புதன், 15 ஏப்ரல், 2015

சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:

தானமானமில்லையப்பா சாதிவரம்பழியுதடா
சங்கக்கூட்டம் இல்லையாடா சரசக்கூட்டம் இக்கலியில்
கொம்பன்புழு வென்றறியாமல் குதிபோடுகிறார் கலியில்
மக்களுக்கு உத்தரவு மால்சொல்ல நீதிஉண்டோ
விளக்கம்:
=========
இங்கு வாழுகின்ற மக்கள் பிறருக்குத் தானம் செய்வதும் மான உணர்ச்சி இல்லாமல் இருப்பார்கள். இவர்கள் ஒவ்வொரு சாதிக்கும் கொடுக்கப்பட்ட வரம்புகளை மீறுவர். இக்கலியுகத்தில் சத்சஙகக் கூட்டத்தை (நல்லவர்கள் கூடும் சத்சங்கக் கூட்டத்தைச் சங்க கூட்டம்) இல்லாமல் ஆக்கி, அவற்றைச் சரச சல்லாப உல்லாசக் கூட்டம்(இயற்கை உறவுக்கு மாறாக உறவு கொள்ளும் தீயோர்கள் கூடும் கூட்டம்) ஆக்குவர். இப்படிச் செய்வதால் தவறான உறவால் கொம்பன் புழுக்களை உருவாக்குகின்றார்கள் (HIV வைரஸ்) என்பதும், அப்புழுக்கள் தங்களை உருவாக்குகின்ற அவர்களையே அழிக்கும் (எயிட்ஸ்) என்பதும் தெரியாமல் அவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள். அவர்களைத் திருத்துவதற்கு உரிய உத்தரவு பிறப்பிக்க அவர்களிடம் எந்தவித நீதியும் இல்லையே.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
============================
அறிவுசொல்லி தெளிவுதர நான்அம்பலத்தில் கணக்கர்வைத்தேன்
நான்வைத்த கணக்கரெல்லாம் நன்றுநடுக் கேட்கவில்லை
ஆடிநன்றாய் பாடிநன்றாய் கொடுக்கவில்லை என்மகனே
ஆதிபரன் சோதிநாதன் அதிகாரம் செய்யவாறேன்
விளக்கம்:
=========
உங்களுக்கு ஆன்மீக அறிவைச் சொல்லித் தரவும் ஆன்மீகத் தெளிவை உருவாக்கித் தரவும் நான் அம்பலத்தில் கணக்கர் ஒருவரை நியமித்தேன். ஆனால் நான் வைத்த கணக்கர் எல்லாரும் அவர்களிடத்தில் தவறுகளை சுட்டிக் காட்டி நீதி கேட்காமல் இருந்து விட்டனர். நன்றாக ஆடிப்பாடிப் பொழுதைக் கழித்துவிட்டு நீதிக்கணக்கை ஒப்படைக்கவில்லை. எனவே, ஆதிபரனும் சோதிமயனுமாகிய நான் இப்பொழுது அந்த அதிகாரச் சட்டத்தைச் செய்ய வருவேன்.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
===========================
புத்தியினால் கெட்டவரே பிழைக்கமதி தேடுங்கப்பா
அதிகாரசச்சட்டமது அவனியெங்கும் ஆகுதப்பா
பத்திரத்தைப்பாடிவந்தாலும் பாதையிலே போகவிடான்
கொடியென்ற நாகமது கொத்தும்வேளை அறிவீர்களோ
விளக்கம்:
=========
உங்கள் புத்தியினாலேயே நீங்கள் கெட்டு விட்டீர்கள். இனி மேலாவது பிழைத்து வாழுகின்ற அறிவைத் தேடுங்கள். எனது அதிகாரச் சட்டங்கள் இவ்வுலகம் எங்கும் பரந்து காணும் நல்ல காரியங்களை நான் உபதேசித்து வந்தாலும் என்னை நல்ல வழியில் போகவிடாமல் தடுக்கிறார்கள். உங்களிடம் உள்ள காம இச்சையாகிய நச்சுப்பாம்பு எப்பொழுது உங்களைக் கொத்தும் என்று நீங்கள் அறிய முடியாது.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
===========================
அடங்காத பாம்பதுதான் அதன்நஞ்சை அறிவீர்களோ
எண்ணடங்கா பாம்பதற்கு இருக்கிறார் இரையாக
இருபத்தைந்து பாம்பாக உங்களிடம் பார்க்கவருகிறாரே
சான்றோரிடமிருந்து பலசாத்திரங்கள் சொல்லித்தாறேன்
விளக்கம்:
=========
யாருக்கும் அடங்காதது காம இச்சையாகிய பாம்பு. அதன் விஷத்தன்மையை நீங்கள் அறிய முடியாது. யாருடைய எண்ணத்தாலும் அடக்க முடியாத விஷப் பாம்பாகிய காம இச்சைக்கு இரையாவதற்கு மக்கள் ஆளாகி உள்ளனர். உங்களுக்கு உருவாகும் காம இச்சையைப் போன்று இருபத்து ஐந்து மடங்கு காம இச்சை உள்ளவராகத் தோற்றமளித்து உங்களிடம் நீதி கேட்க அய்யாவாகிய நான் வருகிறேன். அப்படி வரும்போது சான்றோர்களுக்குப் பல சாத்திரங்களைத் தெளிவான முறையில் சொல்லி வருவேன்.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
===========================
என்னாலேஆகுமட்டுமிதுவரைக்கும் புத்திசொன்னேன்
நானாண்டி ஆண்டிநடுக்காட்டு குருவாண்டி
கேளாண்டிகுலத்தாண்டி இந்தகுவலயத்தை அளந்தாண்டி
சித்தாண்டிசிவனாண்டி இந்ததேசமெங்கும் நானாண்டி
விளக்கம்:
=========
என்னால் முடிந்த வரையில் தெளிவான முறையில் உங்களுக்கு உபதேசித்து விட்டேன். உங்களை ஆட்சி புரியும் ஆண்டியும், சுழி முனைக்குக் குருவாகிய ஆண்டியும், கோள்களுக்கு எல்லாம் சக்தி கொடுக்கும் ஆண்டியும், குலங்களுக்குத் தலைவனான ஆண்டியும், மூவுலகத்தையும் ஈரடியால் அளந்த ஆண்டியும், எட்டுச் சித்துகளுக்கும் காரணமான ஆண்டியும் நானே. எல்லாம் வல்ல சிவனாகிய ஆண்டியும் நானே. இத்தேசம் எங்கும் பரந்திருக்கின்ற ஆண்டியும் நானே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக