திங்கள், 24 நவம்பர், 2014

அய்யாவழி வரலாறு

அய்யாவழி"
தென்தமிழகத்தில் நாகர்கோயிலிலிரிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் பச்சை பசேலாக காட்சி தரும் செழிப்பான பகுதியில் சாமிதோப்பு என்னும் அழகிய கிராமம். இந்திய அளவில் அவ்வளவாக பேசப்பாடாத இந்த ஊர் இந்துமதத்தின் வர்ணாஸ்ரம சாதிக்கொடுமைகளுக்கு எதிராக தனிக்களத்தை அமைத்த "அய்யாவழியின்" முக்கிய பதியாக இருக்கிறது. அய்யாவழியினர் கூடும் இந்த இடங்கள் கோவில் என அழைக்கப்படுவதில்லை; மாறாக 'பதி', 'நிழல்தாங்கல்' என அழைக்கப்படுகிறது.

திருவிதாங்கூர் மன்னர்களால் கன்னியாகுமரி மாவட்டம் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. இந்த பகுதியில் சாணார், பரவர், மூக்குவர், என 18 வகை சாதி மக்கள் ஆதிக்க சாதியினரால் மனிதனை விட கேவலமாக நடத்தப்பட்டனர். பட்டன், தம்புரான், தம்பி, நம்பூதிரி, பிள்ளைமார், நாயர் (மேனன்), பிராமணர் என பல பல ஆதிக்கசாதியினர் திருவிதாங்கூர் மன்னனின் அதிகாரத்தை பயன்படுத்தி கொடுமைகளை மக்கள் மீது நடத்தினர். மன்னன் செல்லுகிற பகுதிகளில் ஆதிக்கசாதியினரை சார்ந்த பெண்கள் சிலரது வீடு 'அம்ம வீடு' என அறியப்பட்டது. இந்த 'அம்ம வீடு', 'உள்ளிருப்பு வீடு' களில் தான் மன்னன் ஓய்வெடுப்பது வழக்கம். கைமாறாக அந்த பகுதி நிலங்கள், வருவாய் துறை, நிர்வாகம் இவர்களது 'ஆதிக்கத்தில்' இருந்தது. மன்னனுக்கும் பார்ப்பனீயத்திற்குமான தொடர்பு இந்த உறவு முறைகளில் இருந்ததை பயன்படுத்தி ஆதிக்கசாதியினர் குறுநிலமன்னர்கள் போல தீர்ப்பு, தண்டனை வழங்குதல் என தொடர்ந்தனர்.

1809ல் பொன்னுநாடார், வெயியேலாள் தம்பதியினருக்கு கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பில் ஒரு குழந்தை பிறந்தது. அன்றைய சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்பட்ட சாணார் சாதியை சார்ந்தவர்கள் அவர்கள். அந்த சிறுவனுக்கு பெற்றோர் இட்ட பெயர் முடிசூடும் பெருமாள். "திருமுடியுடன் விஷ்ணு" என்னும் பொருள் படும் இந்த பெயரை கீழ்சாதி சாணார் குடும்பம் சூட்டியதும் பார்ப்பனீய ஆதிக்கசாதியினர் கடுமையாக எதிர்த்தனர். பெற்றோர் அந்த பெயரை முத்துகுட்டி என மாற்றினர். தாழ்த்தப்பட்ட குழந்தைக்கு பார்ப்பனீய தெய்வத்தின் பெயரை கூட சூட்ட அனுமதிக்காத இந்துத்துவ சாதிவெறியின் மத்தியில் பிறந்த இந்த குழந்தை தான் வளர்ந்து "அய்யா வைகுண்டர்" ஆகி, சாதி எதிர்ப்பை ஆயுதமாக எடுக்குமென்பது அன்றைய ஆதிக்கசாதியினருக்கு தெரியவில்லை. 17 வயதில் தனது வீட்டிற்கு அருகேயுள்ள புவியூர் என்னும் ஊரை சார்ந்த திருமாலம்மாள் என்பவரை மணந்தார் முத்துகுட்டி. இதுபற்றி திருமாலம்மாளை அவர் திருமணம் செய்யவில்லை, அவருக்கு பணிவிடை செய்ய வாழ வந்தார் என மாறுபட்ட தகவலும் உள்ளது. திருமாலம்மாள் ஏற்கனவே திருமணாமனவர், முத்துகுட்டியை திருமணம் செய்ய கணவனை விட்டு வெளியேறினார் என்ற தகவலும் காணப்படுகிறது.

அய்யாவழியினரின் நூல் 'அகிலம்', 'அகிலத்திரட்டு அம்மானை' அல்லது 'அகிலதிரட்டு' என அழைக்கப்படுகிறது. அகிலத்தின் படி திருமலையம்மாளுக்கு முதல் திருமணத்தின் வழி ஒரு ஆண்குழந்தை இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முத்துகுட்டி பனையேறுதல், விவசாய கூலி வேலை வழி தனது வருமானத்தை தேடிக்கொண்டார். சாதாரண மக்களில் ஒருவராக காணப்பட்ட இவர் உருவாக்கிய வழிமுறை 'அய்யாவழி' என அழைக்கப்படுகிறது. இது ஒரு தனிமதம் என்கிறார் இன்று அய்யாவழியின் தலைமை பதியை நிர்வகித்து வருகிற பாலபிரஜாதிபதி அடிகளார் (அய்யாவின் வாழ்க்கை பற்றி தனிப்பதிவில் பார்க்கலாம்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக