1008 - ல் கடலில் இருந்து உதித்த வைகுண்டர் ஒரு ஒப்பற்ற அவதாரம்.
முதலாவதாக கலி யுகத்துக்கு முந்திய ஐந்து யுகங்களிலும் குறோணியின் ஒவ்வொரு துண்டுகளும் ஒவ்வொரு உருவம் தாங்கி உலகுக்கு வருகிறது. அவற்றை அழிக்கும் பொருட்டு நாராயண மூர்த்தி உலகில் பிறந்து அவனை அழித்தார்.
ஆனால் தற்போதைய கலி யுகத்தில் குறோணியின் ஆறாவது துண்டான கலி, மாயையாக உலகிற்கு வந்து மக்களின் மனதில் குடிகொண்டுள்ளதால் அவனை முன்பு போல் அழிப்பது இயலாததாகும். மேலும் கலியன் கேட்ட கொடிய வரங்களில் அவன் மும்மூர்த்திகளின் வடிவத்தையும் வரமாகப் பெற்ற காரணத்தினால், நாராயணர் நேரடியாக உலகில் அவதரித்து அவனை அழிக்க முடியாது. இதனை அகிலம், 'முன்னின்று கொல்ல மூவராலும் அரிது' என்கிறது.
ஆனால் முதலில் குறோணியை கொல்லத் தவம் இருக்கும் போது திருமால் சிவனிடம் கொடுத்த வாக்கு பிரகாரம் நாராயணர் தான் கலியனை அழிக்க கடமைபட்டிருக்கிறார். மேலும் கலியன் வரம் வாங்கி வரும் போது நாராயணருக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக, ஒரு பண்டாரத்தை கலியனை வைத்து அட்டி செய்ய வைப்பதன் மூலம், அவனை அழிக்க முடியும். இவ்வனைத்து நிலைகளையும் சரி செய்யும் வண்ணம் முதன் முதலாக, நிர்குணனாகிய, ஏகப்பரம்பொருளான இறைவன் நாராயணரை சூட்சுமமகக்கொண்டு மனித உடலிலே பண்டார வடிவத்தில் அவதரிக்கிறார்.
நாராயணரின் சூட்சும உடலாகிய முத்துக்குட்டி உடலில் இருந்த சம்போரணதேவனுக்கு 24 வருடங்களிக்கு பிறகு முக்தி அளிக்கப்பட்டு, அவ்வுடலில் கொல்லம் ஆண்டு 1008 மாசி 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்கு சரியான 4.3.1833 ல் திருச்செந்தூர் கடலுக்குள் வைகுண்டப் பரமபொருள் உதித்து வந்தார். அனேக நாமங்களோடு அதுநாள் மட்டும் இயங்கிய இறைவன், ஏகப்பரம் பொருளாக, திருப்பாற்கடலுக்குள் உதித்து இவ்வுலகிற்கு எழுந்தருளும் வைகுண்டர் அவதரித்தார். வைகுண்டருக்கு விஞ்சை என்னும் உபதேசம் நாராயணரால் கொடுக்கப்படுகிறது. பின்னர் வைகுண்டர் பண்டார உருவாக தெட்சணம் நோக்கி நடந்தார்.
சிவபெருமானுடன் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப் பிரகாரம் கலியை அழிக்கும் கடமை உடையவார் இவரே. வைகுண்ட அவதாரத்தில் இவ்வளவு சூட்சுமங்கள் மேற்கொண்டதற்கு காரணம், கலியன் வாங்கிய வரங்களை முறியடிப்பதற்காகவே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக