ஞாயிறு, 23 நவம்பர், 2014

அகிலம்:

திருமால் பூலோகப் பிறவியெடுக்க ஈசருடன் ஆலோசித்தல்
நாடறிய எம்பெருமாள் நல்லதிரு வாசமிட்டு
லாட மதிலிருந்து வாவுவா ரீசரொடு

விளக்கம்:

திருமால் பூலோகம் அனுப்பிய திருவாசகத்தை நாட்டு மக்கள் நன்றாக அறியும்படியாகச் செய்துவிட்டுத் திருமால் தமது ஆக்ஞா பகுதியில் நிலை நின்று ஈசரோடு பேசலானார்.

அகிலம்:

வாரமில்லை நமக்கு வஞ்சகங்க ளில்லாமல்
சார முடனே தரணிதனி லோதிவைத்தோம்
அகப்பே ரெனவே அவனிசொல்வ தில்லையினி
உகப்பாரந் தீர்க்க உரைப்பீர்கா ணீசுரரே
லட்சுமியை முன்னம் இருத்தினோஞ்செந் தூர்க்கடலில்
பச்சணியுங் காளிதனைப் பாரச் சிறையில்வைத்தோம்
என்மகவாய்ப் பெறவே இராச்சியத்தி லோர்சடலம்
தன்மகவா யங்கே தான்பிறந்து நல்லவயசு
இருபத்து நாலு என்றாச்சே மாநிலத்தில்

விளக்கம்:

ஈசரே, எந்த விதமான பேதமும் இல்லாமலும், வஞ்சகத் தன்மை இல்லாமலும், சகலவிதச் சக்தியுடன் பூவுலகம் அறியும்படியாகத் திருவாசகத்தை மொழிந்து எழுதி அனுப்பி வைத்தோம். நம்மேல் எந்தவித ஆணவ அவப்பேரும் உலகில் யாராலும் இனிமேல் கூற முடியாது. எனவே, இனி இந்த யுகத்தின் பாரத்தினைத் தீர்பதற்கு அனுமதி தர வேண்டும். நாம் ஏற்கெனவே இலட்சுமியைத் திருச்செந்தூர் கடலில் போய் வளர்நது வர அனுப்பி வைத்தோம். கிடைத்தவற்றை உண்ணும் காளியைக் கடுமையான சிறையில் அடைத்தோம். என்னுடைய குழந்தையாய் மாற்றுப் பிறப்புப் பிறக்க வேண்டி, பூவுலகில் பொன்கூட்டுச் சடலத்தோடு பிறந்து அக்குழந்தைக்கு இருபத்து நான்கு வயது ஆகிவிட்டது.

அகிலம்:

கருவுற்ற முத்தோசம் கழிவதும் நாளின்றாச்சே
விட்டதிரு வாசகந்தான் மேதினியோர் கொள்ளாமல்
கட்டங் கொடிதாய்க் காணுதே தொல்புவியில்
புத்திவரு மென்றிருந்தோம் பிழையாத நீசனுக்கு
சற்று மனதில் தங்குமோ நல்வசனம்
பார்த்திருந்தால் போராது பார்மீதில் மக்களுந்தான்
காத்திருந்து வாடுகிறார் கௌவையுற்று நல்மனுக்கள்
மனுவிடுக்கந் தீர்த்து வாய்த்தசொல் லொன்றதுக்குள்
தோணியேவை குண்டர் சுத்தயுக மாளுதற்கு

விளக்கம்:

மேலும், அக்குழந்தை கருவுற்று முன்வினைத் தோசங்கள் கழிந்து ஒழிகின்ற தினம் இன்றைய தினம் ஆகும். நாம் அனுப்பிய திருவாசகத்தைப் பூலோக மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் அவர்களின் துன்பங்கள் மிகவும் கொடியதாகப் பூவுலகில் காட்சி அளிக்கின்றன. அவர்களுக்கு நல்ல புத்தி உருவாகும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எவ்வகையிலும் தப்பிப் பிழைக்க முடியாத நீசனின் மனம் நமது திருவாசகத்தைச் சிறிதளவாவது ஏற்றுக் கொள்ளுமா? ஏற்காது. எனவே இவற்றை எல்லாம் நாம் பார்த்துக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. பூவுலகில் நம் மக்கள் எல்லாரும் நமது வருகைக்குக் காத்திருந்து வாடுகின்றனர். அந்த நல்லவர்களின் துன்பத்தைத் தீர்த்து நன்மை வாய்ந்த ஒரு சொல்லுக்குள் பக்தர்களைக் கரையேற்ற தோணி ஏறும் வைகுண்டர் தருமயுகத்தை ஆள வேண்டும்.

அகிலம்:

நாளுண்டோ போவதற்கு நல்வேதச் சொல்லுமுண்டோ
கோளுண்டோ வெற்றியுண்டோ கூறும்நீர் வேதவுரை
அப்போது ஈசர் அகமகிழ்ந்து கொண்டாடி
முப்போது வுள்ள முறைகேட்க வேணுமென்றால்
ஆதி வியாகரரை அழைப்பித்துக் கேளுமென்றார்

விளக்கம்:

அதற்குக் குறிப்பிட்ட நாள் ஏதாவது உண்டா? வேதங்களில் அதற்குரிய குறிப்புகள் ஏதாவது இருக்கிறதா? அதற்குரிய கிரக நிலைகள் என்ன? வெற்றி வாய்ப்புள்ளதா?

இக்கேள்விகளுக்குப் பதிலாக உமது வேத உரையை எடுத்துக் கூறுவீராக என்றார். இவற்றைக் கேட்ட ஈசர் உள்ளம் மகிழ்ச்சியுற்று திருமாலே நீ கூறியபடியுள்ள விளக்கங்களை முறைப்படி கேட்க வேண்டும் என்றால் ஆதி வியாகரரை அழைத்து அவரிடம் கேட்பாயாக என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக