புதன், 19 நவம்பர், 2014

அகிலம்:

கடலிலோர் பிள்ளை கரியமா லீன்றெடுத்து
நடமாடுந் தெச்சணத்தில் நகர்சோதனைக் கனுப்பி
கலியை யறுத்துக் கனாப்பயங்கள் தானறுத்துச்
சலிவில்லாத் தர்மபதி சத்திமக்க ளையாள
வாறாரைய்யா நாதன் வைகுண்ட மும்மூர்த்தி
பேறானோர் காண்பார் பெரியதர் மப்புவியை
என்றுசில வாத்தியங்கள் இசைந்திசைந் தூதிவர
கன்றுதிரை மேய்த்தோரும் கயிலையங் கிரிகடந்தார்

விளக்கம்:

திருமால், திருச்செந்தூர்க் கடலில் ஒரு பிள்ளையை தமது குழந்தையாக பெற்றெடுத்து அக்குழந்தையைக் கன்னியர் நடனமாடும் தெச்சணாபூமியில் பாவ புண்ணிய கணக்கெடுக்க நகர்சோதனைக்கு அனுப்பி கலியை அழித்து, உலக மயக்கத்தால் ஏற்படும் அச்சம் முதலியவற்றையும் அழித்து, நிரந்தரத் தன்மையுள்ள தருமபதியில் கன்னி மக்களாகிய சான்றோர் ஆட்சி புரிவதற்காக மும்மூர்த்திகளும் ஒரு மூர்த்தி ஆகிய அவ்வைகுண்ட நாதன் வரப் போகிறார். பேறு பெற்றவர்கள் அவரைக் கண்டு உயர்வான தருமபூமியை அறிவர் என்று சில வாத்தியங்கள் இசைந்து இசைந்து ஊதி வர, பசுக் கூட்டங்களை மேய்த்த திருமால் கயிலை மலையைக் கடக்கலானார்.

அகிலம்:

கடந்து திருச்செந்தூர் கடல்காண வேணுமென்று
நடந்தாதி நாதன் நல்லீசர் சத்தியோடு
கூடிக் குணமாய்க் கொலுவார பாரமுடன்
தேடித் திருவைச் சிணமாய் வழிநடந்தார்
நடக்க மறையோர் நாற்றிசையும் போற்றிநிற்க
கடற்கரையை நோக்கிக் கண்ணோன் வழிநடந்தார்

விளக்கம்:

இவ்வாறு திருமால் கயிலை மலையைக் கடந்து, திருச்செந்தூர்க் கடலில் இலட்சுமிதேவியைத் தேடிக் காண வேண்டி, நல்ல ஈசர், சக்திதேவி ஆகியவர்களோடு கூடி, அமைதியாகக் கொலு ஆரவாரத்தோடு விரைவாக நடந்தார்.

இப்படி திருமால் நடந்து வருகின்றபோது அந்தணர்கள் எல்லாரும், நான்கு திசைகளிலிருந்தும் அவரை வாழ்த்திப் போற்றி நின்றனர். திருமால் திருச்செந்தூர்க் கடற்கரை நோக்கி வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தார்.

அகிலம்:

கந்தன் எதிர் கொண்டு அழைத்தல்.
வழிநடந்து மாயவரும் வல்லபர மேசுரரும்
களிகூர்ந்து மாதுமையும் கந்தன்செந் தூர்கடலின்
அருகேயொரு காதம் அவர்வரக்கண் டாறுமுகன்
கருவி குழறி கடற்கரையோன் தான்கலங்கி

விளக்கம்:

இவ்வாறு திருச்செந்தூர் நோக்கி வழி நடந்து வந்த மாயவரையும், ஈசுரரையும், மகிழ்வோடு வரும் சக்திதேவியையும், திருச்செந்தூர்க் கடல் ஓரத்திலிருந்து ஒரு காதம் வழிக்கு முன்னால் அவர்கள் வரும்போதே கந்தன் கண்டு கொண்டான். தன்னுடைய அரங்கங்கள் பதறக் கலங்கினான்.

அகிலம்:

ஆறு முகனும் அங்குள்ள தேவர்களும்
வீறுமயில் வாகனனும் வெற்றிரத மேறாமல்
என்னவித மாமோ என்று மனம்பதறி
மன்ன னறுமுகனும் மனமயங்கித் தான்பதறி

விளக்கம்:

ஆறுமுகன் தனது விரைவான மயில் வாகனத்தில் ஏறாமலும், தேவர்கள் தமது வெற்றியையுடைய இரதத்தில் ஏறாமலும் மனம் கலங்கினர். இவர்களைக் கண்ட செந்தூர் இறைவன் ஆறுமுகன் பதறி என்ன நடக்க போகிறதோ என மனம் குலைந்து மயக்கமுற்று அவர்களை நோக்கி வந்தான்.

அகிலம்:

வந்துமா மன்தனையும் மாதா பிதாவையும்
சந்துஷ்டி யாகித் தாழ்ந்துநமஸ் காரமிட்டு

விளக்கம்:

தம் மாமனாகிய திருமாலையும், தனது மாதா பிதாவையும், எல்லாரும் மகிழும்படியாகத் தாழ்மையுடன் வணங்கினான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக