ஞாயிறு, 8 மார்ச், 2020

அய்யா வைகுண்டர் பதிகள்

1.சுவாமிதோப்பு பதி......
======================
அய்யாவழி சமயத்தின் தலைமைபதியாகும். அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளுடன் தொடர்புள்ளவைகளான பதிகளுள் சுவாமிதோப்பு பதி மிக முக்கியமானதாகும். அய்யா வைகுண்டர் ஆறு ஆண்டுகள் தவம் இருந்ததும் இத்தலத்தில் ஆகும்.
மக்கள் கடவுள் வழிபாடு செய்வதற்காக அய்யா ஐந்து பதிகளை நிறுவினார். இதில் முதன்மையான பதி அய்யா வழியின் தலைமை இடமான சாமித்தோப்பில் அமைந்து உள்ளது. மற்ற பதிகள் வருமாறு:-
2. முட்டப்பதி,:
==============
கன்னியாகுமரி கடலில் இருந்து இரண்டு கிலோ தொலைவில் உள்ளது முட்டப்பதி. அய்யா வைகுண்டருடைய பக்தர்கள் துவையல் பதியின் கடைசி கட்டத்தை நடத்தியது இங்குதான். அந்த ஊரில் எழுநூற்று குடும்பங்கள் ஒன்றாக வசித்தனர். சைவ சமையல் அருந்தி எளிமையாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர்.
அங்கிருந்தவர்களுடைய வாழ்க்கை முறையைக் காண பலர் அங்கு வந்து சென்றனர். துவையல்பதி நடந்த இடமான தேங்காய்த் தோப்பு கன்னியாகுமரியில் இருந்த ஒரு ஆசார பிராமணர் ஒருவருடைய இடமாகும். அந்த இடத் திற்கு வந்து அங்கிருந்தவர்களுடைய வாழ்க்கை முறையைப் பார்த்த அவர், அய்யா வைகுண்டரின் பக்தராகவே மாறி அந்த இடத்தை அவருக்கே தானமாகக் கொடுத்து விட்டார்.
அய்யா வைகுண்டர் கடலுக்குள் நுழைந்து விஷ்ணுவைக்கண்டு ஆசி பெறச் சென்ற கடல் பால் கடல் ஆகும். அது இந்த பதியின் பக்கத்தில்தான் உள்ளது. அந்த கடலில் சென்று குளித்தால் புண்ணியம் கிடைக்கும் என மக்கள் நம்புகிறார்கள். எனவே ஒவ்வொரு வருடமும் பங்குனி மாத கடைசி வெள்ளிக் கிழமைகளில் சாமித் தோப்பில் இருந்து ஆயி ரக்கணக்கான பக்தர்கள் முட்டப்பதிக்கு நடந்தே வந்து அந்த இடத்தில் உள்ள கடலில் குளிக்கின்றனர்.
3. தாமரைக் குளம்பதி..
======================
அய்யா வைகுண்டரின் பக்தரான அரிகோபாலன் பிறந்த ஊர் தாமரைக்குளம். அவரை சகாதேவன் என்றும் கூறுவார்கள். அவர்தான் அகிலத்திரட்டு என்ற புனித நூலை அய்யா வழிகாட்ட எழுதி முடித்தார்.
சாமித்தோப்பில் இருந்து ஒரு கிலோ தொலைவில் தெற்கு பகுதியில் உள்ள தாமரைக்குளத்தில் இந்தப்பதி அமைந்து உள்ளது. கன்னியா குமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து அந்த இடத்திற்கு பஸ் மூலமும் செல்ல முடியும். நாகர்கோவிலில் இருந்து பதினாலு கிலோ தொலைவில் உள்ளது இந்தப்பதி.
4.அம்பலப்பதி........
==================
அய்யா வைகுண்டர் பலம் என்ற இடத்திற்குப் போய் இரண்டு வருட காலம் தங்கி இருந்தார். அதனால் இந்த பதி அம்பலபதி ஆனது. நாகர்கோவிலில் இருந்து பத்து கிலோ தொலைவில் உள்ளது இந்த முக்கியமான பதி. இந்தப் பதியை மூலகுண்டப்பதி என்றும் அழைக்கின்றனர்.
அம்பலப்பதி என்ற அந்த இடத்தில் தான் அய்யா சிவசொருபியாக இருந்தார். அய்யா அந்த இடத்தில் இருந்தபொழுது பார்வதி மற்றும் பகவதியின் சக்திகளை தனக்குள் எடுத்துக் கொண்டார். முருகனாக இருந்து வள்ளி மற்றும் தேவானையின் சக்திகளையும், பிரும்மாவாக இருந்து மண்டைக்காட்டம்மனின் சக்தியையும் பெற்றுக் கொண்டார்.
அங்கிருந்து அய்யாவின் பக்தர்கள் அவரை குதிரை ஒன்றின் மீது அமர வைத்து கடம்பான்குளம், பாம்பன் குளம் போன்ற இடங்களுக்கு அழைத்துச்சென்றனர். அந்த இடங்களில் எல்லாம் அய்யா நிழல் தாங்கல்களை அமைத்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சாமித்தோப்பிற்குத் திரும்பி விட்டார்.
5.பூப்பதி...
========
பூப்பதி நாகர்கோவிலில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஈத்தமொழி என்ற இடத்தில் பூமதன்தாய் என்ற உருவில் ஆறு வயது சிறுமியாக பூமாதேவி இருந்தாள். தெய்வீகத் தம்பதிகளான அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்விக்க சிலர் விரும்பினாலும் அந்த சிறுமியின் உறவினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் அந்தச் சிறுமியோ அய்யா வைகுண்டரின் புகழைப் பாடிக்கொண்டே இருந்து அவள் சாதாரணப் பெண் அல்ல என்பதை அவர்களுக்கு எடுத்துக் காட்டினாள். அதன்பின் அவளுடைய உறவினர்கள் அய்யா வைகுண்டரை தங்களுடைய ஊருக்கு அழைத்து அவருடன் அவளைத் திருமணம் செய்து வைத்தனர்.
அதன் பின் அந்த இடத்தில் இருந்த குளிர்ந்த காற்று வீசிக் கொண்டு இருந்த புன்னை மரத்தோப்பில் சென்று அய்யா தங்கினார். அந்த இடத்தில்தான் பின்னர் பூப்பதி என்ற பதி நிறுவப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக