புதன், 26 நவம்பர், 2014

முத்திரி கிணறு :

நாகர்கோவில்- கன்னியாகுமரி சாலையில், சுசீந்திரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது ஈத்தங்காடு என்னும் ஊர். இங்கிருந்து 3 கி.மீ. பயணித்தால் சாமித்தோப்பை அடையலாம். இயற்கை எழில் கொஞ்சும் தென்னந்தோப்புகள் நிறைந்த இந்த அழகிய கிராமம், இந்தியா முழுக்கப் பரவி வியாபித்துள்ள சுவாமி அய்யா வைகுண்டரின் தருமபதிகளுக்கு எல்லாம் தலைமைப்பதியாகத் திகழ்கிறது.
முத்திரி கிணறு :
அய்யா வைகுண்டரின் தருமபதிக்குள் நுழைவதற்கு முன்பாக, அய்யா உருவாக்கிய முத்திரிக் கிணற்றில் நீர் இறைத்து நீராடி, அந்தக் கிணற்றை வலம் வந்து வழிபட்ட பிறகே தருமபதிக்குள் அடியெடுத்து வைக்க வேண்டும். எந்தவித வேறுபாடும் இன்றி எல்லா மக்களும் பயன்படுத்துவதற்காக அய்யா வைகுண்டர் ஏற்படுத்திய பொதுக்கிணறுதான் இந்த முத்திரிக் கிணறு.
முத்திரி என்றால், ‘உத்தரவாதம் தருதல்’ அல்லது ‘நியமித்தல்’ என்று பொருள். அய்யா வைகுண்டரின் தருமபதி எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் முத்திரிக் கிணறு இருக்கும்.
தர்மபதி:
முத்திரிக் கிணற்றில் புனித நீராடிவிட்டு, அய்யா வைகுண்டரின் தருமபதியை நோக்கிச்சில அடிகள் எடுத்து வைத்ததும், தகதகக்கும் பொன்வாசல் பளிச்சிடும். உள்ளே நுழைந்த உடன் அய்யா வைகுண்டர் தவம் இருந்த வடக்குவாசலை “சிவசிவ சிவசிவா அரகர அரகரா” என்று உச்சரித்து 5 முறை சுற்றி அய்யாவிடம் மாப்பு கேட்டு, ஏழு நிலை ராஜகோபுரம் தாண்டி, தருமபதியின் கிழக்குப் பார்த்த முகப்பு வாசலை அடைய வேண்டும்.. முகப்பு வாசலில் இருந்தே அய்யா வைகுண்டரைத் தரிசிக்கலாம்.
கொடிமரத்தைக் கடந்து தியான மண்டபத்தை அடைந்ததும், அய்யா வைகுண்டரை மிக அருகில் தரிசிக்கலாம்.
பொதுவாக, கோயில்களில் தெய்வங்களை அழகுத் திருமேனிகளில் பார்த்துப் பழக்கப் பட்டிருப்போம். ஆனால், இங்கே அய்யா வைகுண்டரின் திருமேனி முற்றிலும் வித்தியாசமானது. ஒரு நாற்காலியில் அய்யா வைகுண்டர் இருப்பதாக பாவித்து, அவர் பயன் படுத்திய பொருட்களை மாத்திரமே வைத்து வழிபடுகிறார்கள்.
நிலைக் கண்ணாடி:
நாற்காலிக்குப் பின்புறம் ஆளுயர நிலைக்கண்ணாடி இருக்கிறது. ‘நீ தேடும் இறைவன் உனக்குள்ளேயே இருக்கிறான்’ என்பது அய்யா வைகுண்டரின் வாக்கு. அதனாலேயே இப்படியரு வழிபாட்டு முறை! நிலைக் கண்ணாடி முன்பு தீபத்தை ஏற்றிவைத்து, இந்த வழிபாட்டு முறையை ஆரம்பித்து வைத்தவரும் அவரே! ‘கண்ணாடியினுள் தெரியும் நீயே கடவுள். உனக்குள் சுடர்விடும் ஒளியே கடவுள்’ என்பதும் அய்யா வைகுண்டரின் வாக்கு.
உருவ வழிபாடு வேண்டாம் என்பது அய்யா வைகுண்டரின் விருப்பம் என்பதால், அதன்படியே சாமித்தோப்பு உள்ளிட்ட அய்யா வைகுண்டரின் எல்லாத் தருமபதிகளிலும் இந்த வழிபாட்டு முறையே பின்பற்றப்படுகிறது.
அய்யா வைகுண்டரின் பள்ளியறையை வலம் வரும் வழியில் அய்யா வைகுண்டர் மானிட அவதாரத்தில் பயன்படுத்திய கட்டில் வைக்கப்பட்டுள்ள அறையைக் காணலாம்.
பள்ளியறை தரிசனம் முடித்ததும், மறுபடியும் தியான மண்டபம் வழியாக வந்து, தருமபதியின் உள் பிராகாரத்தை வலம் வரலாம். அவ்வாறு வலம் வருகையில், கேரள கட்டடக்கலை முறையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் கருவறையின் பொன் விமானத்தைத் தரிசிக்கலாம்.
தருமபதி மட்டுமல்ல, இங்கே பின்பற்றப் படும் அத்தனை வழிபாட்டு முறைகளும் வித்தியாசமானவை.
தீப ஆராதனை கிடையாது. தேங்காய் உடைக்க மாட்டார்கள். தேங்காயை இங்கே உடைப்பது உயிர்ப் பலி கொடுப்பதற்குச் சமம் என்பதால், அப்படிச் செய்வதில்லை. கற்பூரம், சாம்பிராணி, ஊதுவத்தி ஆகியவற்றுக்கும் இங்கே இடமில்லை.
அப்படியென்றால், தருமபதிக்கு வரும்போது என்னதான் கொண்டு வரவேண்டும் என்கிறீர்களா?
வெற்றிலை- பாக்கு, மல்லிகைப்பூ, துளசி, பிச்சிப்பூ, பன்னீர், முழு எலுமிச்சைப் பழம் ஆகியவற்றைக் கொண்டு வந்தால் போதும். இவை, அவற்றைக் கொண்டு வருவோருக்குத் திரும்பத் தரப்படமாட்டாது. மாறாக, இப்படி எல்லா பக்தர்களும் கொண்டு வரும் அனைத்துப் பொருள்களும் வழிபாட்டுக்குப் பிறகு, பிரசாதமாக அனைவருக்கும் சரிசமமாகத் தரப்படும்.
‘காணிக்கை வேண்டா(து)ங்கோ…’
என்று அய்யா வைகுண்டரே சொல்லியிருப்பதால், தருமபதிகளில் உண்டியல்கள் கிடையாது. இங்கே பிரதானமாக வலியுறுத்தப்படுவது… ‘உங்களால் முடிந்த தருமத்தைச் செய்யுங்கள்’ என்பதுதான்.
‘தருமம் செய்து தழைத்திருங்கோ…’ 
என்பது அய்யா வைகுண்டரின் வாக்கு என்பதால், இங்கே வரும் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த தருமத்தைச் செய்கிறார்கள். அதாவது, தருமபதிகளில் நடைபெறும் அன்னதானத்துக்குத் தேவையான, தங்களால் முடிந்த நிதி உதவியை மனமுவந்து தரும் பக்தர்கள் இங்கு நிறையப் பேர்.
அய்யா வைகுண்டரைத் தேடி வந்து வழிபட்டால், நாம் நினைத்ததைச் சத்தியமாய் நிறைவேற்றித் தருவார் நம் அய்யா. அனைவரும் சாமித்தோப்பு சென்று அய்யா வைகுண்டரின் திருப்பாதம் பணிந்து வணங்கி, அவர் அருள்பெற்று வருவோம்!
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக