புதன், 24 செப்டம்பர், 2014

பணிவிடைக்காரர்:

அய்யாவழிப் பதியில் பூஜை செய்பவர்களை பணிவிடைக்காரர் என்றே அன்புக்கொடி மக்கள் அழைக்கின்றனர்.

இனிமம்:

அன்புக்கொடி மக்களுக்கு பணிவிடைக்காரர்களால் வழங்கப்படும் இறைவனுக்கு நேமித்த பொருட்கள் (வெற்றிலை, பாக்கு, பழம், எலுமிச்சங்கனி, தேங்காய், பூ இன்ன பிற) இனிமம் என்று சொல்லப்படுகிறது.
 

பிச்சைப் பாங்கு:

அகிலத்திரட்டில் பிச்சை எடுத்தலைப் பற்றியும், பிச்சை கொடுத்தலைப் பற்றியும் அதிகமாகப் பேசப்பட்டுள்ளன. பெரும்பாலான அய்யாவழிப் பதிகள் பிச்சை எடுத்து ஈட்டிய பொருள் கொண்டே இயங்குகின்றன. பதியில் நேமித்த பொருட்களை (பூஜையில் வைத்த) பணிவிடை நிறைவுற்ற பின் தருமம் செய்வர். உதாரணத்துக்கு தலைக்கு ஒரு வாழைப்பழம் வீதம் வழங்குவதாகக் கொள்வோம். இவ்வாறு பதியில் ஒரு தனி மனிதன் பெறும் தலைவீதப் பாங்கு பிச்சைப்பங்கு என்று அழைக்கப்படுகிறது.
 

திருநாமம்:

அன்புக்கொடி மக்கள் வெள்ளைநிற மண்ணை எண் ஒன்றின் வடிவில் நேராக நெற்றியில் அணிந்து கொள்வதை திருநாமம் பூசுதல் என்று சொல்லுகின்றனர். அன்புக்கொடி மக்களின் நெற்றியைத் தொட்டு பணிவிடைக்காரர்கள் திருநாமம் இடுகின்றனர். குறுக்காகப் பூசும் வீபூதிப் பூச்சு, சந்தணப்பொட்டு, குங்குமப்பொட்டு, வைணவர்களின் திருமண் அணிதல் போன்றவற்றுக்கு மாற்றாக இது உள்ளது.

விளக்கு நேமித்தல்:

அன்புக்கொடி மக்கள் அதிகாலையிலும் அந்திவேளையிலும் திருவிளக்கேற்றி வைத்து உகப்பாட்டு என்ற வழிபாட்டு பாடல் படித்து இறைவணக்கம் செய்கின்றனர். இச்செயல் விளக்கு நேமித்தல் என்று சொல்லப்படுகிறது. கிருத்தவர்களின் ஜெபம் செய்தல், இசுலாமியரின் தொழுகை நடத்துதல், உயர் சாதியினரின் சாம்புராணி திரி கொளுத்தி வணங்குதல் போன்றவற்றுக்கு மாற்றாக விளக்கு நேமித்தல் உள்ளது.

தாரை நாமம்:

அய்யா வைகுண்டர் மரபின் சின்னம் என்று இதனைக் கூறலாம். ஞானியரின் யோகநிலையில் ஆயிரம் இதழ்கொண்ட தாமரைப்பூ மேல் (நெற்றிப்பொட்டு என்பர்) தீப ஒளி நிற்பதைப் போல (இறைவன்) வீற்றிருப்பான் என்பதன் அடையாளமே தாரைப்பூமேல் நாமம் என்ற சின்னமாகும்.
 

அன்புக்கொடி

அய்யாவைகுண்டரை அன்புக்கொடி மக்கள் அய்யா என்றே அழைத்தனர். இன்றும் அவ்வாறே சொல்கின்றனர். தன்னை நாடிவந்த அன்புக்கொடி மக்களை அய்யாவைகுண்டரும் அய்யா என்றே அழைத்தார். எதிர்படுகின்ற மனிதனை அய்யாவைகுண்டரின் பிரதிபிம்பமாகவே (கண்ணாடியில் தோன்றும் பிம்பம் போல) அன்புக்கொடி மக்கள் கருதுகின்றனர். அதனால்தான் அய்யா என்று ஆச்சாரமாக (அய்யா வாங்க, அய்யா உட்காருங்க) ஒருவருக்கொருவர் பேசிக்களிக்கின்றனர்.
 
அன்புக்கொடிமக்கள் எச்செயலையும் அய்யா உண்டு என்று கூறி தொடங்குவதையும் அய்யா உண்டு என்றுகூறி நிறைவு செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். பதியின் முகப்பிலும் இல்லத்து முன் அறைகளிலும், புத்தகங்களின் முற்சொல்லிலும் அன்புக்கொடி மக்கள் அய்யாதுணை என்று பொறிப்பதைப் பார்க்க முடிகிறது.