வியாழன், 12 மார்ச், 2020

மிச்சம் இல்லாமல் தர்மம் செய்

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருகில் உள்ள சின்னஞ் சிறிய கிராமம் சுவாமி தோப்பு. இந்த ஊரில்தான் அய்யா வைகுண்ட சுவாமிகள் திருக்கோயில் திருப்பதி உள்ளது.
கொல்லம் ஆண்டு 1008 மாசி மாதம் 20ஆம் நாள் திருச்செந்தூர் கடலில் இருந்து சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும், ஒரு மூர்த்தியாக  வைகுண்ட பரம்பொருளாக அவதரித்து வெளியே வந்தார் அய்யா வைகுண்ட சுவாமி. மக்கள் மனதில் குடிகொண்டிருக்கும் கலி என்னும் மாய அரக்கனை அழித்து, அவர்களை தர்மயுக வாழ்வுக்கு அழைத்துச் செல்ல வந்த நாராயணன் எடுத்த அவதாரமே வைகுண்ட அவதாரம். 

அய்யா வைகுண்ட சுவாமி கோயிலில் பூஜையோ, பூசாரியோ கிடையாது. அய்யா வைகுண்டரின் சிந்தாந்தம் 'நீ தேடும் சிவன் உனக்குள்ளேயே இருக்கின்றான்' என்பதுதான். அதை குறிப்பால் உணர்த்துவதுதான் இந்த வழிபாட்டு முறை. 

இந்த வழிபாட்டு முறையை ஆரம்பித்து வைத்ததும் அய்யா வைகுண்டர்தான். மகாவிஷ்ணுவின் அவதாரமாக அய்யா வைகுண்ட சுவாமிகள் இருந்தபோதும் தனது அவதார திருப்பணி நிறைவுறும்வரை 'சிவனே அய்யா... அய்யா சிவ சிவ சிவ சிவ அரஹரா அரஹரா...’ என ஈசனையே போற்றி துதித்தார். '

அரசனுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் கிரீடம்’ என்று ஆண்களைத் தலையில் தலைப்பாகை கட்ட வைத்தார் அய்யா வைகுண்ட சுவாமிகள்.
அய்யா வழி பக்தர்கள் புருவ மத்தியில் இருந்து நெற்றியில் மேல் நோக்கி திருமண்ணால் நாமம் இட்டுக் கொள்வார்கள். இந்தத் திருமண், பூமிக்கு அடியில் உள்ள தூய்மையான வெள்ளை மண்ணில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

சுவாமிதோப்பு பதியில், கருவறையில் ஒரு கண்ணாடி இருக்கும். அதை பார்த்து தெய்வத்தை தன்னுடைய உருவமாக நினைத்து வழிபட வேண்டும். இங்கே தினமும் மூணு வேளை சமபந்தி அன்னதானம் நடக்கும். 'பிச்சை எடுத்து மிச்சம் இல்லாமல் தர்மம் செய்’ இதுதான் அய்யா வைகுண்ட சுவாமியின் தத்துவம்.

அய்யா வைகுண்டர்

தங்களைத் தாங்களே வணங்கிக் கொள்ளும் ஒரு சம்பிரதாயம் கன்னியாகுமரியில் ஒரு சாராரிடம் உள்ளது. தன்னைத்தானே எப்படி வணங்கிக் கொள்வது? கருவறைக்குள் நிலைக்கண்ணாடியை வைத்து அதில் தெரியும் தங்கள் உருவத்தையே வணங்குகிறார்கள். அவர்கள் -  அய்யா வழியினர்.

 கன்னியாகுமரி சாஸ்தான் கோவில்விளையில் வாழ்ந்து, சரித்திரமாய் மறைந்த அய்யா வைகுண்டர் கட்டமைத்த தத்துவங்களையும், வாழ்க்கை முறைகளையும் பின்பற்றுவோரே அய்யாவழி மக்கள். மாபெரும் சமூக சீர்திருத்தவாதியாக அடையாளம் காட்டப்படும் வைகுண்டர், திருமாலின் அவதாரமாக கருதி வணங்கப்படுகிறார்.

மஹாவிஷ்ணு தசாவதாரம் எடுத்தவர். அதோடு, கலி மாயையில் சிக்கி வேதனைக்குள்ளாகும் மாந்தர்களை காக்க நாராயணன் எடுத்த மற்றொரு அவதாரமே வைகுண்டவதாரம் என்று அய்யாவழி மக்கள் நம்புகிறார்கள்.

1809-ல் குமரி மாவட்டத்தின் சாஸ்தான் கோவில்விளை என்று அழைக்கப்படும் சாமித்தோப்பில் பொன்னுமாடன்-வெயிலாள் தம்பதிக்கு மகனாக அவதரித்தார் வைகுண்டர். மகனுக்கு ‘முடிசூடும் பெருமாள்’ என பெயரிட்டனர் பெற்றோர்.

மாடன், சூடன் என்று மட்டுமே பெயரிட உரிமைபெற்ற ஒரு சாதியில் பிறந்தவருக்கு முடிசூடும் பெருமாள் என்று பெயரிட்டதை மேல்சாதியினர் அங்கீகரிக்க மறுத்தனர். கொடுமைகளையும், மிரட்டலையும் சகிக்காத பொன்னுமாடன் ‘முடிசூடும் பெருமாள்’ என்ற பெயரை முத்துக்குட்டி என்று மாற்றினார்.

முத்துக்குட்டி, இளவயதிலேயே சமூக ஆர்வம் மிக்கவராக இருந்தார். மேல் சாதியினரின் கொடுமைகளுக்கு எதிராக போர்க்குரல் எழுப்பினார். ஆண்டாண்டு காலமாக அடங்கி ஒடுங்கி கிடந்த மக்களுக்கு உணர்வூட்டும் விதமாக போதனைகள் செய்தார். தலையிலே முண்டாசு கட்டி, நெற்றியில் நாமம் இட்டு, முட்டுக்கு கீழே முழு வேட்டி கட்டி வழிபடும் உரிமையை பெற்று தந்தார். இதனால் முத்துக்குட்டி பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  ஆயினும் அனைத்தையும் தன் உறுதியால் விரட்டினார். இந்த நிலையில் தன்னைவிட வயது முதிர்ந்த, ஒரு பெண் குழந்தைக்கு தாயான திருமால் வடிவு என்ற பெண்ணை மணம் புரிந்தார் முத்துக்குட்டி. இந்த இல்லற வாழ்வில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.

முத்துக்குட்டியை தீர்த்துக்கட்ட முடிவெடுத்த ராஜவம்சம், அவரை மருந்துவாழ்மலைக்கு விருந்துக்கு அழைத்து விஷம் கொடுத்தது. சிறிது சிறிதாக உயிர் எடுக்கும் அந்த விஷத்தால் கடும் காய்ச்சலுக்கு உள்ளானார் முத்துக்குட்டி. பல்வேறு மருத்துவங்களாலும் குணம் தெரியவில்லை. இதனால் துடித்துப்போன தாயார் வெயிலாளும், மனைவி திருமால்வடிவும், நாராயணனின் அருள்வேண்டி உருகி நின்றனர்.

ஒருநாள் இரவில் ஒளிவடிவாய் தோன்றிய நாராயணன், ‘திருச்செந்தூர் கோயிலில் நடக்கும் மாசித் திருவிழாவுக்கு உன் பிள்ளையை அழைத்து வா’ என்று ஆணையிட்டார். உடல்நிலை மிகவும்  தொய்வடைந்த நிலையில் பெண்கள் இருவரும் தொட்டில் கட்டி முத்துக்குட்டியை தோளில் சுமந்து சென்றனர். கூடங்குளம் அருகில் நவலாடி என்ற இடத்தில் உணவருந்துவதற்காக  தோள்சுமையை இறக்கியபோது முடங்கிக் கிடந்த முத்துக்குட்டி எழுந்தார், நடந்தார். நேராக திருச்செந்தூர் கடற்கரைக்குச் சென்றார். தாய்க்கும் மனைவிக்கும் இந்த அற்புதம் மயக்கத்தையே கொடுத்தது.

விறுவிறுவென்று கடலுக்குள் இறங்கிய முத்துக்குட்டியை சிறிது நேரத்தில் காணவில்லை. இறக்கும் நிலையில் கொண்டு வரப்பட்ட ஒருவர் கடலுக்குள் நடந்து சென்று மறைந்தது அங்கே கூடியிருந்த மக்களுக்குப் புரியாத புதிராக இருந்தது. முத்துக்குட்டி கடலுக்குள் மூழ்கி இறந்துவிட்டதாக எண்ணினார்கள். ஆயினும் வெயிலாள் மட்டும் கரையில் மகனின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தார்.

கடலுக்குள் சென்ற முத்துக்குட்டியை, நாராயணரின் தூதுவர்கள் லெட்சுமி கோயில் கொண்டிருந்த மகர மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு திருமால் மூன்று நாட்கள் கலிகாலம் பற்றி போதித்து வைகுண்டர் என்று நாமகரணம் சூட்டி, பூவுலகை ரட்சிக்க தன் பிரதிநிதியாய் வெளியில்  அனுப்பிவைத்தார். கடலுக்குள் இருந்து ஒளியாய் வெளிவந்த மகனை கட்டி அணைத்து முத்தமிட்டார் வெயிலாள்.

ஆனால், ‘அம்மா. நான் வைகுண்டராக வந்திருக்கிறேன். இனி நான் இந்த பூவுலகிற்கே சொந்தம்’ என்று தன் நிலையை விளக்கினார், மகன். இதைக்கேட்ட மக்களும் வெயிலாளைப் போலவே திகைத்து நின்றனர்.

பின்னர் சாமித்தோப்பு வந்த வைகுண்டர், மக்களுக்கு ஆன்மிக போதனைகளை செய்யத் தொடங்கினார். Ôஇந்த உலகத்தில் சாதியின் பெயரால் மோதல்கள் உருவாகிவிட்டன. மதத்தின் பெயரால் சண்டைகள் பெருகிவிட்டன. இருப்பவன், இல்லாதவன் என்று ஏகப்பட்ட பிரச்னைகள்- மனிதர்கள் திசைமாறி சென்று கொண்டிருக்கிறார்கள்.

 இவை எல்லாம் கலியின் அடையாளங்கள். இவற்றை ஒழிக்கவே நான் அவதாரம் எடுத்திருக்கிறேன்’ என்று மக்களுக்கு போதிக்கத் தொடங்கினார். மனிதருக்குள் எந்த பேதமுமின்றி அனைவருக்கும் வழிபாட்டு உரிமையை பெற்று தந்தார். சாதிக்கொடுமைக்கு எதிரான அவரது பிரசாரம், திருவிதாங்கூர் அரசுக்குக் கோபமூட்டியது. அவருக்கு தண்டனை அளிக்க திட்டமிடப்பட்டது. புலிக்கூண்டிற்குள் தூக்கி வீசப்பட்டார் வைகுண்டர். பல நாட்களாகப் பசியும் பட்டினியுமாகக் கிடந்த புலி, வைகுண்டரை பார்த்ததும் அமைதி யாய் அவர் காலடியில் வந்து படுத்தது. ராஜ கொடுமைகளைத் தன் சக்தியால் முறியடித்த வைகுண்டர், பின்னர் குமரிக்கு வந்து பதிகள் அமைத்து மக்களுக்கு போதனைகள் செய்தார்.

அவர் அருளிய ‘அகிலதிரட்டு அம்மானை’ இன்று அவர் வழிவந்த மக்களுக்கு புனித நூலாக உள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு கோடிக்கு மேலானோர் இன்று அய்யாவழியை பின்பற்றி வருகின்றனர். அய்யாவழி வழிபாட்டு தலங்கள் ‘பதிகள்’ என்று அழைக் கப்படுகின்றன. அய்யா வைகுண்டரின் பாதம் பட்ட சாமித்தோப்பு தலைமைபதி, சின்னமுட்டம். முட்டபதி, சொத்தவிளை அம்பலபதி, நாராயணன்விளை. பூப்பதி, தென்தாமரைகுளம்பதி, கோவளம், துவாரகாபதி ஆக விளங்குகின்றன. இது தவிர தமிழகம் முழுமைக்கும் ஏழாயிரத்துக்கும் அதிகமான தாங்கல்கள் உள்ளன. இந்த தாங்கல்கள் அய்யாவின் தத்துவங்களை விளக்கும் கல்விக்கூடங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. தூய்மை, எளிமையை வலியுறுத்துகிறது அய்யாவழி வழிபாட்டு முறை. ஒரு நாளைக்கு ஒருமுறையாவது தொழ வேண்டும் என்பது நியதி.

காலை உகப்பெருக்கு, மதியம் உச்சிப்படிப்பு, இரவு உகப்பெருக்கு ஆகியவை கடைபிடிக்கப்படவேண்டிய முக்கிய நடை முறைகள். ‘பிச்சையெடுத்து மிச்சமில்லாமல் அறப்பணியாற்று’ என்று அய்யா வைகுண்டரின் தத்துவத்துக்கு ஏற்ப எல்லா பதிகளிலும் 5 வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது. அய்யாவழி மக்கள் நாமம் இடப் பயன்படுத்தும் திருநீறு பூமிக்கு அடியில் உள்ள தூய வெள்ளை மண்ணில் இருந்து தயாரிக் கப்படுகிறது. புருவ மத்தியில் இருந்து தீபவடிவில் நெற்றியில் மேல்நோக்கி இந்நாமம் இடப்படுகிறது.

அய்யாவழி மக்களின் தலைமைபதியாகிய சாமித்தோப்பு பதியில் ஆவணி, தை, வைகாசி ஆகிய மாதங்களில் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. மாசி 20-ம் நாள் அய்யா வைகுண்டரின் அவதாரத்திருநாள்; சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த பதியில் உள்ள முத்திரிபதம் என்னும் தீர்த்த கிணறு, சிறப்பு பெற்றதாகும். ஆராதனை, அபிஷேகம் இல்லாத அய்யா வழிபாட்டு முறைக்கு இத்தீர்த்த பதத்தை தெளிப்பதன் மூலம் அனைத்து சிறப்பும் நிறைவு பெற்றுவிடுவதாக நம்பப்படுகிறது.

 இந்த தீர்த்தம் அருமருந்து என்றும் போற்றப்படுகிறது. முண்டாசு கட்டி தீப நாமமிட்டு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பதிகளுக்கு வந்து வழிபடுகின்றனர். மேலும் சாமித்தோப்பு தலைமைபதியின் கருவறைக்குள் ஒரு கட்டில் போடப்பட்டுள்ளது. அதன்மேல் அகிலத்திரட்டு மூலச்சுவடி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கட்டில் மாற்றப்படும். ஏனென்றால் பழைய கட்டில் முற்றிலும் கிழிந்திருக்கும். இக்கட்டிலில் அய்யா வைகுண்டர் வந்து உறங்குவதாக அய்யா வழி மக்கள் நம்புகிறார்கள்.

குமரி கடலோரம் மட்டுமின்றி தமிழகத்தின் பல கிராமங்கள், அய்யா வைகுண்டரின் தத்துவங்களையும், போதனைகளையும் தினந்தோறும் நினைவு கூறுகின்றன.

ஞாயிறு, 8 மார்ச், 2020

அய்யா வைகுண்டரின் கண்ணாடி தத்துவம்!

வைகுண்டர் 1851- ஆம் ஆண்டு ஜூன் மாதம், திங்கட்கிழமையில் வைகுண்டம் சென்றார். அவர் எடுத்த அவதார உடல் தற்போது சுவாமிதோப்பு பதியில் பள்ளியறையாக இருக்கும் இடத்தில்.. ஜோதி ரூபமாக பாவித்து மண்ணறையில் வைக்கப்பட்டுள்ளது.
ஒரு நாற்காலியில் அய்யா வைகுண்டர் இருப்பதாக பாவித்து, அவர் பயன் படுத்திய பொருட்களை மாத்திரமே வைத்து வழிபடுகிறார்கள்.
நாற்காலிக்குப் பின்புறம் ஆளுயர நிலைக்கண்ணாடி உள்ளது .
‘நீ தேடும் இறைவன் உனக்குள்ளேயே இருக்கிறான்’
என்பது அய்யா வைகுண்டரின் வாக்கு.
நிலைக் கண்ணாடி முன்பு தீபத்தை ஏற்றிவைத்து,
இந்த வழிபாட்டு முறையை ஆரம்பித்து வைத்தவரும் அவரே!
‘கண்ணாடியினுள் தெரியும் நீயே கடவுள். உனக்குள் சுடர்விடும் ஒளியே கடவுள்’
கண்ணாடியை அவ்வப்போது துடைத்து தூய்மையாக வைத்திருந்தால்தான் அதில் நம் உருவம் தெள்ளத்தெளிவாகத் தெரியும்.
அதுபோல், இறைவன் குடிகொண்டுள்ள நம் மனதை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கெட்ட எண்ணங்கள் இல்லாமல் வைத்துக்கொள்ள வேண்டும்.
அப்போதுதான், அந்த நல்ல உள்ளத்தில் இறைவன் குடியேறுவான்
அய்யா உண்டு.

அய்யா வைகுண்டர் பதிகள்

1.சுவாமிதோப்பு பதி......
======================
அய்யாவழி சமயத்தின் தலைமைபதியாகும். அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளுடன் தொடர்புள்ளவைகளான பதிகளுள் சுவாமிதோப்பு பதி மிக முக்கியமானதாகும். அய்யா வைகுண்டர் ஆறு ஆண்டுகள் தவம் இருந்ததும் இத்தலத்தில் ஆகும்.
மக்கள் கடவுள் வழிபாடு செய்வதற்காக அய்யா ஐந்து பதிகளை நிறுவினார். இதில் முதன்மையான பதி அய்யா வழியின் தலைமை இடமான சாமித்தோப்பில் அமைந்து உள்ளது. மற்ற பதிகள் வருமாறு:-
2. முட்டப்பதி,:
==============
கன்னியாகுமரி கடலில் இருந்து இரண்டு கிலோ தொலைவில் உள்ளது முட்டப்பதி. அய்யா வைகுண்டருடைய பக்தர்கள் துவையல் பதியின் கடைசி கட்டத்தை நடத்தியது இங்குதான். அந்த ஊரில் எழுநூற்று குடும்பங்கள் ஒன்றாக வசித்தனர். சைவ சமையல் அருந்தி எளிமையாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர்.
அங்கிருந்தவர்களுடைய வாழ்க்கை முறையைக் காண பலர் அங்கு வந்து சென்றனர். துவையல்பதி நடந்த இடமான தேங்காய்த் தோப்பு கன்னியாகுமரியில் இருந்த ஒரு ஆசார பிராமணர் ஒருவருடைய இடமாகும். அந்த இடத் திற்கு வந்து அங்கிருந்தவர்களுடைய வாழ்க்கை முறையைப் பார்த்த அவர், அய்யா வைகுண்டரின் பக்தராகவே மாறி அந்த இடத்தை அவருக்கே தானமாகக் கொடுத்து விட்டார்.
அய்யா வைகுண்டர் கடலுக்குள் நுழைந்து விஷ்ணுவைக்கண்டு ஆசி பெறச் சென்ற கடல் பால் கடல் ஆகும். அது இந்த பதியின் பக்கத்தில்தான் உள்ளது. அந்த கடலில் சென்று குளித்தால் புண்ணியம் கிடைக்கும் என மக்கள் நம்புகிறார்கள். எனவே ஒவ்வொரு வருடமும் பங்குனி மாத கடைசி வெள்ளிக் கிழமைகளில் சாமித் தோப்பில் இருந்து ஆயி ரக்கணக்கான பக்தர்கள் முட்டப்பதிக்கு நடந்தே வந்து அந்த இடத்தில் உள்ள கடலில் குளிக்கின்றனர்.
3. தாமரைக் குளம்பதி..
======================
அய்யா வைகுண்டரின் பக்தரான அரிகோபாலன் பிறந்த ஊர் தாமரைக்குளம். அவரை சகாதேவன் என்றும் கூறுவார்கள். அவர்தான் அகிலத்திரட்டு என்ற புனித நூலை அய்யா வழிகாட்ட எழுதி முடித்தார்.
சாமித்தோப்பில் இருந்து ஒரு கிலோ தொலைவில் தெற்கு பகுதியில் உள்ள தாமரைக்குளத்தில் இந்தப்பதி அமைந்து உள்ளது. கன்னியா குமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து அந்த இடத்திற்கு பஸ் மூலமும் செல்ல முடியும். நாகர்கோவிலில் இருந்து பதினாலு கிலோ தொலைவில் உள்ளது இந்தப்பதி.
4.அம்பலப்பதி........
==================
அய்யா வைகுண்டர் பலம் என்ற இடத்திற்குப் போய் இரண்டு வருட காலம் தங்கி இருந்தார். அதனால் இந்த பதி அம்பலபதி ஆனது. நாகர்கோவிலில் இருந்து பத்து கிலோ தொலைவில் உள்ளது இந்த முக்கியமான பதி. இந்தப் பதியை மூலகுண்டப்பதி என்றும் அழைக்கின்றனர்.
அம்பலப்பதி என்ற அந்த இடத்தில் தான் அய்யா சிவசொருபியாக இருந்தார். அய்யா அந்த இடத்தில் இருந்தபொழுது பார்வதி மற்றும் பகவதியின் சக்திகளை தனக்குள் எடுத்துக் கொண்டார். முருகனாக இருந்து வள்ளி மற்றும் தேவானையின் சக்திகளையும், பிரும்மாவாக இருந்து மண்டைக்காட்டம்மனின் சக்தியையும் பெற்றுக் கொண்டார்.
அங்கிருந்து அய்யாவின் பக்தர்கள் அவரை குதிரை ஒன்றின் மீது அமர வைத்து கடம்பான்குளம், பாம்பன் குளம் போன்ற இடங்களுக்கு அழைத்துச்சென்றனர். அந்த இடங்களில் எல்லாம் அய்யா நிழல் தாங்கல்களை அமைத்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சாமித்தோப்பிற்குத் திரும்பி விட்டார்.
5.பூப்பதி...
========
பூப்பதி நாகர்கோவிலில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஈத்தமொழி என்ற இடத்தில் பூமதன்தாய் என்ற உருவில் ஆறு வயது சிறுமியாக பூமாதேவி இருந்தாள். தெய்வீகத் தம்பதிகளான அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்விக்க சிலர் விரும்பினாலும் அந்த சிறுமியின் உறவினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் அந்தச் சிறுமியோ அய்யா வைகுண்டரின் புகழைப் பாடிக்கொண்டே இருந்து அவள் சாதாரணப் பெண் அல்ல என்பதை அவர்களுக்கு எடுத்துக் காட்டினாள். அதன்பின் அவளுடைய உறவினர்கள் அய்யா வைகுண்டரை தங்களுடைய ஊருக்கு அழைத்து அவருடன் அவளைத் திருமணம் செய்து வைத்தனர்.
அதன் பின் அந்த இடத்தில் இருந்த குளிர்ந்த காற்று வீசிக் கொண்டு இருந்த புன்னை மரத்தோப்பில் சென்று அய்யா தங்கினார். அந்த இடத்தில்தான் பின்னர் பூப்பதி என்ற பதி நிறுவப்பட்டது.

வழிபாட்டு முறை:

உருவம் அற்றவராக வழிபடும் இடத்தில் அவருக்கு பின்னால் கண்ணாடி இருக்கும், அதன் தத்துவம் அய்யாவை வணங்கும்போது நமது உருவம் அதில் தெரியும்.
• நீ தான் நான், நான் தான் நீ என்று இறைவன் சொன்ன தத்துவத்தை குறிக்கின்றது.
• உன்னுள்ளே நான் (இறைவன்) இருக்கிறேன் என்ற த்ததுவத்தை குறிக்கின்றது.
• கலி என்னும் மாயை நம்மை பற்றிக் கொள்ளாமல் உள்ளத்தை கண்ணாடி போல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை குறிக்கின்றது.
• உன்னிடத்தில் இருந்து பிரதிபலிக்கும் எண்ணமும் செயலும் மற்றவர்களுக்கு பயன்படும் விதமாக அமைய வேண்டும் என்பதை குறிக்கின்ற்து.
• அய்யா வைகுண்ட பரம்பொருளை நாடிவரும் பக்தர்கள் எல்லோரும் ஜாதி மதத்தை மறந்து உயர்ந்தோர் தாழ் தோர் என்ற வேறுபாடின்றி எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற சமத்துவத்தை குறிக்கின்றது.
அய்யாவினை வழிபடும் ஸ்தலங்கள் பதிகள் என அழைக்கப்படுகின்றன

கலியை அழிக்க வந்த வைகுண்ட அவதாரம்

1008 - ல் கடலில் இருந்து உதித்த வைகுண்டர் ஒரு ஒப்பற்ற அவதாரம்.
முதலாவதாக கலி யுகத்துக்கு முந்திய ஐந்து யுகங்களிலும் குறோணியின் ஒவ்வொரு துண்டுகளும் ஒவ்வொரு உருவம் தாங்கி உலகுக்கு வருகிறது. அவற்றை அழிக்கும் பொருட்டு நாராயண மூர்த்தி உலகில் பிறந்து அவனை அழித்தார்.
ஆனால் தற்போதைய கலி யுகத்தில் குறோணியின் ஆறாவது துண்டான கலி, மாயையாக உலகிற்கு வந்து மக்களின் மனதில் குடிகொண்டுள்ளதால் அவனை முன்பு போல் அழிப்பது இயலாததாகும். மேலும் கலியன் கேட்ட கொடிய வரங்களில் அவன் மும்மூர்த்திகளின் வடிவத்தையும் வரமாகப் பெற்ற காரணத்தினால், நாராயணர் நேரடியாக உலகில் அவதரித்து அவனை அழிக்க முடியாது. இதனை அகிலம், 'முன்னின்று கொல்ல மூவராலும் அரிது' என்கிறது.
ஆனால் முதலில் குறோணியை கொல்லத் தவம் இருக்கும் போது திருமால் சிவனிடம் கொடுத்த வாக்கு பிரகாரம் நாராயணர் தான் கலியனை அழிக்க கடமைபட்டிருக்கிறார். மேலும் கலியன் வரம் வாங்கி வரும் போது நாராயணருக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக, ஒரு பண்டாரத்தை கலியனை வைத்து அட்டி செய்ய வைப்பதன் மூலம், அவனை அழிக்க முடியும். இவ்வனைத்து நிலைகளையும் சரி செய்யும் வண்ணம் முதன் முதலாக, நிர்குணனாகிய, ஏகப்பரம்பொருளான இறைவன் நாராயணரை சூட்சுமமகக்கொண்டு மனித உடலிலே பண்டார வடிவத்தில் அவதரிக்கிறார்.
நாராயணரின் சூட்சும உடலாகிய முத்துக்குட்டி உடலில் இருந்த சம்போரணதேவனுக்கு 24 வருடங்களிக்கு பிறகு முக்தி அளிக்கப்பட்டு, அவ்வுடலில் கொல்லம் ஆண்டு 1008 மாசி 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்கு சரியான 4.3.1833 ல் திருச்செந்தூர் கடலுக்குள் வைகுண்டப் பரமபொருள் உதித்து வந்தார். அனேக நாமங்களோடு அதுநாள் மட்டும் இயங்கிய இறைவன், ஏகப்பரம் பொருளாக, திருப்பாற்கடலுக்குள் உதித்து இவ்வுலகிற்கு எழுந்தருளும் வைகுண்டர் அவதரித்தார். வைகுண்டருக்கு விஞ்சை என்னும் உபதேசம் நாராயணரால் கொடுக்கப்படுகிறது. பின்னர் வைகுண்டர் பண்டார உருவாக தெட்சணம் நோக்கி நடந்தார்.
சிவபெருமானுடன் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப் பிரகாரம் கலியை அழிக்கும் கடமை உடையவார் இவரே. வைகுண்ட அவதாரத்தில் இவ்வளவு சூட்சுமங்கள் மேற்கொண்டதற்கு காரணம், கலியன் வாங்கிய வரங்களை முறியடிப்பதற்காகவே.

துவையல் தவசு

அய்யா வைகுண்டர் கலி அரசனின் சிறை கொடுமைகளை வென்று சாமிதோப்பு வந்த பின்னால் சான்றோர் மக்களை  துவையல் தவசிற்க்கு அனுப்ப மனதில் நினைத்தார்.

உடனே அய்யாவின் விருப்ப படியே சான்றோர்கள் தங்கள் , வீடு, ஆடு, மாடு , சொத்து எல்லாவற்றையும் விற்று விட்டு அய்யாவை நாடி சென்றனர். அவர்களை கண்டவுடன் அய்யா வாகை பதிக்கு சென்று தவத்தை தொடங்க உத்தரவிட்டார்.

அந்த துவையல் தவம் என்பது என்னவென்றால் மூன்று நேரம் கடலில் உடுத்த துணியோடு குளித்து துவைத்து மதியம், மாலை இறைவனை தொழுது , கடல் நீரை மட்டுமே குடித்து, கடல் நீரில் மதியம் ஒரு நேரம் மட்டும் அன்னம் சமைத்து அதனை கடல் மணல் பரப்பிலிட்டு உண்ண வேண்டும். காலையிலும் மாலையிலும் உகபடிப்பை ஓதவேண்டும். மதியம் உச்சி பாட வேண்டும்.

இந்த தவத்திற்கு வந்தவர்கள் யார் யார் தெரியுமா? குழந்தைகள், வயோதிகர்கள் , இளைஞர்கள் , மற்றும் கருவுற்ற பெண்கள் என எந்த வித பாகு பாடுமின்றி அனைத்து தரப்பினரும் தவத்தில் கலந்து கொண்டனர்.

ஆறு மாதங்கள் வாகை பதியில் தவம் இருந்த பின்னால் அன்புக்கொடி மக்களை , அய்யா வைகுண்டர் முட்டப்பதிக்கு சென்று தவம் இருக்க பணித்தார். சொற்பனத்தின் மூலம் இந்த கட்டளை கொடுக்கப்பட்டது.

துவையல் தவத்தோர் முட்டபதி சென்று உற்சாகத்துடன் தவத்தை மேற்கொண்டனர். உலகத்தோர் மட்டுமன்றி எல்லா சாதி மக்களும்  அவர்களை கண்டு பொறமை கொள்ளும் அளவிற்கும், போற்றபடும் அளவிற்கும் அவர்களின் வாழ்க்கை முறையும் , ஒழுக்கமும் , பக்தியும் , தவமும் சிறப்பாக அமைந்தது.

கடல் நீரில் துவைக்கப்பட்ட உடைகள் பட்டு துணிகளை விட பளபளப்பாக மின்னின. உடை, உடல், மட்டும் துவைக்கபடாமல், கலியென்னும் அழுக்கு நீங்கபெற்று, புத்தி மற்றும் மனம் அனைத்தும் துவைக்கபட்டன. சுத்தமாக்கப்பட்டன . எனவே தான் இது துவையல் தவசு என்ற பெயர் பெற்றது.

அய்யா உண்டு