வியாழன், 1 செப்டம்பர், 2016

அய்யாவிற்கு கொடுத்த தண்டனைகள்

சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நிற்கிறார்கள். அவர்களது கண்களில் மிரட்சி... மிரட்சி... மிரட்சி மாத்திரமே!

"இப்படி கொடுமை செய்கிறார்களே... இறைவனே... உனக்கே இந்த சோதனையா?" என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு பல பெண்கள் அழுதனர்.

“கை கட்டி, கூனி குறுகிப் போன எங்கள் வீர நெஞ்சை நிமிர வைத்த கோமானே... உங்களுக்கு இப்படியொரு கோலமா?” என்று மனதிற்குள் குமுறி குமுறி அழுதனர், இளைஞர்கள்.

இரும்புச் சங்கிலியால் கைகள் பிணைக்கப்பட்டு, மேலாடை இல்லாமல் இழுத்துச் செல்லப்பட்டார், மானிடனாக அவதரித்த இறைமகன். ஆம்... அய்யா வைகுண்டர்தான் அவர்!

அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் என்ன தெரியுமா?

1. மேல் ஜாதியினரிடம் அடிமைப்பட்டு கிடந்த ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களை தலை நிமிர்ந்து நடக்கச் செய்தார்.

2. மேல்தட்டு மக்களுக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்களை அணி திரட்டுகிறார்.

3. தாழ்த்தப்பட்ட 18 ஜாதி மக்களை ஒன்றுதிரட்டி, அவர்களுக்குள் ஒற்றுமையை வளர்க்கிறார். எல்லோரும் சமம் என்கிறார்.

4. மேட்டுக்குடியினருக்கு மரியாதை கொடுப்பதற்காக திறந்த மார்பாக வலம் வர வேண்டிய தாழ்த்தப்பட்ட பெண்கள், இவரது அறிவுரையால் சேலை உடுத்தி மறைத்துக் கொள்கிறார்கள்.

5. இவரது தலைமையில் திரளும் கீழ் ஜாதியினர் மேட்டுக்குடியினரை மதிப்பதில்லை. அத்துடன், மார்பு வரி, தலைமுடி வரி உள்ளிட்ட அரசுக்கு செலுத்த வேண்டிய வரியையும் செலுத்துவதில்லை.

6. உயர் ஜாதியினர் வசிக்கும் தெருக்கள் வழியாக செல்லும்போது குடை பிடிக்காமல், காலில் அணிந்த செருப்பை கையில் தூக்கிக் கொண்டு குனிந்து செல்பவர்கள், இவரது பேச்சைக் கேட்டு அவ்வாறு நடக்க மறுக்கிறார்கள்.

மேல் ஜாதியினரைக் கண்ட மாத்திரத்தில் கை கட்டி, துண்டை (டவல்) இடுப்பில் தரித்து, கூனி குறுகிச் நின்றவர்கள், தரையை முத்தமிடும் 8 முழ வேஷ்டி கட்டியும், தலையில் பெரிய தலைப்பாகை அணிந்தும் வலம் வருகிறார்கள். இவற்றுக்கு எல்லாம் காரணம் முத்துக்குட்டி என்கிற அந்த வைகுண்டர்தான்.

- இப்படியெல்லாம், அய்யா வைகுண்டர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. அவருக்கு தண்டனை வழங்குவதற்காக திருவனந்தபுரத்திற்கு இப்படியொரு அவலக் கோலத்தில் இழுத்துச் செல்லப்படுகிறார். அய்யாவை இழுத்து வரச் சொன்னவன், சுவாதித் திருநாள் மகாராஜா.



திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்ட அய்யா வைகுண்டர் அங்குள்ள சிங்காரத்தோப்பில் சிறை வைக்கப்பட்டார். சிறையில் அவர் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார். சாதாரண மனிதன் என்றால் முதல் கொடுமை முயற்சியிலேயே இறந்து போய் இருப்பான். ஆனால், வைகுண்டர் இறைமகன் ஆயிற்றே... திரண்டு வந்த கொடூரங்கள் எல்லாம் அய்யாவை பார்த்த மாத்திரத்தில் மிரண்டு திரும்பின.

சிறையில் வைகுண்டரைக் கொலை செய்ய பல்வேறு முயற்சிகளை திருவிதாங்கூர் சமஸ்தான வீரர்கள் மன்னனின் உத்தரவின் பேரில் மேற்கொண்டனர். முதல் முயற்சியாக பாலில் விஷத்தை கலந்து கொடுத்தார்கள்.

எல்லாம் அறிந்தவர் ஆயிற்றே அய்யா! பாலை வாங்கிக் குடித்தார். முன்பு இருந்ததை விட இன்னும் அதிகமாக உற்சாகமானாரேத் தவிர மயங்கி கீழே சரியவில்லை.

அடுத்ததாக காற்று புகாத இருட்டு அறையில் பூட்டி வைத்து பல நாட்கள் அவரை பட்டினிப் போட்டனர். ஆனால், வைகுண்டருக்கு எதுவும் ஆகவில்லை. முன்பு போலவே இருந்தார். சொல்லப் போனால், அவரது வலிமை அதிகமாகிக் கொண்டே போனது என்றுதான் சொல்ல வேண்டும்.

எந்த தண்டனையும் அய்யாவிடம் பலிக்கவில்லை என்பதை அறிந்த சுவாதித் திருநாள் மகாராஜா இன்னும் ஆத்திரமானான். “அவன் இறந்துவிட்டான் என்ற செய்திதான் இனி என் காதில் கேட்க வேண்டும். அவனை என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ, எனக்குத் தெரியாது...” என்று ஒரேயடியாக சொல்லி விட்டான்.

இது போதாதா வீரர்களுக்கு?

அடுத்தக்கட்டமாக அய்யாவின் மீது கொடூரமான தண்டனைகள் திணிக்கப்பட்டன.

முதல் கொடூர தண்டனையாக அய்யாவை தீயிலிட்டு கொளுத்த உத்தரவிடப்பட்டது. இதையட்டி, விறகு கட்டைகளை ஓரிடத்தில் குவித்து, அதில் நெய்யை டன் கணக்கில் ஊற்றி தீ வைத்தனர். அய்யாவை அதற்குள் தள்ளிவிட்டனர். ஒருபுறம் அக்னிக்குள் புகுந்த அய்யா மறுபுறம் தண்ணீருக்குள் மூழ்கி வெளியே வருவதுபோல் வந்தார்.

“நெய்யூற்றி கட்டை அடுக்கி தீயை வைத்து
நீந்திக்கொள் என்றானே சிவனே அய்யா
குளியாத மேனியில் குளிக்க நாள் ஆச்சுதென்று
குழி போட்டு நின்றேனே சிவனே அய்யா”

- என்று, அந்த சம்பவத்தை தனது அகிலத்திரட்டில் குறிப்பிடுகிறார் அய்யா வைகுண்டர்.

அதைப் பார்த்த சமஸ்தான வீரர்கள் ஆடிப் போய்விட்டனர். உண்மையில் இவர் மனிதர்தானா? இல்லை... இறைமகன்தானா? என்று கூட யோசித்தனர்.

ஆனால், அவரைக் கொல்ல வேண்டும் என்பது மன்னர் இட்ட கட்டளை ஆயிற்றே... என்று எண்ணியவர்கள், அடுத்த தண்டனை கொடுக்க தயாரானார்கள்.

ஜன்னல் இல்லாத அறையில் அய்யாவைத் தள்ளி, அந்த அறைக்குள் மிளகாய் வற்றலை டன் கணக்கில் கொட்டி தீ வைக்க வேண்டும் என்பதுதான் அந்த தண்டனை. அதுவும் நிறைவேற்றப்பட்டது. தீக்குள் இருந்து மீண்ட அய்யா, இந்த தண்டனையில் எப்படியும் மூச்சுத்திணறி இறந்து போய் இருப்பார் என்று கணக்கு போட்டனர் வீரர்கள். ஆனால் நடந்ததோ, வழக்கம்போல் வேறுதான்! எந்தவித பாதிப்புமே இல்லாமல் வெளியே வந்தார் வைகுண்டர்.

“அரங்கதனில் அடைத்து வத்தல்போட தீ வைத்தும்
அசையாமல் இருந்தேனே சிவனே அய்யா”

என்று, அந்த சம்பவம் பற்றி அவரே குறிப்பிடுகிறார்.



இதையெல்லாம் அறிந்த மன்னர் சுவாதி திருநாள் இன்னும் கோபமானான். இந்த வைகுண்டர் இன்னும் உயிரோடு இருந்தால், தான் ஆட்சிப் பொறுப்பில் இருக்க முடியாது என்று அறிந்தவன், அய்யாவை புலிக்கு இரையாக்க உத்தரவிட்டான்.

பொதுமக்கள் முன்னிலையில் இந்த தண்டனை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது இன்னும் கொடூரமானது. அய்யாவின் விசுவாசிகளும் அங்கே திரண்டிருந்தனர். அய்யாவுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்ற பிரார்த்தனையை முணுமுணுத்துக் கொண்டிருந்தன அவர்களது உதடுகள்.

பல நாள் பட்டினி போடப்பட்ட புலிக் கூண்டை வீதிக்கு கொண்டு வந்து வைத்த சமஸ்தான வீரர்கள், அதற்குள் அய்யாவை பிடித்து தள்ளினர். அதுவரை சீறிக்கொண்டும், உறுமிக்கொண்டும் பாய்ந்த புலி, அய்யாவை பார்த்த மாத்திரத்தில் அடங்கிப் போனது.

கோபம் கொண்ட வீரர்கள் ஈட்டியால் புலியின் பின்புறத்தில் குத்த... புலியின் கோபம் அவர்கள் பக்கம் திரும்பியது. ஒரு வீரன் குத்திய ஈட்டியை கவ்விப் பிடித்த புலி, அதை வேகமாக தள்ளிவிட்டது. புலி வேகமாக தள்ளிவிட்ட ஈட்டி, அந்த வீரனுக்கு அருகில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஆதிக்க ஜாதிக்காரன் வயிற்றில் பாய்ந்தது. அடுத்த நொடியே அவன் உயிரை விட்டான். ஆனால், அய்யாவை அந்த புலி ஒன்றும் செய்யவில்லை. அவரது காலடியில் போய் படுத்துக் கொண்டது.

“ஈட்டியெடுத்து இனிக்குத்த வேணும் என்று
எட்டிக் கடுவாய் ஈட்டிதனைப் பிடித்து
விட்டிடவே அருகில் நின்றதொரு வேதியனை
குத்திச்சே ஈட்டி குடல் பீற...”
என்று அகிலத்திரட்டில் இதுபற்றி குறிப்பிடுகிறார் அய்யா.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அய்யாவின் விசுவாசிகள் உற்சாகம் ஆனார்கள். அவர்கள் மகிழ்ச்சியில் கூக்குரலிட்டனர்.

அய்யா வைகுண்டரை ஒன்றும் செய்ய முடியாது என்று பலவாறு யோசித்து ஒரு முடிவுக்கு வந்த சுவாதித் திருநாள் மகாராஜா, வேறு வழியின்றி அவரை விடுதலை செய்தான். அய்யாவின் 112 நாள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது.

அய்யா அஞ்சி ஓடினாரா?

சாமித்தோப்பு பூவண்டர் தோப்பில் வழக்கம் போல் தன்னை சந்திக்க வந்தவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார் அய்யா வைகுண்டர். அவர், யதார்த்தமாக பார்வையை திருப்பியபோது சில இளைஞர்கள் வேகமாக அவரை நோக்கி ஓடி வந்தனர். பொதுமக்களிடம் உபதேசிப்பதை நிறுத்தி விட்டு, அவர்கள் எதற்காக ஓடி வருகிறார்கள் என்பதை அறிய மவுனமானார்.

ஓடி வந்த இளைஞர்கள் வைகுண்டர் முன்பு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றனர்.

“ஏன் இந்த ஓட்டம்? அவ்வளவு அவசரமான காரியமா?” அய்யா கேட்டார்.

“அப்படித்தான் அய்யா. திருவிதாங்கூர் மன்னர், தங்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். உங்களைக் கைது செய்வதற்காக சமஸ்தான ஆட்கள் தேடி வந்து கொண்டிருக்கிறார்கள்...” என்று மூச்சு கூட விட முடியாமல் சொன்னார்கள் வந்தவர்கள்.

அதைக் கேட்ட மாத்திரத்தில் அய்யாவை காண வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அய்யா முகத்திலோ எந்த சலனமும் தெரியவில்லை. எப்போதும் தவழும் மகிழ்ச்சி மாத்திரமே அவர் முகத்தில் தெரிந்தது.

சிறிது நேரம் மவுனமாக நகர்ந்தது.

அதன்பிறகு அப்படியொரு சம்பவம் நடைபெறும் என்று அய்யாவைக் காண வந்தவர்கள் கூட எதிர்பார்க்கவில்லை.

அதுவரை மவுனமாக இருந்த அய்யா வைகுண்டர், திடீரென்று எழுந்து ஓட ஆரம்பித்தார். தென் திசை கடல் நோக்கி அவரது ஓட்டம் அமைந்திருந்தது. அய்யாவின் இந்தச் செயல், இறைவனாக அவரைப் பார்த்த பொதுமக்களுக்கு விநோதமாக தெரிந்தது. அவரது செய்கையைக் கண்டு மனம் வெதும்பினர்.

ஆதிக்க ஜாதியினரோ, 'தன்னை இறைவனின் அவதாரம் என்கிறான்... ஆனால், கைது செய்ய வருபவர்களைக் கண்டு அஞ்சி ஓடுகிறானே...' என்று ஏளனம் செய்தனர். அய்யா வழியை பின்பற்றியவர்களையும் கிண்டலடித்தனர்.



“பதறி இவன் போறான் படை வருகுது என்று சொல்லிக்
கதறி மிக ஓடுகிறான் கள்ள சுவாமி இவனும்
சாமி என்றால் நருட்குத் தோற்று மிக ஓடுவானோ...
நாம் இவனை நம்பி நடந்ததுவும் வீணாச்சே...
பேயனுட பேச்சை பிரமாணமாயக் கேட்டு
ஞாயமது கெட்டோம் நாமெல்லாம் என்று சொல்லி
நீசக்குலத்தோர் நெடுந்தூரம் வைதனர் காண்...”

- என்று, மேற்கண்ட சம்பவம் பற்றி குறிப்பிடுகிறது அகிலத்திரட்டு.

அடுத்த ஒரு மணி நேரத்தில் சமஸ்தான படைவீரர்கள் வைகுண்டரை கைது செய்ய பூவண்டர் தோப்புக்குள் புகுந்தனர். அங்கே அவர் இல்லாததால் கண்ணில் கண்ட பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கினர். அய்யாவுக்காக ஏற்படுத்தப்பட்ட குடிலையும் தீ வைத்துக் கொளுத்தினர்.

அதோடு அவர்களது அட்டகாசம் நின்று விடவில்லை. அய்யாவைத் தேடி வந்தவர்கள் மீதும் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர். சிலரது கை, கால்கள் ஊனமாக்கப்பட்டன.

இந்த களேபரங்கள் நடந்து முடிந்த சிறிது நேரத்தில் அய்யா வைகுண்டர் பூவண்டர் தோப்புக்கு திரும்பி வந்தார். அங்கே நடந்த கொடூரங்களைக் கண்டு வேதனை அடைந்தார்.

அப்போதுதான் ஒருவர் அய்யா அருகில் வந்தார்.

வந்தவர், அய்யாவிடம் கேட்டார், “அய்யா... நாங்கள் எல்லாம் உங்களை நம்பித்தானே இங்கே வந்தோம். ஆனால், திடீரென்று எழுந்து ஓடி விட்டீர்களே... அதற்கு நாங்கள் என்ன பொருள் எடுத்துக் கொள்ள?” என்றார் அவர்.

அவரது தோளில் கை வைத்து, அவரது கண்களில் இருந்து சிந்திய கண்ணீர்த் துளிகளை துடைத்து விட்டு அய்யா இப்படி கூறினார்.

“அவசரப்பட்டு தவறாக முடிவெடுத்து விடாதீர்கள். நான் கலியை அழித்துத் தர்மயுகத்தை நிலைநாட்டப் போகும் நேரம் நெருங்கிவிட்டது. அதை என் தந்தையிடம் சொல்லி வரவே தென் திசைக் கடல் நோக்கி ஓடினேன். கடலுக்குள் புகுந்து தந்தையிடம் சொல்லி விட்டு திரும்பி வந்துள்ளேன்...” என்றார்.

இதற்கு பிறகுதான், திடீரென்று அய்யா எழுந்து ஓடியதற்கான காரணத்தை எல்லோரும் தெரிந்து கொண்டனர். அவரைத் தவறாக எண்ணிய அவரது மக்கள், அதற்காக வருந்திக் கொண்டனர்.

சிறிது நேரத்தில் மீண்டும் பூவண்டர் தோப்பில் வழக்கமான பரபரப்பு தொற்றிக் கொண்டது. மக்கள் அதிக அளவில் வந்தார்கள். அப்போது, அவர்கள் எதிர்பார்க்காத மற்றுமொரு சம்பவமும் அங்கே அரங்கேறியது.



அய்யா வந்து விட்டார் என்பதை அறிந்த சமஸ்தான படைவீரர்கள் மீண்டும் ஆயுதங்களோடு பூவண்டர் தோப்புக்குள் நுழைந்தனர். அய்யாவைக் காண வந்த அனைவர் மீதும் தாக்குதல் நடத்தினர். அய்யா மீதும் அடி விழுந்தது. அதைப் பார்த்தவர்கள், படைவீரர்களுக்கு எதிராகப் பொங்கி எழுந்தனர். ஆனால், அய்யா அவர்களை அமைதிப்படுத்தினார். “பொறுமையாக இருப்பவர்கள்தான் பெரியோர் ஆக முடியும்” என்றார். இதையடுத்து அனைவரும் அமைதி ஆனார்கள்.

“பொறுத்து இருந்தவரே பெரியோரே ஆகுமக்கா
அறுத்திடவே என்றால் அபுருவமோ என்றவனுக்கு
வம்பு செய்வதைப் பார்த்து வதைக்க வந்தேன் அக்குலத்தை
அன்பு குடி கொண்ட அதிக மக்கா நீங்களெல்லாம்
பொறுத்து இருங்கோ பூலோகம் ஆள வைப்பேன்
மறுத்து உரையாடாமல் மக்களென்ற சான்றோர்கள்...”

-என்று, அதுபற்றி குறிப்பிடுகிறது அகிலத்திரட்டு.

இதைத் தொடர்ந்து, அய்யா வைகுண்டரை கைது செய்தனர் படைவீரர்கள். அய்யாவின் கைகளில் விலங்கு மாட்டிய போது அனைவரும் கண்ணீர் சிந்திக் கதறினர். ஆனால், ஆதிக்க ஜாதியினரோ, ‘நமக்கு தொந்தரவு செய்த எதிரி தொலைந்தான்’ என்று ஆனந்தக் கூத்தாடினர்.

முதலில் சுசீந்திரத்தில் தங்கியிருந்த மன்னன் சுவாதித் திருநாள் முன்பு அய்யா வைகுண்டரை ஆஜர் செய்தனர். அவன், அய்யாவை சிறையில் அடைக்க உத்தரவிட்டான். சில நாட்கள் சுசீந்திரத்தில் ஓய்வெடுத்த மன்னன், அதன் பின் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றான்.

ஆனாலும், அய்யாவைப் பழி வாங்கும் முடிவில் உறுதியாக இருந்தான். அதனால், அவரிடம் மேலும் விசாரணை நடத்துவதற்காக திருவனந்தபுரத்திற்கு இழுத்துக் கொண்டு வரவும் உத்தரவிட்டான்.

வைகுண்டனைக் கைது செய்யுங்கள்

நாஞ்சில் நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் இருந்த 18 ஜாதியினரும் எழுச்சி பெற்று விட்டார்கள் என்ற செய்தியை அடுத்து, அதுபற்றி விசாரிப்பதற்காக அங்கே பயணம் மேற்கொண்டார், திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் சுவாதி திருநாள். அவர் நாஞ்சில் நாட்டில் தங்கும் இடமாக தீர்மானித்தது சுசீந்திரம்.

மும்மூர்த்திகளும் ஒரு மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் இங்குள்ள தாணுமாலய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலுக்கும் சரி... மற்ற விஷயங்களுக்காகவும் சரி... திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் இங்கு வரும் போது தங்குவதற்கு என்றே சிறப்பு அரண்மனைகளும், அவர்கள் விசாரணை நடத்துவதற்காக தனி மன்றங்களும் இருந்தன.

ஓரிரு நாட்கள் பயணத்திற்கு பிறகு திருவனந்தபுரத்தில் இருந்து சுசீந்திரம் வந்து சேர்ந்தார் மன்னர் சுவாதி திருநாள். வந்ததும் முதல் வேளையாக அவர் விசாரித்தது, 18 ஜாதியினரின் எழுச்சிப் பற்றிதான்.ஏற்கனவே அவர் அனுப்பி இருந்த அமைச்சர் ஒருவர், நாஞ்சில் நாட்டின் அன்றைய நிலவரங்கள் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்துக்கொண்டு மன்னர் முன்பு ஆஜரானார்.

“தங்களை வணங்குகிறேன் மன்னா!”

“வாருங்கள் அமைச்சரே... மனம் சூடாகி வந்திருக்கும் எனக்கு களிப்பான செய்தி ஏதேனும் கொண்டு வந்து இருக்கிறீர்களா?”

“நிச்சயம், நான் சொல்லி செய்தி தங்களுக்குக் களிப்பைத் தரவேண்டும் என்றுதான் நான் எண்ணுகிறேன்...”

“சரி... வந்த விஷயத்தை சொல்லும்...”

“மன்னா... இந்த நாஞ்சில் நாட்டில் புதிதாய் ஒரு மாற்றம் தெரிகிறது. தனித்தனியாக பிரிந்து கிடந்த தாழ்த்தப்பட்ட ஜாதியினர் இன்று ஒன்றாக கைகோர்த்துத் திரிகிறார்கள். அவர்களது இந்த தைரியத்திற்கு காரணம், வைகுண்டன் என்ற பெயரில் புதிதாய் முளைத்திருக்கும் ஒருவன்தான். அவனை அவர்கள் விஷ்ணுவின் அவதாரமாகவே நம்புகிறார்கள். அவன் சொல்வதை வேதவாக்காக ஏற்று நடக்கிறார்கள். அவன் நில் என்றால் இவர்கள் நிற்கிறார்கள்; நட என்றால் நடக்கிறார்கள். மொத்தத்தில், இந்த 18 ஜாதியினருக்கும் அவன் வைப்பதுதான் சட்டமாக இருக்கிறது...” என்ற அமைச்சர், மேற்கொண்டு சொல்லத் தயங்கியபடியே நின்றார்.



“நீர் கொண்டு வந்தது களிப்பான செய்தியாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், உம் செய்தி என்னை இன்னும் கோபக்காரனாக்கிவிட்டது. வேறு, இது போன்ற செய்தி இருந்தாலும் இப்போதே சொல்லிவிடும்...” என்ற மன்னின் கண்களில் கோபக் கனல் தெறித்தது.

“கோபம் வேண்டாம் மன்னா... நான் சொல்வதைப் பொறுமையோடு கேட்க வேண்டுகிறேன்...”

“சரி... சொல்லித் தொலையும்...”

“அந்த வைகுண்டன் உருவாக்கியுள்ள கோவில்களுக்கு அந்த 18 ஜாதியினரும் சுதந்திரமாகச் செல்கிறார்கள். தலையில் தலைப்பாகை அணிந்து கொள்கிறார்கள். வேஷ்டியும் பூமியை உரசுகிறது. மேலும் அவன் கலி என்னும் நீசனை அழிக்க வந்தவனாம். நம்மையும் அவன் கலிநீசன் என்றே அழைக்கிறான்...” என்று, அந்த அமைச்சன் சொன்ன போதே, ஆவேசமாக கத்தினான் மன்னன்.

“நிறுத்து உனது பேச்சை. எனது ஆளுகையின் கீழ் உள்ள பகுதியில் எனக்கு எதிராகவே சதி நடக்கிறதா? அப்படியென்றால், நாடாளும் எனக்கு என்ன மதிப்பு?” என்று கர்ஜித்தவனை நோக்கி, அழகான பணிப்பெண் ஒருத்தி ஓடி வந்தாள். அவளது கையில் ஒரு குவளை. அதற்குள் சுத்தமான குடிநீர்.

வேகமாக அந்த குவளையைப் பற்றியவன், வேகமாகவே அதற்குள் இருந்த தண்ணீரை தன் வாய் வழியாக வயிற்றுக்குள் திணித்தான். அவனது தொண்டைக்குள் செல்ல மறுத்து சிந்திய தண்ணீர்த் துளிகள் வெந்நீராக மாறிப்போய் இருந்தன.

தொடர்ந்து, அரியணையில் அமர்ந்த மன்னனுக்கு பேச வார்த்தைகள் வரவில்லை. அமைதியாய் தலையில் கை வைத்தபடி தீவிர சிந்தனையில் மூழ்கினான். சில நிமிடங்கள் நிசப்தமாய்... அதே நேரம் பரபரப்பாக கழிந்தன.

அப்போது மெல்ல எழுந்தார், அவையில் இருந்த பூண்டர் (அய்யா வைகுண்டருக்கு தென்னந்தோப்பை கொடுத்து உதவியவர்தான்).

“நானும், நாஞ்சில் நாட்டு விவகாரம் தொடர்பாக தங்களிடம் பேச விரும்புகிறேன். மன்னரை சிறப்பு செய்வதற்கு பதிலாக சிறுமைப்படுத்திப் பேசுவதாக யாரும் எண்ண வேண்டாம்...” என்றார் அவர்.

“எல்லாச் செய்தியும்தான் வந்தாயிற்றே. நீ வேறு என்ன சொல்லப் போகிறாய்?” - இது மன்னன்.

“மீண்டும் மீண்டும் கோபம் வேண்டாம் மன்னா. நாஞ்சில் நாட்டின் உண்மை நிலையை மக்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் பற்றிப் பேச ஆசைப்படுகிறேன்”.

“சரி... சொல்ல வேண்டியதை உடனே சொல்லிவிட்டுச் செல்...”

“மன்னா... அந்த வைகுண்டர் வேறு யாரும் அல்ல; அந்த மகாவிஷ்ணுவின் மகா அவதாரம்தான். தாழ்த்தப்பட்ட குலத்தில் இறைவன் பிறப்பாரா? என்று தாங்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம்”.



“அப்படியென்றால், அவன் திருமால் அவதாரம் என்கிறாயா?”

“ஆமாம்!”

“என்ன... எரிகிற தீயில் எண்ணெய்விட்டுப் போக வந்திருக்கிறாயா? மகாவிஷ்ணு அவதாரம் பற்றி பேச ஆயர் குலத்தில் பிறந்த உனக்கு எவ்வளவு தைரியம் வேண்டும்? அந்த வைகுண்டனிடன் பணம் வாங்கிக் கொண்டு, அவனுக்கு ஆதரவாக என்னிடம் விவாதம் செய்கிறாயா?”

“தவறாக எண்ண வேண்டாம் அரசே! அவர் விஷ்ணுவின் அவதாரம் என்று நான் சொல்லவில்லை. நாஞ்சில் நாட்டு மக்கள்தான் சொல்கிறார்கள். அதைத்தான் தங்களிடம் சொன்னேன். உங்களது அடக்குமுறைகள் தொடர்ந்தால் நிச்சயம் வெற்றி பெறப் போவது நீங்கள் அல்ல; அந்த வைகுண்டர்தான். இதையும் நான் சொல்லவில்லை. மக்கள்தான் சொல்கிறார்கள்...” என்று பூவண்டர் சொன்ன போதே மன்னன் சுவாதித் திருநாள் குறுக்கிட்டான்.

“இவன் என் கோபத்தை அதிகரித்துக் கொண்டே போகிறான். இந்த ஏமாற்றுக்காரனை இப்போதே சிறையில் அடையுங்கள்... அதேபோல், தன்னை மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறும் அந்த வைகுண்டனையும் இப்போதே கைது செய்து என் முன்பு கொண்டு வாருங்கள்... என்று கொக்கரித்துவிட்டு, சிம்மாசனத்தில் இருந்து வேகமாக எழுந்து சென்றான், மன்னர் சுவாதி திருநாள்.

மன்னனின் இந்த அறிவிப்பு ஆதிக்க ஜாதியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியது. அதேநேரம், சாமித்தோப்பில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

“சாணான் குலத்தில் மாயன்
சார்வாரோ என்று எண்ண வேண்டாம்
பாணனாய்த் தோன்றி நிற்பார்
பறையனாய்த் தோன்றி நிற்பார்
தூண் எனத் தோன்றி நிற்பார்
தூண் எனத் தோன்றி நிற்பார்
தொலனாய்த் தோன்றி நிற்பார்
ஆண் எனத் தோன்றி நிற்பார்
அவர் உரு கேட்டிலீரோ...” - அகிலத்திரட்டு

அய்யாவிற்கு கொடுக்கப்பட்ட விசம்

இலங்கையில் ஸ்ரீராமரின் படைகளுக்கும், ராவணனின் படைகளுக்கும் இடையே கடும்போர். போர்க்களத்தில் ஸ்ரீராமர், அவரது இணை பிரியா தம்பி லட்சுமணர் மற்றும் வானரப் படையினர் ராவணன் படைகள் மீது எதிர் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது, ராவணனின் மகன் இந்திரஜித் எய்த நாகபாணம் ஒன்று லட்சுமணர் மீது தைக்க... அடுத்த நொடியே வில், அம்புகளோடு சரிந்தார் அவர். இதைக் கண்ட ஸ்ரீராமருக்கு ஒன்றும் ஓடவில்லை. தம்பியின் நிலையைப் பார்த்து தவித்தார்.

ஸ்ரீராமரின் கண்கள் கலங்கியிருப்பதைக் கண்ட விபீஷணன், சஞ்சீவி மலையில் உள்ள ஒரு மூலிகையை கொண்டு வந்தால் மட்டுமே லட்சுமணரின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்றார்.

உடனே, அந்த மூலிகையைத் தான் கொண்டு வருவதாகக் கூறிப் பறந்தார் ஆஞ்சநேயர்.

சஞ்சீவிமலையை அடைந்த ஆஞ்சநேயர் கண்களில் ஆயிரக்கணக்கான மூலிகைகள் தென்பட்டன. அவற்றில் எந்த மூலிகையை எடுத்துவர வேண்டும் என்பது தெரியாமல் தவித்த அவர், அந்த சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்துக்கொண்டு வந்தார்.

அவர், வான் வழியே சஞ்சீவி மலையை கொண்டு சென்றபோது, அதன் ஒரு சிறு பகுதி ஓரிடத்தில் கீழே விழுந்தது. அந்த மலைதான், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருந்துவாழ்மலை.

பல்வேறு அற்புத குணங்கள் கொண்ட அழுகண்ணி ஜோதிப்புல், நீலத்தும்பை அருவதா, நீலக்கொடிவேலி வில்வம், குமரி மிளகரனை, நீர்க்கிராம்பு, மாவிலங்கம், சர்க்கரை வேம்பு, தழுதாழை அசோகு, வெண்கொடி வேலி சீதா, சர்ப்பகந்தி சீனித்துளசி, ராமசீதா வெட்பாலை, நாராயணப் பச்சிலை, செங்கீழாநெல்லி, புல்லாமணக்கு, தைவேளை, கானாம் வாழை உள்ளிட்ட மூலிகைகள் அங்கு இன்றும் விளைகின்றன. சித்தர்கள் வாசம் செய்வதாகவும் நம்பப்படுகிறது. ஆன்மிகம் கலந்த மருத்துவச் செழிப்பு கொண்ட இந்த மலையைச் சுற்றி பல்வேறு வர்ம வைத்தியசாலைகள் இயங்கி வருகின்றன.



அந்த மலையில்தான் இப்போது நம் அய்யா வைகுண்டருக்கு விருந்து. அந்த மலையின் அடிவாரப் பகுதியில் தற்காலிகப் பந்தல் அமைத்து விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள், ஆதிக்க ஜாதியினர்.

பூமியை முத்தமிடும் வேஷ்டியும், தலையில் தலைப்பாகையுமாக மிகவும் எளியத் தோற்றத்தில் தனியொரு ஆளாக அங்கே சென்றார் வைகுண்டர். விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்த பந்தலுக்குள் நுழைவதற்கு முன்னதாக அந்த மலையை ஒருமுறை மேல்நோக்கிப் பார்த்தார்.

மலை முழுக்க இயற்கைப் பச்சை வண்ண ஆடை அணிந்திருந்தது. அங்கு விளையும் குளிர்ந்த மூலிகைகளின் வியர்வைத் துளிகளை சுமந்து வந்த தென்றல் காற்று அய்யாவின் மேனியில் அந்த மூலிகைகளின் சக்தியை ஒற்றி வைத்துவிட்டு பறந்து காணாமல் போனது. சில மைல் தூரம் கடந்து வந்த களைப்பு, அந்த இயற்கைக் காற்று கொடுத்த ஒற்றடத்தில் மாயமானது.

தனி ஆளாக வைகுண்டர் வருவார் என்பதை எதிர்பார்க்காத ஆதிக்க ஜாதியினருக்கு இன்ப அதிர்ச்சி. அவர்களது முகத்திலேயே அது அப்பட்டமாக தெரிந்தது.

விருந்துண்ண வந்த வைகுண்டரை பலமாக உபசரித்து வரவேற்றனர். அவர்கள் கொடுத்த விருந்தில் பங்கு கொண்டு சாப்பிட்டார் அய்யா. சிறிதுநேரம் அவர்களிடம் பேசிவிட்டு அங்கிருந்து விடை பெற்றுப் புறப்பட்டார்.

அய்யா அங்கிருந்து அகன்ற அடுத்த நொடியே ஆதிக்க ஜாதியினர் அடைந்த உற்சாகத்திற்கு அளவே இல்லை. “இன்றோடு நம் எதிரி காலி” என்று ஆனந்தக் கூத்தாடினர். காரணம், அய்யா சாப்பிட்ட உணவில் அவர்கள் விசத்தைக் கலந்து கொடுத்திருந்தனர்.

அலைகடலால் இழுத்துச் செல்லப்பட்டு, அந்த மாபெரும் மகா சமுத்திரத்திற்குள்ளேயே 3 நாட்களாக இருந்தவரை இந்த விசம் என்ன செய்யும்?

அய்யா வைகுண்டருக்கு, ஆதிக்க ஜாதியினர் கொடுத்த விசம் அமிர்தமாகவே மாறிவிட்டது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அவரிடம் வழக்கத்தைவிடக் கூடுதல் உற்சாகம் பிறந்தது.

இதையறிந்த ஆதிக்க ஜாதியினர் ஆடிப்போய் விட்டனர். ‘என்னது... விசம் வேலை செய்யவில்லையா?’ என்று பெருமூச்சு விட மட்டுமே அவர்களால் முடிந்தது. வெட்கமும் வேதனையும் அடைந்த அவர்கள், அடுத்ததாக சமஸ்தான மன்னரிடமே முறையிட முடிவு செய்தனர்.

அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மன்னராக இருந்தவர் சுவாதி திருநாள். முந்தைய சமஸ்தான மன்னர்களைவிட இவரது ஆட்சியில்தான் ஜாதியக் கொடுமைகள் தலைவிரித்து ஆட்டம் போட்டன. மனிதர்கள் என்றாலே, அது மேட்டுக்குடி மக்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்பது இவரது தாரக மந்திரம். அதனால், தாழ்த்தப்பட்ட பட்டியலில் இருந்த 18 ஜாதியினர் பல்வேறு வழிகளில் அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

நாடார் சமூகத்தைச் சேர்ந்த அய்யா வைகுண்டர் பற்றி மேட்டுக்குடியினர் சொன்ன போது கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டான் அந்த மன்னன்.

“நமது நாட்டில் நாம் வைப்பது சட்டமாக இல்லாமல், அடுத்தவன் வைப்பது சட்டமா? எந்த தைரியத்தில் அவன் தனிக்கூட்டம் நடத்துகிறான்?” என்று கொக்கரித்தான் அவன்.

மன்னனின் ஆவேசத்தைக் கண்ட ஆதிக்க ஜாதியினர், மேலும் சில குறைகளையும், கடலில் நங்கூரம் பாய்ச்சுவது போல் அவனது காதில் பலமாகப் போட்டனர்.

“அதுமட்டும் இல்லை மன்னா... தங்களுக்கு எதிராக ஒரு புரட்சிப் படையையும் அந்த வைகுண்டன் உருவாக்கிக் கொண்டிருக்கிறான். நாம் வரி கேட்கச் சென்றால், அதைக் கொடுக்க மறுப்பதோடு, நமக்கு மரியாதையே கொடுக்க மறுக்கிறார்கள். நம் முன்னால் கை கட்டி, வாய் பொத்தி நின்றவர்கள், சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள். பூமியை உரசும்படி வேஷ்டி கட்டுகிறார்கள். தலையில் தலைப்பாகை கட்டுகிறார்கள். தங்களுக்கு என்று தனியாக ஒரு கோவிலையும் உருவாக்கிக் கொண்டு வழிபாடு நடத்துகிறார்கள். அங்கே, அவர்களது ஒற்றுமையை வளர்க்கிறார்களாம்...



மேலும்... நம்மைக் கண்டால் மார்பை திறந்து காட்டி மரியாதை கொடுத்து வந்த அந்த 18 ஜாதிப் பெண்கள், இன்று மார்பை மறைத்துக் கொண்டு ஆனந்தமாக உலா வருகிறார்கள். போதாக்குறைக்கு அந்த வைகுண்டனை தங்கள் கடவுள் என்றே அவர்கள் மார் தட்டுகிறார்கள். அவன் விஷ்ணுவின் அவதாரமாம். போகிற போக்கைப் பார்த்தால், நம்மையே நாஞ்சில் நாட்டில் இருந்து விரட்டி விட்டு விடுவார்கள் போலும்...” என்று மூச்சு விடாமல், இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி முடித்தார்கள்.

ஏற்கனவே மன்னன் சுவாதி திருநாளுக்கு தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் ஆகாது. அப்படி இருக்கும் போது, அவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்று தெரிந்தால் கேட்கவும் வேண்டுமா என்ன? அந்த நிமிடமே அந்த உத்தரவை பிறப்பித்தான்.

“ஒருவேளை பகவான் விஷ்ணு மானிட அவதாரம் எடுத்தால், நம் உயர் குலத்தில் அல்லவா எடுப்பார்? அதனால், நாஞ்சில் நாட்டுக்கு உடனடியாக சென்று அங்கே என்ன நடக்கிறது என்பதை எனக்கு உடனடியாக தெரிவியுங்கள்...” என்று தனது தலைமை அமைச்சரிடம் கர்ஜித்தவன், தான் நாஞ்சில் நாடு செல்லத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் கட்டளையிட்டான்.