வியாழன், 27 நவம்பர், 2014

திருநாமத்தின் மகிமைகள்

செந்தாமரை மலரில் ஒளிர்கின்ற திருநாமம் அய்யா வழி பக்தர்களின் நெற்றி புருவங்களின் மத்தியிலிருந்து ஜோடி வடிவில் திருநாமமாக இடப்படுகிறது. பள்ளியறையை வணங்கிய பக்தர்கள் பதியில் உள்ள பள்ளியறையின் இடது பக்கத்தில் நிற்கின்ற பணிவிடை பட பிள்ளைகளிடம் சுருளைக் கொடுத்து "அய்யாவுக்கு அன்பாக தரப்படுகிறது'' என்று கூற வேண்டும்.
 
பின்னர் பணிவிடைப் பிள்ளைகளால் பக்தர்களுக்கு திருநாமம் இடப்பட்டு, இனிமம் வழங்கப்படுகிறது. திருநாமம் இடப்பயன்படுத்தும் திருமண பூமிக்கு அடியில் உள்ள தூய வெள்ளை நிற திருமண்ணில் இருந்து தயாரிக்கப்படுகின்றது. இதையே அனைத்து அய்யா வைகுண்ட பதிகளிலும், தாங்கல்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
 
முற்காலத்தில் சில கோவில்களில் திருநீற்றை பூசுவது தீண்டாமையாக கருதப்பட்டது. இதை மாற்றக் கருதிய அய்யா வைகுண்டர் பக்தர்களுக்கு "தொட்டு திருநாமம்'' ஆதலால் அய்யா வைகுண்டரின் பதிகளிலும், தாங்கல்களிலும் பணிவிடைப் பிள்ளை களால் அன்பர்களுக்கு திருநாமம் இடப்படுகிறது.
 
அத்திருநாமம் இடும்பொழுது பெருவிரலும் ஆட்காட்டி விரலும் இணைந்து இடப்படுகிறது. அதில் பெருவிரல் "நான்'' என்பதையும் குறிக்கின்றது. இம்முறையே "தொட்டு திருநாமம்'' என்று அழைக்கப்படுகிறது. திருநாமம் இடுவதால் பக்தர்களுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றது. திருநாமம் அணிந்த அன்பர்களின் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும்.
 
நோயின்றி சுகத்துடன் வாழ முடிகின்றது. தீராத நோய்கள், வலிகள் குணமாகின்றது. தீயசக்திகள் நம்மை விட்டு அகலுகின்றது. கவலைகள் இன்றி இன்பத்துடன் வாழ வழிவகுக்கிறது. தேர்வில் வெற்றி பெற முடிகிறது.
 
தீர்க்க முடியாத துன்பம் தரும் பிரச்சினைகளும் தீர்க்கப்படுகிறது. திருநாமம் இடுவதால் நேர்மையாகவும், உண்மையாகவும், வீரமாகவும், அன்பாகவும் வாழ முடிகின்றது. இத்தகைய சிறப்புகளைத் தருகின்ற திருநாமத்தை தினமும் நம் நெற்றியில் தாங்கி அய்யா வைகுண்டரின் திருவருளைப் பெறுக!

புதன், 26 நவம்பர், 2014

முத்திரி கிணறு :

நாகர்கோவில்- கன்னியாகுமரி சாலையில், சுசீந்திரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது ஈத்தங்காடு என்னும் ஊர். இங்கிருந்து 3 கி.மீ. பயணித்தால் சாமித்தோப்பை அடையலாம். இயற்கை எழில் கொஞ்சும் தென்னந்தோப்புகள் நிறைந்த இந்த அழகிய கிராமம், இந்தியா முழுக்கப் பரவி வியாபித்துள்ள சுவாமி அய்யா வைகுண்டரின் தருமபதிகளுக்கு எல்லாம் தலைமைப்பதியாகத் திகழ்கிறது.
முத்திரி கிணறு :
அய்யா வைகுண்டரின் தருமபதிக்குள் நுழைவதற்கு முன்பாக, அய்யா உருவாக்கிய முத்திரிக் கிணற்றில் நீர் இறைத்து நீராடி, அந்தக் கிணற்றை வலம் வந்து வழிபட்ட பிறகே தருமபதிக்குள் அடியெடுத்து வைக்க வேண்டும். எந்தவித வேறுபாடும் இன்றி எல்லா மக்களும் பயன்படுத்துவதற்காக அய்யா வைகுண்டர் ஏற்படுத்திய பொதுக்கிணறுதான் இந்த முத்திரிக் கிணறு.
முத்திரி என்றால், ‘உத்தரவாதம் தருதல்’ அல்லது ‘நியமித்தல்’ என்று பொருள். அய்யா வைகுண்டரின் தருமபதி எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் முத்திரிக் கிணறு இருக்கும்.
தர்மபதி:
முத்திரிக் கிணற்றில் புனித நீராடிவிட்டு, அய்யா வைகுண்டரின் தருமபதியை நோக்கிச்சில அடிகள் எடுத்து வைத்ததும், தகதகக்கும் பொன்வாசல் பளிச்சிடும். உள்ளே நுழைந்த உடன் அய்யா வைகுண்டர் தவம் இருந்த வடக்குவாசலை “சிவசிவ சிவசிவா அரகர அரகரா” என்று உச்சரித்து 5 முறை சுற்றி அய்யாவிடம் மாப்பு கேட்டு, ஏழு நிலை ராஜகோபுரம் தாண்டி, தருமபதியின் கிழக்குப் பார்த்த முகப்பு வாசலை அடைய வேண்டும்.. முகப்பு வாசலில் இருந்தே அய்யா வைகுண்டரைத் தரிசிக்கலாம்.
கொடிமரத்தைக் கடந்து தியான மண்டபத்தை அடைந்ததும், அய்யா வைகுண்டரை மிக அருகில் தரிசிக்கலாம்.
பொதுவாக, கோயில்களில் தெய்வங்களை அழகுத் திருமேனிகளில் பார்த்துப் பழக்கப் பட்டிருப்போம். ஆனால், இங்கே அய்யா வைகுண்டரின் திருமேனி முற்றிலும் வித்தியாசமானது. ஒரு நாற்காலியில் அய்யா வைகுண்டர் இருப்பதாக பாவித்து, அவர் பயன் படுத்திய பொருட்களை மாத்திரமே வைத்து வழிபடுகிறார்கள்.
நிலைக் கண்ணாடி:
நாற்காலிக்குப் பின்புறம் ஆளுயர நிலைக்கண்ணாடி இருக்கிறது. ‘நீ தேடும் இறைவன் உனக்குள்ளேயே இருக்கிறான்’ என்பது அய்யா வைகுண்டரின் வாக்கு. அதனாலேயே இப்படியரு வழிபாட்டு முறை! நிலைக் கண்ணாடி முன்பு தீபத்தை ஏற்றிவைத்து, இந்த வழிபாட்டு முறையை ஆரம்பித்து வைத்தவரும் அவரே! ‘கண்ணாடியினுள் தெரியும் நீயே கடவுள். உனக்குள் சுடர்விடும் ஒளியே கடவுள்’ என்பதும் அய்யா வைகுண்டரின் வாக்கு.
உருவ வழிபாடு வேண்டாம் என்பது அய்யா வைகுண்டரின் விருப்பம் என்பதால், அதன்படியே சாமித்தோப்பு உள்ளிட்ட அய்யா வைகுண்டரின் எல்லாத் தருமபதிகளிலும் இந்த வழிபாட்டு முறையே பின்பற்றப்படுகிறது.
அய்யா வைகுண்டரின் பள்ளியறையை வலம் வரும் வழியில் அய்யா வைகுண்டர் மானிட அவதாரத்தில் பயன்படுத்திய கட்டில் வைக்கப்பட்டுள்ள அறையைக் காணலாம்.
பள்ளியறை தரிசனம் முடித்ததும், மறுபடியும் தியான மண்டபம் வழியாக வந்து, தருமபதியின் உள் பிராகாரத்தை வலம் வரலாம். அவ்வாறு வலம் வருகையில், கேரள கட்டடக்கலை முறையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் கருவறையின் பொன் விமானத்தைத் தரிசிக்கலாம்.
தருமபதி மட்டுமல்ல, இங்கே பின்பற்றப் படும் அத்தனை வழிபாட்டு முறைகளும் வித்தியாசமானவை.
தீப ஆராதனை கிடையாது. தேங்காய் உடைக்க மாட்டார்கள். தேங்காயை இங்கே உடைப்பது உயிர்ப் பலி கொடுப்பதற்குச் சமம் என்பதால், அப்படிச் செய்வதில்லை. கற்பூரம், சாம்பிராணி, ஊதுவத்தி ஆகியவற்றுக்கும் இங்கே இடமில்லை.
அப்படியென்றால், தருமபதிக்கு வரும்போது என்னதான் கொண்டு வரவேண்டும் என்கிறீர்களா?
வெற்றிலை- பாக்கு, மல்லிகைப்பூ, துளசி, பிச்சிப்பூ, பன்னீர், முழு எலுமிச்சைப் பழம் ஆகியவற்றைக் கொண்டு வந்தால் போதும். இவை, அவற்றைக் கொண்டு வருவோருக்குத் திரும்பத் தரப்படமாட்டாது. மாறாக, இப்படி எல்லா பக்தர்களும் கொண்டு வரும் அனைத்துப் பொருள்களும் வழிபாட்டுக்குப் பிறகு, பிரசாதமாக அனைவருக்கும் சரிசமமாகத் தரப்படும்.
‘காணிக்கை வேண்டா(து)ங்கோ…’
என்று அய்யா வைகுண்டரே சொல்லியிருப்பதால், தருமபதிகளில் உண்டியல்கள் கிடையாது. இங்கே பிரதானமாக வலியுறுத்தப்படுவது… ‘உங்களால் முடிந்த தருமத்தைச் செய்யுங்கள்’ என்பதுதான்.
‘தருமம் செய்து தழைத்திருங்கோ…’ 
என்பது அய்யா வைகுண்டரின் வாக்கு என்பதால், இங்கே வரும் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த தருமத்தைச் செய்கிறார்கள். அதாவது, தருமபதிகளில் நடைபெறும் அன்னதானத்துக்குத் தேவையான, தங்களால் முடிந்த நிதி உதவியை மனமுவந்து தரும் பக்தர்கள் இங்கு நிறையப் பேர்.
அய்யா வைகுண்டரைத் தேடி வந்து வழிபட்டால், நாம் நினைத்ததைச் சத்தியமாய் நிறைவேற்றித் தருவார் நம் அய்யா. அனைவரும் சாமித்தோப்பு சென்று அய்யா வைகுண்டரின் திருப்பாதம் பணிந்து வணங்கி, அவர் அருள்பெற்று வருவோம்!
அய்யா உண்டு

அய்யாவின் சிறைவாசமும் அற்புதங்களும்

அய்யாவின் போதனைகள் தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் ஈர்த்தன. நாளுக்கு நாள்
அய்யாவை நாடிவருவோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருந்தது.
வைதீக இந்து சமயத்தில் பெருகியிருந்த மூடத்தனத்தில் இருந்து மக்களை மீட்க
வேண்டும் என்பதே அய்யாவின் நோக்கமாக இருந்தது. பேய்களுக்குப் பயந்தும்,
மந்திரவாதிகளுக்கு அஞ்சியும் இருந்த மக்களை அய்யா அழைத்தார். வைகுண்டர்
பிறந்ததால் பேய்கள் அழிந்துவிட்டன என்றும் மந்திரவாதிகளின் சக்தி ஒழிந்து
விட்டது என்றும் கூறினார். யாருக்கும் எந்த நிலைக்கும் அஞ்சாமல் இருக்க
வேண்டும். அடிமைத்தனம் வேண்டவே வேண்டாம். தன்மானம் காப்பதே தர்மம்
என்றெல்லாம் மொழிந்தார்..
தன்னைக் காண வந்தோரின் நோய்களை திருமண்ணும் நீரும் கொடுத்துக்
குணப்படுத்தினார். ஆடம்பரத் திருவிழாக்கள் வேண்டாம், அமைதியாக இறைவனை
வணங்கினாலே போதும் என்றுரைத்தார். கிராமத் தெய்வங்களை வணங்குதல்
வேண்டாம். திருமால் மட்டுமே தெய்வம் அவனையே வணங்குங்கள் என்று

அறிவுறுத்தினார்.
அய்யாவின் போதனைகள் மேல்தட்டு மக்களான வைதீக இந்துக்களின் கோபத்தைத்
தூண்டிவிட்டது.. மேலும் கிறித்தவ மதமாற்றமும் நின்றுபோனதால்,
கிறித்தவர்களும் அய்யாவின் மேல் கோபத்தில் இருந்தனர். தன்னை இறைவனின்
அவதாரம் என்று சொல்லி மக்களை அரசுக்கு எதிராகத் தூண்டிவிடுவதாக மன்னனிடம்
புகார் அளிக்கப் பட்டது. அய்யாவைப் பற்றிக் கேள்விப் பட்ட மன்னன்
சுவாதித் திருநாள் சுசீந்திரம் வந்து தங்கினான். தன் மந்திரியிடம்
அய்யாவைப் பற்றி விசாரித்தான். மந்திரியும், "நமக்கு வரி செலுத்தி
அடிமைத்தனம் செய்யும் சாணார் குலத்தில் வைகுண்டராய்த் தோன்றியதாய்
சொல்லிக் கொள்கின்றான். மெய்க்கொண்ட பூமியெல்லாம் வேறொருவர் ஆளாமல் தாமே
முடிசூடி ஆள்வோம் என்றும் சொல்லிக் கொள்கின்றான்" என்றுரைத்தான். ஒரு
ஜோசியனை வரவழைத்து தன்னிலும் பெரியவன் யாரெனக் கேட்டான் மன்னன் .
ஜோசியனும் "மண்ணுலகையெல்லாம் ஒரு குடையில் ஆள மகாவிட்ணு மானுடனாய்த்
தோன்றுவார். அவர் தோன்றும் காலமும் இதுவே" என்றான். "அவர் பிறக்கும்
குலம் யாது?" என மன்னன் வினவ "அது பெரிய வம்சாவழி கொண்ட குலமாக
இருக்கும்" என்று ஜோசியன் உரைத்துச் சென்றுவிட்டான்.
இதனால் மகாவிட்ணு போற்றுதற்குரிய நம்பூதிரி குலத்தில் பிறப்பார் என்றும்
சாணார் குலத்தில் மகாவிட்ணு அவதரிப்பது நடக்க இயலாத ஒன்று என்றும் முடிவு
செய்த மன்னன் வைகுண்டரை கைது செய்து அழைத்துவரக் கட்டளையிட்டான்.
அய்யாவைக் கைது செய்ய படைகள் புறப்பட்டன.. மக்கள் வெகுண்டெழுந்தனர்.
எல்லாம் இறைவனின் சித்தம் என்பதை உணர்ந்த அய்யா பொறுமை காக்கும்படி தம்
மக்களுக்கு அறிவுறுத்தினார். "பொறுத்திருங்கள். உங்களை பூலோகம்
ஆளவைப்பேன். நன்மையைச் சொல்லி, நல்லவழி நடந்து சிரிக்கப் போவது எந்த சாதி
என்று பார்த்து விடலாம்" என்றுரைத்தார்.
படை வீரர்கள் வந்து அய்யாவைக் கட்டிலில் இருந்து கீழே தள்ளி,
துப்பாக்கியால் அடித்துக் கயிற்றால் கட்டி இழுத்துச் சென்றனர்.
வெகுண்டெழுந்த மக்கள் கூட்டம் அய்யாவின் புன்னகை கண்டு அமைதியானது.
"சாணார் குலத்தில் சாமி அவதரிப்பானோ?" என்ற கேலியை உதாசீனம் செய்த அய்யா
இறைவனின் கட்டளைப் படி அமைதியாக சென்றார்.
தளபதி கௌடன் என்பவன் அய்யாவை மிகவும் கேலி செய்தான். அடித்தான். "அவன்
அடித்த அடியையெல்லாம் ஆபரணமாக அகத்தில் அணிந்து கொண்டேன்" என்று
அகிலத்திரட்டில் பாடுகின்றார் அய்யா.
கலிநீசன் என்று அய்யாவால் அழைக்கப் பட்ட திருவிதாங்கூர் சமஸ்தான மன்னன்
சுவாதித் திருநாளின் முன்னிலையில் அய்யா குற்றவாளியாக நிறுத்தப் பட்டார்.
அய்யா தனது சக்தியை எல்லாம் மறைத்து சாதாரண மனிதனாக அவன் முன்னால்
நின்றார். இவனை சோதனை செய்வோம் என்று எண்ணிய மன்னன் தன் கையில் இருப்பது
என்ன என்று கேட்க "இறைவனின் எண்ணம் எதுவோ அது இருக்கும்" என்று
பதிலுரைத்தார் அய்யா. இதனால் அவர் கள்ளசாமி என்று முடிவு செய்த மன்னன்
ஆத்திரமுற்றான். அய்யாவை சரடன் என்னும் கொடிய தளபதியிடம் அழைத்துச்
செல்லக் கட்டளையிட்டான்.
சரடனும் அய்யாவை நிந்தித்து, ஓர் பாத்திரத்தில் சாராயத்தை ஊற்றி அதில்
ஐந்து வித விடங்களைக் கலந்து பால் என்று சொல்லி அய்யாவுக்கு அளித்தான்.
அறியாதவரா அய்யா? ஆயினும் இறைவனின் திருவுளப்படி எல்லாம் நடைபெற வேண்டும்
என்று சொல்லி அதைக் குடித்தார். ஆயினும் எதுவும் ஆகவில்லை. எனவே திகைத்த
சரடன் அய்யாவை சிறைக்குள் தள்ளக் கட்டளையிட்டான்.
கடுஞ்சிறைக்குள் அய்யா தள்ளப்பட்டார். கடுவாய் ஒன்றைப் பட்டினி போட்டு
அதையும் அய்யா இருந்த சிறையறையில் தள்ளினார்கள்..
கொடிய பசியோடு வந்த கடுவாயோ அய்யாவின் அருகில் சாந்தமாய் அமர்ந்தது..
இதைக் கண்ட நம்பூதிரி ஒருவன் சேவகனின் ஈட்டியை வாங்கி கடுவாயைக் குத்தி
அதை வெறியேற்றினான். வெறிகொண்ட கடுவாய் அந்த ஈட்டியைத் தன் வாயால்
கவ்விக் கொண்டது. நம்பூதிரி அதை பலங்கொண்டு இழுக்கத் தனது பிடியை
விட்டது. இதனால் தடுமாறி கீழே விழுந்த நம்பூதிரியின் மார்பில் அந்த ஈட்டி
இறங்கியது. இதனால் மரணமடைந்தான்.
இச்செய்தி மன்னனுக்கு எட்டியது. நம்பூதிரி ஒருவன் இதைப் போன்ற கொடியமரணம்
எய்துவது மன்னனுக்கு உகந்ததல்ல என்று அவையோர் மன்னனுக்கு உரைத்தனர்.
இதனால் மன்னன் பயந்து போனான். "நீர் பிறந்த சாணார் குலத்துக்காக மட்டும்
வேண்டுமானால் போராடிக் கொள்ளலாம். அவர்களுக்குரிய உரிமையை மட்டும்
தருகின்றேன். மீதமுள்ள சாதியரோடு நீர் பேசக்கூடாது" என்று ஓர் ஓலையில்
எழுதி அய்யாவுக்கு அனுப்பினான். அய்யாவோ "சான்றோர் குலத்தில் பிறந்ததால்
அவர்களுக்காக மட்டும் பிறந்தவனல்ல.. மானுடர் அனைவருக்காகவும் பிறந்தேன்.
அனைவருக்காகவும் சேதிகள் உரைப்பேன்" என்று பதிலுரைத்தார்.
இதனால் மன்னன் அய்யாவை விடுதலை செய்யத் திட்டமிட்டு அவரை விடுதலை செய்ய
உத்தரவிட்டான். "நீ நினைத்தபடி அல்ல... எம் அதிகாரத் தந்தை இறைவன்
கட்டளைப் படியே சிறைக்கு வந்தோம்.. நீ குறித்த நாளில் அல்ல... இறைவன்
சொல்லும் நாளிலேயே வெளியே வருவோம்" என்றுரைத்து வெளியேறாமல் சிறைக்குள்

இருந்தார்.
மாசி மாதத்தில் இறைவன் குறித்த திருநாளில் அய்யா சிறையில் இருந்து
வெளியேறினார். அவரை சான்றோர்கள் வாகனத்தில் அமர்த்தி சாமித் தோப்புக்கு
அழைத்து வந்தனர். இந்நிகழ்வை இன்று அய்யா வழி மக்கள் கொண்டாடி
வருகின்றனர்.
சிறைவாசம் செய்து மீண்ட அய்யா செய்த சில அற்புதங்களைப் பற்றி

தவமும் போதனைகளும்

ய்யாவின் தவமும் போதனைகளும்
முத்துக்குட்டி கடலுற்சென்று வைகுண்டம் கண்டு மீண்டு வைகுண்டப்
பண்டாரமாய் தென்னகம் நோக்கி நடக்கலானார். தன் தாய்க்கு மட்டுமே
வைகுண்டத்தின் காட்சியைக் காண்பித்து அதை யாருக்கும் உரைக்க வேண்டாம்
என்று கூறிவிட்டு தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
தனது பிறப்பிடத்திற்கு அவர் சென்ற போது அவரை எதிர்த்தவர்கள் பலர்.
ஆயினும் பூவண்டர் எனும் இடையர் தனது தென்னந்தோப்பை அய்யாவுக்குக்
கொடுத்தார். அய்யாவும் அத்தென்னந்தோப்பை மகிழ்வுடன் ஏற்றார். அனைத்தையும்
துறந்து வைகுண்டப் பண்டாரம் அத்தோப்பில் தனது தவவாழ்க்கையை ஆரம்பித்தார்.
அதிகாரத்தந்தை அவதார மகனுக்கு இட்ட கட்டளையே இந்த தவ வாழ்க்கை என்று கூறி
ஆறு ஆண்டுகள் தவம் செய்தார்.
முதல் இரு ஆண்டுகள் கலியுகம் அழிந்து தரும யுகம் தோன்றுவதற்காகவும்,
இரண்டாம் இரு ஆண்டுகள் சாதிக்கொடுமைகள் நீங்கவும், மூன்றாம் இரு ஆண்டுகள்
பெண்ண்டிமை தீர்வதற்கும், நல்ல வழிமுறைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவும்
என்றுரைத்தார். இதனை அவரே
"முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே
தத்தமுள்ள இரண்டாம் தவசு சாதிக்காமே
மூன்றாம் தவசு முன்னுரைத்த பெண்ணாட்கும்
நன்றான முற்பிதிரு நல்ல வழிகளுக்கும்"
என்று பாடுகின்றார்.
அய்யாவின் முதல் இருஆண்டுகள்  தவ வாழ்க்கை ஆறு அடி ஆழமுள்ள பள்ளத்தில்
நிகழ்ந்தது. இரண்டாம் இரு ஆண்டுகள் தவவாழ்க்கையை வீராசனம் இட்டுத்
தரைமேல் நிகழ்த்தினார். மூன்றாம் இருஆண்டுகள் தவமோ கடுமையான மௌனதவம்.
இதனை ஓர் பீடத்தை அமைத்து அதன் மேல் அமர்ந்து நிகழ்த்தினார்.
அய்யா தனது தவ வாழ்க்கையின்போது பச்சரிப் பாலை மட்டுமே அருந்தினார்.
வைகுண்டர் உரைத்த ஆறு ஆண்டுகள் தவவாழ்க்கை முடிவுற்றது.. அய்யா தவமிருந்த
காலத்தில் அவரைத்தேடி பதினெட்டு சாதி மக்களும் வந்து கொண்டிருந்தனர்.
இதனைக் கண்ட அய்யா இவர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்று
எண்ணங்கொண்டார்.
அந்த சமயத்தில் பொதுக்கிணற்றில் வருணாசிரமத்தைச் சாராத இந்த பதினெட்டு
சாதியினருக்கும் தண்ணீரெடுக்க அனுமதியில்லை.. எனவே தனது பூவண்டன்
தோப்பில் ஓர் கிணற்றை ஏற்படுத்தினார். அது முந்திரி கிணறு என்றழைக்கப்
பட்டது. அந்த கிணற்றை பொதுமக்கள் தங்கள் பயன்பாட்டிற்கு
பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தார்.
தன்மானம் மட்டுமே கலியை அழிக்கவல்ல ஆயுதம் என்று அய்யா போதித்தார்.
"தன்மானத்தைத் தாங்கியிரு என் மகனே" என்று பாடினார்.
ஆதிக்க சாதிகளின் ஆலயத்துக்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கப் பட்டிருந்த
காலம் அது. தாழ்த்தப் பட்டோர் சிறு தெய்வ வழிபாடுகளில்
ஈடுபட்டிருந்தார்கள். இதை அய்யா எதிர்த்தார். திருமால் ஒருவனே தெய்வம்,
அவனை விடுத்து வேறு பேய் பிசாசுகளை வணங்க வேண்டாம் என்று
அறிவுறுத்தினார். ஆதிக்க சாதிகளின் ஆலயத்துக்குள் நுழைவோர் மேலாடை
கழற்றி, இடுப்பில் துண்டு கட்டி வழிபாடு நிக்ழ்த்தினர். ஆனால் அய்யா தனது
பதிக்கு வரும் அன்பர்களை மேலாடை அணிந்து வரச்செய்தார். தலைக்குத் பாகைக்
கட்டி தன்மானத்தோடு வா என்றுரைத்தார்.
ஆதிக்க சாதிகளின் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்களைப் போன்று
தாழ்த்தப்பட்டோரும் திருவிழாக்களைக் கொண்டாடி வந்தனர். வழிபாட்டின்
பேரில் பணத்தை விரயம் செய்யாதீங்கோ என்றுரைத்த அய்யா கடவுளின் பெயரால்
பணத்தைக் கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது என்றுரைத்தார்.
உருவ வழிபாட்டை அய்யா மிகக்கடுமையாக எதிர்த்தார். இறைவன் அன்பு வடிவானவன்
என்றும் அவன் அனைவருள்ளும் இருக்கின்றான் என்றும் உரைத்த அய்யா தனது
பதியின் பள்ளியறையில் ஓர் கண்ணாடியை மட்டும் நிறுவினார். உன்னிலே
இறைவனைக் காண் என்பது அதன் மறை பொருள்.
நியாயம் தவறாமல் நேர்மையோடு யாருக்கும் அஞ்சாத வாழ்க்கை வாழ்வதே
இறைவனுக்குப் பிரியமானது என்றுரைத்த அய்யா அதன்படி வாழும்படி தன்
மக்களுக்குப் போதித்தார்.
அய்யா தனது வழியை அன்பு வழி என்று அழைத்தார். தன் மக்களை அன்புக்கொடி
மக்கள் என்றழைத்தார். இது போன்று புதுமையான கருத்துக்களை அய்யா
மொழிந்ததால் நாள்தோறும் அவரைக்காண வரும் பக்தர்களின் கூட்டம்
அதிகரித்தது. அதே சமயத்தில் வைதீக மதத்தின் ஆடம்பர வழிபாட்டு முறைகளுக்கு
அய்யாவின் உரைகள் ஓர் சம்மட்டியாக விழுந்தது.
தன்னைத் திருமாலின் அவதார மகன் என்றுரைத்தது ஆதிக்க சாதியினருக்குப்
பிடிக்கவில்லை. மகாவிட்ணுவின் அவதாரம் என்று கூறி மக்களைத்
திசைதிருப்புகின்றார் என்ற குற்றச்சாட்டு அய்யாவின் மேல் சுமத்தப்
பட்டது.
மேலும் கிறித்தவர்களாக மதம் மாறத்துவங்கிய காலக்கட்டத்தில் மதமாற்றத்தைத்
தடுத்து நிறுத்தியதும் அய்யாவின் செயல்தான். ஆனாலும் தனது போதனைகளில். இதனால்
கிறித்தவப் பாதிரிமார்கள் ஆத்திரம் அடைந்தனர். அய்யாவைப் பற்றிய
அவதூறுகளைப் பரப்பத் துவங்கினார்.. ஆனாலும் அய்யா எதைப் பற்றியும் கவலை
கொள்ளவில்லை. தனது பணியை செவ்வனே செய்தார்.
தாழ்த்தப்பட்ட பதினெட்டு சாதியினருக்குள்ளும் ஏற்றதாழ்வுகள் இருந்தன.
இதனை முதலில் களைய வேண்டும் என்று எண்ணிய அய்யா சமபந்தி போஜனத்தை
ஆரம்பித்து வைத்தார். முதலில் மறுத்த பலரும், அய்யாவின் அருளுரைகள்
கேட்டுத் திருந்தி ஒற்றுமையாக உணவருந்தினர்.
அச்சமயத்தில் ஏற்கெனவே உரைத்தது போல் தாழ்த்தப்பட்ட சாதியின் பெண்கள்
மேலாடை அணிய அனுமதியில்லை.. இதனை எதிர்க்க அய்யா நிகழ்த்திய தோள்சீலைப்
போராட்டத்தைப் பற்றி அடுத்த மடலில் காண்போம்.

அய்யாவின் முற்பிறப்பும் அவதார நோக்கமும்

கடலுள் மறைந்த அய்யா மூன்றாவது நாள் திரும்பி வந்தார். புத்தம் புது
உடலோடு.. தன்னை அணைக்க வந்த அன்னையைத் தடுத்து "நான் உன் மகன் அல்லேன்.
கலியுகத்தை அழித்துத் தருமயுகத்தை நிலைநாட்ட வந்த நாராயணன்" என்றுரைத்த
போது அதனை அன்னையார் நம்பவில்லை... எனவே தனது முற்பிறவியைப் பற்றிய
உண்மையை அய்யா அவர்கள் தன் தாயாருக்கு இயம்ப வேண்டியதாயிற்று.
அமரர்களின் கர்வத்தை அடக்கும் பொருட்டு சிவபெருமான் குரோணி என்னும்
அசுரனைப் படைத்தார். இவ்வசுரன் அனைத்துலகத்தையும் தனது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றான். வைகுண்டத்தை வெற்றி கொள்ள
குரோணி சென்றபோது கோபங்கொண்ட திருமால் குரோணியைக் கொன்றார். அவனது உடலை
ஆறு துண்டுகளாக வெட்டினார். ஒவ்வொரு யுகத்திலும் தர்மத்தின் சிறப்பை
உணர்த்துவதற்காக குரோணியின் உடல் ஒவ்வொரு அசுரனாகப் பிறந்தது.
சதிர்யுகம், நெடியுகம், கிருதயுகம், திரேதாயுகம், துவாபாரயுகம் என்னும்
ஐந்து யுகங்களிலும் அசுரனாகப் பிறந்தான். திருமால் பல்வேறு அவதாரங்களை
எடுத்து குரோணியை அழித்துத் தர்மத்தை நிலைநாட்டினார்.
ஆறாவது யுகமான கலியுகத்தில், குரோணி மாயையாக உடலற்றுப் பிறந்தான்.
அதன்படி மக்களின் மனதில் கெட்ட எண்ணங்களை ஏற்படுத்தி அதன் மூலம்
அதர்மத்தை வளர்த்த கலிநீசன்தான் குரோணியின் ஆறாவது துண்டு.
கலிநீசனின் செய்கைகளைக் கண்காணிக்க சம்பூரண தேவன் என்பவனைத் திருமால்
பூலோகத்துக்குச் செல்லக் கட்டளையிட்டார். சம்பூரண தேவனுக்கு எமலோகத்தைச்
சேர்ந்த பரதேவதையின் மேல் காதல் இருந்தது. அவளுக்கு ஏற்கெனவே மணமாகி
இருகுழந்தைகள் இருந்தன. ஆனாலும் அவளும் சம்பூரண தேவன் மீது காதல்
வயப்பட்டாள்.
எனவே சம்பூரணதேவன் திருமாலிடம் தன் காதலியும் தன்னோடு பூலோகம் வரவேண்டும்
என்று வரம் வேண்டினான். அமரனாகப் பிறந்த சம்பூரணதேவனுக்கு அவள்
பொருத்தமற்றவள் என்றும், மாற்றான் மனைவி என்றும் திருமால்
அறிவுறுத்தினார். ஆனால் சம்பூரண தேவன் திருமாலிடம் மிக உருக்கமாக
வேண்டிக் கொண்டான். எனவே அவனைத் தவம் செய்ய பணித்தார். "உன் தவத்தின்
வலிமை கண்டு உனக்கு வரம் தருவேன்" என்றுரைத்தார்.
எனவே சம்பூரண தேவனும், பரதேவதையும் தவம் புரிந்தார்கள். அவர்களது தவம்
பூரணம் அடையும் வேளையில் சிவபெருமானும், திருமாலும் அவர்களுக்கு வரம்
வழங்க வந்தனர். அவர்களை வரவேற்க அமரர் குல அதிபதியான இந்திரனும் வந்தான்.
இந்திரனைக் கண்டதும் இந்திரபதவியின் மேல் மோகம் கொண்டான் சம்பூரண தேவன்.
தன் காதலியுடன் பூலோகம் செல்லவேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பித்த தவம்
தேவேந்திர பதவி வேண்டும் என்ற பேராசையில் முடிந்தது.
இதனைக் கேட்ட திருமால் கோபம் கொண்டார். அவர்கள் இருவரையும் பூமியில்
பிறக்க ஆணையிட்டார்.
பரதேவதை ஏற்கெனவே தனது கணவன் மற்றும், குழந்தைகளுக்குத் துரோகம்
இழைத்ததால், கலியுகத்தில் அந்தக் கணவனோடு சேரவேண்டும் என்றும்,
குறிப்பிட்ட காலத்தில் தன் கணவனை இழப்பாள் என்றும் சாபமிட்டார். ஆயினும்
சம்பூரணதேவன் உனக்காகப் பிறப்பான். உன்னை மணப்பான். என்றும் கூறினார்.
சம்பூரண தேவனுக்கும் அவன் பேராசைப் பட்டதால் அதற்குத் தண்டனை நிச்சயம்
உண்டு என்றும் பூலோகத்தில் பிறந்து 22 வயது வரை சாதாரண மானுட வாழ்க்கை
வாழ வேண்டும் என்ரும், கணவனை இழந்த பரதேவதையை மணக்க வேண்டும் என்றும்
கூறினார். அச்சமயத்தில் தீராத நோய்க்கு ஆளாகி மரணத்தில் விளிம்பில்
நிற்கும்போது தானே சம்பூரண தேவனின் உடலில் இறங்கி அவனை மீட்டுக்
கொள்வதாகவும், அவ்வுடல் மூலம் தர்மத்தை நிலைநாட்டப் போவதாகவும் கூறினார்.
அய்யா அவர்கள் தானே அந்த சம்பூரண தேவன் என்றும், கடலில் தன்னை திருமாலின்
தூதர்கள் வைகுண்டம் அழைத்துப் போனார்கள் என்றும் அங்கே திருமால் தனக்கு
கலியை அழிக்கும் வழியைப் போதித்தார் என்றும் உரைத்தார். அங்கிருந்து
திருமால் தன்னை அவரது மகன் என்று உரைத்தமை பற்றிக் கூறிய அய்யா அவர்கள்
அவர் எப்போதும் தம்மோடு இருப்பதாகவும் கூறித் தன்னை வைகுண்டர் என்று
பூலோகத்திற்குத் திருப்பி அனுப்பியதாகவும் அய்யா தெரிவித்தார்.
தன் அன்னையாருக்குக் கடலில் வைகுண்டத்தின் காட்சியைக் காணச்செய்து இதை
யாருக்கும் உரைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதே சமயத்தில் அய்யா இன்னொரு உண்மையையும் எடுத்துரைத்தார். பொன்னுமாடன்
நாடாருக்கும், வெயிலாள் அம்மாளுக்கும் பிறந்த குழந்தை பிறந்த சிறு
நேரத்திலே இறந்து விட்டதாகவும் அச்சமயத்தில்தான் சம்பூரணதேவன் அவ்வுடலுள்
செலுத்தப் பட்டதாகவும் கூறினார். இதனைத் தாயாரும் ஒப்புக் கொண்டார்.
பிறந்த குழந்தை சிறிது நேரம் சலனமில்லாமல் கிடந்ததையும், பின்னர்
அழுததையும் அன்னை நினைவு கூர்ந்தார்.
அய்யா வைகுண்டர் திருமாலிடம் கலிநீசன் வாங்கி வந்த வரத்தைப் பற்றி
உரைத்தார். அதன்படி கலியை அழிக்கவும் ஆட்டுவிக்கவும் பண்டார வடிவங்கொண்டு
திருமாலே வைகுண்டராக அவதரித்தார். பண்டார உருக்கொண்டு அன்னைக்கு
உபதேசித்துப் பின்னர் தென் திசை நோக்கி நடக்கலானார்.
தென் திசை நோக்கி நடந்த அய்யா என்ன செய்தார்? என்னவெல்லாம் போதித்தார்?
அடுத்த மடலில் காணலாம்.

அய்யா வைகுண்டரின் தத்துவங்களையும், போதனைகளையும் தினந்தோறும் நினைவு கூறுகின்றன.

தங்களைத் தாங்களே வணங்கிக் கொள்ளும் ஒரு சம்பிரதாயம் கன்னியாகுமரியில் ஒரு சாராரிடம் உள்ளது. தன்னைத்தானே எப்படி வணங்கிக் கொள்வது? கருவறைக்குள் நிலைக்கண்ணாடியை வைத்து அதில் தெரியும் தங்கள் உருவத்தையே வணங்குகிறார்கள். அவர்கள் - அய்யா வழியினர்.
கன்னியாகுமரி சாஸ்தான் கோவில்விளையில் வாழ்ந்து, சரித்திரமாய் மறைந்த அய்யா வைகுண்டர் கட்டமைத்த தத்துவங்களையும், வாழ்க்கை முறைகளையும் பின்பற்றுவோரே அய்யாவழி மக்கள். மாபெரும் சமூக சீர்திருத்தவாதியாக அடையாளம் காட்டப்படும் வைகுண்டர், திருமாலின் அவதாரமாக கருதி வணங்கப்படுகிறார்.
மஹாவிஷ்ணு தசாவதாரம் எடுத்தவர். அதோடு, கலி மாயையில் சிக்கி வேதனைக்குள்ளாகும் மாந்தர்களை காக்க நாராயணன் எடுத்த மற்றொரு அவதாரமே வைகுண்டவதாரம் என்று அய்யாவழி மக்கள் நம்புகிறார்கள்.
1809-ல் குமரி மாவட்டத்தின் சாஸ்தான் கோவில்விளை என்று அழைக்கப்படும் சாமித்தோப்பில் பொன்னுமாடன்-வெயிலாள் தம்பதிக்கு மகனாக அவதரித்தார் வைகுண்டர். மகனுக்கு ‘முடிசூடும் பெருமாள்’ என பெயரிட்டனர் பெற்றோர்.
மாடன், சூடன் என்று மட்டுமே பெயரிட உரிமைபெற்ற ஒரு சாதியில் பிறந்தவருக்கு முடிசூடும் பெருமாள் என்று பெயரிட்டதை மேல்சாதியினர் அங்கீகரிக்க மறுத்தனர். கொடுமைகளையும், மிரட்டலையும் சகிக்காத பொன்னுமாடன் ‘முடிசூடும் பெருமாள்’ என்ற பெயரை முத்துக்குட்டி என்று மாற்றினார்.
முத்துக்குட்டி, இளவயதிலேயே சமூக ஆர்வம் மிக்கவராக இருந்தார். மேல் சாதியினரின் கொடுமைகளுக்கு எதிராக போர்க்குரல் எழுப்பினார். ஆண்டாண்டு காலமாக அடங்கி ஒடுங்கி கிடந்த மக்களுக்கு உணர்வூட்டும் விதமாக போதனைகள் செய்தார். தலையிலே முண்டாசு கட்டி, நெற்றியில் நாமம் இட்டு, முட்டுக்கு கீழே முழு வேட்டி கட்டி வழிபடும் உரிமையை பெற்று தந்தார். இதனால் முத்துக்குட்டி பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆயினும் அனைத்தையும் தன் உறுதியால் விரட்டினார். இந்த நிலையில் தன்னைவிட வயது முதிர்ந்த, ஒரு பெண் குழந்தைக்கு தாயான திருமால் வடிவு என்ற பெண்ணை மணம் புரிந்தார் முத்துக்குட்டி. இந்த இல்லற வாழ்வில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.
முத்துக்குட்டியை தீர்த்துக்கட்ட முடிவெடுத்த ராஜவம்சம், அவரை மருந்துவாழ்மலைக்கு விருந்துக்கு அழைத்து விஷம் கொடுத்தது. சிறிது சிறிதாக உயிர் எடுக்கும் அந்த விஷத்தால் கடும் காய்ச்சலுக்கு உள்ளானார் முத்துக்குட்டி. பல்வேறு மருத்துவங்களாலும் குணம் தெரியவில்லை. இதனால் துடித்துப்போன தாயார் வெயிலாளும், மனைவி திருமால்வடிவும், நாராயணனின் அருள்வேண்டி உருகி நின்றனர்.
ஒருநாள் இரவில் ஒளிவடிவாய் தோன்றிய நாராயணன், ‘திருச்செந்தூர் கோயிலில் நடக்கும் மாசித் திருவிழாவுக்கு உன் பிள்ளையை அழைத்து வா’ என்று ஆணையிட்டார். உடல்நிலை மிகவும் தொய்வடைந்த நிலையில் பெண்கள் இருவரும் தொட்டில் கட்டி முத்துக்குட்டியை தோளில் சுமந்து சென்றனர். கூடங்குளம் அருகில் நவலாடி என்ற இடத்தில் உணவருந்துவதற்காக தோள்சுமையை இறக்கியபோது முடங்கிக் கிடந்த முத்துக்குட்டி எழுந்தார், நடந்தார். நேராக திருச்செந்தூர் கடற்கரைக்குச் சென்றார். தாய்க்கும் மனைவிக்கும் இந்த அற்புதம் மயக்கத்தையே கொடுத்தது.
விறுவிறுவென்று கடலுக்குள் இறங்கிய முத்துக்குட்டியை சிறிது நேரத்தில் காணவில்லை. இறக்கும் நிலையில் கொண்டு வரப்பட்ட ஒருவர் கடலுக்குள் நடந்து சென்று மறைந்தது அங்கே கூடியிருந்த மக்களுக்குப் புரியாத புதிராக இருந்தது. முத்துக்குட்டி கடலுக்குள் மூழ்கி இறந்துவிட்டதாக எண்ணினார்கள். ஆயினும் வெயிலாள் மட்டும் கரையில் மகனின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தார்.
கடலுக்குள் சென்ற முத்துக்குட்டியை, நாராயணரின் தூதுவர்கள் லெட்சுமி கோயில் கொண்டிருந்த மகர மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு திருமால் மூன்று நாட்கள் கலிகாலம் பற்றி போதித்து வைகுண்டர் என்று நாமகரணம் சூட்டி, பூவுலகை ரட்சிக்க தன் பிரதிநிதியாய் வெளியில் அனுப்பிவைத்தார். கடலுக்குள் இருந்து ஒளியாய் வெளிவந்த மகனை கட்டி அணைத்து முத்தமிட்டார் வெயிலாள்.
ஆனால், ‘அம்மா. நான் வைகுண்டராக வந்திருக்கிறேன். இனி நான் இந்த பூவுலகிற்கே சொந்தம்’ என்று தன் நிலையை விளக்கினார், மகன். இதைக்கேட்ட மக்களும் வெயிலாளைப் போலவே திகைத்து நின்றனர்.
பின்னர் சாமித்தோப்பு வந்த வைகுண்டர், மக்களுக்கு ஆன்மிக போதனைகளை செய்யத் தொடங்கினார். Ôஇந்த உலகத்தில் சாதியின் பெயரால் மோதல்கள் உருவாகிவிட்டன. மதத்தின் பெயரால் சண்டைகள் பெருகிவிட்டன. இருப்பவன், இல்லாதவன் என்று ஏகப்பட்ட பிரச்னைகள்- மனிதர்கள் திசைமாறி சென்று கொண்டிருக்கிறார்கள்.
இவை எல்லாம் கலியின் அடையாளங்கள். இவற்றை ஒழிக்கவே நான் அவதாரம் எடுத்திருக்கிறேன்’ என்று மக்களுக்கு போதிக்கத் தொடங்கினார். மனிதருக்குள் எந்த பேதமுமின்றி அனைவருக்கும் வழிபாட்டு உரிமையை பெற்று தந்தார். சாதிக்கொடுமைக்கு எதிரான அவரது பிரசாரம், திருவிதாங்கூர் அரசுக்குக் கோபமூட்டியது. அவருக்கு தண்டனை அளிக்க திட்டமிடப்பட்டது. புலிக்கூண்டிற்குள் தூக்கி வீசப்பட்டார் வைகுண்டர். பல நாட்களாகப் பசியும் பட்டினியுமாகக் கிடந்த புலி, வைகுண்டரை பார்த்ததும் அமைதி யாய் அவர் காலடியில் வந்து படுத்தது. ராஜ கொடுமைகளைத் தன் சக்தியால் முறியடித்த வைகுண்டர், பின்னர் குமரிக்கு வந்து பதிகள் அமைத்து மக்களுக்கு போதனைகள் செய்தார்.
அவர் அருளிய ‘அகிலதிரட்டு அம்மானை’ இன்று அவர் வழிவந்த மக்களுக்கு புனித நூலாக உள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு கோடிக்கு மேலானோர் இன்று அய்யாவழியை பின்பற்றி வருகின்றனர். அய்யாவழி வழிபாட்டு தலங்கள் ‘பதிகள்’ என்று அழைக் கப்படுகின்றன. அய்யா வைகுண்டரின் பாதம் பட்ட சாமித்தோப்பு தலைமைபதி, சின்னமுட்டம். முட்டபதி, சொத்தவிளை அம்பலபதி, நாராயணன்விளை. பூப்பதி, தென்தாமரைகுளம்பதி, கோவளம், துவாரகாபதி ஆக விளங்குகின்றன. இது தவிர தமிழகம் முழுமைக்கும் ஏழாயிரத்துக்கும் அதிகமான தாங்கல்கள் உள்ளன. இந்த தாங்கல்கள் அய்யாவின் தத்துவங்களை விளக்கும் கல்விக்கூடங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. தூய்மை, எளிமையை வலியுறுத்துகிறது அய்யாவழி வழிபாட்டு முறை. ஒரு நாளைக்கு ஒருமுறையாவது தொழ வேண்டும் என்பது நியதி.
காலை உகப்பெருக்கு, மதியம் உச்சிப்படிப்பு, இரவு உகப்பெருக்கு ஆகியவை கடைபிடிக்கப்படவேண்டிய முக்கிய நடை முறைகள். ‘பிச்சையெடுத்து மிச்சமில்லாமல் அறப்பணியாற்று’ என்று அய்யா வைகுண்டரின் தத்துவத்துக்கு ஏற்ப எல்லா பதிகளிலும் 5 வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது. அய்யாவழி மக்கள் நாமம் இடப் பயன்படுத்தும் திருநீறு பூமிக்கு அடியில் உள்ள தூய வெள்ளை மண்ணில் இருந்து தயாரிக் கப்படுகிறது. புருவ மத்தியில் இருந்து தீபவடிவில் நெற்றியில் மேல்நோக்கி இந்நாமம் இடப்படுகிறது.
அய்யாவழி மக்களின் தலைமைபதியாகிய சாமித்தோப்பு பதியில் ஆவணி, தை, வைகாசி ஆகிய மாதங்களில் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. மாசி 20-ம் நாள் அய்யா வைகுண்டரின் அவதாரத்திருநாள்; சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த பதியில் உள்ள முத்திரிபதம் என்னும் தீர்த்த கிணறு, சிறப்பு பெற்றதாகும். ஆராதனை, அபிஷேகம் இல்லாத அய்யா வழிபாட்டு முறைக்கு இத்தீர்த்த பதத்தை தெளிப்பதன் மூலம் அனைத்து சிறப்பும் நிறைவு பெற்றுவிடுவதாக நம்பப்படுகிறது.
இந்த தீர்த்தம் அருமருந்து என்றும் போற்றப்படுகிறது. முண்டாசு கட்டி தீப நாமமிட்டு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பதிகளுக்கு வந்து வழிபடுகின்றனர். மேலும் சாமித்தோப்பு தலைமைபதியின் கருவறைக்குள் ஒரு கட்டில் போடப்பட்டுள்ளது. அதன்மேல் அகிலத்திரட்டு மூலச்சுவடி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கட்டில் மாற்றப்படும். ஏனென்றால் பழைய கட்டில் முற்றிலும் கிழிந்திருக்கும். இக்கட்டிலில் அய்யா வைகுண்டர் வந்து உறங்குவதாக அய்யா வழி மக்கள் நம்புகிறார்கள்.
குமரி கடலோரம் மட்டுமின்றி தமிழகத்தின் பல கிராமங்கள், அய்யா வைகுண்டரின் தத்துவங்களையும், போதனைகளையும் தினந்தோறும் நினைவு கூறுகின்றன.
பிரதி எடுக்க
எழுத்தின் அளவு

அய்யாஉண்

அய்யா உண்டு தாழ கிடப்பாரை தற்காப்பதே தர்மம் அன்பு கொடி மக்களுக்கு வணக்கம், மகாவிஷ்ணுவின் அவதாரமான வைகுண்ட அவதாரத்தின் நோக்கம் பற்றிய அகிலதிரட்டின் உண்மையான கருத்துகளை அய்யாவின் சான்றோர் மக்களுக்கு தெரிவிப்பர்தே இந்த பகுதியின் நோக்கமாகும். 1.,அனைத்து அய்யாவழி குடும்பக்களுக்கும் அகிலதிரட்டினை சேர்ப்பது, 2.,அனைத்து தாங்கல்களிலும் பிரதி ஞாயிற்று கிழமைகளில் மகாவிஷ்ணுவின் அவதார செய்தி கூட்டங்களை நடத்துவது, 3.,அகிலதிரட்டு தர்மபள்ளிளை அனைத்து தாங்கல்களிலும் நிறுவுவது, 4.,அய்யாவழி குடும்பங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவுவது, அய்யாவழி அன்புகொடி மக்கள் அனைவரும் ஒன்றினைவோம் முன்னேற்றம் காண்போம். அய்யாஉண்டு