புதன், 19 நவம்பர், 2014

அகிலம்:

ஆண்டா யிரத்து எட்டதிலே அதனே மாத மாசியிலே நான்றாங் கடலின் கரையாண்டி நாரா யணனே பண்டாரம்கூண்டாந் தெச்ச ணாபுரியில் கொண்டோம் பள்ளி தர்மமுற்றுஒன்றாம் விஞ்சை யிதுமகனே உரைப்பேன் ரண்டாம் விஞ்சையதே

விளக்கம்:

ஆயிரத்து எட்டாம் ஆண்டில் மாசி மாதம் முதல் நானே தான் கடலின் கரை ஆண்டியாகவும், நாராயணராகவும், பண்டாரமாகவும், நாம் கூடி இருக்கின்ற இந்த தெச்சணாபுரியல் தரும நிலையில் பள்ளி கொண்டேன் என்று திடமாகச் கூறுவாயாக. இதுவே நான் உனக்குக் கூறுகின்ற முதலாம் விஞ்சை. இனி நான் கூறப்போகின்ற இரண்டாம் விஞ்சையை நீ கேட்பாயாக.

அகிலம்:

வேண்டாம் வேண்டாங் காணிக்கையும் மிகவே வேண்டாங் கைக்கூலிஆண்டார் நாரா யணன்தனக்கு அனுப்போல் வேண்டாங் காவடியும்வேண்டா மெனவே நிறுத்தல்செய்து வாய்த்த சிறையாய்க் கவிழ்ந்திருநீஇரண்டாம் விஞ்சை யிதுமகனே நவில்வேன் மூன்றாம் விஞ்சையதே

விளக்கம்:

காணிக்கை, கைக்கூலி ஆகியவற்றை எக்காரணத்தை முன்னிட்டும் வாங்க வேண்டாம். இவ்வுலகை ஆண்டு கொண்டிருக்கும் நாராயணராகிய எமக்கு அணு அளவுகூட காவடி எடுத்தல் முதலிய விழாக்களும் வேண்டாம் என்று கூறி இவற்றை எல்லாம் தடை செய்து நீ சிறையில் இருப்பது போன்று மனக் கட்டுப்பாட்டோடு வாழ்ந்து வருவாயாக. இதுவே நான் கூறும் இரண்டாம் விஞ்சை. இனி மூன்றாம் உபதேசத்தைக் கூறப் போகின்றேன். கேட்பாயாக.

அகிலம்:

கொற்றவர் தானு மாண்டு குறும்புகள் மிகவே தோன்றிஉற்றதோர் துலுக்கன் வந்து உடனவன் விழுந்து வோடிமற்றதோ ராண்டு தன்னில் வருவோ மென்றா கமம்போல்முத்தலத் தோருங் காண உரைத்தனர் மூன்றாம் விஞ்சை

விளக்கம்:
நீதியுள்ள அரசர்கள் இறப்பு எய்தித் தவறான வழி முறைகளும், ஆட்சிகளும் உலகில் தோன்றும். அப்பொழுது துலுக்கன் ஒருவன் நாட்டைப் பிடிக்கத் தெட்சணாபூமிக்கு வந்து தோல்வியுற்று ஓடிடுவான். அதன் பிறகு சிறந்த ஓர் ஆண்டில் இப்பூவுலகில் வைகுண்டர் தோன்றுவார் என்னும் ஆகமச் சொல்லை போன்று மூவுலகத்தோரும் அறியும்படியாக இந்த மூன்றாம் விஞ்சையைத் திருமால் அருளினார்.

அகிலம்:

நல்ல மகனே நாலாம் விஞ்சைகேளுவல்ல நடுஞான வாய்த்த வைகுண்டமது
பிறந்துகொண் டிருக்கெனவும் புதிய நக்ஷத்திரத்தில்அறந்தழைக்க நன்றாய் அதுகுதிக்கு மென்றுசொல்லுமாழுவது மாண்டு மனதுகந்த தேமுழிக்கும்முழுவதை நீக்கி முழிப்பதுவே கண்டுகொள்ளும்

விளக்கம்:

அருமையான மகனே நான்காம் விஞ்சையை இனிக் கூறப்போகின்றேன். உயர்வான ஞானம் வாய்க்கப் பெற்ற தருமபூமி பிறந்து கொணடிருக்கின்றது என்றும் புதிய நட்சத்திரத்தில் உலகில் அறம் தழைப்பதற்கு வேண்டித் தருமபூமி வெளிப்படையாகக் குதித்து வெளிப்படும் என்றும் சொல்லு. அப்போது அழிந்து போகக் கூடியவை எல்லாம் அழிந்து விடும். உனது மனதுக்கு இயைந்தவர்களே ஆன்மீக விழிப்புற்று எழுவர். அவ்வாறு அழிகின்றவை அழிக்கப்பட்டு ஆன்மீக விழிப்புற்று எழுபவர் தருமபூமியை அறிந்து கொள்ளுவர்.

அகிலம்:

ஒருநெல் லெடுத்து உடைக்கநாடு கேட்டுக்கொள்ளும்இருநெல் லெடுத்து உடைக்கநாடு தாங்காதுமலைக ளுதிர்ந்துவிடும் வான மழிந்துவிடும்தலைநாட் சேத்திரமும் தானுதிரும் ஆலங்காய்போல்என்றுநா லாம்விஞ்சை இதுதானே என்மகனேசத்தமொன் றானதிலே தானிதெல்லா மாகுமென்றுசித்த முடனே செப்பியிரு என்மகனே

விளக்கம்:

ஒரு நெல்லெடுத்து உடைக்கும் நேரத்துக்குள் தருமபூமி காணத் தகுதியுள்ள ஆன்ம விழிப்புற்றவர்களின் உண்மை நிலையை நான் சோதித்து அறிந்து கொள்ளுவதை நாடு தெரிந்து கொள்ளும். தருமயுகம் தோன்றும் சமயம், இரண்டாவது நெல் எடுத்து உடைக்கும் நேரத்துக்குள், ஆலமரத்தில் இருக்கின்ற காய்கள் எல்லாம் உதிர்ந்து விடுவதைப் போன்று ஆத்மீக விழிப்புற்றவனது நினைவிலுள்ள உலக விவகாரங்களாகிய மலைகள், வானம், தலைக்கு மேலே காட்சி அளிக்கின்ற நட்சத்திரங்கள் ஆகிய மாயை இவை எல்லாம் அவன் நினைவிலிருந்து அகன்று நிற்கும். இதுவே நான்காம் விஞ்சை
ஆகும்.

இந்த உபதேசங்கள் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கும் விளக்கு போன்ற ஒன்றைக் கூறப் போகிறேன். மகனே கவனமாகக் கேள். அ, உ, ம், கூடிய ஓம் என்னும் ஓசையின் மூலமாக இந்த உபதேசங்கள் எல்லாம் கைக்கூடும். இதை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டு உபதேசித்து வா.

அகிலம்:

தேவர்களுக்குரிய உபதேசங்கள்:
=========================

ஆயிரத் தெட்டு அதில்வாழுந் தேவருக்குவாயிதமாய் விஞ்சை வகுப்பேன்கே ளென்மகனே

நாட்டுக் குடைய நாரா யணர்தானும்ஆட்டுக் கொடைபூசை அனுப்போலும் வேண்டாமென்றுசொல்லியே தர்மமுற்றுச் சிறையாகத் தானிருக்கத்தொல்லுலகி லாரேக்கார் பார்ப்போமென்று சொல்லிடுநீ

விளக்கம்:

ஆயிரத்து எட்டாம் ஆண்டாகிய உன் கால்தில் உலகில் பிறக்கப் பேறு பெற்ற தேவர்களுக்கு நற்பேறு அடையும் வழியாக நான் கூறுகின்ற உபதேசங்களை நீ கேட்பாயாக.

இவ்வுலகத்துக்குரிய நாராயணராகிய நீ ஆடு வெட்டி நடத்துகின்ற பூஜைகளை அணு அளவுகூட செய்ய வேண்டாம் என்று சொல்லிவிடு. இப்பூவுலகு தருமபூமி நிலையடைய நான் (திருமால்) சிறைவாசம் போன்று இருக்கின்ற காரணத்தால் பழமை பொருந்திய பூமியில் அப்பூசையை ஏற்றுக்கொள்ளும் தெய்வம் யாராவது உள்ளனரா? என்று சவால்விட்டுக் கூறு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக