புதன், 26 நவம்பர், 2014

தவமும் போதனைகளும்

ய்யாவின் தவமும் போதனைகளும்
முத்துக்குட்டி கடலுற்சென்று வைகுண்டம் கண்டு மீண்டு வைகுண்டப்
பண்டாரமாய் தென்னகம் நோக்கி நடக்கலானார். தன் தாய்க்கு மட்டுமே
வைகுண்டத்தின் காட்சியைக் காண்பித்து அதை யாருக்கும் உரைக்க வேண்டாம்
என்று கூறிவிட்டு தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
தனது பிறப்பிடத்திற்கு அவர் சென்ற போது அவரை எதிர்த்தவர்கள் பலர்.
ஆயினும் பூவண்டர் எனும் இடையர் தனது தென்னந்தோப்பை அய்யாவுக்குக்
கொடுத்தார். அய்யாவும் அத்தென்னந்தோப்பை மகிழ்வுடன் ஏற்றார். அனைத்தையும்
துறந்து வைகுண்டப் பண்டாரம் அத்தோப்பில் தனது தவவாழ்க்கையை ஆரம்பித்தார்.
அதிகாரத்தந்தை அவதார மகனுக்கு இட்ட கட்டளையே இந்த தவ வாழ்க்கை என்று கூறி
ஆறு ஆண்டுகள் தவம் செய்தார்.
முதல் இரு ஆண்டுகள் கலியுகம் அழிந்து தரும யுகம் தோன்றுவதற்காகவும்,
இரண்டாம் இரு ஆண்டுகள் சாதிக்கொடுமைகள் நீங்கவும், மூன்றாம் இரு ஆண்டுகள்
பெண்ண்டிமை தீர்வதற்கும், நல்ல வழிமுறைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவும்
என்றுரைத்தார். இதனை அவரே
"முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே
தத்தமுள்ள இரண்டாம் தவசு சாதிக்காமே
மூன்றாம் தவசு முன்னுரைத்த பெண்ணாட்கும்
நன்றான முற்பிதிரு நல்ல வழிகளுக்கும்"
என்று பாடுகின்றார்.
அய்யாவின் முதல் இருஆண்டுகள்  தவ வாழ்க்கை ஆறு அடி ஆழமுள்ள பள்ளத்தில்
நிகழ்ந்தது. இரண்டாம் இரு ஆண்டுகள் தவவாழ்க்கையை வீராசனம் இட்டுத்
தரைமேல் நிகழ்த்தினார். மூன்றாம் இருஆண்டுகள் தவமோ கடுமையான மௌனதவம்.
இதனை ஓர் பீடத்தை அமைத்து அதன் மேல் அமர்ந்து நிகழ்த்தினார்.
அய்யா தனது தவ வாழ்க்கையின்போது பச்சரிப் பாலை மட்டுமே அருந்தினார்.
வைகுண்டர் உரைத்த ஆறு ஆண்டுகள் தவவாழ்க்கை முடிவுற்றது.. அய்யா தவமிருந்த
காலத்தில் அவரைத்தேடி பதினெட்டு சாதி மக்களும் வந்து கொண்டிருந்தனர்.
இதனைக் கண்ட அய்யா இவர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்று
எண்ணங்கொண்டார்.
அந்த சமயத்தில் பொதுக்கிணற்றில் வருணாசிரமத்தைச் சாராத இந்த பதினெட்டு
சாதியினருக்கும் தண்ணீரெடுக்க அனுமதியில்லை.. எனவே தனது பூவண்டன்
தோப்பில் ஓர் கிணற்றை ஏற்படுத்தினார். அது முந்திரி கிணறு என்றழைக்கப்
பட்டது. அந்த கிணற்றை பொதுமக்கள் தங்கள் பயன்பாட்டிற்கு
பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தார்.
தன்மானம் மட்டுமே கலியை அழிக்கவல்ல ஆயுதம் என்று அய்யா போதித்தார்.
"தன்மானத்தைத் தாங்கியிரு என் மகனே" என்று பாடினார்.
ஆதிக்க சாதிகளின் ஆலயத்துக்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கப் பட்டிருந்த
காலம் அது. தாழ்த்தப் பட்டோர் சிறு தெய்வ வழிபாடுகளில்
ஈடுபட்டிருந்தார்கள். இதை அய்யா எதிர்த்தார். திருமால் ஒருவனே தெய்வம்,
அவனை விடுத்து வேறு பேய் பிசாசுகளை வணங்க வேண்டாம் என்று
அறிவுறுத்தினார். ஆதிக்க சாதிகளின் ஆலயத்துக்குள் நுழைவோர் மேலாடை
கழற்றி, இடுப்பில் துண்டு கட்டி வழிபாடு நிக்ழ்த்தினர். ஆனால் அய்யா தனது
பதிக்கு வரும் அன்பர்களை மேலாடை அணிந்து வரச்செய்தார். தலைக்குத் பாகைக்
கட்டி தன்மானத்தோடு வா என்றுரைத்தார்.
ஆதிக்க சாதிகளின் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்களைப் போன்று
தாழ்த்தப்பட்டோரும் திருவிழாக்களைக் கொண்டாடி வந்தனர். வழிபாட்டின்
பேரில் பணத்தை விரயம் செய்யாதீங்கோ என்றுரைத்த அய்யா கடவுளின் பெயரால்
பணத்தைக் கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது என்றுரைத்தார்.
உருவ வழிபாட்டை அய்யா மிகக்கடுமையாக எதிர்த்தார். இறைவன் அன்பு வடிவானவன்
என்றும் அவன் அனைவருள்ளும் இருக்கின்றான் என்றும் உரைத்த அய்யா தனது
பதியின் பள்ளியறையில் ஓர் கண்ணாடியை மட்டும் நிறுவினார். உன்னிலே
இறைவனைக் காண் என்பது அதன் மறை பொருள்.
நியாயம் தவறாமல் நேர்மையோடு யாருக்கும் அஞ்சாத வாழ்க்கை வாழ்வதே
இறைவனுக்குப் பிரியமானது என்றுரைத்த அய்யா அதன்படி வாழும்படி தன்
மக்களுக்குப் போதித்தார்.
அய்யா தனது வழியை அன்பு வழி என்று அழைத்தார். தன் மக்களை அன்புக்கொடி
மக்கள் என்றழைத்தார். இது போன்று புதுமையான கருத்துக்களை அய்யா
மொழிந்ததால் நாள்தோறும் அவரைக்காண வரும் பக்தர்களின் கூட்டம்
அதிகரித்தது. அதே சமயத்தில் வைதீக மதத்தின் ஆடம்பர வழிபாட்டு முறைகளுக்கு
அய்யாவின் உரைகள் ஓர் சம்மட்டியாக விழுந்தது.
தன்னைத் திருமாலின் அவதார மகன் என்றுரைத்தது ஆதிக்க சாதியினருக்குப்
பிடிக்கவில்லை. மகாவிட்ணுவின் அவதாரம் என்று கூறி மக்களைத்
திசைதிருப்புகின்றார் என்ற குற்றச்சாட்டு அய்யாவின் மேல் சுமத்தப்
பட்டது.
மேலும் கிறித்தவர்களாக மதம் மாறத்துவங்கிய காலக்கட்டத்தில் மதமாற்றத்தைத்
தடுத்து நிறுத்தியதும் அய்யாவின் செயல்தான். ஆனாலும் தனது போதனைகளில். இதனால்
கிறித்தவப் பாதிரிமார்கள் ஆத்திரம் அடைந்தனர். அய்யாவைப் பற்றிய
அவதூறுகளைப் பரப்பத் துவங்கினார்.. ஆனாலும் அய்யா எதைப் பற்றியும் கவலை
கொள்ளவில்லை. தனது பணியை செவ்வனே செய்தார்.
தாழ்த்தப்பட்ட பதினெட்டு சாதியினருக்குள்ளும் ஏற்றதாழ்வுகள் இருந்தன.
இதனை முதலில் களைய வேண்டும் என்று எண்ணிய அய்யா சமபந்தி போஜனத்தை
ஆரம்பித்து வைத்தார். முதலில் மறுத்த பலரும், அய்யாவின் அருளுரைகள்
கேட்டுத் திருந்தி ஒற்றுமையாக உணவருந்தினர்.
அச்சமயத்தில் ஏற்கெனவே உரைத்தது போல் தாழ்த்தப்பட்ட சாதியின் பெண்கள்
மேலாடை அணிய அனுமதியில்லை.. இதனை எதிர்க்க அய்யா நிகழ்த்திய தோள்சீலைப்
போராட்டத்தைப் பற்றி அடுத்த மடலில் காண்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக