ஞாயிறு, 23 நவம்பர், 2014

அய்யா துணை

பேய்களுக்குரிய உபதேசங்கள்:
============================

அகிலம்:

தூறான பேய்களுக்குச் சொல்லு முறைகேளு
வாறான நாரணர்தான் வாய்த்ததர்ம மேநினைத்துக்
கவிழ்ந்து சிறையிருக்குங் காரணத்தா லோகமெல்லாம்

விளக்கம்:

கீழ்தன்மையான பேய்களுக்கு நீ கூற வேண்டிய உபதேச மொழிகளைக் கூறுகின்றேன். கேட்பாயாக. எல்லாவழிகளுக்கும் காரணமாக இருக்கும் நாராயணர் தாம் வரப் போகின்ற தருமபூமியை நினைத்து மனமடக்கிச் சிறைவாகம் போன்று தவம் இருக்கின்ற காரணத்தால்

அகிலம்:

உவந்து திரியும் உயிரிப்பிராணி யாதொன்றையும்
இரத்த வெறிதீபம் தூபமிலைப் பட்டைமுதல்
சற்றும் வெலிபாவம் தான்காண ஒட்டாதெனத்
தர்மம் நினைத்துத் தவசிருக்கேன் நாரணனும்
உற்பனமா யறிந்தோர் ஒதுங்கியிருங் கோவெனவே
வீணப் பசாசறிய விளம்பியிரு என்மகனே

விளக்கம்:

இவ்வுலகில் ஊர்ந்து திரிகின்ற எந்தவித உயிர்ப்பிராணியையும் கொன்று பலியிடவோ, வேறு வகையான இரத்தவெறி பூஜை செய்யவோ, தீபதூபம் காட்டவோ, இலை, பட்டை போன்றவை கொண்டு பூஜை செய்யவோ கூடாது. அவற்றை நாம் காண்பதுகூட தகாது. நான் தருமபூமியை நினைத்துத் தவசு இருப்பதால் இதன் உண்மையை அறிந்தவர்கள் இத்தகைய பூஜை, பலி ஆகியவற்றிலிருந்து விலகி இருப்பீர்களாக என்று வீணான பிசாசுகள் அறியும்படி சொல்லி விடு.

வைகுண்டருக்குரிய உபதேசம்:
============================

அகிலம்:

நாண மறியாமல் நன்றிகெட்ட நீசர்குலம்
மட்டை யெடுத்தடிப்பார் மண்கட்டி கல்லெறிவார்
சட்ட மசையாதே தன்னளவு வந்தாலும்
நாட்டைக் கெடுத்த நவின்றகலிச் சக்கரத்தில்

விளக்கம்:

தமக்குச் செய்த நன்றியைப் பற்றிச் சிறிதுகூட எண்ணாத நீசக்குலம், வெட்கமின்றி மட்டை எடுத்து உன்னை அடித்திடுவர். அவர்கள் மண்கட்டி கொண்டும், கல் கொண்டும் உன்னை எறிந்து துன்புறுத்துவர். உன் உடம்பு அழியக்கூடிய நிலை வந்தாலும் உனக்கு நான் கூறிய உபதேசகச் சட்ட விதி முறைகளை விட்டு மாறாதே. இந்த நாட்டைக் கெடுத்தாகக் கூறப்படும் கலி வாழும் பூமியில் சிறிது அளவுகூட தவறு செய்துவிடாதே.

அகிலம்:

ஓட்டைக் கலத்ததிலும் உக்கு மிரும்பதிலும்
முழியாதே யென்மகனே மும்முதற்கும் நாயகமே
அழிவாகிப் போகும் அன்புகெட்ட நீசருடன்
பொய்யரோ டன்பு பொருந்தி யிருக்காதே
மெய்யரோ டன்பு மேவியிரு என்மகனே

விளக்கம்:

ஓட்டை மரக் கலத்தைப் போன்ற மனிதர்களின் முகத்திலும் துருப்பிடித்த இரும்பைப் போன்ற மனிதர்களின் முகத்திலும் உமது தவக் காலம் முடியும்வரை நீ ஏறிட்டுப் பாராதே. என் மகனே, மும்முதல் பொருளுக்கும் தலைவனே, அழிந்து போகின்றவனும், அன்பு கெட்டவனுமாகிய நீசருடன், பொய் பேசுபவரோடும் அன்பு கொண்டு வெளிப்படுத்தி இணைந்து வாழ்ந்து வா.

அகிலம்:

வர்மமதை வதைக்க வந்தேனெனச் சொல்லிமிகத்
தர்ம மதைவளர்க்கத் தரணியில் வந்தேனென்று
இம்முதலே யாறு இருப்பே தவசுபண்ணி
மும்முதலோ னாகி முறைநடத்து என்மகனே
மூக்குச் சுழியும் முச்சுளியும் முத்திமுத்தி
நோக்குச் சுழியாய் நேர்நில்லு என்மகனே

விளக்கம்:

வறுமையை ஒழிக்க இவ்வுலகில் நான் அவதாரம் எடுத்தேன் என்றும், தர்மம் பெரிது என்றும் உபதேசித்து வா என் மகனே. இப்பொழுது முதலே ஆறு வருடத் தவசை ஆரம்பித்து முப்பொருளுக்கும் முதற் பொருளாகி நீ செயல் படுத்துவாயாக. மூக்கில் வருவாகும் சுழிகளையும் தெளிவாகக் கண்டறிந்து எல்லாம் அறியக் காரணமாக இருக்கும் சுழிமுனை மயமாய் நிலை நிற்பாயாக.

அகிலம்:

பரமான பட்டணத்தில் பார்வைகொண் டேநாட்டிச்
சிரமானது விரித்துச் சிறையே யிருமகனே

விளக்கம்:

உன் இரு கண்களின் பார்வைகளும் பரம்பொருள் இருக்கின்ற சகஸ்ரார பட்டணத்தை நோக்கியவண்ணம் இருக்கட்டும். உன் தலை முடியை விரித்துப் போட்டுச் சிறையில் இருப்பவரைப் போன்று நீ வாழ்ந்து வா.

அகிலம்:

ஏற்பதுபால் பச்சரிசி இருப்பது பார்மேலாகும்
காப்பதுமா தர்மம் கண்ணே திருமகனே

விளக்கம்:

நீ உண்ணக் கூடியவை பாலும் பச்சரிசியுமாக இருக்கட்டும். உன் நினைவு இருக்க வேண்டிய இடம் உன்னுள்ளே காணக்கூடிய பரம்பொருளின் இருப்பிடம் ஆகும். என் கண்ணே திருமகனே, நீ மாபெரும் தருமத்தைக் காக்க வேண்டும்.

அகிலம்:

சந்தன வாடை சாந்துசவ் வாதுபுஸ்பம்
எந்தன் திருமகனே எள்ளளவும் பாராதே

விளக்கம்:

எனவே, அதை அடைவதுவரை சந்தனம், சாந்து வகைகள், சவ்வாது, பூக்கள் ஆகியவற்றின் இனிய மணத்தினை நீ சிறிதளவுகூட நுகர்ந்து பார்க்காதே.

அகிலம்:

வாடைபூ தீபம் மகிழாக் கலியுகத்தில்
நாடை யழித்து நல்லயுக மேபிறந்தால்
சொல்ல வொண்ணாத சுகந்தருவே னென்மகனே

விளக்கம்:

இவ்வாறு பூ தீபம் போன்றவற்றின் வாசனையை நுகர்ந்து மகிழக்கூடாது. இந்தக் கலியுகம் அழிக்கப்பட்டுத் தருமயுகம் பிறக்குமானால் அது முதலாக உனக்குக் கூற முடியாத இனிய சுகத்தினைத் தருவேன் என உபதேசித்தார்.

அகிலம்:

கண்டாயோ மகனே கரிய பவிசுஎல்லாம்
கொண்டாயோ விஞ்சை கூடுபிர காசமதாய்

விளக்கம்:

பிறகு “ மகனே அடைவதற்குரிய செல்வங்களை இந்த உபதேசங்கள் மூலம் நீ தெளிவாக அறிந்தாயா? என்று கேட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக