புதன், 19 நவம்பர், 2014

அகிலம்:

மாதாவும் மகனும் வாய்த்த நருளுடனே
நிதாவின் பாதாரம் நெஞ்சில் மிகநிறுத்தி
இருந்த பதியும்விட்டு ஏற்றவொரு காதம்விட்டு
வருந்த நருளோடே வழிகொண்டா ரன்போரே
கூடங் குளமும்விட்டுக் குளிர்ந்தசுக்குப் பாரும்விட்டுத்
தோடவழி யாறுங்கண்டு சூறாவழிக் காடும்விட்டு
நடந்து வொருவனத்தில் நல்லதண்ணீ ராவிகண்டு
கொடர்ந்த பலகாரம் கொண்டுதண்ணீர் தான்குடித்து

விளக்கம்:

இவ்வாறு தாயும் மகனும் தம்மோடு வந்த மக்களுடன் திருமாலின் பாதங்களை மனதில் நிலைநிறுத்தித் தமது ஊரைவிட்டு அகன்று, ஒரு காதம் தூரம் வந்து கொண்டிருந்தனர். கூடங்குளத்தைத் தாண்டி, குளிர்ச்சி பொருந்திய சுக்குப்பாரு இடத்தையும் தாண்டி தோட்ட வழி ஆறும், சூறாவழி காடும் கடந்து, ஒரு வனத்தில் வந்தடைந்தனர். அங்கிருந்த நல்ல தண்ணீர் நிரம்பிய குளத்தைக் கண்டு அதன் பக்கத்தில் அமர்ந்து தாம் பொண்டு வந்த பலகாரம் முதலியவற்றை உண்டு தண்ணீர் குடித்துச் சடைவாறினர்.

அகிலம்:

தகையாறிக் கொண்டு தானிருக்கும் வேளையிலே
வகையான நல்ல வாய்த்தமகா விட்டிணுவும்
பிறவிக்கு ஏற்ற பிள்ளை வருகுதென்று
திறவி முதலோன் தெளிந்துமிகக் கொண்டாடி
எதிரே ஆள்விட்டு இங்கழைக்க வேணுமென்று

விளக்கம்:

இவ்வாறு அவ்வனத்தில் சடைவாறிக் கொண்டிருக்கின்ற வேளையில் திருச்செந்தூரில் மகாவிஷ்ணு நமது குழந்தையாகப் பிறவி எடுக்கத் தகுதியான விள்ளை ஒன்று இதோ வந்து கொண்டிருக்கின்றது, என்று நிறவி முதலோனாகிய திருமால் மனம் தெளிந்து மகிழ்ச்சியுற்று, அந்தப் பிள்ளையின் எதிரே ஆள் அனுப்பி எதிர்கொண்டு அழைக்க வேண்டும் என்று நினைத்தார்.

அகிலம்:

அருகே தானின்ற ஆதி முனியான
நல்ல முனிவரையும் நாரா யணரழைத்து
வல்லவர்தாம் நீங்கள் வாரு மென அழைத்து
வாருங்கோ பிள்ளாய் வாய்த்த முனிமாரே
நேருங்க ளோடு நிகழ்த்துகிறே னோர்வசனம்
நானே மித்த நல்லவுயி ரானதிங்கே
தானே வருகுதுகாண் எந்தன் தவத்தாலே
எதிரேபோய் நீங்கள் இங்கழைத்து வாருமென்று

விளக்கம்:

உடனே தமது அருகில் நின்ற இரண்டு முனிவர்களை அழைத்து, நீங்கள் வல்லவர்களே எனக்கூறித் தமது அருகில் அழைத்து பிள்ளைகளே உயர்வு வாய்ந்த முனிமாரே உங்களுக்கு நேராக ஓர் அன்பு மொழி கூறுகின்றேன். கேட்பீர்களாக. நான் ஏற்கெனவே என் குழந்தையாக நியமித்த சிறப்பான உயிரானது இங்கே தானாக வந்து கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி என்னுடைய தவத்தின் பயனால் நிகழ்கின்றது. முனிவர்களே, நீங்கள் போய் அவனை எதிர்கொண்டு அழைத்து வாருங்கள் என்று கூறி முனிமாரை அனுப்பினார்.

அகிலம்:

பதியேறும் பெருமாள் பகர்ந்து முனியயச்சார்
அயச்ச முனிமார் அவ்வாயு போல்விரைவாய்ப்
பயபட்ச முடனே பகர்ந்த இருமுனியும்
எந்த வழியாய் இவர்கள்வரு வாரெனவே
அந்தந்த வழிக்கு ஆலோட்டம் பார்த்துவந்தார்
வந்து ஒருவழியில் வரவேகண் டம்முனிவர்
சந்துஷ்டி யாகித் தாழ்ந்துநமஸ் காரமிட்டு
கண்டு குவித்துக் கனக முனிமார்கள்

விளக்கம்:

இவ்வாறு அனுப்பப்பட்ட முனிவர்கள் காற்றைப் போன்று விரைவாகப் பயபக்தியுடன் கிளம்பிச் சென்று அவர்கள் எந்தெந்த வழிகளில் வர முடியுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் ஆலோட்டம் இட்டு ஆராய்ந்தனர்.

கடைசியாக ஒரு வழியாக அவர்கள் வருவதைக் கண்டு முனிவர்கள் மிகவும் பணிவாக வணங்கி கைகுவித்து அவர்கள் அருகில் சென்றனர்.

அகிலம்:

வண்டுசுற்று மார்பனுட வாய்த்தகரம் ரண்டதையும்
முனியிருபேர் தோளில் உயர்த்தி மிகவேந்தி
துணிவுடனே மாமுனிவர் தோளின்மே லேயிருத்திப்
பதியி லிருந்தாற்போல் பார்மன்னனை யிருத்திக்
குதிரைநடை கொண்டாற்போல் கொண்டோடி மாமுனிவர்
கூட நடப்போர் குதித்துக்குதித் தோடிவர
வாடி யிடைந்து மனுநருட்க ளோடிவர

விளக்கம்:

அம்முனிவர் இருவரும் வண்டு சுற்றி வருகின்ற மணம் பொருந்திய மார்பையுடையவரின் கரங்கள் இரண்டையும் ஆளுக்கொரு பக்கமாகத் தோளில் வைத்து உயர்வாக ஏந்திப் பிடித்து, மிகுந்த துணிவுடன் அவரைத் தோளின் மேல் இருத்திக் குதிரை நடைபோல் துள்ளிக் குதித்து ஓடியும் நடந்தும் வந்தனர். அவர்களைப் பின்தொடர்ந்து வரமுடியாமல் அவரோடு வந்த மனிதர்கள் வாட்டமுற்று ஓடி வந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக