ஞாயிறு, 23 நவம்பர், 2014

அய்யா துணை

கந்தன் அழைப்பை மறுத்துத் திருமால் செந்தூர்க் கடற்கரை ஏகல்:

அகிலம்:

கேட்டுநா ராயணரும் கீழ்ச்சுண் டசையாமல்
நாட்டமுட னுள்ளத்(து) அடக்கிமறுத் தேதுரைப்பார்

விளக்கம்:

திருமால் தமது கீழ் உதடு சிறிது கூட அசையாமல் சிரிப்பினை மிகவும் கடினத்துடன் உள்ளடக்கி, முருகனை நோக்கி மறுத்து உரைக்கலானார்.

அகிலம்:

நல்லதுவே மருகன் நலமா யிருப்பதுதான்
பொல்லாது செய்யாமல் புரிந்தாள் வதேபோதும்

விளக்கம்:

முருமா, மருமகனே, நீ நலமாய் இருப்பது மிகவும் நன்று, பொல்லாத செயல்கள் செய்யாமல் நீ இங்கு ஆட்சி புரிவதே போதுமானது ஆகும் என்று அய்யா திருமால் கூறினார்.

அகிலம்:

என்றுரைத்து அய்யா ஈசரோ டேதுரைப்பார்
பண்டுவிட்ட வாசகச்சொல் பற்றிச்சோ பூமியிலே
வல்லாண்மைக் காரருக்கு மதமிப்ப டியிருக்கும்
இல்லாதெளி மைகட்கு இருக்குமது மேல்தயவு
என்று இருபேரும் இயம்பி மனதடக்கி
நன்றெனவே கந்தனொடு நல்வார்த்தை யும்பேசி
அந்த முடனே எல்லோருந் தானடந்து
செந்தூ ரலைக்கரையில் சேர்ந்தனர்கா ணம்மானை

விளக்கம்:

பிறகு ஈசரை நோக்கி ஈசரே முன்னர் நாம் அனுப்பிய திருவாசகத்சொல் பூமிக்கு முழுமையாக வந்தடைந்துவிட்டதா? மிகுந்த ஆணவம் உள்ளவர்களுக்கு செல்வ செழிப்பினால் உண்டாகும் மதமும் இப்படிதான் இருக்கும். ஆனால் பொருளில்லா ஏழைகளுக்கு ஆறுமுகன் சொல்லும் ஆணவச் சொல்லின் மேல் பற்று இருக்கும் என்று கூறி, இருவரும் தமக்குள் உரையாடிக் கொண்டனர். பிறகு, கந்தனை நோக்கி அவனுக்கு உகந்த வார்த்தைகளை எடுத்துக் கூறிவிட்டு, எல்லாரும் நடந்து திருச்செந்தூர்க் கடற்கரைக்கு வந்தடைந்தனர்.

அகிலம்:

கடற்கரை தனிலே வந்து கரியமா லீச ரோடும்
மடக்கொடி உமையா ளோடும் மறைமுனி தேவ ரோடும்
குடக்கலை பொருந்தும் வேதக் கூர்முனி ரிஷிக ளோடும்
கடற்கரை தனிலே வந்து கண்டனர் கடலைத் தானே

விளக்கம்:

திருமால் ஈசரோடும் மடக்கொடி உமையாளோடும் வேதம் ஓதும் முனிவர்களோடும், வேதர்களோடும், மாயோனின் ஆடல் கலையைச் செய்து வேதங்களைத் தெளிவாக அறிந்த முனிவர்களோடும், இன்னும் பல ரிஷிகளோடும் திருச்செந்தூர் கடற்கரையை வந்தடையவும் எல்லாரும் அக்கடலை கண்டு மகிழ்ச்சி எய்தினர்.

அகிலம்:

வந்தவ ரெல்லாப் பேரும் வட்டமிட் டதிலே நிற்கச்
சந்தன வாரி யோரம் தன்னிலே நின்று ரண்டு
சுந்தர முனிவர் வந்து சுவாமிதன் பதமே பூண்டு
எந்தனின் பிரானே யென்று இருவரும் வணங்கிச் சொல்வார்

விளக்கம்:

கடலோரம் வந்த எல்லாரும் அங்கு கூடி ஒன்றாக நின்றனர். அப்போது சந்தன மணத்தையுடைய திருச்செந்தூர்க் கடலின் கரையில் நின்று கொண்டிருந்த இரண்டு அழகான முனிவர்கள் திருமாலின் முன்னால் வந்தனர். அவர்கள் திருமாலின் பாதங்களைக் கட்டிப் பிடித்து வணங்கி எங்களுடைய இறைவனே அருள் புரிவீராக என்று கூறித் துதித்து சொல்லலானார்கள்.

அகிலம்:

கலைமுனி ஞானமுனி வரம் வேண்டல்
----------------------------------------------------------

ஆதியே யெங்கள் அய்யாநா ராயணரே
சோதியே யெங்கள்தவம் சுறுக்கிட் டுருவளர்ந்து
கண்டுகொண் டோமையா கமலப் பொருளேநீர்
பண்டு மொழிந்தபடிப் பார்த்துவரந் தாருமையா
என்று முனியிருபேர் இறைஞ்சித் தொழுதிடவே
மன்று தனையளந்தோர் மறுத்துரைப்பா ரன்போரே

விளக்கம்:

“ஆதியே, எங்கள் அய்யா நாராயணரே, சேதியே, எங்களுடைய தவமானது சீக்கிரம் உயர்வு அடைந்து உம் அருளைக் கண்டு கொண்டோம். இதயத் தாமரையில் அமர்ந்திருக்கும் மூலப்பொருளே, நீர் ஏற்கெனவே கூறியபடி எங்களைக் கருணையுடன் பார்த்து வரம் தர வேண்டும் அய்யா” எனக் கூறி இரு முனிவர்களும் தொழுது நின்றனர். அப்பொழுது இவ்வுலகை அளந்த திருமால் பதிலுரைப்பதை அன்பர்களே நீங்கள் கேட்பீராக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக