திங்கள், 24 நவம்பர், 2014

சகாதேவ சீடரின் தன்னடக்கம் :-

அய்யா உரைக்க அன்போர்களே தங்கள்முன்னே
மெய்யாய் எழுதி விவரிப்பேன்நான் என்பதெல்லாம்
ஆனை நடைகண்டு அன்றில் நடையதொக்கும்
சேனை சரிவதென்ன சிற்றெறும்பு பக்தியென்ன
குயில் கூவகண்டு கூகைக் குரலாமோ
மயிலாடக் கண்டு வான்கோழி ஆடினதேன்
மடந்தை தேனீக்கள் வைத்த ரசமறிந்து
கடந்தை தாடேற்றும் கதைபோலே யானடியேன்
நாலுமூணு யுகம் நடுத்தீர்க்க வந்தபிரான்
மேலோன் திருக்கதையை எழுதுவேன் என்பதொக்கும்..


விளக்க உரை :-


அண்டசராசரங்களைப் படைத்து, அவை அனைத்துக்கும் பெற்றவனாய் இருந்துகொண்டிருக்கும் தந்தையாகிய தயாபரன், வல்லாத்தான் வைகுண்டப் பரம்பொருள் சொல்வதைக்கேட்டு, அதை அப்படியே அன்பர்களின் முன்னிலையில், அடியேன் எழுதி சமர்ப்பிப்பேன் என்பது யானையைப் போல் நடப்பதற்கு அன்றில் பறவை ஆசைப்படுவதற்கு ஒப்பானதாகும்.

எறும்புகளின் அணிவகுப்பு, போர்வீரர்களின் அணிவகுப்புக்கு இணையாக முடியுமா ?
குயில் கூவுகின்ற தென்று அதைப்போல் கூவை குரல் கொடுத்தால் அது சரியாக இருக்குமா ?
மயில் ஆடுவதைக் கண்டு வான்கோழி தன்னையும் மயில்போல் பாவித்துக்கொண்டு ஆடினால் நன்றாக இருக்குமா ?
தேனீக்கள் சேமித்து வைத்து இருக்கும் தேனைச் சுவைத்த கடந்தைகள், தாமும் அந்த ஈக்களை போல்தானே இருக்கிறோம், ஆகவே நாமும் அந்த ஈக்களைப்போல் தேனைச் சேமிக்கலாம் என்றெண்ணி கூடுகட்ட முனையும் கடந்தையின் கதைப்போல, இவ்வுலகைப்படைத்து அதில் ஏழு யுகங்களை நடத்தி அவ்யுகத்தில் இருந்தோருகேல்லாம் நியாயம் நடுகேட்டு, நடுதீர்ப்பு வழங்க வந்த லோகநாயகனாகிய அய்யாவின் ஒப்பரிய சரிதையை, எழுத்தென்றால் என்னவென்று அறியாத நான் எழுத முடியுமா !!!!

- அய்யா உண்டு -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக