ஞாயிறு, 23 நவம்பர், 2014

அய்யா துணை

அகிலம்:

உடனே பொன்மாது உள்ளம் மிகநாணி
தடதடென வந்து சுவாமியடி யில்வீழ்ந்து
எந்தன் பெருமானோ இப்படித்தா னின்றதுவோ
சிந்தை மயக்குதற்கோ தீப்போலே வந்ததுதான்
என்றுமிகப் பொன்மகர இளமாது ஸ்தோத்தரித்து

விளக்கம்:

உடனே பொன்மகரப் பெண்ணாகிய இலட்சுமிதேவி மனதில் வெட்கம் அடைந்து விரைவாக வந்து திருமாலின் கால்களில் விழுந்து வணங்கி, இது என்னுடைய பெருமானோ? இப்படித்தான் அக்கினியாக நிற்கிறதோ, தீயைப் போன்று வந்தது என்னுடைய உள்ளத்தை மயக்குவதற்கோ? என்று மகரமாகிய இளமை பொருந்திய இலட்சுமி கூறி வணங்கினாள்.

அகிலம்:

மன்று தனையளந்தோர் வாநீ யென அழைத்து
அருகில் மிகநிறுத்தி அங்குள்ள தேர்பதியும்
கருதி யிருபேரும் கண்கொண் டுறப்பார்த்து
வச்சிர மேடை மரகதப் பொன்மேடை
எச்சரிக்கை மேடைஎல்லா மிகபார்த்து

வி்ளக்கம்:

இதைக் கேட்ட உலகளந்த திருமால் இலட்சுமியே, நீ என் அருகில் வருவாயாக என்று கூறி அருகில் அழைத்து நிறுத்தினார். பிறகு அங்கே அமைந்திருந்த தேரைப் போன்று உயர்ந்த பதியின் மேடை உருவை ஒரே எண்ணத்தோடு இருவரும் தமது கண்களினால் பார்த்தனர். அப்பதி மேடை வச்சிர மேடை என்றும் மரகதபொன் மேடை என்றும் எச்சரிக்கை மேடை என்றும் கூறப்படுகிறது. அந்த மேடையை அவர்கள் தெளிவாக பார்த்தனர்.

அகிலம்:

மாதே வுனக்கு வளர்பிறவி பத்தெனவும்
சீதே வுனக்குச் சிறந்தபேறு பத்ததிலே
பலம்பேறு பேறாய் பார்மகிழ வோர்பாலன்
சிலம்பே றுடையவனாய் சிவனுக் குகந்தவனாய்
எகாபர முமகிழ யானும் நீயுமாக
மகாகுரு வதாக மகிழ்ந்து மகிமையுடன்
தன்மச் சிறப்பதிகத் தலைவன் தனைப்பெறவே
உண்மையாய் நானுனக்கு உபதேச மாயுரைத்தேன்

விளக்கம்:

பிறகு திருமால் இலட்சுமிதேவியை நோக்கி அன்புப் பெண்ணே, உனக்கு உருவாகியுள்ள பிறவிகள் பத்து ஆகும். சீதையாகிய உனக்குச் சிறந்த பெயர்கள் பத்திலே மிகவும் பலம் பொருந்திய பெயர் உண்டாக வேண்டும். அதற்காக உலகு மகிழும்படி நானும் நீயுமாக இணைந்து தருமபதியை ஆளும் சிறப்புகளைப் பெற்ற தலைவனாகிய வைகுண்டர் என்னும் குழந்தையைப் பெற வேண்டும். அக்குழந்தை சிறந்த புகழுடையதாகவும், ஏகாபரனாகிய சிவனுக்கு ஏற்றவனாகவும், மகாகுருவாகவும், மகிழ்ச்சி பொங்கச் சகல சக்தியுடனும் பிறக்கும். அதற்காகவே இதைப் பற்றி உண்மையாக நான் உனக்கு உபதேசமாக உரைத்தேன் என்றார்.

அகிலம்:

என்றுரைக்க நாரணரும் இளமகர மேதுசொல்லும்
பண்டு அமைத்திருந்தால் பக்கஞ்சொல் வதோ அடியாள்
சித்தத்துக் கேற்ற செயலெனவே பொன்மகரக்
கற்றைக் குழலி கருதி மிகவுரைத்தாள்

விளக்கம்:

உடனே, இளமையான மகரமாகிய இலட்சுமிதேவி, ஏற்கெனவே இத்தகைய விதி அமைக்கபட்டிருந்தால் அடியாளாகிய நான் அதற்கு மாறாக ஏதாவது சொல்ல முடியுமோ? தங்கள் மனத்துக்கு ஏற்ற செயலே எனது செயலாக அமையும் என அதிக கூந்தலையுடைய மகர இலட்சுமி உரைத்தாள்.

அகிலம்:

உடனே பொன்மகரம் உள்ளம் மயக்கமிட்டுத்
திடமயக்கிச் சிங்கா-சனத்தில் மிகவிருத்தி
மயங்கியே பொன்மகர மாது மிகவிருக்கத்
தியங்குதே லோகமுதல் திரைவாயு சேடன்முதல்
ஈசர்முத லாதிமுதல் ஏற்றதெய் வார்கள்முதல்
சீதை முதல்மயங்க சீமையீரே ழுமயங்க
மாமோகச் சக்கரத்தை மாயவனார் தான்வீசிச்
சீமை யெழுகடலும் சிணமே மயக்கினரே
மயக்கியந்த மால்மகரம் மாமோக மாயிருக்க
தியக்கியந்த நாரணரும் சென்றார் மதுரமதுள்

விளக்கம்:

இதைக் கேட்ட திருமால் தம்மிடமிருந்த மிகுந்த காம மோகத்தைக் கொடுக்கும் சக்கரத்தை வீசினார். உடனே மகர இலட்சுமியின் மனம் மயங்கி அருகில் இருந்த சிங்காசனத்தில் அமர்ந்தாள். அச்சமயம் இவ்வுலகம் முழுவதும் மயக்கம் கொண்டது. கடல் திரை, காற்று, ஆதிசேஷன் பாம்பு போன்றவையும் ஈசர் முதலியவர்களும், உயர்வான தேவர்களும், கன்னிகளும் மயக்கமுற்றனர். இலட்சுமி முதல் பதினான்கு உலகங்களும் மயக்கமுற்றன. இவ்வாறு திருமால் உலகங்களையும் கடல்களையும் மயக்கினார். மயக்கப்பட்ட திருமாலின் மனைவி மகர இலட்சுமியும் மிகுந்த காம இச்சை உருவாகி அங்கே இருக்க, திருமால் இன்னும் அதிக காமமயக்கத்தை தமக்கும் உண்டாக்கி மகரத்துள் சென்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக