வியாழன், 16 ஏப்ரல், 2015

அகிலம்

தாலிமிகத் தரிக்குகையில் மாத ரோடு
தமனியநா தன்மகிழ்ந்து தானே சொல்வார்
கேலிமிக வுரையாதீ ரெனக்கு இன்னம்
கெணிமடவா ரநேகமுண்டு மணங்கள் செய்ய
சோலியல்லோ ஆச்சுதென்று நினையா துங்கோ
தொல்புவியை யரசாள்வீர் நிசமே சொன்னோம்
மாலினுட சூட்சமகா கோடி யுண்டு
மனதுசடை யாமல்மிக வாழுவீரே
வாழுவீர் கூடுவிட்டுக் கூடு பாய்வேன்
மறுவூரு பாய்ந்துவுங்கள் மனதில் வாழ்வேன்
மாளுவேன் முழித்துப்பின் வருவே னுங்கள்
மனதலைந்து எனைஇகழ்ந்து மாளா துங்கோ
தோழிலே யிருந்துபல சூட்சஞ் செய்வேன்
தோகையரே நீங்களெல்லா மெனது பாயம்
நாளிலே யறிந்துமிகக் கண்டு கொள்ளும்
நாரணரி னடப்பிதுவே ஞாயஞ் சொன்னோம்
சொன்னமொழி தனைமறந்து நீங்க ளெல்லாம்
தூசணித்து எனைக்கபட மெண்ணா துங்கோ
என்னுடையத் தொழிலிதுவே உங்க ளோடு
இருந்துதர்ம முடிசூடி யாளு மட்டும்
பொன்னுடைய நாடதற்கு வானோர் தம்மைப்
போகவிடை கொடுக்கஅவர் போனா ரங்கே
கன்னிமட வார்கையைப் பிடித்துக் கொண்டு
கருணைபதித் தெருவீதி வருகின் றாரே
சிந்து:
====
தெருவீதி நாம்வருவோம்-எந்தன்
தேவியரே கன்னிநாயகமே
மருவினிய கன்னியரே-பதி
வலங்கள்சுற்றி நாம்வருவோம்
கண்மணியே காரணரே-ஓகோ
காயாம்பு மேனியரே
மண்ணேழ ளந்தவரே-ஓகோ
மாயவரே பதிவலம்வருவோம் 80
பெண்ணரசே மாமயிலே-நமது
பொறுமைப்பதி வலம்வருவோம்
தண்ணமுள்ளத் தேவியரே-நமது
தருமபதி வலம்வருவோம்
ஆண்டமணி நாயகமே-உலகு
ஆண்டருளு மெங்கண்மணியே
காண்டம்நிறை வேற்றவந்த-எங்கள்
கணவனாரே நாம்வலம்வருவோம்
பொறுமைப்பதி வலம்வருவோம்-கலிப்
பொடியயாமம் போட்டிடுவோம்
தருமமது தழைக்கச்செய்வோம்-பதி
தானேவலம் நாம்வருவோம்
பொல்லாத வகையழித்து-சுவாமி
புதுப்பூமி தோணவைத்துக்
கல்லாதார் கருவறுத்து-சுவாமி
கதியபதி வலம்வருவோம்
நாடும்பதி தலங்கள்வாழும்-பெண்ணே
நம்முடைய இனங்கள்வாழும்
கேடுகலி கோடுஅறும்-பெண்ணே
கிளர்ந்தபதி வலம்வருவோம்

அகிலம்

கன்னியர்:
=========
கண்டுஇந்த நீசர்குலம்-சுவாமி
களிப்புச்சொல்லி யேசணுமே
பெண்டுகட்கு விங்கியென்று-சுவாமி
பொல்லாப்பய லேசணுமே
விளக்கம்
=========
சுவாமி நாம் இணைந்து இனிமையாய் வாழ்வதைப் பார்த்து கலி நீசக் குலங்கள் இவன் பெண்களுக்காக எப்பொழுதும் ஏங்கி திரிபவன் என்று சிரித்துக் கைக் கொட்டி மகிழ வேண்டும்.
அகிலம்
=========
வைகுண்டர்:
============
காரணத்தை யறியாமலே-பெண்ணே
கலிப்பயல்கள் தானகைத்தால்
மாரணத்தின் தீர்வைதன்னில்-பெண்ணே
மடுநரகம் பூத்திடுவேன்
விளக்கம்
=========
பெண்களே, அதன் உண்மைக் காரணங்களை அறிந்து கொள்ள முடியாமல் கலி பிடித்த நீசர்கள் நகைத்தால் அவர்களின் மரணத்தின் முடிவில் அவர்களைக் கடுமையான நரகத்தில் புகுத்தி விடுவேன்.
அகிலம்
=========
கன்னியர்
=========
செம்பவள நற்பதியின்-சுவாமி
தெருவலங்கள் சுற்றிவந்தோம்
பொன்பதிக்குள் நாமள்புக்கி-மறு
பொழுதுவந்தால் வருவோமையா
விளக்கம்
=========
சுவாமி, செம்பவளங்கள் பொருந்திய பொன்னம்பதியின் தெருவை இருவரை நாம் சுற்றி வலம் வந்தோம். இனி நாம் பொன்னம்பதிக்குள் சென்று விடியும்பொழுது வெளியே வந்திடுவோம்.
அகிலம்
========
வாழ்த்து
=========
சோபனம்
=========
சோபனமே சோபனமே-சுவாமி திருநடன சோபனமே
தேவர்குரு நாரணர்க்கும்-அவர் தேவியர்க்கும் சோபனமே
பூமலர்ந்த ஈசுரர்க்கும்-அவர் பொன்தேவி மாமதுமைக்கும்
காமனந்த நாரணர்க்கும்-தெய்வக் கன்னியர்க்கும் சோபனமே
விளக்கம்
========
வாழ்த்துவோம், வாழ்த்துவோம், சுவாமி கன்னியரோடு ஆடும் திரு நடனத்தை வாழ்த்துவோம். தேவர்களுடைய குருவாகிய நாராயணருக்கும் சுவாமியின் தேவிகளுக்கும் வாழ்த்துக்கள். சகஸ்ரார தளத்தில் பள்ளி கொண்டு இருக்கும் ஈசருக்கும் அவருடைய அழகு பொருநத்திய உமையம்மைக்கும் வாழ்த்துகள். மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆனந்த சயனம் கொண்டிருக்கின்ற நாராயணருக்கும்
தெய்வக் குலக் கன்னிகளுக்கும் வாழ்த்துக்கள்.
அகிலம்
========
பூமடந்தை நாயகிக்கும்-நல்ல பொன்னுமண்டைக் காட்டாளுக்கும்
பார்மடந்தை நாயகிக்கும்-சிவ பகவதிக்குஞ் சோபனமே
தெய்வானை நாயகிக்கும்-நல்ல சிறந்தவள்ளி மடந்தையர்க்கும்
அய்வர்குல நாரணர்க்கும்-கன்னி அரிவையர்க்குஞ் சோபனமே
விளக்கம்
=========
சுவாமி செய்யப் போகின்ற பூமடந்தை நாயகிக்கும் நல்ல பொன்னு மண்டைக் காட்டாளுக்கும், பார் மடந்தை ஆகிய இலட்சுமிக்கும் சில சக்தியின் வடிவாகிய பகவதிக்கும் வாழ்த்துக்கள். தெய்வானை நாயகிக்கும், நல்ல சிறப்பு பொருந்திய வள்ளிதேவிக்கும், பஞ்சபாண்டவர் குடும்பத்தைக் காத்த நாராயணருக்கும், கன்னிப் பெண்களுக்கும் வாழ்த்துக்கள்.
அகிலம்
=========
துடியிடைக் கன்னி மாரைத் திருமணந் திருமால் செய்து
குடிபுகழ்ச் சான்றோர் மக்கள் குரவைகள் முழக்கத் தோடு
திடிரெனத் தெருக்கள் சுற்றித் தேவியு மன்ன ராகப்
படிமிசைப் பதியி னுள்ளே பதிந்துவந் திருந்தா ரன்றே
விளக்கம்:
=========
துடிக்கின்ற இடைகளையுடைய ஏழு கன்னிப் பெண்களும், திருமாலும் (வைகுண்டர்) நியாய முறையாகத் திருமணம் முடித்து அவர் குலத்தில் உள்ள புகழ் பெற்ற சான்றோர்கள் குரவை இடும் ஒலியோடும், சிறந்த மேள முழக்கத்தோடும் விரைவாகப் பொன்னம்பதி தெருக்களில் எலலாம் சுற்றி விட்டு படியின் மேல் ஏறிப் பொன்னம்பதியினுள் சென்றனர். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் இயைந்து மகிழ்வுடன் அங்கே வாழ்ந்து வந்தனர்.
அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை 

அகிலம்:

வைகுண்டர் தாமரைப்பதியில் திருநாள் நடத்துதல்:
============================================
மாதுநல்லா ளேழ்வரையும் மணமுகித்து மாயவரும்
தீதகலும் நற்பதியில் சிறந்தங்கினிதிருந்தார்
கன்னிமா ரேழ்வரையும் கைப்படித்தோம் நாமுமினி
பொன்னம் பதியில் புகழ்ந்ததிரு நாள்நடத்தி
நித்தந் திருநாள் நிதம்நடந்த வேணுமென்று
சித்தமதில் நாரணரும் சிந்தித்தா ரம்மானை
விளக்கம்:
========
வைகுண்டர் பெண்களில் உயர்ந்தவர்களாகிய ஏழு கன்னிகளையும் திருமணம் முடித்து தீமைகளை அகற்றி விடுகின்ற தமது பொன்னம்பதிக்குள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார். அப்போது வைகுண்டர், கன்னியர் ஏழுபேரையும் திருமணம் முடித்தோம், இனி பொன்னம்பதியில் நித்தம் நித்தம் திருநாள் நடத்த வேண்டும் என்று மனத்தில் எண்ணமிட்டார்.
அகிலம்:
=======
எத்திசையு முள்ள ஏற்றபுகழ் சான்றோரும்
முத்தி யடைந்தோம் மோட்சமது பெற்றோமென
நம்முடைய தாயார் நல்லதெய்வக் கன்னியரைச்
செம்மைத் திருமால் திருமணங்கள் செய்ததினால்
குற்றமில்லை நம்முடைய குலத்துக் கினியெனவே
சித்தமதில் நாரணனார் செயல்நமக் குண்டெனவே
வந்துமிக எல்லோரும் வாழ்த்தி மிகப்பணிந்து
சிந்துபுகழ் தெய்வ மடவா ரையுந்தொழுது
விளக்கம்:
========
எல்லாத் திசைகளிலுமுள்ள உயர்வு பொருந்திய சான்றோர்கள் நமது தெய்வக்கன்னிகளை அழகான வைகுண்டர் திருமணம் செய்த காரணத்தால் நாம் முக்தி அடைந்து விட்டோம் என்றும் நாம் மோட்சம் பெற்றோம் என்றும், நமது குலத்திற்கு இனிமேல் எந்தவிதக் குற்றமும் வந்து சாராது என்றும், வைகுண்ட நாதனில் மனதில் நமது நல்வாழ்வுக்குரிய கருணை நமக்கு உண்டு என்றும் கூறியவண்ணம் வைகுண்டரை வந்தடைந்து அவரை வாழ்த்தி பணிந்து வணங்கி வந்தனர். பாடல்களால் புகழப்படுகின்ற சிறந்த தெய்வக் கன்னிகளையும் சான்றோர்கள் வந்து தொழுதனர்.
அகிலம்:
=======
நல்லபண்ட மானதுவும் நாடும்நிதி யானதுவும்
வல்லகுலச் சான்றோர் மாதா பிதாவதுக்கும்
கொடுத்தாரே நல்லக் குவலயத்தில் மக்களெல்லாம்
விடுத்ததெல்லாம் வேண்டி மிகவேற்றார் மாயவரும்
பலன்பெற்றோ மென்றுப் பாலதியச் சான்றோர்கள்
குலமெல்லாம் வந்து கூடினார் மாயனிடம்
விளக்கம்:
========
உயர்ந்த குலச் சான்றோர்களின் தாயும் தந்தையுமாக இருந்த வைகுண்டருக்கும், தெய்வக்கன்னியருக்கும் நல்ல வகையான இனிப்புப் பண்டங்களையும், அவர்கள் விரும்பும் உயர்வான செல்வங்களையும் வாரி வழங்கினர். வைகுண்டரும் இவ்வுலக மக்கள் கொடுத்தவற்றை எல்லாம் மிகவும் விருப்பமாகப் பெற்றுக் கொண்டார். வைகுண்டர் மன நிறைவோடு பெற்றுக் கொண்டதால் நாங்கள் உயர்ந்த பேறு பெற்றோம் என்று கூறியவண்ணம் சான்றோர் குலம் எல்லாம் அவரிடம் வந்து கூடிக் குவிந்தனர்.
அகிலம்:
=======
அய்யா திருநாள் இகனை நடத்துதல்
அப்போது நாதன் ஆனந்த மேபுரிந்து
இப்போ திருநாள் இகனைநடத்த வென்று
நாளான நாளிதுதான் நாதன் பிறந்தநாள்
தாழாத ஞாயிறுவே சுவாமி பிறந்ததினால்
இந்நாள் முதல்திருநாள் இன்ப முடனடத்திப்
பொன்னான நாரணரும் பூரித்தா ரம்மானை
விளக்கம்:
========
அப்பொழுது வைகுண்டர் மகிழ்ந்து இந்தக் கலியுகத்தில் நடத்த வேண்டிய முன் விதிப்படி நிகழ்ச்சிகளில் ஒன்றான திருவிழா நடத்தும் நிகழ்ச்சியை நடத்த எண்ணினார். நாள்களில் மிகவும் சிறந்ததும் இழிவு இல்லாததுமாகிய ஞாயிற்றுக் கிழமையே சுவாமி பிறந்த நாளாகும். எனவே அந்த நாள் முதலாக ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையும் முன் விதிப்படியான நிகழ்ச்சியான திருநாளை நடத்திப் பொன்னைப் போன்ற நாராயணர் மகிழ்ந்து இருந்தார்.

சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:

இரண்டாம், மூன்றாம் சட்ட விளக்கம்:
====================================
அருளாக ஏகம்அண்ட பரிபூரணமாய்
வரையாகி திரையாகி வான்புவி லோகமுமாய்
ஒளியாகி விழியாகி உயிருக்கிணையாகி
திருவுயிராய் ஒருவுயிராய் தேசத்தில் வேசமுமாய்
விளக்கம்
=========
அருள் மயமாகி, எங்கும் நிறைந்த அகண்ட பரிபூரணமாகி, மலைகளாகி, கடல் திரைகளாகி, வானாகி, பூமி போன்ற பல உலகமாகி, ஒளியாகி, சொல்லாகி, உயிருக்கு இணையாகி, பெருமை பொருந்திய பல உயிராகி ஓர் உயிராகி, தேசத்தின் பல உருவங்களுமாகி நின்றேன்.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
============================
ஒன்றாகி இரண்டாகி உலகமெங்கும் நானாகி
ஒன்றும் இரண்டும் மூன்றாகி இந்த யுகம் எங்கும் நானாகிக்
கருவுருவாய் ஒருருவாய்க் கருணாக் கடலானேன்
ஒன்றுமிரண்டும் மூன்றும் நாலாய் அஞ்சாய்
விளக்கம்
=========
ஆதிபரம் நானாகி, அதிலிருந்து சக்தி சிவம் ஆகிய இரண்டுமாகி, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பொருளாகி, நான்கு யுகத்திலும் நானேயாகி, ஐந்து பூதங்களுக்கும் கருவாகி உருவாகி, உலகம் எங்குமே நானாகி, ஒரே உருவமாகவும், கருணை புரியும் கடலாகவும் நானானேன். இவ்வாறு ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து ஆகியவை ஆனான்.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
============================
உனைவகுத்தேன் அஞ்சி அடங்கி ஆதிபரன்
பங்காளன் அஞ்சிரெண்டு மூன்றானே னிந்த
ஆதிபரன் சித்து வித்தை மண்ணால்
உனைமனைந்து பலமாய் கையினால் உனைவகுத்தேன்
விளக்கம்
=========
எங்கும் பரந்திருக்கும் (பங்காளன்) ஆதிபரம் ஆகிய நான் ஐம்பூதங்கள் ஐந்தையும் உன்னில் அடக்கி, உன்னை உருவாக்கினேன். உன்னில் ஐம்புலன்களையும், வலகலை, இடகலை ஆகிய இரண்டையும், சாத்துவிகம், இராச்சம், தாமசம் ஆகிய மூன்று குணங்களையும் உருவாக்கி, இந்த ஆதிபரனது வித்துகளாகிய வித்தையினால் மண் முதலிய ஐம்பூதங்களைக் கொண்டு இயற்கையினால் மிகவும் பலம் பொருந்திய வகையில் உன்னை உண்டாக்கினேன்.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
============================
உந்தன் பலங்குலைக்க உலகில்பெண்ணை வகுத்துவிட்டேன்
உண்டாக்கிவைப்பதுநான் உலகில்அழிப்பதும் நான்மகனே
ஏகமதாய் நிறைந்தபரன் இருந்துலகை அளுகிறார்
கண்ணுமக் காள்என் சூத்திரத்தைக் கண்டறிந்து பாருங்கப்பா
விளக்கம்:
=========
உனது பலத்தைக் குறைக்க இவ்வுலகத்தில் பெண்ணையும் படைத்து விட்டேன். எல்லாவற்றையும் உருவாக்குவதும் அதைப்போல அழிப்பதும் நானே, எங்கும் நிறைந்த ஆதிபரன் இவ்வுலகை ஆளுகிறார். என் இரகசிய வழியை ஆழமாக ஆராய்ந்து பாருங்கள்.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
============================
பதிமூன்றுக் குள்ளிருந்து பாடுகிறேன் சிவகாண்டம்
இரவுபகல் வேலைசெய்தாலும் யீசன்வேலை முடியாதப்பா
இருபத்தி மூன்றுதெய்வம் யீசனெங்கும் வடிவானேன்
இருபத்திரண்டு ஏதம் ஈசன் எழுதினேன் உங்களுக்கும்.
விளக்கம்:
=========
இடகலை, பின்கலை, சுழிமுனை (அக்கினிகலை) ஆகிய மூன்றும் சந்திக்கின்ற ஆக்ஞா பகுதியில் என் மனதை நிலை நிறுத்தி, இந்த சிவகாண்டத்தை நான் பாடுகிறேன். இரவும் பகலும் எவ்வளவு வேலை செய்தாலும் ஈசனுடைய வேலை முடியாது. இன்று மக்கள் வழிபட்டு வருகின்ற இருபத்து மூன்று முக்கியமான பெருந்தெய்வங்களும், வேறு சிறு தெய்வங்களும் ஈசனாகிய என்னுடைய வடிவங்களே. துன்பம் தரும் இருபத்திரண்டு குற்றங்களை ஈசனாகிய நான் உங்களுக்கு ஏற்கெனவே எழுதியுள்ளேன்.
22 ஏதங்கள் (குற்றங்கள்):
=======================
1. கொட்டாவி
2. நெட்டைவிடல்
3. குறுகுறுப்பு
4. கூன்கிடை
5. நட்டு விழல்
6. அவிச்சை - வெறுப்பு
7. அகங்காரம்
8. அவா
9. காமம்
10. வெகுளி
11. மயக்கம்
12. ஞான வரணீயம்
13. தரிசனா வரணீயம்
14. வேத நீயம்
15. மோக நீயம்
16. ஆயு - எண் குற்றங்களுள் ஆயுட்காலத்தை வரையறுப்பது
17. நாமம் - எண்குற்றங்களுள் ஒருவன் கதியை வரையறுக்குங் கன்மம்
18. கோத்திரம்
19. அந்தராயம் - இடையூறு
20.அதிவியாப்தி - இலக்கணம் இல்லாததற்கும் இலக்கணம் சொல்லும் குற்றம்.
21.அவ்வியாப்தி - கூற்றுக் குன்றக் கூறல் அல்லது குறைப்பரவல்
22.அசம்பவம் (குற்றங்களின் கூட்டு)

அகிலம்:

தெருவிற் காளாஞ்சித் தீவட்டி யும்பிடித்து
மருவினிய மாதர் மகாகுரவை மலமலென
டம்மானை நகாசுரம் நல்லவா ணவெடிகள்
மும்மான முளக்கம் போலே மிகமுழங்க
விளக்கம்:
கோவில் தெருவில் காளாஞ்சி, தீவட்டி போன்றவற்றை, மருவுவதற்கு இனிய மாதர்கள் பிடித்துக் கொண்டு இனிய குரவை ஒலியை எழுப்புவர். இடம்மான மேளமும், நாகசுரமும், நல்ல வாண வேடிக்கைகளும் மூன்று யானைகளின் முழக்கம் போன்று முழங்கிக் கொண்டிருக்கும்.
அகிலம்:
கன்னிமார்க் கெல்லாம் காவிப்பட் டாடைகொண்டு
பின்னு மடவார்க்குப் பெரியருத்தி ராட்சமிட்டு
நாமப் பொட்டிட்டு நல்லஎத் தாப்புமிட்டு
மாமடவா ரெல்லாம் மகிழ்ந்து தெருவில்வர
விளக்கம்:
கன்னியர் எல்லாரும் காவி பட்டாடை உடுத்தி பெரிய உத்திராட்ச மாலை இட்டு நாமத்தினால் ஆகிய நீளப் பொட்டும் இட்டு, முந்தானைக்கு ஏத்தாப்பு ஆபரணம் இட்டு, மகிழ்வோடு தெரிவில் வருவர்.
அகிலம்:
எந்தன் பிரானும் எடுத்தா ரொருசொரூபம்
கந்தைக்கா விபூண்டு கழுத்தில்தா வடம்பூண்டு
கையதி லேமாத்திரைக்கோல் கமூக்கூட்டி லேபிரம்பும்
மெய்யதிலே வெண்பதமும் மினுக்க முடனணிந்து
உச்சிக்கொண்டை கோர்த்து உயர்ந்தசுரைக் கூடுமிட்டு
மெச்சுந் துளசி மிகுமாலை யுமணிந்து
பிச்சிமாலை யணிந்து பெண்கள்மிகச் சூழ்ந்துவரச்
சச்சிசச்சி யாகச் சனங்கள்சான் றோர்கள்வரக்
கைக்குள்நின்ற சீசர் காவிவஸ்தி ரமணிந்து
விளக்கம்:
நம் வைகுண்டர் கந்தையான காவி ஆடை உடுத்தி, கழுத்தில் தாவடமாலை அணிந்து கையில் மாத்திரைக் கோலைப் பிடித்து, க்க்கத்தினுள் பிரம்பைப் பிடித்துக் கொண்டு உடம்பு முழுவரும் வெண்மையான நாமத்தை மினுங்கிய வண்ணம் அணிந்து, உச்சிக் கொண்டையைச் சேர்த்துக் கட்டி உயர்வான சுரைக் குடுக்கையை உடம்பில் இட்டு, எல்லாரும் புகழும்வண்ணமாக, உச்சிக் கொண்டையின் மேல் துளசி மாலையைச் சுற்றி அணிந்து, பிச்சி மாலையைத் தலையிலும் கழுத்திலும் அணிந்து வேடமிட்டு வருவார். சான்றோர் இன ஆண்களும், பெண்களும் அவரை அலங்காரமாகச் சூழ்ந்து வருவர். அவரது கையருகில் நின்ற சீசர்கள் காவி ஆடை அணிந்து வருவர்.
அகிலம்:
மெய்க்குருவைப் போற்றி மேலில்ருத்தி ராட்சமிட்டுக்
கையதிலே மாத்திரரைக்கோல் கனத்தசுரைக் கூடுமிட்டு
மெய்யதியப் பொக்கணமும் மேலதிய நாமமிட்டு
அய்யா குருவேயென்று அவர்கள் மிகப் போற்றிவரத்
விளக்கம்:
அவர்கள் கழுத்தில் உத்திராட்சமாலை இட்டு, கையில் மாத்திரைக் கோலும், உயர்வான சுரைக் குடுக்கையும் தாங்கி, உடம்பில் ஒரு பொக்கணத்தை இட்டு, திருநாமத்தை உடம்பெல்லாம் பூசியவண்ணமும் தமது உண்மையான குருவாகிய வைகுண்டரைத் துதித்தவண்ணமும், அய்யா, குருவே, என்று போற்றிக் கொண்டு அவரோடு நடந்து வந்து கொண்டிருப்பர்.
அகிலம்:
துய்ய துவையல் துவைத்தபண் டாரமெல்லாம்
காவிருத்தி ராட்சம் கனத்தசெம்புக் கடுக்கனிட்டு
நாவிற் சிவாவெனவே நாட்டமிக வாய்வரவே
ஆரா தனையாய் அருள்கொண்டப் பெண்ணாணும்
நாரா யணர்பேரில் நற்கீதம் பாடிவரத்
விளக்கம்:
தங்களது ஆடைகளைச் சுத்தமாகத் துவைத்து உடுத்தி வந்த துவையல் பண்டாரங்கள் எல்லாரும் உத்திராட்சக்காய் புனைந்த மாலை அணிந்தும், காதில் அழகான செம்பு உலோகத்தினாலான கடுக்கன் அணிந்தும், அவர்கள் விருப்பத்துடன் நாவினால் சிவாய நம என்னும் மந்திரத்தை உச்சரித்தும் வந்து கொண்டிருப்பர். அவர்களோடு இறையருள் கொண்ட பெண்களும், ஆண்களும் இறை ஆராதனை கொண்டு நாராயணர் பெயரிலுள்ள நல்ல பாடல் வகைகளைப் பாடிக் கொண்டிருப்பர்.

சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:

என்னை யறிந்தவர்க்கு ஈசன்வழி சொல்லுகிறேன்
உங்களுக்குமண்ணில் மூவாசையதுமாற்றானாய் இருக்குதடா
என்னைக் கண்ணாலே கண்டதுண்டால் கலிதீரும் என்மகனே
வட்டக்கோட்டைக்க காட்டுக்குள்ளே நட்டுவனார்கொட்டுகிறார்
விளக்கம்:
=========
என்னை அறிந்தவருக்கு ஈசனாகிய நான் அவ்விறைவனை அறியும் வழியைச் சொல்லித் தருவேன். உங்களுக்கு இந்தப் பூமியில் பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை ஆகிய மூவாசைகளும் எதிரிகளாக உள்ளன. என்னை உன் மனக்கண்ணால் கண்டால் கலித்தன்மை தானே அழிந்துவிடும். உன்னுள் இருக்கும் வட்டக்கோட்டை கட்டு என்னும் சகசுராரத்துள்ளே உன்னை நாட்டியம் ஆடச் செய்கின்ற நட்டுவனார் இருந்து செயல்படுத்துகிறார்.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
=========================
சொன்னேன் என்று எண்ணாதே என் சொரூபம் அறிவாயோ
சூத்திரக்கணக்கென்று சொல்லுகிறேன் கேள்மகனே
பஞ்சவர்ணக்கிளி கிளியொன்றிருந்தது பறந்துபோகக் கண்டேனடா
ஏழுபெண்கள்கதையை எடுத்துச்சொல்ல நாளாச்சே
விளக்கம்:
========
இவற்றை நான் சொல்லுகின்றேன் என்று குழப்பமாக எண்ணாதே, எனது உண்மை உருவத்தை நீ அறிந்து கொள். இன்னும் ஒர் இரகசிய வழியினைச் சொல்லுகிறேன். பிதுர்கள், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் ஆகிய ஐந்து சிறப்புகளைச் செய்ய வேண்டிய இல்லற வாழ்வு மக்களிடம் இருந்து பறந்து போக்க் கண்டேன். ஏழு பெண்கள் (கன்னியர்) தமது பழைய கதையை வைகுண்டரிடம் சொல்லுகின்ற கலி அழியும் நாள் வந்து விட்டது.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
=========================
பப்புச்செடிக்குள்ளிருந்த பாம்பு படம்விரித்து ஆடுதடா
ஈரேழுஉலகமுண்டு இதையெடுத்துச்சொல்வார் யார்மகனே
சாதியான கொடியபாம்பு சதிசெய்யும் பாம்பதுதான்
முப்பூவை தானெடுத்து அதைமுத்திசெய்தால் சக்தியுண்டு
விளக்கம்:
========
பரந்த செடியாகிய மூலாதாரத்திலிருந்து பாம்பாகிய காம இச்சை படம் விரித்து ஆடுகின்றது. பதினான்கு உலகங்களும் உன்னுள்ளே அமைந்து இருக்கின்றன. இத்தத்துவத்தை எடுத்துச் சொல்லுகிறவர்கள் யாரும் இலர் மகனே. மிகவும் உயர்ந்த வகைப் பாம்பாகிய காம இச்சை உன்னுள்ளே அமைந்துள்ளது. அது உனக்கு எதிராகச் சதி செய்து விடும். அகரத்தையும்(வடகலை) உகரத்தையும்(இடகலை) இணைத்துக் கிடைக்கும் முப்பூவை நீங்கள் எடுத்து பேறு பெற்றால் உங்களுக்கு மிகுந்த சக்தி உருவாகும்.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
=========================
குருபுத்தி யார்க்கும் உள்ளதைநான் சொல்வேன் கேள்மகனே
அப்பூவைத்தானெடுத்து அணிந்திடுங்கோ கண்ணுமக்காள்
மூன்றுநாமம் ஒன்றுபாம்பு அதுமூன்றும் ஆடுதப்பா
கொத்தினால் திரும்பாதப்பா அதுகுடிகெடுத்தப் பாம்புவிசம்
விளக்கம்:
========
இது குருநாதர் கூறும் உபதேசம் ஆகும். என்னிடம் யார் வந்தாலும் அவர்களுக்கு உண்மையாக உள்ளதை வெளிப்படையாகச் சொல்லுவேன். முப்பூவின் நிலையிலே எப்பொழுதும் இருங்கள். காம இச்சை, பொன்னாசை, மண்ணாசை ஆகிய மூன்று பாம்புகளும் உங்களுக்குள்ளே ஆடிக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் மிகவும் கொடிய பாம்பு காமஇச்சை ஆகிய பாம்பு. இது மிகவும் பொல்லாத பாம்பு ஆகும். அது உங்களைத் தீண்டினால் தனது விஷத்தினால் உங்கள் குடியைக் கெடுக்காமல் திரும்பாது.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
=========================
தலைமன்னர் மீதிருந்து பலசாஸ்திரங்கள் சொல்லுதப்பா
சங்குக்குள்ளிருந்து வந்தேன் வையகத்தில்
கும்பக்கோணப்பாதையாக குறிகள்சொல்லி வந்தேனப்பா
விள்ளுர் தனிலிருந்து விரைத்துவந்தேன் வையகத்தில்
விளக்கம்:
========
இப்பாம்பு சிவனுடைய தலை மீது இருந்து, காம இச்சையை அடக்கியவன் என்றும், குண்டலினி சக்தியை ஏற்றியவன் என்றும் பல தத்துவ சாத்திரங்கள் மூலம் தன்னைப் பற்றி எடுத்துக் கூறும். சங்கு ஆகிய சகசுராரத்திலிருந்து நான் இவ்வையகத்தில் வந்து உதித்தேன். கும்பம் கோணம் என்னும் ஆக்ஞா வழியாக வந்து அதிசயமான பல குறிகளை உங்களிடம் நான் சொல்லி வந்தேனப்பா. இவ்வாறாகச் சகசுராரத்திலிருந்து இறங்கி மிகவும் விரைவாக இவ்வையகம் வந்தேன்

அகிலம்:

கன்னியர் மதலை கேட்டலும் சுவாமியின் பதிலும்:
==============================================
நல்லரிய நாதன் நன்றா யிருக்கையிலே
வல்ல திருதெய்வ மடவார்க ளேதுரைப்பார்
ஐயாவே யெங்களையும் ஆண்டத் திருமாலே
வைய மளந்த மாயத் திருமாலே
எங்களைநீ ரிப்போ இவ்வுலகந் தானறிய
மங்களமும் செய்தீரே மக்களையுந் தாருமென்றார்
விளக்கம்:
இவ்வாறாக உயர்வு பொருந்திய வைகுண்டர் அங்கே வீற்றிருக்கின்ற பொழுது மேன்மை பொருந்திய கன்னியர் வைகுண்டரிடம் வந்து, அவரை நோக்கி, அய்யாவே, எங்களையும் ஆட்சி புரிந்து வருகின்ற திருமாலே, இவ்வுலகத்தை அளந்தவரே, எங்களை நீர் இவ்வுலக் மக்கள் அறிய மங்களகரமாகத் திருமணம் முடித்து விட்டீர். இனி எங்களுக்கு உமது வாக்குறுதியின்படி குழந்தைகளைத் தந்தருள வேண்டும் என்று கேட்டனர்.
அகிலம்:
========
அப்போது மாயன் அவர்களோ டேபுகல்வார்
இப்போது மாதர்களே என்னோடு கேட்டதற்கு
நல்லத் திவசம் நமக்குவரு மந்நாளில்
வல்ல வகையாலும் மக்களையுந் தாறோமென்றார்
அதுவரையும் நீங்கள் அதட்டாம லெயிருங்கோ
விளக்கம்:
=========
அப்பொழுது வைகுண்டர் அவர்களை நோக்கி, பெண்களே, இப்பொழுது நீங்கள் என்னிடம் கேட்ட குழந்தைகளைத் தருவதற்கு ஒரு நல்ல நேரம் வர இருக்கிறது. அந்த நல்ல நாளில் எல்லா வகையிலும் சிறப்புப் பொருந்திய குழந்தைகளைத் தந்து அருள்வோம். அதுவரை நீங்கள் மனம் கலங்காமல் அமைதியாய் இருங்கள் என்றார்.
அகிலம்:
=======
இதுவரைக்க நல்ல ஏந்திழைமா ரெல்லோரும்
சந்தோச மாக சுவாமி தனக்கவர்கள்
வந்தே நிதமும் வாய்த்ததொண்டு செய்துமிக
வாய்த்தபுகழ் லட்சுமியும் மாதுமட வாரேழும்
ஏற்ற தொண்டுசெய்து எப்போதும் வீற்றிருந்தார்
விளக்கம்:
=========
ஏழு கன்னிகளும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர். பிறகு வழக்கம்போல் சுவாமிக்கு மனைவியாக வாய்த்த இலட்சுமியும் அந்த ஏழு கன்னிகளும் தினந்தோறும் எல்லாவகையான பணிவிடைகளையும் விரைவாகச் செய்து வந்தனர்.
அகிலம்:
=======
நாரணருந் தேவியரை நாடி யகமகிழ்ந்து
காரணரு மெச்சிக் களிகூர்ந் தினிதிருந்தார்
விளக்கம்:
=========
எல்லாவற்றுக்கும் காரணமான வைகுண்டரும், தமது மனைவிகளைத் தேடி அவர்களைப் புகழ்ந்து பேசி, அவர்களுக்கு ஏற்றவாறு நடந்து மகிழ்ச்சியுடன் இருந்தார்.
அகிலம்:
=======
நன்றாக இப்படியே நாச்சிமா ரோடிருக்க
எண்டிசையி லுள்ள ஏற்றபுகழ்ச் சான்றோர்கள்
வந்து அவர்பதத்தை வாழ்த்தி மிகப்போற்றி
சந்துஷ்டி யாகத் தாழ்ந்துநமஸ் காரமிட்டு
மனதில் நினைத்ததெல்லாம் மாயவரோ டேவுரைத்துத்
தன்துள் விடைவேண்டி சங்கடங்கள் தீர்ந்திருந்தார்
விளக்கம்:
=========
அப்பொழுது எட்டுத் திசைகளில் உள்ள சான்றோர் மக்களும் அவரை நாடி வந்து அவர் பாதங்களை வாழ்த்திப் போற்றிப் பணிவாக நின்று விழுந்து வணங்கி அவரவர் மனதில் உள்ளவற்றை எல்லாம் வைகுண்டரிடம் மனம் விட்டுக் கூறி தங்களுடைய துன்பங்கள் எல்லாம் மாற்றப்பட்டு அவரிடம் விடை பெற்றுத் திரும்பிச் சென்றனர்.
அகிலம்:
=======
தெய்வமு மவராய்த் திருவுள முமவராய்
வைய மகிழ மனுப்போலு மிருந்தார்
வத்துவகையும் மாடாடு சொத்துக்களும்
ஒத்து மிகவாழ்ந்து உடைய பரனிருந்தார்
விளக்கம்:
=========
தெய்வமாகவும், உயர்வு பொருந்திய உள்ளம் உள்ளவராகவும் அவர் இருந்து கொண்டு, வையகம் மகிழும்படியான மனிதனைப் போன்றும் அவர் இருந்தார். சொத்து, மாடு, ஆடு போன்ற எல்லாவகைச் சொத்துக்களையும் அனுபவித்து, அவற்றோடு இணைந்து, இல்லற ஒழுக்கத்தோடு அவர் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்.