புதன், 19 நவம்பர், 2014

அகிலம்:

மகரமுள் சென்று மகனை மிகநினைக்க
உகரமுனி கூட்டிவந்த உற்ற சடலமது
சிணமே கடலுள் சென்றதுகா ணன்போரே
குணமே குணமெனவே கூண்டரியோன் தான்பார்த்து
மகனை மிகவெடுத்து மகரமதி னுள்ளேகொண்டு

விளக்கம்:

மகரஇலட்சுமியின் முன்னால் சென்று திருமால் தம்மகனை தியானித்தார். உடனே உகர முனிவர்களாகிய ஞானமுனியும், காலமுனியும் அச்சடலத்ததை கடலுக்குள் அழைத்து வந்தனர். ஐம்புலனும் அடக்கப்பட்டு சடத்தன்மையோடு இருந்தவர் திடீரென்று கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். அச்சமயம் மகனை திருமால் பார்த்து தகுதி வாய்ந்த நல்ல குண நிலையில் இப்போது இருக்கின்றான் என்று எண்ணிக் கொண்டே திருமால் அவனை நோக்கி சென்று மகனை அன்போடு எடுத்துத் தாம் இணைந்து கொண்டிருக்கும் மகர இலட்சுமியினுள் அழைத்துச் சென்றார்.

அகிலம்:

அகரத் தெருவறையில் அலங்காரத் தட்டில்வைத்துக்
காலொன்றாய் நிற்கும் கனத்தபொன் மேடையதுள்
நாலொன்றாய்க் கூடும் நல்லசிங் காசனத்தில்
தங்கவை டூரியத்தால் தானிறைந்த மண்டபத்துள்
எங்கும் பிரகாசம் இலங்குகின்ற மண்டபத்துள்
முத்துக்கள் சங்கு முழங்குகின்ற மண்டபத்துள்
பத்தும் பெரியோர்கள் பாவித்த மண்டபத்துள்
தங்கநீ ராவித் தான்வளரு மண்டபத்துள்
சங்கு முழங்கிநிற்கும் சதுரமணி மண்டபத்துள்
மூவாதி கர்த்தன் உகந்திருக்கு மண்டபத்தில்
தேவாதி தேவர் சிறந்திருக்கு மண்டபத்தில்
ஆயிரத் தெட்டு அண்டம்நிறை மண்டபத்தில்
தாற்பிரிய மான தாமிரவர்ணி மண்டபத்தில்
எண்ணக் கூடாத இயல்புநிறை மண்டபத்தில்
மண்ணளந்தோர் மகரமதுள் மகனை மிக இருத்திக்

விளக்கம்:

மகர இலட்சுமியின் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டவரை அகரத் தெருவை உடையதுவும், தங்கம் வைடூரியம், முதலியவற்றால் அமைக்கப்பட்டதுவும், எங்கும் பிரகாசித்துக் கொண்டிருப்பதுவும், எப்பொழுதும் முத்துக்கள், சங்குகள் ஒலி செய்து கொண்டிருப்பதுவும், அகரம் உகரம் ஆகிய பத்தும் அறிந்த பெரியோர்கள் வாழுவதுவும் தங்கத்தால் ஆகிய நீர் நிரம்பியிருக்கின்ற கடல் அமைந்ததுவும், சங்கு முழங்கிக் கொண்டிருப்பதுவும், சதுர மணி பொருந்தியதுவும், மூவருக்கும் முதல்வோன் மகிழ்ந்து அமர்ந்து இருப்பதுவும், தேவாதி தேவர்கள் எல்லாரும் வாழ்ந்து வருவதும், ஆயிரத்து எட்டு ஆண்டங்களும் நிறைந்து இருப்பதுவும், மிகவும் சிறந்த உண்மையான தாம்பிரபரணி ஆறு ஓடுவதுவும், சிந்திக்க முடியாத அமைப்புகள் அமைந்ததுவும், ஆகிய மண்டபத்தினுள் ஓரு காலோடு நிற்கும் அழகு பொருந்திய பொன் மேடையில் நான்கு வழிகள் ஒன்றாகக் கூடி நிற்கின்ற நல்ல சிங்காசனத்தில், அலங்காரத் தட்டின் மேல் திருமால் தன் மகனை அமரச் செய்தார்.

அகிலம்:

கண்ணான மகற்கு கனத்ததங்கச் சட்டையிட்டு
எண்ணவொண்ணா ஆபரணம் எல்லா மெடுத்தணிந்து
தங்கக் குல்லாவும் தலைமேலே தூக்கிவைத்துப்
பங்கமில்லாத் தைலப் பதத்தில் மிகமூழ்கி
வைகுண்ட வெள்ளை மான்பட்டொன் றேயெடுத்துக்
கைகொண்டு பாலனுக்குக் கண்ணர் மிகச்சூடி

விளக்கம்:

இவ்வாறு இவ்வுலகை அளந்த திருமால் மகர இலட்சுமியினுள் தம் மகனை அழகுபட இருத்தி தமது கண்கள் போன்ற அந்த மகனுக்கு அழகு பொருந்திய தங்கத்தால் ஆகிய உடுப்பு அணிவித்து, எண்ணுவதற்கு அரிய சிறந்த ஆபரணங்கள் எல்லாம் அணிவித்து, தங்கத் தொப்பியை தலையின் மேல் தூக்கி வைத்து எந்த விதத் தீமையும் இல்லாத தைலப் பதத்தில் அவரை மூழ்கச் செய்தார். பிறகு வைகுண்ட வெள்ளை மான் பட்டு ஒன்றை எடுத்து தமது கையினாலேயே தம் பாலனுக்கு திருமால் அன்பாக சூட்டி வைகுண்டர் ஆக்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக