ஞாயிறு, 23 நவம்பர், 2014

அய்யா துணை.

அகிலம்:

பாக்கியங் கொடுப்போம் நாமும் பலனுடன் வாழு வோர்க்கு
நோக்கிய கருணை யுண்டாம் நோயில்லா திருந்து வாழ்வார்
தாக்கிய வாச கத்தின் தன்மையை நம்பு வோர்க்கு
வாக்கிய வைகுண்ட வீடு வந்தவர் வாழ்வார் தாமே

விளக்கம்:

வைகுண்டராகிய எம்மை எப்போதும் ஒரே திடமான நினைவு கொண்டு வாழுவோருக்கு நாம் எல்லா விதப் பாக்கியங்களும் கொடுப்போம். அவர்கள் எமது கருணை நோக்கைப் பெற்று எவ்விதத் துன்பமுமின்றி மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருவர். இங்கே எம்மால் தாக்கல் செய்யப்பட்டுள்ள திருவாசகத்தின் தன்மையைப் புரிந்து எவ்விதச் சந்தேகமுமின்றித் தெளிவுடன் நம்புவோருக்கு எல்லா வசதிகளும் செய்யப்பட்ட வைகுண்டவீடு காத்திருக்கின்றது. அவ்வைகுண்ட வீட்டில் அத்தகையோர் தாம் வந்து வாழ்வர்.

அகிலம்:

தினமொரு நேர மெந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம்
கனிமொழி சோதி வாக்கும் கையெழுத் தாதி நோக்கும்
துணிவுடன் கேட்டோ ருற்றோர் தொலைத்தனர் பிறவி தானே

விளக்கம்:

தினமும் ஒவ்வொரு நேரம் எமது திருவாசகத்ததை மனம் ஒருங்கு கூடிக் கேட்டால், சூரியன்க் கண்ட பனித்துளி மறைவது போல, இதுவதை செய்த பாவம் அவ்வளவும் மறைந்துவிடும். இதை உண்மையாகக் கூறுகிறோம். இனிமை பொருந்திய சரசுவதியின் திருவாசகத்தையும், ஆதி நாராயணரின் கையெழுத்தின் நோக்கத்தையும் மனத்துணிவுடனும் தெளிவுடனும் கேட்டோரும், படித்தோரும் பிறவி நோயைத் தொலைத்து வாழ்வர்.

அகிலம்:

வாசித்தோர் கேட்டோ ருற்றோர் மனதினி லுணர்ந்து கற்றோர்
ஆசித்தன் பதமே கண்டு அவ்வழி முறையே நின்றோர்
கோசித்தன் பதமே கண்டு கோமலைப் புவியின் வாழ்வும்
தேசத்தின் செல்வத் தோடும் சிறப்புட னிருந்து வாழ்வார்

விளக்கம்:

இத்திருவாசகத்தை வாசித்தவர்களும், மன ஒருமைப்பாட்டோடு கேட்டவர்களும், அதை உள்ளத்தில் உணர்ந்து கற்றவர்களும், சிவஞான சித்தனாகிய நாராயணரின் திருவாசகப் பதத்தினை உணர்ந்து அவ்வாழி முறைகளில் நின்றவர்களும், சித்தர்களுக்கு எல்லாம் தலைவனாகிய ஈசுரரின் பதத்தை உணர்ந்து, தேவலோக வாழ்வையும், இப்பூவுலகின் எல்லாவிதச் செல்வங்களையும் பெற்றுச் சிறப்புடன் இருந்து வாழ்வர்.

அகிலம்:

திருமொழி வாசகந் தன்னைத் தேசத்தில் வருமுன் னாக
வருவது திடனா மென்று வழுத்தினோம் தொளாயிருத்து 98ல்
ஒருதிருக் கூட்ட மாக ஓராயிரத் தெட்டா மாண்டில்
வருகென வந்து நாங்கள் அம்மானையில் வருத்தி னோமே

விளக்கம்:

இத்திருவாசகத்தின் திருமொழிகளைப் பூலோகம் வரும் முன்னரே நாங்கள் பூவுலகு வருவது நிச்சயம் என்று உறுதியாகச் சொல்லி தொள்ளாயிரத்து தொண்ணூற்று எட்டாம் ஆண்டில் எழுதினோம். ஆயரத்து எட்டாம் ஆண்டில் ஒரு திருக்கூட்டத்தோடு நாங்கள் பூவுலகு வருவோம் என்று சொன்னபடி பூவுலகு வந்து நாங்கள் அகிலத்திரட்டு அம்மானையில் எல்லா யுகங்களின் உண்மைகளையும் வெளிப்படுத்தி எழுதுவோம்.

அகிலம்:

வருத்தினோ மம்மானை தன்னில் மானமாய்ப் புதிய தாக்கிக்
கருத்தினுள் ளகமே கொண்டு கவனித்தோ ரவர்க்கே தக்கும்
உருத்தில்லாக் கேட்போ ரெல்லாம் ஓருரை வெளியே காணார்
சிரித்துரைக் கேட்போ ரெல்லாம் சிவபொருள் வெளியே காண்பார்

விளக்கம்:

அகிலத்திரட்டு அம்மானை என்னும் இந்த நூழர நல்ல மானமுள்ள நீதியோடு, இதற்கு முன் தோன்றிய நூல்களைக் காட்டிலும் முற்றிலும் புதிய வகையாக இயற்றியுள்ளோம். மிகவும் ஆழமாக ஒருங்குகூடிய சிந்தனையோடு தெளிவாக இந்த நூலின் உண்மைகளைக் கவனித்தவரகளுக்கே உண்மை நிலை புரியும். எந்த விதத்தடைகளும் இல்லாமல் இந்த நூலின் கருத்துக்களைத் தெளிவாகக் கேட்பரானால் சிவப்பொருளையும், அதன் விளக்கங்களையும் தம் உள்ளத்தின்கண் காண்பார்.ஆனால் இதன் கருத்துக்களைக் கவனம் இல்லாமலும் வெளி உலகக் களிப்புடனும் யாராவது கேட்டால் அத்தகையோர் எல்லாவற்றிற்கும் முக்கியமான மெய்ப்பொருளாகிய சிவப்பொருளைத் தம் உள்ளத்தின்கண் காணாது வெளி உலகத்தில் கதை ரூபத்தில் இருப்பதாக எண்ணி ஏமாறுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக