவர் ஏற்படுத்திய ஒளி வழிபாடு ஆன்மிக மார்க்கத்தில் ஒரு புதிய பாதையை ஏற்படுத்தியது. ஒளித் திருக்கோவிலில் அபிஷேக ஆராதனைகள் கிடையாது. தீபமும் காட்ட மாட்டார்கள். நைவேத்தியமும் இல்லை. மேள-தாளம் போன்ற ஆரவாரத்திற்கும் அங்கே இடமில்லை. கோவிலில் அபிஷேக ஆராதனை செய்ய ஆகும் செலவில் எத்தனையோ பேரது பசியை போக்கிவிடலாம் என்பார் வள்ளலார்.

1873 ஆம் ஆண்டில்தான் சத்திய ஞானசபைக்காக சன்மார்க்கக் கொடி ஒன்றினை ஏற்றி அருளுறை ஆற்றினார் வள்ளலார். அப்போதுதான்,

"அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி"

என்ற மந்திரத்தை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து, அருட்பெருஞ்ஜோதி அகவலையும் எழுதி வெளியிட்டார். மேலும், ஜோதி ரூபமான இறைவனை வழிபடுவதற்காக ஒரு வழிபாட்டு பாடலையும் உருவாக்கினார்.

ஆன்மிக மார்க்கத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய வள்ளலாருக்கு முன்பாகவே, நாஞ்சில் நாட்டில் ஆன்மிகப் புரட்சி ஏற்படுத்தியவர்தான் அய்யா வைகுண்டர். இவர் உருவாக்கிய கோவில்களில் சிலைகள் இல்லை. மாறாக, கருவறையில் ஒரு கண்ணாடியை வைத்து, அதற்கு முன்பு ஒளிரும் விளக்கு ஒன்றை வைத்தார். 'கண்ணாடியினுள் தெரியும் நீயே கடவுள். உனக்குள் சுடர்விடும் ஒளியே கடவுள்' என்ற அய்யா வைகுண்டர், உருவ வழிபாடு கூடாது என்றார். கண்ணாடியை அவ்வப்போது துடைத்து தூய்மையாக வைத்திருந்தால்தான் அதில் நம் உருவம் தெள்ளத்தெளிவாகத் தெரியும். அதுபோல், இறைவன் குடிகொண்டுள்ள நம் மனதை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது, கெட்ட எண்ணங்கள் இல்லாமல் வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், அந்த நல்ல உள்ளத்தில் இறைவன் குடியேறுவான் என்கிற தத்துவத்தையும் இந்த கண்ணாடி நமக்கு உணர்த்துகிறது.

அதன்படியே, இன்றும் ஒவ்வொரு அய்யா வைகுண்ட சுவாமி கோவிலிலும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது. இந்த கோவில்களில் நிலைக் கண்ணாடிக்கு முன்பாக அய்யாவின் திருமேனியை உருவம் இல்லாது வைத்து வழிபடுகிறார்கள்.



இங்கே பின்பற்றப்படும் வழிபாட்டு முறைகளும் வித்தியாசமானவை. பிற கோவில்களில் பின்பற்றப்படும் தீப ஆராதனைகள் இங்கு கிடையாது. தேங்காய் உடைக்க மாட்டார்கள். அதை, உடைத்து சாமிக்கு படைப்பது உயிர்ப்பலி கொடுப்பதற்கு சமமாக கருதப்படுவதால் அவற்றைத் தவிர்க்கிறார்கள். சூடகம், சாம்பிராணி, ஊதுவத்தி போன்றவற்றுக்கும் இங்கு இடம் கிடையாது.

இந்த கோவிலுக்கு வருபவர்கள் வெற்றிலை, பாக்கு, மல்லிகைப்பூ, துளசி, பிச்சிப்பூ, பன்னீர், முழு எலுமிச்சம்பழம் ஆகியவற்றை மாத்திரமே கொண்டு வருகிறார்கள். இவை அவர்களுக்கு திரும்பக் கொடுக்கப்படுவது கிடையாது. எல்லாப் பக்தர்களுக்கும் பிரசாதமாக பகிர்ந்தளிக்கப்படுகிறது. ‘காணிக்கை கூடாது’ என்று அய்யாவே சொல்லி இருப்பதால், இந்தக் கோவில்களில் உண்டியல்களை பார்க்க முடியாது.

ஆன்மிகம் குடும்ப வாழ்க்கையின் ஒரு அங்கம்தான் என்பதையும் அய்யா வைகுண்டர் அழகாக குறிப்பிடுகிறார். இல்லறத்தை துறந்து இறைக்கடன் செய்வது முட்டாள்த்தனம் என்று சாடுகிறார் அவர். தருமம் செய்வதை எல்லோரும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வற்புறுத்துகிறார். ‘இயலாதவர்களுக்கு நீ உதவி செய்தாலே, உனக்குள் இருக்கும் இறைவன் உள்ளம் மகிழ்வான்’ என்கிறார் அய்யா. "காணிக்கை வேண்டாதுங்கோ
கைக்கூலி கேளாதுங்கோ
மாணிக்க வைகுண்டம் வல்லாத்தான் கண்டிருங்கோ
பூஜை ஏறாதிருங்கோ
பெலி தீபம் ஏராதுங்கோ
ஆசை வையாதுங்கோ
அவகடம் செய்யாதுங்கோ
ஞாயமுறை தப்பி நன்றி மறவாதுங்கோ
மாய நினைவு மனதில் நினையாதுங்கோ
வைகுண்டா என்று மனதில் நினைத்திருங்கோ...

பொய்கொண்ட தேரோட்டம் புணக்காரம் ஏராதுங்கோ
தாதிக் கை காட்டல் சப்பிரங்கள் ஏராதுங்கோ
மோதிப்பேசாதுங்கோ மோகம் பாராட்டாதுங்கோ
ஆலத்தி கைவிளக்கு ஆராட்டு பாராதுங்கோ
சாலத்தீ பாராதுங்கோ சகல பூ ஏராதுங்கோ...

கொழுந்து மஞ்சண மாலை, குப்பையுடன் சந்தனமும்
விழுந்து நமஸ்காரம் முதல் வேண்டாமென்று சொல்லிடுங்கோ
கூ என்று உரையாதுங்கோ கொக்கரித்துப் பேசாதுங்கோ
ஓ என்று உரையாதுங்கோ ஓம முறை ஏராதுங்கோ
தீபரணை காணாதுங்கோ திருநாளைப் பாராதுங்கோ..."

- இப்படி, அன்றைய வழிபாட்டு முறைகளை கண்டித்ததோடு, எதையெல்லாம் செய்ய வேண்டும் என்பதையும் அழகாக குறிப்பிடுகிறது அய்யாவின் அகிலத்திரட்டு.

உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கமும் அய்யா வழி ஆன்மிக மார்க்கத்தில் கிடையாது. எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டுங்கள் என்பது அய்யா வாக்கு.

திருவிதாங்கூர் மன்னன் விதித்த தண்டனைகளை வென்று சாமித்தோப்பு திரும்பும் வழியில் ஒரு கிராமத்தின் வழியாக அய்யா வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு நிறைய ஆடுகளை கூட்டமாக ஓரிடத்தில் அடைத்து வைத்திருந்தனர். அவற்றின் ம்மே... ம்மே... கதறல், உதவி கேட்பது போல் இருந்தது. உடனே, அந்த ஆடுகள் ஏன் ஒரே இடத்தில் மொத்தமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளன என்று விசாரித்தார். கோவில் திருவிழாவில் பலி கொடுப்பதற்காக அவை அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள், அந்தக் கிராமமக்கள்.

அதை ஏற்றுக்கொள்ள விரும்பாத அய்யா, ஊர்ப் பெரியவர்களை அழைத்தார். உயிர் பலியிடுவது மன்னிக்க முடியாத குற்றம் என்ற அவர், உயிரின் மேன்மையை சிறிது நேரம் அவர்களுக்கு விளக்கினார். அவரது உபதேசத்தில் அந்தக் கிராமமக்கள் மனம் மாறினர். பலியிட அடைத்து வைத்திருந்த ஆடுகளை அவிழ்த்து விட்டனர். பலியிடுவதற்குப் பதிலாக மாவு உருண்டைகளைப் படைத்து வழிபட்டனர்.

மேலும், ஆன்மிக மார்க்கத்தில் போலிச்சாமியார்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் கூறுகிறார் அய்யா. இந்தப் போலிகள், மாய மந்திரங்கள் செய்து மக்களை மயக்கி விடுவார்கள் என்கிறார் அவர்.

“நந்தன் நான் என்பான்
நாரணுக்கோன் ராமன் என்பான்
முன் உதித்து வந்தவர்க்கெல்லாம்
முன் உதித்து வந்தேன் என்பான்
கண்ட கண்ட அற்புதங்கள்
காணக் கோடி செய்திடுவான்
இந்தப் பேரோ என்றிடுவீர்
சூட்சுமம் அறியாமல் தொல்புவி மயங்கும்...”



என்று, போலிச்சாமியார்களை பற்றியும், அவர்களை நம்பினால் கடைசியில் என்ன ஆகும் என்பது பற்றியும் அழகாக குறிப்பிடுகிறது அகிலத்திரட்டு. மேலும் பல வித்தியாசமான நடைமுறைகளும் அய்யா வழி ஆன்மிக மார்க்கத்திலும், அவர்கள் வழி சமூகத்திலும் பின்பற்றப்படுகின்றன. அவற்றில் சில...

1. அய்யா வழி திருமணங்களில் வேத விற்பன்னர்களுக்கு இடமில்லை. அவர்கள் சமூக பெரியவர் ஒருவரே குருவாக இருந்து திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

2. அய்யா தருமபதிகளில் விளக்கு மற்றும் நிலைக்கண்ணாடி வைத்து வணங்கும் அய்யா வழி மக்கள், வீடுகளில் விளக்கேற்றி, அதன் ஒளியை இறைவனாக வணங்குகிறார்கள். மாலை நேரத்தில் அகிலத்திரட்டு வாசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

3. அய்யா வழி கோவில்களுக்குள் நுழையும் ஆண்கள் சட்டை அணிந்திருக்கக் கூடாது. ஆனால், திருமணத்தன்று திருமணம் முடிந்த கையோடு கோவிலுக்கு வரும் மணமகன் மட்டும் சட்டை அணிந்து கொள்ளலாம்.

4. பருவ வயதை அடையும் பெண்களை, ருதுவான 41 நாட்களுக்கு பிறகு அய்யா கோவிலுக்கு அழைத்து வருகிறார்கள். அங்கு, குருவானவர் 5 முறை அந்தப் பெண்ணின் முகத்தில் பதம் (தீர்த்தம்) தெளித்து ஆசி வழங்குகிறார்.

5. கணவன் இறந்த பிறகு தாலியைக் கழற்றும் வழக்கம் அய்யா வழி மார்க்கத்தில் இல்லை. கணவனை இழந்த பெண் மறுமணம் செய்து கொள்வதையும் அய்யா வழி வரவேற்கிறது.

6. அய்யா கோவிலில் சுருள் கொடுத்தல் என்பது சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. வேண்டுதல் நிறைவேறிய ஒருவர், வாழைத்தார், எலுமிச்சை, பன்னீர், வெற்றிலை, பாக்கு, முழுத்தேங்காய், பிச்சிப்பூ, விளக்கேற்றத் தேவைப்படும் எண்ணெய் வாங்கத் தேவைப்படும் பணம் ஆகியவற்றை வழங்குவதற்கு பெயர்தான் சுருள் கொடுத்தல் என்று பெயர்.

7. அய்யாவின் பிறந்தநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்றைய தினம் ஒவ்வொரு அய்யா வழி தருமபதிகளிலும் சிறப்பு வழிபாடுகள், அன்னதானங்கள் நடைபெறுகின்றன.

8. அய்யாவின் தருமபதிகளில் தலைமைபதி அய்யா அவதரித்த சாமித்தோப்புதான். அய்யாவின் காலடிபட்டு புனிதம் பெற்ற தாமரைக்குளம் பதி, முட்டப்பதி, அம்பலப்பதி, பூப்பதி, துவாரகாபதி போன்ற பதிகளும் சிறப்பு பெற்றவை. இவற்றோடு, சென்னை புறநகரான மணலி புதுநகரில் உள்ள பிரம்மாண்ட அய்யா வைகுண்டர் தருமபதியும் சிறப்பு பெற்றது.

9. அய்யாவின் அவதார நாள் ஒவ்வொரு பதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வைகுண்டர் முத்துக்குட்டியாக, முடிசூடும் பெருமாளாக பிறந்த ஏப்ரல் 19 ஆம் தேதி இந்த விழா நடைபெறுவதில்லை. மாறாக, திருச்செந்தூர் கடலில் மூழ்கி வைகுண்டராக அவதரித்த மாசி மாதம் 20 ஆம் தேதிதான் (கி.பி. 1832 மார்ச் மாதம் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை) அவரது அவதார நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினம் சாமித்தோப்பு தலைமைபதியில் நடைபெறும் விழா மிகவும் பிரபலம். லட்சக்கணக்கான அய்யா வழி பக்தர்கள் அதில் கலந்து கொள்வார்கள். 10. இதே போல், வைகாசித் திருவிழாவும் புகழ்பெற்றது. 11 நாட்கள் நடைபெறும் அந்த விழாவின் 8 ஆம் நாள் வைகுண்டர் கலியை வெல்லும் கலி வேட்டை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

11. எந்தவொரு செயலைச் செய்தாலும், ‘அய்யா உண்டு’ என்று சொல்லும் வழக்கம் இந்த மார்க்க மக்களிடம் உள்ளது. அய்யாவின் மீது அவர்கள் கொண்டுள்ள பற்றுதலையே இது காட்டுகிறது.

12. பொங்கல், சுண்டல், புளியோதரை... போன்றவை இந்துக் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படும். ஆனால், அய்யா வழி கோவில்களிலும் இந்த பிரசாதமும் வித்தியாசமாகவே வழங்கப்படுகிறது. சிறுபயிறு, வற்றல், பச்சரிசி கொண்டு செய்யப்படும் ‘நித்தப்பால்’, பச்சரிசி கொண்டு செய்யப்படும் ‘தவனக்கஞ்சி’, அரிசி, மிளகாய், வாழைக்காய், கத்தரி, பூசணிக்காய், இளவங்காய் கொண்டு செய்யப்படும் கூட்டாஞ்சோறான ‘உம்மான்சாதம்’ ஆகியவையே இங்கு வழங்கப்படும் பிரசாதங்கள்.

13. தருமம் பற்றி இந்த மார்க்கத்தில் அதிகமாக வலியுறுத்தப்படுவதால், இந்தக் கோவில்களுக்கு வரும் பக்தர்கள் எல்லோருமே தங்களால் முடிந்த அன்னதானம் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அன்னதானம் வழங்கத் தேவைப்படும் சமையல் பொருட்களும் அவற்றில் அடங்கும்.

14. ‘அய்யா... நாங்கள்... அறிஞ்சி அறியாமல் செய்ததெல்லாம்... அய்யா பொறுக்கணும்...’ என்று 5 முறை சொல்லி வாயில் அடித்து அய்யா வழி பக்தர்கள் வழிபடுவது, மற்றவர்களுக்கு விநோதமாக தெரிந்தாலும், இவர்களின் அனைத்துப் பழக்க வழக்கங்களிலும் ஆழ்ந்த பொருள் உள்ளது. அய்யாவின் தருமபதிகளுக்கு ஒரு முறையேனும் சென்று, அங்குள்ள வழிபாட்டு முறைகளை சற்று உன்னிப்பாகக் கவனித்தால், ‘இந்தக் கலிகாலத்தில் இப்படியொரு மார்க்கமா?’ என்று ஆச்சரியத்தில் மூழ்கிப் போவீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக