வியாழன், 16 ஏப்ரல், 2015

சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:

இரண்டாம், மூன்றாம் சட்ட விளக்கம்:
====================================
அருளாக ஏகம்அண்ட பரிபூரணமாய்
வரையாகி திரையாகி வான்புவி லோகமுமாய்
ஒளியாகி விழியாகி உயிருக்கிணையாகி
திருவுயிராய் ஒருவுயிராய் தேசத்தில் வேசமுமாய்
விளக்கம்
=========
அருள் மயமாகி, எங்கும் நிறைந்த அகண்ட பரிபூரணமாகி, மலைகளாகி, கடல் திரைகளாகி, வானாகி, பூமி போன்ற பல உலகமாகி, ஒளியாகி, சொல்லாகி, உயிருக்கு இணையாகி, பெருமை பொருந்திய பல உயிராகி ஓர் உயிராகி, தேசத்தின் பல உருவங்களுமாகி நின்றேன்.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
============================
ஒன்றாகி இரண்டாகி உலகமெங்கும் நானாகி
ஒன்றும் இரண்டும் மூன்றாகி இந்த யுகம் எங்கும் நானாகிக்
கருவுருவாய் ஒருருவாய்க் கருணாக் கடலானேன்
ஒன்றுமிரண்டும் மூன்றும் நாலாய் அஞ்சாய்
விளக்கம்
=========
ஆதிபரம் நானாகி, அதிலிருந்து சக்தி சிவம் ஆகிய இரண்டுமாகி, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பொருளாகி, நான்கு யுகத்திலும் நானேயாகி, ஐந்து பூதங்களுக்கும் கருவாகி உருவாகி, உலகம் எங்குமே நானாகி, ஒரே உருவமாகவும், கருணை புரியும் கடலாகவும் நானானேன். இவ்வாறு ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து ஆகியவை ஆனான்.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
============================
உனைவகுத்தேன் அஞ்சி அடங்கி ஆதிபரன்
பங்காளன் அஞ்சிரெண்டு மூன்றானே னிந்த
ஆதிபரன் சித்து வித்தை மண்ணால்
உனைமனைந்து பலமாய் கையினால் உனைவகுத்தேன்
விளக்கம்
=========
எங்கும் பரந்திருக்கும் (பங்காளன்) ஆதிபரம் ஆகிய நான் ஐம்பூதங்கள் ஐந்தையும் உன்னில் அடக்கி, உன்னை உருவாக்கினேன். உன்னில் ஐம்புலன்களையும், வலகலை, இடகலை ஆகிய இரண்டையும், சாத்துவிகம், இராச்சம், தாமசம் ஆகிய மூன்று குணங்களையும் உருவாக்கி, இந்த ஆதிபரனது வித்துகளாகிய வித்தையினால் மண் முதலிய ஐம்பூதங்களைக் கொண்டு இயற்கையினால் மிகவும் பலம் பொருந்திய வகையில் உன்னை உண்டாக்கினேன்.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
============================
உந்தன் பலங்குலைக்க உலகில்பெண்ணை வகுத்துவிட்டேன்
உண்டாக்கிவைப்பதுநான் உலகில்அழிப்பதும் நான்மகனே
ஏகமதாய் நிறைந்தபரன் இருந்துலகை அளுகிறார்
கண்ணுமக் காள்என் சூத்திரத்தைக் கண்டறிந்து பாருங்கப்பா
விளக்கம்:
=========
உனது பலத்தைக் குறைக்க இவ்வுலகத்தில் பெண்ணையும் படைத்து விட்டேன். எல்லாவற்றையும் உருவாக்குவதும் அதைப்போல அழிப்பதும் நானே, எங்கும் நிறைந்த ஆதிபரன் இவ்வுலகை ஆளுகிறார். என் இரகசிய வழியை ஆழமாக ஆராய்ந்து பாருங்கள்.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
============================
பதிமூன்றுக் குள்ளிருந்து பாடுகிறேன் சிவகாண்டம்
இரவுபகல் வேலைசெய்தாலும் யீசன்வேலை முடியாதப்பா
இருபத்தி மூன்றுதெய்வம் யீசனெங்கும் வடிவானேன்
இருபத்திரண்டு ஏதம் ஈசன் எழுதினேன் உங்களுக்கும்.
விளக்கம்:
=========
இடகலை, பின்கலை, சுழிமுனை (அக்கினிகலை) ஆகிய மூன்றும் சந்திக்கின்ற ஆக்ஞா பகுதியில் என் மனதை நிலை நிறுத்தி, இந்த சிவகாண்டத்தை நான் பாடுகிறேன். இரவும் பகலும் எவ்வளவு வேலை செய்தாலும் ஈசனுடைய வேலை முடியாது. இன்று மக்கள் வழிபட்டு வருகின்ற இருபத்து மூன்று முக்கியமான பெருந்தெய்வங்களும், வேறு சிறு தெய்வங்களும் ஈசனாகிய என்னுடைய வடிவங்களே. துன்பம் தரும் இருபத்திரண்டு குற்றங்களை ஈசனாகிய நான் உங்களுக்கு ஏற்கெனவே எழுதியுள்ளேன்.
22 ஏதங்கள் (குற்றங்கள்):
=======================
1. கொட்டாவி
2. நெட்டைவிடல்
3. குறுகுறுப்பு
4. கூன்கிடை
5. நட்டு விழல்
6. அவிச்சை - வெறுப்பு
7. அகங்காரம்
8. அவா
9. காமம்
10. வெகுளி
11. மயக்கம்
12. ஞான வரணீயம்
13. தரிசனா வரணீயம்
14. வேத நீயம்
15. மோக நீயம்
16. ஆயு - எண் குற்றங்களுள் ஆயுட்காலத்தை வரையறுப்பது
17. நாமம் - எண்குற்றங்களுள் ஒருவன் கதியை வரையறுக்குங் கன்மம்
18. கோத்திரம்
19. அந்தராயம் - இடையூறு
20.அதிவியாப்தி - இலக்கணம் இல்லாததற்கும் இலக்கணம் சொல்லும் குற்றம்.
21.அவ்வியாப்தி - கூற்றுக் குன்றக் கூறல் அல்லது குறைப்பரவல்
22.அசம்பவம் (குற்றங்களின் கூட்டு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக