புதன், 19 நவம்பர், 2014

அகிலம்:

என்றிந்த விவரமெல்லாம் இயல்முனி வோர்கள் சொல்ல
நன்றிந்த விவர மென்றே நாரணர் தயவு கூர்ந்து
சென்றிந்தச் சடலந் தன்னைச் செந்திலம் பதியி லெங்கும்
கொண்டெந்தத் தெருவுங் காட்டிக் குளிர்ப்பாட்டி வாருமென்றார்

விளக்கம்:

இப்படியாக அப்பொன்கூட்டுச் சடலத்தின் முந்தைய எல்லா விவரங்களையும் திருமாலிடம் முனிவர்கள் கூறினர். உடனே திருமால் இந்த விவரங்களை நீங்கள் கூறியது மிகவும் நல்ல காரியம் என்று கூறி அவர்கள் மேல் கருணை கொண்டு இனி நீங்கள் சென்று அந்த கடலத்தை திருச்செந்தூர்ப்பதி முழுவதும் கூட்டிச் சென்று அங்குள்ள தெருக்களை எல்லாம் சுற்றிக் காட்டி அவ்வுடலை நன்றாகக் குளிப்பாட்டி இங்கே கொண்டு வாருங்கள் என்றார்.

அகிலம்:

மேலுள்ள சடலந் தன்னை மிகுமுனி மாரே நீங்கள்
நாலுள்ள தெருக்கள் தோறும் நடத்தியே தரையி லூட்டிப்
பாலுள்ள பதத்தில் கொண்டு பழவிளை தீரக் காட்டி
மாலுள்ளம் புகுத நாட்டி வாருங்கோ சிணமே யென்றார்

விளக்கம்:

உயர்வான முனிவர்களே நீங்கள் கூறிய அந்தச் சடலத்தைத் திருச்செந்தூரின் நான்கு வழிகள் கொண்ட தெருக்கள் ஒவ்வொன்றிலும் நடைப் பயணமாகக் கூட்டிச் சென்று பூமியில் அங்கப்பிரதட்சணம் செய்வித்து, ஞானப்பால் ஊறும் பதத்தில் பழைய வினைகள் எல்லாம் தீரும்வரை நீராட்டி, திருமால் அவன் உள்ளத்தில் புகும்படி அவனது மனத்தைப் பரிசுத்தமாக நிலை நிறுத்தி சீக்கிரமாக இங்கே வாருங்கள் என கூறி அனுப்பினார்.

அகிலம்:

அப்படி முனிமா ரேகி அங்கங்கே கொண்டு காட்டி
முப்படித் தோசம்போக முனைபத மதிலேமூழ்கி
இப்படி யிவரைக் கொண்டு இவர்வரு முன்னேயாகச்
செப்படி வித்தை நாதன் செகலினுள் ளகமே சென்றார்

விளக்கம்:

இப்படி முனிவர்கள் எல்லாரும் அச்சடலத்தைக் கொண்டு சென்று அவர் கூறிய பகுதிகள் எல்லாம் காட்டி விட்டு முன்வினைத் தோசங்கள் எல்லாம் போகும்படி சுழிமுளை நிலையாகிய பதத்தில் மூழ்கச் செய்து அவ்வுடலை இவர்கள் கொண்டுவரும் முன்பாக எல்லா மாய வித்தைகளும் செய்யும் திருமால் கடலில் உள்ளாகச் சென்றார்.

அகிலம்:

வைகுண்டர் உதயம்:
-------------------------------

வானவர் தேவர்போற்ற மறைமுனி வோர்கள் பாடத்
தானவர் ரிஷிகளோடு தமிழ்மறை வாணர் போற்ற
ஞானமாம் வீணை தம்பூர் நாற்றிசை யதிர வோசை
ஓநமோ வென்று தேவர் ஓலமிட் டாடி னாரே

விளக்கம்:

வானவர்களும், தேவர்களும் மறைமுனிகளும் தானவர்களும், ரிஷிகளும், தமிழ்வாணர்களும் போற்றிப் பாடி நிற்க, ஞானமாகிய வீணை, தம்புரு, ஆகியவை நான்கு திசைகளிலும் இசை பொழிந்து அதிர தேவர்கள் ஓம் நமோ என்று சத்தமிட்டு ஆடினர்.

அகிலம்:

மத்தளத் தொனிகள் வீணை மடமடென் றேற்ற வானோர்
தித்திதெய் தித்தி யென்ன தேவியர் பாடி யாடத்
தத்தியாய்ச் சங்க மெல்லாம் சதுர்மறை கூறி நிற்க
முத்திசேர் மாயன் தானும் மூழ்கினர் கடலி னுள்ளே

விளக்கம்:

மிகவிரைவாக மத்தளம் ஒலிக்கவும், வீணை இசைக்கவும், வானோர்களும் தேவியர்களும், ஆடிப்பாடிடவும், கூட்டம் கூட்டமாகத் தேவர்கள் கூட்டமெல்லாம் நான்கு வேதங்களையும் பாடி நிற்கவும், பக்தர்களை முக்தி நிலையில் சேர்க்கின்ற மாயன் தாமும் கடலினுள்ளே மூழ்கினார்.

அகிலம்:

கடலினுள் ளகமே போந்து கனபதி மேடை கண்டு
மடவிபொன் மகரந் தன்னை வாகுடன் பூசித் தேய்த்து
நிடபதி மாயன் தானும் நிறைந்தபொன் னிறம்போல் வன்னி
வடவனல் போலே வீசி வந்தனர் மகர முன்னே

விளக்கம்:

கடலிலுள்ளே புகுந்து உயர்வு பொருந்திய தாம் தங்கப் போகின்ற மேடையைக் கண்டு, பெண்ணாகிய பொன் மகரத்தை அழகாகப் பூசித் தேய்த்து வைகுண்டத்திற்குத் தலைவரான திருமால், நிறைந்த பொன்நிறத்தைப் போன்ற அக்கினியாக உருவெடுத்து வடவாக்கினி போன்று கடுமையான உஷ்ணத்தையுடைய அனலை வீசிக் கொண்டே மகரத்தின் முன்னால் வந்து சேர்ந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக