வெள்ளி, 15 மே, 2015

திருநெல்வேலி மாவட்டம்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒன்றாகத் திகழும் திருநெல்வேலி மாவட்டத்தைக் கன்னியாகுமரி மாவட்டத்தோடு ஒப்பிடுகிறபோது தாங்கல்களின் வளர்ச்சி என்பது சிறப்பாக உள்ளது. இங்கு நாடார் இன மக்களுக்கு இணையாக பிற இனத்தவர்களும் ( பறையர், பள்ளர்) தாங்கல்களை ஏற்படுத்தி அய்யா வைகுண்டரை வழிபட்டு வருகின்றனர்.
     திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் பதினோரு தாலுகாக்கள் அமைந்துள்ளன. அவை,
1)      ஆலங்குளம்
2)      அம்பாசமுத்திரம்
3)      நாங்குநேரி
4)      பாளையங்கோட்டை
5)      இராதாபுரம்
6)      சங்கரங்கோயில்
7)      செங்கோட்டை
8)      சிவகிரி
9)      தென்காசி
10)   திருநெல்வேலி
11)   வீரகேரளம் புதூர் என்பன.
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தாலுகாக்களில் பரவலாகத் தாங்கல்கள் அமைந்தள்ளன. மேற்கண்ட தாலுகாக்களில் இராதாபுரம் தாலுக்கா ( பறையர், பள்ளர்கள்), நாங்குநெரி தாலுக்கா (தேவர்கள், பறையர்கள்), போன்ற தாலுகாக்களில் பிற இனத்தவர்கள் அதிகமானத் தாங்கல்களை ஏற்படுத்தியுள்ளனர்.
தாங்கல்கள் அனைத்தும் தலைமைப் பதியான சுவாமித்தோப்புப் பதியைப் பின்பற்றியே செயல்படுகின்றன. தாங்கல்களில் பணிவிடைகளை மேற்கொள்பவர்கள் வாரம் ஒருமுறையோ, மாதம் ஒருமுறையோ தங்கள் வசதிக்கேற்றவாறு தலைமைப் பதிக்குச் சென்று வருகின்றனர். அவதார தின விழாவிற்கு அனைவரும் கண்டிப்பாக தலைமை பதிக்குச் சென்று அய்யா வைகுண்டரை வழிபடுவதை தங்கள் வாழ் நாள் கடமையாக்க் கருதுகின்றனர். ஏனைய திருவிழாக்களின்போதும் வசதிக்கேற்றவாறு தலைமைப் பதிக்குச் சென்று அய்யா வைகுண்டரை வழிபடுகின்றனர். அவ்வாறு செல்ல இயலாதவர்கள் தாங்கல்களிலேயே தங்கள் வழிபாட்டைச் செய்கின்றனர். தலைமை பதியையே தங்கள் புனித்த் தலமாகக் கருதகின்றனர்.
     திருநெல்வேலி மாவட்டத்தில் தாங்கல்கள் அய்யா வைகுண்டரின் கொள்கைகளைப் பரப்பும் இடங்களாகவும், தர்மச் சாலைகளாகவும், மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இடங்களாகவும், சாதி, இனம் கடந்து மனித நேயத்தை வளர்க்கும் இடங்களாகவும் விளங்குகின்றன என்பதில்  ஐயமில்லை. காரணம் கன்னியாகுமரி மாவட்டத்தோடு ஒப்பிடுகிறபோது இங்கு மட்டுமே அதிகம் தலித்துகள் தாங்கல்களைத் தொடங்கி அய்யாவின் புகழைப் பரப்பி வருகின்றனர் எனலாம். பல தாங்கல்களில் கணக்குச் சொல்லுவது சிறப்பிடம் பெறுகின்றது.. சில தாங்கல்களில் கணக்குக் கூறுவதில்லை.
     தாங்கல்களில் நடைபெறும் வழிபாடுகளை நான்காக வகை செய்யலாம். அவை,
1)      தினப் பணிவிடை
2)      வாரப் பணிவிடை
3)      மாதப் பணிவிடை
4)      ஆண்டுப் பணிவிடை ( திருவிழா ) என்பனவாகும்.
1)    தினப் பணிவிடை
    பதிகளைப் போன்றே அனைத்துத் தாங்கல்களிலும் தின வழிபாடு நடைபெறுகின்றது. சில தாங்கல்களில் அவற்றின் வசதிக்கேற்ப தின வழிபாடு காலை, நண்பகல், மாலை என மூன்று வேளையும், சில தாங்கல்களில் காலை, மாலை என இரண்டு வேளையும் நடைபெறுகின்றன. பல தாங்கல்களில் காலை அல்லது மாலை என அவர்களின் வசதியைப் பொறுத்து ஒரு வேளை மட்டுமே தின வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது. .வ்வாறு ஒரு வேளை மட்டுமே தின வழிபாடு நடைபெறும் தாங்கல்களில் தனியாகப் பணிவிடைக்காரர்கள் இருப்பதில்லை. அங்கு தாங்கல்கள் நிறுவிய அன்பர்களே பணிவிடைக்காரர்களாகச் செயல்படுகின்றனர். இவர்களில் பலர் கூலி வேலை பார்ப்பவர்களாகவும் அரசாங்க வேலை பார்ப்பவர்களாகவும் இருப்பதால் அவர்களால் மூன்று வேளை பணிவிடை செய்ய சாத்தியமில்லாமல் போகின்றது.
     பெரிய தாங்கல்கள் அனைத்திலும் மூன்று வேளை பணிவிடை நடைபெறுகின்றது. தங்கள் பொருளாதார வசதிகளுக்கேற்ப தாங்கல்களில் வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். வசதியான தாங்கல்களில் நித்தியப்பால், தவணைப்பால் போன்றவை வழங்கப்படுகின்றன.
     பொருளாதார வசதி குறைவான தாங்கல்களில் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் தாங்கலைச் சுத்தம் செய்து கண்ணாடி முன்பு திருவிளக்கை ஏற்றி வைத்து வழிபடுகின்றனர். அனைத்துத் தாங்கல்களிலும் காலை, மாலை வேளைகளில் தாங்கல்களைச் சுத்தம் செய்து கண்ணாடி முன்பு திருவிளக்கு ஏற்றி வழிபடும் வழிபாடு தவறாமல் நடைபெறுகின்றது.
     தனியாகத் தாங்கல்கள் வைக்காமல் வீடுகளில் வைக்கப்படும் தாங்கல்கள் வீட்டின் ஒரு தனி அறையில் கண்ணாடியும், திருவிளக்கும் வைத்து அய்யா வைகுண்டரை வழிபடுகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தோடு ஒப்பிடுகிறபோது இவ்வழிபாட்டு முறை குறைவாகவே காணப்படுகின்றது. தலித்தின மக்களில் தாங்கல்கள் வைக்க இயலாதவர்கள் வீடுகளில் இதுபோல் தாங்கல்கள் வைத்து அய்யா வைகுண்டரை வழிபடுவதோடு கணக்கும் கூறி வருகின்றனர். இவர்களை அடியொற்றி இவர்களது வாரிசுகள் பலரும் அய்யா தாங்கல்களைத் தொடங்கி வழிபட்டு வருவதையும் பார்க்க முடிந்தது. இங்கும் தினம் அதிகாலை , நண்பகல், மாலை என மூன்று வேளையும் வழிபாடாக இல்லாமல் திருவிளக்கு ஏற்றி வீட்டிலுள்ளவர்கள் அய்யா வைகுண்டரை வழிபடுகின்றனர்.
     எந்த வேலையைத் தெரடங்குவதற்கு முன்னரும் அய்யா வைகுண்டரை வழிபட்டு விட்டே இவர்கள் தங்கள் வேலையைத் தொடங்குகின்றனர். தனியாக அறை இல்லாதவர்கள் வசதியான ஒரு இடத்தில் குறிப்பாகத் தென் மேற்கு மூலையில் அய்யா வைகுண்டரை வழிபடுகின்றனர். இதற்கான காரணமாக அவர்கள் அத்திசை கன்னி மூலை என்று கூறுகின்றனர். எனவே அய்யா வைகுண்டரை அங்கே வைத்து வழிபடுகின்றோம் எனக் கூறுகின்றனர்..
2)    வாரப் பணிவிடை
வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமையை அனைத்துத் தாங்கல்களிலும் சிறப்பு நாளாகக் கருதி கொண்டாடுகின்றனர். பல தாங்கல்களில் காலை, நண்பகல், மாலை என மூன்று வேளையும் சிறப்பாகப் பணிவிடை மேற்கொள்ளப்படுகின்றது.
   பெரிய தாங்கல்களில் அய்யா வைகுண்டரின் கொள்கைகள் குறித்துச் சொற்பொழிவுகளும் நடைபெறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை மட்டுமல்லாது கணக்குக் கூறும் நாட்களான செவ்வாய், வெள்ளி போன்ற தினங்களிலும் சிறப்புப் பணிவிடைகள் நடைபெறுகின்றன. கணக்குக் கூறும் தாங்கல்களில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களும் சிறப்பாகப் பணிவிடைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பல தாங்கல்களில் அதிகாலை ஐந்து மணிக்கே திருநடை திறக்கப்பட்டு பணிவிடைகள் நடைபெறுகின்றன. பிரசாதமாக நித்தியப்பால் வழங்கப்படுகின்றது. இத்தினங்களில் ஏராளமான மக்கள் கணக்குக்க் கேட்பதற்காக தாங்கல்களில் வந்து காத்திருந்து அய்யா வைகுண்டரின் அருள் வாக்குகளைக் கேட்டுச் செல்கின்றனர்.
மாதப் பணிவிடை
    ஒவ்வொரு தாங்கல்களும் தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையைச் சிறப்பு நாளாகக் கருதுகின்றனர். ஆகவே அன்றைய தினம் சிறப்புப் பணிவிடைகளை மேற்கொள்கின்றனர். சில தாங்கல்களில் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையும், நான்காவது ஞாயிற்றுக்கிழமையையும் சிறப்பான நாளாகக் கருதிப் பணிவிடைகளை மேற்கொள்கின்றனர். இதற்கான  காரணமாக அவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலியே அய்யா வைகுண்டர் பல அற்புதங்களைச் செய்துள்ளார் மேலும் அய்யா வைகுண்டருக்கும் ஞாயிற்றுக்கிழமைக்கும் நெருங்கிய தொடர்புள்ளது என்றும் கூறுகின்றனர்1. அதனாலேயே தாங்கள் மாத்தில் முதல் அல்லது மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையைச் சிறப்பான நாளாகக் கருதி பணிவிடை மேற்கொள்கிறோம் என்று கூறுகின்றனர். இன்னும் சிலரோ எங்கள் முன்னோர்கள் முதல் அல்லது மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் பணிவிடை மேற்கொண்டனர். அதைப் பின்பற்றியே நாங்களும் மேற்கொள்கிறோம் என்றும் கூறுகின்றனர்.
மாத பணிவிடையின்போது பெரும்பாலான தாங்கல்களில் அன்னதானம் வழங்கப்படுகின்றது. அன்னதானம் வழங்க இயலாத தாங்கல்கள் நித்தியப்பால் தருமம் வழங்குகின்றன.
ஆண்டுத் திருவிழா
     தாங்கல்கள் அனைத்தும் அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை ஆண்டு விழாவாகக் கொண்டாடுகின்றன. பெரும்பாலும் தாங்கல்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஆண்டுத் திருவிழாவைக் கொண்டாடுகின்றன.
     திருவிழாவின்போது அன்னதானம், ஊர்வலம் போன்றவை நடைபெறுகின்றன. தாங்கல்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒரு நாள் திருவிழாவையோ, இரு நாள் திருவிழாவையோ, ஐந்து நாள் திருவிழாவையோ, பத்து நாள் திருவிழாவையோ கொண்டாடுகின்றன.
     சில தாங்கல்களில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆண்டுத் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். இன்னும் சில தாங்கல்களில் ஆண்டுக்கு ஒரு முறை ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டுமே ஆண்டுத் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர்.
     பதிகளைப் போன்றே தாங்கல்களிலும் பிச்சை எடுத்துச் செய்யும் அன்னதானம் நடைபெறுகின்றது. சில தாங்கல்கள் அவதார தினத்துடன் ஏடு வாசிப்பையும் ஆண்டுத் திருவிழாவாக நடத்தி வருகின்றன.
     ஆண்டுத் திருவிழாக்கள் பதிகளில் நடைபெறுவது போன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடைபெறுகின்றன. கொடி மரமில்லாத தாங்கல்களில் கொடி ஏற்றம் இல்லாமலேயே திருவிழாக்கள் நடைபெறுகின்றன. பல தாங்கல்களில் பத்தாம் திருவிழா அன்றும், சில தாங்கல்களில் பத்துத் தினங்களும் அன்னதானம் நடைபெறுகின்றன.
தாங்கல்களின் வளர்ச்சி
    தாங்கல்களின் வளர்ச்சி என்பது என்பது தென்னிந்தியா முழுவதும் அதிகமாகக் காணப்படுகின்றன. அதிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாகக் காணப்படுகின்றது. கடந்த 2013 ஆம் ஆண்டு மட்டும் 1500 தாங்கல்களுக்குப் பிடிமண் பாலபிரஜாபதி அவர்களால் வழங்கப்பட்டுள்ளதாக தருமு இரஜினி அவர்கள் குறிப்பிடுகின்றார்2.
     அய்யா வைகுண்டர் தன்னுடைய காலத்திலேயே அதிகமான திருநிழல்தாங்கல்களை ஏற்படுத்தி எண்ணினார். இயன்றவரை ஏற்படுத்தவும் செய்தார். தனது சீடர்களைப் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி பல்வேறு தாங்கல்கள் ஏற்பட்டிடவும் வழிவகை செய்தார்.
     அய்யா வைகுண்டரே பல ஊர்களுக்கும் சென்று திருநிழல்தாங்கல்களை ஏற்படுத்தினார். அய்யா வைகுண்டரால் ஏற்படுத்தப்பட்ட தாங்கல்கள் இணைத்தாங்கல்கள் என்று அழைக்கப்படுகின்றன.
     ஆரம்ப காலங்களில் தாங்கல்கள் சிறு குடிசைகளில் அமைக்கப்பட்டிருந்தன. இன்று குடிசைகளில் அமைந்த தாங்கல்களைக் காணமுடிவதில்லை. அனைத்துத் தாங்கல்களும் காங்கிரீட் கட்டிடங்களாகவே காட்சியளிக்கின்றன.
     களக்காட்டை அடுத்து அமைந்துள்ள சவலைக்காரன்குளத்தில் மிகப் பழைமையான நிழல்தாங்கல் ஒன்று அமைந்துள்ளது. அய்யா வைகுண்டர் இகனை மணம் செய்து கொண்ட பார்வதியம்மாள் இங்கு வந்த கால் நாட்டி இத்தாங்கலை எற்படுத்தி அய்யா வைகுண்டரை வழிபட்டதாகக் கூறுகின்றனர்3
       பார்வதியம்மாள் தனது இறுதிக்காலம் வரையிலும் இங்கிரந்து அய்யா வைகுண்டரை வழிபட்டு வந்தார் என்றும் கூறுகின்றனர். அவரது மரணத்திற்குப் பிறகு அவரது உடல் அப்பகுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டது. அய்யா வைகுண்டருக்குப் பணிவிடை மேற்கொள்கிறபோது பார்வதியம்மாளுக்கும் பணிவிடை மேற்கொள்ளப்படுகின்றது.
     பார்வதியம்மாள் கால் நாட்டித் தொடங்கியபோது சிறியதாக இருந்த தாங்கல் இன்று தேரும், வாகனுமுமாக வளர்ச்சியடைந்துள்ளதை பக்தர்கள் மகிழ்ச்சி பொங்கக் கூறுகின்றன்.  இங்கள்ள தேரை சந்தனத் தேர் என்று அழைக்கின்றனர் இத்தாங்கலுக்கு நோயோடு வருகின்றவர்கள் பலரும் தங்கள் நொய் நீங்கிச் செல்வதாகவும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தைர வரம் பெற்றுச் செல்வதாகவும் கூறுகின்றனர்.
     அய்யா வைகுண்டர் கூறக்கூற அரிகோபலன் அவர்கள் எழுதிய ஆதி ஏட்டின் ஒரு பிரதி இத்தாங்கலில் உள்ளதாகவும் முக்கியத் திருவிழாக்களின் போது இவ்வேட்டையே வாசித்து வருவதாகவும் கூறுகின்றனர். வேறு புத்தகங்களைப் பயன்படுத்துவதில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தில் தாங்கல்களின் வளர்ச்சி
    திருநெல்வெலி மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 3826 தாங்கல்கள் காணப்படுகின்றன. வருங்காலங்களில் இத்தாங்கல்களின் எண்ணிக்கை கூடக்கூடும்.
 அய்யா வைகுண்டர் தோன்றிய நாடார் இன மக்கள் மட்டுமன்றி வெள்ளாளர், செட்டியார், வண்ணார், நாவிதர், பறையர், பள்ளர், தச்சர் ( ஆசாரி ), தேவர், போன்றோரும் தாங்கல்களை நிறுவி அய்யா வைகுண்டரை வழிபடுகின்றனர்.
     சில தாங்கல்களில் அய்யா வைகுண்டர் போதித்த கண்ணாடி, திருவிளக்கு வழிபாட்டோடு பிற தெய்வ வழிபாட்டையும் மேற்கொள்கின்றனர். இவ்வழிபாடு கன்னியாகுமரி மாவட்டத்தோடு ஒப்பிடுகிறபோது குறைவாகவே காணப்படுபகின்றது.     அய்யா வைகுண்டரின் வழிபாட்டோடு முருக வழிபாடு, காளி வழிபாடு, அம்மன் வழிபாடு ( பள்ளர், பறையர், தேவர், வண்ணார், ஆசாரி, செட்டியார்)  போன்ற வழிபாட்டையும் மேற்கொள்கின்றனர். சில நாடார் இன மக்கள் அய்யா வழிபாட்டோடு காளி வழிபாட்டையும் மேற்கொள்கின்றனர். ஊர்ப்பொது வழிபாடு என்று வருகின்றபோது பிறத்  தெய்வக் கோயில்களுக்கு வரி செலுத்தி அத்தெய்வ வழிபாட்டிலும் கலந்து கொள்கின்றனர். அய்யப்ப சுவாமி கோயிலுக்கு மாலை இட்டும் செல்கின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம் எல்லா தெய்வங்களும் அய்யா வைகுண்டரின் அவதாரங்களே என்பதாகும்.
     இன்று தமிழகம் முழுவதும் 12000 - த்துக்கும் திகமான தாங்கல்கள் காணப்படுவதாக அறியமுடிகின்றது. அய்யா வைகுண்டரின் சீர்திருத்தச் சிந்தனைகளாலும், முற்போக்கு வழிபாட்டு முறைகளாலும், சாதி சமய வேறுபாடுகளற்ற வழிபாட்டு முறைகளாலும் தாங்கல்களின் வளர்ச்சி அபரிமிதமாகக் காணப்படுகின்றன.
                     அதிலும் பறையர், பள்ளர் இன மக்கள் அதிகமான தாங்கல்களை நிறுவியுள்ளதைக் காணமுடிகின்றது.உதாரணமாக, சேகர் ( நக்கநேரி – பறையர்), மாணிக்கம் ( மாணிக்கம்புதூர் – பறையர்), முருகன் ( உதயத்தூர் – பறையர்), லக்ஷ்மணன் (மகேந்திரபுரம் – பறையர்), அத்திக்கண் ( செம்மங்குளம் – பள்ளர்), புதுமனை செட்டிகுளம் ( சேகர் – பறையர்), இராஜேந்திரன் ( புல்லமங்களம் – பள்ளர்), சித்திரைவேல் ( வேப்பம்மாடு – பறையர்), நடேசன் ( பால்களம் – பறையர்), கண்ணன் ( பட்டாரகுளம் – பறையர்), மணிகண்டன் ( வட்டவிளை – பறையர்), மாரியப்பன் ( சமூகரெங்கபுரம் – பறையர்), தவசி ( கீழூர் – உதயத்தூர் அருகே – பறையர்)  போன்ற ஊர்களில் நாடார் அல்லாத மக்கள் தாங்கல்களை நிறுவி அய்யா வைகுண்டரை வழிபட்டு வருகின்றனர். இவையனைத்தும் இராதாபுரம் தாலுகாக்காவில் அமைந்த ஊர்களாகும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தாங்கல்களின் எண்ணிக்கை
    தமிழகத்தில் அதிகமான தாங்கல்கள் அமைந்துள்ள மாவட்டங்களில் அய்யா வைகுண்டர் பிறந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அருகே அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டமும்  ஒன்று. இம்மாவட்டத்தின் பெரும்பாலான ஊர்களில் மூன்றுக்கும் மேற்பட்ட தாங்கல்கள் காணப்படுகின்றன.  அதிகபட்சமாக ஐந்து தாங்கல்கள் வரை காணப்படுகின்றன.
தாங்கல்கள் சாதியின் அடிப்படையில்
நாடார்
     திருநெல்வேலி மாவட்டத்தில் நாடார் இனத்தவர்களே அதிகமான தாங்கல்களை நிறுவியுள்ளனர். என்றாலும் இராதாபுரம், நாங்குநெரி போன்ற தாலுகாக்களில் நாடார் இன மக்களுக்கு இணையாக பறையர் இனத்தவர்களும் தாங்கல்களை நிறுவியுளனர். ±ற்றுக்கு எழுபத்தியெட்டு சதவிகித தாங்கல்கள் நாடார் இனமக்களாலேயே நிறுவப்பட்டுள்ளன ( 3348   - 78 %).
பறையர், பள்ளர்
பறையர் இன மக்கள் 342 (.15.44 %  ) தாங்கல்களை திருநெல்வெலி மாவட்டம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளனர். பள்ளர் இன மக்களும் 49                    ( 6.56%) தாங்கல்களை நிறுவி அய்யா வைகுண்டரை வழிபட்டு வருகின்றனர்.  நாடார் இன மக்களொடும் பிற இன மக்களொடும் ஒப்பிடகிற போது இவ்விரு மக்களின் தாங்கல்கள் அதிக எண்ணிக்கையில் அமைந்துள்ளன.
தேவர்
தேவர் .ன மக்கள் 23 (1 .45 %  ) தாங்கல்களை நிறுவியுள்ளனர் . இவற்றில் விளாத்திகுளத்தில் உள்ள தாங்கலை நாடார்கள் எற்படுத்தி வந்தனர். அவர்கள் பணி நிமித்தமாக வெளிRர் சென்றபோது அத் தாங்கல் வழிபாட்டை மாடக்கண்ணுத் தேவர் ஏற்று நடத்தி அய்யா வைகுண்டரை வழிபட்டு வருகின்றார்.
வெள்ளாளர்,
    இவ்வின மக்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக வாழ்ந்த போதும்அதிகமான தாங்கல்களை நிறுவி அய்யா வைகுண்டரை வழிபடவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இவர்கள் தாங்கல்களை ஏற்படுத்தியுள்ளனர். 17 ( 2.04% ) தாங்கல்கள் காணப்படுகின்றன.
ஆசாரி
     வெள்ளாளர், இனத்தவர்களுக்கு அடுத்தபடியாக ஆசாரி இனத்தவர்கள் அதிகமான தாங்கல்களை நிறுவியுள்ளனர். மொத்தம் 15 ( 1.89 %) தாங்கல்கள்
காணப்படுகின்றன.
கோனார், நாவிதர்,  செட்டியார்  , பள்ளர்
     இவ்வின மக்களின் தாங்கல்கள் குறைவாகவே காணப்படுகின்றன. கோனார்கள் 14 தாங்கல்களையும்( 1. 44%, நாவிதர்கள் 12 (1.11 %) தாங்கல்களும், தாங்கல்களும், தாங்கல்களும், தாங்கல்களும், செட்டியார்கள் 6 (.18 %  ) தாங்கல்களும், நிறுவி அய்யா வைகுண்டரை வழிபட்டு வருகின்றனர்.
தாங்கல்களும் பிற தெய்வ வழிபாடுகளும்
    தாங்கல்களில் இந்து மத தெய்வங்களையும் வழிபடும் மரபு காணப்படுகின்றது. நாடார் இனத்தைத் தவிர்த்த பெரும்பாலான மக்கள் அய்யா வைகுண்டரின் வழிபாட்டோடு அல்லாமல் தனியாக பிற தெய்வ வழிபாட்டையும் மேற்கொள்கின்றனர். அய்யா வைகுண்டரின் அவதாரத்திற்கு முன்னரே தாங்கள் குடும்பத்தினர் பிற தெய்வ வழிபாட்டை மேற்கொண்டு வருவதால் அவ்வழிபாட்டைத் தாங்களும் மேற்கொள்வதாகவும் ஊரோடு ஒட்டி வாழ வேண்டும் என்பதற்காகவும் பிற வழிபாடுகளில் கலந்து கொள்வதாகவும் கூறுகின்றனர். அய்யா வைகுண்டர் உலகிலுள்ள அனைத்துக் கடவுளின் அம்சம் என்று  அகிலத்திரட்டில் கூறியிருப்பதாலும் பிற தெய்வ வழிபாட்டை மேற்கொள்வதாகக் கூறுகின்றனர்.
இருப்பினும் தாங்கல்களில் வைத்துப் பிற தெய்வங்களை வழிபடும் மரபு அதிகம் காணப்படவில்லை. இவர்களது பிற தெய்வ வழிபாட்டில் பிற மத  தெய்வங்களின் வழிபாடு காணப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்து மதத் தெய்வங்களின் வழிபாடு மட்டுமே காணப்படுகின்றது. என்றாலும் பிற மத துவேசம் இம்மக்களிடம் காணப்படவில்லை. எல்லா மதக் கடவுளரும் அய்யா வைகுண்டரின்  அம்சமே. இதில் பிற மதக் கடவுளர்கள் மீதும் அக்கடவுளர்களைப் பின்பற்றும் மக்கள் மீதும் எதற்குத் துவேசம் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.
     இத்தகைய ஒரு மத நல்லிணக்கக் கோட்பாட்டை நாம் பிற மத வழிபாடுகளில் காண்பது என்பது அரிது. இது அய்யா வழி வழிபாட்டில் மட்டுமே சாத்தியப்பட்டுள்ளது எனலாம். இது அய்யா வைகுண்டரின் கொள்கைகள் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அம்மக்களை நல்வழிப்படுத்தியுள்ளதைத் தெளிவுபடுத்துகின்றது. அனைத்து மத தெய்வங்களும் என் அம்சமே என அய்யா வைகுண்டர் கூறியதையே இம்மக்கள் அடியொற்றி மத நல்லிணக்கத்தோடு வாழ்கிறார்கள் எனலாம்.
நாடார் இன மக்கள் அய்யா வைகுண்டரின் வழிபாட்டோடு பிற தெய்வ வழிபாட்டை மேற்கொள்வதில்லை. ஆனால் பிற தெய்வக் கோயில்களுக்குச் செல்வது, ஊர் மக்களோடு சேர்ந்து வரி செலுத்திப் பிற தெய்வ வழிபாட்டில் கலந்து கொள்வது போன்ற செயல்களை மேற்கொள்வதைக் காணமுடிகின்றது.
சான்றெண் விளக்கம்
1)      சேகர், நக்கநேரி, இராதாபுரம் தாலுக்கா, நெல்லை மாவட்டம்
2)      தருமு ரஜினி, தலைமை பதி, சுவாமித்தோப்பு.

3)      பொன்னுச்சாமி, சவலைக்காரன்குளம், நாங்குநேரி தாலுக்கா, நெல்லை மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக