புதன், 15 ஏப்ரல், 2015

அகிலம்

பிள்ளைகள்தான் நன்றாய்ப் பெருகி மிகவாழ
வள்ளலெங்கள் மாலே மாறாத் தவசிருந்த
காரணத்தைச் சொன்னால் கணக்கி லடங்கிடுமோ
விளக்கம்
உடனே ஏழு கன்னிகளும் அங்கு நின்றவர்கள் எல்லாரும் அறியும்படி, நாங்கள் பெற்ற பிள்ளைகள் நன்றாகத் தழைத்துப் பெருகி வளர வள்ளல் ஆகிய எங்கள் திருமாலு நாங்கள் நிலையான தவம் இருந்தோம். அப்போது பட்ட துன்பங்களை நாங்கள் சொன்னால் அது ஓர் அளவு கிடையாது.

அகிலம்:

தானநிறை புற்றருகில் தன்னால் மிகவாழும்
பிள்ளையால் நாங்கள் பெருகத் தவசிருந்த
உள்ளமைக ளெல்லாம் உரைக்க எளிதாமோ
நாணமற்று ஊணுமற்று நாலுமூணு ஆண்டுவரை
தாணருட தஞ்சமெனத் தவசு மிகப்புரிந்து
பிள்ளைக ளாசையினால் பேருல கில்வந்தோம்
வள்ளலெங்கள் மக்கள்தம்மை மாயவ ரேதாரும்
தந்து புவியாளத் தலைவரே யும்முடைய
விந்துவழி மக்களையும் விரைவாய் மிகத்தாரும்
விளக்கம்:
இப்படி நாங்கள் பெற்ற குழந்தைகளுக்காக் கடுமையான தவமி்ருந்த உண்மைகளை எல்லாம் எடுத்து சொல்லுவது என்றால் அது எளிதான காரியம் ஆகுமா? நாங்கள் நாணமற்று உண்ண உணவுமற்றுப் பன்னிரண்டு ஆண்டுகள் வரை சிவவே தஞ்சம் என்று கடினமாகத் தவம் புரிந்து வந்தோம். பிள்ளைகளை உம்மிடமிருந்து பெறுவதற்குரிய ஆசையினால் இப்பூவுலகுக்கு வந்தோம். வள்ளலாகிய நீர் இப்பொழுது எங்கள் குழந்தைகளையும், அவர்களின் சந்ததியாரையும் விரைவாகத் தந்து இந்த இராசியத்தையும் ஆள வைப்பீராக.

அய்யா வைகுண்டர்

அகிலம்
குலதலமு மற்றுக் கூறுகின்ற பேச்சுமற்றுப்
பேச்சற்று மூச்சற்றுப் பெருவனத்தி லும்மருளால்
ஏச்சதூச்ச மற்று ஈராறு காலம்வரை
நிற்க வுடம்பை நெடும்புற்று தான்மூடிப்
பக்க மால்முளைத்து புறாவினங்கள் தான்கூடி
முட்டையிட்டுக் குஞ்சு மூன்றுநே ரம்பொரித்து
வட்டணியாய்க் காடு வளைந்தெங் களைச்சூழ்ந்து
கடுவாய் புலிகரடி கனத்தகுட்டி களீன்று
கடுகிமிகப் புற்றுக் கரையில் மிகவாழும்
ஆனையது குட்டி அதுபயின் றெங்களுடத்
விளக்கம்:
இவ்வாறு இருந்து பேச்சு மூச்சின்றித் தவத்தின் உச்ச நிலையை அனுபவித்தோம். உமது அருளால் தீமையான பேச்சுகள் இல்லாமல் பன்னிரண்டு வருடங்கள் வரை தவத்தில் நின்றோம். இப்படித் தவத்தில் நின்ற காரணத்தால் எங்களைச் சுற்றிப் பெரிய புற்றுகள் தோன்றி மூடின. எங்கள் பக்கத்தில் ஆல் முளைத்து அதில் புறா இனங்கள் கூடி வாழ்ந்து முட்டை இட்டு மூன்ற முறைகள் குஞ்சுகள் பொரித்துவிட்டன. எங்களைச் சுற்றி வட்டமிட்டு அணி அணியாகக் காட்டில் உள்ள செடிகள் எல்லாம் வளைந்து சூழ்ந்து விட்டன. அக்காட்டில் உள்ள கடுவாய் கரடி ஆகியவை அப்புற்றிறன் அருகில் இருமுறை சக்தி வாய்ந்த குட்டிகள் ஈன்று அவை விரைவாக வளர்ந்தன. அவற்றோடு யானையின் குட்டிகள் பழகி அந்தப் புற்றின் அருகில் வாழ்ந்து வந்தன.