ஞாயிறு, 8 மார்ச், 2020

அய்யா வைகுண்டரின் கண்ணாடி தத்துவம்!

வைகுண்டர் 1851- ஆம் ஆண்டு ஜூன் மாதம், திங்கட்கிழமையில் வைகுண்டம் சென்றார். அவர் எடுத்த அவதார உடல் தற்போது சுவாமிதோப்பு பதியில் பள்ளியறையாக இருக்கும் இடத்தில்.. ஜோதி ரூபமாக பாவித்து மண்ணறையில் வைக்கப்பட்டுள்ளது.
ஒரு நாற்காலியில் அய்யா வைகுண்டர் இருப்பதாக பாவித்து, அவர் பயன் படுத்திய பொருட்களை மாத்திரமே வைத்து வழிபடுகிறார்கள்.
நாற்காலிக்குப் பின்புறம் ஆளுயர நிலைக்கண்ணாடி உள்ளது .
‘நீ தேடும் இறைவன் உனக்குள்ளேயே இருக்கிறான்’
என்பது அய்யா வைகுண்டரின் வாக்கு.
நிலைக் கண்ணாடி முன்பு தீபத்தை ஏற்றிவைத்து,
இந்த வழிபாட்டு முறையை ஆரம்பித்து வைத்தவரும் அவரே!
‘கண்ணாடியினுள் தெரியும் நீயே கடவுள். உனக்குள் சுடர்விடும் ஒளியே கடவுள்’
கண்ணாடியை அவ்வப்போது துடைத்து தூய்மையாக வைத்திருந்தால்தான் அதில் நம் உருவம் தெள்ளத்தெளிவாகத் தெரியும்.
அதுபோல், இறைவன் குடிகொண்டுள்ள நம் மனதை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கெட்ட எண்ணங்கள் இல்லாமல் வைத்துக்கொள்ள வேண்டும்.
அப்போதுதான், அந்த நல்ல உள்ளத்தில் இறைவன் குடியேறுவான்
அய்யா உண்டு.

அய்யா வைகுண்டர் பதிகள்

1.சுவாமிதோப்பு பதி......
======================
அய்யாவழி சமயத்தின் தலைமைபதியாகும். அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளுடன் தொடர்புள்ளவைகளான பதிகளுள் சுவாமிதோப்பு பதி மிக முக்கியமானதாகும். அய்யா வைகுண்டர் ஆறு ஆண்டுகள் தவம் இருந்ததும் இத்தலத்தில் ஆகும்.
மக்கள் கடவுள் வழிபாடு செய்வதற்காக அய்யா ஐந்து பதிகளை நிறுவினார். இதில் முதன்மையான பதி அய்யா வழியின் தலைமை இடமான சாமித்தோப்பில் அமைந்து உள்ளது. மற்ற பதிகள் வருமாறு:-
2. முட்டப்பதி,:
==============
கன்னியாகுமரி கடலில் இருந்து இரண்டு கிலோ தொலைவில் உள்ளது முட்டப்பதி. அய்யா வைகுண்டருடைய பக்தர்கள் துவையல் பதியின் கடைசி கட்டத்தை நடத்தியது இங்குதான். அந்த ஊரில் எழுநூற்று குடும்பங்கள் ஒன்றாக வசித்தனர். சைவ சமையல் அருந்தி எளிமையாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர்.
அங்கிருந்தவர்களுடைய வாழ்க்கை முறையைக் காண பலர் அங்கு வந்து சென்றனர். துவையல்பதி நடந்த இடமான தேங்காய்த் தோப்பு கன்னியாகுமரியில் இருந்த ஒரு ஆசார பிராமணர் ஒருவருடைய இடமாகும். அந்த இடத் திற்கு வந்து அங்கிருந்தவர்களுடைய வாழ்க்கை முறையைப் பார்த்த அவர், அய்யா வைகுண்டரின் பக்தராகவே மாறி அந்த இடத்தை அவருக்கே தானமாகக் கொடுத்து விட்டார்.
அய்யா வைகுண்டர் கடலுக்குள் நுழைந்து விஷ்ணுவைக்கண்டு ஆசி பெறச் சென்ற கடல் பால் கடல் ஆகும். அது இந்த பதியின் பக்கத்தில்தான் உள்ளது. அந்த கடலில் சென்று குளித்தால் புண்ணியம் கிடைக்கும் என மக்கள் நம்புகிறார்கள். எனவே ஒவ்வொரு வருடமும் பங்குனி மாத கடைசி வெள்ளிக் கிழமைகளில் சாமித் தோப்பில் இருந்து ஆயி ரக்கணக்கான பக்தர்கள் முட்டப்பதிக்கு நடந்தே வந்து அந்த இடத்தில் உள்ள கடலில் குளிக்கின்றனர்.
3. தாமரைக் குளம்பதி..
======================
அய்யா வைகுண்டரின் பக்தரான அரிகோபாலன் பிறந்த ஊர் தாமரைக்குளம். அவரை சகாதேவன் என்றும் கூறுவார்கள். அவர்தான் அகிலத்திரட்டு என்ற புனித நூலை அய்யா வழிகாட்ட எழுதி முடித்தார்.
சாமித்தோப்பில் இருந்து ஒரு கிலோ தொலைவில் தெற்கு பகுதியில் உள்ள தாமரைக்குளத்தில் இந்தப்பதி அமைந்து உள்ளது. கன்னியா குமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து அந்த இடத்திற்கு பஸ் மூலமும் செல்ல முடியும். நாகர்கோவிலில் இருந்து பதினாலு கிலோ தொலைவில் உள்ளது இந்தப்பதி.
4.அம்பலப்பதி........
==================
அய்யா வைகுண்டர் பலம் என்ற இடத்திற்குப் போய் இரண்டு வருட காலம் தங்கி இருந்தார். அதனால் இந்த பதி அம்பலபதி ஆனது. நாகர்கோவிலில் இருந்து பத்து கிலோ தொலைவில் உள்ளது இந்த முக்கியமான பதி. இந்தப் பதியை மூலகுண்டப்பதி என்றும் அழைக்கின்றனர்.
அம்பலப்பதி என்ற அந்த இடத்தில் தான் அய்யா சிவசொருபியாக இருந்தார். அய்யா அந்த இடத்தில் இருந்தபொழுது பார்வதி மற்றும் பகவதியின் சக்திகளை தனக்குள் எடுத்துக் கொண்டார். முருகனாக இருந்து வள்ளி மற்றும் தேவானையின் சக்திகளையும், பிரும்மாவாக இருந்து மண்டைக்காட்டம்மனின் சக்தியையும் பெற்றுக் கொண்டார்.
அங்கிருந்து அய்யாவின் பக்தர்கள் அவரை குதிரை ஒன்றின் மீது அமர வைத்து கடம்பான்குளம், பாம்பன் குளம் போன்ற இடங்களுக்கு அழைத்துச்சென்றனர். அந்த இடங்களில் எல்லாம் அய்யா நிழல் தாங்கல்களை அமைத்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சாமித்தோப்பிற்குத் திரும்பி விட்டார்.
5.பூப்பதி...
========
பூப்பதி நாகர்கோவிலில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஈத்தமொழி என்ற இடத்தில் பூமதன்தாய் என்ற உருவில் ஆறு வயது சிறுமியாக பூமாதேவி இருந்தாள். தெய்வீகத் தம்பதிகளான அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்விக்க சிலர் விரும்பினாலும் அந்த சிறுமியின் உறவினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் அந்தச் சிறுமியோ அய்யா வைகுண்டரின் புகழைப் பாடிக்கொண்டே இருந்து அவள் சாதாரணப் பெண் அல்ல என்பதை அவர்களுக்கு எடுத்துக் காட்டினாள். அதன்பின் அவளுடைய உறவினர்கள் அய்யா வைகுண்டரை தங்களுடைய ஊருக்கு அழைத்து அவருடன் அவளைத் திருமணம் செய்து வைத்தனர்.
அதன் பின் அந்த இடத்தில் இருந்த குளிர்ந்த காற்று வீசிக் கொண்டு இருந்த புன்னை மரத்தோப்பில் சென்று அய்யா தங்கினார். அந்த இடத்தில்தான் பின்னர் பூப்பதி என்ற பதி நிறுவப்பட்டது.

வழிபாட்டு முறை:

உருவம் அற்றவராக வழிபடும் இடத்தில் அவருக்கு பின்னால் கண்ணாடி இருக்கும், அதன் தத்துவம் அய்யாவை வணங்கும்போது நமது உருவம் அதில் தெரியும்.
• நீ தான் நான், நான் தான் நீ என்று இறைவன் சொன்ன தத்துவத்தை குறிக்கின்றது.
• உன்னுள்ளே நான் (இறைவன்) இருக்கிறேன் என்ற த்ததுவத்தை குறிக்கின்றது.
• கலி என்னும் மாயை நம்மை பற்றிக் கொள்ளாமல் உள்ளத்தை கண்ணாடி போல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை குறிக்கின்றது.
• உன்னிடத்தில் இருந்து பிரதிபலிக்கும் எண்ணமும் செயலும் மற்றவர்களுக்கு பயன்படும் விதமாக அமைய வேண்டும் என்பதை குறிக்கின்ற்து.
• அய்யா வைகுண்ட பரம்பொருளை நாடிவரும் பக்தர்கள் எல்லோரும் ஜாதி மதத்தை மறந்து உயர்ந்தோர் தாழ் தோர் என்ற வேறுபாடின்றி எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற சமத்துவத்தை குறிக்கின்றது.
அய்யாவினை வழிபடும் ஸ்தலங்கள் பதிகள் என அழைக்கப்படுகின்றன

கலியை அழிக்க வந்த வைகுண்ட அவதாரம்

1008 - ல் கடலில் இருந்து உதித்த வைகுண்டர் ஒரு ஒப்பற்ற அவதாரம்.
முதலாவதாக கலி யுகத்துக்கு முந்திய ஐந்து யுகங்களிலும் குறோணியின் ஒவ்வொரு துண்டுகளும் ஒவ்வொரு உருவம் தாங்கி உலகுக்கு வருகிறது. அவற்றை அழிக்கும் பொருட்டு நாராயண மூர்த்தி உலகில் பிறந்து அவனை அழித்தார்.
ஆனால் தற்போதைய கலி யுகத்தில் குறோணியின் ஆறாவது துண்டான கலி, மாயையாக உலகிற்கு வந்து மக்களின் மனதில் குடிகொண்டுள்ளதால் அவனை முன்பு போல் அழிப்பது இயலாததாகும். மேலும் கலியன் கேட்ட கொடிய வரங்களில் அவன் மும்மூர்த்திகளின் வடிவத்தையும் வரமாகப் பெற்ற காரணத்தினால், நாராயணர் நேரடியாக உலகில் அவதரித்து அவனை அழிக்க முடியாது. இதனை அகிலம், 'முன்னின்று கொல்ல மூவராலும் அரிது' என்கிறது.
ஆனால் முதலில் குறோணியை கொல்லத் தவம் இருக்கும் போது திருமால் சிவனிடம் கொடுத்த வாக்கு பிரகாரம் நாராயணர் தான் கலியனை அழிக்க கடமைபட்டிருக்கிறார். மேலும் கலியன் வரம் வாங்கி வரும் போது நாராயணருக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக, ஒரு பண்டாரத்தை கலியனை வைத்து அட்டி செய்ய வைப்பதன் மூலம், அவனை அழிக்க முடியும். இவ்வனைத்து நிலைகளையும் சரி செய்யும் வண்ணம் முதன் முதலாக, நிர்குணனாகிய, ஏகப்பரம்பொருளான இறைவன் நாராயணரை சூட்சுமமகக்கொண்டு மனித உடலிலே பண்டார வடிவத்தில் அவதரிக்கிறார்.
நாராயணரின் சூட்சும உடலாகிய முத்துக்குட்டி உடலில் இருந்த சம்போரணதேவனுக்கு 24 வருடங்களிக்கு பிறகு முக்தி அளிக்கப்பட்டு, அவ்வுடலில் கொல்லம் ஆண்டு 1008 மாசி 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்கு சரியான 4.3.1833 ல் திருச்செந்தூர் கடலுக்குள் வைகுண்டப் பரமபொருள் உதித்து வந்தார். அனேக நாமங்களோடு அதுநாள் மட்டும் இயங்கிய இறைவன், ஏகப்பரம் பொருளாக, திருப்பாற்கடலுக்குள் உதித்து இவ்வுலகிற்கு எழுந்தருளும் வைகுண்டர் அவதரித்தார். வைகுண்டருக்கு விஞ்சை என்னும் உபதேசம் நாராயணரால் கொடுக்கப்படுகிறது. பின்னர் வைகுண்டர் பண்டார உருவாக தெட்சணம் நோக்கி நடந்தார்.
சிவபெருமானுடன் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப் பிரகாரம் கலியை அழிக்கும் கடமை உடையவார் இவரே. வைகுண்ட அவதாரத்தில் இவ்வளவு சூட்சுமங்கள் மேற்கொண்டதற்கு காரணம், கலியன் வாங்கிய வரங்களை முறியடிப்பதற்காகவே.

துவையல் தவசு

அய்யா வைகுண்டர் கலி அரசனின் சிறை கொடுமைகளை வென்று சாமிதோப்பு வந்த பின்னால் சான்றோர் மக்களை  துவையல் தவசிற்க்கு அனுப்ப மனதில் நினைத்தார்.

உடனே அய்யாவின் விருப்ப படியே சான்றோர்கள் தங்கள் , வீடு, ஆடு, மாடு , சொத்து எல்லாவற்றையும் விற்று விட்டு அய்யாவை நாடி சென்றனர். அவர்களை கண்டவுடன் அய்யா வாகை பதிக்கு சென்று தவத்தை தொடங்க உத்தரவிட்டார்.

அந்த துவையல் தவம் என்பது என்னவென்றால் மூன்று நேரம் கடலில் உடுத்த துணியோடு குளித்து துவைத்து மதியம், மாலை இறைவனை தொழுது , கடல் நீரை மட்டுமே குடித்து, கடல் நீரில் மதியம் ஒரு நேரம் மட்டும் அன்னம் சமைத்து அதனை கடல் மணல் பரப்பிலிட்டு உண்ண வேண்டும். காலையிலும் மாலையிலும் உகபடிப்பை ஓதவேண்டும். மதியம் உச்சி பாட வேண்டும்.

இந்த தவத்திற்கு வந்தவர்கள் யார் யார் தெரியுமா? குழந்தைகள், வயோதிகர்கள் , இளைஞர்கள் , மற்றும் கருவுற்ற பெண்கள் என எந்த வித பாகு பாடுமின்றி அனைத்து தரப்பினரும் தவத்தில் கலந்து கொண்டனர்.

ஆறு மாதங்கள் வாகை பதியில் தவம் இருந்த பின்னால் அன்புக்கொடி மக்களை , அய்யா வைகுண்டர் முட்டப்பதிக்கு சென்று தவம் இருக்க பணித்தார். சொற்பனத்தின் மூலம் இந்த கட்டளை கொடுக்கப்பட்டது.

துவையல் தவத்தோர் முட்டபதி சென்று உற்சாகத்துடன் தவத்தை மேற்கொண்டனர். உலகத்தோர் மட்டுமன்றி எல்லா சாதி மக்களும்  அவர்களை கண்டு பொறமை கொள்ளும் அளவிற்கும், போற்றபடும் அளவிற்கும் அவர்களின் வாழ்க்கை முறையும் , ஒழுக்கமும் , பக்தியும் , தவமும் சிறப்பாக அமைந்தது.

கடல் நீரில் துவைக்கப்பட்ட உடைகள் பட்டு துணிகளை விட பளபளப்பாக மின்னின. உடை, உடல், மட்டும் துவைக்கபடாமல், கலியென்னும் அழுக்கு நீங்கபெற்று, புத்தி மற்றும் மனம் அனைத்தும் துவைக்கபட்டன. சுத்தமாக்கப்பட்டன . எனவே தான் இது துவையல் தவசு என்ற பெயர் பெற்றது.

அய்யா உண்டு

அய்யா சிவ சிவ சிவ சிவா அரகர அரகரா சிவ சிவ சிவ சிவா அரகர அரகரா விளக்கம்

அய்யா வைகுண்டர் அருளிய அருள் நூலில் யுகபடிப்பு பகுதியில் முதல் வரியாக இருப்பது தான் இந்த அதிசய மந்திரம். துவையல் தவசு மேற்கொண்ட அய்யாவழி அன்பர்கள் அய்யா வைகுண்டரின் அறிவுரையின் படி அந்தி நேரங்களில் ஓதியது இந்த உகபடிப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது .


அரகரா என்பது அய்யா நாராயணருக்கு அபயமிடும் மந்திரமாகும். சிவ சிவா என்பது சிவபெருமானை துதிக்கும் மந்திரமாகும் .

எனவே இந்த அய்யா சிவ சிவ சிவ சிவ அரகரா அரகரா சிவ சிவ சிவ சிவ அரகரா அரகரா என்னும் மந்திரம் நாராயணரையும் சிவபெருமானையும் இணைக்கும் மந்திரமாகும்.

அரியும் சிவனும் ஒன்றே என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்லும் எளிய மந்திரமாகும்.

ஒருவர் சொல்ல அதனை கேட்டு அனைவரும் தொடர்ந்து சொல்ல இறைவழிபாட்டில் ஒற்றுமையை வளர்க்கும் உன்னத மந்திரம் இது.


பதிகளையும் , தாங்கல்களையும் பக்தியோடு அன்புக்கொடி மக்கள் வலம் வரும்போது மனதை ஒருநிலைபடுத்தி, சமநிலை படுத்தி, பண்படுத்தி, பதப்படுத்தும் தெய்வீக மந்திரம் ஆகும்.

அய்யா சிவ சிவ சிவ சிவ அரகரா அரகரா சிவ சிவ சிவ சிவ அரகரா அரகரா
என்றே அனுதினமும் பாடுவோம்.
அன்பால் ஓன்று கூடுவோம்.
அன்பால் இறைவனை தேடுவோம்.
அய்யா வழியில் செல்லுவோம்.

அய்யா உண்டு

அய்யா வழியின் சமய சின்னம்

 அய்யா வழியின் சமயச் சின்னமாவது சுடரை தாங்கும் தாமரையாகும். இதில் தாமரை 1008 இதழ்களை உடைய சஹஸ்ரார தள (லாடம்) பகுதியையும், சுடர் ஆன்மாவையும் குறிக்கும். அய்யா வழியின் சின்னத்தில் பயன்படுத்தப்படும் தாமரை சஹஸ்ராரச் சக்கரமாதலால் இதன் தாமரைக்கு தண்டு வரையப்படாது.

   ஏழு (மேல்) + ஏழு (கீழ்) என பதினான்னு இதழமைப்பு பொதுவாக  வழக்கத்திலிருக்கிறது. மேலும் தாங்கல்களில் இச்சின்னத்தையே தலை கீழான தாமரை இதழ்களுடன் (சஹஸ்ராரத்தில் உள்ளது போல்) பயன்படுத்தும் ஒரு புதிய  கட்டடிடக்கலையமைப்பு அன்மை காலத்தில் வழக்கத்துக்கு வந்திருக்கிறது.


அய்யா உண்டு