ஞாயிறு, 23 நவம்பர், 2014

அய்யா துணை

அகிலம்:

மேலுக ளொக்க மினுமினுக்கப் பச்சையிட்டுக்
காலுக ளுக்குத்தங்கக் கழராப் பணிகளிட்டு
மகனை யெடுத்து மடிமீதி லேயிருத்தி

விளக்கம்:

பிறகு அவர் உடலில் முத்துக்களை அணியச் செய்து கால்களுக்குக் கழன்று போகாதவண்ணம் தங்கத்தாலாகிய ஆபரணங்கள் அணிவித்து மாற்றுப் பிறப்பில் பிறந்த வைகுண்டர் என்னும் ஆன்மீகக் குழந்தையை எடுத்து தமது மடிமீது அமர்த்தி

அகிலம்:

உகமாள வந்தவனோ உடையவனோ என்றுசொல்லிக்
கண்ணைத் தடவி கரிய முகந்தடவி
எண்ணும் வளர்வாயென்று இசைந்தமுகத் தோடணைத்துப்

விளக்கம்:

மகனே, இந்த யுகத்தை ஆள வந்தவன் நீ. நீ இவ்வுலகம் எல்லாவற்றுக்கும் உரிமையுடையவன் என்று சொன்னார். பிறகு தமது அன்பான ஆன்மீகக் குழந்தையின் கண்களையும் கரிய முகத்தையும் இதமாகத் தடவிக் கொடுத்து சிறப்பாக நீ வளர்ந்து வருவாயாக என்று மலர்ந்த முகத்தோடு கூறி, தமது முகத்தோடு அவர் முகத்தையும் சேர்த்து அணைத்து

அகிலம்:

பாலனைப் போல்காட்டிப் பதினா றுடன்காட்டி
நாலுரண்டு காட்டி நல்ல மகவதுக்கு
நடக்கக் கருமம் நவின்றிடவே நாரணரும்
அடக்க முடனே அருளுவா ரன்போரே
நல்ல வுபதேசம் நன்மகவுக் கேயருளி
வல்லத் திருநாதன் வகுக்கிறா ரன்போரே

விளக்கம்:

முப்பூ நிலையடைந்த அவரை ஆன்மீகக் குழந்தையாக முதலில் தோன்றச் செய்து பிறகு பதினாறு வயதுடைய வளர்ந்த குழந்தையாக மாற்றி அமைத்து அகரம் பற்றி அக்குழந்தைக்கு புரிய வைத்தார். பிறகு வைகுண்டர் செய்ய வேண்டிய செயல் முறைகளை எல்லாம் ஒழுங்காக அடக்கம் நிறைந்ததாக விளக்க சிறந்த பல உபதேசங்களை அந்த நல்ல குழந்தைக்கு ஒவ்வொன்றாகத் திருமால் உபதேசித்து அருளுகின்றார் அன்போரே.

அகிலம்:

விஞ்சையருளல்:
--------------------------

தேடிய மறைநூல் வேதன் தேவியர்க் கமல நாதன்
நாடிய இறையோன் ஞானி நாச்சிமார் தேவ ரோடும்
கூடிய ரிஷியோர் வானோர் குவலய மறியா விஞ்சை
தேடிய மகனார்க் கென்று செப்பினா ரொப்பில் லானே

விளக்கம்:

வேதங்களில் தேடப்பட்டுக் கொண்டிருக்கின்றவரும், தேவியர்க்கு அன்புக்குரியவரும் ஆகிய ஒப்பில்லாத திருமால், எல்லாரும் விரும்புகின்ற ஈசரும், ஞானிகளும், கற்புள்ள கன்னிகளும், தேவர்களும், ரிஷிகளும் வானலோகத்தோரும் உலக மாந்தர்களும்கூட அறிய முடியாத உபதேசத்தைத் தாமே தேடித் தம்முடைய மகனாக அடைந்த வைகுண்டருக்கு அருளினார்.

அகிலம்:

மகனே வுனது மனமறிய மறையோ ரறியா விஞ்சைசெய்து
அகமே யருளித் தருவதெல்லாம் அனுப்போ லசலில் விலகாதே
உகமே முடிந்த தின்பிறகு உதிக்குந் தர்மயுகத் தில்வந்தால்
செகமே யறியச் சொல்லிமிகச் சிறந்தே வாழ்ந்து வாழ்வோமே

விளக்கம்:

மகனே, வேதங்கள் அறிந்தவர்கள் கூட அறிய முடியாதவை இந்த உபதேசங்கள். இவற்றை உன் மனம் அறியும் வகையில் நான் அருளுகின்றேன். இந்த உபதேசங்களிலிருந்து ஒரு அணு அளவுகூட மாறி நடந்துவிடாதே. இக்கலியுகம் முடிந்த பிறகு உண்டாகப் போகின்ற தருமயுகத்தில், நீ ஆட்சி புரிய வேண்டி வரும்போது இவ்வுலகம் அறியும்படியாக மக்களுக்கு இவற்றை எடுத்துக் கூறிச் சிறந்த முறையில் நீ ஆட்சி புரிந்து வருவாயாக.

அய்யா துணை

அகிலம்:

ஆண்டா யிரத்து எட்டதிலே அதனே மாத மாசியிலே நான்றாங் கடலின் கரையாண்டி நாரா யணனே பண்டாரம்கூண்டாந் தெச்ச ணாபுரியில் கொண்டோம் பள்ளி தர்மமுற்றுஒன்றாம் விஞ்சை யிதுமகனே உரைப்பேன் ரண்டாம் விஞ்சையதே

விளக்கம்:

ஆயிரத்து எட்டாம் ஆண்டில் மாசி மாதம் முதல் நானே தான் கடலின் கரை ஆண்டியாகவும், நாராயணராகவும், பண்டாரமாகவும், நாம் கூடி இருக்கின்ற இந்த தெச்சணாபுரியல் தரும நிலையில் பள்ளி கொண்டேன் என்று திடமாகச் கூறுவாயாக. இதுவே நான் உனக்குக் கூறுகின்ற முதலாம் விஞ்சை. இனி நான் கூறப்போகின்ற இரண்டாம் விஞ்சையை நீ கேட்பாயாக.

அகிலம்:

வேண்டாம் வேண்டாங் காணிக்கையும் மிகவே வேண்டாங் கைக்கூலிஆண்டார் நாரா யணன்தனக்கு அனுப்போல் வேண்டாங் காவடியும்வேண்டா மெனவே நிறுத்தல்செய்து வாய்த்த சிறையாய்க் கவிழ்ந்திருநீஇரண்டாம் விஞ்சை யிதுமகனே நவில்வேன் மூன்றாம் விஞ்சையதே

விளக்கம்:

காணிக்கை, கைக்கூலி ஆகியவற்றை எக்காரணத்தை முன்னிட்டும் வாங்க வேண்டாம். இவ்வுலகை ஆண்டு கொண்டிருக்கும் நாராயணராகிய எமக்கு அணு அளவுகூட காவடி எடுத்தல் முதலிய விழாக்களும் வேண்டாம் என்று கூறி இவற்றை எல்லாம் தடை செய்து நீ சிறையில் இருப்பது போன்று மனக் கட்டுப்பாட்டோடு வாழ்ந்து வருவாயாக. இதுவே நான் கூறும் இரண்டாம் விஞ்சை. இனி மூன்றாம் உபதேசத்தைக் கூறப் போகின்றேன். கேட்பாயாக.

அகிலம்:

கொற்றவர் தானு மாண்டு குறும்புகள் மிகவே தோன்றிஉற்றதோர் துலுக்கன் வந்து உடனவன் விழுந்து வோடிமற்றதோ ராண்டு தன்னில் வருவோ மென்றா கமம்போல்முத்தலத் தோருங் காண உரைத்தனர் மூன்றாம் விஞ்சை

விளக்கம்:
நீதியுள்ள அரசர்கள் இறப்பு எய்தித் தவறான வழி முறைகளும், ஆட்சிகளும் உலகில் தோன்றும். அப்பொழுது துலுக்கன் ஒருவன் நாட்டைப் பிடிக்கத் தெட்சணாபூமிக்கு வந்து தோல்வியுற்று ஓடிடுவான். அதன் பிறகு சிறந்த ஓர் ஆண்டில் இப்பூவுலகில் வைகுண்டர் தோன்றுவார் என்னும் ஆகமச் சொல்லை போன்று மூவுலகத்தோரும் அறியும்படியாக இந்த மூன்றாம் விஞ்சையைத் திருமால் அருளினார்.

அகிலம்:

நல்ல மகனே நாலாம் விஞ்சைகேளுவல்ல நடுஞான வாய்த்த வைகுண்டமது
பிறந்துகொண் டிருக்கெனவும் புதிய நக்ஷத்திரத்தில்அறந்தழைக்க நன்றாய் அதுகுதிக்கு மென்றுசொல்லுமாழுவது மாண்டு மனதுகந்த தேமுழிக்கும்முழுவதை நீக்கி முழிப்பதுவே கண்டுகொள்ளும்

விளக்கம்:

அருமையான மகனே நான்காம் விஞ்சையை இனிக் கூறப்போகின்றேன். உயர்வான ஞானம் வாய்க்கப் பெற்ற தருமபூமி பிறந்து கொணடிருக்கின்றது என்றும் புதிய நட்சத்திரத்தில் உலகில் அறம் தழைப்பதற்கு வேண்டித் தருமபூமி வெளிப்படையாகக் குதித்து வெளிப்படும் என்றும் சொல்லு. அப்போது அழிந்து போகக் கூடியவை எல்லாம் அழிந்து விடும். உனது மனதுக்கு இயைந்தவர்களே ஆன்மீக விழிப்புற்று எழுவர். அவ்வாறு அழிகின்றவை அழிக்கப்பட்டு ஆன்மீக விழிப்புற்று எழுபவர் தருமபூமியை அறிந்து கொள்ளுவர்.

அகிலம்:

ஒருநெல் லெடுத்து உடைக்கநாடு கேட்டுக்கொள்ளும்இருநெல் லெடுத்து உடைக்கநாடு தாங்காதுமலைக ளுதிர்ந்துவிடும் வான மழிந்துவிடும்தலைநாட் சேத்திரமும் தானுதிரும் ஆலங்காய்போல்என்றுநா லாம்விஞ்சை இதுதானே என்மகனேசத்தமொன் றானதிலே தானிதெல்லா மாகுமென்றுசித்த முடனே செப்பியிரு என்மகனே

விளக்கம்:

ஒரு நெல்லெடுத்து உடைக்கும் நேரத்துக்குள் தருமபூமி காணத் தகுதியுள்ள ஆன்ம விழிப்புற்றவர்களின் உண்மை நிலையை நான் சோதித்து அறிந்து கொள்ளுவதை நாடு தெரிந்து கொள்ளும். தருமயுகம் தோன்றும் சமயம், இரண்டாவது நெல் எடுத்து உடைக்கும் நேரத்துக்குள், ஆலமரத்தில் இருக்கின்ற காய்கள் எல்லாம் உதிர்ந்து விடுவதைப் போன்று ஆத்மீக விழிப்புற்றவனது நினைவிலுள்ள உலக விவகாரங்களாகிய மலைகள், வானம், தலைக்கு மேலே காட்சி அளிக்கின்ற நட்சத்திரங்கள் ஆகிய மாயை இவை எல்லாம் அவன் நினைவிலிருந்து அகன்று நிற்கும். இதுவே நான்காம் விஞ்சை
ஆகும்.

இந்த உபதேசங்கள் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கும் விளக்கு போன்ற ஒன்றைக் கூறப் போகிறேன். மகனே கவனமாகக் கேள். அ, உ, ம், கூடிய ஓம் என்னும் ஓசையின் மூலமாக இந்த உபதேசங்கள் எல்லாம் கைக்கூடும். இதை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டு உபதேசித்து வா.

அகிலம்:

தேவர்களுக்குரிய உபதேசங்கள்:
=========================

ஆயிரத் தெட்டு அதில்வாழுந் தேவருக்குவாயிதமாய் விஞ்சை வகுப்பேன்கே ளென்மகனே

நாட்டுக் குடைய நாரா யணர்தானும்ஆட்டுக் கொடைபூசை அனுப்போலும் வேண்டாமென்றுசொல்லியே தர்மமுற்றுச் சிறையாகத் தானிருக்கத்தொல்லுலகி லாரேக்கார் பார்ப்போமென்று சொல்லிடுநீ

விளக்கம்:

ஆயிரத்து எட்டாம் ஆண்டாகிய உன் கால்தில் உலகில் பிறக்கப் பேறு பெற்ற தேவர்களுக்கு நற்பேறு அடையும் வழியாக நான் கூறுகின்ற உபதேசங்களை நீ கேட்பாயாக.

இவ்வுலகத்துக்குரிய நாராயணராகிய நீ ஆடு வெட்டி நடத்துகின்ற பூஜைகளை அணு அளவுகூட செய்ய வேண்டாம் என்று சொல்லிவிடு. இப்பூவுலகு தருமபூமி நிலையடைய நான் (திருமால்) சிறைவாசம் போன்று இருக்கின்ற காரணத்தால் பழமை பொருந்திய பூமியில் அப்பூசையை ஏற்றுக்கொள்ளும் தெய்வம் யாராவது உள்ளனரா? என்று சவால்விட்டுக் கூறு.

அய்யா துணை

பேய்களுக்குரிய உபதேசங்கள்:
============================

அகிலம்:

தூறான பேய்களுக்குச் சொல்லு முறைகேளு
வாறான நாரணர்தான் வாய்த்ததர்ம மேநினைத்துக்
கவிழ்ந்து சிறையிருக்குங் காரணத்தா லோகமெல்லாம்

விளக்கம்:

கீழ்தன்மையான பேய்களுக்கு நீ கூற வேண்டிய உபதேச மொழிகளைக் கூறுகின்றேன். கேட்பாயாக. எல்லாவழிகளுக்கும் காரணமாக இருக்கும் நாராயணர் தாம் வரப் போகின்ற தருமபூமியை நினைத்து மனமடக்கிச் சிறைவாகம் போன்று தவம் இருக்கின்ற காரணத்தால்

அகிலம்:

உவந்து திரியும் உயிரிப்பிராணி யாதொன்றையும்
இரத்த வெறிதீபம் தூபமிலைப் பட்டைமுதல்
சற்றும் வெலிபாவம் தான்காண ஒட்டாதெனத்
தர்மம் நினைத்துத் தவசிருக்கேன் நாரணனும்
உற்பனமா யறிந்தோர் ஒதுங்கியிருங் கோவெனவே
வீணப் பசாசறிய விளம்பியிரு என்மகனே

விளக்கம்:

இவ்வுலகில் ஊர்ந்து திரிகின்ற எந்தவித உயிர்ப்பிராணியையும் கொன்று பலியிடவோ, வேறு வகையான இரத்தவெறி பூஜை செய்யவோ, தீபதூபம் காட்டவோ, இலை, பட்டை போன்றவை கொண்டு பூஜை செய்யவோ கூடாது. அவற்றை நாம் காண்பதுகூட தகாது. நான் தருமபூமியை நினைத்துத் தவசு இருப்பதால் இதன் உண்மையை அறிந்தவர்கள் இத்தகைய பூஜை, பலி ஆகியவற்றிலிருந்து விலகி இருப்பீர்களாக என்று வீணான பிசாசுகள் அறியும்படி சொல்லி விடு.

வைகுண்டருக்குரிய உபதேசம்:
============================

அகிலம்:

நாண மறியாமல் நன்றிகெட்ட நீசர்குலம்
மட்டை யெடுத்தடிப்பார் மண்கட்டி கல்லெறிவார்
சட்ட மசையாதே தன்னளவு வந்தாலும்
நாட்டைக் கெடுத்த நவின்றகலிச் சக்கரத்தில்

விளக்கம்:

தமக்குச் செய்த நன்றியைப் பற்றிச் சிறிதுகூட எண்ணாத நீசக்குலம், வெட்கமின்றி மட்டை எடுத்து உன்னை அடித்திடுவர். அவர்கள் மண்கட்டி கொண்டும், கல் கொண்டும் உன்னை எறிந்து துன்புறுத்துவர். உன் உடம்பு அழியக்கூடிய நிலை வந்தாலும் உனக்கு நான் கூறிய உபதேசகச் சட்ட விதி முறைகளை விட்டு மாறாதே. இந்த நாட்டைக் கெடுத்தாகக் கூறப்படும் கலி வாழும் பூமியில் சிறிது அளவுகூட தவறு செய்துவிடாதே.

அகிலம்:

ஓட்டைக் கலத்ததிலும் உக்கு மிரும்பதிலும்
முழியாதே யென்மகனே மும்முதற்கும் நாயகமே
அழிவாகிப் போகும் அன்புகெட்ட நீசருடன்
பொய்யரோ டன்பு பொருந்தி யிருக்காதே
மெய்யரோ டன்பு மேவியிரு என்மகனே

விளக்கம்:

ஓட்டை மரக் கலத்தைப் போன்ற மனிதர்களின் முகத்திலும் துருப்பிடித்த இரும்பைப் போன்ற மனிதர்களின் முகத்திலும் உமது தவக் காலம் முடியும்வரை நீ ஏறிட்டுப் பாராதே. என் மகனே, மும்முதல் பொருளுக்கும் தலைவனே, அழிந்து போகின்றவனும், அன்பு கெட்டவனுமாகிய நீசருடன், பொய் பேசுபவரோடும் அன்பு கொண்டு வெளிப்படுத்தி இணைந்து வாழ்ந்து வா.

அகிலம்:

வர்மமதை வதைக்க வந்தேனெனச் சொல்லிமிகத்
தர்ம மதைவளர்க்கத் தரணியில் வந்தேனென்று
இம்முதலே யாறு இருப்பே தவசுபண்ணி
மும்முதலோ னாகி முறைநடத்து என்மகனே
மூக்குச் சுழியும் முச்சுளியும் முத்திமுத்தி
நோக்குச் சுழியாய் நேர்நில்லு என்மகனே

விளக்கம்:

வறுமையை ஒழிக்க இவ்வுலகில் நான் அவதாரம் எடுத்தேன் என்றும், தர்மம் பெரிது என்றும் உபதேசித்து வா என் மகனே. இப்பொழுது முதலே ஆறு வருடத் தவசை ஆரம்பித்து முப்பொருளுக்கும் முதற் பொருளாகி நீ செயல் படுத்துவாயாக. மூக்கில் வருவாகும் சுழிகளையும் தெளிவாகக் கண்டறிந்து எல்லாம் அறியக் காரணமாக இருக்கும் சுழிமுனை மயமாய் நிலை நிற்பாயாக.

அகிலம்:

பரமான பட்டணத்தில் பார்வைகொண் டேநாட்டிச்
சிரமானது விரித்துச் சிறையே யிருமகனே

விளக்கம்:

உன் இரு கண்களின் பார்வைகளும் பரம்பொருள் இருக்கின்ற சகஸ்ரார பட்டணத்தை நோக்கியவண்ணம் இருக்கட்டும். உன் தலை முடியை விரித்துப் போட்டுச் சிறையில் இருப்பவரைப் போன்று நீ வாழ்ந்து வா.

அகிலம்:

ஏற்பதுபால் பச்சரிசி இருப்பது பார்மேலாகும்
காப்பதுமா தர்மம் கண்ணே திருமகனே

விளக்கம்:

நீ உண்ணக் கூடியவை பாலும் பச்சரிசியுமாக இருக்கட்டும். உன் நினைவு இருக்க வேண்டிய இடம் உன்னுள்ளே காணக்கூடிய பரம்பொருளின் இருப்பிடம் ஆகும். என் கண்ணே திருமகனே, நீ மாபெரும் தருமத்தைக் காக்க வேண்டும்.

அகிலம்:

சந்தன வாடை சாந்துசவ் வாதுபுஸ்பம்
எந்தன் திருமகனே எள்ளளவும் பாராதே

விளக்கம்:

எனவே, அதை அடைவதுவரை சந்தனம், சாந்து வகைகள், சவ்வாது, பூக்கள் ஆகியவற்றின் இனிய மணத்தினை நீ சிறிதளவுகூட நுகர்ந்து பார்க்காதே.

அகிலம்:

வாடைபூ தீபம் மகிழாக் கலியுகத்தில்
நாடை யழித்து நல்லயுக மேபிறந்தால்
சொல்ல வொண்ணாத சுகந்தருவே னென்மகனே

விளக்கம்:

இவ்வாறு பூ தீபம் போன்றவற்றின் வாசனையை நுகர்ந்து மகிழக்கூடாது. இந்தக் கலியுகம் அழிக்கப்பட்டுத் தருமயுகம் பிறக்குமானால் அது முதலாக உனக்குக் கூற முடியாத இனிய சுகத்தினைத் தருவேன் என உபதேசித்தார்.

அகிலம்:

கண்டாயோ மகனே கரிய பவிசுஎல்லாம்
கொண்டாயோ விஞ்சை கூடுபிர காசமதாய்

விளக்கம்:

பிறகு “ மகனே அடைவதற்குரிய செல்வங்களை இந்த உபதேசங்கள் மூலம் நீ தெளிவாக அறிந்தாயா? என்று கேட்டார்.

அய்யா துணை

அகிலம்:

வைகுண்டர் வரங்களை கேட்டல்.:
===========================

அப்போது தான்பிறந்த அந்தவைகுண் டருரைப்பார்இப்போ தென்பிதாவே என்னையீன்றே யெடுத்துப்பருவமதாய் வளர்த்துப் பகர்ந்தீரே ஞாயமெல்லாம்உருவுபிர காசமதாய் உபதேசஞ் செய்தீரேதங்க முடிவேந்தே தகப்பனே நீர்கேளும்பொங்கு கடல்துயின்ற புண்ணியரே நீர்கேளும்

விளக்கம்:

உடனே சிறு குழந்தையான வைகுண்டர் திருமாலை நோக்கி, என் தந்தையே என்னை பெற்றெடுத்து அறிவு நிலையை வளர்த்து இந்த உபதேசங்களை எல்லாம் மிகவும் தெளிவாக அருளினீரே. இருப்பினும் தங்க முடித்தலைவனே, என் தந்தையே, பொங்கும் கடலில் பள்ளி கொள்ளும் புண்ணியரே, நான் கூறியவற்றைக் கேட்பீராக.

அகிலம்:

என்னுடைய முத்துயரம் எல்லா மிகக்கழித்துநன்னமுத மாக நன்மகவாய்ச் செய்தீரே
இன்னுங் கலியுகத்தில் இருக்கப் போச்சொல்லீரே

விளக்கம்:

என் சம்பூரணதேவன் நிலையிலுள்ள முந்தைய வினைகளை எல்லாம் அழியச் செய்து நல்ல அமிர்தம் போன்று என்னை உமது குழந்தையாக வைகுண்டராக மாற்றம் செய்தீர். இவ்வளவு செய்து என்னை உருவாக்கிய பிறகு கலியுகத்தில் வாழ்வதற்குப் போகச் சொல்லுகின்றீரே!

அகிலம்:

உன்னை யறியாமல் ஊன்கலியி லுள்ளோர்கள்என்னை மிகப்பழித்து ஏசுவானே நீசனெல்லாம்அல்லாமல் முன்பெற்ற அவர்களுட பேரைச்சொல்லிப் பொல்லாத நீசனெல்லாம் பேசி யடிப்பானே

விளக்கம்:

உமது உண்மை நிலை அறியாமல் கீழ்தரமான கலி பிடித்த உலகில் உள்ள நீசர்கள் என்னை அதிகமாகப் பழி கூறி ஏசுவார்களே, மேலும் என்னை முதலில் பெற்றெடுத்த என் தாய் தந்தையருடைய பெயரைச் சொல்லி அந்தப் பொல்லாத நீசர்கள் அடிப்பார்களே?

அகிலம்:

சூத்திர விஞ்சை தொழிலை யறியாமல் யூத்திர நீசனெல்லாம் ஒழுங்குதப்பி மாழ்வானே

விளக்கம்:

உமது சூட்சுமத்தை அறிய முடியாத நீசர்கள் ஒழுங்கு தப்பி அழிவார்களே?

அகிலம்:

நம்முடைய சாதி நம்மைமிகக் காணவந்தால்செம்மைகெட்ட நீசன் சிதற அடிப்பானே

விளக்கம்:

நம் சான்றோர் சாதி என்னை அன்புடன் காண வந்தால் மேன்மை இல்லாத நீசர்கள் அவர்களைச் சிதறி ஓடும்படி அடித்திடுவார்களே?

அகிலம்:

ஆனதால் நம்சாதி அகலநின்று வாடிடுமேஏனமென்ன சொல்லுகிறீர் என்னுடைய நாயகமே

விளக்கம்:
அதனால் நம் சான்றோர் சாதி நம்மை விட்டு அகன்று நின்று மனம் வாடிடுமே? இவற்றை எல்லாம் நீக்குவதற்கு நீவிர் என்ன வழி கூறப் போகிறீர்?

அகிலம்:

முன்னென்னைப் பெற்ற மொய்குழலார் வம்மிசங்கள்என்னேது வாலே இயல்புபெற வேணுமல்லோ

விளக்கம்:

மேலும் என்னை ஏற்கெனவே பெற்றெடுத்த தாயினுடைய சான்றோர் சாதி வம்ச வழியினரும் என் பிறப்பின் மூலமாக நல்ல வாழ்வு பெற வேண்டும் அல்லவா?

அகிலம்:

அல்லாமல் முன்னம் அணங்கொரு பெண்ணிணங்க நல்லோர் மனசு நல்லணங்குக் கேகொடுத்துமேலும் பதவி மிகக்கொடுக்க வேணுமல்லோ

விளக்கம்:

மேலும் எனக்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட பரதேவதை என்னும் பெண்ணுக்கு அவள் உள்ளம் மகிழும்படி சிறப்பான மனதைக் கொடுத்து அவளுக்குச் சிறந்த தெய்வப்பதவி கொடுக்க வேண்டும் அல்லவா?

அகிலம்:

இப்படியே நல்ல இயல்பு பெறஅருளி எப்படியு மென்னைவந்து ஏற்கவரும் நாளும்எல்லாம் விவரமதாய் இயம்பி யனுப்புமென்றார்பொல்லாத பேர்மாளப் போவதுவுஞ் சொல்லுமென்றார்

விளக்கம்:

இப்படி எல்லாருக்கும் அருள் கொடுத்து எவ்வகையிலும் என்னை வைகுண்டத்துக்கு அழைக்க வரும் நாளையும் ஏனைய விபரங்களையும் நீசர்கள் அழிவது பற்றியும் விபரமாய்ச் சொல்லும் என்றார்.

வரங்கள் நிறைவேறத் திருமால் வழிமுறை கூறல்:
===================================

அகிலம்:

அந்த வுடனே ஆதிநா ராயணரும்சிந்தை மகிழ்ந்து திருமகனை யாவிமிகக் கட்டி யெடுத்துக் கமலமுகத் தோடணைத்துத்திட்டித்த நாதன் சொல்வார் மகனு டனே

விளக்கம்:

உடனே திருமால் மனம் மகிழ்ந்து பெருமை பொருந்திய அந்த மகனை அணைத்து நெருக்கமாகக் கட்டிப் பிடித்து அவருடைய தாமரை போன்ற முகத்தைத் தமது முகத்தோடு அணைத்து வைகுணடரை மாற்றுப் பிறப்பு மூலம் தமது மகனாக உருவாக்கிய திருமால் மகனை நோக்கி சொல்லலானார்.

அகிலம்:

எந்தனின் தவத்தா லேக இகபர முனக்குள் ளாகித்தந்திடு மகனே நானும் தனதுள்ள மமர்ந்தே னானும்உந்தனைக் கண்டால் மூவர் ஒஞ்சியே மகிழ்வர் கண்டாய்சிந்தர்க ளெவரும் போற்றச் செயல்பெற்ற மகனும் நீயே

விளக்கம்:

எனது தவத்தின் மூலமாக எங்கும் பரந்திருக்கும் பரம்பொருள் உனக்குள் ஆகி, பரம்பொருளாகிய நானும் உன்னுள் அமர்ந்து தருமயுகத்தைப் படைத்திடும் மகனே, உன்னைக் கண்டால் மூவர்களும் வெட்கத்துடன் மகிழ்வார்கள். இதை அறிந்து கொள்வாயாக. எல்லாச் சித்தர்களும் போற்றும்படியாகச் சகல சக்தியும் பெற்ற மகன் நீயே ஆவாய்.

அகிலம்:

மகனேநீ கேட்டதற்கு வகைசொல்ல வேணுமென்றால்தவமூ ணுண்டேநீ தரணிதனில் போயிருந்தால்அல்லாமல் பின்னும் அதின்மேல் நடப்புவளம்எல்லா முனக்கு இயம்பித்தரு வேன்மகனே

விளக்கம்:

மகனே, நீ கேட்ட வரங்களை அடைய வழி முறைகளை சொல்ல வேண்டும் என்றால் சொல்லுகிறேன். கேட்பாயாக. நீ பூவுலகில் சென்று நினைத்தபடி வாழ நீ செய்து முடிக்க வேண்டிய தவங்கள் மூன்று உள்ளன. மேலும் அத்தவத்தைச் செய்து முடித்த பிறகு செய்ய வேண்டியவற்றையும் கூறுகிறேன் கேள்.

அகிலம்:

முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே

விளக்கம்:

முதல் முறையாக நீ செய்ய வேண்டிய தவசு கலியுகத்தை அழிப்பதற்கு செய்யும் யுகத்தவசு ஆகும்.

அகிலம்:

தத்தமுள்ள ரண்டாம் தவசுசா திக்காமே
விளக்கம்
அதைத் தொடர்ந்து செய்ய வேண்டிய இரண்டாம் தவசு சான்றோர் சாதி மக்களைக் காத்துக் கொள்ளச் செய்யும் தவசாகும்.


அகிலம்:

மூன்றாந் தவசு முன்னுரைத்த பெண்ணாள்க்கும்நன்றான முற்பிதிரின் நல்ல வழிகளுக்கும்

விளக்கம்:

கடைசியாகச் செய்ய வேண்டிய மூன்றாம் தவசு நீ முன்னுரைத்த அணங்கு ஆகிய பரதேவதை என்னும் பெண் உயர்வு பெறவும் நல்ல முறையில் வாழ்ந்துவரும் உன் முன் பிறந்த மூதாதையர்களின் நல்ல வம்ச வழி மக்களுக்கு நன்மை கிடைக்கவும் செய்யும் தவசாகும்.

அகிலம்:

இப்படியே மூவிரண்டு ஆறு வருசமதாய்எப்படியும் நீதவசு இருக்கவரு மென்மகனேஓராறு ஆண்டு உற்றதவ மேயிருந்துபாராறுங் காண பார்கண்டு கண்டிருநீ

விளக்கம்:

ஆறு வருடங்களாக நீ எந்த வகையிலாவது தவமிருக்க வேண்டியது வரும். ஆறு வருடங்கள் இவ்வுலக மக்கள் காணும்படியாக உனக்குரிய தவத்தில் தருமபூமியை எதிர்பார்த்தவண்ணம் அமர்ந்திரு.

அய்யா துணை

வத்துவகை சொத்து மனைவீடு வாசல்முதல்
சற்றுமன தெண்ணாமல் தானிருந் தென்மகனே

விளக்கம்:

நிலபுலன் முதலிய சொத்து வகைகளையும், மனைவி, வீடு, வாசற்படி போன்றவற்றையும் சிறிய அளவு கூட மனதில் எண்ணாது நீ தவமிருக்க வேண்டும்.

அகிலம்:

நன்மையோடு தண்மை ஒன்றுமிகப் பாராமல்

விளக்கம்:

நன்மை தீமை என்றும், இனிமையான பேச்சு, தீமையான பேச்சு என்றும், உண்மை என்றும் பொய் என்றும், வித்தியாசம் சிறிதும் பார்க்காமல்

அகிலம்:

கந்தைத் துணியுடுத்து கைநிமிர்ந்து காட்டாமல்

விளக்கம்:

கந்தை ஆடை தரித்து உன் அடக்க நிலையை வெளியே யாருக்கும் காட்டாமல் ,

அகிலம்:

எந்தப் பேரோடும் இனிப்புமொழி பேசாமல்

விளக்கம்:

எவரோடும் இனிய வார்த்தை பேச வேண்டும் என்று எண்ணம் இல்லாமல்,

அகிலம்:

பாலல்லால் வேறு பண்டமிக ஏராமல்

விளக்கம்:

பாலைத் தவிர வேறு வகைப் பண்டங்கள் உண்ணாமல்,

அகிலம்:

காலல்லால் சுத்தம் கழுவ நினையாமல்

விளக்கம்:

காலைக் கடனும், மாலைக் கடனும் மாலைக் கடனும் செய்யும் போது உடம்பைச் சுத்தமாக்குவது அல்லாமல், உடம்பு முழுவைதையும் சுத்தப்படுத்திச் சுகமாக இருக்க வேண்டும் என்று நினைக்காமல் நீ தவம் இருப்பாயாக.

அகிலம்:

மூக்கு நடுவே மும்முதலு முத்திமுத்தி
நாக்குச் சுழிதாங்கி நாரணன் நானெனவே
எகாபரத்தைக் கண்டு இரண்டாண்டு ஓரிருப்பாய்

விளக்கம்:

மூக்கின் நடுவே வலகலை, இடகலை, சுழிமுனை ஆகிய மூன்று முகங்களையும் கண்டறிந்து, நாக்குச் குழியாகிய சுழிமுனையில் நிலையாக நின்று, நானே நாராயணன் என்னும் திடமான எண்ணம் கொண்டு எங்கும் பரந்த பரம்பொருளைக் கண்டு இரண்டு ஆண்டுகள் முதல் தவசான யுகத்தவசை தொடர்ச்சியாக முடித்து விடு.

அகிலம்:

மகாபரனை நெஞ்சில் மறவாம லெப்போதும்
கண்டிரு என்மகனே கருத்தொன்று தானாட்டி
கொண்டை யமுதுண்டு குவிந்திரு என்மகனே

விளக்கம்:

உயர்வு பொருந்திய பரம்பொருளை உன் மனதில் ஒரே நினைவாய் மறவாமல் எப்பொழுதும் கண்டு ஒரே நினைவில் நிலை நின்று அங்கே உருவாகின்ற ஞானப்பாலை உண்டு நிலைத்து இருப்பாயாக.

அகிலம்:

இப்படியே ஆறாண்டு இருநீ யுகத்தவசாய்
அப்படியே நீயிருந்து ஆறாண் டேகழித்தால்
நினைத்ததெல்லா முனக்கு நிசமாய் முடியுமப்பா

விளக்கம்:

யுகத்தவசைப் போன்று ஆறு ஆண்டுகள் மூன்று தவசுகளையும் முடித்தால் நீ நினைத்தவை எல்லாம் நிச்சயமாய் உண்ணால் முடித்துவிட முடியும்.

அகிலம்:

உனைத்தள்ளி வேறே ஒருமூப் புகத்திலில்லை
என்ன நினைத்தாலும் எத்தனைதான் செய்தாலும்
வன்னத் திருமகனே வகையதுதா னென்மகனே

விளக்கம்:

பிறகு உன்னைத்தவிர வேறு ஒருவரும் உயர்ந்தவராக இந்த கலியுகத்தில் இருக்க முடியாது. நீ எதை நினைத்தாலும், எதைச் செய்தாலும், வன்மையுள்ள செல்வ மகனே, அவை எல்லாம் அடையும் வழி முறைகள் இவையேயாம்.

அகிலம்:

நீசெய்த தெல்லாம் நிரப்புத்தா னென்மகனே
நானீயே யல்லால் நடப்பதுவும் வேறில்லையே
தானீத னான சர்வபரா என்மகனே

விளக்கம்:

அதன் பிறகு நீ செய்வது எல்லாம் நியாயமாகவே அமையும். நாராயணனாகிய நான் நீ ஆகாமல் வேறு எதையும் வெற்றிகரமாக நடத்தி முடிக்க முடியாது. என்மகனே, தவத்தின் மூலமாக நீ நாராயணன் ஆகிவிட்டால் எங்கும் நிறைந்த சர்வபரன் என்பவன் நீயேதான் ஆவாய்.

அய்யா துணை

தாக்கிரவா னாகிடினும் சற்றும் பகையாதே

விளக்கம்:

வறுமையாக உள்ளவனிடம் கூட சிறிதும் பகைமை கொள்ளாதே

அகிலம்:

எல்லா முன்னருகே இருந்துகேட்டுக் கொள்வேனான்

விளக்கம்:

நான் உனனருகே இருந்து உனக்குத் தீமை செய்பவர்களிடம் நியாயம் கேட்டுக் கொள்வேன்.

அகிலம்:

பொல்லாதா ராகிடினும் போரப் பகையதே

விளக்கம்:

பொல்லாதவர்கள் எனினும் அவர்கள் உன்னைவிட்டு அகன்றிடும் அளவு பகைமை கொள்ளாதே.

அகிலம்:

வாரஞ் சொல்லாதே வளக்கோரம் பேசாதே

விளக்கம்:

ஒருவர்க்கும் எதிராகப் பேசாதே, வழக்குகளுக்கு ஒரு பக்கம் சார்ந்து நியாயம் சொல்லாதே.

அகிலம்:

சார மறிந்து தானுரைநீ சொல்லுரைகள்

விளக்கம்:

நீ சொல்லுகின்ற சொற்களின் தன்மைகளை அறிந்து பேசுவாயாக.

அகிலம்:

ஆய்ந்து தெளிந்து அருளுநீ யென்மகனே

விளக்கம்
எல்லாவற்றறையும் ஆராய்ந்து தெளிவு அடைந்த பிறகே உன் முடிவை வெளிப்படுத்து.

அகிலம்:

ஏய்ந்துநீ தர்மம் இடறு நினையாதே

விளக்கம்:

தருமத்தினை வளர்க்க வேண்டுமே அல்லாது ததைத் தடுக்க எவ்வகையிலும் நினைத்துவிடாதே.

அகிலம்:

ஈனமில்லாத் தேடு எமக்காகுஞ் சாதியின்மேல்
மானமாய் வருந்தி மகிழ்ந்திரு என்மகனே

விளக்கம்:

எனக்குரிய சாதி எத்துன்பமுற்றாலும் குறை காணாது மானம் உள்ளவனாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வா என்மகனே.

அகிலம்:

அன்பான அவ்வினர்க்காய் அறிவில் வருந்தியிரு
தன்பாலே வந்தவுடன் சரியாச்சு தென்மகனே
மகனே நானுனது மனதுட் குடியிருந்து
சிவமே பொருந்தி செப்புவது முத்தரவே
துல்லிபமுங் காட்டேன் சூட்சமது வுங்காட்டேன்

விளக்கம்:

உன்மேல் அன்புடைய அந்தஇனம் ஞானம் பெறுவதற்காக மனம் வருந்தி இரு. சான்றோர்கள் தம்முள் ஞானம் உருவாகியதும் முடிந்தது. மகனே, சிவப்பொருளே, நான் உன் மனத்தில் குடியிருந்து எல்லாக் கட்டளைகளையும் கூறிடுவேன். எனது துல்லியத் தன்மையையும், சூட்சுமத்தையும் வெளியே காட்ட மாட்டேன்.

அகிலம்:

நில்லு நினைவில்நீ சரித்துக்கொடு என்மகனே

விளக்கம்:

நீ என் ஒரே நினைவில் நின்று செயல் படு.

அகிலம்:

பேயன் பயித்தியக் காரனெனப் பேசியுன்னை
நீசக் குலங்கள் நின்னையடிக் கவருவார்
சரித்துக் கொடுமகனே சற்றுங் கலங்காதே

விளக்கம்:

மகனே, நீசர்கள் உன்னை நோக்கி “இவன் பேயன், பைத்தியக்காரன்” என்று கூறி, உன்னை அவர்கள் அடிக்க வருவர். நீ சிறிது கூட மனம் அசையாது அதற்குத் தகுந்தவாறு சார்ந்து வளைந்து கொள்.

அகிலம்:

ஒருவரோ டும்பிணங்கி உரையாதே என்மகனே
எல்லாம் நான்கேட்டு ஆட்கொள்வே னென்மகனே

விளக்கம்:

எவரோடும் எதிரான வார்த்தைகளைப் பேசாதே. அவர்கள் தவற்றை எல்லாம் நான் கேட்டுத் தண்டனை கொடுத்து உன்னை ஆட்கொள்வேன்.

அய்யா துணை

அகிலம்:

வல்லாண்மை பேசாதே மாதிரி போடாதே

விளக்கம்:

நான் பெரியவன் என்னும் ஆணவ வார்த்தைகளைப் பேசாதே, எதிரி செய்ததைப் போன்று பழிக்குப் பழியாக எதையும் செய்ய நினைக்காதே.

அகிலம்:

ஏழையா யிருநீ என்னுடைய கண்மணியே

விளக்கம்:

எல்லாரிடமும் ஏழையைப் போன்று வாழ்ந்து வா.

அகிலம்:

ஆழ மனதுடைய அதிகமக னேவுனது
விதங்க ளறியாமல் வீணாவார் வம்பரெல்லாம்

விளக்கம்:

மிகவும் ஆழமான உயர்ந்த மனதுடைய அருமை பொருந்திய மகனே, என் கண் மணியே, உன் உயர் நிலை அறியாமல் எதிர்க்கும் வம்பர்கள் எல்லாரும் வீணாக அழிந்து விடுவர்.

அகிலம்:

மதங்க ளடக்க வாக்கெனக்கே ளென்மகனே

விளக்கம்:

எல்லா மதங்களையும் எனக்குள் அடக்கலாக்கிக் காட்டு என் மகனே.

அகிலம்:

தந்தே னுனக்கு தரளமணி முத்திரியும்
கந்தைத் துணியதிலே காட்டாதே வைத்துக்கொள்ளு

விளக்கம்:

அன்பு மகனே, தரளமணி, முத்திரி ஆகியவற்றை என் பரிசாக உனக்குத் தந்து விட்டேன் அவற்றை உனது கந்தைத் துணியினுள் யாருக்கும் காட்டாமல் மறைத்து வைத்துக் கொள்ளுவாயாக.

அகிலம்:

மகனே வுனது மனறியக் காட்டினதை
அகமேநீ வைத்து அகமகிழு என்மகனே

விளக்கம்:

மகனே, உனது மனம் மட்டும் தெளிவாக அறியும்படி நான் காட்டிய இரகசியத்தை உன் அகத்திலேயே நினைத்து அகம் மகிழ்ந்திரு.

அகிலம்:

பொறுதிதா னென்மகனே பெரியவ ராகுவது
உறுதிமிக வுண்டாகும் உகநாதா என்மகனே
தருமச் சிறப்புத் தான்கண்டா யோமகனே

விளக்கம்:

பொறுமை என்னும் உயர்ந்த குணந்தான் மிகப் பெரிய தர்மம் ஆகும், கலியுக நாதனே, என் மகனே, நீ பொறுமையைக் கடைபிடித்தால் உன் மனதுக்கு உறுதி அதிகமாகும்.

அகிலம்:

பொறுமை பெரிது புவியாள்வா யென்மகனே

விளக்கம்:

பொறுமை மிகவும் பெரியது என்பதை அறிந்து இப்புவியை ஆட்சி புரிவாயாக.

அகிலம்:

கண்டாயோ என்மகனே கரியமண் டபச்சிறப்புப்
பண்டையுள்ள தேரும் பதியுமிகக் கண்டாயோ

விளக்கம்:

என் மகனே, நான் உணர்த்திய சிறப்புகளை நீ அறிந்தாயா? காண்பதற்கு அரிய திருமாலின் மண்டபச் சிறப்புகளையும், மிகப் பழமையான தேரையும் பதியையும் நீ அறிந்தாயா?

அகிலம்:

தேட்ட முடனுனக்குச் செப்பும்விஞ்சை யானதிலே
நாட்ட மறவாதே நாரணா என்மகனே

விளக்கம்:

நாரணா, என் மகனே, நான் தேடித் தந்துள்ள இவ்விஞ்சைகள் மீது உன் நாட்டம் முழுவதும் இருக்க வேண்டும், மறவாதே, என்று திருமால் உததேசித்தார்.