புதன், 19 நவம்பர், 2014

அகிலம்:

நல்ல பிறவியைத்தான் நன்முனிவர் கொண்டோடி
வல்லசெந் தூர்ப்பதியில் வந்தனர்கா ணன்போரே
வந்த முனிமார்கள் வாழ்த்தியந்த நல்லுயிரைச்
சந்தனா வீதியிலே சடலந்தனை நிறுத்தி
மாமுனிவர் தாமும் மாயோனை வந்துகண்டு
சாமிநீர் கொண்டுவரத் தானுரைத்த நற்சடலம்
அடியா ரெதிரேபோய் அழைத்துவந்தோ மையாவே

விளக்கம்:

நல்ல பிறவியாகிய அவரை முனிவர்கள் தூக்கிக் கொண்டு மகிழ்ச்சியோடு மேன்மையான திருச்செந்தூர்ப் பகுதிக்கு வந்தடைந்தனர். இவ்வாறு வந்த முனிவர்கள் அந்த நல்லுயிரை சந்தன மணம் வீசுகின்ற அந்த வீதியிலே நிலை நிறுத்தினர். பிறகு, அந்த மாமுனிவர்கள் திருமாலைச் சென்று கண்டு சுவாமி நீர் அழைத்துக் கொண்டு வரச் சொன்ன உயர்வான உடலை உயது அடியாராகிய நாங்கள் அவர் எதிரே சென்று எதிர்கொண்டு அழைத்து வந்தோம் அய்யா என்று பணிந்தனர்.

அகிலம்:

முனிவர்கள் சடலத்தின் வரலாறு கூறுதல்:
-----------------------------------------

திடீரெனவே நாதன் சொன்னமுனி யோடுரைப்பார்
கொண்டுவந்தோ மென்றீரே கூர்மையுள்ள நற்சடலம்
பண்டுமுறை யெல்லாம் பகருவீர் மாமுனியே

விளக்கம்:

இதைக் கேட்ட திருமால் உடனே அந்த முனிவர்களை நோக்கி, முனிவர்களே, சடலத்தைக் கொண்டு வந்தோம் என்று சொன்னீர்களே, அந்த உயர்வு பொருந்திய நல்ல சடலத்தின் முன் வரலாறுகளை எல்லாம் விளக்கமாக கூறுவீர்களாக என்றுரைத்தார்.

அகிலம்:

அப்போது மாமுனிவர் ஆதி யருளாலே
செப்புகிறோ மென்று செப்பலுற்றா ரன்போரே

விளக்கம்:

அப்பொழுது முனிவர்கள் ஆதியின் அருளால் நாங்கள் கூறுகின்றோம் என்று கூறி விளக்கலுற்றனர் அன்பர்களே கேளுங்கள்.

அகிலம்:

நல்ல சடலமிது நாடுமுற் காலமதில்
வெல்லமர்கோன் வாழும் வெற்றிதெய்வ கோலகவுயிர்
பெருசம் பூரணன்தான் பெரிய திறவான்காண்
ஆரொவ்வா ரேயிவர்க்கு ஆதி கிருபையுள்ளோன்
அப்படியே தெய்ட லோகமதி லேயிருக்க
இப்படியே யிவர்க்கு எமலோக மானதிலே
இருக்கின்ற பெண்ணதிலே இசைந்தபர தேவதையென்(று)
ஒருகுழலி தன்மேல் உள்ளாசை யாயிவரும்
அவளு மிவர்பேரில் ஆசையாய்த் தானிருந்து
இவளு மிவரும் இருந்துமிக வாழ்கையிலே
தேவருக்குந் தெய்வ லோகமே ழுள்ளவர்க்கும்
யாவருக்கு மோர்பிறவி யாகுகின்ற நாளதுவாம்
இவரையும் வருத்தி என்னவுன் செய்தியென்றார்

விளக்கம்:

உயர்வான இந்தப் பொன் கூட்டுச் சடலத்தில் இருப்பது ஒரு காலத்தில் தெய்வேந்திரன் வாழுகின்ற வெற்றியையுடைய தெய்வலோகத்தில் வாழ்ந்த சம்பூரணதேவன் என்னும் பெயருடைய ஓர் உயிர் ஆகும். இவன் பெரிய சக்தி உடையவன் ஆவான். இவனுக்கு நிகராக யாரும் இலர். ஆதி இறைவனின் அருள்படைத்தவன் இவன். இப்படித் தெய்வலோகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமயத்தில் இவனுக்கு நிகராக யாரும் இலர். ஆதி இறைவனின் அருள்படைத்தவன். இப்படித் தெய்வலோகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமயத்தில் இவனுக்கு எமலோகத்தில் வாழ்ந்து வந்த பெண்களிலே பரதேவதை என்னும் பெயருடைய பெண்ணின் மேல் காதல் உண்டானது. அவளும் இவன்மேல் ஆகை கொண்டாள். இவ்வாறு இவனும் அவளும் வாழ்ந்து வருகின்ற சமயத்தில் தேவர்கள் வாழும் தெய்வலோம் முதலிய ஏழு லோகத்தில் உள்ளவர்கள் எல்லாரும் பூவுலகில் பிறவி எடுக்கின்ற சமயம் உருவானது. அப்பொழுது எல்லாரும் பூவுலகில் பிறவி எடுக்கச் சம்மதித்தனர். அச்சமயம் சம்பூரணதேவனிடம் திருமாலாகிய நீவிர் நீ பிறப்பதற்கு ஏதாவது தடை உண்டோ என வினவினீர்.

அகிலம்:

அவளுடைய ஆசையினால் அல்லவென்று தான்மறுத்து
இவளையு மென்னோடு இயல்பாய்ப் பிறவிசெய்தால்
குவளையணி மாயவரே குணமெனக் காகுமென்றார்

விளக்கம்:

சம்பூரணதேவன் பரதேவதையின் காதலினால் எனக்குப் பூலோகத்தில் பிறக்க விருப்பமில்லை என்று கூறி மறத்து பரதேவதையையும் என்னோடு எனக்குரிய இயல்புடையவளாகப் பிறவி செய்தால் குவளை மலரை அணிகின்ற மாயவரே எனக்குப் பூவுலகில் பிறக்க மறுப்பில்லை
என்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக