ஞாயிறு, 23 நவம்பர், 2014

அய்யா துணை

அகிலம்:

அப்போது நாதன் அந்தத்தே வன்றனக்குச்
செப்பமுள்ள புத்தி செப்பிமிகப் பார்த்தனரே
அப்போதிவர் கேளாமல் அதுதானது தானென்றார்

விளக்கம்:

அதைக் கேட்ட நீர் சம்பூரண தேவனுக்கு நேர் வழியுள்ள நல்ல புத்திமதிகளைக் கூறி பார்த்தீர். ஆனால் சம்பூரணதேவனோ நீர் கூறியதைக் கேளாது எனக்கு அவள் தான் வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறினான்.

அகிலம்:

மாயனுக்குக் கோபம் மனதில் மிகவாகி
ஆயனப்போ திவர்க்கு அதிகப் பலனுரைத்தார்
நல்லதுநீ கேட்ட ஞாயமீட் டேற்றமதாய்
வல்லவனை நினைந்து மாதுவும் நீதானும்
எங்க ளிருபேர்க்கும் இன்னம் பிறவியிலே
மங்கையும் புருசனென மறவாம லாவதற்கு
வரந்தாரு மென்று மனதில் நினைவேற்றிப்
பரந்தாண்டி கண்டு பலன்பெறுங்கோ வென்றுசொல்லி
தவசிருக்க விட்டீர்காண் சங்கரரே நீர்கேளும்

விளக்கம்:

உடனே, உமக்கு அதிக கோபம் மனதில் உண்டாகி அவனை நோக்கி, தேவனே, நீ கேட்ட நியாயம் நல்லதுதானா? நீ கேட்டபடி ஈடேற வேண்டும் என்றால் பரதேவதையும் நீயும் வல்லவனாகிய இறைவனை நினைத்து எங்கள் இருவருக்கும் இனி வரப் போகின்ற பிறவியில் கணவனும் மனைவியுமாக உருவாவதற்கு வரம் தர வேண்டும் என்று மனதில் ஒரே நினைவை ஏற்றிப் பரநிலை தாண்டி உயர்நிலை கண்டு நீங்கள் நினைத்த பலனைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களை தவசு நிற்பதற்காக அனுப்பினீர்.

அகிலம்:

சிவசிவா வென்றுதவம் செய்தவர்கள் நிற்கையிலே
தவம்பார்க்க ஈசுரரும் சன்னாசி நீதனுமாய்
அவட மெழுந்தருளி அங்கேகும் வேளையிலே
தெய்வேந் திரனும் திருமுடி யுஞ்சூடி
மையேந்திர னுடைய மலர்பாதங் காணவென்று
அவனுமிக வந்தான் அரனெதிரே அய்யாவே

விளக்கம்:

அவ்வாறு அவர்கள் சிவ சிவ என்று தவம் செய்து கொண்டு நிற்கின்ற வேளையில் அவர்களுடைய தவத்தின் நிலையைப் பார்ப்பதற்காக ஈசரும் நீவிரும் அங்கு எழுந்தருள வேண்டிப் போகும் சமயம், தெய்வேந்திரன், உம்முடைய திருமுடியைப் போன்ற ஒரு திருமுடியைச் சூடிக் கொண்டு ஈசரின் மலர்ப் பாதத்தைக் காண ஆசை கொண்டு அவனும் அங்கு ஈசர் எதிரே வந்தான்.

அகிலம்:

தவத்துக் கிடறு தான்வருவ தோராமல்
தேவன் மதிமயங்கித் திருமுடிமே லிச்சைகொண்டு
பாவையுட னுரைத்துப் பற்கடித்தான் தேவனுமே
அதையறிந் திசுரருள் அன்றும்மு டனுரைத்தார்
இதையறிந் துநீரும் ஏற்றதேவ னோடுரைத்தீர்
வாய்த்த தவங்குளறி வாய்க்காமல் நின்றதினால்
ஏற்றகீ ழுலகில் என்மகவு சான்றோரில்
நல்லதர் மகுலத்தில் நன்றாக நீபிறந்து
தொல்லையெல் லாந்தீர்த்துச் சூலினழுக் கறுத்து
வளரும் பருவமதில் வந்துன்னை நானெடுத்து
இளவரசா யுன்னை ஈன்றெடுத் தேவளர்த்து
ஆளு மரசு அழகாக வுன்றனக்கு
நாளு மிகத்தருவேன் நம்மானை தப்பாதென
உறுதிசொல்லித் தேவனையும் உற்ற சான்றோர் குலத்தில்
பொறுதியுள்ள தர்மப் பிதிரில் பிறவிசெய்தீர்

விளக்கம்:

கடினப்பட்டுச் செய்த தமது தவத்துக்கு இடையூறு வருகிறது என்பது தோன்றாமல் சம்பூரணதேவன் தன் அறிவின் உண்மை நிலை புரியாது மயங்கித் தெய்வேந்திரனின் பொய்த் திருமுடிமேல் ஆசை கொண்டான். இது சம்பந்தமாகப் பரதேவதையிடம் யாரும் புரியாவண்ணம் மனத்தோடு மனதாகப் பேசிக் கொண்டான். அதை அறிந்து கொண்ட ஈசர், அன்று உம்மிடம் அதைத் தெரிவித்தார். அதை அறிந்து கொண்ட ஈசர், அன்று உம்மிடம் அதைத் தெரிவித்தார். mஅதை அறிந்து நீர் தேவனை நோக்கி, கைமேல் பலனாக வாய்த்த தவம் சிதறிப் பலன் பெறாமல் நின்ற காரணத்தால் பூவுலகில் என் குழந்தைகளாகிய சான்றோர் இனத்தில் உயர்வான தரும குலத்தில் நல்ல முறையில் நீ பிறப்பாய். அங்கு இப்பிறவித் தொல்லை எல்லாம் தீர்த்து சூலில் உருவாகின்ற விளைகளை அறுத்து, பூவுலகில் வளருகின்ற சமயத்தில் அங்கு நான் வந்து இளவரசனாகிய உன்னை எடுத்து, என் குழந்தையாகப் பெற்றெடுத்து, வளர்த்து ஆளுகின்ற அரசுப் பொறுப்பைச் சிறப்பாக உனக்குத் தருவேன். இது சத்தியம். என் மேல் ஆணை. இது தப்பாது. என்று வாக்குறுதி சொல்லி தேவனைச் சான்றோர் குலத்தில் பொறுமையுள்ள தரும வழியில் பிறவி செய்தீர்.

அகிலம்:

மாதைப் பிறவிசெய்தீர் மக்கள்சான் றோர்குலத்தில்
சூதஎமக் குலத்தில் தோகையரைத் தோன்றவைத்தீர்
அப்படியே முன்னம் அய்யாவே யிவ்வகைக்கு
இப்படியே பிறந்து இச்சடல மென்றுரைத்தார்

விளக்கம்:

அதைப் போலப் பரதேவதையை அதே சான்றோர் குலத்தில் தந்திர குணம் வாய்ந்த எமவழியில் தோன்றச் செய்தீர். அய்யாவே, இப்படியாக இப்பூவுலகக் காரியங்களுக்காகப் பிறந்து வளர்ந்தது இச்சடலம் என்று முனிவர்கள் உரைத்து முடித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக