வியாழன், 16 ஏப்ரல், 2015

அகிலம்:

வைகுண்டர் தாமரைப்பதியில் திருநாள் நடத்துதல்:
============================================
மாதுநல்லா ளேழ்வரையும் மணமுகித்து மாயவரும்
தீதகலும் நற்பதியில் சிறந்தங்கினிதிருந்தார்
கன்னிமா ரேழ்வரையும் கைப்படித்தோம் நாமுமினி
பொன்னம் பதியில் புகழ்ந்ததிரு நாள்நடத்தி
நித்தந் திருநாள் நிதம்நடந்த வேணுமென்று
சித்தமதில் நாரணரும் சிந்தித்தா ரம்மானை
விளக்கம்:
========
வைகுண்டர் பெண்களில் உயர்ந்தவர்களாகிய ஏழு கன்னிகளையும் திருமணம் முடித்து தீமைகளை அகற்றி விடுகின்ற தமது பொன்னம்பதிக்குள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார். அப்போது வைகுண்டர், கன்னியர் ஏழுபேரையும் திருமணம் முடித்தோம், இனி பொன்னம்பதியில் நித்தம் நித்தம் திருநாள் நடத்த வேண்டும் என்று மனத்தில் எண்ணமிட்டார்.
அகிலம்:
=======
எத்திசையு முள்ள ஏற்றபுகழ் சான்றோரும்
முத்தி யடைந்தோம் மோட்சமது பெற்றோமென
நம்முடைய தாயார் நல்லதெய்வக் கன்னியரைச்
செம்மைத் திருமால் திருமணங்கள் செய்ததினால்
குற்றமில்லை நம்முடைய குலத்துக் கினியெனவே
சித்தமதில் நாரணனார் செயல்நமக் குண்டெனவே
வந்துமிக எல்லோரும் வாழ்த்தி மிகப்பணிந்து
சிந்துபுகழ் தெய்வ மடவா ரையுந்தொழுது
விளக்கம்:
========
எல்லாத் திசைகளிலுமுள்ள உயர்வு பொருந்திய சான்றோர்கள் நமது தெய்வக்கன்னிகளை அழகான வைகுண்டர் திருமணம் செய்த காரணத்தால் நாம் முக்தி அடைந்து விட்டோம் என்றும் நாம் மோட்சம் பெற்றோம் என்றும், நமது குலத்திற்கு இனிமேல் எந்தவிதக் குற்றமும் வந்து சாராது என்றும், வைகுண்ட நாதனில் மனதில் நமது நல்வாழ்வுக்குரிய கருணை நமக்கு உண்டு என்றும் கூறியவண்ணம் வைகுண்டரை வந்தடைந்து அவரை வாழ்த்தி பணிந்து வணங்கி வந்தனர். பாடல்களால் புகழப்படுகின்ற சிறந்த தெய்வக் கன்னிகளையும் சான்றோர்கள் வந்து தொழுதனர்.
அகிலம்:
=======
நல்லபண்ட மானதுவும் நாடும்நிதி யானதுவும்
வல்லகுலச் சான்றோர் மாதா பிதாவதுக்கும்
கொடுத்தாரே நல்லக் குவலயத்தில் மக்களெல்லாம்
விடுத்ததெல்லாம் வேண்டி மிகவேற்றார் மாயவரும்
பலன்பெற்றோ மென்றுப் பாலதியச் சான்றோர்கள்
குலமெல்லாம் வந்து கூடினார் மாயனிடம்
விளக்கம்:
========
உயர்ந்த குலச் சான்றோர்களின் தாயும் தந்தையுமாக இருந்த வைகுண்டருக்கும், தெய்வக்கன்னியருக்கும் நல்ல வகையான இனிப்புப் பண்டங்களையும், அவர்கள் விரும்பும் உயர்வான செல்வங்களையும் வாரி வழங்கினர். வைகுண்டரும் இவ்வுலக மக்கள் கொடுத்தவற்றை எல்லாம் மிகவும் விருப்பமாகப் பெற்றுக் கொண்டார். வைகுண்டர் மன நிறைவோடு பெற்றுக் கொண்டதால் நாங்கள் உயர்ந்த பேறு பெற்றோம் என்று கூறியவண்ணம் சான்றோர் குலம் எல்லாம் அவரிடம் வந்து கூடிக் குவிந்தனர்.
அகிலம்:
=======
அய்யா திருநாள் இகனை நடத்துதல்
அப்போது நாதன் ஆனந்த மேபுரிந்து
இப்போ திருநாள் இகனைநடத்த வென்று
நாளான நாளிதுதான் நாதன் பிறந்தநாள்
தாழாத ஞாயிறுவே சுவாமி பிறந்ததினால்
இந்நாள் முதல்திருநாள் இன்ப முடனடத்திப்
பொன்னான நாரணரும் பூரித்தா ரம்மானை
விளக்கம்:
========
அப்பொழுது வைகுண்டர் மகிழ்ந்து இந்தக் கலியுகத்தில் நடத்த வேண்டிய முன் விதிப்படி நிகழ்ச்சிகளில் ஒன்றான திருவிழா நடத்தும் நிகழ்ச்சியை நடத்த எண்ணினார். நாள்களில் மிகவும் சிறந்ததும் இழிவு இல்லாததுமாகிய ஞாயிற்றுக் கிழமையே சுவாமி பிறந்த நாளாகும். எனவே அந்த நாள் முதலாக ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையும் முன் விதிப்படியான நிகழ்ச்சியான திருநாளை நடத்திப் பொன்னைப் போன்ற நாராயணர் மகிழ்ந்து இருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக